பிரான்சின் அதிவலது Action française கட்சியுடன் தொடர்புடைய முடியாட்சிவாதியொருவர் மக்ரோனை கன்னத்தில் அறைந்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழனன்று, ஜூன் 8 செவ்வாயன்று டேயின்- ஹெர்மிடேஜில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை கன்னத்தில் அறைந்ததற்காக டமியன் டாரெலுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது, அவற்றில் 14 மாதங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

மக்ரோன் சாதாரண மக்களையும் மேயர்களையும் சந்திப்பதை நோக்கமாகக் கொண்ட "பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை" தொடங்கியிருந்தார். பிற்பகல் 1.30 மணிக்கு சற்று முன்பு, அவர் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதை கொண்டாட ஒரு சமையல் கலைப் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார், மேலும் பொதுவாக வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான சமூக இடைவெளி நடவடிக்கைகளை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வந்தார். மக்ரோன் பொது மக்களை அணுகியபோது, பிரெஞ்சு முடியாட்சியின் மத்தியகால போர் முழக்க குரலை கூச்சலிட்டு தாரெல் அவரைத் தாக்கினார்: "மாண்ட்சுவா செயிண்ட்-டெனிஸ்! மக்ரோனின் ஆட்சி ஒழிக!"

Screenshot from video captured showing Macron slapped by Damien Tarel

13 ஆம் நூற்றாண்டிலிருந்து பிரெஞ்சு காப்பெட்டியோன் வம்சத்தின் இராணுவங்களால் பயன்படுத்தப்படும் "மாண்ட்சுவா செயிண்ட்-டெனிஸ்" என்ற முழக்கக் குரல், அரசவாத அதிவலதின், குறிப்பாக Action française கட்சியின் ஒரு முழக்கமாகும்.

மக்ரோன் வருவதற்கு சற்று முன்னர், ஒரு TMC இன் பத்திரிகையாளர் தாரெலையும் அவருடன் வந்த மற்றய இரண்டு நபர்களுடன் பேட்டி கண்டிருந்தது, அவர்கள் மக்ரோனை சந்தித்து பேச விரும்புவதாகக் கூறினார்கள். மக்ரோன் அறையப்பட்டபோது தாரெலுடன் இருந்த ஆர்தர் சி என அடையாளம் காணப்பட்ட அவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். லோய்க் என்ற பெயரிடப்பட்ட மூன்றாவது நபர், தாரெல் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் "அந்த கருத்துக்கள் இல்லை" என்றும் கூறியதாக AFP தெரிவித்துள்ளது. இது வெளிப்படையாக தவறானது.

28 வயதான தாரெல் மற்றும் ஆர்தர் சி வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி, அவர்களின் இணையவழி நடவடிக்கை குறித்து விசாரணை செய்தனர். அவர்கள் மத்தியகால ஆயுதங்களைக் கண்டுபிடித்தனர், ஹிட்லரின் நாஜி ஆய்வுப் பிரதிகளான Mein Kampf மற்றும் துப்பாக்கிகள் ஆர்தர் சி இன் இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. வேலையற்ற மற்றும் வாசிப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தாரெல், அதிவலது அரசவாத கட்சியான Action française இன் லியோன் பிரிவையும், ஜோன்-லூக் மெலோன்சோனின் வாக்காளர்களுக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்களை விடுத்த பாப்பாசிட்டோவின் அதிவலது சேனலான யூடியூப்பையும் பேஸ்புக்கையும் பின்பற்றி தொடர்ந்தார்.

நீதிமன்றத்தில், தாரெல் தன்னை ஒரு வலதுசாரி தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டார், மேலும் மக்ரோனை எதிர்கொண்டபோது அவரது கோபத்தால் தான் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறினார், ஏனெனில் "வீரப்பண்பு மரபில், நாங்கள் பொய் சொல்ல விரும்பவில்லை." "மக்ரோன் நமது நாட்டின் சீரழிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்" என்று அறிவித்த அவர், பின்னர் முடியாட்சிவாத போர் முழக்கக் குரலுக்கான காரணத்தை விளக்கினார்: "இது படைவீரர்கள் அணிதிரள்வுக்கான, ஒரு தேசபக்தி முழக்கம் குறித்த குறிப்பு. [...] வீரத்திருத்தகை அமைப்பிற்கான ஒரு குரல். நான் சூரிய உதயத்தில் இமானுவல் மக்ரோனை ஒரு வாள் சண்டைக்கு அழைத்திருந்தால், அவர் பதிலளித்திருப்பார் என்று நான் சந்தேகிக்கிறேன் ”.

ஹிட்லர் மீசை வைத்திருக்கும் புகைப்படம் "வேடிக்கையானது" என்று கூறியும், ஆர்தர் சி இன் வீட்டில் Mein Kampf கண்டுபிடிக்கப்பட்டதை குறைத்துமதிப்பிட்டதாக கூறி, டாரெல் தனது பாசிச அனுதாபங்களைக் குறைத்துக்காட்டினார்: "நான் Mein Kampf என் நண்பருக்கு கொடுத்தேன், அவர் இரண்டாம் உலகப் போரைப் பற்றிய ஆர்வலர்."

"மஞ்சள் சீருடை" இயக்கத்தில் தான் ஆர்வமாக இருப்பதாகவும், அதன் குரல் இன்னும் கேட்கப்படவில்லை" என்றும் மக்ரோனின் கொள்கைகளால் கோபமடைந்ததாகவும் தாரெல் கூறினார். "அவரது தவறான நட்பு தோற்றத்தை நான் பார்த்தபோது", தாரெல் கூறினார், "நான் [அவருக்கு] வாக்களிக்க வேண்டும் என்று அவர் விரும்புவதை நான் புரிந்து கொண்டேன்."

"மஞ்சள் சீருடை" இயக்கம் தன்னியல்பானதாகவும் அரசியல் ரீதியாக மிகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருந்த போதிலும், தாரெலின் அரசவாத நடவடிக்கையானது சமூக சமத்துவத்திற்கான அபிலாஷைகளுக்கும் பெரும்பாலான "மஞ்சள் சீருடையாளர்களை" உந்திய தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆளும் வர்க்கத்தின் அரசு தலைவரின் கன்னத்தில் அறைந்தது குறிப்பாக அசாதாரண எதிர்வினையை பிரதிபலிக்கிறது.

"மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக கொந்தளித்த பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம், அரசுத் தலைவரைத் தாக்கிய தனிநபர்களின் அரசவாத அனுதாபங்களைக் குறைத்து காட்டுவதற்கும், அவர்களின் அதிவலது தொடர்புகளை மறைப்பதற்குமான முயற்சிகளைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளது.

ஏற்கனவே வியாழனன்று, மக்ரோன் மீண்டும் மீண்டும் தாரெலின் செயல் ஒரு சில "தீவிர வன்முறை தனிநபர்களால்" செய்யப்பட்ட ஒரு "தனிமைப்படுத்தப்பட்ட செயல்" தவிர வேறொன்றுமில்லை என்று கூறினார்.

வியாழனன்று, "ஒரு கூட்டத்தை நெருங்கும்போது அறையப்படுவது அவ்வளவு தீவிரமானது அல்ல" என்று கூட அவர் கூறினார், அத்தகைய வன்முறை சமூகத்தில் ஊடுருவி உள்ளது: அதாவது "இந்தச் செயல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட செயல் மற்றும் இன்று சமூகத்தில் தன்னியல்பாக வன்முறையாக இருக்கக்கூடிய மக்கள் உள்ளனர் என்று சொல்ல வேண்டும்." அவர் #MeToo வலதுசாரி பெண்ணிய இயக்கத்திற்கு ஒரு வேண்டுகோளையும் விடுக்கத் தொடங்கினார், "உண்மையான வன்முறை இது அல்ல" ஆனால் மாறாக "தங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் கணவரின் கைகளில் இறக்கும் பெண்கள்" அனுபவிக்கும் வன்முறை என்று கூறினார்.

இது நவ-பாசிச தேசிய பேரணி (RN) கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான மரின் லு பென் இந்த அசாதாரண சம்பவத்துடன் தொடர்புடைய எந்த அரசியல் தாக்குதல்களிலும் இருந்து தப்பிக்க அனுமதித்தது.

மக்ரோனை கன்னத்தில் அறைந்த பின்னர் லு பென் கடமைப்பட்டதாக உணர்ந்து BFM-TV யிலும் ட்டுவிட்டரிலும் அறிவித்தார்: "குடியரசின் தலைவரை உடல் ரீதியாகத் தாக்குவது அனுமதிக்கமுடியாதது. நான் இமானுவல் மக்ரோனின் முதல் எதிர்ப்பாளர், ஆனால் அவர் ஜனாதிபதி: அவர் அரசியல் ரீதியாக எதிர்க்கப்படலாம், ஆனால் அவருக்கு எதிரான எந்த வன்முறையையும் அனுமதிக்க முடியாது. இந்த செயல் அனுமதிக்கமுடியாதது என்றும் ஜனநாயகத்தில் முழுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் நான் கருதுகிறேன்."

எவ்வாறெனினும், வியாழனன்று, லு பென் மக்ரோனுடன் "உடன்பட்டதாக" கூறினார், அறைதல் ஒரு "கருத்தியல் தாறுமாறான கலவை" இன் அடிப்படையிலான ஒரு "தனிமைப்படுத்தப்பட்ட செயல்" என்று கூறினார். உண்மையில், இது அவரது கட்சி வேரூன்றியுள்ள அதிவலது மரபுகளால் உந்தப்பட்ட ஒரு அரசியல் செயலாகும்.

Cnews இல், அதிவலது வர்ணனையாளர் எரிக் சிமோர் மக்ரோனை "அவர் தகுதியானதை" மட்டுமே பெற்றார் என்று அறிவிக்க முடியும் என்றார். சிமோர் மேலும் கூறினார்: "அவர் தனது சொந்த செயல்பாட்டை அவரே கீழறுத்துள்ளார் [...] நிறுவனங்கள் குறித்த பிரெஞ்சு கருத்தாக்கத்தில், அவர் அரசர், அவர் இறங்கி தெருக்களிலுள்ள யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை."

அடிபணியா பிரான்ஸ் கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோன் ஒரு ட்டுவீட்டை வெளியிட்டார், இந்த அனுபவம் மக்ரோனை நவ-பாசிச வன்முறை அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுக்கத் தள்ளும் என்ற பக்தியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்: "இந்த முறை வன்முறையாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளத் தொடங்குகிறீர்களா? நான் ஜனாதிபதியுடன் ஒற்றுமையுடன் இருக்கிறேன்."

உண்மையில், மக்ரோனை இலக்காகக் கொண்ட தீவிர வலதுசாரி முடியாட்சிவாத வன்முறையை நிராகரிக்கும் அதேவேளை, பிரெஞ்சு ஜனாதிபதியுடன் ஒற்றுமையுடன் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. மக்ரோன் அதிவலது வன்முறையை எதிர்த்துப் போராடவேண்டும் என்று எதிர்பார்ப்பது மாயையாகும், ஏனெனில் மக்ரோன் தான் அதிவலது சக்திகளை வளர்க்கவும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக எதிர்ப்புக்களுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தவும் தனது ஆட்சி முழுவதும் செயல்பட்டுள்ளார்.

2017 இல் தேர்தல் வெற்றி பெற்ற அன்று மாலை லு பென் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மக்ரோன் உரையாற்றிய "குடியரசு வணக்கம்" அவரது முழு பதவிக்காலத்திற்கும் தொனியை அமைத்தது. அவரது கலாச்சார அமைச்சகத்தின் நிர்வாகிகள் 20 ஆம் நூற்றாண்டின் யூத-விரோத Action française இன் தலைவர் சார்ல்ஸ் மௌராஸ் படைப்புகளை வெளியிட்டனர், அவர் பிரெஞ்சு விடுதலையில் தேசத்துரோகத்திற்காக தண்டிக்கப்பட்ட நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் தூணாக இருந்தார். 2018 இல், மக்ரோன் "மஞ்சள் சீருடை" மீது கலகப் பிரிவு போலீசார் தாக்குதல் தொடங்கியபோது, அவர் நாஜி-ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தானை ஒரு "பெரும் சிப்பாய்" என்று பாராட்டினார்.

தற்போது Action française இன் முன்னாள் அனுதாபியான ஜெரால்ட் டார்மனன் உள்துறை அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டார்மனின் "பொதுப் பாதுகாப்பு" மற்றும் இஸ்லாமிய "பிரிவினைவாதத்திற்கு" எதிரான பாராளுமன்ற ஜனநாயக விரோத சட்டங்களை கொண்டு வர முன்தள்ளுகிறார், அவர் பிரெஞ்சு மளிகைக் கடைகளில் ஹலால் அல்லது கோஷர் தட்டுக்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கோபமடைந்ததாகக் கூறுகிறார்.

முடியாட்சிவாதிகளால் கன்னத்தில் அறையப்படுவது தனக்கு "தீவிரமானது அல்ல" என்று மக்ரோன் கூறினால், அதற்கு காரணம் அவரது அரசாங்கமும், அதற்குப் பின்னால் நிதியப் பிரபுத்துவமும், தொழிலாளர்களுக்கு எதிராக தங்கள் வெறுப்பூட்டுகின்ற செல்வத்தையும் வர்க்க சலுகைகளையும் பாதுகாக்க அதிவலது சக்திகளை அணிதிரட்ட உத்தேசித்துள்ளது.

Loading