கோவிட்-19 திரிபு வகை தொடர்ந்து பரவி வருவதால், “நிலைமை மிக மோசமாகிவிடும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துபடி, கடந்த அக்டோபரில் இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட மற்றும் கொடிய டெல்டா திரிபு வகை வைரஸ், தற்போது குறைந்தது 80 நாடுகளில் பரவி வருகிறது. இது, முதன் முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆல்பா திரிபு வகையின் தன்மையை விஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது வரும் மாதங்களில் உலகளவில் கொரோனா வைரஸின் ஆதிக்க வகையாக இது உருவெடுக்கும்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில், இது கொரோனா வைரஸின் ஆதிக்க திரிபு வகையாக ஏற்கனவே மாறியுள்ளது, அதாவது இந்நாடுகளில் புதிய நோய்தொற்றுக்களில் குறைந்தது 90 சதவீதம் டெல்டா திரிபு வகையினால் உருவாகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில், புதிய நோய்தொற்றுக்களில் குறைந்தது 10 சதவீதம் டெல்டா திரிபு வகையால் உருவாகின்றன, இந்த நாட்டிலும் “அநேகமாக” இது ஆதிக்க வகை வைரஸாக மாறக்கூடும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய (CDC) இயக்குநர் ரோசெல் வாலென்ஸ்கி (Rochelle Walensky), குட்மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் இதுபற்றி எச்சரித்தார்.

ஜூன் 18, 2021, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளை அழைத்து செல்லும் ஒரு பள்ளிப் பேருந்தில் பாதுகாப்பு உடை அணிந்த ஒரு ஓட்டுநர் உள்ளார். [AP Photo/Dita Alangkara]

போர்ச்சுகலின் லிஸ்பனில், கடந்த 24 மணி நேரத்தில் 1,300 க்கும் மேற்பட்ட புதிய நோய்தொற்றுக்கள் பதிவானதன் பின்னர் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் வார இறுதி பூட்டுதலை பின்பற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர், இங்கு தோராயமாக பாதி நோய்தொற்றுக்கள் டெல்டா திரிபு வகையால் உருவானவை. மாஸ்கோவில், உள்ளூர் சுகாதார அதிகாரிகள் நகரில் தற்போது டெல்டா வைரஸ் தான் மிக அதிகமாக பரவுவதாக தீர்மானித்துள்ளனர், மொத்த புதிய நோய்தொற்றுக்களில் 89.3 சதவீதம் இதனால் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில், நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகள் முறையே 69,000 மற்றும் 1,600 என்றளவிற்கு இரண்டு மாதங்களாக தற்போது தொடர்ந்து குறைவாக இருந்தாலும், பிப்ரவரி பிற்பகுதியிலும் மார்ச் தொடக்கத்திலும் டெல்டா திரிபு வகை இந்தியாவில் காட்டுத்தீ போல பரவ தொடங்கிய நிலையில் கூட இந்த எண்ணிக்கைகள் பெரிதும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன என்று நிபுணர்கள் கவலை கொண்டுள்ளனர்.

நமீபியா, சியரா லியோன், லைபீரியா மற்றும் ருவாண்டா, மியான்மர், சாம்பியா, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உட்பட, ஆபிரிக்கா மற்றும் தெற்காசியா எங்கிலும் டெல்டா திரிபு வகை நோய்தொற்று பரவல் தீவிரப்பட்டுள்ளது. பெரும்பாலும் உலகின் பணக்கார நாடுகளில் பாரிய தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதால் மே மாத தொடக்கத்திலிருந்து உலகளவில் புதிய நோய்தொற்றுக்களில் ஏற்பட்ட வீழ்ச்சி, தற்போது இந்த நோய்தொற்று பரவலின் விளைவாக குறைந்துவிட்டது.

உலகளவில், வியாழக்கிழமையன்று பதிவான புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை மொத்தம் 367,000 க்கு சற்று அதிகமாக இருந்தது, மேலும் ஏழு நாட்களுக்கு முன்னர் பதிவான புதிய நோய்தொற்றுக்களை விட 20,000 க்கு சற்று குறைவாகும். இதற்கு மாறாக, நாளாந்த நோய்தொற்றுக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்ததை விட ஒரு வாரத்திற்கு முன்னர் 71,000 ஆக குறைந்தது. கொரோனா வைரஸின் ஆதிக்க வடிவமாக ஆல்பா திரிபு வகை தோன்றுவதற்கு முன்னைய வாரங்களில் உலகின் நாளாந்த புதிய கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களின் போக்கில் இதையொத்த மாற்றங்கள் கண்டறியப்பட்டன, இது கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் புதிய தொற்றுக்களின் வேகமெடுத்த பரவலை தூண்ட உதவியது. சர்வதேச அளவில் நாளாந்த இறப்புக்கள் தொடர்ந்து 9,000 க்கு மேலாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், வெள்ளிக்கிழமை, “ஒவ்வொரு பிராந்தியமும் தற்போது நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் தீவிர அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளைக் கொண்டுள்ளன. இலத்தீன் அமெரிக்காவில் பல நாடுகளில் நோய்தொற்றுக்கள் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன, மேலும் ஏனைய நாடுகள் நோய்தொற்றுக்களின் உயர்மட்ட எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. ஆபிரிக்காவில், நோய்தொற்றுக்கள் கடந்த வாரத்தில் மட்டும் 52 சதவீதமாக அதிகரித்துள்ளன, மேலும் இறப்புக்கள் 32 சதவீதமாக அதிகரித்துள்ளன. மேலும், சூழ்நிலை மிகவும் மோசமாகிவிடும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று எச்சரித்தார்.

டெல்டா திரிபு வகையின் தீவிரப்பட்ட அதிகரிப்புக்கள் குறிப்பாக குறைந்த தடுப்பூசி விகிதங்கள் கொண்ட பிராந்தியங்களிலுள்ள நாடுகளில் தான் நிகழ்ந்து வருகின்றன. “இந்த போக்கு மிக, மிக கவலையளிப்பதாக உள்ளது,” என்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக் ரியான் கூறினார். மேலும், “கொடூரமான உண்மை என்னவென்றால், அதிகரித்தளவில் பரவும் தன்மை கொண்ட பல திரிபு வகை வைரஸ்கள் பரவும் சகாப்தத்தில், தடுப்பூசி பாதுகாப்பு இல்லாத, ஆபிரிக்காவின் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகையில் பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம்” என்றும் கூறினார்.

டெல்டா திரிபு வகையின் தீவிர ஆதிக்கம், அது எவ்வளவு ஆபத்தானதாக இருக்கும் என்பதை அதுவே காட்டியுள்ளது இன்னும் கவலையளிப்பதாக உள்ளது. இது, ஆல்பா திரிபு வகையை விட 60 சதவீதம் அதிக தொற்றும் தன்மை கொண்டது, மேலும் அசல் கடுமையான வைரஸ் வகையை விட 2.5 மடங்கு அதிக தொற்றும் தன்மை கொண்டது. மேலும், கடுமையான திரிபு வகையை விட 4 மடங்கிற்கு மேற்பட்ட மருத்துவமனை சேர்க்கைகளை இது விளைவிக்கிறது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பெரும்பாலும் டெல்டா திரிபு வகையிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள், என்றாலும் உலகின் பெரும்பகுதி இன்னும் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது.

டாக்டர் டெட்ரோஸ், “அனைத்து உயர் மற்றும் உயர் நடுத்தர வருமானம் மற்றும் பொருளாதாரம் கொண்ட நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவைக்கு தற்போது குறைந்தது 20 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு போதுமான தடுப்பூசி அளவுகள் (doses) வழங்கப்பட்டுள்ளது. மேலும் 79 குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளில் 3 நாடுகள் மட்டும் இதே நிலையை எட்டியுள்ளன” என்று கூறினார். மேலும், தடுப்பூசி உற்பத்தியை இன்னும் அதிகரிப்பதற்கும் மற்றும் உலகளவில் அவற்றின் சமமான விநியோகத்திற்கும் அழைப்பு விடுப்பதற்கு முன்னர் “அடுத்த ஆண்டு இனாமாக வழங்கப்படவுள்ள தடுப்பூசிகள், இன்று இறப்பவர்களுக்கு, அல்லது இன்று தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அல்லது இன்று ஆபத்தில் இருப்பவர்களுக்கு மிகத் தாமதமானதாக இருக்கும்,” என்பதையும் வெளிப்படையாகக் கூறினார்.

மேலும், டெல்டா திரிபு வகையின் போக்கை கண்காணிக்கும் இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பின் தரவு, கொரோனா வைரஸின் இந்த குறிப்பிட்ட பிறழ்வு, மொடேர்னா, ஃபைசர் மற்றும் ஏனைய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இரண்டு அளவு mRNA தடுப்பூசி நியமத்தில் முதல் அளவை மட்டுமே பெற்றவர்களின் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து “தப்பிக்க” முடிகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக முதல் அளவு தடுப்பூசி எடுத்தவர்களில் கூட ஆயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டவர்களிடையே வைரஸ் பரவ அனுமதிக்கப்படுவதால், இந்த ஆபத்துக்கள் பல மடங்கு அதிகரிக்கின்றன, பகுதியளவு நோயெதிர்ப்பு சக்தியின் குறிப்பிட்ட அழுத்தத்தின் கீழ் அனைத்திற்கும் சாத்தியமுள்ளது, அதாவது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் அளவிற்கு கூட இது வலுவாக உருவெடுக்கும்.

முகக்கவசம் அணிதல், பரிசோதனை செய்தல் மற்றும் தொடர்புத் தடமறிதல் போன்ற பொது சுகாதார நடவடிக்கை எடுக்கப்படாத உலகின் பகுதிகளில், அத்தகைய வளர்ச்சி தொற்றுநோயை இன்னும் வெடிக்கும் வடிவமெடுக்க தூண்டுதலளிக்கும். தடுப்பூசி போடப்படுவது மட்டுமே பல பகுதிகளில் கொரோனா வைரஸூக்கு எதிரான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது, அது தோல்வியடையும் பட்சத்தில், தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் வூஹான், இத்தாலி மற்றும் நியூயோர்க் பகுதிகளில் நிலவிய கொடூரத்தை அது ஒத்திருக்கக்கூடும்.

இப்படியாக பல வழிகளில், தொற்றுநோயின் இந்த பரிணாமம் இன்னும் மோசமாக இருக்கும். இங்கிலாந்தின் அறிக்கைகள், குழந்தைகள் டெல்டா திரிபு வகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது, இதன் பொருள் மீளத்திறக்கப்பட்ட பள்ளிகள் வெறுமனே நோய்தொற்று பரவலுக்கான மையங்களாக மட்டும் இருக்காது, மாறாக வகுப்புகளுக்கு வரும் இளையோர்களுக்கு மயான பூமியாகவும் மாறக்கூடிய வாய்ப்புக்களை கொண்டிருக்கும். இன்னும் விரிவாகக் கூறுவதானால், டெல்டா திரிபு வகையின் அதிகரித்த தொற்றும் தன்மை, இது தடுப்பூசியால் நிறுத்தப்படாவிட்டால், தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு டஜன் ஆக இருப்பது ஒரே மாதத்திற்குள் மில்லியன் கணக்காக மாறக்கூடும்.

அமெரிக்கா போன்ற அதிகளவு தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் கூட, இந்த நோய்தொற்று எந்தளவிற்கு மோசமாக மாறக்கூடும் என்பது பற்றிய எச்சரிக்கைகளுக்கு பஞ்சமில்லை. இன்றுவரை, அண்ணளவாக 4 மில்லியன் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. மறுபுறம், கொரோனா வைரஸால் ஏற்படும் அகால மரணத்திலிருந்து இன்னும் காப்பாற்றப்படக்கூடிய 7.8 பில்லியன் உயிர்கள் உள்ளன.

எவ்வாறாயினும், சமூகத்தின் வளங்களைக் கட்டுப்படுத்தும் முதலாளித்துவ வர்க்கம், மனித உயிர்களை விட இலாபங்களைப் பெருக்குவதிலேயே அதிக அக்கறை கொண்டுள்ளது. தடுப்பூசி உற்பத்திக்காக குறிப்பிட்ட முன் அடையாள நிதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது, அதேவேளை உயிர் காக்கும் ஏனைய பொது சுகாதார நடவடிக்கைகளுக்காக எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில், தொற்றுநோய்க்கான உண்மையான தீர்வு என்பது, மருத்துவ அல்லது விஞ்ஞான ரீதியிலானது அல்ல, மாறாக சமூக மற்றும் அரசியல் ரீதியிலானது, அதாவது சர்வதேச தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அபரிமிதமான செல்வத்தை கையகப்படுத்தி, கடந்த 18 மாதங்களாக உலகில் ஏற்பட்டுள்ள பாரிய மரண துயரத்தை முடிவுக்குக் கொண்டு வர அதை பயன்படுத்துவதாகும்.

Loading