இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கவிஞர் அஹ்னப் ஜஸீமை இலங்கை அரசாங்கம் கைது செய்து தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து, கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் நடவடிக்கை குழு, அவரை உடனடியாகவும் நிபந்தனை இன்றியும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றது.
கடந்த ஆண்டு மே 16 அன்று, பயங்கரவாத புலனாய்வு பிரிவு (TID), கொடூரமான பயங்கரவாத தடைச சட்ட விதிகளின் கீழ், “மாணவர்களுக்கு இனவெறி மற்றும் தீவிரவாதத்தை கற்பித்தல் மற்றும் அது தொடர்புடைய புத்தகங்களை வெளியிடுதல்” என்ற போலி குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்த கவிஞரை கைது செய்தது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம் 2017 மே மாதம் அஹ்னப் எழுதிய நவரசம் என்ற கவிதைத் தொகுப்பாகும்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் போலி குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, இந்த புத்தகமானது சமாதானம், சமூக ஒற்றுமை மற்றும் இனவாதத்துக்கு எதிர்ப்பை ஊக்குவிக்கின்ற, அகதிகளுக்கு அனுதாபம் தெரிவிக்கின்ற, மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை கண்டிப்பதோடு அதற்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவிக்கின்ற ஒரு கவிதை தொகுப்பாகும். உருவாக்கு என்ற ஒரு கவிதை, ஆயுத வன்முறையில் அதிருப்தியை வெளிப்படுத்துவதோடு, சொற்களும் எழுத்துமே ஆயுதங்களாக இருக்க வேண்டும், என கூறுகிறது. அதாவது, பேனா வாளை விட சக்தி வாய்ந்தது என்று அது அறிவுறுத்துகிறது.
இந்த புத்தகத்தை எந்த நீதிமன்றமும் தடை செய்திருக்காத நிலையில், அவர் வாசிப்பதற்காக வைத்திருந்த தமிழ், அரபு மற்றும் ஆங்கில மொழிகளிலான 49 புத்தகங்கள் உட்பட நவரசம் நூலின் சுமார் 100 பிரதிகளும் அஹ்னப்பின் புத்தக அலுமாரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவற்றில் நிரம்பி வழியும் நிசப்தம் என்ற தலைப்பிலான கவிதை தொகுப்பும் இருந்தது.
அஹ்னப்பை எதேச்சதிகாரமாகவும் சட்டவிரோதமாகவும் கைது செய்வதானது இந்த கவிஞரின் கருத்து சுதந்திரம் மற்றும் கலை சுதந்திரத்தை வெட்கக்கேடான முறையில் மீறுவதாக இருப்பதோடு இது தீவின் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான சமீபத்திய குறிப்பிடத்தக்க தாக்குதல்களில் ஒன்றாகும். மக்களை அச்சுறுத்துவதையும், தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அரச அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் முஸ்லீம்-விரோத இனவெறி பிரச்சாரத்தின் மத்தியில், இந்த முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களில் கவிஞரும் ஒருவராவார்.
25 வயதான முஸ்லீம் இளைஞரான அஹ்னப், ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவராவார். அவரது சகோதரர்கள் அனைவரும் இன்னமும் கல்வி கற்கின்றார்கள். 2019 ஜூலையில், மன்னார் நகரிலிருந்து 134 கிலோமீட்டர் தெற்கே உள்ள புத்தளத்தில் உள்ள ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ் பாடசாலையில் மொழி மற்றும் இலக்கியம் கற்பிக்கவும் தமிழ் மொழியில் மேலதிக வகுப்புகளை நடத்தவும் அவர் ஆரம்பித்திருந்தார். அதற்கு முன்னர் அவரது குடும்பத்தை பராமரித்தவர், விவசாயியும் தினசரி தொழிலாளியுமான அஹ்னப்பின் தந்தை ஆவார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புடைய முஸ்லீம் அதிதீவிரவாதக் குழு, 2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதில் 269 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய குழுவுக்கும், இந்த பாடசாலை அமைந்திருந்த சேவ் த பேர்ல்ஸ் அறக்கட்டளை நிறுவனத்துக்கும் தொடர்பை முடிந்துவிட முயற்சிக்கும் குற்றப் புலனாய்வுத் துறை, முஸ்லீம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதில் இந்த நிறுவனத்துக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்துகிறது. குண்டுத் தாக்குதல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சேவ் த பேர்ல்ஸ் இணைப்பாளரான மனித உரிமை வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹிஸ்புல்லா உட்பட பல கைதிகள் தொடர்பாக, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் பொலிஸ் விளக்கம் கொடுக்கும் போதே, அஹ்னப் கைது செய்யப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த தாக்குதல்கள் குறித்து, அப்போதைய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய பிரதமருமான மஹிந்த இராஜபக்ஷவுக்கும், பல உளவுத்துறை முகமைகளிடம் இருந்து எச்சரிக்கைகள் கிடைத்திருந்த போதிலும், அவர்கள், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு கொடூரமான இனவெறி பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்வதன் பேரில், வேண்டுமென்றே அந்த குண்டுத் தாக்குதல்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். டிசம்பர் நடுப்பகுதியில் பினான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகும் வரை, பிரதான ஊடகங்கள் அனைத்தும், கைது செய்யும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு மௌனக் கொள்கையை பின்பற்றின.
கைது செய்யப்பட்டு முப்பத்தாறு வாரங்களுக்குப் பிறகும், அஹ்னப் ஒரு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமலும் எந்தவொரு குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்காமலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் ரி.ஐ.டி.யின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கையெழுத்திடுவதற்கான சரியான அரசியலமைப்பு அதிகாரமும் இன்றி, ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவே கையெழுத்திட்டுள்ள முதல் தடுப்புக்காவல் உத்தரவில், கவிஞர், “முஸ்லீம் தீவிரவாதத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருத்தல், சமூக் குழுக்களின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் அத்தகைய தகவல்களை பாதுகாப்புப் படையினரிடமிருந்து தெரிந்தே மறைத்து வைந்திருத்தல் மூலம், ’சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அல்லது அத்தகைய செயல்களில் ஆர்வம் காட்டியதாக’ சந்தேகிக்கப்படுவதாக” கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்கள் ஆகும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் போது, ஒரு நபரை பதினெட்டு மாதங்கள் வரை பொலிஸ் காவலில் வைக்க முடியும். இதன் போது எந்தவொரு பிணை விண்ணப்பமும் செய்ய முடியாது. சந்தேக நபர்களை சித்திரவதை செய்வதற்கும் அவர்களிடமிருந்து பலாத்காரமாக ஒப்புதல் வாக்குமூலங்களை பறிப்பதற்கும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்துவதில் இலங்கை பொலிஸ் பேர்போனதாகும். இந்த விதிகளின் கீழ், சந்தேக நபரின் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தின் முன் ஆதாரமாக பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் 30 ஆண்டுகால இனவாத போரின் போது இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்படும் குற்றங்கள், அத்தகைய பரந்த, பாரதூரமான விளைவுகளைக் கொண்ட மற்றும் வரையறுக்கப்படாத இயல்புடையவை ஆகும். “சொன்னார் அல்லது சொல்லமுனைந்தார் என நினைக்கும், அறிகுறிகள் மூலம், அல்லது, காட்சி வடிவங்கள் மூலம், வேறு எந்த வகையிலேனுமான வன்முறை நடவடிக்கை அல்லது மத, இன அல்லது இனங்களுக்கு மத்தியில் பிளவுபடுத்துகின்ற, அல்லது வெவ்வேறு சமூகங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடு அல்லது விரோதப் போக்கைத் தூண்டும் அல்லது அவ்வாறு தூண்டும் நோக்கத்துடன் செயற்படுகின்ற” எந்தவொரு நபரையும், குறித்த சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் ஒரு குற்றத்திற்காக குற்றவாளியாக்க முடியும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த கவிஞருக்கு ஆயுள்தண்டனை அல்லது 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட முடியும்.
முன்னெப்போதும் இல்லாதளவு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி இராஜபக்ஷ, முதலாளித்துவ பெருவணிகத்தின் நலன்களுக்கு சேவை செய்து, பரந்த அளவில் இராணுவ அடிப்படையிலான ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க ஆரம்பத்தில் இருந்தே செயற்பட்டு வந்துள்ளார். அவரது அரசாங்கம் வெளிப்படையாக தொழிலாள வர்க்கத்துடன் ஒரு பொருளாதார யுத்தத்தை அறிவித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொவிட் -19 தொற்றுநோய் தீவைத் தாக்கியதில் இருந்தே, இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. கொவிட் 19 தொற்றுநோய் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு எந்த கட்டுப்பாடும் இருக்காததோடு, நாட்டை முழுவதுமாக மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து, பொருளாதாரத்தை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கே செயற்பட்டது. இது, ஏழைகள், முதியவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் அகால மரணத்திற்கு காரணமாக உள்ள ஒரு கொலைகார அரச கொள்கையாகும்.
இந்தப் பின்னணியில், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கு எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின் வேட்டையாடல், பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், முஸ்லிம்களுக்கு எதிராக அதிதீவிர வலதுசாரி சிங்கள-பௌத்த கும்பல்களின் ஆதரவுடன், கொடிய இனவெறி பிரச்சாரத்துக்கு மீண்டும் தொடக்கதை வழங்கிய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கையை, மிகவும் பரந்தளவில் முன்னெடுப்பதாகும்.
சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், கலைஞர்கள் மற்றும் பல பத்திரிகையாளர்களுக்கும் எதிராக, குற்றவியல் குற்றச்சாட்டுக்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதைத் தொடங்கி, சமூக ஊடகங்களைத் தடுத்தது, எதிர்ப்புக் காட்டுபவர்களுக்கு தாக்குதல் நடத்தி விமர்சகர்களை மௌனமாக்கியுள்ளது. ஈஸ்டர் தாக்குதல்களை அடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் சிறுகதை ஒன்றை வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்ட எழுத்தாளர் சக்திக சத்குமார, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ஐ.சி.சி.பி.ஆர்) விதிகளை மீறியதற்காக, நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் நாட்டிலும் சர்வதேச அளவிலும் முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த வாரம், எழுத்தாளருக்கு எதிரான குற்றவியல் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
யுத்தம் முடிவடைவதற்கு முன்னர், ஜனாதிபதியின் சகோதரர் மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ், முன்னணி பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதோடு பகிரங்கமாக பட்டப் பகலில் கொல்லப்பட்டதைப் போலவே, கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழும், தொற்று நோய் காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பகிரங்க மரண அச்சுறுத்தல்களுக்கும், வெளிப்படாத கைதுகளுக்கும் வழக்குகளுக்கும் இரையாக்கப்பட்டுள்ளனர்.
இனரீதியான துன்புறுத்தல்களை பாதுகாக்கும் ஒரு அரணாக செயற்படும் பிரதான தனியார் தொலைகாட்சி சேவைகளின் தொடர்ச்சியான ஆதரவுடன், ஒரு இன சமூகமாக முஸ்லிம்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு இலக்கு வைக்கப்பட்டனர். அரசாங்கத்தின் முஸ்லீம் விரோத பிரச்சாரத்திற்கு எதிராக, ஒரு “கருத்தியல் போராட்டத்தை” நடத்த வேண்டிய அவசியம் குறித்து எழுதியமைக்காக, சமூக ஊடக ஆர்வலரான ரம்ஸி ரசிக் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ், ஐந்து மாதங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இது ஒரு சர்வதேச நிகழ்வுப் போக்கு ஆகும். முன்னெப்போதும் இல்லாத அளவிலான சமூக சமத்துவமின்மை, மேலாதிக்கவாதத்தின் மீண்டும் தலை தூக்குதல், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதிதீவிர வலதுசாரி பாசிச சக்திகள் ஊக்குவிக்கப்படுவதன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடி, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரேஸில் முதல் இந்தியா வரை, ஏனைய பல நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றன.
அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகள், உலகளாவிய தொற்றுநோய் பரவும் நிலையில் மில்லியன் கணக்கான மரணங்களுக்கு காரணமான அந்த அரசாங்கங்களின் குற்றவியல் பொறுப்பற்ற பிரதிபலிப்புகளுக்கும் மற்றும் இராணுவ வாதத்துக்கும் மற்றும் ஏகாதிபத்திய போர் தயாரிப்புகளுக்கும் எதிராக, முன்னெப்போதும் இல்லாதவாறு போர்க்குணத்துடன் எழுச்சி பெற்றுள்ள தொழிலாள வர்க்கப் போராட்டங்களை நசுக்கித் தள்ளுவதே இந்த எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
கவிஞரை கைது செய்து தொடந்தும் தடுத்து வைத்திருப்பது, முதன்மையாக ஆளும் வர்க்கத்தின் அரசியல் முடிவு ஆகும். அதன்படி, கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பது உட்பட எந்தவொரு ஜனநாயக உரிமையும் பாதுகாப்பதானது, முதலும் முக்கியமுமாக ஒரு அரசியல் பணி ஆகும். ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் முன்வைத்துள்ள, சர்வதேச சோசலிசத்துக்கான முன்னோக்கின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் பரந்த அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே அஹ்னப்பை பாதுகாக்க முடியும்.
கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் முந்தைய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் மற்றும் தற்போதைய இராஜபக்ஷ ஆட்சியின் கீழும், அரசாங்க வேட்டையாடல்களுக்கு இரையாகுபவர்களை பாதுகாக்க கொள்கைப்பிடிப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் எதிரான அரச வேட்டையாடல்களுக்கு இரையாகியுள்ள, அஹ்னப் மற்றும் ஏனைய பலரைப் பாதுகாப்பதற்காக, தங்கள் பிரதேசங்களிலும், வேலைத்தளங்களிலும் மற்றும் தங்கள் சொந்த துறைகளிலும், சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைத்துக்கொண்டு, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், ஏனைய ஜனநாயக உரிமைகள் உட்பட கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுக்க முன்வருமாறு கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு, தீவில் வாழும் தொழிலாள வர்க்கத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள அதன் வர்க்கத் தோழர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.
* கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க ஒரு நடவடிக்கை குழுவை கட்டியெழுப்பு!
* பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர். உட்பட அனைத்து சகல அடக்குமுறை சட்டங்களை ஒழித்திடு!
* இனவாதம் மற்றும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காப் போராடு!
* சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடு!
* அஹ்னப்பை விடுதலை செய்!