முன்னோக்கு

பெருந்தொற்றின் அரசியல் படிப்பினைகளும் 2021 இல் சோசலிசத்துக்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1. புத்தாண்டு தொடங்கும் வேளையில், கோவிட்-19 பெருந்தொற்று உலகெங்கிலும் தொடர்ந்து வியாபித்துக் கொண்டிருக்கிறது. இது மிகப் பரந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு உலக நெருக்கடியாகும். இந்தப் பெருந்தொற்றானது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளை ஒரு மிகச் செறிவான வடிவத்தில் வெளிப்படுத்துகின்ற ஒரு “தூண்டுதல் நிகழ்வு” ஆக உள்ளது, நீண்டகாலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த சமூக மாற்றத்தின் சக்திகளை இது கட்டவிழ்த்து விட்டுள்ளது.

2. இந்தப் பெருந்தொற்று வெறுமனே ஒரு மருத்துவ நெருக்கடியாக விவரிக்கப்பட முடியாததாகும். கடந்த ஆண்டின் போது, உலக முதலாளித்துவத்தின் முழுக்க பிற்போக்குத்தனமான தன்மை அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. என்ன சமூக விலை கொடுத்தேனும் இலாபத்திற்கான முனைப்பு, தனிநபர் செல்வக்குவிப்பின் வெறுப்பூட்டுகின்ற மட்டத்திற்கான சிலவராட்சியினரின் வெறித்தனம், மற்றும் உலக மக்கள்தொகையின் வாழ்க்கை மற்றும் நலன்கள் விடயத்தில் அவர்களது மனிதத்தன்மையற்ற அலட்சியம் ஆகியவை ஒரு உலகளாவிய சமூகப் பெருந்துன்பத்தை உருவாக்கியிருக்கின்றன.

3. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மீண்டும் மீண்டும் இந்தப் பெருந்தொற்றை முதலாம் உலகப் போருடன் ஒப்பிட்டு வந்திருக்கிறது. 1914 ஆண்டு நிகழ்வுகளும் போரின் விளைவாக நிகழ்ந்தவை அனைத்தும் உலகெங்கும் வியாபித்த அரசியல் எழுச்சி நிகழ்ச்சிப்போக்கு ஒன்றின் இயக்கத்தை தொடக்கிவைத்தது. தொழிலாள வர்க்கமும் வறுமைப்பட்ட பரந்த மக்களும் அரசியல்ரீதியாக தீவிரமயப்பட்டனர். 1914 ஆண்டின் தொடக்கத்தில் சர்வ-வல்லமை படைத்தவையாகவும் வெல்லமுடியாததாகவும் தென்பட்ட சாம்ராஜ்யங்களான ரஷ்ய, ஆஸ்திரிய-ஹங்கேரி மற்றும் பிரஷ்ய சாம்ராஜ்யங்கள் சமூகப் புரட்சி சக்திகளால் சில ஆண்டுகளிலேயே தூக்கிவீசப்பட்டிருந்தன. நூறு மில்லியன் கணக்கான மக்கள் பங்குபெற்ற காலனித்துவ மேலாதிக்கத்திற்கு எதிரான ஒரு ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கம் ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் எழுந்தது.

4. புது வருடத்திலும் பின்தொடர்ந்து வருகின்ற கடந்த ஆண்டின் துன்பியலானது, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் நனவில் ஒரு ஆழமான மாற்றத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது. பாரிய அளவிலான அகால மரணங்கள், பொருளாதார நிலைகுலைவு, மற்றும் பாரம்பரிய அரசியல் கட்டமைப்புகளின் —அவை போலி-ஜனநாயக கட்டமைப்புகளாயினும் சரி அல்லது பகிரங்க எதேச்சாதிகாரக் கட்டமைப்புகளாயினும் சரி— வெளிப்பட்ட நெருக்கடி மற்றும் நிலைமுறிவு ஆகியவற்றால் குறிக்கப்படக்கூடிய 2020 ஆம் ஆண்டானது இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் 1914 ஆம் ஆண்டைப் போன்று இருபத்தியோராம் நூற்றாண்டின் வரலாற்றில் ஒரு அதிமுக்கியமான திருப்புமுனையாக நிரூபணமாகவிருக்கிறது. செல்வந்தர்களின் நலன்களுக்கும் பரந்துபட்ட சமூகத்தின் தேவைகளுக்கும் இடையிலான முரண்பாடானது சமூக எதிர்ப்புப் போராட்டத்தையும் சமரசமற்ற அரசியல் எதிர்ப்பையும் அது கண்டிப்பாகத் தூண்டியே தீரும் என்ற அளவுக்கு மிக அப்பட்டமானதாக இருக்கிறது.

5. சென்ற ஆண்டின் தொடக்கத்தில், அனைத்துலகக் குழுவானது அதன் புத்தாண்டு அறிக்கையில் 2020கள் சோசலிசப் புரட்சியின் ஒரு தசாப்தமாக இருக்கும் என்று அறிவித்திருந்தது. அந்தக் கணிப்பு பூகோள புவியரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நெருக்கடியானது எத்தகைய முன்னேறியதொரு கட்டத்தில் ஏற்கனவே இருக்கிறது என்பதைக் குறித்த ஒரு பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 2020 இன் நிகழ்வுகள் இந்த பகுப்பாய்வை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், அதிகரித்தளவிலான அவசியத்தையும் கொண்டுள்ளன.

6. பெருந்தொற்றின் தாக்கமானது, குறைந்து செல்வதெற்கெல்லாம் வெகுதூரத்தில், தீவிரப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறது. வைரஸின் மிகவும் தொற்றக் கூடிய ஒரு புதிய மரபுவழி திரிபுவகை கண்டறியப்படும் முன்பே, உலக மக்களில் கோவிட்-19 பரவலின் வேகமானது துரிதப்பட்டு சென்று கொண்டிருந்தது. புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே உலகளாவிய இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மில்லியனைத் தொட்டுவிட்டிருந்தது. ஆசியாவில், 305,000 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. ஆபிரிக்காவில், உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 63,000 ஆக இருக்கிறது. ஐரோப்பாவில், 552,000 பேர்கள் இறந்திருக்கின்றனர். அமெரிக்க கண்டத்தில், 848,000 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

7. தனித்தனி நாடுகளில் மொத்த மரணங்களின் எண்ணிக்கையானது உறையச் செய்வதாக இருக்கிறது. பிரேசிலில், கிட்டத்தட்ட 200,000 பேர் இறந்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்தில் மொத்த எண்ணிக்கை 71,000 ஐ தாண்டுகிறது. இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 72,000 ஆக உள்ளது. பிரான்சில் 63,000 உயிர்கள் பறிகொடுக்கப்பட்டுள்ளன. ஸ்பெயினில் 50,000 பேர்கள் இறந்துள்ளனர். ஜேர்மனியில், இறப்பு எண்ணிக்கை 30,000 ஆகும்.

8. உலகில் மிகவும் நாசத்தை சந்தித்துள்ள நாடாக அமெரிக்கா உள்ளது, இங்கு பெருந்தொற்று கட்டுப்பாட்டை மீறி கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. 2020 இல் கோவிட்-19 இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 340,000 ஐ தொட்டது. டிசம்பர் மாதத்தில் மட்டும், சுமார் 70,000 அமெரிக்கர்கள் இந்த வைரஸுக்கு பலியாகினர், அன்றாட இறப்பு எண்ணிக்கை 3,500 என்ற அளவுக்கு மிக உயரத்தில் உள்ளது. ஜனவரியில் மேலும் சுமார் 115,000 அமெரிக்கர்கள் பலியாவார்கள் என்று இப்போது கணிக்கப்படுகிறது. கோவிட் தடுப்பூசிகளின் உருவாக்கத்தின் மீது கவனம் குவித்து இந்த கொடுங்காட்சியில் இருந்து கவனம் திருப்ப செய்தி ஊடகங்கள் பிரயத்தனம் செய்கின்ற போதும், வருடாந்தர பலி எண்ணிக்கை அமெரிக்காவின் இரத்தம்பாய்ந்த போர்களின் போது உயிரிழப்போரின் எண்ணிக்கையை மிஞ்சுகிற ஒரு வேகத்தில் அமெரிக்கர்கள் பலியாகி வருகின்றனர் என்பதே யதார்த்தமாக உள்ளது.

9. ஃபைசர் மற்றும் மொடேர்னா தடுப்பூசிகள் வெளியாவது தொடர்பான ஊடகங்களது செயற்கையான மிகைப்படுத்தல்கள் அவற்றின் விநியோகத்தில் கண்டிருக்கக் கூடிய முற்றிலும் கணிக்கப்பட்ட குளறுபடிகளால் ஏற்கனவே மதிப்பிழந்து விட்டிருக்கின்றன. டிசம்பர் இறுதிக்குள்ளாக தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 மில்லியன் மருந்து அளவுகளில் வெறும் 3 மில்லியன் மருந்து அளவுகள் மட்டுமே போடப்பட்டிருக்கின்றன. இந்த ஒழுங்கின்மை மற்றும் திறனின்மை எல்லாம் வரும் மாதங்களில் எப்படியோ சரிசெய்யப்பட்டு விடலாம் என்று —இலாபத்தை நோக்கி ஓடும் அமெரிக்க சுகாதாரப் பராமரிப்பு துறையின் நாசமடைந்த நிலையை கணக்கிலெடுத்துப் பார்த்தால் இதுவே மிகவும் சந்தேகத்திற்குரிய விடயம் தான்— அனுமானித்தாலுமே கூட அதிகரித்துச் செல்லும் இறப்பு விகிதத்தின் மீது அது செலுத்தக் கூடிய தாக்கம் குறைவாகவே இருக்கும். “தடுப்பூசி இருந்தாலுமே கூட”, சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனம் (Institute for Health Metrics and Evaluation) டிசம்பரில் எச்சரித்தது, “மாநில அரசுகள் இப்போதைய அதிகரிப்புகளை கட்டுக்குள் கொண்டுவர செயல்படாவிட்டால், இறப்பு எண்ணிக்கை ஏப்ரல் 1க்குள்ளாக 770,000 ஐ தொடக்கூடும்”. ஆனால் இப்போது வைரஸ் பரவல் மற்றும் உயிரிழப்பை, தடுப்பதை விடுங்கள், கட்டுப்படுத்துவதற்கும் கூட அவசியமான நடவடிக்கைகளை மாநில அரசுகளோ அல்லது கூட்டரசாங்க நிர்வாகமோ எடுக்கப் போவதில்லை.

10. ”ஒரு மிக இருள்சூழ்ந்த குளிர்காலம்” எதிர்வரவிருப்பதாக ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள ஜோ பைடென் கணித்திருக்கிறார். ஆனால் முன்கண்டிராத ஒரு சமூகப் பேரழிவுக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையிலும், அவர் பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களுக்கு அவர் முன்வைக்கும் ஒரே நடவடிக்கையாக இருப்பது, அனைத்து அமெரிக்கர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அழைப்பு விடுப்பது மட்டும் தான். பெருந்தொற்றின் இந்தக் கட்டத்தில் பைடெனின் இந்த கொள்கையானது, ஒரு புயலின் சூறாவளி சக்தியை, பட்டாம்பூச்சி வலைகளைக் கொண்டு மட்டுப்படுத்த முயல்வதற்கு ஒப்பானதாக இருக்கிறது. முதலாளித்துவ சிலவராட்சியானது மனிதவாழ்க்கைக்கு எத்தனை பெரும் அலட்சியம் காட்டுகிறது என்பதற்கு பைடெனின் பரிதாபகரமான முன்மொழிவு ஒரு சிகரம் போன்ற உதாரணமாய் முன்நிற்கிறது.

11. அத்தியாவசியமற்ற வேலையிடங்களை மூடுவது, பள்ளிகளை மூடுவது மற்றும் நெருக்கடி விலகும் வரையில் மக்கள் உயிர்வாழத் தேவையான அவசரகால நிதி ஆதாரத்தை வழங்குவது ஆகிய கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுத்துநிறுத்துவதற்கு கண்டிப்பாக கடைப்பிடித்தாக வேண்டிய கொள்கைகளை அமல்படுத்துவதற்கு ஆளும் வர்க்கம் மறுக்கிறது. உயிர்களைக் காப்பாற்ற இதற்குமேல் எதுவும் செய்திருக்க முடியாது என்பதான சுய-நலக் கூற்றுகள் சீனாவினால் —பரிசோதனை, தொடர்பு தடமறிதல் மற்றும் தேர்ந்தெடுத்த பொதுமுடக்கம் ஆகியவற்றின் ஒரு கண்டிப்பான செயல்திட்டம் மூலமாக— வைரஸ் பரவலைத் துரிதமாகக் கட்டுக்குள் கொண்டுவந்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 5,000க்கும் குறைவானதாக பராமரிக்க முடிந்திருக்கிறது என்ற உண்மையினால் மறுதலிக்கப்படுவதாய் இருக்கிறது.

12. பெருந்தொற்றின் பாதிப்பானது மேற்கு ஐரோப்பாவின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும், மற்றும் குறிப்பாக, மிகச்செல்வந்த முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் தாயகமும் உலக ஏகாதிபத்தியத்தின் மையமும் ஆன அமெரிக்காவிலும் தான் மிகக் கடுமையானதாக இருந்திருக்கிறது என்ற உண்மையானது தேசிய-அரசு அமைப்புமுறை, உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமை மற்றும் மனித உழைப்புசக்தியைச் சுரண்டுவதன் மூலமாக இலாபத்திற்கான செலுத்தம் (உந்துதல்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகப் பொருளாதார அமைப்புமுறையின் வரலாற்றுரீதியான காலாவதித்தன்மைக்கு சான்றளிப்பதாய் இருக்கிறது. தொற்றுவெடிப்பின் மிக ஆரம்ப கட்டங்களில் இருந்தே, ஆளும் வர்க்கங்கள், அவற்றின் தனிநபர் செல்வக் குவிப்பிற்கும் அவற்றின் தேசிய அரசுகளது பூகோள புவியரசியல் நலன்களுக்கும் முரண்பட்ட அத்தனை நடவடிக்கைகளையும் —உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் அவை எவ்வளவுதான் அவசியமானவையாக இருந்தபோதிலும்— நிராகரித்தன.

