மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்காக அமெரிக்க அரசியல் தலைவர்களின் மற்றும் அதன் ஏகாதிபத்திய நட்பு நாடுகளின் இதயங்களில் இரத்தம் வடிகிறது. ரஷ்ய அரசால் குற்றகரமாக விஷம் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டு ஜேர்மனியின் சிகிச்சையிலிருந்து திரும்பியதும், இந்தாண்டு பெப்ரவரி 2 இல் சிறையில் அடைக்கப்பட்ட நவால்னி அப்போதிருந்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நவால்னியின் சிறைவாசம் மற்றும் அதன் விளைவாக மோசமடைந்து வரும் அவரது உடல்நிலை மீதான சீற்றம், ஏகாதிபத்திய சிடுமூஞ்சித்தனம் மற்றும் சூழ்ச்சி மீது ஒரு பொருள்பொதிந்த பாடத்தை வழங்குகிறது. விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை தொடர்ந்து இன்னும் பரந்தளவில் கடுமையாக இன்னலுக்கு உட்படுத்த செயல்பட்டுவரும் நிபுணர்கள் தான், நவால்னியின் ஜனநாயக உரிமைகளைத் தாங்கிப் பிடிப்பதில் மிகவும் உணர்ச்சிகரமாக முன்நிற்கிறார்கள்.
அவ்விருவருக்கும் இடையே தொலைவில் வைத்து ஒப்பிடத்தக்க வித்தியாசங்கள் கூட எதுவுமில்லை, இந்த வித்தியாசங்களும் நவால்னிக்கு சாதகமாக இல்லை.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான மிருகத்தனமான ஆக்கிரமிப்பின் மூடிமறைக்கப்பட்ட விபரங்களில் இருந்து அமெரிக்காவின் சித்திரவதை முகாம்கள் மற்றும் கைதிகளை அசாதாரணமாக ஒப்படைப்பது வரையில், அசான்ஜ், 21 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான ஏகாதிபத்திய குற்றங்களை அம்பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஒரு தைரியமான பத்திரிகையாளராக இருக்கிறார்.
ஒரு வலதுசாரி, தேசியவாத அரசியல்வாதியான நவால்னி, காக்கசஸிலிருந்து வந்த புலம்பெயர்ந்தோரை "கரப்பான்பூச்சிகள்" என்று குறிப்பிட்டு அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டவராவார். மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு இன்னும் அதிகமாக பரந்தளவில் ரஷ்யாவைத் திறந்து விட ஆதரவாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எதிர்க்கும் ரஷ்ய தன்னலக்குழுவின் ஒரு பிரிவை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார்.
இரவு, பகல் பாராமல் அவர்களைக் கையாள்வதில் இந்த வித்தியாசம் தான் மிகவும் அடிப்படையானதாக உள்ளது.
விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் பணி உலகளாவிய போர் எதிர்ப்பு உணர்வைத் தூண்டியதுடன், துனிசியா மற்றும் எகிப்தில் மக்கள் எழுச்சிகளுக்குப் பங்களிப்பு செய்தது. ஏகாதிபத்திய நலன்களுக்கு அவர் ஏற்படுத்திய சேதங்களுக்காக பழிவாங்கப்படும் ஒரு முன்மாதிரி நபராக ஆக்கப்பட்டு வருகிறார். அதே நலன்கள்தான் நவால்னிக்கு கட்டாயமாக ஆதரவு வழங்குகின்றன, இவர் ரஷ்யாவை நோக்கிய அவர்களின் சதி நோக்கங்களைக் கைவரப்பெறுவதற்கான ஒரு கருவியாக தன்னை முன்வைக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் போன்றவர்கள் மனித உரிமைகள் அடிப்படையில் நவால்னியை ஆதரிப்பதாகவும், அதேவேளையில் சட்டபூர்வ அடித்தளங்கள் எனக் கூறப்படுவதை அசான்ஜ் மீது செயல்படுத்துவதாகவும் கூறும் வாதங்களை, அவர்கள் ஒன்றுக்கொன்று நேரெதிராக கையாளப்படும் விதம் கிழித்தெறிகின்றது.
ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்னர், சுவீடன் அவரை நாடுகடத்துவதற்காக அரசியல்ரீதியில் இட்டுக்கட்டப்பட்ட பாலியல் தாக்குதல் விசாரணையைத் தொடங்கிய போது, அசான்ஜ் மீதான இன்னல்படுத்தல்கள் தொடங்கின. இது அமெரிக்காவுக்கு ஒரு அரங்கமாக இருந்திருக்கும். அசான்ஜ், 2012 இல், இலண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோர நிர்பந்திக்கப்பட்டார், அங்கே அவரின் ஏழாண்டு காலத்தின் பெரும் பகுதியில் பிரிட்டிஷ் பொலிஸால் எதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஏப்ரல் 2019 இல் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பின்னர் —25 வாரங்கள் பிணை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில்— அவர் கடந்த இரண்டாண்டுகளாக அதிபட்ச பாதுகாப்பு கொண்ட பெல்மார்ஷ் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார், அதேவேளையில் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க செய்வதற்கான ஒரு கோரிக்கையை அது பின்தொடர்ந்தது, அதேவேளையில் அப்போதிருந்து சுமார் நான்கு மாதங்களாக உடல்நல அடிப்படையில் நாடுகடத்துவதை நிறுத்தி வைப்பதற்கு எதிரான ஒரு தீர்ப்புக் கோரி அமெரிக்கா மேல்முறையீடு செய்துள்ளது.
அரசியல் ரீதியில் ஊக்குவிக்கப்பட்ட அவரின் வழக்கு, சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளது துஷ்பிரயோகத்தின் துதிபாடலாக உள்ளது. உலகின் ஊடகங்களும் போலி-இடது குழுக்களும் ஈடுபட்டுள்ள ஒரு வசைபாடல் பிரச்சாரத்துடன் இணைந்து, அவரது பெயரைக் களங்கப்படுத்தவும் மற்றும் உளவியல்ரீதியில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை அழிக்கவும் வடிவமைக்கப்பட்டு, நடத்தப்படுகிறது.
அசான்ஜ் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால், அவர் உளவுபார்ப்பு சட்டத்தின் 175 ஆண்டு சிறை தண்டனையை முகங்கொடுக்கிறார்.
ஜோன்சனின் வார்த்தைகளில், "நீதியை எதிர்கொள்ள வேண்டும்" என்றும், பைடெனின் வார்த்தைகளில் ஓர் "உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி" என்றும் கண்டனம் செய்யப்பட்ட, அசான்ஜ் மீது கொண்டு வருவதற்கான இந்த ஏகாதிபத்திய சதித்திட்டத்திற்குப் பின்னால் உலகின் ஒவ்வொரு அரசாங்கமும் வரிசையில் நிற்கின்றன. அசான்ஜ் வழக்கு "ஜேர்மனி சம்பந்தப்பட்ட விசயம் இல்லை, அது பிரிட்டிஷ் நீதித்துறையின் கைகளில் உள்ளது,” என்று 2019 இல் கருத்துரைத்து ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஐரோப்பிய சக்திகளின் நிலைப்பாட்டை தொகுத்தளித்தார். அசான்ஜின் சொந்த நாடான ஆஸ்திரேலியா அவரைக் கைகழுவி விட்டது.
இதற்கு நேர்மாறாக, 2014 இல் ஒரு கையாடல் வழக்கு தொடர்பாக, ஜாமீனை மீறியதற்காகவும், இந்தாண்டு நவால்னி கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது, இந்த குற்றவாளி கும்பல் அற்புதமான விதத்தில் அவர்களின் ஜனநாயக உணர்திறன்களைக் கண்டு பிடித்துவிட்டனர்.
ஜோன்சன் "துணிச்சலான" நவால்னியை பாராட்டியதுடன், அந்த ரஷ்ய தீர்ப்பு "நீதியின் மிக அடிப்படையான தரமுறைளைக் கூட பூர்த்தி செய்யத் தவறிவிட்டது" என்றார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் அந்த "மனித உரிமை மீறலை" கண்டித்தார். நவால்னி தீர்ப்பு குறித்து மேர்க்கெல் அறிவிக்கையில் "சட்டத் தரமுறையின் எந்தவொரு விதிக்கும் அப்பாற்பட்டது" என்று அறிவித்தார். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவிக்கையில், "ஜனநாயக சுதந்திரம் போன்ற மனித உரிமைகளின் மரியாதை பேரம்பேசுவதற்குரியதல்ல,” என்றார்.
ரஷ்ய அரசால் அவர் குற்றகரமாக நஞ்சூட்டப்பட்டார் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக, “அவரின் [நவால்னியின்] உயிர் மீதான மூர்க்கமான தாக்குதலுக்காக" குறிப்பாக கடுமையாக கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் ஈக்வடோர் தூதரகத்தை உளவுபார்த்த ஸ்பானிய பாதுகாப்புத்துறை நிறுவனம் UC Global மீதான ஒரு விசாரணை, அசான்ஜை கடத்த அல்லது நஞ்சூட்ட சிஐஏ வகுத்த சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியதைக் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
அவரது உண்ணாநிலை போராட்டத்தின் காரணமாக நவால்னியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், இந்த அதிகாரிகள் அவரின் உயிருக்கு ஆபத்திருப்பதாக சுட்டிக்காட்டி, அவரது சுதந்திரத்திற்கான அழைப்புகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். நவால்னி கையாளப்படும் விதம் "முற்றிலும் நியாயமற்றதும் மற்றும் முற்றிலும் பொருத்தமற்றதும்" ஆகும் என்று பைடென் குறிப்பிட்ட அதேவேளையில், அவர் உயிரிழந்தால் ஏற்படும் "விளைவுகளை" குறித்து அவரது நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான உயர்மட்ட பிரதிநிதி ஜோசப் பொரெல், "ரஷ்ய அதிகாரிகள் அவர் நம்பும் மருத்துவ வல்லுனர்களை அவர் உடனடியாக அணுகுவதற்கு வசதி செய்ய வேண்டும்,” என்று கோரினார். இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம் அதன் அறிக்கையில் கூறியது: "திரு நவால்னிக்குச் சுதந்திரமான மருத்துவ சேவையைப் பெறுவதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும்."
அசான்ஜிற்கான மருத்துவர்களின் பிரச்சாரக் குழுவும் சித்திரவதை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சரும் துல்லியமாக இதே கோரிக்கையைத் தான் அசான்ஜிற்காக முன்வைத்தனர், ஆனால் அது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அவமதிப்பாக நிராகரிக்கப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோயாலும் அவரின் சொந்த மனநல நிலைமைகளாலும் அவர் உயிருக்கு தீவிர ஆபத்து ஏற்பட்டிருந்த போதும் கூட, அசான்ஜிற்கு மீண்டும் மீண்டும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி அவர் தற்கொலை செய்வதற்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற ஒரே அடித்தளத்தில் பிரிட்டன் நீதிபதி வனெசா பாரைட்சர் அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கு எதிராக தீர்ப்பளித்தார். ட்ரம்ப் முன்னர் செய்ததைப் போலவே, “நாங்கள் அவரை ஒப்படைக்க செய்ய தொடர்ந்து முயற்சி செய்வோம்,” என்று வலியுறுத்தியதே பைடென் நிர்வாகத்தின் விடையிறுப்பாக இருந்தது.
ஆளும் வர்க்கத்தின் குற்றகரமான திட்டநிரல், ஊடகங்களில் அவர்கள் பணம் செலுத்தி கூச்சலிடுபவர்களின் கூச்சலில் எதிரொலிக்கிறது, அவர்கள் அசான்ஜை அழிய விட்டுவிட்டு அதேவேளையில் நவால்னிக்காக முற்போக்கான நற்சான்றிதழ்களை இட்டுக்கட்ட மேலதிக நேரம் வேலை செய்து வருகின்றனர்.
