வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்கள் தீவிரமடையும்போது தெற்கில் கர்நாடகாவில் தொழிலாள வர்க்க கோபம் வெடித்தெழுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் தொழிலாள வர்க்க கோபம் வெடித்தெழுந்து வருகிறது, அதேசமயம் வட இந்தியாவில் தேசிய தலைநகரான டெல்லியின் புறநகரில் நூறாயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டு, மத்திய அரசாங்கத்தின் வணிக சார்பு வேளாண் “சீர்திருத்தத்திற்கு” எதிராக தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

இரு தரப்பினருமே COVID-19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட சமூக பொருளாதார பேரழிவை பயன்படுத்தி இந்தியாவின் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினர், இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை தீவிரப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தீவிர வலதுசாரி இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) முன்னெடுக்கும் முயற்சிகளை எதிர்க்கின்றனர்.

ஏப்ரலில் இருந்து செப்டெம்பர் வரையிலான பாதி வருடத்தில் 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக சுருங்கிய பொருளாதாரத்துக்கு "புத்துயிர்" அளிப்பதன் பெயரில், மோடி அரசாங்கம் தனது தனியார்மயமாக்கல் ஓட்டத்தை துரிதப்படுத்தியுள்ளது மற்றும் பெருவணிகம் நீண்டகாலமாக கோரி வந்த வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டம் "சீர்திருத்தங்களை" நிறைவேற்றியுள்ளது. பெரும்பாலான தொழிலாளர் வேலை தொடர்பான நடவடிக்கைகளை குற்றவியல்மயப்படுத்துவதற்கும் "தொழிலாளர் சந்தையின் நெகிழ்வுத்தன்மையை" ஊக்குவிப்பதற்கும் அது தொழிலாளர் குறியீட்டை மாற்றி எழுதியுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கும், விருப்பப்படி தொழிலாளர்களை "வேலைக்கு அமர்த்துவதற்கும், நீக்குவதற்கும்" இப்போது முதலாளிகளுக்கு இன்னும் பரப்பெல்லை உள்ளது.

சனிக்கிழமை அதிகாலை, கர்நாடகாவின் நரசபுராவில் உள்ள விஸ்ட்ரேனுக்கு சொந்தமான செல்போன் மற்றும் IT உற்பத்தி நிலையத்தில் உள்ள தொழிலாளர்கள் நிர்வாக அலுவலகங்களை அடித்து நொருக்கினர், மூத்த நிர்வாகிகளின் கார்களை புரட்டிப் போட்டனர். இரவு ஷிப்டிலிருந்து வெளியே வந்த 2,000 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது. தொழிலாளர்கள் விஸ்ட்ரேன் மேலாளர்களுடன் அவர்களது நியாயத்தை சொல்ல முயன்றனர், ஆனால் அவர்களது புகார்கள் ஆணவத்துடன் நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்தனர்.

 

TKM ஆலைக்கு எதிரே TKM தொழிலாளர்கள் குடை எதிர்ப்பு

நிறுவனத்தின் உத்தரவின் பேரில், குறைந்தது 132 தொழிலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் லெக்சர் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான சில நிறுவனங்களுக்கு ஐபோன்கள் மற்றும் பயோடெக் உபகரணங்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் போது விஸ்ட்ரேன் வளாகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஒரு மிருகத்தனமான வேலை ஆட்சிமுறைக்கு உட்படுத்தப்பட்னர்.

மேலும், நிறுவனம், நீண்டகாலமாக COVID-19 தொற்றுநோய் பொதுமுடக்க மூடலை மேற்கோளிட்டு, தொழிலாளர்களின் மாத ஊதியத்தை 25 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக குறைத்துள்ளது.

இந்து பத்திரிகையின்படி, விஸ்ட்ரேனின் நரசபுரா தொழில்துறை பூங்கா வளாகத்தில் சுமார் 15,000 ஊழியர்கள் உள்ளனர், ஆனால் அவர்களில் 1,400 பேர் மட்டுமே நிறுவனத்தின் ஊதிய பட்டியலில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். ஆரம்பத்தில், நிறுவனம் தலா எட்டு மணிநேரத்திற்கு மூன்று ஷிப்ட்களை இயக்கியது, ஆனால் தற்போது இரண்டு 12 மணி நேர ஷிப்ட்களை மட்டுமே உள்ளது.

