மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
2020 தேர்தல் முடிவுகளை ஒன்றுமில்லாது ஆக்கி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் முயற்சிக்கப்பட்ட ஆட்சி சதியின் பாகமாக அது ஈரானுக்கு எதிராக ஓர் ஆக்ரோஷமான போரைத் தொடங்க தயாரிப்பு செய்து வருகிறதா?
இந்த கேள்வி தான் வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலிய இராணுவ-உளவுத்துறை வட்டாரங்கள் இரண்டிலும் அதிகரித்தளவில் அவசரமாக கேட்கப்பட்டு வரும் கேள்வியாக உள்ளது, ஏனெனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, ட்ரம்ப் நிர்வாகத்தால் விதைக்கப்பட்ட ஈரானிய-எதிர்ப்பு அச்சில் உள்ளடங்கி உள்ள இஸ்ரேல் மற்றும் அரபு வளைகுடா எண்ணெய் முடியாட்சி நாடுகளை மையமாக கொண்டு ஏழு-நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
இவ்வாரம் அமெரிக்க செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு "இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்திற்குச் சுமூகமான மாற்றம்" இருக்கும் என்று கூறி பதிலளித்த பொம்பியோவின் இந்த விஜயத்திற்கு முன்னதாக, இஸ்ரேலின் இரண்டு பிரதான ஆங்கில மொழி நாளிதழ்கள் Haaretz மற்றும் Jerusalem Post, ஈரானுக்கு எதிரான ஒரு போர் அச்சுறுத்தலுடன் அவற்றின் டிஜிட்டல் பதிப்புகளை வெளியிட்டன.
“ட்ரம்ப் செய்யக்கூடும் என்பதைப் போலில்லாமல், நெத்தன்யாஹூ ஈரானைத் தாக்குவாரா?” என்று Haaretz தலைப்பிட்டிருந்தது. “இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானைத் தாக்க திட்டமிடுகின்றனவா?” என்று Jerusalem Post வினவியது.
இந்த அதிகரித்து வரும் ஊகம், ஆக்கிரமிப்பு மேற்கு கரையின் யூத குடியேற்றத்தில் முதல்முறையாக கால்பதிக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் என்பது உட்பட இஸ்ரேலுக்கான பொம்பியோவின் விஜயத்தால் மட்டும் உந்தப்பட்டதல்ல. ஈரான் மற்றும் வெனிசுவேலா இரண்டுக்குமான ட்ரம்ப் நிர்வாகத்தின் சிறப்பு தூதர், முன்னாள் ஈரான்-கான்ட்ரா சதிகாரர் எலியோட் அப்ராம்ஸ், இவ்வார தொடக்கத்தில், பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாஹூவுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் வந்தார். அமெரிக்க முப்படை தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லெ வியாழக்கிழமை அவரின் சமதரப்பினரான இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி அவிவ் கொசாவியைக் காணொளியில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ட்ரம்ப் நிர்வாகமும் மற்றும் இஸ்ரேலில் உள்ள நெத்தன்யாஹூ அரசாங்கமும், தெஹ்ரான் மற்றும் பிரதான சக்திகளுக்கு இடையே எட்டப்பட்ட 2015 அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து வாஷிங்டன் ஒருதலைபட்சமாக விலகியதற்குப் பின்னர் ஈரானுக்கு எதிராக திணிக்கப்பட்ட "அதிகபட்ச அழுத்த" தடையாணை நடவடிக்கைகளை வரவிருக்கும் பைடென் நிர்வாகம் எந்தவிதத்தில் தளர்த்துவதையும் எதிர்க்கின்றன. ஈரான் "பயங்கரவாதத்தை" ஆதரிக்கிறது என்றும் அதன் அணுஆயுதம் சாரா அணுசக்தி திட்டத்தின் அச்சுறுத்தல் தொடர்கிறது என்றும் கூறப்படும் வாதங்களைப் பிடித்துக் கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், அதேவேளையில் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா பிராந்திய மேலாதிக்கத்திற்குப் போட்டியாளராகவும், சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவக் கூட்டாளியாகவும் உள்ள ஈரானை இல்லாதொழிக்க தீர்மானகரமாக உள்ளது.
