மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
புதன்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், கோவிட்-19 சீனாவின் வூஹான் நுண்கிருமியியல் பயிலகத்திலிருந்து (WIV) விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற சதிக் கோட்பாட்டை தழுவியதுடன், அந்நோயின் தோற்றுவாய் மனிதரால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதன் மீது 90 நாட்களுக்குள் ஓர் அறிக்கை தருமாறு அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கு உத்தரவிட்டார்.
கோவிட்-19 ஓர் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதா என்பதை தீர்மானிக்க பணிக்கப்பட்ட இந்த உளவுத்துறை அமைப்புகள் தான், இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றான, ஈராக்கிடம் இரசாயன, உயிரியல் மற்றும் "பாரிய பேரழிவுகரமான [அணு] ஆயுதங்கள்" இருப்பதாக மத்திய உளவுத்துறை அமைப்பால் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஈராக் மீதான 2003 அமெரிக்க படையெடுப்பில் முக்கிய பாத்திரம் வகித்தவை. அந்த பொய்யால் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன், மத்திய கிழக்கு இன்று வரையில் நீடிக்கும் போரால் சூழப்பட்டுள்ளது.
இப்போது, இன்னும் பெரிய மற்றும் மிகவும் ஆபத்தான பொய் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பைடென் நிர்வாகம், அதற்கு முன்பிருந்த ட்ரம்ப் நிர்வாகத்தைப் போலவே, சில மதிப்பீடுகளின் படி அமெரிக்காவில் குறைந்தபட்சம் 1 மில்லியன் மக்களின் இறப்புக்கு வழிவகுத்த ஒரு நோய்க்குச் சீனா மீது பழிபோடும் முயற்சியில் இறங்கி உள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் பகிரங்கமாக வலியுறுத்தியதைப் போல, கோவிட்-19 அமெரிக்க மக்களுக்கு எதிராக பெய்ஜிங்அனுப்பிய "ஆயுதமயமாக்கப்பட்ட வைரஸ்" என்றால், அது உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட அந்நாட்டிற்கு எதிராக போருக்கான அடித்தளமாக அமைந்துவிடும்.
"பேரழிவுகரமான ஆயுதங்கள்" விஷயத்தைப் போலவே, ஓர் ஒருங்கிணைந்த ஊடக பிரச்சாரத்தில் அநாமதேய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து வரும் கசிவுகள் ஆதாரமாக முன்வைக்கப்படுகின்றன. வெறும் ஒரு சில நாட்களுக்குள், ஒட்டுமொத்த அமெரிக்க ஊடகமும் இந்த மதிப்பிழந்த சதிக் கோட்பாட்டைத் தழுவிக் கொண்டுள்ளது, இது வாஷிங்டன் போஸ்ட் இன் "வூஹான் ஆய்வக-கசிவு கோட்பாடு திடீரென்று எவ்வாறு நம்பகமானதாக மாறியது" என்ற தலைப்பில் முன்னணி உண்மை சரிபார்ப்பாளரது கட்டுரையில் தொகுத்தளிக்கப்பட்டது.
இந்த திடீர் தலைகீழ் திருப்பத்திற்கான அரங்கம், ஞாயிற்றுக்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு கட்டுரையில் அமைக்கப்பட்டது, அது குறிப்பிடுகையில், "அந்த பயிலகத்தில் மூன்று பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டு, நவம்பர் 2019 இல் மருத்துவச் சிகிச்சை நாடியதாக முன்னர் வெளியிடப்படாத அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று" குறிப்பிடுகிறது. இந்த மூன்று நோயாளிகளும் தான் கோவிட்-19 தொற்றுநோயின் நிஜமான தோற்றுவாய் என்பதாக அந்த கட்டுரை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது. ஆனால், ஜனவரி 15 இல் ட்ரம்ப் வெளியுறவுத் துறை வெளியிட்ட ஓர் உண்மை ஆவண உள்ளடக்கத்தில் இருந்ததற்கு அப்பாற்பட்டு அந்த ஜேர்னல் கட்டுரையில் அடிப்படையில் வேறொன்றும் இல்லை.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒட்டுமொத்த உலகையும் வேவுபார்க்க பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் நிதியளிக்கப்பட்ட, பெரும்பாலும் CIA, NSA மற்றும் அவற்றின் சமபல அமைப்புகளும், WIV பணியாளர்களில் ஒரு சிலருக்கு ஏற்பட்ட அந்த அறிகுறிகள் முதன்முதலில் அந்த வைரஸ் கண்டறியப்படுவதற்கு முந்தைய மாதம் "பொதுவான பருவகால நோய்களுடன் … பொருந்தி" உள்ளன என்பதை வெளியுறவுத்துறை உண்மை அறிக்கையே ஒப்புக் கொள்வதைத் தான் கண்டறிய முடியும்.