13. தேசியப் பாதுகாப்பு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் பூகோள சக்திகளுக்கு இடையிலான சமநிலை, மற்றும் போட்டி அனுகூலத்திற்கான நாடுகடந்த நிறுவனங்களின் (அவை நிலவுகின்ற தேசிய அரசுகளுடன் பிணைக்கப்பட்டுள்ள நிலை தொடர்கிறது) விழைவு ஆகியவை குறித்த பரிசீலிப்புகள் ஆரம்பத்தில் இருந்தே பெருந்தொற்றுக்கான பூகோளரீதியான ஒருங்கிணைப்புடனான மற்றும் விஞ்ஞானரீதியாக வழிநடத்தப்பட்ட பதிலிறுப்பு எதுவும் இல்லாதுசெய்து விட்டன. மனித வாழ்க்கைக்கான ஒரு பொதுவான அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கின்ற நிலையில் ஐக்கியத்தை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, இந்த பெருந்தொற்றானது முதலாளித்துவ தேசிய அரசுகளுக்கு இடையிலான குரோதங்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனம் (IISS-International Institute for Strategic Studies) வெளியிட்டுள்ள 2020 க்கான மூலோபாய கணக்கெடுப்பில், “வைரஸ் பரவல் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலுமே இருந்த போதிலும், அவற்றுக்கு இடையிலான பிளவுகள் ஆழப்பட்டன.” IISS அறிக்கை தொடர்கிறது:

2020 ஆண்டு மத்திக்குள்ளாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் கிட்டத்தட்ட தசாப்தங்களிலான அவற்றின் மோசமான புள்ளிக்கு சரிந்திருந்தன. ரஷ்ய-மேற்கத்திய உறவுகள் சந்தேகத்தில் முடக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தன. சீன-இந்திய உறவுகள் மரண ஆபத்தான எல்லை மோதல்களில் முடிந்தன. ஒத்துழைப்புக்கான ஸ்தாபனங்கள், சட்டங்கள் மற்றும் நிர்ணயங்கள் பல பின்னடைவுகளுக்கு ஆளாயின. அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட பல அமைப்புகள் மற்றும் ஒப்பந்தங்களைக் கண்டனம் செய்தது அல்லது அவற்றில் இருந்து விலகிக் கொண்டது. ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியது. சீனா ஹாங்காங்கின் சிறப்பு அந்தஸ்தை மாற்றியது.

14. உலக நிலைமை குறித்த ஒரு அசாதாரண அவநம்பிக்கை தரக்கூரடிய மதிப்பீட்டில், மூலோபாய மதிப்பாய்வு விளக்குகிறது:

மென்மேலும் அதிகமாய் “சகிப்புத்தன்மை போரின்” —IISS இதனை ”ஸ்திரப்பட்ட அரசுகளுக்கு எதிராக வெவ்வேறு வடிவத்திலான தலையீடுகளுக்கு சகிப்புத்தன்மை எல்லைகளை சோதிக்கும் தொடர்ச்சியான முயற்சி” என்று வரையறை செய்கிறது— ஒரு சகாப்தத்திற்குள்ளாக நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். சில சமயங்களில் சகிப்புத்தன்மை சோதிப்புப் போரானது வெளிப்படையாக நடத்தப்படுகிறது மற்றும் இது "அறிவிக்கப்பட்டுள்ளது." ஆயினும் பலசமயங்களில் இது வெளிநாட்டு வலைப்பின்னல்கள் அல்லது தனியார் கூட்டாளிகள் மூலமாக, குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை தமக்கு அண்மையிலுள்ள நாடுகளில் செயல்படுத்துகின்றன. உள்ளபடியான நிலையை மாற்ற விரும்புகின்ற பாத்திரங்களது ஒரு விருப்பமான கருவியாக இருக்கும் இந்த சகிப்புத்தன்மை சோதிப்புப் போரானது எதிர்கொள்ளக் கடினமானதாகும், ஏனென்றால் இது வழமையான போரின் விளிம்புக்குக் கீழாக, ஸ்தாபக சட்டங்களின் எல்லைகளுக்கு வெளியில், என்றபோதும் ஸ்திரத்தன்மையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லைகளுக்கு மேலே மோதல்களை உருவாக்குகிறது...

கோவிட்-19 பெருந்தொற்று இந்தப் போக்குகளில் ஒரு மூலோபாய இடைநிறுத்தத்திற்கு அரிதாகவே அனுமதித்திருக்கிறது. தேசிய மீள்திறனும் தன்னிறைவும் முக்கிய குறிக்கோள்களாகக் காணப்படுகின்றன. நற்பெயர் தேச ஆற்றலின் ஒரு முக்கிய அங்கமாக மறுபிறவி எடுத்துக் கொண்டிருக்கிறது.

15. மிகவும் பதட்டமான இந்த சூழ்நிலையில், IISS எச்சரிக்கிறது “பெரும்பாலும் சில தவறுகள் மட்டுமே நம்மை அராஜகத்திலிருந்து பிரிக்கின்றன.

போரின் தன்மைகள், மோதல்களின் வடிவம், பிரயோகிக்கப்படும் மூலோபாயங்கள், ஈடுபடுகின்ற பாத்திரங்கள், மற்றும் பயன்படுத்தப்படுகின்ற ஆயுதங்கள் எல்லாமே துரிதமாக மாறிக் கொண்டிருக்கின்றன. அரசுகளும், நிறுவனங்களும் மற்றும் நாடுகடந்த பாத்திரங்களும் டிஜிட்டல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் நிலைநிறுத்தக்கூடிய சக்தியின் தன்மையானது அதிவிரைவாக மாறிக் கொண்டிருக்கிறது. பிராந்திய ஒழுங்குகள் உருமாற்றம் காண்கின்றன. சர்வதேச சமூகத்தை நெறிப்படுத்தக்கூடிய நிர்ணயங்கள், வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் மற்றும் சட்டங்களின் கலவையானது ஒரு குலைந்த நிலையில் இருக்கிறது. சர்வதேச சமூகம் போதுமான அளவுக்கு நெறிப்படுத்தப்படாததாகவே தொடர்கிறது என்பதுடன் கிட்டத்தட்ட ஒரு “ஆளுகையற்ற வெளி”யாக ஆகிக் கொண்டிருக்கிறது.

16. IISS “சகிப்புத்தன்மை சோதிப்புப் போர்” என விவரிக்கின்ற ஒன்று, அணுஆயுதப் பிரயோகங்களது மிக உண்மையான ஆபத்துடனான முழு-வீச்சிலான போராக எளிதாக விரிவடைந்து விட முடியும். ரஷ்யா மற்றும் சீனா மீதான இடைவிடாத அமெரிக்கக் கண்டனங்களும், அவற்றுடன் சேர்ந்து ஆத்திரமூட்டல் அதிகரித்துச் செல்கின்ற இராணுவ சூழ்ச்சிகளும், ஒரு மரண ஆபத்தான அரசியல் தர்க்கத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த அபாயமானது, உள்முக சமூக அழுத்தத்தை வெளிநோக்கி, அதாவது உள்நாட்டு வர்க்க மோதலில் இருந்து வெளியே போரை நோக்கித் திருப்பி விடுவதற்கு ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் தேவையின் மூலமாகத் தீவிரப்படுத்தப்படுகிறது.

