முன்னோக்கு

இணையவழி சர்வதேச மே தினப் பேரணியின் ஆரம்ப அறிக்கை

2021 மே தினமும் உலக வர்க்கப் போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 அன்று உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் நடத்திய 2021 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப அறிக்கையை இங்கே வெளியிடுகின்றோம். நோர்த் WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவருமாவர்.

 

இந்த மே தினப் பேரணியைத் தொடங்கிவைத்து, தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய ஒற்றுமையை ஊர்ஜிதப்படுத்துகின்ற இந்த வரலாற்று தின நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைகொள்கிறேன்.

இன்று நிலவுகின்ற நிலைமைகளில், 2021 மே தின அனுசரிப்பை ஒரு “கொண்டாட்டம்” என விவரிப்பது சாத்தியமல்ல. கடந்த ஆண்டில் தொடங்கி இன்றைய நாள் வரை தொடர்ந்து கொண்டிருக்கின்ற துயரத்தின் அளவானது மிகப்பெரியதாக இருந்து வந்திருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மிகச்சக்திவாய்ந்த முதலாளித்துவ ஆட்சிகள் அளித்த குற்றவியல்தனமான பதிலிறுப்புக்கான படுபயங்கரமான விலையை மனிதகுலம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் புவியரசியல் நோக்கங்களுக்கும், பெருநிறுவன இலாபங்களுக்கான இடைவிடாத உந்துதலுக்கும், தனிமனித செல்வத்தில் ஆபாசமான மட்டங்களுக்கு முதலாளித்துவ சிலவராட்சியினர் கொண்டிருக்கின்ற தணிக்கமுடியாத பேராசைக்குமே முன்னுரிமை அளிக்கப்பட்டமையானது, உலகளாவிய பெருந்தொற்றுக்கு ஒரு விஞ்ஞானபூர்வமாக வழிநடத்தப்பட்ட மற்றும் சர்வதேசரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பதிலிறுப்பு செயலுறுத்தப்படுவதற்கு வழியில்லாது செய்தது.

சர்வதேச மே தின ஆன்லைன் பேரணி 2021

முதலாளித்துவ அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட சமூக அழிப்புக் கொள்கைகளது பின்விளைவுகள் மனித உயிர்களிலான திகைப்பூட்டும் இழப்புகளின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பாக, மே 1, 2020 அன்று, ஒட்டுமொத்தமாக உலகளாவிய பெருந்தொற்றிலான உயிரிழப்பு எண்ணிக்கை 240,000 ஐ எட்டியிருந்தது. இன்று, உயிரிழந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,200,000 ஆக இருக்கிறது. இது 13 மடங்கு அதிகரிப்புக்கும் கூடுதலானதாய் இருக்கிறது.

அந்த மொத்த எண்ணிக்கையில், ஐரோப்பா 1,015, 000 பலிகளைக் கொண்டுள்ளது. வட அமெரிக்காவில் 861,000 பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 670,000 ஆக உள்ளது. ஆசியாவில் 520,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆபிரிக்காவில், உயிரிழந்தோரின் உத்தியோகப்பூர்வ எண்ணிக்கை 122,000 ஆக கொடுக்கப்படுகிறது.

உலகின் மிகச் செல்வந்த மற்றும் மிகச் சக்திவாய்ந்த நாடாகவும், மிகப்பெரும் எண்ணிக்கையிலான பில்லியனர்களின் தாயகமாகவும் திகழ்கின்ற அமெரிக்கா தான், உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது. ஒரு வருடம் முன்பாக இதேநாளில், பெருந்தொற்றுக்கு உயிரிழந்த அமெரிக்கர்களது எண்ணிக்கை 65,000 ஆக இருந்தது. 12 மாத இடைவெளிக்குள்ளாக, உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 590,000 ஐ எட்டியிருக்கிறது.

இந்த எண்ணிக்கையானது, 123 ஆண்டுகள் முன்பாக ஸ்பானிய-அமெரிக்க போர் வெடித்தது முதலாக அமெரிக்கா பங்குபெற்ற அத்தனை போர்களிலும் கொல்லப்பட்ட அமெரிக்க படையினர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை ஏற்கனவே கடந்து விட்டிருக்கிறது. 2021 இலையுதிர்கால மத்திக்கு முன்பாக அல்லது அதற்கும் முன்னதாகவே பெருந்தொற்று உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாட்டின் மிக இரத்தம்பாய்ந்த சண்டையான 1861-65 நான்காண்டு கால உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையைத் தாண்டி விடும்.

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தலுக்கான மையங்களால் நடத்தப்பட்ட உயிரிழப்பு தரவுகளின் மீதான ஒரு பகுப்பாய்வின் படி, 2020 மார்ச் முதல் 2021 பிப்ரவரி 20 வரையான காலத்தில், சராசரியாக ஒரு ஆண்டில் எதிர்பார்க்கக் கூடிய உயிரிழப்புகளை விட 574,000 அமெரிக்கர்கள் கூடுதலாக உயிரிழந்திருந்தனர்.

பிராந்திய புள்ளிவிவரங்கள் மீதான திறனாய்வினால் ஏற்கனவே எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றவாறாக, அமெரிக்க துயரச்சித்திரமானது ஒரு உலகளாவிய பேரழிவின் பகுதியாக இருக்கிறது. பிரேசில் உயிரிழப்பு எண்ணிக்கை 400,000 ஐ கடந்து விட்டிருக்கிறது. மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 220,000 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரிட்டனில், 127,000 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் இந்த பெருந்தொற்று 110,000 பேரைக் காவு கொண்டுள்ளது. பிரான்சில் 105,000 பேரும், ஜேர்மனியில் 85,000 பேரும் ஸ்பெயினில் 80,000 பேரும் துருக்கியில் 40,000 பேரும் இந்த பெருந்தொற்றில் உயிரிழந்துள்ளனர்.

நாம் சந்திக்கிற இந்த வேளையில், உலகின் கவனமானது இந்தியாவில் இந்த பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் திகிலூட்டும் பாதிப்பின் மீது குவிந்துள்ளது, அங்கு பலியானோர் எண்ணிக்கை 210,000 ஐ கடந்து விட்டிருக்கிறது, நாள்தோறும் இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த கட்டவிழும் பெருந்துயரானது உண்மையில் ஒரு உலகளாவிய நெருக்கடியாக இருக்கின்ற ஒன்றுக்கு தேசியளவிலான தீர்வு என எதுவும் கிடையாது என்ற மறுப்புக்கிடமற்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கோவிட் 19 வைரஸானது ஏதோவொரு நாட்டில் அல்லது பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மக்கள் மூலமாக பரவிக் கொண்டிருக்கும் வரையில், அதன்மூலம் தன்னைப் பிரதியெடுத்துக் கொண்டும் உருமாற்றிக் கொண்டும் இருக்கின்ற வரையில், மனித உயிர்களில் கணிசமான காவு எண்ணிக்கையை அது எடுப்பது தொடரவே செய்யும். வரவிருக்கும் மாதங்களில் மிக ஏழ்மையான நாடுகள் தான் இந்த நெருக்கடியின் சுமைகளைத் தாங்கும். ஃபைனான்சியல் டைம்ஸ் இதழில் வெள்ளியன்று வெளியான ஒரு நேர்காணலில் ஹார்வர்ட் மருத்துவர் ஒருவர் கூறியிருந்ததைப் போல, துணை-சகாரா ஆபிரிக்காவில் இந்த பெருந்தொற்று வெடிப்பதென்பது இப்போது நேரம்குறிப்பிடப்படாத ஒன்றாக இருக்கிறது.

இதுதவிர, தடுப்பூசி போடுதலானது அத்தியாவசிய தடுப்பூசி விநியோகங்களுக்கு வழியில்லாத நாடுகளில் இந்த வைரஸ் உண்டாக்கியிருக்கும் பெருஞ்சேத வகைகளில் இருந்து, வசதியான நாடுகளைப் பாதுகாத்து விடும் என்பதான மீண்டும் மீண்டுமான வாய்வழி உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், நியாயப்படுத்தமுடியாத மற்றும் ஆபத்தான இந்த சுயதிருப்திப்படுதலுக்கு எதிராக தொற்றுநோய் அறிஞர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.

உண்மை என்னவென்றால், இந்த பெருந்தொற்று ஏதோ கணத்தில் தோன்றி மறையும் நிகழ்வு அல்ல, அது சாதாரணமாக தேய்ந்து மறைந்து பெருந்தொற்றுக்கு முந்தைய உள்ளபடியான நிலைக்குத் திரும்ப அனுமதிப்பதற்கு. நெருக்கடியின் முடிவை நெருங்குவதற்கெல்லாம் வெகுதூரத்தில், இந்த பெருந்தொற்றானது ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையையும் ஆழமாக ஸ்திரம்குலையச் செய்துள்ளது. உலகம் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதை அல்லது முடிவின் தொடக்கத்தையேனும் நெருங்கிக் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஒரு மருத்துவ நெருக்கடியாக ஆரம்பத்தில் தொடங்கிய ஒன்றானது ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ ஒழுங்கின் ஒரு அடிப்படை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியாக உருமாறியிருக்கிறது.

சென்ற ஆண்டில், பெருந்தொற்றின் மிக ஆரம்பத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளம், அதனை முதலாம் உலகப் போருடன் ஒப்பிடத்தக்க ஒரு வரலாற்றுத் தூண்டுதல் நிகழ்வாக வரையறுத்தது. பால்கன் பகுதியில் ஒரு சிறு அரசியல் சம்பவத்திற்கு அதிகமாயில்லாத ஒன்றாக முதலில் தோன்றிய ஒரு சம்பவத்தினால் தூண்டப்பட்டு திடீரென்று வெடித்த போரானது, 1914 ஆகஸ்ட் வரையில், மார்க்சிச புரட்சிகர சர்வதேசியவாதிகளின் ஒரு சிறு எண்ணிக்கையிலானோரை தவிர வெகுசிலரே சாத்தியமென கற்பனை செய்திருக்கத்தக்க பரிமாணங்களை எடுத்தது.

முதன்முதலில் போர் வெடித்தபோது, ஐரோப்பாவின் இளைஞர்கள், கிறிஸ்துமஸை தங்களது குடும்பங்களுடன் கொண்டாடுவதற்கு உரிய சமயத்தில் தங்களால் வீடு திரும்பிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன், பரவலான உற்சாகத்தின் மத்தியில் போர்க்களத்துக்குச் சென்றனர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. ஆகஸ்ட் 14 அன்று முழுஉற்சாகம் ததும்ப இருந்த அந்த இளைஞர்களில் நூறாயிரக்கணக்கானோர் டிசம்பரில் மரணித்து விட்டிருந்தனர். போர் 1915, 1916, 1917 என நீண்டுகொண்டே சென்றது, கிழக்கு மற்றும் மேற்கு முனைகள் இரண்டிலுமே, ஐரோப்பாவின் போர்க்களங்கள் மில்லியன் கணக்கான படையினர்களின் இரத்தத்தால் நனைந்திருந்தன.

போர் ஒரு படுபயங்கர வேகமெடுப்புடன் கட்டவிழ்ந்தது. மரணம் இயல்பாக்கப்பட்டது. அரசாங்கங்களும் இராணுவத் தளபதிகளும் மனித உயிர்களை, சண்டையின் தர்க்கத்தினால் பயன்படுத்தப்படவேண்டிய “மனிதப் பொருட்கள்” மற்றும் அருவமான “பொருட்கள்” என்று குறிப்பிடத் தொடங்கினர். போரிட்ட முதலாளித்துவ சக்திகளின் ஆளும் வர்க்கங்களது புவியரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் ஒரு பேச்சுவார்த்தை மூலமான உடன்பாட்டிற்கு அனுமதிக்காத காரணத்தால், போரின் பயங்கரங்கள் இருந்தபோதிலும் அது முடிவுக்குக் கொண்டுவரப்பட முடியவில்லை.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கு, சமூகத்தின் வழிநடத்தலானது முதலாளித்துவ ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து அகற்றப்பட வேண்டியிருந்தது. அதாவது, அன்றைய அரசாங்கங்களின் உத்தரவின் கீழான இராணுவப்படைகளைக் காட்டிலும், ஒரு மிகப்பெரும் படை அணிதிரட்டப்பட வேண்டியிருந்தது. போரிட்ட நாடுகள் அனைத்தின் தொழிலாள வர்க்கமே அந்தப் படையாகும். ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை ஆயுதமாக ஏந்தி, சர்வதேச தொழிலாள வர்க்கம் போரின் மீது போர் நடத்த வேண்டியிருந்தது. அதுவே லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் முன்னோக்காய் இருந்தது. 1915 செப்டம்பரில், போருக்கு எதிரான சோசலிஸ்டுகளின் ஒரு சிறிய குழு சுவிட்சர்லாந்தின் சிம்மர்வால்ட் பகுதியில் கூடியது. நான்கு நாள் மாநாட்டின் முடிவில், தொழிலாள வர்க்கத்தை நோக்கி ஒரு அறிக்கையை எழுதுவதற்காக ட்ரொட்ஸ்கி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஒப்பிலா அரசியல் மேதை மற்றும் புரட்சிகரப் போராளி ஐரோப்பாவின் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுப்பதற்கான சாலப்பொருத்தமான வார்த்தைகளைக் கண்டெடுத்தார்:

இந்தப் போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீண்டுசெல்கிறது. மில்லியன் கணக்கான சடலங்கள் போர்க் களங்களில் குவிந்துள்ளன; மில்லியன் கணக்கான மனிதர்கள் ஆயுட்காலத்திற்கும் ஊனமாக்கப்பட்டனர். ஐரோப்பா ஒரு மாபெரும் மனித கொலைக்களமாக உருவெடுத்துள்ளது. பல தலைமுறைகளது உழைப்பால் விளைந்த அத்தனை விஞ்ஞானமும் அழிவுக்காய் அர்ப்பணிக்கப்படுகிறது. மிக மிருகத்தனமான காட்டுமிராண்டித்தனமானது முன்பு மனிதகுலத்தின் பெருமையாக இருந்து வந்திருந்த அத்தனையினையும் தான் வெற்றிகொண்டு விட்டதாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

போர் வெடிப்புக்கு உடனடிப் பொறுப்பு குறித்த உண்மை எதுவாகவும் இருக்கட்டும், ஒரு விடயம் நிச்சயம்: இந்த குழப்பநிலைக்கு சந்தர்ப்பமளித்த போரானது ஏகாதிபத்தியத்தின், ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவ வர்க்கமும் மனித உழைப்பையும் இயற்கையின் புதையல்களையும் சுரண்டுவதன் மூலம் இலாபம் ஈட்டும் தங்களது பேராசையைத் தணிப்பதற்கு செய்கிற முயற்சிகளின், விளைபயனாக இருக்கிறது...

போர் முன்னேறிச் செல்லச் செல்ல, அதன் உண்மையான செலுத்துசக்திகள் அவற்றின் அத்தனை அடிப்படைகளிலும் வெளிப்பட்டுள்ளன. இந்த உலகப் பேரழிவுக்கான அர்த்தத்தை மக்களின் புரிதலில் இருந்து மறைத்து வந்திருக்கின்ற முகத்திரையானது துண்டுதுண்டாக உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது.

18 மாதங்களுக்குள்ளாக, 1917 பிப்ரவரியில், ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. எட்டு மாதங்களுக்குப் பின்னர், அந்த ஆண்டு அக்டோபரில், லெனினும் ட்ரொட்ஸ்கியும் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசுவதில் ரஷ்யத் தொழிலாள வர்க்கத்திற்கு தலைமை கொடுத்தனர். சோவியத் ரஷ்யா போரில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது. ஒரு ஆண்டு கழித்து, 1918 நவம்பரில், போல்ஷிவிக் புரட்சியால் உத்வேகம் பெற்று, ஜேர்மன் தொழிலாள வர்க்கம் போருக்கு எதிராக எழுந்துநின்றது. அந்த எழுச்சி இறுதியாக முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.

முதலாம் உலகப் போரின் வெடிப்பு போலவே, இந்த பெருந்தொற்றும் முதல் பார்வைக்கு, மனிதகுலத்தின் மீது சந்தர்ப்பவசமாக விழுகின்ற, அதற்கு யாரையும் நேரடியாகப் பொறுப்பாக்க முடியாத முன்னெதிர்பாராத துன்பியல் நிகழ்வுகளில் ஒன்றாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் முதலாம் உலகப் போர் விடயத்தில் எப்படி அது உண்மையாக இருக்கவில்லையோ, அதைப் போலவே பெருந்தொற்றின் விடயத்திலும் அது உண்மையாக இருக்கவில்லை. 1914 இல் போர் வெடித்ததில், உடனடியான காரணச்சூழல்கள் என்னவாயிருந்தபோதிலும், அதன் அழிவுகரமான பின்விளைவுகள் அன்றைய நாளின் ஏகாதிபத்திய சக்திகளால் பின்பற்றப்பட்ட கொள்கைகள் மற்றும் நலன்களில் வேரூன்றியவையாக இருந்தன.

கோவிட்-19 வைரஸ் ஆரம்பத்தில் விலங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவிய துல்லியமான சூழல்கள் மற்றும் துல்லியமான இடத்தை கணிக்க முடியாதிருக்கலாம். ஆனால் அத்தகையதொரு நிகழ்வின் சாத்தியத்தைக் குறித்து தொற்றுநோயியல் அறிஞர்கள் அதிகரித்த அவசரவுணர்வுடன் கடந்த 30 ஆண்டுகாலமாய் எச்சரித்து வந்திருக்கின்றனர். உயிரிழப்புகள், சமூக இடம்பெயர்வு மற்றும் உணர்வுரீதியான அதிர்ச்சி ஆகிய விடயங்களில் ஒரு பெருந்தொற்று ஏற்படுத்தக்கூடிய படுபயங்கரமான பாதிப்பைக் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால் அமெரிக்காவில் இருந்த அரசாங்கங்களோ அல்லது ஐரோப்பாவில் இருந்த அரசாங்கங்களோ இந்த எச்சரிக்கைகளுக்கு காதுகொடுக்கவில்லை. அத்தியாவசியமான பொருளாதாரச் செலவினங்கள், இலாபத்தொகைகளில் இருந்தும் பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களுக்கு செழிப்பூட்டி வந்திருக்கின்ற நிதி ஊகத்தின் எண்ணிலடங்கா வடிவங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற மிகப்பெரும் பணத்தொகைகளில் இருந்தும் செய்யப்படும் அத்தியாவசியமற்ற குறைப்புகளாக பார்க்கப்பட்டன.

2020 ஜனவரி ஆரம்பத்திற்குள்ளாக எல்லாம், இந்தப் பெருந்தொற்றின் வெடிப்பு பாரிய உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பது அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் அரசாங்கங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. ஆனால் கோவிட்-19 வைரஸின் கட்டுப்பாடற்ற பரவலைத் தடுப்பதற்கான அதிமுக்கியமான நடவடிக்கைகளான அனைவருக்குமான சோதனை, தொடர்பறிதல், மற்றும் அத்தியாவசியமற்ற அத்தனை வேலையிடங்களையும் கண்டிப்புடன் பூட்டுவது ஆகியவற்றை அமல்படுத்துவதானது நிதிச் சந்தைகளுக்கு பெரும் இழப்புகளைத் தரும், பாரிய கடனில் இருந்த பெருநிறுவனங்களுக்கு வேறுவழியின்றி அவசியமாக இருந்த வருவாய்களை துண்டித்து விடும் என்னும் கவலை தான் அவற்றுக்கு அதிகமாய் இருந்தது. ட்ரம்ப் நிர்வாகம் –நாடாளுமன்றத்தின் மறைமுகமான ஒப்புதலுடனேயே- அபாயத்தை திட்டமிட்டு குறைத்துக் காட்டத் தீர்மானித்தது. 2020 பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய அதிமுக்கிய மாதங்கள் வைரஸ் பரவலை மட்டுப்படுத்துவதற்காக அல்லாமல், மாறாக வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் நிதி ஊகவணிகங்களின் ஒரு பாரிய பல-டிரில்லியன்-டாலர் பிணையெடுப்புக்கு தயாரிப்பு செய்வதற்காய் பயன்படுத்தப்பட்டன.

பாதுகாப்பற்ற வேலையிடங்களையும் பள்ளிகளையும் மூடுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகள் பெருகிச் சென்றமையானது தாமதமான மற்றும் வரம்புபட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட இட்டுச்சென்றது. எனினும் 2020 மார்ச் பின்பகுதியில் நிதிய மற்றும் பெருநிறுவனப் பிணையெடுப்பு அமல்படுத்தப்பட்ட பின்னர், ஆளும் வர்க்கங்கள், “சிகிச்சையானது நோயினும் மோசமானதாய் இருக்கக் கூடாது” என்ற சுலோகத்தின் கீழ், வணிகங்களையும் பள்ளிகளையும் மீண்டும் திறப்பதற்கான ஒரு நச்சுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டன. மந்தை நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை சாதிப்பதற்காக வைரஸை சுதந்திரமாகப் பரவ அனுமதிப்பது என்ற சுவீடனின் பொறுப்பற்ற மற்றும் நாசகரமான முடிவானது அனைத்து அரசாங்கங்களுக்குமான முன்மாதிரியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முதலாளித்துவ ஊடகங்களில் ஊக்குவிக்கப்பட்டது.

மனித உயிர்களை, நிதி நலன்களுக்குக் கீழ்ப்படியச் செய்தமை தான் மில்லியன் கணக்கான அகால மரணங்களுக்குப் பொறுப்பானதாகும் என்பது மறுக்கவியலாத உண்மை. கோவிட்-19 மரணங்களின் மிகப் பெருவாரியானவை தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பெருந்தொற்றின் அழிவுகரமான பாதிப்புக்கு வைரஸின் உயிரியல் அமைப்பைக் காட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன்களே மிக அதிகக் காரணமானவை ஆகும்.

மேலும், முதலாம் உலகப் போரைப் போலவே, இந்த பெருந்தொற்றானது தேசிய அளவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமான வேர்கொண்ட பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது மற்றும் தீவிரப்படுத்தியிருக்கிறது. பெருந்தொற்றானது, பாரம்பரிய ஜனநாயக ஆட்சி வடிவங்களைக் கூட விடுவோம், சமூக ஸ்திரத்தன்மையுடனும் கூட வெளிப்பட இணக்கமற்றதாய் இருக்கின்ற சமத்துவமின்மையின் மட்டத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. ஜனாதிபதி பைடென், நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்ட உரையில், மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தீவிரமான விரக்தி நிலைமைகளின் கீழ் வாழும் சூழலில், அமெரிக்கா ஒரு செயலிழந்த சமூகமாக இருப்பதை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டார். தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு முகம்கொடுத்த, தமது குடும்பத்தார்க்கு உணவளிக்க முடியாது போன, மருத்துவ சிகிச்சைக்கு பணமற்று இருந்த அமெரிக்கர்களுடனான தனது சந்திப்புகளை அவர் குறிப்பிட்டார். கிராமப்புற அமெரிக்கர்களில் 35 சதவீதம் பேர், இணையத்திற்கு அணுகல் இல்லாது இருந்தனர் என்று பைடென் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

முந்தைய ஜனாதிபதியால் ஒழுங்கமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் மீதான ஆயுதமேந்திய பாசிசத் தாக்குதலுக்கு 114 நாட்களின் பின்னர் பேசிய பைடென் –தலைமையகக் கட்டிடத்தைச் சுற்றிய துருப்புகள் மற்றும் போலிசால் அன்று பாதுகாக்கப்பட்டார்- அமெரிக்க மக்கள் “கிளர்ச்சி மற்றும் எதேச்சாதிகாரம், பெருந்தொற்று மற்றும் வலி ஆகியவற்றின் பாதாள உலகைக் கண்ணால் பார்த்து விட்டிருக்கின்றனர்.” ஜனவரி 6 நிகழ்வுகளை ”ஒரு உயிர்வாழ்க்கை நெருக்கடி – நமது ஜனநாயகம் உயிர்பிழைக்க முடியுமா என்பதற்கான ஒரு பரீட்சை” என்று அவர் விவரித்தார்.

அதன்பின் “அந்த போராட்டமானது முடிந்துவிட்டதாகக் கூறுவதற்கெல்லாம் வெகுதொலைவில் இருக்கிறது” என்று கூறிய அவர், அமெரிக்காவில் ஜனநாயகம் உயிர்தப்புமா என்ற கேள்வியை எழுப்பினார். “நமது ஜனநாயகம் நெடுங்காலத்திற்கு தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி மிகவும் பழையது, மற்றும் அவசரமானது, நமது குடியரசின் வயதைக் கொண்டது- அது இன்றும் இன்றியமையாத கேள்வியாக இருக்கிறது.”

அமெரிக்காவின் வரலாற்றில், ஒரு ஜனாதிபதி, ஒட்டுமொத்த மக்களின் முன்னால் வழங்கப்பட்ட ஒரு பகிரங்கமான உரையில், இந்த அளவுக்கு விரக்தியையும் கையறுநிலையையும் வெளிப்படுத்திய சம்பவம் இதுவரை ஒருபோதும் நடந்ததில்லை.

இந்த உயிர்வாழ்க்கை நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதி பைடென் முன்வைத்தது என்ன? அரைவாசி நடவடிக்கைகள் மற்றும் கால்வாசி நடவடிக்கைகளின் மேலோட்டமான வாக்குறுதிகளது ஒரு வரிசையைத் தவிர வேறொன்றுமில்லை. சமத்துவமின்மை என்ற ஒரு கடலை, ஒரு தேக்கரண்டியை கொண்டு காலியாக்க அவர் முயற்சிக்கப் போகிறார். வோல் ஸ்ட்ரீட்டும் பெருநிறுவன சிலவராட்சிக் கூட்டமும் அவரது கையில் பெரும் நடவடிக்கைகளுக்கான இடத்தைத் தரப் போவதில்லை. பைடெனின் “சீர்திருத்த” வேலைத்திட்டத்தில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செல்வத்தையும் சக்தியையும் இம்மியளவு பலவீனப்படுத்துவதற்கான ஒரேயொரு நடவடிக்கையும் கூட கிடையாது. சிலவராட்சியினருக்கும் நடுத்தர வர்க்கத்தின் மிக வசதியான பிரிவுகளுக்கும் அவர் வெளிப்படையாக இவ்வாறு மறுஉறுதியளித்தார்: “உங்களால் ஒரு பில்லியனராக ஒரு மில்லியனராக ஆக முடியும் என்று நினைக்கிறேன்...” அவர்கள் தங்களின் “நியாயமான பங்கினை” செலுத்த வேண்டும் என்பது தான் அவர் கேட்பது. இவர் கேட்பது ஏதோ அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய சுரண்டல் இல்லாமல் முதலாளிகள் மில்லியன்கள் மற்றும் பில்லியன்களைக் குவிப்பது சாத்தியம் என்று சொல்வதைப் போலுள்ளது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உலகளாவிய இலக்குகளுக்கு பைடெனின் கவனம் திரும்பியபோது அவரது உண்மையான திட்டநிரல் வெளிப்பட்டது. அவர் அறிவித்தார், அமெரிக்கா ”இருபத்தியோராம் நூற்றாண்டை வெல்வதற்கான போட்டியில் சீனா மற்றும் பிற நாடுகளுடன் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. நாம் வரலாற்றில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனைப் புள்ளியில் நிற்கிறோம்.”

பைடெனின் உள்நாட்டு வேலைத்திட்டம் என்பது, முழுக்க பொருளாதார தேசியவாதம் மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்கான போராட்டம் ஆகிய விடயங்களில் கட்டப்பட்டிருந்தது. “அமெரிக்க வேலைகள் திட்டம் ஒரேயொரு கோட்பாட்டினால் வழிநடத்தப்படுவதாக இருக்கும்: அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள். அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள்” என்று அவர் சூளுரைத்தார்.

”இருபத்தியோராம் நூற்றாண்டை வெல்வதற்கு எஞ்சிய உலகுடன் நாம் நடத்துகின்ற போட்டியில்” சீனாவுடனும் மற்ற புவியரசியல் மற்றும் பொருளாதார எதிரிகளுடனும் போராடுவதற்கான தயாரிப்பில் “அமெரிக்க கோட்டை” (Fortress America) ஐ உருவாக்குவதே பைடெனின் பொருளாதார தேசியவாத வேலைத்திட்டத்தின் உந்துசக்தியாக இருக்கிறது.

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சமூக நலன்களை எந்த சுயாதீனமான விதத்திலும் வெளிப்படுத்துவதை ஒடுக்குவது என்பது உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் ஒரு அத்தியாவசியமான மற்றும் இன்றியமையாத மூலபாகமாக இருக்கிறது.

பெருந்தொற்றானது கடந்த தசாப்தம் முழுமையாக அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த தொழிலாள-வர்க்க தீவிரப்படல் நிகழ்ச்சிப்போக்கை மேலும் வேகமெடுக்கச் செய்திருக்கிறது என்பதை பைடென் நிர்வாகமும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் முழுமையாக அறியும். இருகட்சி ஆட்சிமுறை, பரப்புரை ஊடகங்கள், பொழுதுபோக்கு-விளையாட்டு-மத தொழிற்துறைகள், இன மற்றும் பாலின அரசியலின் கல்விச்சாலை கோட்டைகள், மற்றும் நிலவுகின்ற தொழிற்சங்கங்கள் ஆகிய இருக்கின்ற அத்தனை ஸ்தாபக அமைப்புகளையும் மீறி வர்க்கப் போராட்டத்தின் கட்டுப்பாடற்ற வெடிப்பு ஒன்று வெடிப்பதைக் குறித்தே ஆளும் வர்க்கத்தின் மிகப்பெரும் அச்சம் அமைந்திருக்கிறது.

குறிப்பாக AFL-CIO மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தொழிற்சங்கங்களது மதிப்பிழப்பு மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பது தான் ஆளும் வர்க்கத்திற்குள்ளாக ஆழமான கவலையைத் தோற்றுவிக்கிறது. கடந்த நான்கு தசாப்தங்களாக, அமெரிக்க ஆளும்வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பை ஒடுக்குவதற்கு இந்த ஊழலடைந்த அமைப்புகளையே –”தொழிற்சங்கங்கள்” என்பது பெயரில் மட்டும்தான்- நம்பி வந்திருக்கிறது. பில்லியன் கணக்கான டாலர்களை ஊதியங்களாகப் பெறுகின்ற செயலதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளை ஆயிரக்கணக்கில் கொண்டிருக்கும் இந்த பிற்போக்குத்தனமான மற்றும் ஒடுக்குகின்ற தொழிலாள-வர்க்க-விரோத பெருநிறுவனக் கூட்டமைப்புகள் தங்களது வேலையை மிகப்பெரும் திறன்வீதத்துடன் செய்து வந்திருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில், வேலைநிறுத்தங்கள் கிட்டத்தட்ட காணாமல் போயிருக்கின்றன, ஊதியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன, மில்லியன் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சூழலுக்குள்ளாக, நிலவும் தொழிற்சங்கங்களை வலுப்படுத்துவதற்கான பைடெனின் அழைப்பு என்பது தொழிலாள வர்க்க போர்க்குணத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல, மாறாக முன்கூட்டியே அதன் அபிவிருத்தியை இல்லாதுசெய்வதும் அது தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதை உறுதிசெய்வதுமே ஆகும்.

1920 மற்றும் 1930 களில் பாசிச ஆட்சிகளின் கீழ் நிறுவப்பட்ட கூட்டுறவு மேலாண்மை மற்றும் உத்தியோகபூர்வ அரசாங்கத்தால் இயக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பலவந்தமான ஒருங்கிணைப்பின் அடிப்படையில் பைடென் உருவாக்குவது பெருநிறுவன அரச கட்டமைப்பை ஒத்திருக்கிறது. இந்த செயல்முறையை இயக்கும் புறநிலை பொருளாதார தூண்டுதலை ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

ஏகபோக முதலாளித்துவம் போட்டி மற்றும் சுதந்திரமான தனியார் முன்முயற்சியிலும் அல்ல, மாறாக மையப்படுத்தப்பட்ட கட்டளை மீது தங்கியிருக்கிறது. வலிமைமிக்க அறக்கட்டளைகள், சிண்டிகேட்டுகள், வங்கி கூட்டமைப்புகள் மற்றும் பலவற்றின் தலைமையிலான முதலாளித்துவ குழுக்கள், பொருளாதார சக்தியை அரசு அதிகாரத்தைப் போலவே உயரத்திலிருந்து பார்க்கின்றன; அதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிந்தையதன் ஒத்துழைப்பு தேவை. … தொழிற்சங்கங்களை அரசின் அங்கங்களாக மாற்றுவதன் மூலம், பாசிசம் ஒன்றையும் புதிதாக கண்டுபிடிப்பதில்லை; இது ஏகாதிபத்தியத்தில் உள்ளார்ந்த போக்குகளின் இறுதி முடிவுக்கு ஈர்க்கிறது.

பைடென் நிர்வாகம் பாசிசமானது அல்ல, ஆனால் அதன் கொள்கைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் கட்டாயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன, ஒரு பாசிச ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் செயல்படுத்தப்படும் கொள்கைகளை எதிர்பார்க்கலாம், வரம்பற்ற மிருகத்தனத்துடனும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்துவதில் எந்தவொரு சட்டரீதியான கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கும்.

இது எந்தவிதத்திலும் ஒரு தூய அமெரிக்க நிகழ்வுப்போக்காக இருக்கவில்லை. குறிப்பிட்ட முதலாளித்துவ அரசாங்கங்களால் பிரயோகிக்கப்படுகின்ற வழிமுறைகள் தேசிய நிலைமைகள் மற்றும் பாரம்பரியங்களால் செல்வாக்கு செலுத்தப்படுவனவாக இருக்கின்றன என்றபோதும், தொழிலாள வர்க்க போராட்டத்தை முன்னெப்போதினும் கடுமையாக அடக்குவதையும் ஒடுக்குவதையும் நோக்கிய மிக அடிப்படையான போக்கு ஒவ்வொரு நாட்டிலும் வெளிப்படுத்திக்காட்டுகின்றன. ஆளும் உயரடுக்கினரால் பின்பற்றப்படுகின்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச திட்டநிரல்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சமூக நலன்களை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் பெற அனுமதிக்கப்பட முடியாது என அவர்கள் கருதுகின்றர்கள். சமூகக் கட்டுப்பாட்டை பராமரிக்க, இராணுவமும் போலிசும் அவர்களுக்கு போதுமானதில்லை. எனவே குறிப்பாக சமூக தீவிரப்படல் பெருகிச்செல்கின்றதொரு காலகட்டத்தில், இந்த அடிப்படை ஒடுக்குமுறை சக்திகளை முதிர்ச்சியற்று நிலைநிறுத்துவதென்பது அரசியல் நாசத்தில் விளையலாம். தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ திட்டநிரலுடன் இறுக்கப் பிணைத்து வைப்பதே தொழிற்சங்கங்களது வேலையாக உள்ளது. தொழிற்சங்க எந்திரத்தால் வேலைநிறுத்தங்களை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாது போனால், அவற்றை ஒடுக்க வேண்டும், உரியநேரத்தில் அவை காட்டிக்கொடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். தொழிற்சங்கங்களால் நடத்தப்படுகின்ற காட்டிக்கொடுப்புகள் உருவாக்குகின்ற விரக்தியானது பாசிசம் வெற்றி காண்பதற்கு பாதை வகுக்கிறது.

இந்தத் தோற்கடிப்புகள் தடுக்கப்பட்டாக வேண்டும். வர்க்கப் போராட்டம் –மனித நாகரிகத்தின் புரட்சிகர புதுப்பிப்பும் முறபோக்கு அபிவிருத்தியும் இந்த அத்தியாவசிய சமூக நிகழ்ச்சிப்போக்கையே சார்ந்துள்ளது- ஒடுக்கப்படக் கூடாது. அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் ஆக்க சக்தி கட்டவிழ்த்து விடப்பட்டாக வேண்டும்.

இந்த பெருந்தொற்று இறுதியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென்றால், போரை நோக்கிய முனைப்பு தடுத்துநிறுத்தப்பட வேண்டுமென்றால், சர்வாதிகாரம் தடுத்துநிறுத்தப்பட வேண்டுமென்றால், ஒரு சுற்றுச்சூழலியல் பேரழிவு தவிர்க்கப்பட வேண்டுமென்றால், சோசலிசப் போராட்டத்தின் புதிய வழிவகைகளும் சாதனங்களும் உருவாக்கப்பட்டாக வேண்டும்.

ஆகவே தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களது சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியை (IWA-RFC) உருவாக்க அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த உலகளாவிய முன்முயற்சியின் நோக்கம், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான பரந்த அடித்தளம் கொண்ட ஒரு இயக்கத்தை உருவாக்குவதும், வலது-சாரி முதலாளித்துவ ஆதரவு நிர்வாகிகள் பதவியிலிருக்கும் அரசு-கட்டுப்பாட்டிலான ஜனநாயக-விரோத தொழிற்சங்கங்களின் மூலமாக இப்போது அடைக்கப்பட்டிருக்கின்ற சிறைச்சாலை போன்ற கைவிலங்குகளில் இருந்து முறித்துக் கொண்டு வெளிவருவதற்கு அத்தனை நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களை ஊக்குவிப்பதாகும்.

IWA-RFC தேசிய தடைகளை முறிப்பதற்கும், நிற, இன மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட அடையாள அரசியல் வடிவங்களை ஊக்குவிப்பதன் மூலமாக வர்க்க ஐக்கியத்தை பலவீனப்படுத்துவதற்காக செய்யப்படுகின்ற அத்தனை முயற்சிகளையும் எதிர்ப்பதற்கும், அத்துடன் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தை ஒருங்கிணைக்க வழிவகை ஏற்படுத்துவதற்கும் போராடும்.

IWA-RFC ஐ உருவாக்குவதிலும் கட்டியெழுப்புவதிலும் தொழிலாளர்களுக்கு உதவுகின்ற முயற்சியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும், மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், இந்த முயற்சிகளுக்கு ஒரு தெளிவான சர்வதேச மூலோபாயத்தைக் கொண்டுசேர்ப்பதற்கும், உள்ளூர் போராட்டங்களுக்கும் முதலாளித்துவத்திற்கு மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் கட்டவிழ்கின்ற உலகளாவிய போராட்டத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்குவதற்கும் விழையும்.

முதலாம் உலகப் போரின் இருண்ட நேரத்தில், ட்ரொட்ஸ்கி, உலகளாவிய நெருக்கடி புரட்சிகர மாற்றத்திற்கான சக்திவாய்ந்த படைகளை கட்டவிழ்க்க இருப்பதை கண்டுகொண்டார். அவர் எழுதினார்:

”புரட்சிகர சகாப்தமானது, பாட்டாளி வர்க்க சோசலிசத்தின் வற்றாத வளங்களில் இருந்து புதிய அமைப்பு வடிவங்களை உருவாக்கும். இந்த புதிய வடிவங்கள் புதிய கடமைகளின் அளவிற்கு வளர்ச்சி அடைந்ததாக இருக்கும்.”

இந்த வார்த்தைகள் இன்றைய உலகத்தின் நெருக்கடிக்கு இன்னும் கூடுதல் ஆற்றலுடன் பொருந்தக் கூடியனவாக இருக்கின்றன. புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு புதிய சகாப்தத்தின் கோரிக்கைகளுக்கான பதிலிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய அமைப்பு வடிவமாக சாமானியத் தொழிலாளர் குழுக்களது சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணி (IWA-RFC) அமைகிறது.

சர்வதேசத் தொழிலாள வர்க்கமும் சோசலிசமுமே இருபத்தியோராம் நூற்றாண்டை வெற்றிகாணவிருக்கின்றன.

Loading