மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
2020 ஆம் ஆண்டு இறுதியை நெருங்குகையில், உலகளாவிய முதலாளித்துவ அமைப்பின் முக்கிய வர்க்க மற்றும் மற்றும் புறநிலை தர்க்கம் இதைவிட இன்னும் வெளிப்படையாக அம்பலப்படுத்தப்படவில்லை.
COVID-19 தொற்றுநோயின் தீவிரமடையும் தாக்கங்கள், மில்லியன் கணக்கான வேலைகள் அழித்தல், வறுமை, சில சந்தர்ப்பங்களில் பட்டினியின் அச்சுறுத்தல் மற்றும் முழு தலைமுறை இளைஞர்களுக்கும் சாத்தியமான எதிர்காலத்தை அழித்தல் ஆகியவற்றை உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்கின்றனர். ஆயினும்கூட ஆளும் நிதிய தன்னலக்குழு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இலாபமடைகிறது.
1930 களின் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சுருக்கத்தின் மத்தியில் இந்த ஆண்டு முடிவடைகிறது. ஆனால் உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளுக்கு தலைமைதாங்கும் வோல் ஸ்ட்ரீட் இந்த ஆண்டை ஒரு சாதனைமிக்க உயர்ச்சியுடன் முடிவிற்கு கொண்டுவருகிறது.
தொற்றுநோயின் பொருளாதார மற்றும் நிதி விளைவுகள் மார்ச் மாதத்தில் வெளிப்படத் தொடங்கியபோது வோல் ஸ்ட்ரீட்டும் உலகளாவிய சந்தைகளும் சரிந்தன. ஆனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் அரசாங்கம், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களுடன் சேர்ந்து, வரலாற்றில் நிதிய தன்னலக்குழுவின் மிகப் பெரிய பிணையெடுப்புக்கு ஒழுங்குசெய்து, 10 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை நிதிய அமைப்பினுள் செலுத்தின.
அமெரிக்காவில், மத்திய வங்கி வோல் ஸ்ட்ரீட்டிற்கு ஒரு உண்மையான வெற்று காசோலையை வழங்கி, இதனால் சமுதாயத்தின் செல்வம் அதன் மேல் மட்டத்தினருக்கு தடையின்றி தொடர்ந்து பாய்வதற்கு அனைத்து வகை நிதியசொத்துக்களையும் வாங்குவதற்கு தன்னை ஈடுபடுத்தி கொண்டது.
S&P 500 மார்ச் மாதம் வீழ்ச்சியடைந்த பின்னர் அது 66 விகிதத்தினால் அதிகரித்துள்ளது. இது நடந்தவற்றின் ஒரு பகுதி வெளிப்பாடு மட்டுமே. ஏனெனில் டஜன் கணக்கான நிறுவனங்களின் பங்குகள் மிக விரைவான விகிதத்தில் உயர்ந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை Tesla பங்குகள் 691 சதவீதம் உயர்ந்துள்ளன. எரிபொருள் மின்கல நிறுவனமான Power Plug பங்குகள் 1,000 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன, Zoom தொலைத்தொடர்பு நிறுவனம் 451 சதவீதம் உயர்ந்துள்ளது.
COVID-19 க்கான தடுப்பூசி வழங்கல்கள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் நடந்து வருகின்றன. இது வைரஸுக்கு எதிரான மருத்துவப் போராட்டத்தில் முக்கியமான முன்னேற்றங்களை அளிக்கும். ஆனால் அமெரிக்காவில் வினியோகிக்கப்படும் முறை ஏற்கனவே "குழப்பமிக்கதாக" உள்ளதாக விவரிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளின் உயர்வால் அதிர்ஷ்டம் உந்தப்படும் பில்லியனர்களின் ஒரு புதிய வர்க்கம் உருவாகி வருகிறது. தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றான மொடர்னாவின் பங்குகள் 532 சதவீதம் உயர்ந்துள்ளன.
அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் தங்களது பல டிரில்லியன் டாலர் பிணை எடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது, பொருளாதாரத்தை பாதுகாக்க அசாதாரண நடவடிக்கைகள் அவசியம் என்று அவர்கள் கூறினர். இந்த மோசடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் தன்னலக்குழுவின் ஒரே அக்கறை மக்கள் தொகையின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நல்வாழ்வு அல்ல, மாறாக நிதிச் சந்தைகளின் மீதான அக்கறையாகும்.
