முன்னோக்கு

அமெரிக்க தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் சபை கூறுவது: “அவர்கள் கேக் சாப்பிடட்டும்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தொற்றுநோய் தூண்டிவிட்டுள்ள, பெருமந்தநிலைக்குப் பிந்தைய மிக மோசமான இந்த நெருக்கடி நெடுகிலும் பாதிக்கப்பட்டு வருகின்ற பத்து மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அருகாமையில் கூட இல்லாத விதத்தில், அவமானகரமாக வெறும் 600 டாலர் ஊக்க நிதியை வழங்கும் 900 பில்லியன் டாலர் தொற்றுநோய் "நிவாரண" பொதியைத் திங்கட்கிழமை இரவு காங்கிரஸ் சபை நிறைவேற்றிய போது, தொழிலாள வர்க்கம் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் காங்கிரஸ் சபை நேருக்குநேரான மோதலில் இறங்கியது.

இந்த தொகை 1.4 ட்ரில்லியன் டாலர் செலவின சட்டமசோதாவுடன் இணைக்கப்பட்டிருந்தது, அதாவது செனட்டர்களோ, பிரதிநிதிகளோ அல்லது அவர்களின் உதவியாளர்களோ எவரொருவரும் வாசிக்கக்கூட நேரமில்லாத விதத்தில், முன்பில்லாதளவில் 5,593 பக்கம் நீளமான நிதி ஒதுக்கீட்டு பட்டியலை பிரதிநிதிகள் சபையும் செனட் சபையும் வாக்களித்து நிறைவேற்றின. பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரென் உட்பட ஒவ்வொரு ஜனநாயகக் கட்சி செனட்டரும் அதன் மீது வாக்களித்தனர். ரஷீடா லைப் மற்றும் துல்சி கபேர்ட் ஆகிய ஜனநாயகக் கட்சியின் இரண்டு பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மட்டும் எதிராக வாக்களிக்க அந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. DSA உறுப்பினர் அலெக்சாண்டரியா ஒக்காசியோ-கோர்டெஸ் அந்த சட்டமசோதாவைப் படிக்க போதிய நேரம் இல்லை என்று சமூக ஊடகங்களில் காட்டிக்கொண்ட போதினும், அந்த நடவடிக்கைக்கு அவரின் ஒப்புதல் முத்திரை வழங்கினார்.

நவம்பர் 16, 2020 அன்று நியூயார்க் நகரில் உள்ள "நியூயார்க் நகரத்திற்கான ஹார்லெம் உணவு வங்கி" என்ற சமூக சமையலறை மற்றும் உணவு சேமிப்பகத்தில் மக்கள் வரிசையில் நின்று உணவு நன்கொடைக்கு பதிவு செய்கிறார்கள் [Crédit: AP Photo/Bebeto Matthews]

ஜனநாயகக் கட்சி ஆதரவிலான இந்த நிவாரண சட்டமசோதா, ஒவ்வொரு குழந்தைக்குமான பணபலன்களுடன் சேர்ந்து 2019 இல் 75,000 டாலருக்கும் குறைவாக சம்பாதித்த பருவமடைந்த வயதினருக்கு ஒரேயொரு முறை நேரடி ஊக்க நிதியாக 600 டாலர் வழங்குகிறது, அதாவது மார்ச்சில் நிறைவேற்றப்பட்ட CARES சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட 1,200 டாலரில் பாதியை வழங்கும். 110,000 டாலருக்கும் குறைவாக சம்பாதித்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் 2,400 டாலரைப் பெறும்.

600 டாலர் என்பது என்ன?

• குழந்தைகள் இல்லாமல் ஒரேயொருவர் சிகாகோவில் ஒரு ஸ்டூடியோ அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து ஆறு நாட்கள் குடியிருப்பதற்குச் சமமான தொகை

• லாஸ் ஏஞ்சல்ஸில் ஆம்புலன்ஸ் பயணத்திற்கான பாதித் தொகை

• சராசரியாக இரண்டு பேர் உள்ள குடும்பத்திற்கு ஒரு மாத உணவுச் செலவு

• ஒன்றரை மாத சராசரி மாணவர் கடன் தொகை

• காப்பீடு இல்லாமல் ஒரு பல் பிடுங்குவதற்குச் செலவாகும் தொகை

கோவிட்-19 நோய்தொற்றுக்களும் உயிரிழப்புகளும் முன்பை விட இப்போது அவற்றின் அதிகபட்ச எண்ணிக்கையில் அதிகரித்து வரும் நேரத்தில் வந்திருக்கும் இந்த சட்டமசோதா, பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கானவர்களின் அளப்பரிய தேவைகளைப் பூர்த்தி செய்ய அவமானகரமாக போதுமானதில்லை. பெருவணிகங்களுக்கு முட்டுக்கொடுக்க காங்கிரஸ் சபை பணத்தைத் தண்ணீராக வாரியிறைத்து வரும் அதேவேளையில், பங்குச்சந்தைகளுக்குள் பெடரல் ரிசர்வ் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சி வரும் நிலையில், தொழிலாளர்களுக்கு ஒதுக்க எதுவும் செய்யப்படவில்லை. அவசரகால உதவி குறித்து பதட்டமான பேச்சுவார்த்தைகள் என்பதாக பல மாதங்கள் செலவிட்ட பின்னர், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பிரெஞ்சு மகாராணி மரி அந்துவானெட் போல "அவர்கள் கேக் சாப்பிடட்டும்!” என்று அறிவித்துள்ளனர்.

நாடெங்கிலும் முதல் சமூக அடைப்பு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து 70 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பின்மையை பதிவு செய்துள்ளனர். மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒப்புதல் கால காத்திருப்பு, வாரங்களும் அல்லது மாதங்களும் கடந்து விட்டன, பலருக்கு நிதியுதவி மறுக்கப்பட்டுள்ளன அல்லது "தவறாக வழங்கப்பட்ட தொகைகளை" திரும்ப செலுத்த கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

Highland Solutions ஆய்வின்படி, இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து அண்மித்து மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் சேமிப்பு ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், மூன்றில் ஒரு பங்கினர் செலவுகளைக் கையாள புதிய கடன் அட்டையைப் பெற்றுள்ளனர். அண்மித்து 80 சதவீதத்தினர் 500 டாலர் அவசர செலவைக் கூட இப்போது கையாள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த ஊக்க நிதி மில்லியன் கணக்கானவர்களின் ஒரு மாத வாடகைக்குக் கூட நெருக்கமாக வரவில்லை. அமெரிக்காவில் ஒரு படுக்கை அடுக்குமாடி வீட்டின் நடுத்தர மாதாந்தர வாடகை மாதத்திற்கு 1,000 டாலருக்கும் அதிகமாக உள்ளது. நியூ யோர்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் சராசரி மாதாந்தர வாடகை 3,000 டாலருக்கும் அதிகமாக உள்ளது.

ஜப்தி நடவடிக்கை மீதான தேசிய கடன் இடைநிறுத்தக் காலம் —இது பத்தாயிரக் கணக்கானவர்களின் மீது ஜப்தி ஆணை பதிவை நிறுத்திவிடவில்லை என்பதோடு ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றி இருந்த நிலையில்—காங்கிரஸால் இது ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது, அதாவது மில்லியன் கணக்கானவர்களுக்கு ஜனவரி அல்ல பெப்ரவரியில் கடிவாளமிட்டு தூக்கி வீசப்படும் ஒரு மாத கால ஈவிரக்கமற்ற சௌகரியம் கிடைத்துள்ளது.

வாடகைக்கு நிதியுதவியாக இந்த சட்டமசோதா 25 பில்லியன் டாலர் வழங்குகிறது என்றாலும், Moody’s Analytic அமைப்பு தகவல்படி, தோராயமாக 12 மில்லியன் வாடகைதாரர்களுக்கு வாடகை மற்றும் இதர வசதிகளுக்காக ஜனவரி 1 இல் சராசரியாக 5,850 டாலர் வாடகை நிலுவைத் தொகை கிடைக்கும், இது மொத்தம் 70 பில்லியன் டாலர் ஆகும். வாடகை நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்வது மீது இந்த சட்டமசோதாவில் எந்த வழிவகையும் இல்லை. வரவிருக்கும் மாதங்களில் அண்மித்து 6 மில்லியன் அமெரிக்கர்கள் வெளியேற்றப்படலாம் அல்லது கடன் வசூல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தொழிலாளிக்கு இந்த 600 டாலர் உதவித்தொகை சராசரி மாத வாடகையைக் கூட ஈடு செய்யமுடியாத அதேவேளையில், அனேகமாக பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலொசி (நிகர சொத்து மதிப்பு 160 மில்லியன் டாலர்) மற்றும் செனட் சபை தலைவர் மிட்ச் மெக்கொன்னல் (நிகர மதிப்பு 34 மில்லியன் டாலர்) மற்றும் காங்கிரஸ் சபையின் ஏனைய உயரடுக்கு உறுப்பினர்களும் தங்களின் நாளாந்த செலவுகளை மனதைக் கொண்டிருந்தார்கள். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி பிடிபட்ட கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் கவின் நியூசம், நாப்பா பள்ளத்தாக்கின் உயர்தர French Laundry உணவகத்தில் வைனுடன் சேர்ந்து இரண்டு நபர்களுக்கான உணவின் விலை சுமார் 1,200 டாலர்களாகும்.

அவர்களால் தொழிலாள வர்க்கத்தை நோக்கி வெறும் சில்லரை காசுகளை மட்டுமே வீச முடியும் என்கின்ற அதேவேளையில், இன்னுமொரு ஆண்டு புலம்பெயர்ந்தோர் வீடுகளில் கெஸ்டாபோ தேடல் சோதனைகளை நடத்தி நாடு கடத்துவதைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் விதமாக, திங்கட்கிழமை காங்கிரஸ் சபை ஒப்புதல் வழங்கிய அந்த சட்டமசோதாவில் புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறைக்கான 7.8 பில்லியன் டாலர் உள்ளடக்கப்பட்டிருந்தது. அது "சீன செல்வாக்கை எதிர்கொள்ளவும் மற்றும் தலாய் லாமாவின் மறுபிறப்பு நிகழ்வை அபத்தமாக அங்கீகரிக்கவும்" 300 மில்லியன் டாலர் வழங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கும் நிதி வழங்குகிறது. சிரியா மற்றும் வெனிசுவேலா அரசாங்கங்களைத் தூக்கிவீசும் முயற்சிக்கு முறையே 40 மில்லியன் டாலர் மற்றும் 33 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட உள்ளன.

ஒரு குறிப்பிடத்தக்க கால சமூக கொந்தளிப்பைத் தவிர்க்க 600 டாலர் போதுமானதென ஆளும் வர்க்கம் சிந்திக்கிறது என்றால், அவர்கள் வேறு ஏதோவொரு வழியைக் காண இருக்கிறார்கள். இப்போது 320,000 க்கும் அதிகமான அமெரிக்கர்களின் உயிர்களைப் பறித்துள்ள ஒரு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எதுவும் செய்யப்படாத நிலையில், மற்றும் இன்னும் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படலாமென எதிர்நோக்கப்படுகின்ற நிலையில், அளப்பரிய கோபம் கட்டமைந்து வருகிறது.

குணப்படுத்தல் நோயை விட மோசமானதாக இருந்து விடக்கூடாது என்பதே ஆளும் உயரடுக்கின் தாரக மந்திரமாக உள்ளது. அதாவது தொழிற்சாலைகளும் பள்ளிகளும் கொரொனா வைரஸ் ஏற்படுத்தும் பிரதான இடங்களாக இருக்கின்ற போதினும் அவற்றை திறந்து வைத்திருப்பதே இதன் அர்த்தமாகும். தேசிய சமூக அடைப்பு இருக்காது என்றும், அவர் நிர்வாகத்தின் முதல் வாரங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உயிர்களும் ஆரோக்கியமும் வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்காக திட்டமிட்டு பலி கொடுக்கப்படுகின்றன என்பதும், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு தெளிவாகி வருகிறது. இப்போது உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது. அத்தியாவசியமல்லாத வேலையிடங்களை மற்றும் பள்ளிகளை மூடவும் அதேவேளையில் இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்கு வரும் வரையில் முழு நஷ்டஈடு உத்தரவாதம் வழங்கவும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொழிலாளர்கள் ஒவ்வொரு வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேண்டும். இந்த தொற்றுநோயைச் சாதகமாக்கி சுரண்டி இலாபமீட்டியுள்ளவர்கள் மற்றும் செல்வந்த தட்டுக்களின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதன் மூலமாகவும் மற்றும் மிகப்பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் செயல்பாடுகளுக்குள் கொண்டு வருவதன் மூலமாகவும் இதை செய்ய முடியும்.

தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்கொண்டுள்ளது. இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும், சமூகத்தைத் தனியார் இலாபத்திற்காக அல்ல மாறாக மனித தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

Loading