மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலக சோசலிச வலைத் தளம், ஜனவரி 3, 2020 இல், அதன் புத்தாண்டு முதல் பதிப்பில், “சோசலிசப் புரட்சி தசாப்தம் ஆரம்பமாகிறது" என்று தலைப்பிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் தலைப்பு இந்தளவுக்கு வேகமாக நிரூபணமாகுமென WSWS கூட அனுமானிக்கவில்லை. இந்த இளமையான இருபத்தியோராம் நூற்றாண்டின் மிக முக்கிய ஆண்டின் முடிவில் நிற்கிறோம். இருபதாம் நூற்றாண்டில் 1914 முதலாம் உலகப் போர் வெடிப்பு போல 2020 இல் இந்த தொற்றுநோய் இந்நூற்றாண்டின் மிக முக்கிய வரலாற்று திருப்புமுனையாக நிரூபணமாகும். முதலாம் உலகப் போரானது முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளின் அனைத்து மூர்க்கத்தனத்தையும் அம்பலப்படுத்தி, இருபதாம் நூற்றாண்டை வரையறை செய்த புரட்சிகர மற்றும் எதிர்புரட்சிகர மேலெழுச்சிகளின் வெடிப்பைத் தூண்டியது.
2020 இல் இந்த தொற்றுநோயானது, மனிதகுலத்தின் பரந்த பெரும்பான்மையினரது மிக இன்றியமையா தேவைகளில் இருந்து இலாபத்திற்கான முதலாளித்துவ முனைவைப் பிரிக்கும் சமரசத்திற்கிடமற்ற பொருளாதார, சமூக மற்றும் தார்மீக பிளவை ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னால் அம்பலப்படுத்தி உள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே, கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்குள், இந்த மரண எண்ணிக்கை இப்போது 300,000 ஐ கடந்துள்ளது. உலக முதலாளித்துவத்தின் இந்த மையத்தில், ஒவ்வொரு நாளும் தோராயமாக 3,000 க்கும் அதிகமானவர்கள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன, நாட்டின் பல பகுதிகளில் பலவீனமான மருத்துவத்துறை அஸ்திவாரத்திலேயே முறிந்துவிடும் ஒரு நிஜமான ஆபத்தில் உள்ளது.
நோய்தொற்றுக்கு உள்ளாகக்கூடியவர்களைக் காப்பாற்ற இப்போது தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இந்த நீண்ட நடைமுறையும் மரண விகிதத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகக்கூடும். இப்போதைக்கும் ஏப்ரல் 1 க்கும் இடையே அமெரிக்காவில் குறைந்தபட்சம் இன்னும் கால் மில்லியன் பேர் கோவிட்-19 ஆல் உயிரிழப்பார்கள் என்று இப்போது எதிர்நோக்கப்படுகிறது. இருந்தாலும் இந்த தொற்றுநோய் பரவலைத் தடுக்க முற்றிலும் எந்த தீவிர அவசர நடவடிக்கைகளும் முன்மொழியப்படவில்லை.
அரசும், பெருநிறுவனங்களும், வோல் ஸ்ட்ரீட்டில் உள்ள இந்த தொற்றுநோயிலிருந்து இலாபமீட்டுவோரும், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் —அவர்களது "ஈவிரக்கமற்ற அலட்சிய" கொள்கையோடு— அத்தியாவசியமல்லாத வேலையிடங்களை மூடுவது, பள்ளிகளை மூடுவது, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மற்றும் இந்த தொற்றுநோயால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள சிறுவணிகங்களுக்கும் அவசர நிதி உதவிகள் வழங்குவது என உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க இன்னமும் மறுத்து வருகின்றனர், ஏனென்றால் இந்த முதலாளித்துவ அமைப்பு உயிர்களை விட இலாபங்களுக்கே முன்னுரிமை வழங்குகிறது. பங்கு மதிப்புகள் உயர்வால் பரந்த செல்வவளங்களைப் பாரியளவில் குவித்துக் கொண்டுள்ள நிதியியல் மற்றும் பெருநிறுவன செல்வந்த தட்டுக்கள், பங்குச் சந்தையை, பெருநிறுவன இலாபங்களை, மற்றும் அனைத்திற்கும் மேலாக அவர்களின் தனிப்பட்ட செல்வவளத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடிய உயிர்-காக்கும் கொள்கைகளை எதிர்க்கின்றன.
