இலங்கைத் தொழிலாளர்கள் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலை கண்டிக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த வாரம் இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டமான மஸ்கெலியாவில் ஓல்டன் தோட்ட நிர்வாகம் 38 தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது

எந்தவொரு விசாரணையோ அல்லது முறையீடு செய்வதற்கான உரிமையோ இன்றி, உடனடியாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட இந்த தொழிலாளர்கள் மீது, சமீபத்திய சம்பள போராட்டத்தின் போது தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ் வேலை நீக்கமானது போர்க்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிராக, பிரதான தோட்டத் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) ஒத்துழைப்புடன், தோட்ட நிர்வாகம் மற்றும் பொலிசும் கூட்டாக முன்னெடுக்கும் பழிவாங்கலின் ஒரு பகுதியாகும்.

ஓல்டன் தோட்டம் (Source: Facebook)

பெப்ரவரி 2 அன்று சுமார் 500 ஓல்டன் தொழிலாளர்கள் நாள் சம்பளமாக ரூபா 1,000 (4.96 டொலர்) கோரி வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் இ.தொ.கா.வின் கட்டளையின் பேரில் மார்ச் 26 அன்று மீண்டும் வேலைக்குத் திரும்பினர்.

பெப்ரவரி 17 அன்று, முகாமையாளரின் பங்களாவிற்கு வெளிப்புறத்தில் தொழிலாளர்கள் காத்திரமாக நடத்திய போரட்டத்தை, இந்த ஜனநாயக-விரோத தாக்குதலை முன்னெடுப்பதற்கான ஒரு சாட்டாக ஓல்டன் தோட்ட முதலாளிகள் பயன்படுத்திக்கொண்டனர். போராட்டக்காரர்கள் முகாமையாளரையும் உதவி முகாமையாளரையும் தாக்கியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இருபது தொழிலாளர்களும் இரண்டு இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மார்ச் 20 வரை தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சோடிக்கப்பட்ட நடவடிக்கையை முழுமையாக ஆதரித்த இ.தொ.கா. தொழிலாளர்களின் பட்டியல் ஒன்றை சேகரித்து, அவர்களை பொலிசில் சரணடையச் செய்தது. கம்பனியோ 18 தொழிலாளர்களின் இன்னுமொரு பட்டியலை வரைந்தது. இதில் நான்கு பேர் மார்ச் 29 அன்று மஸ்கெலியா பொலிசுக்கு அழைக்கபட்டு அவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்யபட்டன. எல்லாமாக 38 தொழிலாளர்கள் மற்றும் இரு இளைஞர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்வதற்கு, ஏப்ரல் 28 அன்று நீதிமன்றத்திற்கு சமூமளிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒரு பங்காளியான இ.தொ.கா., இந்த சோடிப்பு வழக்கில் நேரடியாக பங்களித்துள்ள அதே வேளை, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய ஏனைய பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், ஓல்டன் தொழிலாளர்களுக்கு உதவ எதுவும் செய்யவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்க தீவு முழுவதுமான பிரச்சாரத்தை ஆரம்பித்தது. அது வேலை நீக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக மீள வேலைக்கு அமர்த்தவும், போலி குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் கைவிடவும் கோருகின்றது. இந்தப் பிரச்சாரம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் ஏனைய பகுதியினர் மத்தியிலும் பரந்த ஆதரவை வென்று வருகின்றது.

