மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செவ்வாய்க்கிழமை மாட்ரிட் பிராந்திய தேர்தல்களின் முடிவு ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். 1936 இல் ஒரு பாசிச சதி ஸ்பெயினின் உள்நாட்டுப் போரை ஆரம்பித்து எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சதித்திட்டத்தின் பாதுகாவலர்கள் மாட்ரிட்டில் பதவியேற்கின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் பாசிச வன்முறைகள் நிறைந்த ஒரு இழிவான நிகழ்வாகும். தற்போதைய வலதுசாரி மக்கள் கட்சி (PP) ஆளுநர் இசபெல் டியஸ் ஆயுசோ, “கம்யூனிசம் அல்லது சுதந்திரம்” என்ற முழக்கத்தில் பிரச்சாரம் செய்தார். கோவிட்-19 பூட்டுதல்களை “கம்யூனிஸ்ட்” என்று எதிர்த்து, சமூக விலக்கலை முடிவுக்குக் கொண்டு, வெகுஜன தொற்றுநோய்களை அனுமதிப்பதன் மூலம் “சுதந்திரத்தை” பாதுகாக்க அழைப்பு விடுத்தார். அவர் பிராங்கோவின் சதியை பகிரங்கமாக பாராட்டும் தீவிர வலதுசாரி வோக்ஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தார்.
ஸ்பெயினின் அரசு ஆயுதக் களஞ்சியங்களிலிருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்களுடன் பாசிச மரண அச்சுறுத்தல்கள் பெருவணிக சார்பு ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சியின் (PSOE) அதிகாரிகளுக்கும், பொடேமோஸின் முன்னணி மாட்ரிட் பிராந்திய வேட்பாளர் பப்லோ இக்லெசியாக்கும் அனுப்பப்பட்டன.
ஆயினும்கூட, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) கோவிட்-19 கொள்கைகள் ஸ்பெயினில் 100,000 க்கும் அதிகமான இறப்புகளுக்கு வழிவகுத்த பின்னரும், மக்கள் கட்சி-வோக்ஸ் கூட்டணி 54 சதவீத வாக்குகளைப் பெற்றது. குறிப்பிடத்தக்க வகையில், மக்கள் கட்சி தனது ஆதரவை அதன் பாரம்பரிய ஆதரவுதளத்திற்கு அப்பால் மாட்ரிட்டின் செல்வந்த வடக்கு மாவட்டங்களிலும் பெற்றுக்கொண்டது. இது பிராந்தியத்தின் 179 வட்டாரங்களில் 175 இல் முன்னணியில் வந்தது. இதில் நகரின் தெற்கு தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகள் அடங்கும். இப்பகுதிகள் பாரம்பரியமாக ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சி அல்லது அதன் கூட்டாளிகளுக்கு வாக்களிப்பதற்கும் மற்றும் பிராங்கோவாதத்தை எதிர்ப்பதனாலும் “சிகப்பு வளையம்” என்று பாரம்பரியமாக அழைக்கப்படுகிறது.
இது ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சி-பொடேமோஸ் தேசிய அரசாங்கத்திற்கும், தனிப்பட்ட முறையில் இக்லெசியாஸுக்கும் ஒரு தோல்வியாக இருந்தது. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகக் இப்போது அறிவித்துள்ளார். இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு எச்சரிக்கையாகும். தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தை மீண்டும் திறக்கும் கொள்கைகளை அமல்படுத்துவது உட்பட, ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய மூலதனத்தின் நலன்களை இரக்கமின்றி முன்னெடுப்பதன் மூலம், பொடேமோஸ் போன்ற வசதியான நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது கட்சிகள் பாசிச சக்திகளை பலப்படுத்துகின்றன.
ஐரோப்பாவில் கோவிட-19 காரணமாக ஒரு மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். மேலும் வைரஸ் இன்னும் பெருமளவில் பரவி வருகிறது. நேற்று, ஸ்பெயினில் 7,960 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 160 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2,074 நோய்த்தொற்றுகள் மற்றும் 19 இறப்புகள் மாட்ரிட்டில் பதிவாகியுள்ளன. இருப்பினும், ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பொடேமோஸ் பூட்டுதல், ஊரடங்கு உத்தரவு மற்றும் முககவசம்அணிதல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்த அனுமதிக்கும் ஸ்பெயினின் "எச்சரிக்கை நிலையை" முடிவுக்குக் கொண்டுவருகின்றன. இந்த வார இறுதியில் மாட்ரிட்டில் ஊரடங்கு உத்தரவு நீக்கி உணவகங்கள், காளைச் சண்டைகள், வழிபாட்டு இல்லங்கள், சூதாட்ட நிலையங்கள் மற்றும் பிற இடங்களை மீண்டும் திறக்க ஆயுசோ திட்டமிட்டுள்ளார்.
வைரஸின் எழுச்சி இருந்தபோதிலும் வங்கிகள் மற்றும் வணிகங்களின் இலாபத்தை அதிகரிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சமூக விலகலை முடிவுக்கு கொண்டுவர முற்படுகையில், ஆளும் உயரடுக்கு தீவிர வலதுசாரிகளுக்கு அதிக சக்தியை வழங்குவது குறித்து விவாதித்து வருகிறது. பிரான்சில் நவபாசிச மரின் லு பென் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இமானுவல் மக்ரோனை பதவி நீக்கம் செய்ய அச்சுறுத்துகையில், இராணுவ அதிகாரிகளும் ஒரு சதித்திட்டத்துடன் அச்சுறுத்துகின்றனர். இத்தாலிய பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் அபிமானி நவ-பாசிச மத்தியோ சால்வினி, ஸ்பெயினின் சமூக-ஜனநாயக நாளேடான El Pais இடம் உற்சாகமாக: “ஆயுசோவின் மக்கள் கட்சியுடன் எனக்கு பல உறவுகள் உள்ளன” எனக் கூறினார்.
வியாழக்கிழமை, முன்னாள் மக்கள் கட்சி பிரதம மந்திரி ஜோஸ் மரியா அஸ்னார், வோக்ஸ் கட்சியுடன் ஒரு "ஒன்றியத்தின் படையை" அமைக்குமாறு கூறினார். இது மக்களின் ஜனநாயகப் பெண்ணாக தன்னை காட்டிக் கொள்ள ஆயுசோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு இது பொய்யை வழங்குகிறது: “சிகப்பு வளையம், ஊதாநிற வளையம்? இல்லை! 21 ஆம் நூற்றாண்டின் சுதந்திர மக்கள்! சுயதொழில் செய்பவர்கள், வணிகர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், தங்கள் குடும்பங்களையும் தொழில்களையும் முன்னோக்கி கொண்டு செல்லும் ஆண்களும் மற்றும் பெண்களும். அதுதான் மாட்ரிட்டின் தெற்கு” என்று ஆயுசோ ஒரு ட்வீட் செய்தார்.
உண்மையில், ஆயுசோ "சமூக கொலை" என்ற சுகாதாரக் கொள்கையை பின்பற்றுகிறார். மேலும் ஒரு சதிக்கவிழ்ப்பைத் திட்டமிடும் அதிகாரி படையில் உள்ள பிராங்கோ சார்பு சக்திகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளார். கடந்த இலையுதிர்காலத்தில் வைரஸ் பாரியளவில் பரவுகின்ற போதிலும் பள்ளிக்குத் திரும்புமாறு கோரிய ஆயுசோவின் கொள்கை ஆர்ப்பாட்டங்களை தூண்டியது: "நடைமுறையில் அனைத்து குழந்தைகளும், ஏதோ ஒரு வழியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்பது சாத்தியமே" என்று கூறினார். கோவிட் 19 நேர்மறையான வயோதிபர் இல்லங்களின் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை மறுப்பதற்கான அவரது அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக அவர் வழக்குகளை எதிர்கொள்கிறார். அவர்களில் 5,000 பேர் இறந்தனர்.
ஆயுசோ வோக்ஸுடனான தனது உறவைப் பாதுகாக்கிறார். தனது பாசிச கூட்டணிகளைப் பற்றிய விமர்சனங்கள் அவர் "வரலாற்றின் சரியான பக்கத்தில்" இருப்பதை நிரூபிப்பதாகக் கூறுகிறார். கடந்த டிசம்பரில் வோக்ஸ் அதிகாரிகள் ஓய்வுபெற்ற தளபதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பாசிசத்திற்கு தமது விசுவாசத்தை அறிவித்துள்ளதுடன் மற்றும் 2020 மார்ச் மாதம் கோவிட்-19 கொள்கைக்கு எதிராக வீட்டில் பாதுகாப்பாக இருக்க கோரிய தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெளிநடப்புக்கு பின்னர் "26 மில்லியன்" ஸ்பானியர்களைக் கொல்ல அழைப்பு விடுத்தனர்.
ஆயுசோவின் வெற்றிக்கான முழுப்பொறுப்பும் பொடேமோஸிற்கே உரியது. அதன் பிற்போக்கு கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தை கோபப்படுத்தி குழப்புகின்றன. ஐரோப்பா முழுவதிலும் உள்ள மற்ற போலி-இடது கட்சிகளைப் போலவே, பொடேமோஸ் தொழிற்சங்கங்களுடன் இணைந்து கடந்த வசந்த காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கான வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தினார். வேலைநிறுத்தம் செய்யும் எஃகுத் தொழிலாளர்களைத் தாக்க காவல்துறையையும் அனுப்பினார். கடந்த வசந்த காலத்தில் ஒரு கடுமையான பூட்டுதலுக்கு ஒப்புக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்ட பொடேமோஸ், அதன் பின்னர் பகுதி "பூட்டுதல்களை" மட்டுமே செயல்படுத்தியது. வைரஸ் மில்லியன் கணக்கானவர்களை பாதித்தபோதும் கடந்த ஆண்டு முழுவதும் அத்தியாவசியமற்ற வேலைகளில் தொழிலாளர்களையும் மற்றும் இளைஞர்களையும் பள்ளியிலும் வைத்திருந்தது.
மேலும், வோக்ஸ் மற்றும் ஓய்வுபெற்ற ஸ்பானிய தளபதிகள் செய்த சதி அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுவதற்கான நடவடிக்கையை இக்லெசியாஸ் தனிப்பட்ட முறையில் வழிநடத்தினார். டிசம்பரில் இந்த அறிக்கைகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து கோபம் வெடித்தபோது, ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சி-பொடேமோஸ் அரசாங்கம் பொதுமக்களை அமைதிப்படுத்த அவரை பொது தொலைக்காட்சிக்கு அனுப்பியது: "இந்த மனிதர்கள் தங்கள் வயதான நேரத்தில் ஏற்கனவே ஓய்வு பெற்ற இவர்கள் சில மதுபானங்கள் அருந்திய பின்னர் கூறியவை. இது எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்காது” என்று கூறினார்.
மாட்ரிட் தேர்தல்களில் நுழைவதற்கான அவரது முடிவு, "பாசிசத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்காக" ஒரு முழுமையான போராட்டத்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு இழிந்த தேர்தல் சூழ்ச்சியாகும். வோக்ஸ் ஆதரவாளர்கள் தொழிலாள வர்க்க மாட்ரிட் புறநகர்ப் பகுதியான வலேகாஸ் வழியாக அணிவகுத்துச் சென்றபோது, அவரது அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்க கலகப் பிரிவு போலீஸை அனுப்பியதுடன், வாலெகாஸ் குடியிருப்பாளர்களுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என்று அழைப்பு விடுத்தது.
இக்லெசியாஸ் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான ஒரு போராட்டத்தை வழிநடத்தவில்லை, மாறாக ஸ்பெயினின் முதலாளித்துவ அரசையும் அதன் தீவிர வலதுசாரி கையாட்களையும் தொழிலாள வர்க்கத்தை நிலைகுலைய செய்வதன் மூலம் பாதுகாத்தார்.
இந்த அழுகிய வரலாறு ஆயுசோவுக்கு எதிராக கூட போடெமோஸை தோற்கடிக்க அனுப்பியது. பாரிய மரணங்களைத் தடுக்காத தொடர்ச்சியான அரைகுறை "பூட்டுதல்களை" மட்டுமே எதிர்கொண்டு, தொழிலாளர்கள் அதன் வெற்று வார்த்தையாடல்களால் அசைக்கப்படவில்லை. தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களின் பரந்த அடுக்குகள் குறைந்த அல்லது வருமானத்தையே பெறாத நிலையில், ஆயுசோவின் பொய் மற்றும் “சுதந்திரம்” பற்றிய கம்யூனிச-எதிர்ப்பு வார்த்தையாடல்களால் மற்றும் இயல்பு நிலைக்கு திரும்புவது ஆதரவுபெற்றுள்ளது.
இதேபோன்ற தேர்தல் முடிவுகளை உருவாக்கக்கூடிய இதேபோன்ற நிலைமைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் உள்ளன என்பதையும் ஒருவர் குறிப்பிடலாம்.
