இராணுவ ஆக்கிரமிப்புள்ள வடக்கில் 30 மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமாக கைது செய்தது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூனகரிக்கு அப்பால் இலங்கை கடற்படையால் அண்மையில் 30 மீனவர்கள் கடலில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டமை, இலங்கையின் ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் கொடூரமான வழிமுறைகளை வெளிப்படுத்துகின்றன.

மீனவர்கள் செய்த 'குற்றம்' என்று அழைக்கப்படுவது என்னவெனில், வாழ்வாதாரத்துக்காக இரவில் கடற்பரப்பில் மூழ்குவதன் மூலம் இரவு நேரங்களில் நடமாடும் கடல் அட்டைகளை பிடிக்க முயன்றதாகும். எவ்வாறெனினும், மீன்வளத்துறை அமைச்சு 2019 மார்ச் முதல், கடல் அட்டை பிடிப்பை தடைசெய்து, அனுமதிப் பத்திரிம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கடல் அட்டை பிடிக்க அனுமதித்துள்ளதுடன் கடல் வளப் பாதுகாப்பு அடிப்படையில் இரவில் மீன் பிடிப்பதை தடை செய்துள்ளது.

மார்ச் 29 அன்று, கடற்படை மாலுமிகள் அதிகாலை 1.30 மணியளவில் மூன்று கப்பல்களில் ஏறி, மீனவர்களைக் கைது செய்தனர். அதற்கு முன்பு, படையினர் மீனவரகளின் கைகளை கட்டி, காலால் உதைத்தனர்.

இலங்கை கடற்படையின் ஒரு உயர் தொழில்நுட்ப ரோந்து கப்பல் (Wikimedia Commons)

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்படையினரிடம் தங்கள் சகாக்கள் இருவர் தண்ணீரில் தத்தளிப்பதாகவும், அவர்களை படகில் அழைத்துச் செல்லுமாறும் கெஞ்சினர். படையினர் அவர்களின் வேண்டுகோளை புறக்கணித்தனர். கைவிடப்பட்ட இரண்டு மீனவர்களும் கரைக்கு ஏழு கடல் மைல் நீந்தி உயிர் தப்பியுள்ளனர்.

மீனவர்கள் அனைவரும் பூனகரியில் உள்ள கிராஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கிராஞ்சியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வலைப்பாடு பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள், பின்னர் ஒரு சிறிய லொரியில் அடைத்து 65 கிலோமீட்டர் தொலைவில் கிளிநொச்சியில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

மாலை 5.30 மணிக்கு பிணையில் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். கடற்படை வீரர்களால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களுக்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர்கள் 17 மணி நேரத்திற்கும் மேலாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

'சட்டவிரோத மீன்பிடித்தல்' குற்றச்சாட்டில் அவர்கள் மீதான வழக்கு அக்டோபர் 10 அன்று நடக்க உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மீன் அறுவடையைப் பொறுத்து, அந்த பகுதியில் உள்ள ஒரு மீனவரின் ஒன்று அல்லது இரண்டு மாத வருமானத்திற்கு சமமான 25,000 ரூபாய் (125 அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்கப்படும்.

இது மூன்று மாதங்களில் கடற்படையின் கிராஞ்சி மீனவர்கள் மீதான இரண்டாவது சுற்றிவளைப்பாகும்.. கடற்படை ஜனவரி 7 அன்று அதே கொடூரமான முறையில் தாக்கி 23 மீனவர்களை கைது செய்தது.

இந்த கடற்படை நடவடிக்கைகள், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த 26 ஆண்டுகால இனவாத யுத்தம் புலிகளின் இரத்தக்களரி படுகொலையில் முடிவடைந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கை இராணுவம் முன்னெடுக்கும் தொடர்ச்சியான அடக்குமுறையின் ஒரு பகுதியாகும். வடக்கு மற்றும் கிழக்கில் பல கிராமவாசிகள் பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர். போரின் போது, கிராமவாசிகள் அகதிகளாக தொடர்ந்து இடம்பெயர்ந்தே வாழ்ந்து வந்தனர். மீன்பிடி உபகரணங்கள் வாங்குவதற்கு பணம் இல்லாததால் அவர்கள் மீன் வியாபாரிகளைச் சார்ந்து இருக்கும் அவர்கள், இப்போது போரினால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகளுக்கு மத்தியில் படு மோசமாக சுரண்டப்படுகிறார்கள்.

மார்ச் கடைசி இரண்டு வாரங்களில் கடற்படை நடவடிக்கைகளில் 75 பேர் 10,219 கடல் அட்டைகளுடன் சட்டவிரோத அட்டை பிடிப்பின் போது கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை செய்தி வெளியீட்டில் அறிவித்துள்ளது. “இலங்கை கடற்படையானது கடல் சூழலில் பாதகமான விளைவுகளைத் தடுக்கும் முயற்சியாக, தீவைச் சுற்றியுள்ள கடல்களை உள்ளடக்கிய பகல் மற்றும் இரவு ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளது…” என்று அது அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், இராணுவத்தின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 'தேசிய பாதுகாப்பை' பாதுகாக்கவும் 'தலை தூக்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கும்' ஆன முயற்சிகள் எனப் பகிரங்கமாக முன்வைக்கப்படும் இந்த நடவடிக்கைகள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அச்சுறுத்துவதையும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் இனவாத வெறுப்புகளைத் தூண்டுவதையும் இலக்காகக் கொண்டவையாகும்.

இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த இராஜபக்ஷ நகர்கிறார். அவர் குறைந்த பட்சம் 28 சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை உயர் அரசு பதவிகளுக்கு நியமித்துள்ளதோடு பொதுமக்கள் கடமைகளைச் செய்ய இராணுவப் படைகளையும் நியமித்தார். கொவிட்-19 தொற்றுநோய்க்கும், அது ஏற்படுத்திய முன்னெப்போதும் இல்லாத சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கும் பிரதிபலிக்கும் அவர், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் சமூக கோபம் வளர்ந்து வருவதைக் கண்டு அச்சமடைந்து, சர்வாதிகார ஆட்சியை நோக்கிய உந்துதலை தீவிரப்படுத்தியுள்ளார்.

போரின் போது, கடலில் மீன்பிடித்தல் பெரும்பாலான நேரம் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இது கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கப்பட்டபோது, மீனவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

போருக்குப் பிறகு, மீன்பிடி சமூகங்களின் வாழ்க்கை நிலைமை மேம்படவில்லை. அவர்கள் இன்னும் அன்றாடம் வேலை செய்து தங்கள் குடும்பங்களை பசியிலிருந்து மீட்கப் போராடி வருகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இலட்சக் கணக்கான மக்களைப் போலவே, இந்த மீனவர்களும் போரின்போது குடும்ப உறுப்பினர்களையும் உடமைகளையும் இழந்தனர். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்டு, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவிடாமல் தடுக்கப்பட்டவர்களில் அவர்களும் அடங்குவர். பலர் இன்னும் தற்காலிக குடிசைகளில் வாழ்கின்றனர்.

இந்த மீன்பிடி சமூகங்களின் அவலநிலை குறித்து தமிழ் தேசியவாத கட்சிகள் எதுவும் கவலைப்படவில்லை அல்லது அந்த விஷயத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எந்தவொரு பிரிவினரைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. இராஜபக்ஷ தலைமையிலான ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியான, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி), அவருடைய சர்வாதிகார நகர்வுகளுக்கு ஆதரவளிக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசியவாத கட்சிகள், கொழும்பு ஆட்சியுடன், குறிப்பாக வாஷிங்டன் மற்றும் ஏனைய மேற்கத்தைய சக்திகளுடன் தங்கள் சலுகைகளைப் பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள தமிழ் முதலாளித்துவத்தின் அடுக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மீனவர்களை சுரண்டுவது உள்ளிட்ட தமிழ் தொழிலதிபர்களும் அந்தக் கட்சிகளுடன் தொடர்புபட்டுள்ளனர்.

தகுந்த மூழ்கும் கருவிகள் இன்றி, கடும் சிரமங்களுக்கு மத்தியில் கடல் அட்டைகளைப் பிடிக்கும் ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். சிலருக்கு மூழ்குவதற்கான ஒக்ஸிஜன் தாங்கிகள் கூட இல்லை. அவர்கள் சொற்ப அளவிலான கடல் அட்டைகளைப் பிடித்து சேகரித்து அவற்றை தமது துயரத்தை சுரண்டி கொள்ளையடிக்கும் வணிகர்களுக்கு விற்கின்றனர்.

மீனவர்கள் படகு உரிமையாளர்களை நம்பியிருப்பதால், பிடிபடும் அட்டைகளை பாதி விலைக்கே அவர்கள் கொள்வனவு செய்வார்கள். கடல் அட்டைகள் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை (5 முதல் 7.50 டொலர் வரை), அளவின் அடிப்படையில் விலை இடப்படுகின்றது. அட்டைகள் 0.4 முதல் 2.5 கிலோகிராம் வரை பாரமானவை. இருப்பினும், ஒரு முறை ஏற்றுமதி செய்யப்பட்டு, பிரதான கிழக்கு ஆசிய நாடுகளில் சத்தான உணவாக சந்தைகளில் விற்பனைக்கு வரும்போது, ஒரு கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை சுமார் 3,000 டொலருக்கு விற்கப்படுகிறது.

தனுசன் என்ற இளம் மீனவர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய போது, தன்னிடம் படகுகள் அல்லது வலைகள் இல்லை என்றும் அதனால் கடல் அட்டை பிடிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். எவ்வாறாயினும், கடற்படை கைதுகள் தொடங்கியதிலிருந்து அவர் அட்டை பிடிப்பதை நிறுத்த வேண்டியிருந்தது, இப்போது அவர் உள்ளூர் கடைக்கு 42,000 ரூபாய் கடன்பட்டுள்ளார்.

அவர் கூறியதாவது: “நாங்கள் கடல் அட்டையை ஆறு மாதங்களுக்கு மட்டுமே பிடிக்க முடியும், ஏனைய நாட்களில் நான் பெரிய கருப்பு நண்டுகளைப் பிடிக்கிறேன். கொரோனா தொற்றுநோயால் நண்டுகளின் விலை 4,800 ரூபாயிலிருந்து 3,000 ஆக குறைந்துள்ளது. இப்போது எனக்கு வாழ்வாதாரம் இல்லை. நான் கடலுக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் சில மீன்களைப் பிடித்து ஒரு சிறிய தொகைக்கு விற்கிறேன். சாப்பாட்டுக்கு சோயா, பருப்பு, முடிந்தால் டின் மீனுடன் சமாளிக்கின்றோம்.”

“எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மகனுக்கு இரண்டு வயதுதான். மீன்பிடித்தல் தொடர்பான அரசாங்கத்தின் புதிய விதிமுறைகளின் காரணமாக என்னுடைய குடும்பம் போன்ற பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன,” என அவர் மேலும் கூறினார்.

அரசாங்கம் இப்போது முதலீட்டாளர்களுக்கு குறைந்தது ஒரு ஏக்கரை அளவு இடங்களை வழங்கி கடலில் அட்டை பண்ணைகளை உருவாக்க முயற்சிக்கிறது. சில பெரிய முதலீட்டாளர்கள் இந்த இலாபகரமான தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், ஏழை மீன்பிடி சமூகங்கள் இந்த பண்ணைகளில் முதலீடு செய்யக்கூடிய நிலையில் இல்லை. ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும் அல்லது பண்ணை உரிமையாளர்களின் மோசமான சுரண்டலை எதிர்கொள்ள வேண்டும்.

Loading