17. முதலாளித்துவ உயரடுக்கினர், தமது உலகளாவிய பூகோள அரசியல் நலன்களை தாட்சண்யமற்று முன்னெடுத்து வந்த வேளையில், பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பில் பெருநிறுவன இலாப நலன்களுக்கும் தனிநபர் செல்வக் குவிப்பிற்கான முனைப்பிற்கும் முரண்பட்ட எதனையும் நிராகரித்தனர். 2020 ஆண்டு மார்ச்சுக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் வோல்ஸ்ட்ரீட்டில் பங்குவிலைகளில் ஏற்பட்ட மலைப்பூட்டும் அதிகரிப்பும் பெருகிச்சென்ற உயிரிழப்புகளது எண்ணிக்கையும் இணையான நிகழ்வுகளாகவும் ஒன்றுக்கொன்று துணையளிப்பாய் அமைந்தவையாகவும் இருந்தன. முதலாளித்துவ செழுமையை சாத்தியமாக்கிய அதேகொள்கைகள் பாரிய உயிரிழப்புகளை தவிர்க்கவியலாததாகவும் ஆக்கின. 2020 ஜனவரிவாக்கிலேயே, உயிர்களைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் நிதிச் சந்தைகளது நலன்களுக்கே முன்னுரிமையளிக்கக் கூடிய ஒரு முடிவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்களால் எடுக்கப்பட்டிருந்தது. டொனால்ட் ட்ரம்ப் பத்திரிகையாளர் பாப் வூட்வார்ட் உடனான ஒரு நேர்காணலில் பின்னர் ஒப்புக்கொண்டவாறாக, பெருந்தொற்றினால் முன்நிறுத்தப்பட்ட அபாயமானது பொதுமக்கள் கண்களில் இருந்து மறைக்கப்பட்டிருந்த அதேவேளையில், CARES சட்டத்தின் நிழலின் கீழ், வோல் ஸ்ட்ரீட் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு பல டிரில்லியன் டாலர்கள் பிணையெடுப்பை ஒழுங்குசெய்வதற்கு திரைமறைவில் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

18. 2020 ஆண்டு முதலாக, உலகின் மிகச்செல்வந்த 500 பேரின் செல்வமானது சுமார் 1.8 டிரில்லியன் டாலர் வரை அதிகரித்து மொத்தம் 7.6 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இந்த பெருந்தொற்றில் இலாபமீட்டியவர்களில் அமேசான் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜெஃப் பெசோஸ் (190 பில்லியன் டாலர்கள்) மற்றும் டெஸ்லா தலைமை செயல் நிறைவேற்று அதிகாரி எலான் மஸ்க் (170 பில்லியன் டாலர்கள்) உள்ளிட்ட ஐந்து பேர் தலா 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாய் செல்வம் கொண்டுள்ளனர். இந்த இரண்டு பேர்கள் மட்டும் 2020 இல் 217 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாய் தமது செல்வத்தைக் கூட்டியுள்ளனர்.

19. ஆளும் உயரடுக்கின் செல்வத்திலான இந்த மலைப்பூட்டும் அதிகரிப்பானது டிஜிட்டல்ரீதியாக உருவாக்கப்பட்ட பணத்தை —உண்மையான மதிப்பின் உற்பத்திக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத “கற்பனை மூலதனம்” (“fictitious capital”)— பெடரல் ரிசர்வ் மூலமாக நிதிச் சந்தைகளுக்கு வரம்பற்று மாற்றுவதை முழுக்கச் சார்ந்திருக்கிறது. இது ஊகவணிகத்தின் ஒரு களியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது, அது ஊகரீதியானச் சொத்துகளின் விலையை —அத்துடன் அவற்றின் உரிமையாளர்களது செல்வத்தையும் தான்— வானுயரங்களுக்கு ஏற்றிவிட்டிருக்கிறது. கிரிப்டோகரன்சி பிட்காயினின் (cryptocurrency bitcoin) —இணையவெளி (cyberspace) தாண்டி உருரீதியான இருப்பு இல்லாத பணம்— விலை 360 சதவிகிதமாக 2020 இல் 7,194 டாலரில் இருந்து 34,000 டாலருக்கு அதிகரித்திருக்கிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களுக்கு இடையில், அதன் சந்தை விலையானது கிட்டத்தட்ட இருமடங்காகியிருக்கிறது. செல்வந்தர்களுக்கான இத்தகைய பரிசுகள், Edward Luce wryly புத்தாண்டு வார இறுதியின் போது வெளியான ஒரு பத்தியில் கிண்டலாய் குறிப்பிட்டதைப் போல, “அமெரிக்க பெடரல் ரிசர்வின் உபயத்தால் விளைந்திருக்கிறது... இலவச பண செலுத்தமானது அனைத்து சொத்துகளது விலைகளையும் ஏற்றியிருக்கிறது.“

20. ஆனால் ஃபெடரல் ரிசர்வ் கொள்கையின் சுமை தொழிலாள வர்க்கத்தின் மீதே விழுகிறது. பிணையெடுப்புக்கு நிதியாதாரம் திரட்ட அவசியமான அரசுக் கடன்கள் மற்றும் பெருநிறுவனக் கடன்களின் பாரிய திரட்சியானது பெருநிறுவன வருவாய்களில் தொடர்ச்சியான உட்பாய்வையும் உயர்மட்ட இலாபமீட்டலையும் கோருகிறது. அவ்வாறு பாயாது போனால், ஊகக் குமிழியும் அதைச் சார்ந்த செல்வமும் தாக்குப்பிடிக்க முடியாது. இந்தப் பொருளாதாரரீதியான கட்டாயமானது தொழிலாள வர்க்கத்தின் உழைப்புச் சக்தி இடைவிடாது சுரண்டப்படுவதன் மூலமாக மட்டுமே எதிர்கொள்ளப்பட முடியும். எப்படி முதலாம் உலகப் போரின் சிப்பாய்கள் அகழிகளில் பராமரிக்கப்படவும் எந்திரத்துப்பாக்கி சூடுகளுக்கும் நச்சுவாயுக்களுக்கும் எதிராய் யுத்தக்களத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படவும் நேர்ந்ததோ, அதைப்போல இன்றைய தொழிலாளர்கள் வைரஸ் கட்டுப்பாடற்று பரவுகின்ற நிலையிலும் தொழிற்சாலைகளிலும் வேலையிடங்களிலும் உழைக்க கட்டாயப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. பெற்றோர் வேலைக்கு வரவேண்டுமென்பதற்காக, கோவிட்-19 வைரஸ் முதியவர்களுக்கு பரவுவதில் குழந்தைகள் தான் பிரதான தொடர்புப்புள்ளிகளாக இருக்கின்றனர் என்ற உண்மை அறிந்தும், பள்ளிகள் திறக்கப்பட்டாக வேண்டியிருக்கிறது.

