மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜூலியன் அசான்ஜைப் பிரிட்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என்பது, அமெரிக்க நீதித்துறையின் நகைப்பிற்கிடமாக ஜோடிக்கப்பட்ட வழக்கைத் தாங்கிப்பிடிக்கும் வகையில் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு நீதிமன்ற தீர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.
போர்க் குற்றங்கள், ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள், அரசு உளவுபார்ப்பு, ஊழல், சித்திரவதை மற்றும் உலகெங்கிலும் மனித உரிமை துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்தும் தகவல்களைப் பிரசுரித்ததற்காக, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர், தேசத் துரோக சட்டத்தின் கீழ் 175 ஆண்டுக்கு விதிக்கப்படுக்கூடிய தண்டனையின் கீழ் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவதை முகங்கொடுத்தார்.
அசான்ஜின் தடுமாற்றமான மனநிலை மற்றும் அமெரிக்காவில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய தற்கொலை ஆபத்து ஆகிய காரணங்களால், அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது "ஒடுக்குமுறையாக" இருக்கும் என்ற அடித்தளத்தில் அந்த கோரிக்கையை மாவட்ட நீதிபதி வனசா பாரைட்சர் நிராகரித்தார்.
அந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யவிருப்பதாக வாதி தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர், அதை அவர்கள் 14 நாட்களுக்குள் செய்தாக வேண்டும். பிரதிவாதி தரப்பு புதன்கிழமை காலை பிணையெடுப்புக்கான ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும். அசான்ஜ், குறைந்தபட்சம் அதுவரையில், தீவிரமடைந்து வரும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இலண்டனின் உச்சபட்ச பாதுகாப்பு சிறைக்கூடமான பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.
பாரைட்சரின் தீர்ப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படாததாக இருந்தது. விக்கிலீக்ஸ் தலைமை பதிப்பாசிரியர் Kristinn Hrafnsson ஞாயிற்றுக்கிழமை AFP க்குக் கூறுகையில், நீதிமன்றம் அசான்ஜிற்கு எதிராக தீர்ப்பளிக்கும் என்பதில் அவர் "ஏறத்தாழ நிச்சயமாக" இருப்பதாக தெரிவித்திருந்தார். அசான்ஜின் வருங்கால மனைவி ஸ்டெல்லா மோரீஸ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே கருத்துரைக்கையில், “நான் எனது பேச்சைத் திருத்தி எழுத வேண்டியிருக்கும்,” என்றார்.
இந்த தீர்ப்புக்கு உந்திய பரிசீலனைகளும் சக்திகளும் வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் தெளிவாகும். ஏற்கனவே என்ன வெளிப்படையாக இருப்பது என்னவென்றால் ஓர் உயர்மட்ட அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இது இன்னல்படுத்தும் இந்த வழக்கால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஜனநாயக உரிமைகள் மீதான அச்சுறுத்தலைத் தாங்கிப் பிடிப்பதுடன், அசான்ஜைத் தொடர்ந்து இன்னல்படுத்தும் அபாயத்திலேயே நிறுத்தி உள்ளது, இது அவரின் விடுதலைக்கான பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த கோருகிறது.
முற்றிலும் மனநிலை அடித்தளத்தில் உள்ள நாடுகடத்தலுக்கு எதிரான இந்த தீர்ப்பை வழங்கி, வழக்குதொடுநர்கள் பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பதையும், அசான்ஜிற்கான சட்ட விசாரணை நடைமுறை மற்றும் மனித உரிமைகள் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதை அவர்கள் நியாயப்படுத்துவதையும் முற்றிலுமாக பாரைட்சர் ஆமோதித்தார்.
“அந்த நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு எங்களுக்கு முழுதும் ஏமாற்றமாக இருக்கிறது என்றாலும், முன்வைக்கப்பட்ட சட்டத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் அமெரிக்காவே மேலோங்கி இருந்தது என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். குறிப்பாக, அரசியல் உள்நோக்கம், அரசியல் அத்துமீறல், நியாயமான விசாரணை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவை சம்பந்தமாக திரு. அசான்ஜின் வாதங்கள் அனைத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. திரு. அசான்ஜை அமெரிக்காவுக்குக் கொண்டு வர நாங்கள் தொடர்ந்து முயல்வோம்,” என்று அமெரிக்க நீதித்துறை மிரட்டும் ரீதியிலான கருத்துடன் விடையிறுத்தது.
