மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செவ்வாய்க்கிழமை மினசோட்டாவின் மினியாபோலிஸின் புறநகர்ப் பகுதியான புரூக்ளின் மையத்தில் 20 வயது டோன்ர ரைட் (Daunte Wright) போலீஸ் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டங்களை விரிவுபடுத்திய மூன்றாவது இரவை குறித்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு போக்குவரத்து நிறுத்தத்தின் போது ரைட் கொல்லப்பட்டதும், திங்களன்று நியூ யோர்க் நகரத்திலிருந்து ஓரிகானின் போர்ட்லாண்ட் வரை போராட்டங்கள் தொடங்கி நாடு முழுவதும் பரவின.
ரைட் என்ற இளம் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டபோது நிராயுதபாணியாக இருந்தார். 26 வயதான மூத்த அதிகாரியும், புரூக்ளின் மத்திய நிலைய போலீஸ் சங்கத்தின் தலைவருமான கிம்பர்லி போட்டர் (Kimberly Potter) என்ற பெண் போலீசால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். போட்டர், ரைட்டின் மார்பில் ஒருதடவை சுட்டார். ரைட்டின் தாயாரான கேட்டி ரைட் தனது மகனின் உடல் பொலிஸால் தரையில் விடப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார். “யாரும் எங்களுக்கு எதுவும் கூறவில்லை. யாரும் எங்களுடன் பேசவில்லை ... தயவு செய்து என் மகனை தரையில் இருந்து தூக்கிச் செல்லுங்கள் என்று நான் கூறினேன்.”
கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு போக்குவரத்து நிறுத்தத்தின் போது வேர்ஜீனியாவில் காவல்துறை அதிகாரிகள் ஒரு கறுப்பின இராணுவ லெப்டினெண்ட்டை தாக்கிய ஒளிப்பதிவுக் காட்சி மற்றும் மார்ச் இறுதியில் சிகாகோ பொலிஸால் 13 வயது சிறுவனைக் கொன்றது போன்ற ஒளிப்பதிவுக் காட்சி வெளியானதை தொடர்ந்து பொலிஸ் வன்முறை குறித்த மக்கள் கோபம் மீண்டும் எழுந்துள்ளது. ஜோர்ஜ் ஃபுளோய்ட் 2020 மே 25 அன்று கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்டதற்காக முன்னாள் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரி டெரெக் சோவானின் விசாரணையின்போது இச்சம்பவம் வருகிறது. ஃபுளோய்ட்டின் கொலை, பார்வையாளர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது. அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் பாரிய பல்லின ஆர்ப்பாட்டங்களை தூண்டி, இனவெறி மற்றும் பொலிஸ் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்ககோரியது.
கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டங்களிலிருந்து மினியாபோலிஸ் பகுதியில் பதட்டங்கள் அதிகமாக உள்ளன. சோவானின் விசாரணை தொடர்பாக ஆளும் வர்க்கம் மிகவும் பதட்டமாக இருந்தது. சோவானின் விசாரணைக்கான தயாரிப்பில், மினியாபோலிஸ் நகரத்தில் உள்ள அரசாங்க மையம் வேலி அமைத்து, கான்கிரீட் தடைகள் மற்றும் மின்சார கம்பி ஆகியவற்றால் பலப்படுத்தப்பட்டது. தேசிய காவல்படை சோதனைச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு விரைவாக பதிலளிப்பதற்காக காத்திருக்கிறது.
ரைட்டின் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தின் அருகிலும், நகர காவல் நிலையத்திற்கு வெளியேயும் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலகத்தடுப்பு பிரிவு போலீசார் கண்ணீர்ப்புகை, மிளகு பந்துகள் மற்றும் இரப்பர் தோட்டாக்களால் தாக்கினர். காவல்துறையை ஆதரிக்க தேசிய காவல்படை துருப்புக்கள் விரைவாக அனுப்பப்பட்டன. திங்கள்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தின் போது 40 பேரை போலீசார் கைது செய்தனர். பலர் இரவு 7 மணி ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டனர். பரந்த இரட்டை நகர பகுதியில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
ரைட்டின் மார்பில் போட்டர் சுட்ட சூடு அவர் மின்சார அதிர்ச்சி கொடுக்கும் கருவிக்கு பதிலாக துப்பாக்கியை கையில் எடுத்ததால் "தற்செயலாக நிகழ்ந்தது" என்று ப்ரூக்ளின் மத்திய பொலிசார் விரைவாக அறிவித்தனர். உடல் வீடியோ கேமராவில் "நான் உனக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப் போகிறேன்" என்று போட்டர் அலறுவதை கேட்கலாம். இதன் பின்னர் "நான் அவரை சுட்டுவிட்டேன்” என்று கத்துவது கேட்கின்றது. செவ்வாயன்று படையில் இருந்து பதவி விலகுவதற்கு முன்பு போட்டர் ஊதியத்துடன் நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டார்.