21. இவையே “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” (“herd immunity”) வேலைத்திட்டத்தை, அதாவது வைரஸின் கட்டுப்பாடற்ற பரவலை ஆலோசனையளிக்கிற மட்டத்திற்கு அதனை ஏற்றுக்கொள்வது, அமல்படுத்துவதன் கீழமைந்திருக்கிற சமூகரீதியாகக் குற்றவியல் கணக்கீடுகள் ஆகும். இந்தக் கொள்கையை ஆலோசனையளித்தவர்களின் கருத்துப்படி, இறுதியாக “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்” சாதிக்கப்படுமளவிற்கு மக்களில் ஒரு மிகப்பெரும் பகுதி கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்காவார்கள்.

22. இந்தக் கொள்கையானது உடனடியாக மிக வரவேற்புடன் சுவீடனில் அமல்படுத்தப்பட்டது, பின் -2020 மார்ச் பின்பகுதியில் பிணையெடுப்புகள் முன்வைக்கப்பட்ட பின்னர்- ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு வணிக மூடல்களும் பள்ளி மூடல்களும் பயன்படுத்தப்படுவதானது தாங்கவியலாத நிதிச் செலவுகளைக் கொண்டுவருவதாகக் கூறி இந்த சமூக அக்கறையற்ற மனநோய்த்தனமான கொள்கையானது நியாயப்படுத்தப்பட்டது. நியூயோர்க் டைம்ஸின் தோமஸ் ஃப்ரீட்மன், சுவீடனால் முன்நிறுத்தப்பட்ட உதாரணத்தைப் புகழ்ந்து ஒரு பத்தியில், “சிகிச்சையானது நோயினும் மோசமானதாய் இருக்க முடியாது” என்ற சுலோகத்தை பிரபலப்படுத்தினார். மனித உயிர்களைக் காப்பாற்றுவதென்பது பெருநிறுவன இலாபங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகளை விலையாகக் கொடுத்து பெறுவதாய் இருக்கக் கூடாது என்பதுதான் இந்த சிடுமூஞ்சித்தனமான கவர்ச்சி வாசகத்தின் உண்மையான அர்த்தமாய் இருக்கிறது.

23. பாசிச இயக்கங்கள் ஊக்குவிக்கப்படுவதை நோக்கி முன்னெப்போதையும் விட அதிகமான திருப்பம், முதலாளித்துவ ஜனநாயகத்தின் பாரம்பரிய ஸ்தாபகங்கள் அகற்றப்படுவது, மற்றும் எதேச்சாதிகார ஆட்சிகளை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் ஆகியவை ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கையினது அரசியல் துணைசெயல்களா நேரடிப்பெறுபேறாய் இருந்து வந்திருக்கின்றன. டொனால்ட் ட்ரம்ப் அரசியல் சட்டத்தை தூக்கிவீசிவிட்டு ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான அவரது சதியில், தனது தனிப்பட்ட ஹிட்லரிச அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொள்ள விழைகின்ற ஒரு தனி மனநோயாளியாக இருக்கவில்லை. 2020 ஆண்டுத் தேர்தல் முடிவுகளை அவர் மறுதலிப்பதானது நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளிட குடியரசுக் கட்சியின் ஒரு பெரும் பிரிவினரால் பகிரங்கமாக ஆதரிக்கப்படுகிறது என்ற உண்மையானது, எந்த மட்டத்திற்கு ஆளும் வர்க்கத்திற்குள்ளிருக்கின்ற சக்திவாய்ந்த கூறுகள் அரசியல் சட்டத்துடன் முறித்துக் கொண்டு ஒரு எதேச்சாதிகார ஆட்சி உருவாக்கத்தை ஆதரிப்பதற்கு தயாரிப்புடன் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது.

24. "தீவிர இடதுகள்” மீதும் சோசலிசத்தின் மீதுமான ட்ரம்ப்பின் இடைவிடாத கண்டனங்கள், அவற்றுடன் சேர்ந்து பாசிச கும்பல்களை அவர் ஊக்குவிப்பது ஆகியவைகள் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக ஒரு வெகுஜன மக்கள் இயக்கம் உருவாவது வெறுமனே சாத்தியம் மட்டுமில்லை, தவிர்க்கமுடியாததும் வெகுவிரைவில் நிகழவிருப்பதுமாகும் என்று சிலவராட்சிக்குள்ளாக (oligarchy) நிலவுகின்ற அச்சங்களுக்கு விண்ணப்பம் செய்கின்றன. ட்ரம்ப்பின் வாய்வீச்சும் நடவடிக்கைகளும் கவனத்திற்குரிய இடது-சாரி வரலாற்றாசிரியரான அர்னோ ஜே. மேயர் ஒரு முன்கூட்டிய எதிர்ப்புரட்சியின் தயாரிப்புடன் அடையாளம் காண்கின்ற ஒரு அரசியல் மூலோபாயத்திற்குப் பொருந்தியிருக்கின்றன:

சந்தேகம், நிச்சயமற்ற நிலை மற்றும் தீர்க்கப்படாத வன்முறை நிறைந்த சூழலில், குழம்பியும் அதிர்ச்சிக்குள்ளாகியும் கிடக்கும் உயரடுக்கினரை, புரட்சியாளர்கள் மீண்டும் இந்த சூழலை தங்களது நோக்கங்களுக்காய் சுரண்டிக் கொள்வது என்பது நேரம் மட்டுமே நிச்சயிக்கப்படாத ஒன்றாகும் என்பதில் உறுதியூட்டுவதற்கு எதிர்ப்புரட்சிகரத் தலைவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆயினும் சூடுமிகுந்து விட்ட சூழலை குளிர்விப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்குப் பதிலாக, அதனை மேலும் பற்றவைக்க தம்மால் இயன்றதை அவர்கள் செய்கின்றனர். புரட்சி உடனடி என்பதை நிரூபிப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் உண்மையான அல்லது சந்தேகத்திற்கிடமான புரட்சியாளர்களை நசுக்கும் திறனை அவர்கள் நிரூபிக்கக்கூடிய மோதல்களைத் தேடுகிறார்கள். [ஐரோப்பாவில் எதிர்ப்புரட்சியின் இயக்கவியல், 1870-1956: ஒரு பகுப்பாய்வு கட்டமைப்பு (நியூயோர்க்: ஹார்பர் & ரோ, 1971), பக். 86]

25. சென்ற ஆண்டில் போலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீது ட்ரம்ப் நடத்திய தாக்குதல்கள் மற்றும் 2020 செப்டம்பர் 3 அன்று பாசிச எதிர்ப்பு (Antifa) ஆதரவாளராக சொல்லப்படும் மிச்சேல் ரெய்னோல் அரசால் கொலைசெய்யப்படுவதற்கு ட்ரம்ப் நடத்திய மூர்க்கத்தனமான தூண்டுதல் ஆகியவற்றின் பின்னாலிருக்கும் அரசியல் கணக்குகளைப் புரிந்து கொள்வதற்கு அவசியமான வரலாற்று முன்னோக்கினை இந்த பகுப்பாய்வு வழங்குகிறது.