ட்ரம்பின் தேர்தல் தோல்விக்குப் பின்னர் உடனடியாக அமெரிக்க-இஸ்ரேலிய தொடர்புகள் அசாதாரணமான முறையில் மேலோங்குவது பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பரில் தொடங்கி பென்டகனின் உயர்மட்ட அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்ட உள்ளடக்கத்தில் கட்டவிழ்ந்துள்ளது. பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பர் ஒரு ட்வீட் மூலமாக பணிநீக்கம் செய்யப்பட்டு, வெகுவாக அறியப்படாத முன்னாள் சிறப்புப்படை கர்னலும் ட்ரம்பின் விசுவாசியுமான கிறிஸ்தோபர் மில்லரைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டார்.
அதிதீவிர ஈரானிய-விரோத நிலைப்பாடுகளுக்காக நன்கறியப்பட்ட ஏனைய வலதுசாரி ட்ரம்ப் விசுவாசிகளும் உயர்மட்ட பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற தளபதியும் Fox News கருத்துரையாளருமான ஆண்டனி டாடா பென்டகனின் மூன்றாவது முக்கிய பதவியான பாதுகாப்புக் கொள்கையின் துணை செயலராக பதவியேற்கிறார். பராக் ஒபாமாவை ஒரு "பயங்கரவாத தலைவர்" என்று கண்டித்தும், சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னனைத் தூக்கிலிட அழைப்பு விடுத்தும் டாடா முன்னர் அறிக்கைகளை வெளியிட்டிருந்த சூழலில் இந்த பதவிக்கான அவரின் நியமனத்தை முன்னர் ட்ரம்ப் திரும்பப் பெற நிர்பந்திக்கப்பட்டிருந்தார். 34 வயதான அதி வலதுசாரி செயல்பாட்டாளர் எஸ்ரா கொஹென் வாட்னிக் மற்றும் உக்ரேனில் ஜோ பைடெனுக்கு எதிராக அவதூறு பரப்ப ட்ரம்ப் தேர்தல் குழுவில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த காஷ் படேல் ஆகியோர் முறையே பாதுகாப்புத்துறையில் உளவுப் பிரிவுக்கான துணைச் செயலராகவும் (undersecretary) பாதுகாப்புத்துறை தளபதிகளுக்கான செயலராகவும் (chief of staff to the defense secretary) நியமிக்கப்பட்டனர்.
இதற்கும் கூடுதலாக, புதிய பாதுகாப்புத்துறை செயலர் மில்லர் அவருக்கான மூத்த ஆலோசகராக ஓய்வுபெற்ற ஆயுதப்படை கர்னல் டக்ளஸ் மக்கிரெகரைப் பணியமர்த்தினார், இவர் அமெரிக்க எல்லையில் இராணுவச் சட்டம் அமலாக்கவும், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை நீதி விசாரணையின்றி கொல்லவும் ஆலோசனை வழங்கியதற்காக நன்கறியப்பட்டவர்.
இஸ்ரேல் பத்திரிகையை விட இன்னும் அதிக மதிநுட்பத்துடன், நியூ யோர்க் டைம்ஸ், பென்டகன் பணிநீக்கத்தில் உள்ள முன்நிகரில்லா தன்மையை ஒப்புக் கொண்ட அதேவேளையில் பின்வருமாறு குறிப்பிட்டது: “இந்த புதிய நியமனங்கள் ஈரான் மீது ஒரு இரகசிய திட்டத்தைக் கொண்டுள்ளன என்பதற்கோ அல்லது கையில் ஒரு நடவடிக்கை திட்டத்துடன் அவர்களின் பதவிகளை ஏற்றிருக்கிறார்கள் என்பதற்கோ அங்கே இதுவரையில் எந்த ஆதாரமும் இல்லை,” என்றது. இருந்த போதினும், “இந்த கலைப்பு, ஈரானைப் போன்ற விரோதிகளுக்கு எதிராக வெளிப்படையான நடவடிக்கைகளையோ அல்லது மறைமுகமான நடவடிக்கைகளையோ கூட உள்ளடக்கிய, ஏதோவொரு கொந்தளிப்பான மற்றும் அபாயகரமான காலக்கட்டத்திற்கு முன்னறிகுறியாக இருக்கலாம் என்பதற்கும் சாத்தியமில்லாமல் இல்லை,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைக் கவிழ்ப்பதற்கான ட்ரம்ப் முயற்சிகளுக்கு மத்தியில் பென்டகனின் முக்கிய கொள்கை பதவிகளை இத்தகைய பாசிச இராணுவவாத சதிக்கூட்டம் ஆக்கிரமித்துள்ளது என்பது, கட்டவிழ்ந்து வரும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கும் அத்துடன் எந்தவொரு புதிய போருக்கும் எதிராக தவிர்க்கவியலாமல் வெடிக்கும் பாரிய மக்கள் எதிர்ப்பை ஒடுக்க அமெரிக்க ஆயுதப்படைகள் பயன்படுத்தப்படும் என்ற நேரடியான அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது.
எஸ்பர் மீது ட்ரம்பின் கோபம் ஜூன் மாத ஆரம்ப சம்பவங்களில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது, இப்போது வெளியேற்றப்பட்டிருக்கும் பாதுகாப்புத்துறை செயலர் அப்போது பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தாக்க கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கும் மற்றும் வீதிகளில் வழமையான ஆயுதப்படை துருப்புகளை நிலைநிறுத்துவதற்குமான ஜனாதிபதியின் மிரட்டல்களில் இருந்து தன்னை தூர நிறுத்திக் கொண்டார்.
எஸ்பர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தளபர் மில்லி முப்படை தளபதிகளின் ஒரு கூட்டத்தைக் கூட்டியதுடன், அதே நாள் மாலை அமெரிக்க போர்ப்படை தளபதிகளுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டமும் நடத்தினார். இராணுவ உயரதிகாரிகள் மத்தியில் யாரெல்லாம் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை ஆதரிப்பார்கள், யார் அதை எதிர்ப்பார்கள் என்பதைக் காண அவரும் ஏனையவர்களும் முன்னேற்பாடாக ஆழம் பார்க்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
முன்னாள் வீரர்கள் தினத்தில் ஒரு புதிய இராணுவ அருங்காட்சியம் திறந்து வைக்கும் கொண்டாட்டத்தில், மில்லி வழங்கிய ஓர் உரையில் அவர் வேண்டுமென்றே, “இராணுவங்களிலேயே நாம் மிகவும் தனித்துவமானவர்கள். நாம் ஓர் அரசரிடமோ அல்லது அரசியிடமோ, ஒரு சர்வாதிகாரியிடமோ அல்லது கொடுங்கோலரிடமோ பதவிப்பிரமாண உறுதிமொழி அளிப்பதில்லை. நாம் எந்தவொரு தனிநபரிடமும் பதவிப்பிரமாண உறுதிமொழி அளிப்பதில்லை… நாம் அரசியலமைப்பிடம் பதவிப்பிரமாண உறுதிமொழி வழங்குகிறோம்,” என்று வலியுறுத்தினார்.
ஈரானின் அணுஆயுதம் சாரா அணுசக்தி திட்டத்திற்கு எதிராகவோ அல்லது ஏனைய மூலோபாய இலக்குகளுக்கு எதிராகவோ ஈரான் மீதான ஒரு தாக்குதல் என்பது மக்கள் கருத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு வித “டிசம்பர் ஆச்சரியத்தை” ட்ரம்ப் வழங்குவதாக இருக்கும் என்பதோடு, அது ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசியல் நிலைமைகளை உருவாக்குவதாக இருக்கும்.