மஸ்கெலியாவில் உள்ள டீசைட் தோட்டத்தின், 47 வயதான பெண் தொழிலாளி சகாயலோஜினி கூறியதாவது: “அந்த தொழிலாளர்களை வேலை நீக்கியமை எங்கள் எல்லோருக்கும் கடுமையான எச்சரிக்கை ஆகும், நாம் இதை அனுமதித்தால், அனைவரும் இதே நிலைமையைத் தான் முகங்கொடுப்போம். ரூபா 1,000 நாளாந்த சம்பளத்திற்கான போராட்டத்தை ஒரு நாளுக்கு (பெப்ரவரி 5) மட்டும் மட்டுப்படுத்தி இருந்தாலும், ஓல்டன் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தமது போராட்டத்தை தொடந்ந்தனர். அனைத்துத் தொழிலாளர்களும் அவர்களைப் பாதுகாக்க போராட வேண்டும்“

பறிக்கவேண்டிய தேயிலை கொழுந்தின் அளவை ஒரு கிலோவால் கூட்டி, வேலைச்சுமையை அதிகரித்தமையை எதிர்க்க தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன. இது தொடர்பாக பேசிய அவர், “அவர்கள் எங்களை காட்டிக்கொடுத்துவிட்டார்கள்,” என்றார்.

ஐந்து வருடங்களுக்கு மேலாக தோட்டத் தேயிலை தொழிற்சாலையில் ஒரு சாதாரண ஊழியராக இருப்பதாக ஒரு ஓல்டன் தோட்டத் தொழிலாளி (பாதுகாப்பு காரணத்துக்காக பெயர் குறிப்பிடப்படவில்லை) கூறினார்.

“வேலை நிறுத்தம் முடிந்த பின் தொழிற்சாலை மூடப்பட்டு 60 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். நிர்வாகம் எங்களை தேயிலை மலையில் வேலை செய்ய அனுப்பிவிட்டது. நான் தொழிற்சாலை வேலைக்கு பயிற்றப்பட்டதால் இது மிகவும் கடினமாக உள்ளது.

இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமான், பெப்ரவரி 5 அன்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும், இப்போது அவர் எங்களை முழுமையாக கைவிட்டுள்ளார். கடந்த வருட பாராளுமன்ற தேர்தலில், இராஜபக்ஷ அரசாங்கம் எமக்கு நிறைய உதவிகள் செய்யும் என அவர் கூறினார். இப்போது அவர் அரசாங்கத்தின் ஒரு அமைச்சர். ஆனால், எங்களுக்கு எதுவும் செய்ததில்லை. நிர்வாகம் 38 தொழிலாளர்களை நீக்கியதை இ.தொ.கா. ஆதரித்துள்ளது.

ஓல்டன் தோட்டத்திலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒரு தொழிலாளி கூறுகையில், “வேலைநீக்க கடிதங்களை விநியோகித்த போது கம்பனி எங்களை ஏமாற்றிவிட்டது. தமிழில் உள்ள கடிதத்தில், நாம் தற்காலிகமாக மட்டும் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் ஆங்கில கடிதத்தின் படி, நாங்கள் வேலையில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுளோம். எந்தவொரு தொழிற் சங்கங்களும் இந்த முரண்பாட்டை எமக்குத் தெரிவிக்கவில்லை. நாங்கள் உங்கள் கட்சியுடாக மட்டுமே இதை தெரிந்துகொண்டோம்,” என்றார்.

ரூபா 1,000 நாளாந்த வேதனம் ஒரு மோசடி எனத் தெரிவித்த அவர், “நாம் பறிக்கும் தேயிலைகளின் அடிப்படையிலேயே எமக்கு கொடுப்பனவு வழங்கப்படுகிறதோடு, கிலோ ஒன்றுக்கு 55 ரூபா மட்டுமே கிடைக்கின்றது. அதன் அர்த்தம் எமது நாளாந்த இலக்கான 16 கிலோவை புர்த்திசெய்யும் போது எங்களுக்கு 880 ரூபா மட்டுமே கிடைக்கின்றது. நாம் அதைவிட குறைவாக பறித்தால் சிறிய தொகையே கிடக்கின்றது. எமக்கு உறுதியளிக்கப்பட்ட அதிகரிப்பான 100 ரூபா கிடைப்பதில்லை,” என அவர் கூறினார்.