படையில் நீண்ட அனுபவம் கொண்ட போட்டர், சூடு நடந்த நேரத்தில் ஒரு பயிற்சி அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதனால் அவர் ஒரு மின்சார அதிர்ச்சி கருவியை தனது துப்பாக்கி என தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. கலிபோர்னியாவின் ஓக்லாண்டில் 2009 ஆம் ஆண்டு ஆஸ்கார் கிராண்ட் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் முயற்சியில் "மின்சார அதிர்ச்சி கருவி குழப்பம்" என்ற இதே மாதிரியான ஒரு வாதத்தை போலீசார் முன்வைத்தனர்.
2012 முதல் புரூக்ளின் மத்திய நிலைய போலீசாரால் கொல்லப்பட்ட ஆறாவது நபர் ரைட் ஆவார். 2007 மற்றும் 2017 க்கு இடையில் ஏழு பொலிஸ் முறைகேடு வழக்குகளை தீர்ப்பதற்கு நகரம் 490,000 டாலர்களை செலுத்தியது. மினசோட்டா மாநிலத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் 207 போலீஸ் கொலைகளை பதிவு செய்துள்ளது. இது சராசரியாக கிட்டத்தட்ட மாதத்திற்கு ஒரு மரணமாகும். தேசிய அளவில், பொலிஸ் வன்முறை தொற்றுநோய் 2021 ஆம் ஆண்டில் அதன் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றது. அதாவது ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட மூன்று பேர் கொல்லப்படுகிறார்கள்.
இந்த முடிவில்லாத பொலிஸ் வன்முறை நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், ஆண்டுதோறும் ஜனநாயகக் கட்சியினர் அல்லது குடியரசுக் கட்சியினர் யார் ஆட்சியில் இருந்தாலும் நிகழ்துகொண்டிருக்கின்றது. பொலிஸ் வன்முறை என்பது தொழிலாள வர்க்கத்தின் உழைப்பை சமூகத்தின் உச்சியில் உள்ள ஒரு சிறுபான்மையினரின் நலனுக்காக சுரண்டும் சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பான முதலாளித்துவ அமைப்பின் ஒரு அடையாளமாகும்.
தொழிலாள வர்க்க சமூகங்கள் மற்றும் இளைஞர்களின் தினசரி மூர்க்கத்தனங்கள் ஒரு இனப்பிரச்சினையல்ல மாறாக ஒரு வர்க்கப் பிரச்சினையாகும். ரைட்டின் கொலை தொடர்பாக வெடித்த ஆர்ப்பாட்டங்கள் ஒரு வர்க்க இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும். அலபாமாவில் உள்ள Warrior Met Coal சுரங்கத் தொழிலாளர்கள், பென்சில்வேனியாவில் உள்ள ATI இல் எஃகுத் தொழிலாளர்கள் மற்றும் கொலம்பியா மற்றும் நியூ யோர்க் நகரில் உள்ள நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்கள் மத்தியில் சிறந்த ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான போராட்டங்கள் மூலம் ஏற்கனவே எதிர்ப்பின் வெளிப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
அதே நேரத்தில், பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பு, முதலாளித்துவ சுரண்டலுக்கான எதிர்ப்பின் வளர்ச்சியோடு பிணைக்கப்பட வேண்டும். காவல்துறையினர் தண்டனைக்குட்படுத்தப்படாது கொல்ல அனுமதிப்பதை தொழிலாளர்கள் பார்த்துக்கொண்டு நிற்கக்கூடாது. தனிநபர்களை துன்புறுத்தி கொலை செய்யும் இராணுவமயமாக்கப்பட்ட பொலிஸ் படைகள் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக திருப்பப்படும்.
மினசோட்டா வர்க்கப் போராட்டத்தின் ஒரு சக்திவாய்ந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, இதில் 1900 களின் முற்பகுதியில் இரும்புச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்கள் முதல் 1934 மினியாபோலிஸ் பொது வேலைநிறுத்தம் வரை, சோசலிச தொழிற்சங்க அமைப்பாளர்களின் தலைமையிலான தொழிலாளர்கள் வெற்றிகரமாக காவல்துறையினரையும் மற்றும் பெருநிறுவன குண்டர்களையும் எதிர்த்துப் போராடியபோதும், 1985 முதல் 1986 வரை Hormel தொழிலாளர்களின் கசப்பான போராட்டத்தின் போதும் காவல்துறையினருடன் கசப்பான அனுபவங்களை பெற்றுக்கொண்டனர். காவல்துறையும் தேசிய காவலர்படையும் வேலைநிறுத்தத்தை உடைப்பவர்களை பாதுகாத்து, தொழிலாளர்களை அடித்து கொலை செய்து எப்போதும் முதலாளிகளுடன் பக்கபலமாக இருக்கிறது.