26. ட்ரம்ப் ஆட்சியின் நடவடிக்கைகள் அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகளை ஊர்ஜிதப்படுத்துகின்றன. அவர் அதிகாரத்துக்கு அணுகல் பெற்றதன் அரசியல் முக்கியத்துவம் குறித்த அதன் மதிப்பீடு அமெரிக்காவில் முதலாளித்துவ ஆட்சியின் சமூக அடித்தளங்கள் குறித்த ஒரு மார்க்சிச பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு 2017 ஜனவரி 3 அன்று, ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, வெளியிடப்பட்ட அதன் புத்தாண்டு அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது:

டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதானது, அமெரிக்காவில் சிலவராட்சியின் யதார்த்தத்தை, அதன் அத்தனை அருவெறுப்பூட்டும் நிர்வாணத்தில், அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆயினும், ட்ரம்ப் ஏதோ 2016 தேர்தல் நாள் வரையிலும் குற்றம்குறை இருந்தாலும் கண்ணியத்துடன் இருந்த ஒரு சமூகத்திற்குள்ளாக வேண்டாமல் புகுந்து விட்ட அரக்கத்தனமான ஒரு மனிதரல்ல என்பது வலியுறுத்திக் கூறப்பட்டாக வேண்டும். ரியல் எஸ்டேட், நிதி, சூதாட்டம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளது குற்றவியல்தனமான மற்றும் நோய்வாய்ப்பட்ட சேர்க்கைகளது விளைபொருளான ட்ரம்ப் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உண்மையான முகம் ஆவார்.

உள்வரும் ட்ரம்ப் நிர்வாகமானது, அதன் நோக்கங்களிலும் ஊழியர்களிலும், சிலவராட்சி நிலைநிறுத்தப்படும் தன்மையைக் கொண்டிருக்கிறது. ஒரு கேடுகெட்ட சமூக வர்க்கம் அதன் முடிவுக்காலத்தை நெருங்கும் வேளையில், வரலாற்றின் பேரலைகளுக்கு தாக்குப்பிடித்து நிற்பதற்கான அதன் முயற்சிகளானவை அதன் அதிகாரம் மற்றும் சலுகைகளிலான நீண்டகால அரிப்பாக அது உணரக்கூடியவற்றை தலைகீழாக்குவதற்கான முயற்சியின் வடிவத்தை எடுப்பது அரிதானதல்ல. நிலைமைகளை பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் மாற்றவியலாத சக்திகள் அதன் ஆட்சியின் அடித்தளங்களை அரிக்கத் தொடங்கும் முன்பாக இருந்த (அல்லது இருந்ததாக அது கற்பனைசெய்கின்ற) விதத்திற்கு திருப்பிக் கொண்டுவர அது முயற்சிக்கிறது.

27. ஜனவரி 20 அன்று ஜோசப் பைடென் ஜனாதிபதியாக பதவியேற்கவிருப்பது —ஒரு கவிழ்ப்பை நடத்துவதற்கான ட்ரம்ப்பின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்று அனுமானித்தால்— எந்த முக்கியமான விதத்திலும், அமெரிக்க ஜனநாயகத்தின் பொறிவை, தலைகீழாக்குவதை விடுங்கள், தடுத்து நிறுத்தி விடவும் கூட போவதில்லை. எதேச்சாதிகாரத்தை நோக்கிய இயக்கம் என்பது தனிமனிதர்களால் செலுத்தப்படுவதல்ல மாறாக 1) தமது மிகத்தீய வெளிப்பாட்டை சமூக சமத்துவமின்மையின் அதீத மட்டங்களில் காணுகின்ற அமெரிக்க முதலாளித்துவத்தின் சமூகப் பொருளாதார முரண்பாடுகள்; மற்றும் 2) பின்விளைவுகள் எத்தனை கொடுமையானதாக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல், தனது பூகோள அரசியல் நிலையின் அரிப்பை தலைகீழாக்குவதற்கும் தனது பூகோள மேலாதிக்கத்தை மறுஸ்தாபகம் செய்வதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டுள்ள உட்பொதிந்த மற்றும் கட்டுப்படுத்த முடியாத முனைப்பு ஆகியவற்றின் மூலம் செலுத்தப்படுவதாகும்.

28. சமூக சமத்துவமின்மையின் முன்னெப்போதினும் மிகப்பெரும் மட்டங்கள் மற்றும் ஒப்புயர்வற்ற ஏகாதிபத்திய சக்தியாக தனது நலன்களை கடிவாளமற்று உலகளாவிய விதத்தில் திட்டவட்டம் செய்வது ஆகிய அமெரிக்க முதலாளித்துவ ஆட்சியின் இந்த அத்தியாவசியக் கூறுகளில் எதுவுமே ஜனநாயகத்துடன் ஒத்துப்போகவில்லை. பெருகிச்செல்லும் உள்நாட்டு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு எதிராக சமத்துவமின்மையைப் பாதுகாப்பதென்பது போலிஸ் அரசு நடவடிக்கைகளில் இறங்குவதற்கு கோருகிறது. பூகோள மேலாதிக்கத்தைப் பராமரிப்பதற்கான போராட்டமானது பொருளாதார வளங்களை போருக்கு தயாரிப்பு செய்வதற்கும் நடத்துவதற்கும் முடிவற்றும் வரம்பற்றும் திருப்பிவிடுவதைக் கோருகிறது. இவைகள் தான் அமெரிக்காவிற்கு உள்ளும் சரி சர்வதேச அளவிலும் சரி பைடென் அரசாங்கத்தின் கொள்கைகளைத் தீர்மானிக்கவிருக்கின்ற கட்டாயங்களாக இருக்கின்றன.

29. ஆயினும் சமூக அவசியமானது ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளில் மட்டும் வெளிப்பாடு காணவில்லை. அது வெகுஜன நனவிலும் தீவிர மாற்றங்களைக் கொண்டுவருகிறது. 2020 ஆண்டு துன்பங்கள் —இவை 2021 ஆண்டிலும் தொடர்ந்து வருகின்றன— முதலாளித்துவ ஒழுங்கில் தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையை ஆழமாகவும் திரும்பவியலாமலும் கீழறுத்திருக்கின்றன. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தின் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பது சாத்தியமாகும் என்பதே பெருந்தொற்று வழங்கியிருக்கும் அடிப்படை படிப்பினையாக இருக்கிறது. சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகளுக்கு பெருகிச்செல்கின்ற எதிர்ப்பு இருக்கும் என்பது மட்டுமல்ல, சமூகத்தின் நிலவும் கட்டமைப்புகளில் ஒரு மாற்றத்திற்கான பெருகிய கோரிக்கைகளும் அங்கே இருக்கும். வெகுஜனங்களின் நனவில் இடதுநோக்கிய நகர்வும் வர்க்கப் போராட்டம் தீவிரப்படுவதும் ஒரு புரட்சிக்கு-முந்தைய சூழலின் ஆரம்பகட்ட வளர்ச்சியின் தெளிவான அறிகுறிகளாய் இருக்கும்.

30. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்புடன் கைகோர்த்து வோல் ஸ்ட்ரீட் மற்றும் பிற முக்கிய பங்குச் சந்தைகளில் பங்கு விலைகளிலான ஒரு வெடிப்பான அதிகரிப்பும் நடந்தேறியிருக்கிறது என்பதை தொழிலாள வர்க்கம் கவனிக்கத் தவறவில்லை. ஆயிரக்கணக்கானோர் மூச்சுத்திணறி அவர்களது நேசத்திற்குரியவர்களிடம் இருந்து ஒரு இறுதித் தழுவல் அல்லது கனிவான வார்த்தைகளின் வசதியும் கூட இல்லாமல் செய்யப்பட்டு நெரிசலான அவசர சிகிச்சைப் பிரிவுகளில் தனிமைப்பட்ட மரணங்களைத் தழுவிய அதேநேரத்தில், பெருந்தொற்று இலாபமீட்டாளர்களின் வர்க்கமானது சமூக நாசத்திற்குக் காரணமான அதன் சுய-செழிப்பைக் கொண்டாடி வந்திருக்கிறது. தனியார் செல்வமானது வெறுப்பூட்டும் அளவில் திரண்டு செல்கின்ற அதே அளவுக்கு சமூகக் கோபாவேசத்தின் ஒரு திரட்சியும் இருக்கிறது.

31. இந்த கோபாவேசம் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புக்கு இட்டுச்செல்லும். உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் —இவைகள் முதலாளித்துவ சுரண்டலை எதிர்க்கிற தொழிலாளர்களின் ஒவ்வொரு முயற்சியையும் ஒடுக்குவதற்கென அர்ப்பணித்துக் கொண்ட பெருநிறுவன நிர்வாகத்தின் தொங்குதசைகளுக்கு அதிகமான வேறெதுவாகவும் இல்லை— கட்டுப்பாட்டிற்கு வெளியில் சுயாதீனமான சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளின் முயற்சிகள் இந்த அபிவிருத்தியை எதிர்பார்த்து வந்திருந்தன, ஊக்குவித்து வந்திருந்தன.

32. புரட்சிகரப் போராட்டத்தின் மையச்சுழலுள் தொழிலாள வர்க்கம் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்படி ஐரோப்பிய பிரபுக்கள் மற்றும் வட அமெரிக்க அடிமை உரிமையாளர்களது செல்வமும் தனிச்சலுகைகளும் பழைய ஆளும் வர்க்கங்களது செல்வமும் அதிகாரமும் தமக்கு அடித்தளமாகக் கொண்டிருந்த பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை தூக்கிவீசுவதற்கான கோரிக்கைகளைத் தூண்டியதோ, அதைப்போலவே நவீன பூகோளமயமான உலகமும் சமூகச் செல்வம் ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்கினரிடம் குவிந்துகொண்டே செல்வதை நிரந்தரமாகப் பொறுத்துக் கொண்டிராது. சிலவராட்சியினரின் செல்வங்களை பறிமுதல் செய்வதற்கும் மனிதகுலத்தின் நலன்களின் பேரில் உலகப் பொருளாதாரத்தை சோசலிசரீதியாக மறுஒழுங்கு செய்வதற்குமான கோரிக்கையானது இந்த நெருக்கடியில் இருந்தே அவசியமாய் எழுகிறது. இந்த சமூக நிகழ்ச்சிப்போக்கின் புறநிலைத் தர்க்கத்தை உணர்ந்திருப்பதே உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் முன்னோக்கு மற்றும் நடைமுறையின் உண்மையான அடித்தளமாய் இருக்கிறது.

33. தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தின் அபிவிருத்தி என்பது அதன் வெகு இயல்பிலேயே ஒரு சர்வதேசப் போராட்டமாகும். மனிதகுலம் முகம்கொடுக்கும் ஒவ்வொரு முக்கிய பிரச்சினையுமே ஒரு பூகோளரீதியான பிரச்சினை ஆகவே அது ஒரு பூகோளரீதியான தீர்வைக் கோருகிறது என்ற உண்மையை இந்த பெருந்தொற்றானது மிக நேரடியான விதத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. காலநிலை மாற்றம், உலகப் போர் அல்லது பாரிய வறுமை என எதுவாயினும் ஒவ்வொரு பிரச்சினையிலுமே உயிர்களை நோக்கிய அதே அலட்சியம், அதே திறனின்மை மற்றும் ஒழுங்கமைப்பின்மை, சமூகத் தேவைகளை தனியார் செல்வத்திற்கும் புவியரசியல் நலன்களுக்குமாய் தாட்சண்யமற்று அதேவிதமாய் கீழ்ப்படுத்தல் ஆகியவைகள் தான் ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பின் இயல்புகளாய் இருந்து வருகின்றன.

34. முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது என்பது தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்கான —அவை அதி-வலதுகளது தேசியவாதம் மூலமாயினும் சரி அல்லது போலி-இடதுகளது இனவெறி அடையாள அரசியல் மூலமாயினும் சரி— அத்தனை முயற்சிகளையும் எதிர்ப்பதைக் கோருகிறது. கடந்த ஆண்டின் போது, ஜனநாயகக் கட்சியும் நியூயோர்க் டைம்ஸும் இனப் பிளவுகளை ஊக்குவிப்பதற்கான ஒரு இடைவிடாத பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் முன்னிலை வகித்து வந்திருக்கின்றன, அமெரிக்காவிலான அடிப்படையான பிளவு, தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலானது அல்ல மாறாக “வெள்ளை அமெரிக்கா”வுக்கும் “கறுப்பு அமெரிக்கா”வுக்கும் இடையிலானது என்பதாக அவை கூறி வந்திருக்கின்றன. இது, சமூக சமத்துவத்திற்காக அல்லாமல், மக்களின் மேல்மட்டத்தில் இருக்கின்ற 10 சதவீதம் பேரில் செல்வமும் தனிச்சலுகைகளும் இன்னும் கூடுதல் அனுகூலமான விதத்தில் பங்கு பிரிக்கப்படுவதற்காக போராடுகின்ற உயர் நடுத்தர-வர்க்கத்தின் பிற்போக்குத்தன அரசியலாகும்.

35. சமூகத்தின் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியின் கட்டமைப்பிற்குள்ளாக பராமரிப்பதற்கு ஆளும் வர்க்கம் பிரயோகிக்கின்ற வழிமுறைகளில் ஒன்றுதான் இனம் சார்ந்த அரசியலின் ஊக்குவிப்பாகும். 2020 ஆண்டு வசந்த காலத்தில் வெடித்து அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் வெடித்துப் பரவிய போலிஸ் வன்முறைக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் இருந்து எழுகின்ற மையமான அரசியல் படிப்பினை இது. அனைத்து இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களையும் பாதிக்கக் கூடிய போலிஸ் வன்முறை எனும் பெருந்தொற்று குறித்த கோபத்தை ஜனநாயகக் கட்சியும் போலி-இடதுகளிலுள்ள அதன் துணையமைப்புகளும் ”வெள்ளை இன தனிச்சலுகைகளை” கண்டனம் செய்வதன் பின்னால் திருப்பிவிட்டன. நியூயோர்க் டைம்ஸின் 1619 திட்டப்பணி மூலமாகத் தொடக்கமளிக்கப்பட்ட, வரலாற்றை இன அடிப்படையில் பொய்மைப்படுத்தும் முனைப்பானது அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டுப் போர் ஆகிய அமெரிக்காவின் இருபெரும் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிகளது தலைவர்களது சிலைகளை அகற்றுவதற்கான ஒரு பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தின் மூலமாக தீவிரப்படுத்தப்பட்டது.

