மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வியாழக்கிழமை இரவு, உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் மற்றும் நவ-பாசிச மரின் லு பென் ஆகியோர் பிரான்ஸ் 2 டிவியில் ஒரு மணி நேர விவாதத்தை நடத்தினர். இது ஒரு மோசமான மற்றும் சீரழிந்த காட்சியாக இருந்தது. முஸ்லிம்களுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் எதிரான பாசிச நடவடிக்கைகளை மையமாகக் கொண்ட இதில், லு பென்னை டார்மனனிலிருந்து வேறுபடுத்துவது கடினம் என்று மதிப்பீட்டாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
கவனமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு முன்பு, பத்திரிகைகள் அடுத்த ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் சாத்தியமான வேட்பாளர்கள் குறித்த வாக்கெடுப்புகளை வெளியிட்டன. ஒரு IFOP கருத்துக் கணிப்பின்படி, பிரெஞ்சு மக்களில் 67 சதவீதம் பேர் மரைன் லு பென் மற்றும் இமானுவல் மக்ரோன் ஆகியோர் 2017 ஆம் ஆண்டைப் போலவே இரண்டாவது சுற்றில் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள், இது 2017 தேர்தல்களின் மறுபரிசீலனைக்கு தளம் அமைக்கிறது. மேலும், இத்தகைய தேர்தலில் 70 சதவீதம் பேர் அதிருப்தி அடைவார்கள். ஒரு Harris Interactive கருத்துக் கணிப்பின்படி, தற்போது மக்ரோன் 48 சதவிகித வாக்குகளைப் பெறும் லு பென்னை மிகக் குறுகிய சதவிகிதத்தில் மட்டுமே தோற்கடிக்கும் என்று கண்டறிந்துள்ளது.
இந்த விவாதம் 2022 தேர்தல்களை வடிவமைக்க பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் மேற்கொண்ட முயற்சியின் தன்மையைக் கொண்டிருந்தது. டார்மனன் மக்ரோனுக்காக நின்றார் — மக்ரோன் தனது பாரிய செல்வாக்கற்ற தன்மையையும் மீறி மீண்டும் போட்டியிடுவார் என அனுமானிக்ககூடியதாக உள்ளது. பிரான்சின் நன்கு அறியப்பட்ட நவ-பாசிசத்திற்கும் பிரெஞ்சு போலீசின் தலைவருக்கும் இடையிலான விவாதம், அடுத்த தேர்தல்களின் முன்னோட்டமாக எடுத்துக் கொள்ளப்படலாம் என்பது ஆளும் வர்க்கத்தின் தீவிர வலதுசாரி பரிணாமத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஐரோப்பாவின் 32 மில்லியன் கோவிட் -19 தொற்றுக்களில் 3.4 மில்லியனையும், மற்றும் முக்கால் மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளில் பிரான்ஸ் 81,000 ஐ கண்டிருந்தாலும் தொற்றுநோய் பற்றி ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. சிலநாட்களுக்கு முன்பு BFM-TV இல் ஜோன்-ஜாக் பூர்டனுக்கு அளித்த பேட்டியில், லு பென் பொதுமுடக்கத்தை எதிர்ப்பதை உறுதிப்படுத்தியிருந்தார். மாலியில் நடந்த போர் குறித்தோ அல்லது மக்ரோன் விதித்த சிக்கன நடவடிக்கைகளால் உருவாகும் சமூக சமத்துவமின்மையின் கொடூரமான நிலைகளைப் பற்றியோ ஒரு வார்த்தையும் கூறப்படவில்லை. இந்த தீவிர வலதுசாரிக் கொள்கைகளில், ஆளும் உயரடுக்கினரிடையே ஒருமித்த கருத்து உள்ளது.
அதற்கு பதிலாக, மதிப்பீட்டாளர்களான லெயா சலாமே, தோமஸ் சோட்டோ மற்றும் நத்தலி செயிண்ட்-கிரிக் ஆகியோர் "பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்தை ஆதரிக்கிறாரா என்று லு பென்னிடம் வற்புறுத்துவதன் மூலம் தொடங்கினர், இது அரசுக்கு விசுவாச உறுதிமொழிகளை சுமத்தவும், சங்கங்கள் அல்லது அரசியல் கட்சிகளை கலைக்கவும் அனுமதிக்கும். உள்துறை அமைச்சகத்தில் டார்மனன் அதிகாரத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு முஸ்லிம்களை குறிவைக்கும் நடவடிக்கையாக முன்வைக்கப்பட்ட இந்த மசோதா, இப்போது தேசிய சட்டமன்றத்தில் விவாதத்தில் உள்ளது.
