மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வேர்ஜீனியாவிலுள்ள டப்ளினில் வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ கனரக தொழிலாளர்களுக்கு வாகன மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்திய தொழிலாளர்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது.
யுனைடெட் ஆட்டோ வொர்க்கர்ஸ் (UAW) தொழிற்சங்கத்தின் ஆதரவுடன் இரண்டாவது நிறுவன சார்பு ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் 90 சதவிகிதம் நிராகரித்ததை அடுத்து ஜூன் 7 ஆம் தேதி சுமார் 3,000 தொழிலாளர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இரண்டாவது வாரத்தில் நுழைந்தது.
நிறுவன சார்பு UAW தலைமை வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை தனிமைப்படுத்த வேண்டிய அனைத்தையும் செய்துள்ளது. மறுபுறம், வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழு தங்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும்படி விடுத்த அழைப்புக்கு தொழிலாளர்கள் சர்வதேச அளவில் ஆதரிக்கின்றனர்.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஸ்ரீபெரம்புதூரில் இயங்கும் வாகன உதிரிப்பாக நிறுவனமான மதர்சன் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் அண்ட் இன்ஜினியரிங்கினால் (MATE) பணிநீக்கம் செய்யப்பட்ட 50 தொழிலாளர்களில் ஒருவர் பாலகிருஷ்ணன். அவர் ஆலையில் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவருக்கு மாத சம்பளம் 11,700 ரூபாய் (160 அமெரிக்க டாலர்), இது மதர்சன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சராசரி சம்பளம்.
அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக அவரது மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட அவரது குடும்பம் கடுமையான வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட பல தொழிலாளர்களின் நிலையும் இதுதான். 140 நாள் வேலைநிறுத்தத்தின் போது அவர் சம்பளத்தையும் இழந்துள்ளார்.
வொல்வோ தொழிலாளர்கள் போராட்டம் குறித்து பேசிய அவர், “வொல்வோ கனரக தொழிலாளர் வேலைநிறுத்தம் ஒரு வரலாற்றுரீதியான வேலைநிறுத்தமாகும், அது சமரசமின்றி தொடர வேண்டும். வேலைநிறுத்தம் செய்யும் தைரியமான வொல்வோ தொழிலாளர்களுடன் நான் முழுமையாக வலுவான ஒற்றுமையுடன் இருக்கிறேன். வொல்வோ சாமானிய தொழிலாளர்களின் இந்த இயக்கம் மற்றும் அவர்களுக்கு கிடைத்து வரும் சர்வதேச ஆதரவு அதிகரித்து வருவதனால் நிர்வாகமும் அதன் முகவர்களான UAW தலைமையும் பயப்பட வேண்டும்.
"வொல்வோ கனரக சாமானிய தொழிலாளர்களின் குழு, வொல்வோ நிர்வாகம் மற்றும் UAW தலைமையின் கூட்டு சதித்திட்டங்களை சி.சி.டி.வி கேமரா போன்று கண்காணித்து தொழிலாளர்களுக்கு தகவல் அளித்துக் கொண்டிருக்கும்.
"தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் ஆதரவை எவ்வாறு திரட்டுவது என்பதற்கு இந்த வேலைநிறுத்தம் ஒரு எடுத்துக்காட்டு. இது ஒரு நீடித்த வேலைநிறுத்தமாக மாறினாலும், அவ்வாறே இருக்கட்டும், அது தொழிலாளர்களின் போராட்ட உணர்வை எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும். இந்த போராட்டத்தின் முடிவு என்னவாக இருந்தாலும், வரவிருக்கும் தலைமுறை தொழிலாளர்கள் இந்த வீரமான வேலைநிறுத்தத்தை பாராட்டுவார்கள், மற்றும் அதிலிருந்து கற்றுக்கொள்வார்கள்.
"வொல்வோ கனரகதொழிலாளர்களின் போராட்டங்களால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன், அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்ற விரும்புகிறேன். நாங்கள் வொல்வோ வேலைநிறுத்தக்காரர்களிடமிருந்து வெகு தொலைவில் வாழ்ந்தாலும், துரோக தொழிற்சங்கம் மற்றும் இலாபமடைந்து வரும் நிறுவனத்தின் வடிவத்தில், ஒரு பொதுவான எதிரியை எதிர்கொள்ளும் தொழிலாளர்களாக என் இதயம் உங்களைப் போலவே துடிக்கிறது. சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து, இந்த அனுபவத்தை எனது சக ஊழியர்கள் அனைவரிடமும் நான் விவாதிக்க விரும்புகிறேன். ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் நான் பயப்படவில்லை.”
அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்த நீண்ட வேலைநிறுத்தம் குறித்தும், ஆலையில் செயல்படும் தொழிற்சங்கம் ஆற்றிய துரோகப் பாத்திரம் பற்றியும் அவர் சுருக்கமாக கூறினார்- அந்த சங்கம் ஆரம்பத்தில் மாவோயிச AICCTU. AICCTU. உடன் இணைக்கப்பட்டது. பின்னர், அது பிரிந்து, தமிழ் நாடு பிராந்திய அடிப்படையில் பிளவுபட்ட குழுவாக LTUC உருவாக்கப்பட்டது.
வேலை இல்லாத நிலையில் தனது குடும்பத்திற்கு உணவளிப்பது மிகவும் கடினமானதாக இருந்தது என்று அவர் கூறினார். பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அனைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் கடைசியாக கணக்கு முடிக்கும் தொகையாக 150,000 ரூபாய் (2,055 அமெரிக்க டாலர்) தொகுப்பை MATE அனுப்பியது. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அதை ஏற்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக காசோலைகளை தொழிற்சங்க அலுவலகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் தொழிற்சங்கம் வலியுறுத்தியது. இந்த நடவடிக்கை 148 நாட்கள் மதர்சன் வேலைநிறுத்தத்தில் முன்னணியில் இருந்த தொழிலாளர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், நீதிமன்றங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கை எடுத்து வாதாடுவதில் தொழிற்சங்கம் ஆர்வமாக உள்ளது என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் மட்டுமே.
"ஒரு வருடம் கடந்துவிட்டது, ஆனால் LTUC இன்னும் இது தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றங்களை அணுகவில்லை" என்று பாலகிருஷ்ணன் கூறினார். மேலும் “ஆனால் தொழிற்சங்கம் இதை எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்பவில்லை. எனது குழந்தைகளுடன் எனது குடும்பத்தை நிர்வகிக்க நான் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களிடமிருந்து நான் கடன் வாங்குகிறேன். கொரோனா வைரஸின் தாக்கத்தால் அவர்களும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படுவதால், அதே ஆட்களிடம் தொடர்ந்து உதவி கேட்பதற்கும் நான் சங்கடப்படுகிறேன்.
"இந்த நிலைமைகளை நாம் எவ்வளவு காலத்திற்குத் தான் பொறுத்துக் கொள்ள முடியும், நாங்கள் நிறுவனங்களில் அடிமைகளைப் போலவே வேலை செய்து வந்தோம், இப்போது தொழிற்சங்கமும் எங்களை அடிமைகளைப் போலவே நடத்துகிறது, தொழிற்சங்கத்தைப் பற்றி விமர்சனக் கருத்துக்களை எழுப்பும் எவருடனும் நாங்கள் பேசக்கூடாது."
மதர்சன் வேலைநிறுத்தத்தின் போது WSWS வழங்கிய விரிவான செய்திகளை அவர் பாராட்டினார், அந்த சமயத்தில் பிரதான ஊடகங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்தன.
ஆலையில் இயங்கிய தொழிற்சங்கத் தலைமை WSWS ஐ கண்டு மிரண்டது பற்றி தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார். WSWS நிருபர்கள் "தொழிற்சங்கத்தைப் பற்றி போலி செய்திகளைப் வெளியிடுவதாக" கூறி அவர்களுடன் பேச வேண்டாம் என்று யூனியன் நிர்வாகிகள் வேலைநிறுத்தக்காரர்களிடம் கூறினர்.”
மற்ற தொழிலாளர்களும் அவர்களது போராட்டங்கள் பற்றிய செய்திகளை குறித்தும் நிறுவனத்தின் பூகோள ரீதியான வலையமைப்பு மற்றும் அதன் பெரும் இலாபங்களைப் பற்றியும் WSWS அம்பலப்படுத்தியது பற்றியும் கூறினர்.
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் நடத்துனரான எஸ். வாசன் இவ்வாறு கூறினார்: “வேர்ஜீனியா டப்ளின் ஆலையில் பெரும்பான்மையான கிளர்ச்சித் தொழிலாளர்களுக்கு எதிராக UAW அதிகாரத்துவம் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகத்தின் கூட்டு சதித்திட்டத்திற்கு எதிராக வொல்வோ கனரக தொழிலாளர்கள் ஒரு பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கார்ப்பரேட் மேலாண்மை மற்றும் கார்ப்பரேட் சார்பு தொழிற்சங்கத்திற்கு எதிராக, இரு முனைகளில் போராட்டம் வளர்ந்ததால், அவர்களின் தைரியமான போராட்டத்தை உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஆதரிக்க வேண்டும்.
