ஆர்ஜென்டினா கால்பந்தாட்ட நட்சத்திரம் டியோகோ மரடோனாவுக்கு உலகெங்கிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எக்காலத்திற்குமான தலைச்சிறந்த விளையாட்டு வீரரான பீலே (Pelé) உடன் சேர்ந்து கருதப்படும், ஆர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நட்சத்திரம் டியாகோ மரடோனா நவம்பர் 25 இல் இருதய நோயால் 60 க்கும் குறைந்த வயதில் காலமானார்.

பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு கூடுதலாக, மரடோனா, அவர் மூளையிலிருந்த இரத்தக்கட்டியை நீக்கியதிலிருந்து புவனோஸ் ஐயரஸின் புறநகர் பகுதியில் குணமடைந்து கொண்டிருந்தார், இத்துடன் ஆல்கஹால் வெளியேற்றும் சிகிச்சையும் பெற்று வந்தார்.

அவர் மரணம் ஆர்ஜென்டினாவிலும் உலகெங்கிலும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்கு அஞ்சலி செலுத்த உடனடியாக ஆர்ஜென்டினா எங்கிலும் இருந்தும் உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் புகழாரங்களும் ஒன்றுகூடல்களும் வரத் தொடங்கின. அவரது விளையாட்டு வாழ்நாளின் உச்சத்தில் இருந்த 1984 மற்றும் 1991 க்கும் இடையே மரடோனா விளையாடிய இத்தாலியின் நாப்லெஸில் நூற்றுக் கணக்கானவர்கள் ஒன்றுகூடினர்.

அதற்கடுத்த நாள் புவனோஸ் ஐயரஸில், முகக் கவசம் அணிந்த பலபத்தாயிரக் கணக்கான இரசிகர்கள் அவரின் மூடிய அலங்கார சவப்பெட்டி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காசா ரோசாடா ஜனாதிபதி மாளிகையில் மரடோனாவுக்கு மரியாதை செலுத்த பத்து பிளாக்குகள் வரையில் நீளமாக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர்.

டியாகோ மரடோனா தனது மகளுடன் (source: Instagram Dalma Maradona)

அந்த நிகழ்வு, மக்களின் மனக்கவலையைச் சாதகமாக்கி அரசியல்ரீதியில் மூலதனமாக்கிக் கொள்ளவும் மற்றும் தேசியவாதத்தை ஊக்கப்படுத்தவும் ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஆல்பர்ட் பெர்னான்டிஸின் பெரோனிஸ்ட் அரசாங்கத்தின் வழக்கில் இல்லாத முயற்சியாக இருந்தது. கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்ட இந்த நெருக்கடிக்கு அவரின் சிக்கன நடவடிக்கைகளால் உந்தப்பட்ட விடையிறுப்புக்கு எதிராக பெர்னான்டிஸ் அதிகரித்த கொந்தளிப்பை முகங்கொடுத்து வருகிறார். மக்கள்தொகையில் 31 ஆவது இடத்திலிருக்கும் அந்நாடு உலகில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை பட்டியலில் முதல் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதில் உதவுவதற்காக, ஒரு பாதுகாப்பான இறுதி அடக்கம் சாத்தியமாகும் வகையில், தங்களின் சொந்த அன்புக்குரியவர்களுக்கு முறையான இறுதிச் சடங்கு செய்வதை அவர்கள் தியாகம் செய்திருந்ததாக சுட்டிக்காட்ட பலரும் பெர்னான்டிஸின் சமூக ஊடக கணக்குகளை நியாயமாக கையிலெடுத்திருந்தனர்.

மதியம், அப்போதும் வரிசையில் நின்றிருந்த ஆயிரக் கணக்கானவர்களைக் கலகம் ஒடுக்கும் பொலிஸ் வன்முறையாக தாக்கியபோது, பிளாசா டி மாயோவில் ஒன்றுகூடியிருந்தவர்களை இரப்பர் தோட்டாக்கள், நீர்பீய்ச்சிகள் மற்றும் தடியடிகளைக் கொண்டு தாக்கியபோதுதான், அந்த இறுதிச்சடங்கு நிகழ்வு நிறைவடைந்தது. அங்கே காத்திருந்தவர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு பாதுகாப்பு படைகளால் தள்ளுமுள்ளுக்கு உள்ளாக்கப்பட்டதால் அவர்கள் அமைதி குலைந்ததும் அந்த சம்பவம் நடந்தேறியது.

பின்னர் சவப்பெட்டி வண்டியில் கொண்டு வரப்பட்டபோது, ஆயிரக் கணக்கானவர்கள் "டியோகோ இறக்கவில்லை, டியோகோ மக்களுடன் வாழ்கிறார்,” என்று குரல் எழுப்பி கல்லறைக்குச் சென்ற இறுதி ஊர்வலத்துடன் சேர்ந்து சென்றார்கள்.

வாரயிறுதி வாக்கில், உலகெங்கிலும் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர், மரடோனாவின் காணொளிகளும் இறுதி ஊர்வல காட்சிகளும், ஆழமாக கவலை தோய்ந்திருந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பணியாளர்களின் காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.

இங்கிலாந்தில், 1986 உலக கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிராக மரடோனா அடித்த கோல் ஒரு பெரிய திரையில், மான்செஸ்டர் சிட்டிக்கும் பேர்ன்லிக்கும் இடையிலான ஒரு கால்பந்து போட்டிக்கு முன்னதாக காண்பிக்கப்பட்டபோது, விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் உணர்வுபூர்வமாக கிளர்ந்தெழுந்து கரகோஷம் எழுப்பி மரியாதை செலுத்தினர். மரடோனா ஐந்து வீரர்களின் தடுப்புகளை ஊடறுத்துச் சென்று கோல்கீப்பரை பின்னுக்குத் தள்ளி அந்த கோல் அடித்ததே உலக கோப்பை வரலாற்றில் மிகச் சிறந்த கோலாக கருதப்படுகிறது. (இங்கே பார்க்கவும்)

சனிக்கிழமை ஆர்ஜென்டினாவுடனான ரக்பி (rugby) போட்டிக்கு முன்னதாக, All Blacks New Zealand team மொத்தமும், ஹாகாவின் பாரம்பரிய மௌரி நடனத்திற்கு முன்னதாக, அவர்களின் தேசிய உடைக்குப் பதிலாக முதுகில் 10 வது எண் மற்றும் மரடோனா என்ற பெயர் கொண்ட உடையுடன் கீழே படுத்து எடுத்துக்காட்டினர்.

1979 உலக இளைஞர் கோப்பை மற்றும் 1986 உலக கோப்பையை ஆர்ஜென்டினாவுக்காக ஜெயித்துக் கொடுப்பதிலும், அத்துடன் முக்கிய அணிகளுக்கு, ஆர்ஜென்டினா (போகா ஜூனியர்ஸ், 1981), ஸ்பெயின் (பார்சிலோனா, 1983), இத்தாலி (நாப்லெஸ், 1986-87, 1989-90) மற்றும் ஐரோப்பிய அளவிலான UEFA கோப்பை (நாப்லெஸ், 1988-89) ஆகியவற்றுக்கு ஜெயித்துக் கொடுப்பதிலும், மரடோனா முக்கிய பாத்திரம் வகித்தார்.

சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட நகரமான பின்னிஷ் பகுதியில் ஷெல்லால் அழிக்கப்பட்ட வீட்டினுள் வரையப்பட்ட மரடோனாவின் சுவரோவிய புகைப்படங்கள் வைரலாகி இருந்தன. கலைஞர் அஜீஸ் அஸ்மர் கூறினார்: "நான் அவரை ஒரு குழந்தையாகப் பார்த்தேன், அவரது விளையாட்டு பாணியைப் பாராட்டினேன். அதை விரும்பும் நபர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு நினைவூட்டுவதற்காக நாங்கள் அதை வரைந்தோம். விளையாட்டு இங்கே வாழ்கிறது".

வீரர்களுக்கு மத்தியில் ஊடறுத்துச் செல்வதிலும், பந்தை மற்ற வீரர்களுக்கு கடத்திக் கொடுப்பதிலும், பந்தைப் பெறுவதிலும் வேகத்தை மாற்றியவாறு முழு உத்வேகத்துடன், முழுத்திறனுடன் அவர் பந்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதும் மற்றும் தடுத்து விளையாடுவதில் அவர் காட்டிய தைரியமும் கால்பந்தாட்ட பரிணாமத்தில் அவருக்கு முன்னரும் பின்னரும் என்று குறிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் பயிற்றுவிப்பதில் அவரின் வரம்பு சொல்லும்படியாக இருக்கவில்லை.

1997 இல் ஒரு விளையாட்டு வீரராக அவர் ஓய்வு பெற்ற பின்னர், அவர் வாழ்வின் கடந்த இரண்டு தசாப்தங்கள் அவர் போதைப் பொருள் பழக்க பிரச்சினைகள், வேறு விதமான விவகாரங்கள் மற்றும் பண விவகார சர்ச்சைகள் குறித்த ஊடகங்களின் ஆர்வங்களால் குறிக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில், அரசியல்ரீதியில் குழப்பம் இருந்தாலும், சமத்துவமின்மை மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மரடோனாவின் வெளிப்படையான கருத்துக்கள் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளிடையே அவருக்கு அனுதாபத்தை வென்று கொடுத்தது.

அவர் அரசியல்ரீதியில், ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்களாக பாசாங்குத்தனம் செய்தவாறு, அதேவேளையில் தேசிய ஆளும் வர்க்கங்களின் வர்க்க நலன்களைப் பாதுகாத்து வந்த ஆர்ஜென்டினாவில் பெரோனிசம், வெனிசுவேலாவில் ஹூகோ சாவேஜ், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் "ரோஜா நிற பேரலை" என்றழைக்கப்படும் ஏனைய ஜனரஞ்சக சக்திகளை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்தார். மரடோனா ஒருபோதும் அரசியலில் தனிப்பட்ட நன்மதிப்பை பொறுவதற்கோ அல்லது பதவிக்கு போட்டியிடுவதற்கோ முயலாத நிலையில், இத்தகைய சக்திகளுக்கு நேரெதிராக, சமத்துவமின்மைக்கு எதிரான அவரின் உணர்வுகளில் ஓர் உண்மைத் தன்மை இருந்தது.

முன்னதாக, குறிப்பாக அவரின் மரணத்திற்குப் பின்னர், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நடுத்தர வர்க்க தார்மீக போராளிகளின் ஒரு கூட்டம் மரடோனா வெளிப்படுத்திய இடது உணர்வுகளைக் கண்டித்து நடவடிக்கைக்குள் இறங்கியது. அவர் களத்திற்கு வெளியே அவரின் ஒவ்வொரு படியையும் இழிவுபடுத்தும் முயற்சியில், அவர்கள் அவரை பெண்களை இழிவாக கருதும் போதை மருந்து பழக்கம் உள்ளவர் என்று அவரைச் சித்தரித்துள்ளது, இது அனைத்து நிதானம் இல்லாத ஒரு மதிப்பீடாகும்.

1960 இல் பிறந்த மரடோனா, புவனோஸ் ஐயர்ஸிற்கு வெளியே ஒதுக்குப்புறமான தொழிலாள வர்க்க சேரி பகுதியான வில்லா ஃபியோரிடோவில் எட்டு உடன்பிறப்புகளுடன் வளர்ந்தார். வடமேற்கு சாக்கோ மாகாணத்திலிருந்து வந்திருந்த அவரது குடும்பம், புறநகர் புலம்பெயர்ந்தவர்களின் ஒரு பாரிய அலையின் பாகமாக இருந்தது, ஆர்ஜென்டினா பொருளாதாரம் அதன் பெரோனிசத்திற்குப் பிந்தைய "பொற்காலத்தில்" தோல்வி அடைந்திருந்த நிலையில், புவனோஸ் ஐயர்ஸின் புறநகர் பகுதிகளின் வறுமையில் தள்ளப்பட்டு, அக்குடும்பம் வறிய கூலிகளில் பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டிருந்தது.

அவரது தந்தை நிர்வகித்த, “ரெட் ஸ்டார்" என்ற அண்டைப்பகுதி குழுவில் விளையாடி வந்தபோது, வெறும் 10 வயதிலேயே அவர் திறமைகளைத் தேசிய ஊடகங்கள் குறிப்பெடுக்கத் தொடங்கின. அவர் ஏழாம் வகுப்பு கூட முடித்திருக்கவில்லை. 1976 வாக்கில், வெறும் 16 வயது நிரம்பிய நிலையில், அவர் முதல்முதலில் தொழில்ரீதியாக அர்ஜென்டினோ ஜூனியர் அணிக்காக விளையாடினார், அதில் அவர் அதிகபட்ச கோல் அடித்தவராக தன்னை வேறுபடுத்திக் காட்டினார்.

அவர் தொழில்வாழ்வின் தொடக்கம், மார்ச் 1976 இல் பெரோனிச அரசாங்கத்தைத் தூக்கிவீசி, 30,000 தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளைப் படுகொலை செய்த ஒரு பாசிசவாத இராணுவ சர்வாதிகாரம் பதவியைக் கைப்பற்றிய அதேவேளையில் தொடங்கியது.

கொடூரமான ஒடுக்குமுறையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக, அந்த இராணுவ ஆட்சிக்குழு அந்நாட்டில் ஏற்கனவே மிகவும் பிரபல பிரமுகர்களில் ஒருவராக ஆகியிருந்த மரடோனாவைச் சிறிது காலத்திற்கு இராணுவச் சேவையில் இணைத்துக் கொண்டு, புகைப்படங்களுக்குக் காட்சி கொடுப்பதற்காக மத்திய கட்டளையகத்தில் அவரை நிறுத்தியது. சர்வாதிகாரி ஜோர்ஜ் வெதிலா ஒருமுறை தனிப்பட்டரீதியில் மரடோனாவைப் பாராட்டுவதற்கான சந்தர்ப்பத்தையும் எடுத்துக் கொண்டார். “1979 இல் இளைஞர் உலக கோப்பையை நாம் வென்றிருந்தாலும் கூட, பொலிஸ் கையாள் வெதிலா எங்களை ஓர் எடுத்துக்காட்டாக பயன்படுத்திக் கொண்டார். அவர் எங்கள் முடியை வெட்டி, இராணுவச் சேவை செய்ய வைத்தார்,” என்று கூறி, சில ஆண்டுகளுக்குப் பின்னர், அச்சம்பவத்தை மரடோனா நினைவுகூர்ந்தார்.

அவர் தொழில்வாழ்வு நெடுகிலும், அவர் மீதான அவதூறுகளைப் போலவே அதேயளவுக்கு அவர் பிரபலத்தன்மையையும் சுரண்ட முயலும் பல பிரமுகர்கள் அவரைச் சுற்றி இருந்தனர். புகழ், காயங்கள் மற்றும் ஆழ்ந்த எதிர்பார்ப்புகள் சூழ்ந்திருக்க, அவர் பார்சிலோனாவுக்காக விளையாடிய போது 24 வயதிலேயே அவருக்கு போதை மருந்து அறிமுகமானது, அது அவர் வாழ்நாள் நெடுகிலும் போதை மருந்து பழக்கத்துடன் போராடுவதில் போய் முடிந்தது.

பெரும்பாலான கால்பந்தாட்ட அணிகள் உலகெங்கிலும் இருந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைத் தங்களுக்கென நியமிக்கின்றன, அவற்றில் பல அணிகள் விளையாட்டுகள் மூலமாக தங்களின் பொருளாதார அவலநிலையைக் கடந்து வர முடியுமென நம்பும் எண்ணற்ற இளைஞர்களை அடையாளப் படுத்தும் விதமான வாழ்க்கைக் கதை அமைந்த, மரடோனா போன்ற வறிய பின்புலம் கொண்டவர்களை நியமித்துக் கொள்கின்றன.

பின்னர் அவர் இத்தாலியின் நாப்லெஸில் இணைந்தார். ESPN தகவல்படி, “அதுவொரு வறிய நகரம், அங்கே உள்ள வறிய குழந்தைகளுக்கு நான் ஒரு இலட்சிய மனிதராக இருக்க விரும்புகிறேன் என்பதால் தான்" அங்கே விளையாட விரும்பியதாக அவர் தெரிவித்திருந்தார். நாப்லெஸில் அவரை வரவேற்க அண்மித்து 80,000பேர் ஒன்று கூடியிருந்தனர். அவரின் திறமையும் செயல்திறனும் அவர் இரசிகர்களிடம் இருந்து, குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்டிருந்தது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

ஒரு சம்பவத்தில், மரடோனா ஒரு பெண்ணின் செலவு மிகுந்த மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் திரட்டுவதற்காக ஒரு வறிய அண்டைப்பகுதியின் சகதி மைதானத்தில் விளையாடுவதற்காக நாப்லெஸில் அவர் அணி வீரர்களைச் சமாதானப்படுத்தினார். காயப்படும் என்ற பயத்தால் நிர்வாகம் அவரை விளையாட வேண்டாமென உத்தரவிட்டிருந்தது.

2000 இல், பதினாறாம் போப் பெனெடிக்ட் இன் செல்வவளத்திற்காக அவருக்கு கண்டனம் தெரிவித்த மரடோனா இவ்வாறு குறிப்பிட்டார்: “அவர் தங்க கூரை வேய்ந்த இடத்தில் வாழ்கிறார், அதேவேளையில் நிறைய பேர் பட்டினியில் வாடுகிறார்கள்,” என்றார். மெக்சிகோவில் Sinaloa Dorados இல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த போது, அவர் பிரபலமாக இதையும் கூறினார், “காலை 4 மணிக்கு வேலைக்குப் புறப்படும் ஒருவரால் 100 பெஸோசைத் திரும்ப கொண்டு வர முடியவில்லை. அவர் குழந்தைகளுக்கு அவர் உணவு கொடுக்க வேண்டும் என்பதால் அவர் அழுத்தத்தை முகங்கொடுக்கிறார். என் ஜாடி நிரம்பி உள்ளது,” என்றார்.

அவர் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஒடுக்குமுறையின் மற்றும் ஏகாதிபத்திய போரின் ஒரு வெளிப்படையான எதிர்ப்பாளராகவும் இருந்தார். ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போருக்கு எதிராக சர்வதேச அளவிலான பாரிய போராட்டங்களுக்கு மத்தியில், அவர் "புஷ் நிறுத்து" (Stop Bush) என்று குறிப்பிடும் ஒரு சட்டையுடன், அதில் புஷ் என்பதில் S சுவஸ்திகா என்று மாற்றப்பட்டிருந்த நிலையில், ஆர்ஜென்டினாவில் அணிவகுத்து சென்றார், மற்றும் அந்த அமெரிக்க ஜனாதிபதியை "மனித குப்பை" என்று குறிப்பிட்டார்.

அவரின் சக விளையாட்டு வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் உடனான பேட்டிகள், அவரின் புகழும் போதை பழக்கமும் உடல்ரீதியிலும் உணர்வுரீதியிலும் அவரை மன அழுத்தத்திற்கு இட்டுச் சென்றதை தெளிவுபடுத்துகின்றன. அவரின் அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட இந்த துன்பத்தைக் குறித்து அவர் அடிக்கடி வருத்தம் தெரிவித்திருந்தார். மிக சமீபத்திய மாதங்களில், சந்தேகத்திற்கிடமின்றி அவர் பெரோனிஸ்டுகள் திணித்த சிக்கன நடவடிக்கைகள் மற்றும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" மனிதாபிமானமற்ற கொள்கைகளை குறித்தும் அறிந்திருந்தார்.

அவர் பெரிதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பதை அவரது நிர்வாகி Stefano Ceci சுட்டிக்காட்டினார். “சமீபத்தில், அவர் உடல்ரீதியிலும் மனோரீதியிலும் தன்னைத்தானே கைதுறந்திருந்தார். அவர் சோர்ந்து போய், தன்னை மரணத்திற்கு விட்டு விட்டதாக நினைக்கிறேன், அவர் உண்மையில் இதற்கு மேல் வாழ விரும்பவில்லை,” என்றார்.

மரடோனாவின் இந்த துயரகரமான தலைவிதி குறித்த மக்களின் மனக்கவலையானது, உலகெங்கிலும் அனைத்து தொழிலாளர்களும் இளைஞர்களும் பகிர்ந்து கொள்ளும் பெரிதும் சமூக சமத்துவமின்மை மற்றும் ஏகாதிபத்திய போர் மீது கொத்தெழும் கோபத்திற்கான ஓர் அளவீடாக உள்ளது. இந்த உணர்வுகள், தொழிலாள வர்க்கத்தில் அரசியல்ரீதியில் நனவுபூர்வமான சோசலிச சர்வதேசியவாத தலைமையை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே ஒரு முற்போக்கான வடிகாலைக் காண முடியும்.

Loading