அதுபோன்றவொரு தாக்குதல் சந்தேகத்திற்கிடமின்றி அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்ட ஆயிரக் கணக்கான அமெரிக்க துருப்புகளின் உயிர்களை அச்சுறுத்தும் வகையில் ஈரானிடம் இருந்து பதிலடியைத் தூண்டும் என்பதே இதுபோன்றவொரு ஆத்திரமூட்டலின் எதிர்நோக்கத்தக்க விளைவாக உள்ளது. அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுக்களின் மிகவும் ஈவிரக்கமற்ற பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ட்ரம்ப், கோவிட்-19 தொற்றுநோயால் ஒரு மில்லியனில் ஒரு கால்வாசி அமெரிக்கர்கள் அவசியமற்று உயிரிழக்க தலைமை வகித்துள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ படையினரிடையே ஏற்படக்கூடிய பாரிய பாதிப்புகள் இந்த நிர்வாகத்தின் அரசியல் கணக்கீடுகளின்படி பார்த்தால் ஒரு சிறிய விலையாகவே இருக்கும்.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியைப் புதிய ரக "போர்க்கால ஜனாதிபதி" ஆக தங்களை அடிபணிய வைத்துக் கொள்ளும் கணக்கில் வைக்க முடியும். ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யா மற்றும் சீனா மீது "மிகவும் மென்மையாக" இருப்பதாக குற்றஞ்சாட்டி ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகத்தை வலதிலிருந்து எதிர்த்துள்ளனர், அதேவேளையில் பென்டகனில் மிரட்டலான இந்த பதவி மாற்றங்களுக்கு அவர்களின் எதிர்வினையோ இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை "நமது எதிரிகளுக்கு" பலவீனமாக்கிவிடும் என்று எச்சரிப்பதாகவே இருந்துள்ளது.
நேட்டோவில் ஐரோப்பாவுக்கான கூட்டுப்படை தலைமை தளபதியாக பதவி வகித்தவரும் மூத்த பென்டகன் ஆலோசகருமான ஓய்வு பெற்ற அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரெடிஸ் ஜேர்மனியின் Der Spiegel க்கு அளித்த ஒரு பேட்டியில் "இந்த சூழ்நிலை மிகப்பெரும் அபாயகரமானது" என்று எச்சரித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி, “அவர் கரங்களில் எல்லா வாய்ப்புகளையும் கொண்டுள்ளார்,” என்று கூறிய அவர், தொடர்ந்து கூறுகையில், “அவர் எந்த வகையான இராணுவ நடவடிக்கையையும், அணு ஆயுதங்களுடனான ஒரு தாக்குதலுக்கும் கூட உத்தரவிடலாம். இதை விட, அங்கே இப்போது உயர்மட்டத்தில் எந்த அனுபவமும் இல்லாதவர்களும் மற்றும் அபாயகரமான சிந்தனைகளில் இருந்தும் கூட அவரைத் தடுக்க விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். சான்றாக, சீனாவை ஒட்டிய சர்வதேச கடல்பகுதிகளில் அமெரிக்க கடற்படை ரோந்தைச் செய்வதன் மூலமாக கூட ட்ரம்ப் இதை தீவிரப்படுத்தலாம். அவரின் அறிவிக்கப்பட்ட பரம-எதிரியான ஈரானுக்கு எதிராக இலக்கு வைத்த இராணுவத் தாக்குதல்களுக்கும் கூட அவர் உத்தரவிட முடியும்,” என்றார்.
எவ்வாறிருப்பினும் இந்த ஆபத்திற்கு அடியிலிருப்பது வெறுமனே ட்ரம்பின் சதித்திட்டங்கள் அல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீர்க்கவியலாத நெருக்கடியாகும். உள்நாட்டில், அதன் ஜனநாயக அமைப்புகளில் என்ன எஞ்சியிருக்கிறதோ அவை தாங்கொணா சமூக சமத்துவமின்மை சுமையின் கீழ் சரிந்து வருகின்றன, அதேவேளையில் வெளிநாடுகளில், அது ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டின் கீழும் ஒருபோல பல தசாப்த கால போக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு வழிவகைகளைக் கொண்டு அதன் உலகளாவிய மேலாதிக்க வீழ்ச்சியைச் சரிசெய்ய முயற்சித்துள்ளது. இத்தகைய அபிவிருத்தி போக்குகள் 2020 தேர்தல் மற்றும் அதற்கு பிந்தைய நிகழ்வுகளைச் சுற்றிய முன்நிகழ்ந்திராத அரசியல் நெருக்கடிக்குள் ஒன்றுதிரண்டு வருகின்றன.
போர் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதல் கட்டமைப்புக்குள் நடத்த முடியாது. இதற்கு ட்ரம்பின் சர்வாதிகார சூழ்ச்சியைத் தோற்கடிக்கவும் மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கவும் ஓர் அரசியல் பொதுவேலைநிறுத்தத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணித்திரள்வு அவசியப்படுகிறது.