"எங்கள் துயரங்களைக் கேட்க யாரும் இல்லை," என்று ஒரு தொழிலாளி இந்து விடம் கூறினார். "சம்பளம் வழங்காதது மட்டுமல்லாமல் நாங்கள் ஊதிய வெட்டு பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறோம். வேலையில் நிறைய துன்புறுத்தல்கள் இருக்கின்றன. மாதத்தில் அனைத்து நாட்களும் வேலை செய்த பின்னரும், வருகை முறை ஊழல்மயப்படுத்தப் பட்டிருப்பதால், நம்மில் பெரும்பாலோர் ஊதிய இழப்பைக் காண்கிறோம். அவர்கள் எங்களை OT (மேலதிக நேரம்) வேலை செய்ய அழைக்கிறார்கள், ஆனால் வேலையின் முடிவில் அந்த ஊதியம் வேலைவிடுப்புடன் (ஈடுசெய்யப்படும்) என்று கூறுகின்றனர். நாங்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, HR (மனிதவள) அதற்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்காது.

”கர்நாடக பாஜக மாநில அரசாங்கம் விஸ்ட்ரோனின் ஆதரவுக்கு விரைந்துள்ளது. அண்மையில் திறக்கப்பட்ட ஆலைக்கு பொலிஸை குவிக்குமாறு அது உத்தரவிட்டதுடன், கொடூரமாக சுரண்டப்படும் தொழிலாளர்கள் மீது “விரும்பத்தகாத வன்முறைக்கான” முழு பொறுப்பையும் சுமத்தியுள்ளது. தொழிலாளர்கள் "சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டதற்காக" துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் கண்டனம் தெரிவித்தானர், மேலும் அவர்கள் "பொருத்தமான இடங்களில்", அதாவது தொழிலாளர் அமைச்சகத்துடன் ஏதேனும் புகார்களை எழுப்பியிருக்க வேண்டும் என்றார்.

இது ஒரு இழிந்த கேலிக்கூத்து. தொழிலாளர் துறையும், ஒட்டுமொத்த அரசாங்கத்தைப் போலவே, முதலாளிகளின் சைகையிலும் அழைப்பிலும் உள்ளது. இது கர்நாடகாவின் மிகப்பெரிய நகரமான பெங்களூரு (பெங்களூர்) புறநகரில் உள்ள நரசபுராவைப் போலவே, பிடாடியில் உள்ள நிறுவனத்தின் வளாகங்களில் 3,000 டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor - TKM) தொழிலாளர்கள் ஒரு மாத கால வேலைநிறுத்தம் / கதவடைப்பின் போது அவர்களின் நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டப்பட்டது.

