மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ட்ரம்ப் இன் வெள்ளை மாளிகை 2020 ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை செல்லுபடியற்றதாக்க முற்படுகையில் எடுக்கப்பட்ட மிக மோசமான நடவடிக்கைகளில் பென்டகனின் உயர்மட்ட சிவில் தலைமையும் மொத்தமாக உலுக்கப்படுவதும் உள்ளடங்குகின்றது.
அத்தகைய சதித்திட்டத்திற்கு எதிரான தவிர்க்கமுடியாத மக்கள் கிளர்ச்சிக்கு எதிராக தீவிர அடக்குமுறையை நாடாமல், அரசியலமைப்புக்கு புறம்பான சதித்திட்டத்தை முன்னெடுத்து வெள்ளை மாளிகையில் தங்குவதற்கான தனது முயற்சியை நிறைவேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நன்கு அறிவார். இந்த நோக்கத்திற்காக, அவர் தீவிர வலதுசாரி சித்தாந்தவாதிகள் மற்றும் விசுவாசிகளின் ஒரு கும்பலை முக்கிய பதவிகளில் இருத்துகின்றார்.
இந்த களையெடுப்பு பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பருக்கான ட்வீட் மூலம் கூட்டாக பதவி நீக்குதல் திங்களன்று தொடங்கியது. இதனை அமெரிக்க இராணுவத்தின் முழு சீருடையணிந்த கட்டளை தலைமையையும் ஆச்சரியத்துடன் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. எஸ்பருக்கு மாற்றாக நியமிக்கப்பட்டவர் பற்றி இராணுவ மேலிடத்திற்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
புதிய "தற்காலிக" பென்டகன் தலைவரான கிறிஸ்தோபர் மில்லர், 30 ஆண்டுகால சிறப்புப் படைகளின் செயற்பாட்டாளரும் மற்றும் ஓய்வுபெற்ற தளபதியும் ஆவார். அவருக்கு இராணுவ கட்டளையகத்தின் உயர் மட்ட அனுபவங்கள் எதுவுமில்லை. இந்த கிட்டத்தட்ட சுயாதீனமான பிரிவை தனது முன்னுரிமையுள்ள காவலராக மாற்றும் நோக்கத்துடன், போர்க்குற்ற மன்னிப்பு வழங்கப்பட்டவர் உட்பட 70,000 பேர் கொண்ட சிறப்புப் படைகளுக்குள் ட்ரம்ப் வேண்டுமென்றே ஆதரவை வளர்த்துக் கொள்கிறார்.
மில்லர் பாதுகாப்பு செயலர் பதவியை ஏற்க முற்றிலும் தயாராக இல்லை என்று இராணுவ தலைமையினுள் பார்க்கப்படுகிறார். வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு குழுவில் பணியாற்றும் போது நிரூபிக்கப்பட்ட ட்ரம்பிற்கு அவர் அளித்த கட்டுப்பாடற்ற ஆதரவும், உள்நாட்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இராணுவ அடக்குமுறையைப் பயன்படுத்த அவர் விரும்பியதும் அவரது முக்கிய தகுதியாக உள்ளது.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநராக தனது முந்தைய பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, அவர் தனது செனட் உறுதிப்படுத்தல் விசாரணையில் சாட்சியமளித்தார். அதில் எதிர்ப்புக்களை அடக்குவதற்கு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் எஃப்.பி.ஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையுடன் அமெரிக்க குடிமக்கள் தொடர்பான உளவுத்தகவல்களை பகிர்ந்து கொள்வதை எதிர்க்க மாட்டேன் என்றார்.
