தீவிரமாக பரவும் தொற்றுநோய்க்கு மத்தியில் பலாத்காரமாக வேலையில் ஈடுபடுத்த வேண்டாம்! தொழிலாளர்களுக்கான முழு இழப்பீட்டுடன் அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் நிறுத்து!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் உள்ள பெரும் நிறுவனங்கள், கோவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்வதை தொடர வேண்டும் என்று வெளிப்படையாக கோருகின்றன. இந்த உயிராபத்தான கோரிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கின்றது.

அண்மைய வாரங்களில் முதலீட்டுச் சபையில் (BOI) பதிவுசெய்யப்பட்டுள்ள உள்ளுர் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு கம்பனிகளில் தொழிலாளர்கள் பலவந்தமாக வேலைக்கு அமர்ததப்பட்ட பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சுதந்திர வர்த்தக வலையத்திலும் ஏனைய இடங்களில் 7 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள 1,600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முதலீட்டு சபையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

அண்மைய சம்பவத்தில், கொழும்பிற்கு தெற்காக சுமார் 30 கிலோ மீட்டரில் உள்ள பாணந்துரவில், யுனிசெலா ஆடைத் தொழிற்சாலையில், சுமார் 100 தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். சுமார் 2,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இந்த நிறுவனமானது அதன் தொழிலாளர் படையினர் மத்தியில் கோபம் அதிகரித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியதை அடுத்தே செவ்வாய் கிழமை அதன் தொழிற்சாலையை மூடியது.

யுனிசெலா தொழிற்சாலையானது இலங்கை உட்பட 15 நாடுகளில் பல தொழிற்சாலைகளை கொண்ட, 100,000 தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள மிகப் பிரமாண்டமான மாஸ் (MAS) நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். நவம்பர் ஆரம்பத்தில், மேல் மாகாணத்தில் உள்ள ஹொரன மற்றும் அகலவத்தையில் அமைந்துள்ள மாஸ் ஆடைத் தொழிற்சாலைகளில், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிற்சாலை தொழிலாளர்களின் கோரிக்கையால் மூடப்பட்ட போதும், நிர்வாகம் அதை விரைவில் மீண்டும் திறந்தது.

கிளிநொச்சியில் மாஸ் தொழிலாளர்கள் உணவகத்தில் நெரிசாலக கூடியுள்ளனர் [Credit: WSWS Media]

கடந்த வாரம், கொழும்பிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீதாவக்க ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில், முதலீட்டுச் சபை அலுவலக ஊழியர் ஒருவர், உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொண்டு, அக்டோபரில் இருந்து வலையத்தில் உள்ள பல நிறுவனங்களில் கோவிட்-19 தொற்றுக்குள்ளான தொழிலாளர்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிறுவனங்கள், தொற்றுக்கு உள்ளானவர்களை மட்டும் சிகிச்கைக்கு அனுப்பியதோடு முறையான சுகாதார முன்னெச்சரிக்கைகள் இன்றி உற்பத்தியை தொடர்ந்தது. இந்த வலையத்தில் 22 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர்.

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையத்தில் அமைந்துள்ள அமெரிக்காவை தளமாகக் கொண்டுள்ள கொமர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்ரார் ஆடைத் தொழிற்சாலையானது இதன் 650 தொழிலாளர்களில் 70 பேர் கோவிட்-19 தொற்றுக்குள்ளான போது நவம்பர் இறுதிவரை மூடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குள் நிர்வாகமானது தொழிற்சலையை மீண்டும் திறந்து தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களையும் வேலைக்கு திரும்புவதை கோரியது. ஸ்டார் ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்கள், நிர்வாகமானது சுகாதர விதிகளை மீறுகின்றதென அறிவித்து அந்த கட்டளையை மறுத்தனர்.

இதே போன்ற ஒரு சம்வத்தில், இலங்கையில் இன்னொரு பாரிய ஆடைத் தொழிற்சாலையான பிரன்டிக்ஸில், சக தொழிலாளர்கள் மத்தியில் வைரஸ் அறிகுறிகள் பரவுவதை புறக்கணித்து, ஊழியர்கள் வேலையை தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் பி.சி.ஆர். (polymerase chain reaction) பரிசோதனைகளில், இந்த தொழிற்சாலையில் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றமை கண்டு பிடிக்கப்பட்டது.

தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களும் இப்போது தீவு முழுவதும் கோவிட்-19 தொற்று நோயின் வரைவளர்ச்சி மையமாகியுள்ளன. இந்த ஆபத்தான நிலைமையானது ஏப்ரல் மாதக் கடைசியில் பொருளாதாரத்தை மீளத் திறப்பதற்காக இராஜபக்ஷ அரசாங்கம் அழைப்பு விடுத்ததன் நேரடி விளைவாகும்.

தற்போது, இலங்கையில், கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தையும் கடந்துள்ளதோடு நேற்றுவரையில் இறப்புகளின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. அக்டோபர் ஆரம்பத்தில் இருந்து தொற்றுக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கும் இறப்புகளின் எண்ணிக்கை 14 மடங்கும் அதிகரித்துள்ளன. ஆயினும், ஒப்பீட்டவில் இந்த குறைந்த புள்ளிவிபரங்கள், நாட்டின் பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருப்பதனதும் மற்றும் உண்மையான நிலைமை பற்றிய ஒரு பொய்யான சித்திரத்தை கொடுப்பதனதும் விளைவாகும்.

கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைமை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பல பகுதிகளில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளின் அவசியம் பற்றி தினசரி அறிக்கைகளை வெளியிடுகின்றார். இந்த அறிவிப்புகளும் தொழிற்சாலைகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதும், தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் பேரிலான ஒரு தேசிய பொதுமுடக்கத்தின் அவசியத்தையும் அத்தியாவசியமற்ற அனைத்து வேலைத் தளங்களையும் மூடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

ஆரம்பத்தில் இருந்தே இராஜபக்ஷ அரசாங்கமானது முழுமையான முடக்கலுக்கு விரோதமாக இருந்து வருகின்றது. மார்ச் 5 முதல் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும், அரசாங்கம் முழு பொதுமுடக்கத்தை அறிவிக்க மார்ச் 20 வரை காலம் எடுத்துக்கொண்டது. அதுவும், பெருகிவந்த வெகுஜன அமைதியின்மைக்கு மத்தியிலேயே முடக்குவதற்கு தள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், கொழும்பானது அவசியமானவர்களுக்கான சமூக உதவிக்கான போதுமான வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும் அல்லது நிதிப்பற்றாக்குறையாக சுகாதார முறையை மாற்றிமைக்கவும் தவறியது. பாரிய நிறுவனங்களிடம் இருந்தான கோரிக்கைகளைத் தொடரந்து இது பொருளாதாரத்தை மீண்டும் திறந்தது. இது தொற்று நோய் அதிகரிப்புக்கான நிலைமையை உருவாக்கியதோடு கம்பனிகள் தொழிலாளர்களை வேலையை தொடர்வதற்கான கோரிக்கையை ஊக்குவித்தது.

டிசம்பர் 1, ஜனாதிபதி இராஜபக்ஷ, தீவு “புதிய வழமையாக“ வைரஸ் உடன் வாழ வேண்டியுள்ளது எனவும் முதலீட்டாளர்கள் இதன் “நன்மைபயக்கும் விளைவுகளை” பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கு கூறினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமது தொழிற்துறையில் கோவிட்-19 தொற்றின் ஆபத்து பற்றி துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வருகின்ற அமைதியின்மைக்கு பிரதிபலித்த இராஜபக்ஷ, கடுமையான சிறைத் தண்டனை, அபராதம் போன்ற அச்சுறுத்தலுடன் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் தடைசெய்கின்ற கொடூரமான அத்தியவசிய சேவை சட்டத்தை அமுல்படுத்தினார். தொழிற்சங்கங்கள் துறைமுகத் தொழிலாளர்களின் அமைதியின்மை மீதான அரசாங்கத்தின் கொடூரமான பிரதிபலிப்புக்கு முழுமையாக ஆதரவளித்தன.

டிசம்பர் 10, கல்வி அதிகாரிகளுக்கு உரையாற்றுகையில், கொரோனா வைரஸ் “கல்விச் சேவையை” சீர்குலைப்பதற்கு அனுமதியளிக்க கூடாதென இராஜபக்ஷ அறிவித்தார். சிறுவர்களின் கல்வி மீதான கரிசனைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது -அரசாங்கமானது கடந்த மாதம் அதன் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டில் இருந்து 40 பில்லியன் ரூபாவை (211 மில்லியன் டாலர்) வெட்டியது.

கல்வி அமைச்சு, மேல் மாகாணம் மற்றும் சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அனைத்துப் பாடசாலைகளும் ஜனவரி 11 முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவித்தது. இலட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் துரிதமாக தொற்றும் நோயினால் பாதிக்கப்படுவர் என்பதே இதன் அர்த்தமாகும். பெற்றோர்களை வேலைக்கு திரும்புவதற்கு நெருக்குவதற்காக, சிறுவர்கள் பாடசாலைக்கு திரும்புவதை கொழும்பு விரும்புகிறது.

இலங்கை தொழிலாளர்களும் இளைஞர்களும் தொற்றுநோய் “கட்டுப்பாட்டில்” உள்ளது என்ற ஜனாதிபதி இராஜபக்ஷவின் வலியுறுத்தலை எதிர்க்க வேண்டும். பூகோளரீதியில் கோவிட்-19 தொற்றுநோய் துரிதமாக பரவுகிறது. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 77.7 மில்லியனாகும். 1.7 மில்லியனுக்கு அதிகமானவர்கள் மரணித்துள்ளனர். அமெரிக்காவில், 18.4 மில்லியன் தொற்றாளர்கள் இருப்பதோடு 3 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளை, இந்தியாவில் இந்த வாரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. இலட்சக்கணக்கான புதிய தொற்றுக்கள் ஐரோப்பிய நாடுகளை முடக்கத்துக்கு தள்ளியுள்ளதோடு இங்கிலாந்தில் இந்த வைரசின் மிகத் தீவிரமாக பரவும் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், இந்த நாடுகள் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” என்றழைக்கப்படும் கொள்கையை பின்பற்றுகின்றன. இதனால் இன்னும் அதிக எண்ணிக்கையிலானோர் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழப்பதை உத்தரவாதம் செய்கின்றன. வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் இலாபங்கள் மனித உயிர்களுக்கும் மேலாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கே அவை முன்னுரிமை கொடுக்கின்றன. இராஜபக்ஷ இதே கொள்கையையே பின்பற்றுகின்றார்.

டிசம்பர் 8 வெளியான டெய்லிஎப்டி பத்திரிகை, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், இலங்கை பங்குச் சந்தையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களின் வருவாய் 73.7 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது 2018 பிற்பகுதிக்குப் பின்னர், மூன்று மாத காலத்துக்குள் பெறப்பட்ட மிக உயர்ந்த வருமானம் இதுவாகும். இது, “இந்த நிறுவனங்களின் கூட்டாக சேர்க்கப்பட்ட வருமானம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 53 சதவிகித அதிகரிப்பையும், மற்றும் இரண்டாவது காலாண்டு தரவுகளோடு ஒப்பிடும் போது பிரமாண்டமான 287 சதவிகித பாய்ச்சலையும் பிரதிபலிக்கின்றது, என அந்த பத்திரிகை தெரிவித்தது.

இராஜபக்ஷ அரசாங்கமானது வளர்ந்து வருகின்ற அரசாங்க-விரோத உணர்வுகளை நசுக்குவதன் மூலம் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கவும் உலக தொற்று நோயால் துரிதமாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியையின் சுமையை தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது திணிக்கவும் ஒரு ஜனாதிபதி சர்வதிகாரத்தை நோக்கி வேகமாக நகருகின்றது.

ஒகாயா, நெக்ஸ்ட், ஸ்டார், ஸ்மார்ட், மற்றும் மாஸ் நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு, பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலைசெய்வதை மறுத்துள்ளதோடு அவர்களின் ஊதியங்கள், வேலைகள் மற்றும் போனஸ் கொடுப்பனவுகளை வெட்டுவதையும் எதிர்த்தனர். இதற்கு மாறாக, தொழிற்சங்கங்கள் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடன் அவற்றின் கூட்டணியை ஆழமாக்குவதன் மூலம் பதிலளித்தன.

நெக்ஸ்ட் ஆலைக்கு வெளியில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர் [Credit: WSWS Media]

அரசாங்கத்தின் “முத்தரப்பு செயலணியின்” உறுப்பினர்கள் என்ற வகையில், தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குகின்ற அதேவேளை, எவ்வாறு பெரு நிறுவனங்களை சிறப்பாக பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தையும் முதலாளிமாரையும் தொடர்சியாக சந்திக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட எதிர்க் கட்சிகள், பல்வேறு போலி இடது அமைப்புகள் மற்றும் ஊடகங்களுடன் சேர்ந்து, தொற்று நோய்க்கான அரசாங்கத்தின் பதிலிறுப்பை ஆதரிக்கின்றன. இது, 15,000 துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிரான இராஜபக்ஷவின் அத்தியவசிய சேவைகள் சட்டத்திற்கான அவர்களின் மௌன ஆதரவில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), கோவிட்-19 வைரஸில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் தொழில்கள் மற்றும் ஊதியங்கள் மீதான அரசாங்கத்தினதும் முதலாளிகளதும் தாக்குதல்களை எதிர்த்துப் போராடவும் ஒரு புதிய மூலோபாயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்கின்றது.

தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறி, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும் தொழிலாள வர்க்க அண்டை அயல் பகுதிகளிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உடனடியான கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த நடவடிக்கை குழுக்கள் அனைத்து அத்தியவசியமற்ற உற்பத்திகளை மூடவும் அத்தியவசிய பணியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான நவீன மற்றும் முழுமையாக நிதியளிக்கப்பட்ட சுகாதார வசதிகளை ஸ்தாபிக்கவும் கோர வேண்டும்.

அதன் முன்னணி தொழிலாளர்கள் உட்பட சுகாதார துறை ஊழியர்களுக்கு, தொற்றுநோயுடன் போராடுவதற்குத் தேவையான வளங்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மூடப்பட்ட அத்தியவசியமற்ற தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு முழுமையான நிதி உதவி வழங்கவேண்டும்.

உத்தியோகபூர்வமற்ற துறைகளில் உள்ள பலர் உட்பட இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், தமது வேலைகள் மற்றும் வருமானத்தை இழந்துள்ளனர். இந்த தொழிலாளர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் சிறிய தொழில் முனைவோருக்கும் போதுமான வருமானமும் நிதி ஆதரவும் வழங்கப்படவேண்டும்.

இராஜபக்ஷ ஆட்சி, பெரு வர்த்தக கூட்டுத்தாபனங்கள், எதிர் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், இந்த அடிப்படை கோரிக்கைகளை கற்பனையானது எனக் கூறி எதிர்ப்பதோடு பணம் இல்லை என்றும் கூறுவர்.

எவ்வாறாயினும், உயிர்களைப் பாதுகாக்கவும் உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாப்பாற்குமான ஒரே யாதார்த்தமான வேலைத்திட்டம் இது மட்டுமே ஆகும். தேவையான நிதிகள் உள்ளன: கூட்டுத்தாபனங்களின் பிரமாண்டமான இலாபங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படவேண்டும்; பெரும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் தொகையிலான நிதி மற்றும் வரி வெட்டுக்கள் ஏழைகளுக்கு உதவுவதற்காக மாற்றப்பட வேண்டும்; சர்வதேச நிதி நிறுவனங்களுக்கான வெளிநாட்டு கடன்கள் நிராகரிக்கப்பட வேண்டும்; மற்றும் அரசாங்கத்தின் பிரமாண்டமான பாதுகாப்புச் செலவினங்கள் சமூக நலத் திட்டங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.

இது, இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிரான, மற்றும் வங்கிகள், நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் ஆகியவற்றை பொது உடைமையின் கீழும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவருவதற்குமான ஒரு அரசியல் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கமானது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான மற்றும் இந்த சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில், ஏழைகளை அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.

இலங்கை தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைவதன் மூலம் மட்டுமே, இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். ஏற்கனவே இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தொழில்கள், ஊதியங்கள், சுகாதாரம் மற்றும் ஆபத்தின்மை போன்றவற்றை பாதுகாப்பதற்காக போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் அமசன் மற்றும் வாகனத் துறை தொழிலாளர்கள் சாமானிய உறுப்பினர்கள் கமிட்டிகளை அமைக்க முன்முயற்சி எடுத்துள்ளனர்.

இலங்கையில், சுகாதார மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏற்கனவே நடவடிக்கை குழுக்களை அமைத்துள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சியானது ஆடைத் தொழிற்துறை, சுகாதாரம், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் கல்வித்துறை தொழிலாளர்களுக்காக நான்கு செய்திமடல்களை ஆரம்பித்துள்ளதோடு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து உற்சாகமான ஆதரவுகளைப் பெற்ற இணையவழி கூட்டங்களையும் நடத்தியுள்ளது.

இந்த வேலைத் திட்டத்திற்காகப் போராடுவதற்கு தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர கட்சி அவசியம். இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி இந்தக் கட்சியைக் கட்டியெழுப்புகிறது. இதில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

Loading