TKMவாகன தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் மாருதி சுசுகி

இந்த வேலைநிறுத்தம் முதலீட்டிற்கு ஒரு அச்சுறுத்தல் என்று மாநில அரசாங்கம் கண்டனம் செய்ததுடன், நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப வேலைக்குத் திரும்புமாறு TKM தொழிலாளர்களுக்கு பலமுறை உத்தரவிட்டது. இதில் மாதந்தோறும் 80,000 முதல் 100,000 வாகனங்கள் வரை 25 சதவீத உற்பத்தி அதிகரிப்பும் இதில் அடங்கும். கடந்த வாரம், கர்நாடக முதல்வர் பி.எஸ். யெடியுரப்பா மற்றும் மாநில தொழிலாளர் அமைச்சர் ஆகியோர் மூத்த TKM நிர்வாகிகளை சந்தித்து தொழிலாளர்களின் எதிர்ப்பை முறியடிக்க அடுத்த நடவடிக்கைகளை வகுக்க திட்டமிட்டனர். செய்தி அறிக்கையின்படி, வேலைநிறுத்தத் தலைவர்களை பெருமளவில் கைது செய்வது மற்றும் தொழிலாளர்களை பணிக்குத் திரும்பும்படி இறுதிக்கெடு வழங்குவது அல்லது பணிநீக்கம் செய்வது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளரான மாருதி சுசுகியுடன் திட்டமிடப்பட்ட கூட்டு முயற்சியின் முழு வெகுமதியையும் முதலீட்டாளர்கள் அறுவடை செய்வதை உறுதி செய்வதற்காக, டொயோட்டாவின் பெரும் பங்குகளுக்கு சொந்தமான TKM அந்த ஆலை “பூகோள போட்டித்திறன்” கொண்டதாக இருக்கவேண்டும் என்பதில் அடமாக உள்ளது. மேலும் ஒரு ஜப்பானிய துணை நிறுவனமான மாருதி சுசுகி, தொழிலாளர்களின் இழப்பில், பூகோளரீதியாக வாகனத் துறையை மறுசீரமைப்பு செய்வதன் ஒரு பகுதியாக, பிடாடி அசெம்பிளி ஆலையில் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா தொழிலாளர்கள் மற்றும் கர்நாடக விவசாயிகள் பெங்களூரில் கூட்டு ஊர்வலம் நடத்துகின்றனர் (புகைப்படம்: WSWS)

இந்திய அரசாங்கக் கொள்கையின் ஒரே கவனம் தொழில்துறையை அதிக போட்டித்திறனுடையதாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்று கடந்த மாத இறுதியில் ஆன்லைன் வர்த்தக மாநாட்டில் பேசிய மாருதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி. பர்கவா கூறினார். மாருதி சுசுகி ஒவ்வொரு ஆண்டும் அதிகமான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது என்று அவர் பெருமை பேசினார்.

2012 ஆம் ஆண்டில், ஹரியானா காங்கிரஸ் கட்சி மாநில அரசாங்கம், காவல்துறை, நீதிமன்றம் மற்றும் மாருதி சுசுகி நிர்வாகம் அனைத்தும் கூட்டாக நிறுவனத்தின் மானேசர், ஹரியானா உற்பத்தி ஆலையில் தொழிலாளர்களுக்கு எதிராக சட்டரீதியான பழிவாங்கல் நடவடிக்கையை தொடங்கின, அவர்கள் வட இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை பெல்ட்களில் ஒன்றில் கடினமான ஒப்பந்த தொழிலாளர் வேலைகள் மற்றும் மிருகத்தனமான வேலை நிலைமைகள் குறித்த தொழிலாள வர்க்க எதிர்ப்பை முன்னெடுத்தனர். ஒரு நிறுவனத்தால் தூண்டப்பட்ட கைகலப்பிற்கு பின்னர், ஆலையின் ஒரு பகுதி தீப்பிடித்தது, நிர்வாகத்தால் வழங்கப்பட்ட "சந்தேக நபர்களின்" பட்டியலின் அடிப்படையில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்தனர். பின்னர் நிறுவனம் 2,400 நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை வெளியேற்றியது, பின்னர் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது ஆலைக்கு உள்ளேயும் வெளியேயும் பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டனர்.

நிறுவன சார்பு தொழிற்சங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியில் தொழிலாளர்கள் 2011 இல் உருவாக்கிய மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் முழுத் தலைமையும் உட்பட 13 தொழிலாளர்கள், இறுதியாக கொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கங்காரு-நீதிமன்ற விசாரணையின் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டனர். அவர்கள் இன்றுவரை அங்கே தான் இருக்கின்றனர்.

கர்நாடக முதலாளிகள் சங்கம், பாஜக அரசாங்கம் TKM தொழிலாளர்களின் போராட்டத்தை வன்முறையில் நசுக்க அழுத்தம் கொடுத்து வருகிறது. நவம்பர் 30 ம் தேதி மாநில அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், இந்த "சட்டவிரோத கிளர்ச்சி" முதலீட்டாளர்களை பயமுறுத்துவதாகவும், "முழுப் பகுதியிலும் தொழில்துறை உறவுகளை முற்றிலுமாகத் தூண்டுவதற்கும்" பரப்புவதற்கும் அச்சுறுத்துகிறது என்று முறையீடு செய்தது.

கர்நாடக போக்குவரத்து வேலைநிறுத்தம்

வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி குறித்த பெரிய வணிக அச்சங்கள் இப்போது உணரப்பட்டுள்ளன. விஸ்ட்ரோனில் கைகலப்புக்கு முந்தைய நாள், பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் உட்பட கர்நாடக அரசாங்கத்திற்கு சொந்தமான நான்கு போக்குவரத்து நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், அவர்கள் அரசாங்க ஊழியர்களாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். தங்கள் நிலையை மாற்றுவதன் மூலம், தனியார்மயமாக்கல் நடவடிக்கையினால் தங்கள் வேலைகள் வெட்டப்படுவது மற்றும் நிலைமைகள் மோசமாக்கப்படுவது ஆகியவற்றை மிகவும் கடினமாக்கவும் மாநில அரசாங்கத்தால் நேரடியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் சிறந்த ஊதியம் மற்றும் வேலை பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் மற்றும் சரியான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தின் விளைவாக COVID-19 காரணமாக இறந்த கிட்டத்தட்ட 50 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும் கோருகின்றனர்.

இந்த வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களுக்கு வெளியேயும் அதற்கு எதிராகவும் வளர்ந்தது, மிக முக்கியமாக ஸ்ராலினிச தலைமையிலான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trade Union Congress - AITUC), கர்நாடக போக்குவரத்து தொழிலாளர்களிடையே நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது.

வேலைநிறுத்தத்தை குற்றவியல்மயப்படுத்துவதற்காக கடுமையான அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை (Essential Services Maintenance Act) செயல்படுத்தவும், வேலைநிறுத்தத்தால் மூடப்பட்ட பாதைகளை இயக்க தனியார் பஸ் ஆபரேட்டர்களை அணிதிரட்டவும் போவதாக பாஜக மாநில அரசாங்கம் அச்சுறுத்துகிறது. ஆனால் வார இறுதியில், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெற முற்படுவதில் அதன் முயற்சிகளை பெரும்பாலும் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது.

ஒரு விவசாயிகள் அமைப்பு, கர்நாடக மாநில ரைதா சங்கம் (Karnataka Rajya Raitha Sangha - KRRS), மற்றும் அதன் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் ஒரு தீவிரவாதி அல்ல, ஆனால் அவர் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை "தூண்டுகிறார்" என்று அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. KRRS பதாகையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வியாழக்கிழமை பெங்களூரில் கூட்டு போராட்டம் நடத்தினர்.

அடுத்த நாள், வேலைநிறுத்தம் செய்த TKM தொழிலாளர்களும் மாநில தலைநகரில் விவசாயிகளுடன் போராட்டம் நடத்தினர்.

நவம்பர் 26 அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் விவசாயிகளின் போராட்டம்

இந்த நடவடிக்கைகள் நவம்பர் 26 ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இருந்து தொடர்கின்றன, இதில் மோடி அரசாங்கத்தின் பெரிய வணிக சமூக பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேறினர், இதில் மூன்று வணிக சார்பு வேளாண் "சீர்திருத்த" சட்டங்கள் அடங்கும். மற்றும் தொற்றுநோய் மற்றும் இந்தியாவின் மிக மோசமான பொருளாதார சுருக்கத்தின் மத்தியில் அரசாங்கமும் இந்தியாவின் ஆளும் உயரடுக்கும், தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள விட்டுவிடப்பட்ட நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்களுக்கு அவசர நிவாரணம் கோரினார்கள்.

அதே நாளில், விவசாயிகள் தங்களது டில்லி சாலோ (டெல்லிக்கு போவோம்) போராட்டத்தைத் தொடங்கினர். துணை இராணுவப் படைகளை நிலைநிறுத்துதல், கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் பிரிவு 144 உத்தரவுகளின் கீழ் ஹரியானா மாநிலம் முழுவதையும் வைப்பது, நான்குக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டங்கள் அனைத்தையும் தடைசெய்தல் உள்ளிட்ட கடுமையான அரசாங்க அடக்குமுறையின் மூலம் – விவசாயிகள் திட்டமிட்டபடி நவம்பர் 27 அன்று டெல்லிக்கு சென்றடைவதை மோடியும் அவரது பாஜகவும் தடுப்பதில் வெற்றி கண்டனர்.

டிசம்பர் 8, 2020 செவ்வாய்க்கிழமை, மும்பையில் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான இந்திய விவசாயிகள் அழைத்த நாடு தழுவிய அளவில் விவசாயிகளின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்புகின்றனர். (AP புகைப்படம் / ராஜனிஷ் ககாடே)

ஆனால் பொலிஸ் கட்டுப்பாட்டை மீறி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், முக்கியமாக வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் எல்லைகளுக்கு வந்தனர். டெல்லியின் எல்லைப் புள்ளிகளில் குவிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 350,000 க்கும் அதிகமாக பெருகியது.

பா.ஜ.க அரசாங்கம் விவசாய சட்டங்களில் ஒப்பனை மாற்றங்களைத் தவிர வேறொன்றையும் முன்வைக்காத நிலையில், விவசாயிகள் இன்று முதல் தங்கள் போராட்டங்களை முடுக்கிவிடப்போவதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த முன்னேற்றங்கள் மோடி அரசாங்கத்திற்கு எதிரான பாரிய மக்கள் எதிர்ப்பின் விசாலத்தையும் வளர்ந்து வரும் சமூக ஒற்றுமையின் உணர்விற்கும் சான்றளிக்கின்றன. மேலும் இவை இந்தியாவை பூகோள மலிவான தொழிலாளர் புகலிடமாக மாற்றுவதற்கான அவர்களின் உந்துதலை தீவிரப்படுத்துவதற்கு எதிரான சவாலாகவும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்து "வலிமையானவராக" வரவிருந்த மோடியையும் அவரது தீவிர வலதுசாரி பாஜகவையும் ஆட்சிக்கு கொண்டுவந்த முழு ஆளும் வர்க்கத்திற்கும் ஒரு சவாலாக இருக்கின்றன. சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய தாக்குதலில் புதுடெல்லியை இன்னும் முழுமையாக ஒருங்கிணைப்பதன் மூலம், உலக அரங்கில் அவர்களின் பெரும் வல்லரசாகும் அபிலாஷைகளுக்கும் சவால் விடுக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக, முஸ்லீம்-விரோத வகுப்புவாதத்தை தூண்டிவிடுவதற்கான பாஜகவின் இடைவிடாத பிரச்சாரத்தையும் எதிர்ப்பு இயக்கம் ஊடறுத்து வருகிறது. தற்செயலாக அல்ல, அதே வாரத்தில் தொழிலாள வர்க்க கோபம் கர்நாடகாவில் வெடித்தது, பாஜக ஆதிக்கம் செலுத்திய மாநில சட்டமன்றத்தின் கீழ் சபை, இந்து அடிப்படைவாத படுகொலை மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியது, இது முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பிற சிறுபான்மையினரை துன்புறுத்த பயன்படும்.

இந்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சி ஆகியவை பூகோள வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும் —கிரீஸ், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து சிலி, நைஜீரியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா வரை பரவியுள்ளன— இது COVID-19 தொற்றுநோய்க்கு தேசிய முதலாளித்துவ உயரடுக்கினர் பூகோள போட்டியாளரின் கூலிக்கு மாரடிக்கும் பதிலிறுப்பால் தூண்டப்படுகிறது. அவர்கள் மனித வாழ்க்கைக்கு மேலாக முறையாக இலாபங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர் மற்றும் தொழிலாளர் உரிமைகள், பொது சேவைகள் மற்றும் வேலைகள் மீதான பல தசாப்தங்களாக தாக்குதலை வியத்தகு முறையில் தீவிரப்படுத்த தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடியை சுரண்டிக்கொள்கின்றனர். அவர்களின் நோக்கம், அவை நிதி தன்னலக்குழுவின் செல்வத்தையும் பெருவணிகத்தின் இலாபத்தையும் முடுக்கிவிடுவதற்காக, அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகள் சந்தைக்குள் செலுத்திய வரம்பற்ற தொகைக்கு உழைக்கும் மக்களை விலை கொடுக்க செய்வதாகும்.

எல்லா இடங்களிலும் உள்ள மையக் கேள்வி என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் ஆரம்பகால பூகோள எழுச்சியை ஒரு சோசலிச சர்வதேச வேலைத்திட்டத்தின் மூலம் பலப்படுத்துவது: அதாவது முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் மற்றும் ஸ்தாபக “இடது” கட்சிகள் மற்றும் அவர்களின் போலி இடது கூட்டாளிகளுடன் முறித்துக் கொள்வதாகும். அவை பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை அடக்கி வந்தன மற்றும் நாசப்படுத்தின. ஒரு மாற்று புரட்சிகர தொழிலாள வர்க்க தலைமையை உருவாக்குவதாகும்.

பாஜக அரசாங்கங்கம் பின்னே காலெடுத்து வைக்க தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்திய தொழிலாள வர்க்கத்தின் பெயரில் பேசுவதாகக் கூறும் அரசியல் சக்திகள் —மிக முக்கியமாக ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அந்தந்த தொழிற்சங்க இணைப்பாளர்களான இந்திய மையம் தொழிற்சங்கங்கள் மற்றும் AITUC— தொழிலாள வர்க்கத்தை சிதறடிக்கவும் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன.

கடந்த செவ்வாயன்று விவசாயிகள் ஒரு பாரத் பந்த் (அகில இந்திய பணிநிறுத்தம்) செய்ய அழைப்பு விடுத்தபோது, ஸ்ராலினிச கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை பணியில் இருக்குமாறு அறிவுறுத்தின. மோடிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை வலதுசாரி எதிர்க்கட்சிகளுக்கு பின்னால் திருப்பிவிடுவதற்கான அவர்களின் முயற்சிகளுடன் இது கைகோர்த்துச் செல்கிறது. அண்மை வரை, இந்திய ஆளும் வர்க்கத்தின் விருப்பமான ஆளும் கட்சியாகவும், முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை அமல்படுத்துவதற்கும், வாஷிங்டனுடன் ஒரு "பூகோள மூலோபாய கூட்டாண்மை" யை முன்னெடுப்பதற்கும் நீண்ட காலமாக முன்னிலை வகித்த கட்சி அதுதான்.

எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிடுவதை தடுப்பதில் ஸ்ராலினிஸ்டுகள் உறுதியாக உள்ளனர், விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களினால் தூண்டப்பட்ட நெருக்கடியை அதன் சொந்த வர்க்க கோரிக்கைகளுக்காக போராடுவதற்கும், இந்தியாவின் உழைக்கும் மக்களை அதன் பின்னால் அணிதிரட்டி ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மோடி அரசாங்கத்திற்கும் முழு இந்திய முதலாளித்துவ ஒழுங்கிற்கும் எதிராக போராட வேண்டும். அத்தகைய ஒரு வேலைத்திட்டம் விவசாயிகளை மட்டுமல்ல, அனைத்து கிராமப்புற மக்களையும் —முதலும் முதன்மையுமாக வறிய விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளையும்— பெருவணிகத்தின் அத்துமீறல்கள் மற்றும் தனியார்மயமாக்கல்களிலிருந்து பாதுகாக்கும் மற்றும் இந்தியத் தொழிலாளர்களின் போராட்டங்களை உலகெங்கிலும் உள்ள சகோதர சகோதரிகளுடன் இணைப்பதற்கான போராட்டத்துக்கு உயிரூட்டுகிறது.

Loading