பாரைட்சர் ஆமோதித்த பிற்போக்குத்தனமான வாதங்கள் மீது உலக சோசலிச வலைத் தளத்தின் முழு விபரங்களும் வரவிருக்கும் நாட்களில் வெளியாகும். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் வழங்கும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சாசனத்தின் ஷரத்து 10 இன் பாதுகாப்பை அசான்ஜை உரிமைகோர முடியாது என்பதும், அவரை வேட்டையாடுவதில் அமெரிக்கா முற்றிலும் சட்டபூர்வமாக நடந்து கொண்டுள்ளது என்பதும் தான் அப்பெண்மணியின் விசாரணை முடிவில் அவர் கண்டறிந்த முக்கிய அம்சமாக உள்ளது. அமெரிக்க அரசு “தேசிய பாதுகாப்பு" என்ற அடித்தளத்தில், ஈக்வடோரிய தூதரகத்தில் அசான்ஜ் மற்றும் அவரது வழக்கறிஞர்களை உளவுபார்த்ததைக் கூட பாரைட்சர் நியாயப்படுத்தினார்.
“புலனாய்வு பத்திரிகையியலில் வகித்த பாத்திரத்திற்கு வெளியே" அவர் ஒரு பொறுப்பற்ற கணினி ஊடுருவல்காரர் என்பதாக அசான்ஜை அப்பெண்மணி சித்தரித்தார். அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸை நிந்திக்கும் கார்டியன் மற்றும் நியூ யோர்க் டைம்ஸின் "கண்டன[ங்கள்]” அனுகூலமான விதத்தில் மேற்கோளிடப்பட்டன. ஈக்வடோரிய தூதரகத்தில் அமெரிக்கா உளவுபார்த்ததை நியாயப்படுத்துகையில், “அசான்ஜ் தேர்தலில் தலைநுழைப்பதற்கு ஒரு தூதரகத்தையே கட்டளைச் சாவடியாக மாற்றிவிட்டார்,” என்று அதிர்ச்சியூட்டும் விதத்தில் வாதிட்ட CNN இன் ஓர் அறிக்கையை பாரைட்சர் சுட்டிக்காட்டினார்.
அசான்ஜை அவப்பெயரெடுத்த ஒருவராகவும், அவரின் விக்கிலீக்ஸ் பதிப்புகள் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் என்பதாகவும் பழியுணர்ச்சியுடன் சித்தரித்து, பாரைட்சர், இந்த வழக்கில் ஸ்தாபிக்கப்பட்ட ஜனநாயக-விரோத முன்மாதிரியை எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்கு அவர் தீர்ப்பில் தக்க வைக்க முயன்றார்.
விசாரணைக்குப் பின்னர் பேட்டி அளித்த அசான்ஜின் வழக்குரைஞர் ஜெனிஃபர் ரோபின்சன் குறிப்பிடுகையில், “அவரை நாடு கடத்துவது பத்திரிகை சுதந்திரத்தின் அடித்தளத்தில் அடக்குமுறையானது அல்ல, மாறாக குறிப்பிட்ட உடல்நல நிலைமைகள் மற்றும் மோசமடைந்து வரும் மனநிலை காரணமாகவும், அமெரிக்காவில் அவர் சிறையில் அடைக்கப்பட்டால் அவர் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் குறிப்பிட்ட சிறை நிலைமைகளுக்காகவும் அது அடக்குமுறையானது என்ற குறுகிய அடித்தளத்தில்" நாடு கடத்துவதற்கு எதிராக பாரைட்சர் தீர்ப்பு வழங்கி உள்ளதாக எச்சரித்தார்.
“இப்போதும் இது கவலைக்குரியதுதான், பேச்சு சுதந்திரத்திற்கான குழுக்கள் இப்போதும் இதற்காக கவலைப்பட தான் வேண்டியிருக்கும். வரவிருக்கும் நாட்களில் நாங்கள் இந்த தீர்ப்பை இன்னும் அதிக நெருக்கமாக பார்ப்போம். முதல் சட்ட திருத்தத்தைப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் எழுப்பிய பேச்சு சுதந்திரம் மீதான வாதங்கள், இந்த வழக்கின் முன்மாதிரியற்ற இயல்பு, அமெரிக்காவுக்கு அனுப்பியதும் ஜூலியனுக்கு ஒரு நியாயமான விசாரணை கிடைக்காது என்ற உண்மை ஆகியவற்றைப் பொறுத்த வரையில், இவை உள்ளடங்கலாக, வேறு எல்லா விசயங்களிலும் அமெரிக்காவின் இன்னல்படுத்தல்களுடன் அப்பெண்மணி உடன்பட்டார்.”
இந்த தீர்ப்பு "ஜூலியன் அசான்ஜிற்கு கிடைத்த ஒரு வெற்றி, ஆனால்… பத்திரிகையியலுக்கு அவசியப்படும் வெற்றி அல்ல" என்பதாக Hrafnsson தொகுத்தளித்தார்.