இந்த பாசிச மசோதாவை விமர்சிக்க முயன்றபோது லு பென் திணறினார், அவர் இஸ்லாத்தை வெளிப்படையாக குறிவைக்காத ஒரு சட்டத்தால் தான் "ஏமாற்றமடைந்தேன்" என்று கூறினார். சட்டம் முஸ்லீம் சங்கங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் பிரதிபலிக்கும் ஆபத்துகளையும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். அவர் கூறினார்: "எங்களுக்கு ஒரு உயரிய, போர்க்குணம்கொண்ட சட்டம் தேவை, ஒரு நிர்வாக உரை அல்ல. நீங்கள் எல்லோருடைய சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துகிறீர்கள், ஆனால் நீங்கள் இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு எதிராகப் போராடவில்லை.”
அதற்கு பதிலளித்த டார்மனன், இஸ்லாமியம் மீது "மென்மையாக" இருப்பதாக லு பென்னை வலதுபுறத்தில் இருந்து தாக்கினார். "திருமதி. லு பென், நீங்கள் மென்மையாக செயல்படுகிறீர்கள், இஸ்லாம் ஒரு பிரச்சினை அல்ல என்று கூறும் அளவிற்கு நீங்கள் இதுவரை சென்றிருக்கிறீர்கள்," என்று அவர் கூறினார் - இது பிரான்சில் 3.5 மில்லியன் மக்கள் கடைப்பிடிக்கும் ஒரு மதத்தைப் பற்றிய திடுக்கிடும் மற்றும் மோசமான கூற்று. பின்னர் டார்மனன் மேலும் கூறினார்: “திருமதி. லு பென், தனது கட்சியை மென்மையானதாக்க (de-demonize) முயற்சித்துக்கொண்டு, மென்மையுடன் செயல்படுவதாக கூற வந்துள்ளார். நீங்கள் வைட்டமின்களை எடுத்துக் கொள்ள வேண்டும், நீங்கள் போதுமான அளவு உறுதியாக இல்லை என்பதை நான் காண்கிறேன்!”
குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் மக்ரோன் நிர்வாகம் வெற்றிகரமாக உள்ளதா என்ற விவாதம் நடைபெற்றது. லு பென் "முதிர்ச்சியடைந்தவரா" அல்லது "ஜனாதிபதியாக" ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு போதுமானவரா என்பதையும் மதிப்பீட்டாளர்கள் ஊகித்தனர், மேலும் லு பென் மிகவும் தயாராக இல்லை என்று டார்மனன் பலமுறை வலியுறுத்தினார்.
தற்போது புத்தகக் கடைகளில் கிடைக்கக்கூடிய டார்மனனின் புத்தகமான இஸ்லாமிய பிரிவினைவாதம்: மதசார்பின்மைக்கான ஒரு விஞ்ஞாபனம், என்பதை லு பென் பாராட்டினார். “நான் இந்த புத்தகத்தில் கையெழுத்திட்டிருக்க முடியும். நீங்கள் இஸ்லாமியத்தை மிக தெளிவாக வரையறுக்கிறீர்கள்," என்றதோடு அவர் மேலும் கூறினார்: "ஆனால் சட்டத்தில் எஞ்சியிருப்பது என்ன? மிகக் குறைவு.” ஹெட்ஸ்கார்ஃப் அணிவதை பகிரங்கமாக தடை செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்தார். இது ஒரு முஸ்லீமாக இருப்பது கிட்டத்தட்ட சட்டவிரோதமானது.
ஒரு மதத்தை குறிவைப்பதாக வெளிப்படையாகக் கூறாதவரை, அரசு புர்கா அல்லது தலைக்கவசத்தை தடை செய்ய முடியும் என்ற கண்கவர் வாதத்தை டார்மனன் செய்தார். "மதச்சார்பின்மை துல்லியமாக அவர்களை அங்கீகரிக்கவில்லை," என்று அவர் கூறினார். 1905 மதச்சார்பின்மைச் சட்டத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார்: “இது கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அது கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான சட்டம் என்று அழைக்கப்படவில்லை. இது தேவாலயத்தையும் அரசையும் பிரிக்கும் சட்டம் என்று அழைக்கப்படுகிறது.”
இது, பிரெஞ்சு சட்டம் பற்றிய ஒரு மோசடி. மதசார்பின்மையின் கொள்கை மத விஷயங்களில் அரசின் நடுநிலைமையை கட்டாயப்படுத்துகிறது மற்றும் ஒரு மதத்தை நிறுவுவதிலிருந்தோ அல்லது ஊக்குவிப்பதிலிருந்தோ அரசைத் தடுக்கிறது. இது ஒரு மதத்தையோ அல்லது அதன் உறுப்பினர்களையோ குறிவைக்க அரசை அனுமதிக்காது. இது 1905 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பிரான்சில் பெரும் செல்வாக்கை செலுத்துகிறது. 1905 சட்டத்தை கத்தோலிக்க மதத்திற்கு எதிரான தாக்குதல் என்று டார்மனன் வகைப்படுத்தியது, அவரது சொந்த வலதுசாரி கருத்துக்களை பிரதிபலிக்கிறது.
டார்மனன், 1905 மதச்சார்பின்மைச் சட்டத்தை எதிர்த்த மற்றும் நாஜி-ஒத்துழைப்பு விச்சி ஆட்சியை ஆதரித்த பாசிச, முடியாட்சிக் குழுவான Action française இன் முன்னாள் அனுதாபியும் எழுத்தாளரும் என கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது. 1955 ஆம் ஆண்டில் மீண்டும் நிறுவப்பட்ட, Action française அதன் அசல் பெயருக்கு 2010 இல் மாற்றப்பட்டது. மத விவகாரங்கள் குறித்த சட்டம் ஒரு Action française அனுதாபியின் அதிகாரத்தின் கீழ் மீண்டும் எழுதப்படுகிறது என்பது உத்தியோகபூர்வ அரசியலின் தீவிர வலதுசாரி திருப்பத்திற்கு மற்றொரு எச்சரிக்கையாகும்.
2017 தேர்தலின் இரண்டாவது சுற்றில் மக்ரோனும் லு பென்னும் வேட்பாளர்களாக வெளிவந்தபோது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES) ஒரு தீவிர புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தது. நவ-பாசிசத்திற்கு மக்ரோன் மாற்று இல்லை என்று அது எச்சரித்தது. எவ்வாறாயினும், அதனது எச்சரிக்கை ஒரு வாக்களிக்கா நிலைப்பாட்டுடன் பொதுவான எதையும் கொண்டிருக்கவில்லை. எந்தவொரு பிற்போக்கு வேட்பாளர் வெற்றிபெற்றாலும் தொழிலாள வர்க்கத்திற்குள் அரசியல் ரீதியாக சுயாதீனமான இயக்கத்தை உருவாக்குவதே முன்னோக்கிய ஒரே வழி என அது வலியுறுத்தியது.
ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த மதிப்பீடு முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டு, பிரான்சின் நாஜி-ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தானை ஒரு “சிறந்த சிப்பாய்” என்று பாராட்டிய மக்ரோன், ஒரு பாசிச போக்கைப் பின்பற்றி வருகிறார். தொழிலாளர் சட்ட சீர்திருத்தம், இரயில்வே துறை பகுதியளவு தனியார்மயமாக்கல் மற்றும் ஓய்வூதிய சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரே சமூக தளமாக, அவர் பொலிஸ் படைகளை முழுவதுமாக நம்பியிருந்தார்.
தொற்றுநோய் குறித்த ஆளும் உயரடுக்கின் கொலைகார “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை, சர்வதேச அளவில் பாசிசத்தை நோக்கிய திருப்பத்தை பெரிதும் துரிதப்படுத்தியுள்ளது. வாஷிங்டனில், ஜனவரி 6 ம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2020 ஜனாதிபதித் தேர்தலில் தனது தோல்வியைத் தகர்த்தெறியும் முயற்சியாக, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தூண்டினார். பிரான்சில், மக்ரோன் "பிரிவினைவாத-எதிர்ப்பு" (anti-separatist) சட்டத்திற்கு மேலதிகமாக, ஒரு "பொது பாதுகாப்புச் சட்டத்தை" (global security law) நிறைவேற்ற முயற்சிக்கிறார். அது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிப்பதோடு, காவல்துறையினரை படம் பிடிப்பதையும் தடை செய்கிறது.
2017 இல் மக்ரோனை ஆதரித்த வசதி மிக்க நடுத்தர வர்க்கத்தின் போலி இடது கட்சிகள், வெளிப்படையாகவோ அல்லது தந்திரோபாய ரீதியாகவோ இதற்கு உடந்தையாக இருக்கின்றன. “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்” என்ற கொள்கையை அமல்படுத்துவதில் அனைவரும் பங்களிப்பு செய்துள்ளனர், தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவதையும், குழந்தைகள் பள்ளிக்கு திரும்புவதையும் மேற்பார்வையிடுகிறார்கள், இது பிரான்சில் மட்டும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற வைரஸின் மீள் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது. பிரெஞ்சு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சி ஆகியவை கடந்த வாரம் "பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்தின் பிற்போக்கு விதிகள் மீதான வாக்குகளுக்கு ஆதவு தெரிவிப்பதன் மூலமோ அல்லது நடுநிமைவகிப்பதன் மூலமோ தாங்கள் அரசியல் உடந்தையாக இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டின.
பசுமைக் கட்சியின் முன்னாள் தலைவரான Cécile Dufl, மக்ரோனின் பாசிசக் கொள்கை குறித்து எச்சரிக்கையில் இந்த சூழலில் நடைமுறையில் தனியாக இருந்தார். "வரலாற்று ரீதியாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் தருணங்களில் மிகவும் கண்மூடித்தனமாக இருந்தனர்: இது முதலாம் உலகப் போரின்போது, நாஜிசம் ஆட்சியைப் பிடித்தபோது அல்லது முசோலினிக்கு முந்தைய இத்தாலியில் உண்மையாக இருந்தது" என்று Duflot Le Monde இல் எழுதினார்.
அவர் மேலும் கூறியதாவது: “பிரான்ஸ் எளிதில் ஒரு அரை சர்வாதிகாரமாக மாற முடியும் என்பதை ஜனநாயகவாதிகள் உணரவில்லை. ... பிரிவினைவாதம் தொடர்பான மசோதா, சிவில் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான வரம்புகளைக் கொண்டுள்ளது. அவசரகால நிலை மற்றும் பொதுச் சட்டங்கள் குறித்த அந்த நடவடிக்கைகளைச் சேர்த்து, [லு பென்] அதிகாரம் பெற்றால் சில நாட்களில் ஏற்படக்கூடிய பேரழிவை நீங்கள் கற்பனை செய்ய அனுமதிக்கிறேன்.”
உண்மையில், பிரான்ஸ் மக்ரோனின் கீழ் ஒரு அரை சர்வாதிகாரமாக மாறியுள்ளது. அடுத்த ஆண்டு ஒரு நவ-பாசிச வெற்றி பற்றிய இப்போது முற்றிலும் நம்பத்தகுந்த சூழ்நிலை தவிர்க்கப்பட்டாலும், மக்ரோனின் கீழ் அல்லது அவரது கூட்டாளிகளில் ஒருவரின் கீழ் அது இன்னும் ஒரு பாசிச ஆட்சியாக மாறக்கூடும்.
மக்ரோனின் பாசிசவகை சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் தேவைப்படுகிறது. “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளை ஆதரிக்கும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்பட்ட கொள்கையை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய மட்டத்தில் ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தயாரிப்பது மட்டுமே தொற்றுநோயைத் தடுக்க முடியும். அத்தகைய இயக்கம் அரச அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதற்காக ஒரு வெகுஜன சோசலிச அரசியல் இயக்கத்தை வளர்ப்பதற்கான கேள்வியை எழுப்புகிறது.
மேலும் படிக்க
- பிரெஞ்சு இஸ்லாமிய சபைக்கு "கோட்பாடுகளின் சாசனம்" மூலம் மக்ரோன் கட்டளையிடுகிறார்
- நவ-நாஜி ஆயுத வலையமைப்புக்கள் ஐரோப்பா முழுவதும் பரவுகின்றன
- மக்ரோனின் அரசாங்க ஆலோசகர் நவபாசிச மரியோன் மரேஷால் லு பென் ஐ சந்திக்கிறார்
- பிரெஞ்சு மக்களின் அரசியல் கருத்துக்களை போலீஸ் ஆவணப்படுத்துவதற்கு மக்ரோன் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கிறது
- முஸ்லீம் விரோத ஒடுக்குமுறை தொடர்ந்து வரும் நிலையில், பெருமளவில் மசூதிகளை மூடுவதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவிக்கிறது
- பிரதான முஸ்லிம் உரிமைகளுக்கான குழுவை கலைப்பதற்கு பிரெஞ்சு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது
- பாரிசில் பிரெஞ்சு போலீஸ் இசை தயாரிப்பாளரை கொடூரமாக தாக்குதல் நடத்தியது படம்பிடிக்கப்பட்டது