வாஷிங்டன் போஸ்ட், ஃபோர்ப்ஸ், நியூ யோர்க் டைம்ஸ், ராய்ட்டர்ஸ், CNN மற்றும் பிற ஊடகங்கள் உள்ளடங்கலாக ஏனைய பிரதான செய்தி நிறுவனங்களால் இந்த கதை ஏறத்தாழ உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, கிளிப்பிள்ளை போல மீண்டும் மீண்டும் ஒலிக்கப்பட்டது, அனேகமாக எல்லோரையும் விட மிகவும் வெட்கக்கேடாக இது டாக்டர். ஆண்டனி பௌஸியாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, இந்த தொற்றுநோய் சர்வசாதாரணமாக "போய் விடும்" என்று ட்ரம்ப் கூறிய போது, மில்லியன் கணக்கான மக்கள் பௌஸியைத் தான் இந்த வைரஸ் அபாயங்களைக் குறித்து விஞ்ஞானப்பூர்வமாக தெளிவுபடுத்தும் குரலாக பார்த்தார்கள்.
ஜேர்னல் செய்தி குறித்து செவ்வாய்கிழமை பௌஸியிடம் கேட்கப்பட்ட போது, அவர், "அதன் தோற்றுவாய் என்னவென்று நமக்கு 100 சதவீதம் தெரியாது என்பதால், நாம் பார்த்து, ஒரு விசாரணை செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது," என்றார். இதே கேள்வி கடந்தாண்டு கேட்கப்பட்ட போது அவர் என்ன கூறினாரோ அதிலிருந்து அவரின் இந்த கருத்துக்கள் முழுமையாக 180 பாகை திருப்பமாக உள்ளது. அப்போது அவர் கூறுகையில், "காலப்போக்கில் படிப்படியாக நிகழும் பரிணாமம் குறித்து கூறப்பட்ட அனைத்துமே இது இயற்கையில் பரிணமித்து, பின்னர் உயிரினங்கள் மீது தாவியதாக குறிப்பிடுகின்றன என்றே மிகவும் தகுதிவாய்ந்த பரிணாம உயிரியலாளர்கள் பலர் கூறியுள்ளனர்,” என்றார்.
சீன பில்லியனர் மைல்ஸ் குவோ மற்றும் அதிவலது Epoch டைம்ஸ் போன்ற வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டின் நிஜமான ஆதரவாளர்கள் கருத்துப்படி, சீன அரசாங்கம் தான் அமெரிக்க தேசிய சுகாதார பயிலகத்தின் "செயல்பாட்டு ஆதாய" (gain-of-function) பரிசோதனைகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளைப் பயன்படுத்தி SARS-CoV-2 ஐ ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கியதாம். இந்த நிலைப்பாடு, மிகச் சமீபத்தில் மே 11 இல் அதுபோன்ற ஆராய்ச்சியை அங்கீகரிப்பதற்காக பௌஸியைக் குற்றஞ்சாட்டிய ராண்ட் பௌல் உள்ளடங்கலாக எண்ணற்ற வலதுசாரி அரசியல்வாதிகளால் கைப்பற்றப்பட்டது.
வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸால் இப்போது ஊக்குவிக்கப்படும் இந்த நீர்த்துப்போன பதிப்பில், கோவிட்-19 வூஹான் நுண்கிருமியியல் பயிலகத்திலிருந்து தப்பித்து "இருக்கலாம்" என்று கூறப்படுகிறது. ஆனால் அவ்விரு சூழ்நிலைகளிலுமே, அந்த தொற்றுநோயால் ஏற்பட்ட குறைந்தபட்சம் 3.5 மில்லியன் இறப்புக்களுக்கான பழி திட்டவட்டமாக சீனா மீது சுமத்தப்படுகிறது.
இத்தகைய வலியுறுத்தல்கள், உலக சுகாதார அமைப்பால் (WHO) சென்ற ஜனவரி மற்றும் பெப்ரவரியில் கோவிட்-19 இன் தோற்றுவாய்கள் குறித்து நடத்தப்பட்ட ஒரு விசாரணையில் நிராகரிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா, சீனா, டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான், நெதர்லாந்து, கத்தார், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உலகின் முன்னணி தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்களின் ஒரு சர்வதேச குழுவின் கூட்டு முயற்சிகளின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனாவின் கூட்டறிக்கை ஓர் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறைப் பரிசீலித்து, அதை மிகவும் சாத்தியமற்றது என்று நிராகரித்தது. அந்த அறிக்கை குறிப்பிட்டது, "SARS-CoV-2 உடன் மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்ட வைரஸ்கள் அல்லது SARS-CoV-2 மரபணுவை வழங்கக்கூடிய கூட்டுக் கலவையான மரபணுக்கள் குறித்து டிசம்பர் 2019 இக்கு முன்னர் எந்த ஆய்வகத்திலும் எந்த பதிவும் இல்லை," என்றது.
அதற்கு பதிலாக, ஒவ்வொரு நம்பகமான விஞ்ஞானியும் எதை சரியென ஏற்றுக் கொண்டாரோ அதையே உலக சுகாதார அமைப்பின் அறிக்கையும் மீள உறுதிப்படுத்தியது, அதாவது இந்த வைரஸ் இயற்கையாக உருவானது, பெரும்பாலும் வௌவால்கள் கூட்டத்திலிருந்து உருவாகி, இறுதியில் மனிதர்களிடையே மிகவும் வேகமாக பரவக்கூடிய உயிராபத்தான வைரஸாக உருமாறுவதற்கு முன்னதாக தொடர்ந்து பல மிருகங்களுக்குத் தாவி வந்திருக்கலாம் என்று உறுதிப்படுத்தியது.
"மனிதரால் உருவாக்கப்பட்ட வைரஸ்" அவர்களின் கோணத்திற்கு எந்த நேர்மறையான ஆதாரமும் இல்லாத நிலையில், பைடென் நிர்வாகமும் அமெரிக்க செய்தி ஊடகமும் உலக சுகாதார அமைப்பில் சீன பொது மருத்துவ அதிகாரிகள் இடம் பெற்றிருப்பதால் WHO இன் அறிக்கை நம்பத் தகுந்ததில்லை என்று குறைகூறத் தொடங்கின. இந்த முடிவை நோக்கி, பைடென் நிர்வாகம் சீன "தலையீடு மற்றும் தேவையற்ற செல்வாக்கு" இல்லாத ஒரு "சுதந்திர" விசாரணைக்கு அழைப்பு விடுத்து, அதன் நெருக்கமான நேச நாடுகளைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவைப் பட்டியலிட்டு, மார்ச் 30 இல் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டது.
முக்கியமாக, சீனா சாத்தியமில்லாததைச் செய்கிறது என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள், அதாவது: அந்த வைரஸ் சீனாவின் ஆய்வகங்கள் ஒன்றிலிருந்து தோன்றவில்லை என்பது 100 சதவீதம் எதிர்மறையாக நிரூபணமாகி உள்ளது என்கிறார்கள். அதே நேரத்தில், முதல் SARS வைரஸின் தோற்றுவாய்களை உறுதிப்படுத்த 13 ஆண்டுகள் ஆனதுடன், எபோலாவின் தோற்றுவாய்கள் குறித்து இன்னமும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்ற நிலையில், ஒரு புதிய நோயின் இயற்கையான தோற்றுவாயைக் கண்டறிய பல ஆண்டுகள் ஆகும் என்பது தெரிந்தும், இந்த தொற்றுநோயின் தோற்றுவாய்கள் சம்பந்தமான அறிவார்ந்த புரிதலில் உள்ள எந்தவொரு இடைவெளியும் அவர்கள் தங்கள் வாதங்களை ஆதரிப்பதாக கூறி, அவர்கள் விஞ்ஞான அணுகுமுறைக்கு விரோதமான ஒரு கோட்பாட்டை முன்மொழிந்து வருகிறார்கள்.
கோவிட்-19 இன் தோற்றுவாய் குறித்த இதுபோன்ற புனைவுகோள்கள், HIV இன் தோற்றுவாய்கள் குறித்து வெளியான பழைய வலதுசாரி கருத்துக்களுடன் குறிப்பிடத்தக்களவில் ஒத்திருக்கின்றன என்று குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். பல்வேறு விதமான மக்களை அடக்க, குறிப்பாக ஆபிரிக்க மற்றும் ஹிஸ்பானிய வம்சாவழியினர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களை அடக்க, அமெரிக்காவினால் HIV அபிவிருத்தி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 1980 களில் HIV/ AIDS தொற்றுக்கு எதிராக ஆரம்ப போராட்டத்தை நடத்த உதவிய பௌஸிற்கு, ஐயத்திற்கிடமின்றி இந்த சமாந்தரங்கள் நன்றாகவே தெரியும் என்பதோடு, இந்நோயைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் இந்நோயின் ஆபத்துக்கள் குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்குக் கல்வியூட்டுவதில் உள்ள அளப்பரிய எதிர் விளைவுகளைக் குறித்தும் அவருக்கு நன்கு தெரியும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற தவறான கருத்தை ஊக்குவிப்பது இன்னும் அதிக ஆபத்தானது. வெறும் 15 மாதங்களில், அமெரிக்காவில் 600,000 இக்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 ஆல் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, என்றாலும் உண்மையான எண்ணிக்கை 1 மில்லியனுக்கு நெருக்கமாக இருக்கலாம். உலகளவில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை மூன்றரை மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்தளவுக்குப் பலர் இறந்து விட்டதன் மீது அளப்பரிய சமூக கோபம் உள்ளது, அது ஒரு வெளிப்பாட்டை எதிர்நோக்கி உள்ளது. வூஹான் ஆய்வகப் பொய்யை ஊக்குவிப்பதன் மூலம், பைடென் நிர்வாகம், நிதிய உயரடுக்கின் கொள்கைகளது பொறுப்பைத் திசை திருப்பவும், "போர் குற்றத்தின்" ஒரு வடிவில் அதன் புவிசார் அரசியல் எதிரியை குற்றஞ்சாட்டவும் முயன்று வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகள், சீனாவுக்கு எதிரான பைடென் நிர்வாகத்தின் போர் முனைவு தொகுப்பின் பாகமாக உள்ளன. பைடென் பதவியேற்றதில் இருந்தே, செய்தி ஊடகத்தின் ஆதரவுடன், அவர் போர் நடத்துவதற்கான ஓர் அரசியல் கட்டமைப்பை உருவாக்க முயன்றுள்ளார். இவற்றில், சீனாவின் முஸ்லீம் வீகர் சிறுபான்மையினருக்கு எதிரான சீன இனப்படுகொலை என்றும் தைவான் மீது சீனா ஆக்கிரமிப்பு செய்யக்கூடும் என்ற வாதங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதியில்—பெரும்பாலும்—சீனாவின் அலட்சியத்தால் தான், அல்லது—மிக மோசமாக—மிகவும் உயிராபத்தான உயிரி-ஆயுதத்தைச் சந்தர்ப்பம் பார்த்து கட்டவிழ்த்து விட்டமையே, கடந்த ஒன்றரை ஆண்டில் வெகுஜன மக்களின் துயரங்களுக்குக் காரணம் என்ற வாதங்களும் உள்ளடங்கும்.
