மோடியின் வணிக சார்பு சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் இந்திய தலைநகர் தெருக்களில் பாதுகாப்பு படையினருடன் மோதல்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

மோடி அரசாங்கத்தின் வேளாண் வணிகச்சார்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகள், நேற்று (ஜனவரி 26 அன்று) இந்தியாவின் தலைநகரில் நகரின் மையப்பகுதிக்குள் அவர்கள் நுழையக்கூடாது என்பது உட்பட அவர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் அரசாங்க உத்தரவுகளை மீறியதற்குப் பின்னர் பல இடங்களில் டெல்லி காவல்துறை மற்றும் துணை இராணுவப் படைகளுடன் மோதினர்.

இந்த வன்முறையில் ஒரு விவசாயி இறந்துள்ளார் மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர். 80க்கும் அதிகமான பணியிலீடுபட்ட காவலர்கள் காயமுற்றுள்ளனர் என்று கண்ணீர் புகை குண்டுகளால் சுட்டும் லத்தியால் விவசாயிகளைத் தாக்கிய டெல்லி காவல்துறை கூறியிருக்கிறது.

டிசம்பர் 1, 2020 செவ்வாய்க்கிழமை, இந்தியாவின் டெல்லி-ஹரியானா மாநில எல்லையில் நடந்த ஒரு போராட்டத்தின் போது மற்றவர்கள் உரையாற்றலை கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு வயதான விவசாயி கோஷங்களை எழுப்புகிறார் (AP Photo/Altaf Qadri)

உத்திரப் பிரதேசத்திலிருந்து வந்து கலந்துகொண்ட 24 வயது நிரம்பிய நவநீத் சிங் அவருடைய டிராக்டர் கவிழ்ந்தபோது இறந்துவிட்டார் என்று காவல்துறை கூறியுள்ளது. பாதுகாப்பு படையினர் சுட்டதால் சிங் டிராக்டரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் என்று போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சமூக கோபத்தின் வெடிப்பால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டம் பரவாமல் தடுக்க, இந்தியாவின் உள்துறை அமைச்சகம் மொபைல் போன் மற்றும் இணையசேவைகளை 12 மணிநேரங்களுக்கு, தலைநகரின் பெரும் பகுதிகளிலும், அருகிலிருக்கும் அண்டை மாநிலங்களான ஹரியான மற்றும் உத்திரப் பிரதேசங்களிலும் நிறுத்திவைக்க உத்திரவிட்டிருந்தது.

நவம்பர் இறுதியில், அவர்களை டெல்லி நகருக்கு நுழையவிடாமல், பெருமளவு பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்தி, வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதனால், அவர்களில் 200,000 பேர் தங்கியுள்ள. இந்தியாவின் தலைநகருக்கான அரை டஜன் நுழைவாயில்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு பிற்பகல் இறுதியில் விவசாயிகள் திரும்பினார்கள்.

நேற்றைய சம்பவங்களால் ஆட்டங்கண்டிருந்த அரசாங்கம், ஏராளமான கூடுதல் பாதுகாப்பு படைகளை டெல்லிக்கு அனுப்புவதற்கும், மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் வந்த ஹரியான மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களை “உயர் எச்சரிக்கை”யின் கீழ் வைப்பதற்கும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

பெருநிறுவன ஊடகங்களின் ஆதரவோடு, பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தீவிர வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கமும் இந்தியாவின் தலைநகருக்கு விவசாயிகள் வெறிகொண்டு ஓடுவதாகவும், அராஜகத்தை கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். “தலைநகர் அராஜகம்: விவசாயிகளின் இயக்கம் மோசமாக மதிப்பிழந்து அமைதியான போராட்ட பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள்” என்று டைம்ஸ் ஆப் இந்தியா தனது தலையங்கத்தில் குமுறியிருக்கிறது.

நேற்றைய டிராக்டர் பேரணியை உச்சநீதிமன்றம் மூலம் தடை செய்வதற்கு அரசாங்கம் முயன்றது. மோடியின் ஒவ்வொரு சர்வாதிகார நடவடிக்கை மற்றும் வகுப்புவாத சீற்றத்திற்கான இரப்பர் முத்திரையாக செயல்ப்பட்டு வந்த நீதிமன்றம் அதற்கு பதிலாக பேரணியில் கடுமையான "பாதுகாப்பு" நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு டெல்லி காவல்துறைக்கு கூறியுள்ளது.