எஸ்பரின் வெளியேற்றத்தை அடுத்து, செவ்வாயன்று பென்டகனில் மூன்றாம் தரவரிசை அதிகாரியும், பாதுகாப்பு கொள்கைக்கான துணைச் செயலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பதவி விலகியதுடன் மற்றும் அவருக்குப் பதிலாக ஓய்வுபெற்ற ஜெனரல் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் வர்ணனையாளர் அந்தோனி டாடா நியமிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் ட்ரம்ப் டாட்டாவை இந்த பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை "பயங்கரவாத தலைவர்", "மஞ்சூரியன் வேட்பாளர்" மற்றும் முஸ்லீம் என்று முன்னர் டாடா குறிப்பிட்டிருந்தபடியால் செனட் உறுதிப்படுத்தல் விசாரணையினால் இரத்து செய்த பின்னர் இந்த நியமனத்தை பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டாடா பின்னர் பென்டகனில் ஒரு புதிதாக உருவாக்கப்பட்ட பதவியில் ஆண்டர்சனின் உதவியாளராக இருத்தப்பட்டார். இப்போது, ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு பாசிசவாதி, அமெரிக்க போர் எந்திரத்தில் 3 வது பதவியில் இருக்கிறார்.
தனது இராஜினாமா கடிதத்தில், "இப்போது முன்னெப்போதையும் விட, எங்கள் நீண்டகால வெற்றி, அனைத்து பொது ஊழியர்களும் அமெரிக்க அரசியலமைப்பை பின்பற்றுவதற்கும் ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சத்தியம் செய்வதிலும் தங்கியுள்ளது" என்று ஆண்டர்சன் எழுதினார். அவரது இராஜினாமா குறித்து Breaking Defense பின்வருமாறு குறிப்பிட்டது. "இதுபோன்ற வார்த்தைகள் ஒரு மூத்த அதிகாரியின் இராஜினாமா கடிதத்தில் வழமையாக காணப்படுவது அல்ல. இது ஒரு செய்தியை அனுப்ப தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது." உண்மையில், எஸ்பர் இராணுவத்திற்கான தனது கடைசி செய்தியில் குறிப்பிட்டது போன்ற கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வார்த்தைகளச் சேர்த்துள்ளார். அதில் எஸ்பர் "அரசியலற்றதாகவே இருப்பதற்கும், அரசியலமைப்பிற்கான உங்கள் உறுதிமொழியை மதித்ததற்கும்" அவர்களை பாராட்டினார்.
எஸ்பரை அகற்றுவதற்கான ட்ரம்பின் உறுதிப்பாடு ஜூன் மாத நிகழ்வுகளிலிருந்து உருவாகிறது. அப்போது வெள்ளை மாளிகை மினியாபொலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் கொலை செய்ததன் மூலம் தூண்டப்பட்ட வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக கூட்டாட்சி பாதுகாப்புப் படையினரை பயன்படுத்தியதுடன் மற்றும் அமெரிக்க துருப்புக்களை வீதிகளில் நிறுத்த முயன்றது.
ஆர்ப்பாட்டங்களை தணிக்க நாடு முழுவதும் அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்துவதற்காக கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்த ட்ரம்ப் அச்சுறுத்தியதை எஸ்பர் பகிரங்கமாக எதிர்த்தார். அத்தகைய நடவடிக்கை "கடைசி வழியாகவும், மிக அவசரமான மற்றும் மோசமான சூழ்நிலைகளில் மட்டுமே" இருக்க முடியும் என்று அவர் அறிவித்தார். அவர் மேலும், "நாங்கள் இப்போது அந்த சூழ்நிலைகளில் ஒன்றிலும் இல்லை" என்று கூறினார்.
வெள்ளை மாளிகைக்கு அடிபணிந்த ஒரு அதிகாரியின் இந்த எதிர்ப்பு அவருக்கு "யெஸ்பர்" (“Yesper”) என்ற புனைப்பெயரைப் பெற்றுகொடுத்தது. அத்தகைய உள்நாட்டு நிலைநிறுத்துதல் தேவையில்லை மற்றும் அது இராணுவத்தை பிளவுபடுத்தும் என்ற கடுமையான கவலைகளை பிரதிபலித்தது. எஸ்பரின் அறிக்கையால் ட்ரம்ப் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது, அதன்பின்னர் அவருக்கு பதிலாக ஜனாதிபதி சர்வாதிகாரத்தை தொடர இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான தனது முயற்சிகளை எதிர்க்காத ஒருவரை நியமிக்க தீர்மானித்தார்.