இதன் விளைவாக, தொற்றுநோயைக் கையாள்வதற்கு எந்தவொரு பயனுள்ள நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது அத்தியாவசியமற்ற வணிகங்களின் பூட்டுதல் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வருமானத்தை வழங்குவதோடு, திறந்திருக்கும் அத்தியாவசிய வணிகங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது.
மாறாக, பிணையெடுப்பு நடவடிக்கையின் தொடக்கமானது, “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்” என்று அழைக்கப்படும் கொள்கையை பகிரங்கமாக முன்னெடுப்பதின் மத்தியில், ஒரு கொலைகார பணிக்கு திரும்புதலுடன் இணைந்து வைரஸ் பரவுவதை உறுதிசெய்து, தொழிலாள வர்க்கத்தின் உழைப்பில் இருந்து உபரி மதிப்பை தடையின்றி வழங்குவதை உறுதிசெய்தது. இது நியூ யோர்க் டைம்ஸின் தோமஸ் பிரீட்மன் உருவாக்கிய “நோயை விட அதை மாற்றுவது மோசமாக இருக்க முடியாது” என்ற முழக்கத்தின் கீழ், பாரிய மரணத்தை இயல்பான ஒன்றாக்குவதற்கு வழிவகுத்தது.
நிதிச் சந்தைகளுக்கு பணம் வழங்குவதில் எவ்வித வரம்புகளும் இல்லை, ஆனால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மிகக் குறைந்த உதவி கூட அமெரிக்காவில் விவாதம் மற்றும் தாமதங்களுக்கு உட்பட்டது. மற்ற இடங்களில், வரையறுக்கப்பட்ட அவசர நடவடிக்கைகள் கூட இப்போது திரும்பப் பெறப்படுகின்றன.
நிறுவனங்களின் கடனுக்கான ஆதரவை வழங்க பெடரல் மற்றும் பிற மத்திய வங்கிகளால் வழங்கப்பட்ட பணம் முக்கிய வங்கிகளுக்கு ஒரு செல்வச் செழிப்பை வழங்கியுள்ளது. நிறுவனங்களின் கடனைக் பொறுப்பெடுப்பதற்கும், அவற்றிற்கான புதிய பங்குகளை அதிகரிப்பதற்கும் உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய வங்கிகள் 125 பில்லியன் டாலர் கட்டணத்தை பெற்றுள்ளன. ஏனெனில் புதிய பங்குகளின் மூலம் நிறுவனங்கள் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்கு பணத்தை திரட்ட முற்படுகின்றன.
இது அவசியமானதாக நிரூபிக்கப்பட்டால் மேலதிக உதவியுடன் காலடி எடுத்து வைக்க பெடரல் மற்றும் பிற மத்திய வங்கிகள் தயாராக உள்ளன என்பதை அறிந்துகொண்டதன் காரணமாக மட்டுமே இது "கடன் மற்றும் பங்கு இரண்டையும் மறுபரிசீலனை செய்வதற்கான மிகவும் வலுவான ஆண்டு" என்று விவரிக்கப்படுவதை சாத்தியமாக்கியது. இது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜேபி மோர்கனின் மூலோபாயக் குழு 2021 ஆம் ஆண்டில் மேலும் 5 டிரில்லியன் டாலர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறது.
வோல் ஸ்ட்ரீட்டின் தொடர்ச்சியான உயர்வை உறுதி செய்வதற்காக அதன் அதிகாரத்தில் எல்லாவற்றையும் செய்வேன் என்று பெடரல் அளித்த உத்தரவாதம், விளிம்புநிலை கடன் (Margin debt) என்று அழைக்கப்படுவதன் மூலம், ஊக வாணிபத்தின் ஒரு களியாட்டத்திற்கு வழிவகுத்தது. இதில் பணக்கார முதலீட்டாளர்கள் தங்களின் தற்போதைய இருப்பில் உள்ள பங்குகளை காட்டி அதிக பங்குகளை வாங்குவதற்காக கடன் வாங்குகிறார்கள்.