அசான்ஜின் தனிப்பட்ட வெற்றிக்கும் உத்தரவாதம் இல்லை. உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த ஒரு சிறைச்சாலையில் அவரைத் தொடர்ந்து அடைத்து வைப்பதென்பது நாடு கடத்துவதை நிராகரித்ததில் இருந்து இன்னும் அதிக கடுமையான மற்றும் பாதுகாக்க முடியாத நிலைமையே ஏற்படுத்துகிறது. அவர் அமெரிக்காவைத் தவிர வேறெங்கும் எந்த குற்றச்சாட்டையும் முகங்கொடுக்கவில்லை, அங்கே அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்று இப்போது பிரிட்டன் நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அவரைச் சிறையில் அடைத்து வைப்பதற்கு அங்கே சிறிய அடித்தளமும் கூட இல்லை.
பாரைட்சரின் தீர்ப்பு, பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் அதன் சட்ட அமைப்புமுறையின் குற்றகரத்தன்மையை உள்ளபடியே ஒப்புக் கொள்வதாகவும் உள்ளது. அப்பெண்மணியின் வார்த்தைகளில் கூறுவதானால், அசான்ஜ் "தளர்வடைந்து, சில நேரங்களில் நம்பிக்கையிழந்த மனிதராக, உண்மையிலேயே அவரது எதிர்காலம் குறித்து அச்சத்துடன் உள்ளார்" என்பதோடு, அமெரிக்காவில் அவருக்கு என்ன காத்திருக்கிறதோ என்ற அச்சத்தால் அல்ல, மாறாக பிரிட்டிஷ் அரசின் கரங்களில் அவர் வக்கிரமாக கையாளப்படுவதன் விளைவாக மட்டுமே தற்கொலைக்கான "கணிசமான அபாயம்" உள்ளது என்பதே உண்மையாகும்.
மே 2019 இல், சித்திரவதை குறித்து ஐ.நா. சிறப்பு அறிவிக்கையாளர் நில்ஸ் மெல்சர் ஒரு மருத்துவர் மற்றும் ஓர் உளவியல் நிபுணருடன் அசான்ஜைச் சந்தித்தார். அந்த மாதம் அவர் அறிவிக்கையில் அமெரிக்கா, அதன் கூட்டாளிகள் மற்றும் ஊடகங்களின் ஒன்பதாண்டு கால "நீடித்த மற்றும் படிப்படியான கடும் துஷ்பிரயோகத்தால்" அசான்ஜ் பாதிக்கப்பட்டுள்ளார், இதன் விளைவாக மருத்துவரீதியில் கண்டறியப்படக்கூடிய "உளவியல் சித்திரவதை" இன் அறிகுறிகள் உள்ளன என்றார். பிரிட்டன் அரசாங்கமோ இந்த கவலைகளை உதறித் தள்ளியது.
நவம்பர் 2019 இல், மருத்துவர்களின் ஒரு சர்வதேச குழு ஒரு பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்டு குறிப்பிடுகையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலைமைகளின் காரணமாக அசான்ஜ் "உயிரிழக்கக் கூடும்" எச்சரித்ததுடன், அவர் "முறையான கருவிகள் கொண்ட வல்லுனர்கள் பொருந்திய பல்கலைக்கழக பயிற்சி மருத்துவமனையில்" சிகிச்சை அளிக்கப்பட்டு கவனிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். அந்த குழு, அசான்ஜ் பிரச்சாரத்திற்கான மருத்துவர்கள் என்பதை நிறுவியதுடன், அது அசான்ஜ் மீதான "சித்திரவதை" மற்றும் "மருத்துவ சிகிச்சை மீதான அலட்சியம்" மீது கண்டனங்களை வைத்தது.
பாரைட்சர், நாடு கடத்துவது மீதான அவர் மறுப்பை நியாயப்படுத்துகையில், தற்கொலை எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் மற்றும் மனப்பிரமை போன்ற கடுமையான உளவியல் அறிகுறிகளுக்கான அடையாளங்கள் இருப்பதாக இப்போது குறிப்பிடுகிறார். அவரின் இந்த முடிவில் இருந்து ஒரேயொரு தீர்மானத்திற்கு மட்டுமே வர முடியும், அதாவது விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் உடனடியாக விடுவிக்கப்பட்டு, முறையான மருத்துவக் கவனிப்பு மற்றும் உதவிக்கு உட்படுத்தப்பட்டு, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சுவீடன் அரசுகளின் கரங்களில் அவர் பட்ட படுமோசமான இன்னல்களுக்கு உரிய முழுமையான நஷ்ட ஈடு அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
அமெரிக்க சிறை அமைப்புகளின் நிலைமைகள் அசான்ஜைத் தற்கொலைக்குத் தள்ளும் என்று பாரைட்சர் காண்பது அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பதாகையில் ஸ்தாபிக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பாதுகாப்பு எந்திரம் மீதான அதிர்ச்சியூட்டும் குற்றப்பத்திரிகையாக உள்ளது.
அவரது தீர்மானத்தில் பாரைட்சர் விவரிக்கையில், “யாருடைய நேரடியான தொடர்பும் இல்லாதவாறு வடிவமைக்கப்பட்ட மற்றும் சமூக தலையீடு குறைக்கப்பட்ட மற்றும் வெளி உலகுடனான தொடர்பு மிக மிக குறைவாக உள்ள கடுமையான கட்டுப்பாட்டு சிறை நிலைமைகளின் துயரகரமான சாத்தியக்கூறை திரு. அசான்ஜ் முகங்ககொடுக்கிறார்,” என்றார். அவர் 27 ஆண்டு காலம் அமெரிக்க சிறைத்துறை அதிகாரியாக இருந்த Maureen Baird இன் பிரதிவாதி சாட்சியின் சாட்சியத்தை மேற்கோளிட்டார். அசான்ஜ் அடைக்கப்படக்கூடிய சிறைச்சாலை "மனிதர்களுக்காக கட்டப்பட்டதல்ல" என்று Maureen Baird செப்டம்பர் மாத விசாரணை சாட்சி கூறியிருந்தார்.
அசான்ஜைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது இந்த மூர்க்கமான மற்றும் பழிவாங்கும் தண்டனையின் அச்சுறுத்தல் முற்றிலுமாக திரும்பப் பெறப்படும் வரையில் தொடர வேண்டும். ஸ்டெல்லா மோரீஸ் நீதிமன்றத்திற்கு வெளியே பேசுகையில், “பெல்மார்ஷ் சிறையில் குற்றமே செய்யாமல் ஜூலியன் சிறைச்சாலையில் தனிமையில் பாதிக்கப்பட்டிருக்கும் வரையில், எங்கள் குழந்தைகள் அவர்களின் தந்தையின் அன்பு மற்றும் பாசத்தை தொடர்ந்து இழந்திருக்கும் வரையில், எங்களால் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியாது…
“இன்று இந்த வழக்கில் நீதியை நோக்கிய முதல் படியாகும். அவர் சகித்துக் கொண்டிருக்கும் மற்றும் அவர் முகங்கொடுத்து கொண்டிருக்கும் வேதனையின் தீவிரத்தையும் மனிதாபிமானமற்ற தன்மையையும் நீதிமன்றம் உணர்ந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் குற்றப்பத்திரிகை இன்னும் கைவிடப்படவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம்.
“இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதைக் குறித்து நாங்கள் ஆழமாக கவலைப்படுகிறோம். அது தொடர்ந்து ஜூலியனைத் தண்டிக்க விரும்புகிறது, அது அவரின் எஞ்சிய வாழ்நாளில் அமெரிக்க சிறை அமைப்புமுறையின் மிக இருண்ட பள்ளத்தில் அவரைக் காணாமல் ஆக்க விரும்புகிறது,” என்றவர் எச்சரிக்கையூட்டினார்.
அசான்ஜின் சட்டக் குழுவும் உலகெங்கிலும் உள்ள அவரின் ஆதரவாளர்களும் பாராட்டுக்குரியவர்கள். இந்த திங்கட்கிழமை தீர்ப்பு, இருபத்தோராம் நூற்றாண்டின் இந்த மிகவும் குறிப்பிடத்தக்க சட்ட வழக்கில் ஒரு நிலைப்பாடு எடுத்த ஒவ்வொருவரின் வெற்றியாகும், அது அசான்ஜை இன்னலுக்கு உட்படுத்துவதை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கிய அவசியமான படியாகும்.
ஆனால் சுயதிருப்தி கொள்வதற்கு இடமில்லை. அசான்ஜின் விடுதலைக்காக போராடியாக வேண்டும் என்பதோடு அவர் வழக்கில் தாக்குமுகப்பாக உள்ள ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் தோற்கடிக்கப்பட வேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த அடுக்குகளையும் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாவலர்கள் அனைவரையும் அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே இந்த விளைவுகளை உறுதிப்படுத்த முடியும்.
இப்போதே ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்! என்பதே உடனடியான மற்றும் அவசரமான கோரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க
- ஜனவரி 4 இல் அசான்ஜை நாடு கடத்துவதற்கான தீர்ப்பு வரவிருக்கிறது: அவரின் விடுதலைக்காக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!
- பத்து வருட கால நியாயமற்ற தடுப்புக்காவலுக்கு ஆளாகியுள்ள அசான்ஜை உடனடியாக விடுவிக்க ஐ.நா.வின் பிரதிநிதி நில்ஸ் மெல்ஸர் கோரிக்கை விடுக்கிறார்
- விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசான்ஜ் ஈராக் போர் ஆவணங்களைப் பிரசுரித்ததில் இருந்து பத்தாண்டுகள்
- வலைத் தள ஆவணப்படம் ஜூலியன் அசாஞ்சின் உளவியல் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறது