முன்னோக்கு

பிரிட்டன் அரசாங்கத்தின் கோவிட்-19 விடையிறுப்பு "தவிர்த்திருக்கக்கூடிய பாதிப்பைப் பெருஞ்சுழலாக" உருவாக்கி விட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ இதழ் கூறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் படுமோசமான விடையிறுப்பால், “வாழ்ந்திருக்க வேண்டிய தங்கள் ஆயுள்காலத்திற்கு முன்னரே இறந்து போன" 150,000 பேரின் உயிரிழப்புகள் உட்பட, “தவிர்த்திருக்கக்கூடிய பாதிப்பைப் பெருஞ்சுழலாக" கட்டவிழ்த்து விட்டதற்காக BMJ இதழ் (இது முன்னர் பிரிட்டிஷ் மருத்துவ இதழ் - British Medical Journal - என்றிருந்தது) செவ்வாய்கிழமை பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் குற்றஞ்சாட்டியது.

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் முன்னாள் ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸின் கடந்த வார சாட்சியுரைக் குறித்து நிர்வாக ஆசிரியர் கம்ரான் அப்பாசி கருத்துரைத்த போது தான், இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டைப் பதிவு செய்தார். அவர் விபரங்கள், "தவற விட முடியாத தீர்மானத்திற்கு" இட்டுச் செல்கின்றன, "… ஜோன்சன் விடாப்பிடியாக மறுத்தாலும் கூட, அரசாங்கம் படுமோசமான நடந்து கொண்ட விதம் தான் பிரிட்டனில் அதிகப்படியான இறப்புகளுக்குப் பிரதானமாக பங்களித்தது,” என்று அப்பாசி எழுதுகிறார்.

ஜோன்சன் அரசாங்கம் "வேலையில் தூங்கிவிட்டது," “பெருந்தொற்றுக்காக குறைபாடான முன்மாதிரியைச் சார்ந்திருந்தது,” “குறுகிய கண்ணோட்ட நிபுணர்களின் ஒரு குழுவை நாடியது,” “ஆரோக்கியத்தை விட பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்தது,” “கவனிப்பு இடங்களில் பாதிக்கப்பட இருந்தவர்களைப் பாதுகாக்கத் தவறியது,” “காற்றில் வேகமாக பரவும் சாத்தியமிருந்ததைப் புறக்கணித்தது,” “பரிசோதனைகளைப் பாரியளவில் தாமதப்படுத்தியது,” "சர்வதேச எல்லைகளைக் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை" மற்றும் "தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதில் ஒரு நாசகரமான விலையுயர்ந்த மூலோபாயத்தைக் கையாண்டது,” என இவற்றை கம்மிங்ஸின் சாட்சியம் உறுதிப்படுத்தியது.

Britain's Prime Minister Boris Johnson, centre, Chief Medical Officer for England Chris Whitty, left, and Chief Scientific Adviser Patrick Vallance speak at a press conference at Downing Street on March 3, 2020. (AP Photo/Frank Augstein, Pool)

பிரிட்டன் "தயாரிப்பின்றி இருந்தது, அதனிடம் பெருந்தொற்றுக்கான எந்த திட்டமும் இல்லை, அது செய்ததெல்லாம் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்குவதைப் பின்பற்றிய ஒரு தவறான திட்டமாக இருந்தது, மேலும் ஏராளமான இறப்புக்களை ஏற்றுக் கொண்டது. ஜோன்சன் ஒவ்வொரு பொது முடக்கத்திற்கும், குறிப்பாக முதலில் மார்ச் 2020 இன் பிற்பகுதியில், வலுகட்டாயமாக தான் இழுத்துச் செல்லப்பட்டார், அவர் அவரின் சொந்த விஞ்ஞானிகள் மற்றும் சகப் பணியாளர்களைப் புறக்கணித்து விட்டு, சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்குவதை ஆதரித்த தேர்ந்தெடுக்கப்பட்ட சௌகரியமான ஆதரவாளர்களை ஆதரித்து, செப்டம்பரில் முக்கியமான பொதுமுடக்கத்தை தாமதப்படுத்தினார்.

கம்மிங்ஸ் உறுதிப்படுத்தியவாறு, அதிர்ச்சிகரமாக அதிகபட்ச குற்றத்தன்மையை BMJ அடையாளம் காட்டுகிறது. கம்மிங்ஸ் விபரங்களின்படி, ஜோன்சனும் அவரது ஒத்துழைப்பாளர்களும், நோய்தொற்றிலிருந்து சமூக நோயெதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதற்காக, 500,000 பேரின், ஒரு சூழ்நிலையில் 800,000 பேரின் உயிரிழப்புகளைத் தீவிரமாக பரிசீலித்திருந்தனர். அக்டோபர் இறுதியில் மற்றொரு பொதுமுடக்கத்தைச் செயல்படுத்துவதை விட "சடலங்களை ஆயிரக்கணக்கில் குவிய" விடலாமென பிரதம மந்திரி கூச்சலிட்டதை அவர் உறுதிப்படுத்தினார், துல்லியமாக இது ஏனென்றால் அவர் "ஆரோக்கியத்தை விட பொருளாதாரத்திற்கு முன்னுரிமை கொடுத்தார்." இன்னமும் அவர் கோவிட்-19 ஐ ஒரு "பயங்கரக் கட்டுக்கதையாக" உதறி விட்டு வரும் அதேவேளையில், ட்ரம்பிய பாணியில் ஜோன்சன் கூறுகையில், “அதில் பயப்பட ஒன்றுமில்லை என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்காக, தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக கொரோனா வைரஸை" அவருக்குச் செலுத்துமாறும் கூட அறிவுறுத்தினார்.

கம்மிங்ஸின் சாட்சியம் உண்மையிலேயே—முட்டாள்தனமாக, வக்கிரமாக, பேராசை மிகுந்த, நூறாயிரக்கணக்கானவர்கள் இறந்த போதும் கூட விடாப்பிடியாக அசைந்து கொடுக்காமல் இருந்த அரக்கத்தனமான ஆளும் வர்க்கத்தின், அப்பாசியின் வார்த்தைகளில் கூறுவதானால் "அதீதமாக தனிமைப்பட்ட" ஆளும் வர்க்கத்தின் ஒரு சித்திரத்தை வழங்கியது. இருப்பினும், அதுபோன்றவொரு அசாதாரண சம்பவத்தின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்வதில் பெரும்பாலும் BMJ தனியாக நிற்கிறது. உலக சோசலிச வலைத்தளத்திற்கு அப்பாற்பட்டு, இது தான் கம்மிங்ஸ் ஆஜரானதன் மீது கடுமையான முதல் கருத்துரையாக உள்ளது.

150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஒரு மதிப்புமிக்க மருத்துவ இதழான BMJ அரசாங்கத்தின் பெருந்தொற்று கொள்கைக்காக அதன் மீது பெரிய தாக்குத்தலை வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும். இந்தாண்டு பெப்ரவரி 4 இல் வெளியான அந்த இதழின் தலையங்கம், "மிகக் குறைந்தபட்சம், கோவிட்-19 ஐ ’சமூக படுகொலையாக’ வகைப்படுத்தலாம்" என்று வாதிட்டது.

பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் முதன்முதலில் விவரித்த ஒரு கருத்தைக் குறிப்பிடும் இந்த கண்டிப்பான முடிவானது, செய்தி ஊடகம், தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. இந்த சமீபத்திய தலையங்கத்திற்கும் அதே கதிதான் ஏற்படக்கூடும். வேறு எவ்வாறு இருக்க முடியும்? இந்த அமைப்புக்கள் அனைத்தும் கூட்டாக சேர்ந்து, கம்மிங்ஸ் அம்பலப்படுத்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை மழுங்கடிக்க அவற்றால் ஆன அனைத்தையும் செய்துள்ளன.

கார்டியன் முன்முகப்பில் நிற்க, பெயரளவிலான இடது மற்றும் தாராளவாத அமைப்புகள், அவற்றின் பங்கிற்கு, கம்மிங்ஸின் சொந்த பிற்போக்கு அரசியலையும் மற்றும் ஜோன்சனுடன் அவர் முறித்துக் கொண்டதால் அவர் கருத்துக்களை முன்னுக்குப்பின் முரணானவை என்றும் விரோத பிதற்றல்கள் என்றும் உதறிவிட வாய்ப்பாக பயன்படுத்தின. தொழிற்சங்கங்களோ அல்லது தொழிற்கட்சியோ ஒரேயொரு குறிப்பிடத்தக்க அறிக்கை கூட வெளியிடவில்லை, “துல்லியமாக இது, சாகப்போகும் ஒரு செம்மறி ஆடு தறிகெட்டு தாக்குவதை போன்றதில்லை; பெரும்பாலும் இது, தப்பித்தவறி மட்டுமே உயிர்பிழைக்கக்கூடிய ஒரு செம்மறி ஆடு தந்திரமான கேள்விகள் கேட்பதைப் போலுள்ளது,” என்று Independent இன் ஜோன் ரென்டௌல் ஜோன்சனுக்கு எதிரான தொழிற் கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மரை விவரித்த அளவுக்கும் கூட எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

அவர்கள் யாருமே, தங்களைத் தாங்களே குற்றஞ்சாட்டாமல் கம்மிங்ஸ் கூறிய குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ள முடியாது. கம்மிங்ஸ் வெளிப்படுத்தியவைகளில் இருந்த இன்றியமையா கூறுகளைக் குறித்து BMR மிகச் சரியாக குறிப்பிட்டவாறு, “இதில் எதுவுமே செய்தி இல்லை, குறைந்தபட்சம் நெருக்கமான பார்வையாளர்களுக்கு.”

இங்கிலாந்தின் கொலைகார திட்டமான சமூக நோயெதிர்ப்பு பெருக்கும் கொள்கை கண்கூடாகவே நடத்தப்பட்ட ஒரு சதியாகும். அது குறைந்தளவு இரகசியமாக செய்ய கூட நினைக்கவில்லை, அதைவிட அந்நாட்டின் எதிர் கட்சி அல்லது சுதந்திரமான சக்தி என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொன்றின் ஒத்துழைப்பையும் சார்ந்திருந்தது. தொழிற் கட்சி, முதலில் ஜெர்மி கோர்பினின் கீழும் சரி இப்போது சர் கெய்ர் ஸ்டார்மரின் கீழும் சரி, "தேசிய நலன்களை" பின்தொடர்வதில் "ஆக்கபூர்வமான விமர்சனங்களை" மட்டுமே வழங்குவோம் என்ற பெயரில் பழமைவாதிகளின் நடைமுறை கூட்டாளிகளாக செயல்படுகின்றனர். தொழிற்சங்கங்கள், வாரத்தின் ஏழு நாட்களை விடவும் அதிகமாக, அரசாங்கத்துடனும் முதலாளிமார்களுடனும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்கின்றன. ஒவ்வொரு அரசியல் வகையறாக்களின் தேசிய பத்திரிகைகளும், எல்லா விமர்சனங்களையும் பாதுகாப்பான வரம்புகளுக்குள் வைத்து, பெரும்பாலும் கிளிப்பிள்ளை போல அரசாங்க பிரச்சாரத்தை விசுவாசமாக ஓதிக் கொண்டிருக்கின்றன.

இந்த வரலாற்றையும் இறந்தவர்களுடன் சேர்ந்து புதைக்க, இப்போது இந்த அமைப்புக்களுக்கு முன்னெப்போதையும் விட அதிக காரணம் கிடைத்துள்ளது. அவை, இந்த பெருந்தொற்றின் இந்த கோரமான மூன்றாவது அலையில், பொது சுகாதார கட்டுப்பாடுகளில் இருக்கும் கடைசி எச்சசொச்சங்களையும் நீக்கும் ஜோன்சனின் சமீபத்திய முயற்சிகளுக்குப் பின்னால் தங்களை மீண்டுமொருமுறை அணி சேர்த்து உள்ளன.

பாராளுமன்றத்தின் சுகாதார மற்றும் விஞ்ஞான குழுக்கள் முன் கம்மிங்ஸ் ஆஜராகி ஒரு வாரத்திற்குப் பின்னர், ஒவ்வொரு வாரமும் அதிகளவில் பரவும் (இந்திய) டெல்டா வைரஸ் நோயாளிகள் இரட்டிப்பாகி வரும் நிலையில், “நாம் 4 ஆம் நிலைக்கு [அதாவது ஜூன் 21 இல் எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்குவது] செல்ல முடியாதென்பதை அர்த்தப்படுத்தும் எந்த தரவுகளும் இந்நேரத்தில் நான் பார்க்கவில்லை,” என்று அறிவிப்பதை ஜோன்சன் சுதந்திரமாக உணர்ந்தார்.

பிரதம மந்திரி இப்போது அவர் திட்டநிரலை செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் மிக முக்கிய அசௌகரியம் கம்மிங்ஸ் அவரின் சொந்த வலதுசாரி ஏதேச்சதிகார புனைவுகளைப் பின்தொடர்வதிலிருந்தே வருகிறது எனும் அளவுக்கு, தொழிற் கட்சியும் தொழிற்சங்கங்களும் ஜோன்சனுக்கு எதிரான எதிர்ப்பை முற்றிலுமாக நசுக்கியுள்ளன. அந்த முன்னாள் ஆலோசகர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூறினார், "திறம்பட செயல்படும் ஒரு அமைப்பில் என்ன நடந்திருக்கும் என்பது இங்கே இன்றியமையாதது, என் கருத்துப்படி, இதற்கு நீங்கள் ஒரு வகையான சர்வாதிகாரியை பொறுப்பில் வைத்திருக்கிறீர்கள்,” என்றார். “சட்ட கட்டுப்பாடுகளை நீக்கி… அரசு சட்டபூர்வமாக செய்ய அதற்கிருக்கும் அதிகாரத்திற்கு நெருக்கமாக அதேயளவுக்கு அரச அதிகாரத்தை" இந்த சர்வாதிகாரி கொண்டிருப்பார்.”

"சரியான தலைமை இருந்திருந்தால் இந்த பாதிப்பு பெருஞ்சுழலில் எவ்வளவு தவிர்த்திருக்கலாம்? என்ற கேள்வியை வைத்து BMJ அதன் தலையங்கத்தை நிறைவு செய்கிறது. ஜோன்சன் மற்றும் கம்மிங்ஸ் செல்வாக்கால் கொண்டு வரப்பட்ட "பயிற்சியற்ற பிரெக்ஸிட் விசுவாசிகளுக்கு" எதிராக சீறிய அது, ஜோன்சனின் கால அட்டவணையின்படி ஒரு வருட காலத்திற்குள் ஒரு பொது விசாரணை கொண்டு வரப்படும் என்றில்லாமல், உடனடியாக ஒரு பொது விசாரணையைக் கூட்டுவதன் மூலம், "பகிரங்கமாக கணக்கில்" கொண்டு வரப்பட வேண்டுமென அது அழைப்பு விடுக்கிறது.

ஆனால் இப்போதைய இந்த அரசியல் அமைப்புமுறைக்குள், ஒரு "சரியான தலைமை" என்று எதுவும் இல்லை, பகிரங்கமாக கணக்கில் கொண்டு வருவதற்கும் சாத்தியமில்லை. டோரிகளின் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் கன்னைகள் மற்றும் அதிலிருந்து வெளியேறலாம் கன்னைகளில் இருந்து தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் வரையில், பிரிட்டிஷ் அரசியல் ஸ்தாபகத்தின் ஒவ்வொரு கூறுபாடும் இந்தக் குற்றத்திலும் அதன் மூடிமறைப்பிலும் சம்பந்தப்பட்டுள்ளன. ஜோன்சனும் நீதித்துறையும் ஏற்பாடு செய்த விசாரணை, அது நடைபெறும் போதெல்லாம், இந்த இன்றியமையா பிரச்சினைக்கு எந்த தீர்வையும் வழங்குவதாக இல்லை. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கமும், ஹில்ஸ்பரோ (Hillsborough), ஹட்டன் (Hutton), சில்கோட் (Chilcot) மற்றும் க்ரென்ஃபெல் (Grenfell) விசாரணைகளின் முன்னாள் அனுபவஸ்தர்களும், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் இந்த இயங்குமுறையைப் பயன்படுத்திக் கொள்ள உலகை வழி நடத்துகிறார்கள்.

இது சர்வதேச அளவில் உண்மையாகும். தொற்றுநோய்க்கு ஒரு விஞ்ஞானபூர்வ, மனிதாபிமான அடிப்படையிலான, உலகளாவிய ஒருங்கிணைந்த விடையிறுப்புக்காக போராடும் தலைவர்களை ஒரேயொரு அரசாங்கமும் எங்கேயும் உருவாக்கி இருக்கவில்லை. விஷயம் இதற்கு நேரெதிராக இருக்கிறது: அதாவது, தனியார் இலாபங்கள் மற்றும் செல்வவளத்தை பாதுகாக்கும் ஒரு வகை தேசியவாதமும் சமூகக் படுகொலையுமே பொதுவான கொள்கையாக உள்ளது, இது உத்தியோகபூர்வமாக குறைந்தபட்சம் 3.6 மில்லியன் மக்களின் உயிரிழப்புக்கும், யதார்த்தத்தில் அப்பிராந்தியத்தில் 7 முதல் 10 மில்லியன் மக்களின் உயிரிழப்புக்கும் இட்டுச் சென்றுள்ளது.

இந்த போக்கை மாற்றுவதற்கு பதிலாக, உலகெங்கிலுமான அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலை முழுவீச்சில் மீண்டும் தொடங்குவதற்காக கட்டுப்பாட்டு முறைமைகளை முடிவுக்குக் கொண்டு வர உத்தேசிக்கின்றன. இதற்கிடையே, இந்த பெருந்தொற்று பரவுவதில் உலகின் ஆளும் உயரடுக்குகள் ஏற்றுள்ள பொறுப்பை மூடிமறைக்கவும், அதேவேளையில் சீனாவுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்புக்கு வழி வகுக்கவும் இந்த பெருந்தொற்று வூஹான் ஆய்வகத்தில் தோன்றியது என்ற பொய் ஊதிப் பெரிதாக்கப்படுகிறது.

தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பெருந்தொற்றைக் கையாள "சரியான தலைமைக்கான" BMJ இன் அழைப்பு, யதார்த்தத்தில் ஒரு புரட்சிகர கேள்வியாகும். இந்த பெருந்தொற்றுக்கு உலகளவில் காட்டப்பட்ட கொடூரமான மற்றும் திறமையற்ற விடையிறுப்பானது, மிகச் சிறிய பெரும் பணக்கார தன்னலக்குழுவின் நலன்களுக்கு சேவையாற்றும் மற்றும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களையும் உயிர்களையும் அச்சுறுத்தும் இந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் சீரழிவு முன்னேறிய நிலையில் இருப்பதைப் பிரதிபலிக்கிறது. கோவிட்-19 இன் துன்பங்களுக்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைக்க என்ன தேவைப்படுகிறது என்றால், சமூகத்தின் தலைமையைத் தொழிலாள வர்க்கம் கைப்பற்ற வேண்டும். தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமாக, தனியார் இலாபத்தை விட மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தி, ஜோன்சன் ஜோன்சன் மற்றும் ஏனைய அரசியல் மற்றும் பெருநிறுவன குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வரும் நிலைமைகளை உருவாக்கும்.

Loading