ஸ்பெயினில் 100,000 க்கும் அதிகமான இறப்புகள் மற்றும் மாட்ரிட்டில் மக்கள் கட்சி மற்றும் வோக்ஸ் அதிகாரத்திற்கு வந்தபின், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: எவ்வாறாயினும், பாரிய கோவிட்-19 இறப்புகள் மற்றும் தீவிர வலதுசாரி சர்வாதிகார ஆட்சியின் அச்சுறுத்தல் மிகவும் உண்மையானது. இந்தத் தேர்தல் மார்க்சிச எதிர்ப்பு முன்னோக்குகள் மற்றும் போடெமோஸின் பின்நவீனத்துவ தத்துவார்த்த அடித்தளங்கள் மற்றும் சர்வதேச அளவில் "இடது ஜனரஞ்சக" கட்சிகள் என்று அழைக்கப்படுபவர்களின் பேரழிவு வெளிப்பாடாகும்.
பொடேமோஸின் முக்கிய கல்வி எழுத்தாளர் சாண்டல் மூஃவ் தனது 2018 ஆம் ஆண்டு இடது ஜனரஞ்சகத்திற்காக For a Left Populism என்ற துண்டுப்பிரசுரத்தில், “சோசலிசப் புரட்சியை தாங்கிசெல்லும் வாகனமாக தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட ஒரு இருப்பியல் முன்னுரிமையை காரணம் கூறுபவர்களைக் கண்டித்தார். இந்த ஆண்டு இக்லெசியாஸைப் போலவே, அவர் சோசலிசத்திற்கான போராட்டத்தை நிராகரித்து, அதற்கு பதிலாக ஜனநாயகத்திற்காக போராட அழைப்பு விடுத்தார். அடையாள அரசியலை அடிப்படையாகக் கொண்ட பெருவணிக ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சி, பொடேமோஸ் மற்றும் பல்வேறு நடுத்தர வர்க்க பெண்ணிய அல்லது தேசியவாத குழுக்களுக்கு இடையிலான கூட்டணி ஸ்பெயினில் இருந்ததற்கான அடித்தளத்தை அவர் இட்டார்.
"அவசரமாகத் தேவைப்படுவது, ஒரு மேலதிக ஜனநாயக உருவாக்கத்தை ஸ்தாபிப்பதற்காக, ஜனநாயகத்திற்கு பிந்தையகாலத்திற்கு எதிராக பல்வேறு வகையான ஜனநாயக எதிர்ப்புகளை ஒன்றிணைத்து, ஒரு "மக்களை" நிர்மாணிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு இடது ஜனரஞ்சக மூலோபாயமாகும். … அதற்கு தாராளவாத ஜனநாயக ஆட்சியுடன் ஒரு ‘புரட்சிகர’ உடைவு தேவையில்லை என்று நான் வாதிடுகிறேன்” என்றார்.
மாட்ரிட் தேர்தல்கள் பொடேமோஸின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தின் வெளிப்பாடாகும். 1930களின் படிப்பினைகள் அவசரமாக கற்றுக்கொள்ளப்பட வேண்டும். 1930 களில் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் ஆற்றிய பங்கை பொடேமோஸ் பெரும்பாலும் பிரதியெடுக்கின்றது. அவர்கள் ஒரு மக்கள் முன்னணி கொள்கையின் கீழ் ஸ்பெயினின் முதலாளித்துவத்தின் ஒரு அடுக்குடன் கூட்டணி வைத்து பிராங்கோவுக்கு எதிரான போரில் புரட்சிகர கொள்கைகளை நிராகரித்தனர். இதன் விளைவாக சோசலிசப் புரட்சி நசுக்கப்பட்டு மற்றும் பிராங்கோவின் வெற்றிக்கு காரணமானது.
இன்று, "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கான உந்துதலுக்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அமைப்பு மற்றும் புரட்சிகர அரசியல் அணிதிரட்டல் அவசியமாகின்றது. நான்காம் அகிலத்தின் அனத்துலக் குழு (ICFI) திவாலான தேசிய தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை கட்டமைப்பதற்கான அழைப்பை முன்வைத்துள்ளது. இதற்கு போலி-இடதுகளுக்கு எதிரான புரட்சிகர சோசலிச எதிர்ப்பாக நான்காம் அகிலத்தின் அனத்துலக் குழுவின் பிரிவுகளை ஸ்பெயினிலும் உலகெங்கிலும், கட்டியமைப்பது முக்கிய கடமையாகின்றது.