இந்த கருத்துக்களை ஊக்குவிப்பதன் மூலம், பைடென் நிர்வாகம் இன்றியமையாத விதத்தில் ட்ரம்பின் அதே கொள்கைகளாக உள்ள அதன் சொந்த உள்நாட்டு கொள்கையிலுள்ள அழுத்தத்தையும் அகற்ற முயன்று வருகிறது. ஆரம்பத்திலிருந்தே அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால், இவற்றை ட்ரம்ப் ஒவ்வொரு படியிலும் எதிர்த்த நிலையில் இப்போது பைடென் மொத்தமாக அவற்றைக் கைவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நடவடிக்கைகள் இந்த தொற்றுநோயால் ஏற்பட்ட பெரும் பெரும்பாலான இறப்புகளைத் தடுத்திருக்கும் என்பது குறித்து அமெரிக்க தொழிலாள வர்க்கம் நன்கு அறிந்துள்ளது.
இப்போது பைடெனும், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் வாஷிங்டன் போஸ்டும் உயிர் கொடுத்துள்ள வூஹான் ஆய்வக பொய், அந்நாட்டின் அரசியல் இரத்த ஓட்டத்தின் ஒரு பகுதியாக மாறும். அதை சட்டபூர்வமாக்கியதும், அதுபோன்ற பிற்போக்குத்தனமான கருத்தாக்கங்களின் பிரச்சாரத்தால் தீவிர வலதுசாரிகள் பலப்படுத்தப்படுவதால் அவர்கள் அதன் மீதான கட்டுப்பாட்டை இழப்பார்கள். இது ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கு ஒரு நோக்கமாக சேவையாற்றும், இத்தகைய வன்முறை தாக்குதல்கள் கடந்தாண்டில் அதிகரித்துள்ளன.
வாஷிங்டன் போஸ்ட் வெளிப்படையாகவே (அர்கன்சாஸ், குடியரசுக் கட்சியின்) பாசிச செனட்டர் டாம் காட்டனை, இந்த சதிக் கோட்பாட்டை "ஆரம்பத்திலிருந்தே" ஊக்குவித்த ஒருவராகவும், "வரலாற்று புத்தகங்கள்" தவிர்க்கவியலாமல் இவருக்கு "நன்மதிப்பை" வழங்குமென்றும் ஊக்குவித்துள்ளது. 2020 தேர்தல் களவாடப்பட்டது என்பதையும், ட்ரம்ப் இன்னும் சட்டபூர்வ தலைமை நிர்வாகி என்றும் கூறும் கார்டனுக்கு இத்தகைய நம்பகத்தன்மையை வழங்குவது, ஜனவரி 6 கிளர்ச்சிக்குப் பின்னால் உள்ள அரசியல் சக்திகளை ஆதரிப்பதாக மட்டுமே ஆகிறது.
பைடென் நிர்வாகத்தாலும் அமெரிக்க செய்தி ஊடக ஸ்தாபகத்தாலும் தோற்றுவிக்கப்பட்டு வருகின்ற இந்த விஞ்ஞான-விரோத மற்றும் வெளிநாட்டவர் விரோத சூழலிலிருந்து இறுதியில் இந்த சக்திகள் தான் ஆதாயமடைகின்றன. அமெரிக்க மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, இந்த தொற்றுநோயின் தோற்றுவாய்களைக் குறித்த "உண்மையை" அறிவதில் அதை விட குறைவாக உள்ளது, ஆனால் வெளிநாடுகளில் புதிய ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்து வரும் அவர்கள் அதேவேளையில் நாட்டின் பெருநிறுவன மற்றும் நிதிய நலன்களை பாதுகாக்க முயல்கிறார்கள்.
அமெரிக்க முதலாளித்துவத்தின் குற்றங்களுக்கு சீனா மீது பழி போடுவதற்கான பைடென் நிர்வாகத்தின் எரிச்சலூட்டும் முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும். அமெரிக்க தொழிலாளர்கள் வெளிநாட்டவர் விரோத போக்கையும் தேசியவாதத்தையும் எதிர்த்து, தங்களின் சீன சகோதர சகோதரிகளுடன் ஒருங்கிணைந்து முதலாளித்துவ வர்க்கமே எங்கள் எதிரியென கூற வேண்டும்.