"அமெரிக்காவிலும் இங்கே இந்தியாவிலும் உள்ள தொழிற்சங்கங்களின் பொதுவான தன்மையை நான் காண்கிறேன். கடந்த மூன்று தசாப்தங்களாக தொழிற்சங்கங்களின் மோசமான பங்கை நான் எனது சொந்த அனுபவத்தின் மூலம் கண்டேன். பெரும்பாலான தொழிலாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்துள்ள ஏதாவது ஒரு தொழிற்சங்கங்களில் உள்ளனர். ஆனால் பெரிய அரசியல் கட்சிகள் பெரிய நிறுவனங்களைப் போலவே செயல்படுகின்றன. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அவர்கள் மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிடுகிறார்கள்.
"அவர்களுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மாநில போக்குவரத்து துறையில் மினி கார்ப்பரேட் தொழிற்சங்கங்களைப் போலவே செயல்படுகின்றன. தேர்தலுக்குப் பின்னர் கட்சியின் ஆட்சி மாறும் போதெல்லாம், மாநில போக்குவரத்துத் துறை ஆளும் கட்சியின் செல்வாக்கின் கீழ் வருகிறது. கட்சிகள் அதிகாரத்திற்கு வரும்போது தொழிற்சங்கங்களின் கட்டுப்பாடு மாறுகிறது.
"மாநில போக்குவரத்து தொழிலாளர்களிடையே பல தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன என்றாலும், அவர்களில் யாரும் உண்மையில் தொழிலாளர்களின் நலன்களுக்காக செயல்படுவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த சலுகைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்து மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். தொழிலாளர்களிடமிருந்து சந்தா தொகை வசூலிப்பதில் தொழிற்சங்கங்கள் அக்கறை கொண்டுள்ளன. அதிகாரிகளை மகிழ்விப்பதற்காக தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்களுக்கு சேவகர்களாக சேவை செய்கிறார்கள்.
"பொதுவாக, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன, இருப்பினும் நான்காவது அல்லது ஐந்தாம் ஆண்டில் கூட இப்போது இல்லை, இப்போது நாங்கள் ஆறாவது ஆண்டிற்குள் நுழைகிறோம், இன்னும், எந்த ஊதிய உயர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படுவதற்கான அறிகுறியே இல்லை. நம் கண்கள் எதிரே நாம் பார்ப்பது என்னவென்றால் நாம் கடினமாக போராடி வென்றெடுத்த ஒவ்வொரு நலன்களும் தொழிற்சங்கங்களின் உடந்தையுடன் போக்குவரத்துக் கழகத்தால் பறிக்கப்படுகின்றன.
"நாங்கள் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான மற்றும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் சாமானிய குழுக்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு WSWS வாசகர் வொல்வோ தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகப் பேசினார், “வொல்வோ தொழிலாளர்கள் நிறுவன உடமையை எதிர்த்து வந்துள்ளனர் மற்றும் நிர்வாக பக்கமாக சாய்ந்துள்ள தொழிற்சங்கத்தை நிராகரித்ததன் மூலமாக தொழிலாளர்களின் தைரியமான நேரடி நடவடிக்கையை எடுத்துக் காட்டியுள்ளனர். அவர்கள் தைரியமாக போராடுகிறார்கள். அவர்கள் குறுகிய காலத்தில் பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம், ஆனால் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்களின் வெற்றி உலகம் முழுவதும் ஒரு சங்கிலித் தொடரான எதிர்வினையை தோற்றுவிக்கும். துணிச்சலான வொல்வோ தொழிலாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
"அமெரிக்க முதலாளித்துவ ஒழுங்கிற்குள் ஏற்பட்ட விரிசல்கள் இப்போது உலகம் முழுவதும் தெளிவாக உள்ளன. இதுவரை இது முதலாளித்துவ புத்திஜீவிகளால் இலட்சியமானதாகவும் வெல்லமுடியாததாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு வந்தது. அவர்கள் கூட தங்கள் புரிதலை மீளாய்வு செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஊழல் தொழிற்சங்கங்களின் திவாலும் வெளிப்படையாகவே உள்ளது. தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம் மற்றும் விவசாயிகள் ஒன்றுபட்டு ஊழல் முறையை எதிர்த்துப் போராடுவதே ஒரே வழி.”