கிளிநொச்சி மாவட்டதில் உள்ள கிராஞ்சி, இலவன் குடா கடற்கரையில், ஜனவரி 7 அன்று, 23 மீன்வர்கள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டமையானது, படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் வடக்கில் உள்ள ஏழை மீனவர்கள் முகம் கொடுக்கும் வறுமை மற்றும் ஒடுக்குமுறை நிலமைகளை மீண்டும் வெளிப்படுத்துகின்றது.
மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்று திரும்பிய வேளையில், கடற்கரையோரத்தில் பதுங்கியிருந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் அவர்களைச் சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.
சிப்பாய்கள், அவர்களை ஒரு பயங்கரவாதக் குழுவினைப் போல நடத்தினார்கள். தாங்கள் கைது செய்வதை எதிர்த்து மீனவர்கள் வாக்குவாதப்பட்டபோது, சிப்பாய்கள் அவர்களைத் தாக்கியுள்ளார்கள். இராணுவம், மீனவர்களின் வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் சுழியோடும் கருவிகள் போன்றவற்றினைப் பறிமுதல் செய்துள்ளது.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இது இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிவில் நிர்வாக முகத்துடன், ஏறத்தாழ ஒரு இராணுவ நிர்வாகம் முன்னெடுக்கப்படுவதடுன் விரிவாக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் வாழும் மீனவர்கள், இன்னமும் கடற்படையினரிடம், மீன்பிடிப்பற்கான அனுமதிப் பத்திரத்தினைப் பெறவேண்டியுள்ளது. கடற்படையினர், மீனவர்களைத் தொடர்ச்சியாக கண்காணித்த வண்ணமுள்ளனர். இது மீனவர்களின் ஜனாநாயக உரிமைகளை மீறுவதாகும்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், கிராஞ்சி கடற்கரையில் முகாமிட்டுள்ள கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் கற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டார்கள்.
கட்றொழில் திணைக்கள அதிகாரிகளால் மீனவர்கள், கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அங்கு அவர்கள் ஒரு நாள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய வழக்கு, எதிர்வரும் ஜூலை 7ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தொழிலாளர்களின், தொழிலுக்கு இன்றியமையாத மீன்பிடி உபகரணங்கள் நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இரவு நேரத்தில் வெளிச்சம் பாய்ச்சி கடல் அட்டை பிடித்தலில் ஈடுபட்டமையே இந்த மீனவர்களுக்கு எதிரான அபத்தமான குற்றச்சாட்டாகும். கடலுக்கு அடியில் வெளிச்சம் பயன்படுத்தி கடல் அட்டை பிடிக்கும் இந்த நடவடிக்கை, அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டதாகும்.
இந்த உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட அரசாங்கம் தடை விதித்துள்ளது என்பது, பல மீனவர்களுக்கு தெரியாது. இந்த உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்படிப்பதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளபோதிலும் கூட, தொழிலாளர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. அவர்கள் தங்கள் ஒருநாள் வாழ்க்கைக்காக பெரும் வறுமையுடன் போராடிக் கொண்டிருப்பதால், இந்த வேலைக்குப் போவதற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
வடக்கு மற்றும் நாடுமுழுவதும் கடும் வறுமையினால் தாக்கப்பட்டிருக்கும் மீனவர்கள் குறித்து கவலையற்றிருக்கும் அரசாங்கம், அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணத்தினையும் வழங்கவில்லை.
நாட்டில் அதிகரித்துவரும் கொரணா வைரஸ் பரவல் சூழ்நிலையினால் சகல மீனவர்களினது வருமானமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பேலியகொட பிரதான மீன்சந்தையில் பல தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதால், பல மாதங்களாக அது மூடப்பட்டுள்ளது.
இதே காரணத்தினால், ஊள்ளூர் சந்தைகள் அடிக்கடி மூடப்பட்டு, வியாபாரங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள், மீனவர்களின் உற்பத்திகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்கின்றனர்.
சுழியோடி கடல் அட்டை பிடிக்கும் இந்த மீனவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். மோட்டர் படகுகளை சொந்தமாக வைத்திருக்கும் வியாபாரிகளின் கீழ் வேலை செய்யும் இந்த மீனவர்கள், தங்களின் கடுமையான வேலைக்காக சிறிதளவான முதலீடுகளையே கொண்டுள்ளார்கள். இந்த மீனவர்கள் பிடிக்கும் கடல் அட்டைகளை, இந்த படகு உரிமையாளரிடம் மட்டுமே விற்பனை செய்ய முடியும் வேறு யாரிடமும் விற்க முடியாது. மீனவர்களின் உற்பத்திகளுக்கு வியாபாரிகளே விலையை நிர்ணயம் செய்கின்றார்கள்.
தொழிலாளர்கள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சுழியோடும் கண்ணாடிகளையும், ஒரு சோடி சுழியோடும் பாதணிகளையுமே சொந்தமாக வைத்திருக்கின்றார்கள். விலை கூடிய இந்த பாதணிகளை வாங்க முடியாத தொழிலாளர்கள், தோசை சுடும் தட்டினால் செய்யப்பட்ட, தோசைக் கற்களையே பாதணிகளாக பாவிக்கின்றார்கள். சுழியோடும் போது, ஓட்சிசன் நிரப்ப்பட்ட சிலிண்டர்களை பாவிப்பதற்கு அவர்களிடம் பணம் இல்லை. இவ்வாறு தொழிலாளர்கள் தங்களின் உயிர்களைப் பணயம் வைத்தே தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.