36. முதலாளித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியின் பின்னால் திருப்பிவிடுவதில் வேர்மண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸ், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் பிற போலி-இடது அமைப்புகளின் துணையுடன், மீண்டுமொரு முறை ஒரு பிற்போக்கான மற்றும் மோசடித்தனமான பாத்திரத்தை வகித்தார். 2016 தேர்தலில் போலவே 2020 தேர்தலிலும், தான் ஒரு “அரசியல் புரட்சி”க்கு தலைமைகொடுத்துக் கொண்டிருப்பதாக கூறிய சாண்டர்ஸ், இறுதியில் தனது ஆதரவை ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் வலதுசாரி வேட்பாளரின் பின்னால் கொண்டு நிறுத்தினார். பைடெனின் ஒரு நிர்வாகமானது சமூக சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படுவதற்கான “இடத்தை” உருவாக்கித்தரும் என்பதாக சாண்டர்ஸ் மற்றும் மற்றவர்கள் கூறியவை பைடென் பதவியேற்கும் முன்பாகவே மறுதலிக்கப்பட்டு விட்டிருக்கின்றன. அவர் ஒரு வலது-சாரி கேபினட்டை ஒன்றுசேர்த்திருக்கிறார், “ஐக்கிய”த்திற்கான முடிவற்ற அழைப்புகளை விடுத்திருக்கிறார், அத்துடன் அவரது “குடியரசுக் கட்சி சகாக்களுடன்” —தேர்தலைத் திருடுவதற்கும் ஒரு அரசியல்சட்ட விரோதமான ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்குமான ட்ரம்ப்பின் முயற்சிக்கு ஆதரவளித்திருக்கின்ற அதே மனிதர்கள்தான்— சேர்ந்து வேலைசெய்வதற்கும் உறுதிபூண்டிருக்கிறார்.

37. அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், ஜனநாயக உரிமைகளது பாதுகாப்பும் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டமும், சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலுடன் பிரிக்கவியலாது பிணைந்திருக்கின்றன. முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு பதிலிறுப்பாக உண்மையான முற்போக்கு வழி எதுவும் காணப்படாத வரை, இருபதாம் நூற்றாண்டின் அத்தனை பயங்கரங்களும் இன்னும் அதிக குருதிகொட்டுகின்ற மற்றும் மிருகத்தனமான வடிவங்களில் மீண்டும் எழுச்சி காணும் என்பதே 2020 ஆண்டின் ஒரு மையமான படிப்பினையாக உள்ளது.

38. கடந்த ஆண்டின் காலத்தில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமையான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது (ICFI) அதன் வரலாற்று அடித்தளங்களது வலிமையையும் மார்க்சிச வழிமுறையின் ஆற்றலையும் நடைமுறையில் விளங்கப்படுத்தியுள்ளது. பெருந்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் இருந்தே, ICFI உலகளாவிய அபாயம் குறித்து எச்சரித்ததோடு ஆளும் உயரடுக்கினரின் சதிகளையும் அம்பலப்படுத்தியது, இந்த மரண ஆபத்தான வைரஸைத் தடுத்துநிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கென ஒரு வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் முன்வைத்தது. பெருந்தொற்று குறித்த செய்திகளை விளங்கப்படுத்துவதில் உலக சோசலிச வலைத் தளத்திற்கு உலகின் வேறெந்தவொரு வெளியீட்டகமும் நிகர்நிற்க முடியவில்லை.

39. பிப்ரவரி 28 அன்று, உலகளாவிய மரணங்களின் எண்ணிக்கை அப்போதுவரை 3,000 க்கும் குறைவாகவே இருந்தது அத்துடன் அமெரிக்காவில் எந்த மரணமும் பதிவாகியிருக்கவில்லை என்ற நிலையிலும், பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு உலகளாவிய அவசரகால பதிலிறுப்புக்கு ICFI ஒரு அவசர அழைப்பு விடுத்தது. ஆளும் வர்க்கம் அபாயத்தைக் குறைத்துக்காட்டி நடவடிக்கையை தாமதித்துக் கொண்டிருந்த நேரத்தில், ICFI, இந்த மரண அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு உலகின் விஞ்ஞானம், தொழில்நுட்ப மற்றும் சமூக ஆதார வளங்களை அணிதிரட்டுவதற்கு அழைப்புவிடுத்தது. மார்ச் 17 அன்று, அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஐ கடந்திருந்த வேளையில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு “தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கான வேலைத்திட்டம்” ஒன்றை வெளியிட்டது, பள்ளிகளும் அத்தியாவசியமற்ற உற்பத்தித்துறைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் அதில் இடம்பெற்றிருந்தது. ஆளும் வர்க்கத்தின் பாரிய உயிரிழப்பு மற்றும் சமூக நாசக் கொள்கைக்கு எதிரான சோசலிச வேலைத்திட்ட மற்றும் அரசியல் மாற்றின் ஒரு வரலாற்றுப் பதிவை வழங்குகின்ற எண்ணற்ற அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளில் இவைகள் வெறும் இரண்டு மட்டுமே.

40. எப்படி முதலாம் உலகப் போர் போல்ஷிவிக் கட்சியின் தொலைநோக்கை விளங்கப்படுத்தியதோ, அதைப்போல இப்போதைய நெருக்கடியானது சமகால ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அந்தஸ்தை விளங்கப்படுத்தியுள்ளது. ICFI எந்தக் கொள்கைகளுக்காக போராடியதோ அவை அமல்படுத்தப்பட்டிருந்தால், நூறாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

41. புரட்சிக்கு முந்திய சூழ்நிலையின் காலஅளவு —அதாவது, அதிகாரத்திற்கான ஒரு நேரடிப் போராட்டமாக மாற்றமடைவதற்கு எடுக்கக்கூடிய காலம்— முன்கூட்டியே கணிக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் பங்குபெறுவது தவிர, நிகழ்வுகளின் வேகமெடுப்பைக் குறித்த ஊகம் என்பது, ஒரு அருவமான மிகையதார்த்த தன்மையை மட்டுமே கொண்டிருக்க முடியும். முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி ஆகியவற்றின் உள்ளடக்கத்தில் பார்க்கையில், தொழிலாளர்களது வர்க்க நனவை உயர்த்துவதும் அவர்களது இயக்கத்திற்கு ஒரு சோசலிச திசையை வழங்குவதுமே சோசலிச இயக்கம் முகம்கொடுக்கும் சவாலாய் உள்ளது.

42. ஆயினும் இந்தப் பணி தொழிலாளர்களுக்கு வெளியிலிருந்தபடி வெறுமனே அறிவுரை கூறுவது மட்டுமல்ல. சோசலிசத்திற்கான போராட்டத்தின் வெற்றியானது தொழிற்சாலைகள், பள்ளிகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவின் வேலையிடங்களிலும் சோசலிச சமத்துவக் கட்சியின் சக்திவாய்ந்த இருப்பை ஸ்தாபிப்பதை பொறுத்திருக்கிறது. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) தொழிலாள வர்க்கத்தில் SEP இன் இருப்பை விரிவுபடுத்துவதில் ஒரு வெகுமுக்கிய பாத்திரத்தை வகிக்கவிருக்கிறது.

43. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் கனிந்துள்ளன. சோசலிசத்திற்கான போராட்டத்தில் செயலூக்கத்துடன் இயங்குவதற்கும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதற்கும் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களுக்கு நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம்.

Loading