இலங்கை: இராஜபக்ஷ அரசாங்கம் வலைத்தளங்களை தணிக்கை செய்ய தயாராகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நவம்பர் 22 அன்று நடந்த வெகுஜன ஊடகங்கள் சம்பந்தமான அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில், "தேசிய வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கு" முறையான வழிமுறை தேவை என்றும், அதை அடுத்த சில வாரங்களில் செயல்படுத்தப்படும் என்றும் ஊடக அமைச்சர் கெஹெலியே ரம்புக்வெல்ல கூறினார். குழுவில் உள்ள அரசாங்கத்தின் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும், இத்தகைய அடக்குமுறையின் அவசியத்தை வலியுறுத்தி ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

ஊடகங்கள் மூலம் செய்யப்படும் அவமானப்படுத்தல்களை "ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்துவதற்கு" இந்த தணிக்கை அவசியம் என்று ரம்புக்வெல்ல மேலும் கூறினார்.

அமைச்சரான பேராசிரியர் சரித ஹேரத், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களுக்கும் இந்த வகையான கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வலைத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய, சிங்கப்பூரில் சமீபத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை எடுத்துக் காட்டிய கல்வி அமைச்சர், ஜி.எல். பீரிஸ், "இதுபோன்ற சட்டங்கள் ஆய்வு செய்து, இந்த புதிய வழிமுறை அமைக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அரசாங்க அமைச்சரும், முன்னாள் பல்கலைக்கழக ஆசிரியருமான கலாநிதி சுரேன் ராகவன், சமூக ஊடகங்களில் "இனவெறி பரவுவதைத் தடுக்க" இந்த நடவடிக்கை அவசியம், என்று அறிவித்தார்.

பீரிஸ் பிரேரிப்பது போல், அரசாங்கம் தயாரிக்கின்ற ஒழுங்குமுறை கட்டமைப்பு எனப்படும் தணிக்கை, சிங்கப்பூரின் "இன்ஃபோகொம் ஊடக மேம்பாட்டு சட்டம் - 2016" (Info-comm Media Development Authority Act) மற்றும் "இணைய பொமைபடுத்தல் மற்றும் திரிபுபடுத்தலுக்கு எதிரான சட்டம் - 2018" (Protection from Online Falsehoods and Manipulation Act ) ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பொலிஸ் ஆட்சியின் இந்த அடக்குமுறை சட்டங்கள், சர்வதேச அளவில் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களால் பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் மூலம், வலைத் தளங்களில் குறிப்பிடப்படும் விடயங்களை "உடனடியாக சரிசெய்யுமாறு" எதேச்சதிகாரமாக உத்தரவிடுவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடைப்பதுடன், தேவைப்பட்டால் குற்றவாளிகள் மீது 700,000 அமெரிக்க டொலர் வரை அபராதம் விதிப்பற்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.

கடந்த கால அரசாங்கங்கள், அவற்றுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், மற்றும் முப்பது ஆண்டுகால இனவாதி போரின் மத்தியில் செய்தித்தாள்கள், வலைத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை தடைசெய்தல், இடைஞ்சல் செய்தல் மற்றும் தணிக்கை செய்த கொடூர வரலாற்றைக் கொண்டுள்ளன.

இவற்றில் ஒரு சில சம்பவங்களை மாத்திரம் குறிப்பிடலாம்: மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் இனாவாத யுத்தத்தை மீண்டும் தீவிரமாக முன்னெடுத்த போது, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்நெட் இணையத்திற்குள் இலங்கையில் இருந்து பிரவேசிப்பதை தடுத்தது; முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை அவமதிக்கும் செய்திகளை வெளியிட்டதாகக் கூறி, 2017 இல் லங்கா இ நியூஸ் வலைத்தளத்தைத் தடுத்தது; 2019 ஏப்ரலில் நடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், சமூக வலையமைப்புகளை சுமார் இரண்டு வாரங்களுக்கு தடை செய்து வைத்திருந்தது.

முந்தைய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும், முகநூல் போன்ற சமூக வலையமைப்புகளை இடைவிடாமல் கண்காணிப்பதும், அவற்றில் நபர்கள் பதிவிடும் கருத்துக்களின் அடிப்படையில், பல்வேறு காரணங்களைக் காட்டி அவர்களை கைது செய்வதும் ஒரு சாதாரண நடைமுறையாகிக் கொண்டுள்ளது. "மாவீரர் தின கொண்டாட்டம்" என்று அழைக்கப்படும், போரின் போது இறந்தவர்களின் நினைவை ஆதரிப்பதற்காக முகநூலில் பதிவிட்டிருந்த பலர் கைது செய்யப்பட்டமை சமீபத்திய சம்பவங்களாகும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை எனப்படும் சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு, "தேசிய மத ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும்" அறிக்கைகளை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், எழுத்தாளர் சக்திக சத்குமார உட்பட பல கலைஞர்கள் மற்றும் சுதந்திர சிந்தனையாளர்களை கைது செய்தமை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தலைவர்கள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் முன் உறுமிக்கொண்டு நிற்கின்றனர். பூகோளத் தொற்றுநோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஆளும் வர்க்கத்தின் நெருக்கடி தீவிரமடைந்து வருகின்றது. பொருளாதாரம் சரிந்துவிட்டது. முந்தைய அரசாங்கத்தின் நெருக்கடிக்கு வழிவகுத்த வர்க்கப் போராட்டங்களும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் வெட்டு காரணமாக மீண்டும் பெரும் வீச்சில் அதிகரித்து வருகின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் மத்தியில் கிளர்ச்சி நிலைமை வளர்ந்து வருகிறது.

வளர்ந்து வரும் அரசியல் மற்றும் சமூக அமைதியின்மைக்கு மத்தியில், இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்கு தயாராகிக்கொண்டு, இராணுவத்த அடித்தளமாக கொண்ட சர்வாதிகாரத்திற்கு தயாராகி வருகின்றனர். துறைமுகத் தொழிலாளர்களை அடக்குவதற்கு அத்தியாவசிய சேவை உத்தரவுகளை விதித்தமை அதன் ஒரு பகுதியாகும். ஊடகங்களில் இருந்து வரும் சிறிய விமர்சனங்களும் ஒரு சமூக வெடிப்பைத் தூண்டிவிடும் என அரசாங்கம் கருதுகிறது.

அரசாங்கமும் அதன் ஆலோசகர்களும், சமுதாயத்தில் "போலி செய்திகளின்" மூலும் ஏற்படும் தாக்கம் குறித்து, முதலை கண்ணீர் வடிக்கின்றன. ஊடகங்களை தணிக்கை செய்வதற்கான எளிதான வழியாக இதை அவர்கள் பார்க்கிறார்கள். அரசாங்க ஊடகங்களையும் தங்களுக்கு ஆதரவான கோடீஸ்வரர்களின் தனியார் ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டு முஸ்லீம்-விரோத மற்றும் தமிழர்-விரோத இனவெறியையும், சிங்கள மேலாதிக்கத்தையும் தூண்டிவிடுவதற்கு அன்றாடம் செயற்படும் அரசாங்கம், இணையத்தின் மூலம் பரவிவரும் இனவாத அல்லது மத வெறுப்பு கருத்துக்களைப் பற்றி "அதிர்ச்சிக்குள்ளாகும்” அளவுக்கு கீழ்த்தரமான ஒரு அரசியல் கபடத்தனம் இருக்க முடியுமா?

சமீபத்திய காலங்களில், குறிப்பாக இளம் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியிலான எதிர்ப்பை வெளிப்படுத்தும் பிரதான ஒரு ஊடகமாக முகநூல், ட்விட்டர் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடக நெட்வொர்க்குகள் மாறியுள்ளன. அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் அல்லது தனியார் தொழில்முனைவோருக்கு நேரடியாக சொந்தமான, பாரம்பரிய ஊடகங்கள் குறித்து பொது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையீனமும், இணையவழி ஊடகங்களின் விரிவாக்கத்திற்கும் பங்களித்துள்ளது.

2011 இல் வெடித்த எகிப்திய புரட்சி முதல் 2018-2019 பிரான்சில் நடந்த "மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்கள்" வரையிலான பாரிய சமூக எழுச்சிகள், இணையத்தில் பரவலான விளம்பரத்தைப் பெற்றது மட்டுமல்லாமல், பெரும்பாலும், இளம் எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டனர். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் வெடித்த, 1,000 ரூபாய் குறைந்தபட்ச ஊதியத்திற்கான தோட்டத் தொழிலாளர்களின் பாரிய போராட்டம் ஆகும். இதில் ஒரே நாளில் சமூக ஊடகங்கள் ஊடாக சுமார் 5,000 தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கொழும்பில் உள்ள காலிமுகத் திடலில் அணிதிரட்டி பாரிய போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

பூகோள முதலாளித்துவ அமைப்பின் மீளமுடியாத பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு, வேகமாக போராளிகளாகி வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், இணைய கருவிகளை சமூகப் புரட்சி நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க்குற்றங்களை ஆன்லைனில் அம்பலப்படுத்திய ஜூலியன் அசான்ஜ், செல்சி மனிங் மற்றும் எட்வர்ட் ஸ்னோவ்டென் ஆகியோருக்கு எதிராக பல வெளிநாட்டு அரசாங்கங்கள் மீது வாஷிங்டன் நடத்திய கொடூரமான தாக்குதல், அத்தகைய ஒரு வெளிப்பாடாகும்.

தற்போதைய கோவிட்-19 நெருக்கடியின் மத்தியில், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு திணித்துள்ள ஒடுக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டு, இணைய வழியில் கருத்துப் பகிர்வதை கொடூரமாக அடக்குவதற்கும், முன்னெப்போதையும் விட நபர்களை கைது செய்வதற்கும், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் இந்தியா உட்பட பல முதலாளித்துவ நாடுகள், நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

வெகுஜன ஊடகங்களுக்கான அமைச்சின் ஆலோசனைக் குழு, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மனுஷ நானயக்கரா, "சுய கட்டுப்பாடு" என்ற ஒன்றை அறிமுகப்படுத்துவது பற்றி உளரிக்கொண்டு, அரசாங்கம் திட்டமிடுகின்ற தாக்குதலை எதிர்க்கவில்லை. அரசாங்க கட்சியைச் சேர்ந்த சாந்த பண்டாரவும், தொலைக்காட்சி ஊடகங்களை ஒழுங்குபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

உத்தேச அடக்குமுறை சட்டங்கள் தொடர்பாக, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசுரிய, "ஊடக ஒழுங்குமுறை மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.

"டிஜிட்டல் ஊடக தளங்களால், பாரம்பரிய ஊடகங்களை விட, தகவல்களை சிதைக்கவும் வெறுப்பை உண்டுபன்னும் கதைகளை பிரச்சாரம் செய்யவும் முடியும்”, எனக் கூறிக்கொண்டு, அரசாங்கத்தின் வாதத்தை எதிரொலிக்கும் அமரசூரிய, "இந்த உண்மைகள் ஒருபுறம் இருக்க, மாற்று மற்றும் விமர்சனக் கருத்துக்களை அனுமதிப்பதில், சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு" அதன் ஒழுங்குமுறை நடவடிக்கையை பற்றி ஆழமாக மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தைப் பற்றி ஜேவிபி மற்றும் பேராசிரியருக்கும் இருக்கும் நம்பிக்கை இத்தகையதாகும்.

இலங்கையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள், இந்த உத்தேச இணைய ஒழுங்குமுறையை நிபந்தனையின்றி எதிர்க்க வேண்டும். சுதந்திரமான கருத்து சுதந்திரத்தை சிதைப்பது, சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு முன்நகர்வாகும்.

Loading