சுழியோடுவதற்குப் பொருத்தமான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் மீன்பிடி உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் பெருந்தொகை பணம் தேவைப்படுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் சகல மீனவர்களும் மோசமான நிலமைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.
கிளிநொச்சி நகரத்தில் இருந்து 44 கிலோ மீட்டர் தூரத்தில் கிராஞ்சி அமைந்துள்ளது. மீனவர்கள் உட்பட இந்தக் கிராமத்தில் வாழும் மக்கள் கொடூரமான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்ளாகும். யுத்த காலத்தில், இந்த மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு ஓடி, அகதிகளாக வாழ்ந்தார்கள். மீனவர்கள் உட்பட நூற்றுக் கணக்கான மக்கள் இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள்.
மீனவர்களுக்கு, தாங்கள் பிடித்த மீன்களை விற்பதற்கு சந்தை வாய்ப்புக்கள் இல்லை. தங்களின் உற்பத்திகளை விற்பதற்று, அவர்கள் தனியார் வியாபாரிகளில் தங்கியுள்ளார்கள்.
இந்தக் கிராமத்தின் உட்கட்டுமானங்கள் மிகவும் மோசமானவையாகும். ஒரு மீன்படித் துறைமுகம் இல்லாத காரணத்தினால், மீனவர்கள் தொழிலுக்கு செல்வதற்கும் திரும்புவதற்கும் பெரும் கஸ்ட்டத்தை அனுபவிக்கின்றார்கள். காற்று மற்றும் மழைக் காலங்களில் அவர்களின் படகுகள் சேதமாகின்றன. இந்த ஆழமான கடலில் தங்களின் படகுகளையும் மற்றும் உயிர்களையும் பாதுகப்பதற்கு அவர்கள் போராடுகின்றார்கள்.
கிராஞ்சி கிராமத்தை 7 கிலோ மீட்டர் நீளமான பாதை அதிவேகப் பாதையுடன் இணைக்கின்றது. இந்த நீளமான வீதி இன்னமும் பொருத்தமான முறையில் திருத்தி அமைக்கப்படவில்லை. இதனூடாகப் பயணிப்பது மிகவும் ஆபத்தானதாகும். இந்தக் கிராமத்துக்கான பொதுப் போக்குவரத்துக்கள் மிகவும் குறைவானதாகும். இந்தக் கிராமத்துக்கு தனியார் பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுகின்றன.
இங்கு, மிகவும் குறைந்த வசதிகளைக் கொண்ட சிறிய ஆஸ்பத்திரி இயங்கிக் கொண்டிருக்கின்றது. தீவிர மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக, மக்கள் நீண்ட தூரத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி அல்லது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிகளுக்கே செல்ல வேண்டும்.
இலங்கையின் கரையோரங்களில் வாழும் இலட்சக் கணக்கான மக்களின் பிரதான தொழில், மீன்பிடியாகும். அவர்கள் வறுமை மற்றும் கடன் நிலமைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்கள். அதேநேரம், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மீனவர்கள் இரு மடங்கு சகிக்க முடியாத நிலைமைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.
அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் கொழும்பு அரசாங்கங்கள் இந்த ஒடுக்குமுறை ஆட்சியைத் தொடரும் அதேநேரம், தமிழ் உயர் அடுக்கின் கட்சிகள் –தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் பேரவை – மீன்பிடிக் கிராமங்கள் உட்பட மக்களின் அவல நிலமைகளை முற்றாக நிராகரிக்கின்றன. ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஒடுக்குமுறை இராஜபக்ஷ அதிகாரத்தின் பங்காளியாக உள்ளது.
தங்களது சலுகைகளைப் பற்றியே கவலை கொண்டுள்ள அவர்கள், அவற்றினை அடைவதற்கு கொழும்பு அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை எதிர்பார்க்கின்றார்கள். உண்மையில், மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகள் உட்பட வர்த்தகர்கள் இந்தக் கட்சிகளுடன் தொடர்பில் உள்ளார்கள்.
அரசாங்கத்தினாலும் அதன் படைகளினாலும் மீனவர்கள் மீது சுமத்தப்படும் சகல ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கம் இந்த மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் சிறிய மீனவர்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும். அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடிக்க நவீன வசதிகள் மற்றும் தேவையான அனைத்து நிதி உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நியாயமான கோரிக்கைகளுக்கான போராட்டம், வடக்கு மற்றும் கிழக்கில் ஆக்கிரமித்துள்ள படைகளை வெளியேற்றுவதுடன் தொடர்புபட்டதாகும்.
இந்தக் கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு, மீனவர் நடவடிக்கை குழுவை அமைக்குமாறு நாம் மீன்படித் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். நடவடிக்கை குழுவை அமைத்துக் கொண்டு, அவர்கள், வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமல்லாது, நாடு பூராவும் தெற்காசியவிலும் மற்றும் சர்வதேச அளவலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் திரும்பி அவர்களுடன் ஐக்கியப்படுவது அவசியமாகும்.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்துக்காகவும் சோசலிசத்துக்காகவும் போராடுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் இந்த ஒடுக்குமுறை முதலாளித்துவ ஆட்சியை முடிவுக் கொண்டுவர முடியும்.