பென்டகனில் பழிவாங்கும் களையெடுப்பு சூழ்நிலையை குடியரசுக் கட்சியின் கட்டுரையாளர் பில் கிறிஸ்டல் பின்வருமாறு குறிப்பிட்டார். மூத்த இராணுவ அதிகாரிகளுடனான உரையாடல்களை மேற்கோள் காட்டி, கிறிஸ்டல் இவ்வாறு அறிவித்தார்: “கொள்கைக்கான துணைச் செயலாளராக ஜிம் ஆண்டர்சன் நேற்று நீக்கப்பட்டபோது, அவர் கட்டிடத்தை விட்டு வெளியேறும்போது அவருக்கு ‘கைதட்டல்’ வழங்கப்பட்டது. இதனுடன் இணைந்த எந்தவொரு அரசியல் நியமனம் பெற்றவர்களின் பெயர்களையும் தருமாறு வெள்ளை மாளிகை அழைப்பு விடுத்தது. எனவே அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.”
உயர் பதவிகளுக்கு ட்ரம்ப் விசுவாசிகளின் இரண்டு பேரின் நியமனங்கள், பென்டகன் தீவிர வலதுசாரி அரசியல் கையகப்படுத்துதலின் நோக்கத்தைக் குறிக்கின்றன. ஓய்வுபெற்ற மூன்று நட்சத்திர கடற்படை அட்மிரலான உளவுத்துறையின் பாதுகாப்பு துணை செயலாளர் ஜோசப் கெர்னன் க்கு பதிலாக 34 வயதான வலதுசாரி செயற்பாட்டாளர் எஸ்ரா கோஹன்-வாட்னிக் அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரங்களில் பதவிகளைப் பெற்றார். இவர் ட்ரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் பானன் மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் மைக்கல் பிளின், அதே போல் ஜாரெட் குஷ்னருடன் அரசியல் தொடர்புகளை வைத்திருக்கின்றார். ட்ரம்ப் பிரச்சாரத்தில் அரசாங்கம் உளவு பார்த்ததை நிரூபிக்க வேண்டிய இரகசிய சிஐஏ ஆவணங்களை கசிந்ததன் மூலம் அவர் ட்ரம்பிற்கு தன்னை நிரூபித்தார். இதனை கலிபோர்னியா குடியரசுக் கட்சியின் பிரதிநிதியும், காங்கிரஸ் புலனாய்வுக் குழுவின் தலைவரும், ட்ரம்ப்பின் இடைக்கால குழுவின் உறுப்பினருமான டெவின் நூன்ஸ் க்கு கொடுத்திருந்தார்.
நான்காவது நியமனம் காஷ் படேல், ஜென் ஸ்டீவர்ட்டுக்கு பதிலாக பாதுகாப்பு செயலாளரின் தலைமை ஊழியராக நியமிக்கப்படுகிறார். நூனேஸின் முன்னாள் ஊழியர் உறுப்பினரான படேல் முன்னர் தேசிய பாதுகாப்பு குழுவில் அவருக்கு குறிப்பாக உருவாக்கப்பட்ட பதவிக்கு பெயரிடப்பட்டார். ட்ரம்ப் அவரை "உக்ரேன் கொள்கை நிபுணர்" என்று குறிப்பிட்டார். மேலும் ஜோ பைடனுக்கு சேதத்தை ஏற்படுத்த கூடிய தகவல்கள் தொடர்பாக உக்ரேனிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அவர் பரவலாக சந்தேகிக்கப்பட்டார்.
புதன்கிழமை, புதிய தற்காலிக பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர் தனது முதல் பெரிய நியமனத்தை அறிவித்தார். ஓய்வுபெற்ற இராணுவ தளபதி டக்ளஸ் மக்கிரேகோரை தனது மூத்த ஆலோசகராக நியமித்தார். அடிக்கடி Fox News வர்ணனையாளரான மேக்ரிகோர், "தேவையற்ற முஸ்லீம் ஊடுருவலாளர்களை" வரவேற்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஜேர்மனியையும் கண்டித்துள்ளார், "இறுதியில் ஐரோப்பாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான குறிக்கோள்" இருப்பதாக அவர் கூறினார். நாஜிக்களின் குற்றங்களை "நோயுற்ற மனநிலையுடன்" கையாள்வதற்கு முயல்வதாக அவர் ஜேர்மனியை கேலி செய்துள்ளதுடன், மேலும் அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் இராணுவச் சட்டத்தை திணிக்க அழைப்பு விடுத்தார். ஒரு வேண்டுமென்றே ஆத்திரமூட்டலாக, ட்ரம்ப் அத்தளபதியை பேர்லினுக்கு தூதராக நியமிக்க முயன்றார்.
தேசிய பாதுகாப்பு அமைப்புடன் மிக நெருக்கமான உறவைக் கொண்ட வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் டேவிட் இக்னேஷியஸ், பென்டகன் தலைமையகத்தின் ஊகங்களை மேற்கோள் காட்டி, ட்ரம்ப் தனது பதவியில் இருந்த கடைசி நாட்களில் துருப்புக்களை திரும்பப் பெறுவதற்காக தனது தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசிகளை நியமிக்கக்கூடும். எவ்வாறாயினும், "ஒரு இருண்ட சாத்தியம் என்னவென்றால், அவர் மோசடி என்று கூறும் தேர்தல் முடிவின் காரணமாக அவரை அதிகாரத்தில் வைத்திருக்க உதவும் நடவடிக்கைகளை எடுக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிடகூடிய ஒரு பென்டகன் தலைவரை ட்ரம்ப் விரும்புகிறார்" என எழுதினார்.
முன்னாள் பாதுகாப்பு செயலரும் குடியரசுக் கட்சியின் செனட்டருமான வில்லியம் கோஹன் CNN இடம், பென்டகனில் நிர்வாகத்தின் குலுக்கல் “ஒரு ஜனநாயகத்தை விட சர்வாதிகாரத்திற்கு ஒத்ததாகும்” என்று கூறினார். இதேபோல், பெயரிடப்படாத மூத்த பாதுகாப்பு அதிகாரியை சி.என்.என் மேற்கோளிட்டு: “இது பயமாக இருக்கிறது, இது மிகவும் சிக்கலானது. இவை சர்வாதிகார நகர்வுகள்.” என அவர் குறிப்பிட்டதாக கூறியது.
பாரிய அமெரிக்க இராணுவ அமைப்பினுள் அதிகாரத்தின் முக்கிய நெம்புகோல்களை பாசிச ட்ரம்ப் விசுவாசிகளின் கைகளில் கொடுப்பது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. பதவியேற்பு நாள் வரை 68 நாட்கள் மீதமுள்ள நிலையில், பென்டகன் மீதான ட்ரம்பின் இறுக்கமான அரசியல் பிடி இராணுவ ஆக்கிரமிப்புச் செயல்களைத் தொடங்கவும், இராணுவச் சட்டத்தை அறிவிப்பதற்கும், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதற்குமான சாக்குப்போக்கைத் தயாரிக்க பயன்படுத்தலாம்.
பைடெனும் ஜனநாயகக் கட்சியும், பென்டகனில் மொத்த சுத்திகரிப்பு ஒரு "தேசிய பாதுகாப்பு" பிரச்சினைபோல கருதின, ட்ரம்பின் மூத்த அதிகாரிகளை மாற்றியமைப்பது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்தும் என்பதே மிகப் பெரிய கவலை என்று கூறுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ட்ரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள் மற்றும் ஆட்சி வடிவங்கள் எஞ்சியிருப்பதற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதை மறைக்க அவர்கள் உறுதியாக உள்ளனர்.
வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை அமைப்பின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி, சதி மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலை விட, ட்ரம்ப் மற்றும் அவரது கூட்டு சதிகாரர்களுக்கு எதிராக கீழிருந்து மக்கள் எதிர்ப்பும் மற்றும் வெகுஜன கிளச்சியும் வெடிக்கும் என்றே அஞ்சுகிறது.