பெயரளவில் பிரிட்டனின் முன்னணி தாராளவாத பத்திரிகையான கார்டியன், இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து, நவால்னி குறித்து 78 கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டுள்ளது. அது அசான்ஜ் குறித்து 16 ஐ வெளியிட்டது, பெப்ரவரியில் இருந்து வெறும் ஒன்றே ஒன்றை வெளியிட்டது. அவருக்கு எதிராக தசாப்த காலமாக அவதூறு பிரச்சாரத்தை நடத்திய பின்னர், அது நவம்பர் 2019 தலையங்கத்தில் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்காக ஆவணப்படுத்துவதற்கான எதிர்ப்பை காலங்கடந்தும் கூட ஏற்று நடத்தியது. அது 2020 டிசம்பரில் மற்றொன்றையும் பின்னர் இந்தாண்டு ஜனவரியில் மீண்டும் மற்றொன்றையும் எழுதியது. அது இந்தாண்டு மட்டும் நவால்னியைக் குறித்து மூன்று கட்டுரைகளை எழுதியுள்ளது.
சர்வதேச பொது மன்னிப்பு சபை பல ஆண்டுகளாக அசான்ஜை மனசாட்சியுள்ள ஒரு கைதியாக ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது ஆனால் மிக விரைவில் அந்த முத்திரையை நவால்னிக்கு வழங்கியதோடு, சில மாதங்களுக்குப் பின்னர் அவரது "வெறுக்கத்தக்க பேச்சு" என்ற பதிவை ஒப்புக்கொள்ள அவர்கள் ஒரு சங்கடமான பின்வாங்கலுக்கு நிர்பந்திக்கப்பட்டனர். அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ், அசான்ஜ் சம்பந்தமாக கிட்டத்தட்ட முழுமையாக வாய்திறக்கவில்லை, அவர் மே 2019 இல் அசான்ஜ் மீதான குற்றப்பத்திரிகையை எதிர்த்து ஒரேயொரு ட்வீட் செய்தி வெளியிட்டார், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் பெயரைக் கூட குறிப்பிடாமல் இருந்ததில் வெற்றிகரமாக இருந்தது. இந்த திங்கட்கிழமை அவர் பின்வருமாறு ட்வீட் செய்தார்: “இங்கே என்ன நடக்கிறது என்பதில் எந்த தவறும் செய்து விடாதீர்கள்: புட்டினின் பரந்த ஊழலை அம்பலப்படுத்திய குற்றத்திற்காக நடவடிக்கையாளர் அலெக்சி நவால்னி, விளாடிமீர் புட்டினால் உலகிற்கு முன்னால் படுகொலை செய்யப்பட்டு வருகிறார். நவால்னியின் மருத்துவர்கள் அவரை உடனடியாகப் பார்க்க அனுமதிக்க வேண்டும்.”
சாண்டர்ஸ், பைடென், ஜோன்சன் மற்றும் அவர்களைப் போன்றவர்களின் வாய்களில் இருந்து வரும் "மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயக சுதந்திரம்" போன்ற வார்த்தைகள், ஏமாற்று வார்த்தைகளாகவே வருகின்றன. அரசியல்ரீதியில் இழிவான நவால்னிக்கு அவர்களின் ஆதரவானது ரஷ்ய அரசுக்கு எதிரான ஒரு கணக்கிட்ட ஆத்திரமூட்டலாகும். மாஸ்கோவுக்கு எதிராக கூடுதலாக இராணுவ ஆக்ரோஷத்தைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு சாக்குபோக்காக, அவர்கள் நவால்னியின் கதியைப் பயன்படுத்த நினைக்கிறார்கள். இந்த ஏகாதிபத்திய போர் முனைவுக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்கவே எல்லா பிரதான சக்திகளின் முழு ஒப்புதலுடன் அசான்ஜின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
இன்று உலகில் ஜனநாயக உரிமைகளுக்கான ஒரே உண்மையான ஆதரவுத் தளம் சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும், ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்கு எதிராகவும், அவர்களின் கைப்பாவை நவால்னி மற்றும் புட்டின் பிரதிநிதித்துவம் செய்யும் ரஷ்ய தன்னலக்குழுவுக்கு எதிராகவும் அத்தகைய உரிமைகளை ஒரு ஒருமித்த போராட்டத்தின் மூலமாக சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே பாதுகாக்கும். ஜூலியன் அசான்ஜை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிப்பதற்கான கோரிக்கை அந்த போராட்டத்தின் மையத்தில் வைக்கப்பட வேண்டும்.