அதிகரித்த இன வேறுபாடு, பொதுமக்கள் மேற்பார்வை மற்றும் உடல் கமராக்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஜனநாயகக் கட்சி மற்றும் கறுப்பினமக்களின் வாழ்க்கையும் மதிப்புமிக்கது (Black Lives Matter) என்ற அமைப்பு ஆகியவற்றின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், காவல்துறை தங்களை சீர்திருத்தத்திற்கு உட்படுத்தவில்லை என்பதை நிரூபித்துள்ளது. "போலீஸிற்கு குறைந்த நிதியளிப்பதற்கான" பிரபலமான கோரிக்கைகள் ஜனநாயகக் கட்சியினரால் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஜோ பைடென் தனது பதவியின் முதல் சில மாதங்களில் அதிக நிதி மற்றும் 33 மில்லியன் டாலர் இராணுவ உபகரணங்களை காவல்துறையினருக்கு வழங்குமாறு அழைப்பு விடுத்தார்.
கலிஃபோர்னியாவின் முன்னாள் "உயர் போலீஸ்காரர்" துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் திங்களன்று "எங்கள் தேசத்திற்கு நீதியும் குணமடைதலும் தேவை" என்று ட்வீட் செய்தாலும், போலீஸ் வன்முறையின் தொற்றுநோய் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் இருந்ததைப் போலவே தொடர்கிறது. வார்த்தையாடல்கள் மாறியிருக்கலாம், ஆனால் போலீஸ் வன்முறையின் ஆட்சி அப்படியே இருக்கிறது.
ரைட்டின் கொலை மீதான ஆர்ப்பாட்டங்கள் பொலிஸ் வன்முறை மற்றும் மக்கள் தினசரி மிருகத்தனத்திற்கு எதிரான உண்மையான சீற்றத்தை வெளிப்படுத்துகின்றன. 576,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்ற மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்த கோவிட்-19 தொற்றுநோயின் ஒரு வருடத்திற்குப் பின்னர் சமூகப் பதட்டங்கள் வெடித்தன. இதற்கிடையில், அமெரிக்க சமூகம் இன்னும் சமத்துவமற்றதாக வளர்ந்துள்ளது. பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை 4.1 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ள அதேநேரத்தில் மில்லியன் கணக்கானவர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டு, அற்ப நிதியுதவியில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் விடப்பட்டனர் அல்லது வைரஸ் பரவிவரும் தொழிற்சாலைகளுக்கும், கிட்டங்கிகளுக்கும் பாடசாலைகளுக்கும் வேலைக்குத் திரும்ப தள்ளப்பட்டனர்.
சமூக சமத்துவமின்மையின் இந்த அதிகரித்த வரலாற்று மட்டத்தைத்தான் காவல்துறையினர் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனநாயகக் கட்சியினர் மினசோட்டாவில் உள்ளதைப் போலவே, காவல்துறையை ஆதரிக்கும் போதும், ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறைகளை செயல்படுத்தும்போதும், போலீஸ் வன்முறை அடிப்படையில் ஒரு இனப் பிரச்சினையாகும் என்ற கட்டுக்கதையை கூறி முக்கியமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் பிளவுபடுத்த முற்படுகிறது.
போலீஸ் வன்முறை மீதான கடைசியான ஆர்ப்பாட்டங்களிலிருந்து எவ்வித படிப்பினைகளையும் எடுத்துக்கொள்ள முடியுமானால், அவை தனிமைப்படுத்தப்படவோ அல்லது நடுத்தர வர்க்க இன அடையாள அரசியலின் பாதையில் திசைதிருப்பவோ முடியாது என்பதேயாகும். தொழிலாளர்களின் பரந்த பிரிவினர் ரைட்டின் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு தங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டும், மேலும் ஆர்ப்பாட்டங்கள் சம்பந்தப்பட்ட வர்க்கப் பிரச்சினைகள் பற்றிய புரிதலுடன் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். காவல்துறை என்பது, முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கும் செயல்படும் ஒரு அமைப்பாகும்.
வர்க்கப் போராட்டத்தின் படிப்பினைகள் வரையப்பட வேண்டும். போராட்டங்கள் மட்டும் போதாது. போலீஸ் வன்முறையை எதிர்ப்பது தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பரந்த பிரச்சினைகளுடன், சமூக சமத்துவமின்மை முதல் பணக்காரர்களின் நலன்களுக்காக தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் அழிக்க அனுமதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் வரை இணைக்கப்பட வேண்டும். போலீஸ் மிருகத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டம் என்பது முதலாளித்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தை மேற்கொள்வதாகும்.
மேலும் படிக்க
- டெரிக் சவன் வழக்கும் அமெரிக்காவில் பொலிஸ் படுகொலை தொற்றுநோயும்
- பிரிட்டன்: சாஹா எவிரார்ட் படுகொலைக்கு முக்கிய சந்தேகத்திற்குரியவராக பொலிஸ் அதிகாரி காணப்பட்ட நிலையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை இலண்டன் பொலிஸ் தாக்குகிறது
- பாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை