இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அன்றாடம் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் உலக எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதிப்பேர் இந்தியர்களாக இருக்கின்றனர். இவ்வாறு கொவிட்-19 சுனாமியால் இந்தியா நாசமாகி வருகின்ற நிலையில், பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் இலங்கையும் ஒரு புதிய அலையை எதிர்கொள்கிறது. உலக சுகாதார அமைப்பின் கொழும்பு அலுவலகத்தின் பொறுப்பாளர் வைத்தியர் ஒலிவியா நிவேராஸ், 'சமீபத்திய கொரோனா வைரஸ் எழுச்சியை பாரதூரமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று இலங்கையை கடந்த வாரம் வலியுறுத்தினார்.
நாட்டின் 22 மில்லியன் மக்கள் மத்தியில் புதிய அலையின் தாக்கமானது, மற்ற நாடுகளைப் போலல்லாமல் இலங்கை தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷ மீண்டும் மீண்டும் கூறிவந்தமைக்கு முடிவுகட்டியுள்ளது.
முதன்முறையாக, உத்தியோகபூர்வ தினசரி புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து நாட்களாக 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து இலங்கையின் சீரழிந்த சுகாதார உள்கட்டமைப்பை திணறடித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 117,000 ஐத் தாண்டியுள்ளதுடன், இறப்பு எண்ணிக்கை 730 ஆக உயர்ந்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே, தொற்றுநோய் செயலணியின் தலைவராக இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை நியமித்து, இராஜபக்ஷ இராணுவத்திடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார். அது வெகுஜன பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு சுகாதார நிபுணர்கள் விடுக்கும் அறிவுறுத்தல்களை புறக்கணித்து, மட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகளுக்கே உத்தரவிட்டது. அதனால், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் எப்போதும் குறைவாகவே இருப்பதோடு, உண்மையான நிலைமை குறைத்தே காட்டப்படுகின்றது.
இலங்கை மருத்துவ சங்கத் தலைவர் வைத்தியர் பத்மா குணசேகர செவ்வாயன்று ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: “தினசரி 1,800 இற்கு அதிகமான கொவிட் நோயாளிகள் அடையாளம் காணப்படும் போது, சமூகத்தில் மூன்று முதல் நான்கு மடங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதில்லை.” இலங்கையிலும் தொற்றுநோய் இந்தியாவில் அல்லது பிரேசிலில் போல் வேகமாக பரவும் என்று முன்னதாகவே அவளும் ஏனைய மருத்துவ நிபுணர்களும் எச்சரித்தனர்.
50 சதவிகிதம் அதிகமாக பரவக் கூடிய, 55 சதவிகிதம் அதிகமாக மரணம் விளைவிப்பதாகவும் இருக்கும் வைரஸின் இங்கிலாந்து திரிபு வகை, மார்ச் மாதத்திலிருந்தே நாட்டில் பரவி வருகிறது என்ற நிபுணர்களின் அறிவுறுத்தல்களை அரசாங்கம் அலட்சியம் செய்து வந்துள்ளது. ஆனால் அவற்றைப் பற்றி முறையாக ஆராய்ச்சி செய்வதற்கான உபகரணங்கள் இலங்கையில் கிடையாது.
வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், 14,500 படுக்கைகள் மட்டுமே உள்ள நாட்டின் மருத்துவமனைகளின் மிகக் குறைந்த கொள்ளவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி வெளிப்படுத்தினார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு, 64 உயர் உயிர்காப்பு அலகுகளைக் கொண்ட வெறும் 104 அதிதீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு புறநகர் மற்றும் தொலைதூரப் பிரதேசங்களில் கைவிடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளை கொவிட்-19 சிகிச்சை மையங்களாக “மாற்றுவதற்கான” நடவடிக்கைகளை தனது செயலணி தொடங்கியுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். ஆனால், இந்த வசதிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், முன்நிலை சுகாதார ஊழியர்கள் மீது அதிக சுமை திணிக்கப்படும்.
அதே நேரம், நோயாளர்களை கொண்டு செல்வதற்கு நோயாளர் காவுவண்டிகளுக்கு பாரியளவு பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கானோர் சரியான பராமரிப்பு இல்லாமல் வீடுகளில் தங்கியுள்ளனர். இந்தியாவில் பல உயிர்களைப் பறித்த ஆக்ஸிஜனின் பற்றாக்குறை சம்பந்தமாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
நிலைமை இவ்வாறு வேகமாக மோசமடைவதானது இராஜபக்ஷ அரசாங்கத்தின் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் குற்றவியல் கொள்கைகளின் விளைவாகும். தொற்றுநோய் தொடங்கிய 16 மாதங்களில் கூட, நாட்டின் ஸ்திரமற்ற சுகாதார முறைமையை சரிசெய்ய அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்தங்களாக நீடித்த இனவாதப் போருக்கு பிரமாண்டமான தொகை நிதியை செலவழித்த அதே வேளை, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் திறந்த சந்தைக் கொள்கைகளைப் பின்பற்றி, தனியார் மருத்துவமனைகளுக்கு வாய்ப்புகளைத் திறந்து விட்டதால், இலவச சுகாதார சேவை கடந்த 30 ஆண்டுகளாக சீரழிந்து வருகின்றது.
இராஜபக்ஷவின் கீழ், 2021 சுகாதார வரவுசெலவுத் திட்டம், 28 பில்லியன் ரூபாய்களால் (140 மில்லியன் அமெரிக்க டாலர்) குறைக்கப்பட்டதுடன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 2021 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபாய், அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் மட்டுமே சேர்க்கப்பட்டது.
ஏப்ரல் 24 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, ஒரு தேசிய முடக்கத்தை அமுல்படுத்தமாட்டேன் என்று உறுதியளித்தார். 'இலங்கை போன்ற வளரும் நாடுகள் பொதுமுடக்க நடவடிக்கைகளை எடுக்கவோ அல்லது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்கவோ முடியாது' என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் 19 அன்று, தொற்றுநோய்க்கு அவரது பிரதிபலிப்பு சம்பந்தமான வெகுஜன அதிருப்தியையும் விமர்சனத்தையும் எதிர்கொண்ட இராஜபக்ஷ, பல வாரங்கள் தயக்கத்துடன நாட்டை பொதுமுடக்கம் செய்தார். பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு மிகக் குறைந்த சமூக மானியம் வழங்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பெருவணிகங்களுக்கு குறைந்தபட்சம் 230 பில்லியன் ரூபாயை வழங்குமாறு இராஜபக்ஷ மத்திய வங்கிக்கு உத்தரவிட்டார்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களை அடியொற்றிய இராஜபக்ஷ, “பொருளாதாரத்தை மீண்டும் திறந்ததோடு”, மக்கள் “தொற்றுநோயுடன் வாழ” கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். இது, மனித உயிர் வாழ்வுக்கு மேலாக இலாபத்தை தூக்கி வைக்கின்ற, “நோயை சமூகமயமாக்கி கட்டுப்படுத்துகின்ற” கொலைகாரத்தனமான கொள்கையைத் தவிர வேறில்லை.
முதலாளிமார் சம்மேளனத்திற்கு உரையாற்றிய ஜனாதிபதி, தொற்றுநோயால் உருவாக்கப்பட்டுள்ள 'வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள' வேண்டும் என முதலீட்டாளர்களை வலியுறுத்தினார். வேலைகள் மற்றும் ஊதியங்கள் வெட்டப்பட்டுள்ளன. முக்கியமாக முறைசாரா துறையில் குறைந்தபட்சம் 500,000 தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 500,000 மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், நாட்டின் ஒன்பது உயர்மட்ட வணிக நிறுவனங்கள், கடந்த ஆண்டு 80 பில்லியனுக்கும் அதிகமான ரூபாயை இலாபமாக ஈட்டியுள்ளன.
தொழிற்சாலைகளில் தொற்றுநோய் பரவுவதால் தொழிலாளர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பின் மத்தியிலும், முதலாளிகள் தொழிற்சாலைகளை இயக்குவதற்கு அரசாங்கம் ஆதரவளித்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி அரசாங்கம் பாடசாலைகளை மீண்டும் திறந்து விட்டுள்ளது. ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டது என்ற மாயையை மீண்டும் திணிப்பதற்காக, மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைகளையும் மீறி, ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டன.
தொற்றுநோய்க்கு ஒரே தீர்வு தடுப்பூசி செலுத்துவதே என்று இராஜபக்ஷ கபடத்தனமாக அறிவித்துள்ளார். இருப்பினும், நாட்டில் 2.4 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏனைய வறிய நாடுகளைப் போலவே, இலங்கையிலும் தடுப்பூசித் திட்டம் அரசாங்கக் கொள்கையால் மட்டுமல்லாமல், செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளை ஏகபோக உரிமையாக்கிக்கொண்டிருப்பதாலும், தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்களின் இலாப நோக்கத்தினாலும் தடைபட்டுள்ளது.
பரவலான வெகுஜன அதிருப்திக்கு மத்தியில், நாட்டின் சில பகுதிகளை முடக்குவதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பொது சுகாதார ஆய்வாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்களும் கோரிக்கை விடுத்தபோதிலும், எந்தவொரு தொழிற்சாலையும் அலுவலகங்களும் மூடப்படவில்லை. வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தொழிலாளர்கள் வேலை செய்ய தயக்கம் காட்டியதை அடுத்து, கிராமப்புறமான பிங்கிரிய பகுதியில் உள்ள பெஞ்சி ஆடை தொழிற்சாலையை மூடுமாறு கோரிக்கை வைத்து, போராட்டங்கள் எழுந்தன.
தொழிலாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு இராஜபக்ஷ அரசாங்கத்தை நம்ப முடியாது. எவரும் எதிர்க்கட்சிகளையும் நம்பியிருக்க முடியாது – ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), தமிழ் தேசிய கூட்டமைப்பு, போலி இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுமாக அனைத்தும், பொருளாதாரத்தை மீண்டும் திறக்க ஆதரவளித்துள்ளன.
தொழிலாளர்கள் விடயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் அணிதிரள்வதற்கான மையத்தை உருவாக்குவதற்காக ஒவ்வொரு தொழிற்சாலையிலும் அயல் பிரதேசங்களிலும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகள் மற்றும் தொழில்துறைகளை முழுமையாக பூட்டுவதற்கு தொழிலாள வர்க்கம் வலியுறுத்த வேண்டும். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களுக்கு வைரஸிலிருந்து சரியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
தொழில்களை இழப்பவர்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஏழை விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு தொழில்களுக்கு சமூக ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இணையவழி கற்றலுக்கு தேவையான வசதிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
சுகாதாரத் துறையை உடனடியாக மாற்றியமைப்பதற்கும், முன்நிலை தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் பில்லியன் கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
பெருவணிக இலாபங்களை பறிமுதல் செய்து, அவற்றை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டுக் கடன்கள் நிராகரிக்கப்பட்டு, திருப்பிச் செலுத்துவதற்கான பணம், சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு சமூகத் தேவைகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.
சோசலிச கொள்கைகளுக்காகவும் அவற்றை அமுல்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும் முன்னெடுக்கும் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர் வர்க்கம் அதன் சுயாதீன வலிமையை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, தொழிலாளர் வர்க்கத்தால் மேற்கூறிய நடவடிக்கைகளை அமுல்படுத்த முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) வலியுறுத்துகிறது.
தொற்றுநோயை ஒழிப்பது என்பது, உலகளவில் ஒழுங்கமைக்கப்பட வேண்டிய ஒரு இன்றியமையாத சர்வதேச பணியாகும். 2021 மே தினத்தன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, நடவடிக்கை குழுக்களின் ஒரு சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்கான அழைப்பை வெளியிட்டது.
'உலகளாவிய பேரழிவிற்கு காரணமான முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கங்களின் படுகொலை கொள்கைகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர்ப்பைத் தொடங்குவதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவ கட்சிகளும் இந்த முன்முயற்சியை அபிவிருத்தி செய்துவருகின்றன,' என அந்த அழைப்பு கூறியது.
இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை ஒழுங்கமைக்குமாறும் இந்த சர்வதேச பிரச்சாரத்தில் இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றது.