இந்தியாவின் ஜனவரி 26 குடியரசு தின விடுமுறையைக் குறிக்கும் உத்தியோகபூர்வ கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின்னரே நேற்றைய டிராக்டர் அணிவகுப்பு தொடங்க வேண்டும் என்ற டெல்லி காவல்துறையின் கோரிக்கைக்கு உழவர் சங்கங்கள் ஒத்துழைப்பை நல்குவதற்கான ஆவலுடன் தலைவணங்கின. நகரத்திற்குள் நுழையும் டிராக்டர்களின் எண்ணிக்கையை வெறும் 5,000 ஆகக் கட்டுப்படுத்துவதற்கும் மேலும் விவசாயிகளை நகரின் மையப்பகுதியிலிருந்து வெகு தொலைவில் தங்க வைக்க வடிவமைக்கப்பட்ட மூன்று காவல்துறையால் நியமிக்கப்பட்ட பாதைகளில் ஆர்ப்பாட்டத்தை எல்லைக்குட்படுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இருப்பினும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்தனர். பொலிஸ் - விவசாய சங்கம் தொடக்க நேரத்தை நிர்ணயிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், விவசாயிகளில் சிலர் கால்நடையாகவும், மற்றவர்கள் பெரும்பாலும் இந்திய மற்றும் விவசாய சங்கக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் சவாரி செய்துகொண்டு தலைநகருக்கு புறப்பட்டனர். காவல்துறையினர் வன்முறையுடன் பதிலளித்தனர். ஆனால் உணர்ச்சியுடன் பொங்கிவரும் கூட்டத்தைப் பார்த்து அவர்கள் மலைத்துப்போனதைப்போன்று காட்சியளித்தது. காவல்துறையினரால் நியமிக்கப்பட்ட மூன்று பேரணி வழித்தடங்களில் விவசாயிகளை நிறுத்துவதற்காக காவல்துறை அமைத்திருந்த தடுப்புகளை ஒதுக்கித்தள்ள டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

ஊடகங்களுடன் பேசிய விவசாயிகள், இந்தியாவின் அரசியலமைப்பின் வலிமையைக் குறிக்கும் விடுமுறை நாளில் இந்தியாவின் தலைநகரில் சுதந்திரமாக அணிவகுத்துச் செல்ல முடியாமல் அவர்கள் கோபமுடன் இருப்பதாக கூறினர். “டெல்லி என்பது அமைச்சர்களுக்கு மட்டுமானதல்ல இது எங்களுக்கான தலைநகரமும் கூட” என்று பஞ்சாப் இன் பாட்டியாலா மாவட்டத்திலிருந்து வந்த தர்மேந்திர் சீங் Scroll.in செய்தி வலைத்தளத்திற்கு கூறியுள்ளார். “அவர்கள் எங்களை எல்லையில் இரண்டு மாதங்களாக் வைத்திருக்கிறார்கள். அது நல்லதல்ல. நாங்கள் ஒரு ஜனநாயகத்தில் இருக்கிறோம். தலைநகரில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.”

முக்கியத்துவம்வாய்ந்த அடையாளத்தின் நடவடிக்கையாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு விவசாயிகள் குழுவொன்று இந்தியாவின் பிரதமர் ஆண்டுக்கான சுதந்திர தின உரையை ஆற்றும் இடமான முகலாயர் காலத்து செங்கோட்டையை அடைந்து அதன் உச்சியில் சங்கத்தின் கொடியை நாட்டியது

கடந்த இரண்டு மாதங்களாக சீரற்ற காலநிலையினால் அவதியுற்றிருந்து விவசாயிகள், அவர்களுடைய கிளர்ச்சி சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளால் ஆதரிக்கப்படுகின்றது என்றும் சீக்கிய பிரிவினைவாதிகளால் கையாளப்படுகிறது என்றும் கூறி அதனை நசுக்குவதற்கு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது மேலும் அரசாங்கத்தின் மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லவையாக இருக்கின்றன என்ற கூறி மோடியும் அவரது கூட்டாளிகளும் திரும்ப திரும்ப கூறிவருகின்றனர்.

உண்மையில், மோடியின் “வேளாண் சீர்திருத்தம்” நீண்டகாலமாக உள்ளூர் மற்றும் பூகோள மூலதனம் கோரிக்கை விடுக்கும் முதலீட்டாளர் சார்பு பெருமளவு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்கிறது. இது செப்டம்பரில் பாராளுமன்றத்தினூடாக அவசரமாக கொண்டுவரப்பட்டது அதே பாராளுமன்றத்தின் குறுகிய குளிர்காலக் கூட்டத்தொடரில் அதிக வேலைநிறுத்தங்களை சட்டத்திற்கு புறம்பானதாகவும், நிலையற்ற ஒப்பந்த தொழிலாளர் வேலைகளை கூடுதலாக விரிவுபடுத்தவும் மேலும் தொழிலாளர்களை பெரும் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வேலைநீக்கம் செய்யும் அதிகாரத்தை அளிக்கும்படியாக இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களையும் திருத்தியுள்ளது.

இரண்டு ஹெக்டர்கள் (சுமார் ஐந்து ஏக்கர்கள்) அல்லது அதற்கு குறைவான நிலங்களை வாழ்வாதரத்திற்காக வைத்து வாழும் இந்தியாவின் பெரும்பாலான விவசாயிகளை இந்த வேளாண் சட்டங்கள் வேளாண் வணிகத்தின் தயவில் வாழும்படியாக மாற்றும்.

“சமூக விரோத சக்திகள்” இதனை நடத்தியிருப்பதாக கூறி விவசாய சங்கத்தின் தலைவர்கள் நேற்றுநடந்த வன்முறையை விரைவாக கண்டனம் செய்துள்ளனர். 40 பல்வேறு விவசாயிகளின் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்புக் குழுவான ஐக்கிய விவசாயிகள் முன்னணி (Samyukta Kisan Morcha) அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது, “எங்கள் எல்லா முயற்சிகளும் இருந்தபோதிலும், சில அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வழியை மீறியிருக்கிறார்கள் மேலும் கண்டிக்கத்தக்க செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள அமைதியான இயக்கத்திற்குள் சமூகவிரோத சக்திகள் ஊடுருவியிருக்கிறார்கள்.”

சிறந்த விவசாயிகளின் தலைமையில், விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டங்கள் “அரசியல் சாராதது” என்று, விவசாய சங்கங்கங்கள் முழுவதும் வலியுறுத்தியிருக்கின்றன அதாவது மோடி அரசாங்கத்திற்கு சவால் விடுவதல்ல. இந்தியாவின் பெரும்பான்மையான கிராமப்புற மக்களை உள்ளடக்கியிருக்கும் நிலமற்ற மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய அவர்கள் எந்த கோரிக்கைகளையும் எழுப்பவில்லை.

இருப்பினும் விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டம் வறிய விளிம்புநிலை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது. விவசாயிகளைத் தாக்குவதில், மோடியும் அவரது அரசாங்கமும் பெருவணிகத்திற்காக சேவை செய்கிறார்கள் என்பது அறியப்பட்டுள்ளது.

ஸ்ராலினிச பாரளுமன்ற கட்சிகள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சிபிஐ) உட்பட எதிர்கட்சிகள் எல்லாம் ஊடகங்கள் மற்றும் அரசாங்கத்தின் “வன்முறை” கண்டனங்களையே எதிரொலித்திருக்கின்றன. “வன்முறை எந்த வடிவத்திலும் பதில் இல்லை மற்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சிபிஎம் இன் பொதுச் செயலாளர் சித்தாரம் யெச்சூரி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய சம்பவங்கள் குறித்து அரசியல் அமைப்பு மற்றும் பெருநிறுவன ஊடகங்களுக்குள் ஏற்பட்டுள்ள கோபம் இந்தியாவின் மோசமான முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் பித்தலாட்டத்தையும் அச்சத்தையும் எடுத்துக்காட்டுகிறது – ஏனென்றால் அரசு வன்முறைகள் பற்றி எதுவும் கூறப்படவில்லை- ஆரம்பத்தில் இருந்தே பாரிய கைதுகள், வன்முறை மற்றும் இதன் கீழ் நான்குக்கும் மேற்பட்ட நபர்களின் அனைத்து கூட்டங்களையும் தடைசெய்யும் குற்றவியல் சட்டம் பிரிவு 144 ஐ திணிக்கப்பட்டன, அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை நசுக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.

சொல்லமுடியாத தேவை மற்றும் விரும்பத்தகாத நிலைக்குள் நாட்டிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களை தள்ளியுள்ள இந்திய முதலாளித்துவம் ஒவ்வொரு நாளும் அவர்களை வன்முறை கொண்டு எதிர்கொள்கிறது. இந்தியாவின் பெரும் செல்வந்த தட்டுக்கள் முதலாளித்துவ வளர்ச்சியை கொண்டாடும் அதேவேளை, உலகளவில் பசி குறீயீட்டின்படி கிட்டத்தட்ட 38 சதவீத குழந்தைகள் வளர்ச்சியடைவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் 10 இந்திய குழந்தைகளில் 9 பேருக்கு ஒரு சத்துணவு கிடைப்பதில்லை.

கோவிட்-19க்கு அவர்களின் அழிவுகரமான பதிலின் விளைவாக, 150,000க்கும் அதிகமான மக்கள் - அதாவது நிச்சயமாக மொத்தமாக குறைத்து மதிப்பிடப்பட்டவர்கள் - அதிகாரபூர்வமாக இறந்துவிட்டார்கள் மேலும் நூறு மில்லியன்கணக்கானவர்கள் அவர்களுடைய குறைந்த வருமானத்தையும் இழந்துவிட்டார்கள். இதே சமயத்தில், இந்தியாவின் கோடீஸ்வரர்கள் அவர்களுடைய செல்வம் 35 சதவீதமாக அதிகரித்திருப்பதை கண்டுள்ளார்கள். இதற்கு முன்பே, இந்தியாவின் 1 சதவீதத்தின் செல்வம் நாட்டின் அடிநிலையிலிருக்கும் 70 சதவீதத்தினர் அதாவது 950 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொண்டிருக்கும் வளங்களைவிட நான்கு மடங்கு அதிகமாக இருந்துள்ளது.

விவசாயிகளின் கிளர்ச்சி என்பது மோடி அரசாங்கத்திற்கும், பாஜக மற்றும் மூன்று தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சி முதல் ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ வரையிலான அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து பிரிவுகளும் கடந்த காலங்களில் பின்பற்றி வந்த சமூக ரீதியாக தீங்கு விளைவிக்கும் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளுக்கு எதிரான பெருமளவிலான மக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடாக இருக்கிறது. நவம்பர் 26 அன்று விவசாயிகளின் டெல்லி சலோ (டெல்லி செல்வோம்) கிளர்ச்சி போராட்டம் தொடங்கப்பட்ட அதே நாளன்று மோடி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் உந்துதல் மற்றும் தொழிலாளர் மற்றும் வேளாண் “சீர்திருத்த சட்டங்கள் போன்றவற்றை எதிர்ப்பதற்கு பத்து மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்ட ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டமும் நடந்தது. மேலும், நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி ஏராளமான சிறிய சிறிய வேலைநிறுத்தப் போராட்டங்கள் வெடித்துள்ளன; பெங்களூருவுக்கு அருகிலுள்ள டொயோட்டாவின் கார் பொருத்தும் ஆலையில் உற்பத்தி வேகத்தை அதிகரிக்கும்படி முதலாளி கோருவதற்கு எதிராக 3,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்திவருகின்றனர் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் கோரி சுகாதாரப் பணியாளர்களிடையேயும் போராட்டங்கள் நடக்கின்றன.

இதுதான் ஸ்ராலினிஸ்டுகளின் கொள்கைகளை மோசடியானதாக்குகிறது. சி.ஐ.டி.யு மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி ஆகியவை தொழிற்சங்க எந்திரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் கணிசமான செல்வாக்கை தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள். மோடிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் பிற வலதுசாரி எதிர்க்கட்சிகளுடன் இணைக்கவும் மற்றும் விவசாயிகளின் உறுதியான போராட்டத்தால் தூண்டப்பட்ட அரசியல் நெருக்கடியில் பாஜக அரசாங்கத்திற்கும் இந்திய முதலாளித்துவத்திற்கும் எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீன சக்தியாக தொழிலாள வர்க்கம் அதன் பின்னால் கிராமப்புற மக்களை அணிதிரட்டி தலையிடுவதைத் தடுக்கவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.

Loading