இந்த தொற்றுநோய் அதன் பயங்கர எண்ணிக்கையில் தன்னை எடுத்துக்காட்டி உள்ள அதேவேளையில், அமெரிக்க ஜனநாயகமோ பாரிய சமூக சமத்துவமின்மையால் தோற்றுவிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் விகாரங்களால் அடியில் உடைந்து வருகிறது. பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்குள் கணிசமான ஆதரவைக் கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், உரிமைகள் சாசனத்தை அழித்து ஒரு பாசிசவாத சர்வாதிகாரத்தை அமைக்க அவரின் ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தி உள்ளார்.
இந்தாண்டின் முன்நிகழ்ந்திராத சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் போது, உலக சோசலிச வலைத் தளம் தொழிலாள வர்க்கத்திற்கு உலக சம்பவங்களை ஈடிணையின்றி வழங்கியதில் அதன் முக்கிய இன்றியமையாத பாத்திரத்தை எடுத்துக்காட்டி உள்ளது. ஆனால் அது சம்பவங்களைக் குறித்து வெறுமனே செய்தி மட்டும் வழங்கவில்லை; அது அவற்றை பகுத்தாராய்ந்து அவற்றின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. முன்னோக்கு மற்றும் நடவடிக்கைகான ஒரு வேலைத்திட்டத்தை WSWS வழங்குகிறது.
இந்த தொற்றுநோய் மீது உலக சோசலிச வலைத் தளம் வழங்கிய விபரங்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு உலகில் அங்கே ஒரேயொரு பிரசுரமும் இல்லை. இந்த தொற்றுநோய் வெடிப்பு குறித்து அதன் முதல் குறிப்பிடத்தக்க அறிக்கையை அது ஜனவரி 24, 2020 இல் வெளியிட்டது.
“இந்த கொரோனா வைரஸ் அவசரநிலை, மக்களின் மிகவும் அடிப்படை தேவைகளுக்குத் தீர்வு வழங்குவதில் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்விக்கு வெளிப்பாட்டை வழங்கும், ஒரு மருத்துவத்துறை நெருக்கடி மீது ஒருங்குவிய வைக்கிறது,” என்று ஜனவரி 25 இல் அது எச்சரித்தது.
இந்த தொற்றுநோய்க்கு அவர்கள் விரைவாகவும் திறமையாகவும் விடையிறுக்க தவறியதை நியாயப்படுத்துவதில், ட்ரம்ப் நிர்வாகமும் ஊடகங்களும், இந்த தொற்றுநோயின் பரவலையும் பாதிப்பு திறனையும் முன்அனுமானிக்க முடியாததாக இருந்ததென அவர்கள் வாதிடுகிறார்கள்.
ஆனால் இந்த அப்பட்டமான பொய்யை, இந்த நெருக்கடியின் ஆரம்ப நாட்களிலேயே உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான அவசர நடவடிக்கைக்கான எண்ணற்ற எச்சரிக்கைகளும் அழைப்புகளும் அம்பலப்படுத்துகின்றன.
மார்ச் 6, 2020 இல், அமெரிக்காவில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெறும் 15 ஆக இருந்த போதே, இந்த தொற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய அழிவையும் குற்றகரமாக அரசாங்க விடைப்பு போதுமானளவுக்கு இல்லை என்பதையும் WSWS அப்போதே உணர்ந்திருந்தது. நாங்கள் எழுதினோம்:
மக்களின் உடல்நலன் மீது ட்ரம்ப் நிர்வாகத்தின் அலட்சியம், பண்டைய எகிப்து மன்னர்களான பரோவாக்கள் (pharaohs) அவர்களின் அடிமைகளுக்கு காட்டியதை விட மேலாக உள்ளது என்றில்லை, ஒருவேளை அதை விட மோசமாக உள்ளது. ஊடகங்களோ, மனித உயிரிழப்புகளுக்காக துயரப்பட்டதை விட வோல் ஸ்ட்ரீட்டின் பங்கு மதிப்புகள் வீழ்ச்சியைக் குறித்து வருந்துவதற்கு அதிக நேரம் செலவிடுகின்றன.
மார்ச் 13, 2020 இல், அமெரிக்காவில் கோவிட்-19 உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 47 ஆக இருந்த போது, WSWS, “சமூகத்துடன் முதலாளித்துவம் போரில் உள்ளது,” என்று தலைப்பிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டது, அதில் நாங்கள் எழுதுகையில், “இந்த கொரொனா வைரஸ் முன்நிகழ்ந்திராத அளவில் ஒரு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியாக அபிவிருத்தி அடைந்து வருகிறது,” என்று எச்சரித்தோம்.
மார்ச் 17, 2020 இல், அமெரிக்காவில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெறும் 100 ஐ கடந்திருந்த போது, சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய குழு "தொழிலாள வர்க்கத்திற்கான நடவடிக்கை திட்டம்" என்பதை வெளியிட்டது, அது பின்வருமாறு குறிப்பிட்டது:
கடந்த இரண்டு மாதங்களில், இந்த தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில் வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகள் அனைத்தும் நிதியியல் சந்தைகளுக்கு முட்டுக்கொடுப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளன. …
பெருமளவில் நேரம் விரயமாக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த தொற்றுநோயின் பாதிப்பும் வீச்செல்லையும் இப்போதே எடுக்கக்கூடிய அவசர விடையிறுப்புகளைச் சார்ந்துள்ளன. …
பெருநிறுவன இலாபம் மற்றும் தனியார் சொத்துக்கள் மீதான எல்லா பரிசீலனைகளையும் விட உழைக்கும் மக்களின் தேவைகளுக்கு முற்றிலுமாக நிபந்தனையின்றி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த நெருக்கடிக்கான விடையிறுப்பை வழிநடத்தும் இன்றியமையா கோட்பாடாக இருக்க வேண்டும்.
இத்தகைய அறிக்கைகளும், கடந்த ஆண்டு நெடுகிலும் வெளியிடப்பட்டுள்ள இன்னும் டஜன்கணக்கான அறிக்கைகளும், வேறெந்த பத்திரிகையிலும் காண முடியாத மட்டத்திற்கு சமூக மற்றும் அரசியல் உள்பார்வையை எடுத்துக்காட்டுகின்றன. அவை உலக சோசலிச வலைத் தளத்தில் பயன்படுத்தப்படுகின்ற மார்க்சிச அணுகுமுறையின் அசாதாரண சக்திக்குச் சான்று பகிர்கின்றன. WSWS இன் எச்சரிக்கைகள் அக்கறையோடு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால், நூற்றாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் எங்கள் எச்சரிக்கைகள் மீது கவனமெடுப்பதற்குப் பதிலாக, பெருநிறுவன ஊடகங்களோ தொடர்ந்து உலக சோசலிச வலைத் தளத்தைத் தணிக்கை செய்தன. அமெரிக்க அரசியல் நெருக்கடிக்கு WSWS இன் விடையிறுப்பானது, இந்த தொற்றுநோய் மீதான அதன் செய்திகளில் இருந்த தெளிவை விட குறைவாக இருக்கவில்லை. ஜூன் 2020 தொடக்கத்தில், கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கும் மற்றும் குடிமக்களின் போராட்டங்களை வன்முறையாக ஒடுக்க அவர் இராணுவ பொலிஸை அணித்திரட்டுவதற்குமான ட்ரம்ப் அச்சுறுத்தலின் முக்கியத்துவத்தை WSWS மிகச் சரியாக மதிப்பீடு செய்தது. ஜூன் 4, 2020 அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு அறிவித்தது:
ஓர் இராணுவ சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும், அரசியலமைப்பைத் தூக்கி வீசவும், ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்கவும் மற்றும் அமெரிக்காவை மூழ்கடித்துள்ள பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டங்களை வன்முறையாக ஒடுக்கவும் நடக்கும் ஓர் சூழ்ச்சியின் அரசியல் நரம்பு மண்டலமாக வெள்ளை மாளிகை இப்போது விளங்குகிறது.
இதற்கும் மேலாக, அடுத்தடுத்த சம்பவங்களின் வெளிச்சத்தில், அசாதாரண தீர்க்கதரிசனமாக தெரியும் ஓர் எச்சரிக்கையில், “இந்த நெருக்கடி முடிந்துவிட்டதென நினைப்பதை விட மிகவும் அபாயகரமானது வேறெதுவும் இல்லை. மாறாக, அது இப்போது தான் தொடங்கி உள்ளது,” என்று எச்சரித்தோம்.
இந்த தொற்றுநோய் வெறுமனே ஒரு துயரமில்லை. இதுவொரு எச்சரிக்கை. இலாபங்களுக்காகவும் தனிநபர் செல்வசெழிப்புக்காகவும் இந்த புவியை அடிபணியச் செய்வதென்பது பாசிசத்திற்கும் இறுதியில் அணுஆயுத போரின் பேரழிவுக்கும் இட்டுச் செல்கிறது. ஆனால் உலகமெங்கிலும் எதிர்க்கும் மனநிலை வளர்ந்து வருகிறது. இந்த உலகளாவிய தொற்றுநோய்க்கு ஆளும் உயரடுக்கின் குற்றகரமான விடையிறுப்பு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் முன்பினும் அதிக கோபத்தைத் தூண்டிவிட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடி ஆழமடைந்து வர்க்க போராட்டத்தின் தீவிரப்பாட்டால் குறிக்கப்படும்.
ஒவ்வொரு மாபெரும் வரலாற்று நெருக்கடியும் அரசியல் இயக்கங்களையும் அவற்றின் வேலைத்திட்டங்களையும் பரிசோதிக்கின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதனுடன் இணைந்துள்ள உலகெங்கிலுமான சோசலிச சமத்துவக் கட்சியின் குரலான உலக சோசலிச வலைத் தளம், 2020 இல் பல சவால்களைச் சந்தித்துள்ளது என்பதை நேர்மையாக கூற முடியும்.
உலக சோசலிச வலைத் தளம், தொழிலாள வர்க்கத்தின் நாளாந்த பேராட்டங்களில் அதிகளவில் ஈடுபட்டு வருவதுடன் சேர்ந்து, அதன் அரசியல் பகுப்பாய்வு மற்றும் வேலைத்திட்டத்தின் சரியானத்தன்மையும் தெளிவும் —WSWS ஐ அணுகுவதைத் தடுப்பதற்காக கூகுள், பேஸ்புக், ட்வீட்டர் மற்றும் ரெடிட் ஆகியவற்றின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியிலும்— அதன் வாசகர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரிக்க இட்டுச் சென்றுள்ளது. அக்டோபர் 2 இல் WSWS மீண்டும் புதிய வடிவில் தொடங்கப்பட்டதற்கு உத்வேகமான விடையிறுப்பு கிடைத்துள்ளது.
2019 இல், 17 மில்லியன் பேர் WSWS பக்கங்களைப் பார்வையிட்டுள்ளனர். 2020 இல், புதிய ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் அண்மித்து இரண்டு வாரங்கள் இருந்தாலும், 21.7 மில்லியன் பேர் பக்கங்களைப் பார்வையிட்டுள்ளதை WSWS பதிவு செய்துள்ளது, இது 28 சதவீத அதிகரிப்பாகும்.
WSWS வாசகர்களின் மொத்த எண்ணிக்கை 41.7 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக உலகெங்கிலும் WSWS பதிவு செய்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். பிரிட்டனில், இத்தளத்தின் வாசகர்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில், வாசகர் எண்ணிக்கை 93 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில், 67 சதவீதம். இலங்கையில், 235 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரேசிலில், 103 சதவீதம் அதிகரித்துள்ளது. துருக்கியில், WSWS பயனர்களின் எண்ணிக்கை 152 சதவீதம் அதிகரித்துள்ளது.
பார்வையிடப்பட்ட பக்கங்களின் மொத்த எண்ணிக்கையும் எங்கள் வாசகர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க சாதனையாகும், இதற்காக ஆசிரியர் குழுவும் இந்த தளத்தை உருவாக்கி பதிவிட்டு வருவதில் பங்களிப்பு செய்தும் எங்களுக்கு எழுதியும் வரும் உலகெங்கிலும் உள்ள எங்களின் பல தோழர்களும் நியாயமாக பெருமை கொள்ளலாம்.
ஆனால் வாசகர் எண்ணிக்கையில் இந்த அதிகரிப்பானது தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் போர்குணத்தைப் பிரதிபலிக்கிறது என்பதையும், இதனால் உலக சோசலிச வலைத் தளம் புதிய மற்றும் இன்னும் அதிக சிக்கலான அரசியல், தொழில்நுட்ப மற்றும் அமைப்புரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்பதையும் நாங்கள் உணர்வோம்.
இத்தகைய சவால்களைச் சந்திக்க WSWS தீர்மானமாக உள்ளது. ஆனால் எங்களுக்கு உங்கள் ஆதரவு வேண்டும். உருவாக்குவதும், தொழில்நுட்பரீதியில் பராமரிப்பதும் மற்றும் உலகளாவிய செய்திகளை WSWS வழங்குவதும் சிக்கல்களை அதிகமாக அதிகரிக்கிறது, இத்துடன் சேர்ந்து வலைத் தளத்தை பேணி அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதி ஆதாரங்களின் அளவும் அதிகரிக்கின்றன.
ஆகவே தான், 2021 புத்தாண்டு நிதிக்குச் சாத்தியமானளவுக்கு அதிக நன்கொடைகளை வழங்குமாறு உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இன்று தொடங்கும் இந்த நிதி திரட்டல் பெப்ரவரி 15, 2021 வரையில் தொடரும். இப்போதிருந்தே நீங்கள் நன்கொடை வழங்கலாம் அல்லது பெப்ரவரி 15 க்குள் செலுத்த உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
எங்களுக்கு வழங்கப்படும் பணம், எங்கள் பணியாளர்களை விரிவாக்கவும், எங்கள் செய்திகளின் பரப்பெல்லையை விரிவுபடுத்தவும், வேகமாக வளர்ந்து வரும் இணைய தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கவும் பயன்படுத்தப்படும்.
இந்த காணொளியையும் WSWS இல் பதிவிடப்படும் ஆவணங்களையும் உங்கள் நண்பர்களுக்கும் சக தொழிலாளர்களுக்கும் பரப்புவதன் மூலமாகவும் இந்த வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கையின் அதிகரிப்பையும் நிதி திரட்டலையும் வெற்றிகரமாக்குவதில் பங்களிப்பு செய்ய முடியும். WSWS ஐ அணுகுவதைத் தடுக்கும் மற்றும் தணிக்கை செய்யும் முயற்சிகளைப் பெருநிறுவன ஊடக தளங்கள் கைவிட்டு விடுமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த தளத்திற்கு புதிய வாசகர்களை வென்றெடுப்பதற்கான உங்கள் முயற்சிகள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்நடவடிக்கையாக இருக்கும்.
இறுதியாக, உலக சோசலிச வலைத் தளத்திற்கு நீங்கள் நிதியியல் பங்களிப்பு செய்வதற்கு முடிவெடுக்கையில், எல்லாவற்றையும் விட மிக முக்கிய அடியை முன்வைக்குமாறும் நான் உங்களை வலியுறுத்துகிறேன். சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினராக விண்ணப்பியுங்கள். சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான மற்றும் சமத்துவமின்மை, அரசியல் ஒடுக்குமுறை மற்றும் போர் இல்லாத ஓர் உலகை உருவாக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுங்கள். 2021 இல் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணையுங்கள்.