“மருத்துவம், குழந்தைகள் பராமரிப்பு போன்ற ஏனைய நலன்களை நீக்குவதற்கு நிர்வாகம் திட்டமிடுவதுடன் வேலைசெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கான ஆபத்து உள்ளது. சில தோட்டங்கள் ஏற்கனவே இந்த நடவடிக்கைகளை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது.”

ஓல்டன் தோட்டத் தொழிலாள்கள் மீதான பழிவாங்கல், தோட்டத்துறையிலும் மிகவும் பரந்தளவிலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கை ஆகும், என சாமிமலை கிளனூஜி தோட்டத்தின் பி. சுந்தர்ராஜ், 45, தெரிவித்தார். “அவர்கள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் ஊடாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதன் அர்த்தம், இது ஏனைய தொழிலாளர்களுக்கும் விரைவில் நடக்கும் என்பதாகும். எங்களால் தொழிற்சங்கங்களை நம்ப முடியாது. போராட்டங்களை எமது கையில் எடுக்க வேண்டும்.”

கிளனூஜி தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா, நாள் சம்பம் கிடைக்கவில்லை, ஏப்ரல் 9 அன்று தொழிலாளர்களுக்கு அவர்கள் பறித்த தேயிலை கொழுந்து கிலோவின் அடிப்படையிலேயே பணம் செலுத்தப்பட்டது என சுந்தர்ராஜ் கூறினார். “நாம் இதை ஏற்றுக்ககொள்ள மறுத்ததால் நிர்வாகம் 1,000 ரூபா சம்பளத்தை கொடுப்பதாக உறுதியளித்தது, ஆனால், நாம் அவர்களின் வாக்குறுதியை நம்பவில்லை,” என அவர் தெரவித்தார்.

பண்டாரவளையில் உள்ள ஆசிரியர் ஹேமால் தீப்தி குமார, உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடக மட்டுமே ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலைப் பற்றி அறிந்ததாகக் கூறினார்.

“இது கம்பனி, பொலிஸ் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுச் சதி என்பது தெளிவு” என அவர் தெரிவித்ததோடு இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லைன்-அறை இருப்பிடங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் “பூமியில் உள்ள ஓரு நரகம் போன்றது” என அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தொழிலாளர்களுக்கு, மேலும் அவர் தொடரந்தார், “போதுமான உணவும் தரமான சுகாதார வசதிகளும் இல்லை.”

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களின் இந்தத் தைரியமான மற்றும் தீர்மானகரமான இரண்டு மாத வேலை நிறுத்தமானது, “ஆசிரியர்கள் மற்றம் ஏனைய ஒவ்வொரு தொழிலாளர்களையும் ஈர்க்க வேண்டும்” என அவர் கூறினார். ஏப்ரல் 7 அன்று பத்தாயிரக்கணக்கான ஆசியரியர்கள் நடத்திய பாரிய போராட்டத்தையே, குமார குறித்து காட்டியதோடு தொழிலாள வர்க்கத்தின் அனைத்து தரப்பினரதும் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

“தொழிற்சங்கங்கள், நிச்சயமாக இவ்வாறன ஐக்கியத்துக்கு எதிரானவை ஆகும். “உண்மையில், ’ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து ஜோடிப்புக் குற்றச்சாட்டுக்களையும் இரத்துச் செய்! உடனடியாக அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்து!” போன்ற சுலோகங்களை ஆசிரியர்களின் போராட்டத்தில் கோசமிட்டிருக்க வேண்டும்.’ இந்த வழியில் மட்டுமே ஓல்டன் தொழிலாளர்கள் மீதான தாக்குதலானது எங்கள் அனைவர் மீதான தாக்குதல் என ஏனைய தொழிலாளர்கள் புரிந்துகொள்ள முடியும். அதன் பின்பே நாம் ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஐக்கிப்பட்ட போராட்டததை உருவாக்க முடியும்.”

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அது வேண்டுகோள் விடுக்கின்றது. தயவுசெய்து அனைத்து ஆதரவுக் கருத்துக்களையும் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் wswscmb@sltnet.lk.

Loading