கடந்த மாதம் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டிலுள்ள பங்குகளை காட்டி 722.1 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளனர். இது முந்தைய மே 2018 இல் பதிவு செய்யப்பட்ட 668.9 பில்லியன் டாலர்களை முறியடித்தது. விளிம்புநிலை கடன் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்தால் முதலீட்டாளர் தமது பங்கை வாங்கிய தரகு நிறுவனத்திடமிருந்து ஒரு விளிம்புநிலை அழைப்பை சந்திக்க வேண்டும். ஒரு பரந்த விற்பனையைத் தூண்டும் ஆற்றலுடன், பணத்தை வழங்குவதன் மூலமாகவோ அல்லது வாங்கிய கடன்களுக்கு அடிப்படையாக இருந்த பங்குகளை விற்பதன் மூலமாகவோ கடன் திரும்ப கொடுக்கவேண்டும்.
இந்த சிறப்புக்கட்டத்தை பற்றி அறிவித்த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இது ஒரு "அச்சுறுத்தலானது" என்று எச்சரித்தது. ஏனெனில் விளிம்புநிலை கடன் பதிவுகள் 2000 மற்றும் 2008 பங்குச் சந்தை வீழ்ச்சிகளைத் தொடர்ந்து வந்தன. ஆனால் எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தபோதிலும் ஊகவாணிபங்கள் தொடர்கின்றன. ஏனெனில் மத்திய வங்கி தலையிட தயாராக உள்ளது என்ற நன்கு உறுதிப்படுத்தப்பட்ட நம்பிக்கை இருப்பதாலாகும்.
Guggenheim Partners இன் தலைமை உலகளாவிய முதலீட்டு அதிகாரி ஸ்காட் மினெர்ட், சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸிடம் கருத்து தெரிவித்தபோது, தொற்றுநோய் "தடையற்ற சந்தை" பொருளாதார அமைப்பு என்று அழைக்கப்படுவதை "முழுமையாக மறுசீரமைத்துள்ளது". இது அதனை அதற்கு பதிலாக "பெருகிய முறையில் தீவிர நாணயத் தலையீடு" மற்றும் "கடன் அபாயத்தை சமூகமயமாக்குதல்." என்ற சுழற்சிகளால் பிரதியீடு செய்துள்ளது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ அரசு நிதிய தன்னலக்குழுவால் சமூகத்தை கொள்ளையடிப்பதற்கான உத்தரவாதம் அளிக்கும் மற்றும் வசதியளிக்கும் ஒரு முன்னணியாகவும் மற்றும் மையமாக உருவெடுத்து அதன் நலன்களை அது பாதுகாக்கிறது. தற்போதைய சமூக ஒழுங்கு 1789 புரட்சிக்கு முன்னதாக பிரான்சின் பழைய அரசு போன்ற நிலையை விட சிறப்பானதாக இல்லை. அது தங்கியுள்ள பொருளாதாரத்தின் தீர்க்கமுடியாத முரண்பாடுகளில் வேரூன்றிய ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொண்டு, இயல்பாகவே தன்னை சீர்திருத்தம் செய்யமுடியாத ஆளும் உயரடுக்கு சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அகற்றப்பட வேண்டியிருந்தது.
அதேபோல், தற்போதைய நிலைமை ஒரு பாரிய வர்க்க மோதலுக்கான புறநிலை நிலைமைகளை உருவாக்கியுள்ளது. இதில் பிற்போக்குத்தனமான மற்றும் காலாவதியான முதலாளித்துவ ஒழுங்கை இல்லாது ஒழித்து ஒரு சோசலிச அமைப்புமுறையை நிறுவுவதற்கான பணி தொழிலாள வர்க்கத்தின் முன்வைக்கப்படுகின்றது. இதில் இலாபமும் பேராசையும் அல்லாது மனித தேவையே பொருளாதார ஒழுங்கமைப்பின் அடித்தளமாகின்றது.
ஆனால் மனித முன்னேற்றத்திற்கு அவசியமான அந்த விளைவு, இப்போது தம்முன்னால் வெடிக்கவுள்ள போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் ஒரு புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதற்கான தங்களுக்கு முன்னால் உள்ள சவால் தொடர்பாக தொழிலாளர்களும் மற்றும் இளைஞர்களும் எடுக்கும் முடிவிலேயை தங்கியுள்ளது.