முன்னோக்கு

ஐரோப்பிய அரசாங்கங்கள் கோவிட்-19 அதிகரிப்புடன் "வாழுமாறு" மக்களைக் கோருகின்ற நிலையில், தொழிலாளர்கள் ஒரு சோசலிச மூலோபாயத்தை ஏற்க வேண்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பாவில் இந்த தொற்றுநோய் ஏற்கனவே 1.1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்களுக்கும் கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதற்கும் வழிவகுத்துள்ளது. அக்கண்டத்தில் ஒரு புதிய கோவிட்-19 அலை வீசுகின்ற நிலையில் இது இன்னும் கடுமையாக மோசமடைய உள்ளது.

டாக்டர் மைக்கல் ரையான் (இடது), 2020 ஆம் ஆண்டில் ஒரு மாநாட்டில் WHO தொற்றுநோயை சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது [Credit: Fabrice Coffrini]

இங்கிலாந்தில் இந்த வைரஸ் கட்டுக்கடங்காது பரவி வருவது அக்கண்டம் எங்கிலுமான நிகழ்வுகளுக்கு முன்னறிகுறியாகும். இன்னும் ஒரு சில வாரங்களில் பிரிட்டனில் கூடுதலாக மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பயங்கரமான முன்அனுமானங்கள் உள்ளன, அங்கே அதிகம் பரவக்கூடிய டெல்டா வகை ஏற்கனவே ஏறக்குறைய எல்லா நோயாளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

மே 3 வாக்கில், இங்கிலாந்தின் நாளாந்த நோயாளிகள் எண்ணிக்கை 1,597 ஆக குறைந்திருந்தது, உயிரிழப்புகளும் ஓரிலக்கத்திற்குக் குறைந்தன. ஆனால் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கம் மே 17 இல் நடைமுறையளவில் அனைத்து பொருளாதாரத்தையும் பொறுப்பற்ற முறையில் திறந்து விட்டு, தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நோய்தொற்று ஏற்பட அனுமதித்து, ஜூன் 18 வாக்கில் நாளொன்றுக்கு 10,000 பேருக்கு, ஜூன் 29 வாக்கில் 20,000 மற்றும் ஜூலை 7 இல் 30,000 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டதைக் கண்டது.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டங்களுக்கான துறை தலைவர் டாக்டர் மைக் ரையானும் மற்றும் உலகின் முன்னணி மருத்துவ பத்திரிகைகளில் ஒன்றான Lancet உம் இவ்வாரம் இங்கிலாந்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையைக் கண்டித்தனர். ரையான் கூறினார், “...நிறைய பேர் நோய்தொற்றுக்கு உள்ளாவது நல்லதே என்ற தர்க்கம், முன்னரே அதன் தார்மீக வெறுமையையும் அதன் தொற்றுநோயியல் சார்ந்த முட்டாள்தனத்தையும் நிரூபித்துள்ள தர்க்கமாக நான் நினைக்கிறேன்,” என்றார்.

தடுப்பூசிகள் 'தொற்றுக்கும் இறப்புக்கும் இடையிலான தொடர்பை முறித்துள்ளது” என்ற பிரச்சாரத்தை எதிர்த்து, லான்செட் குறிப்பிடுகையில், ஜூலை 19 இல் கோவிட்-தடுப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது 'ஓர் ஆபத்தான மற்றும் நெறியற்ற பரிசோதனையில் பயணிப்பதாக' இருக்குமென விவரித்தது. ஒட்டுமொத்த மக்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போட அழைப்பு விடுத்து, அது அறிவிக்கையில், “நோய்தொற்றுக்கும் இறப்புக்கும் இடையிலான தொடர்பு பலவீனமடைந்திருக்கலாம், ஆனால் அது உடைந்துவிடவில்லை, மேலும் நோய்தொற்று இன்னும் கடுமையான மற்றும் நீண்ட கால நோய்தன்மை என இரண்டு விதத்திலும் கணிசமாக நோயாளிகளை உருவாக்க முடியும்,” என்று குறிப்பிட்டது.

ஆனால், சமூக நோயெதிர்ப்பு பெருக்கும் கொள்கை ஒவ்வொரு ஐரோப்பிய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது. கடந்த அக்டோபரில், மூடிய கதவுகளுக்குப் பின்னால், ஜோன்சன் வலியுறுத்துகையில், இனி மேற்கொண்டு சமூக அடைப்புகள் கிடையாது என்றார், “சடலங்கள் ஆயிரக் கணக்கில் மலையென குவியட்டும்,” என்று அவர் அறிவித்தார். ஆனால் இது இப்போது ஒவ்வொரு இடத்திலும் ஆளும் உயரடுக்கின் அறிவிக்கப்படாத மந்திரமாக உள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் அவரது குழுவும் நாம் அனைவரும் 'வைரஸுடன் வாழ பழகிக் கொள்ள' வேண்டும் என்று வலியுறுத்திய போது, அவர்கள் உண்மையில் இதை தான் அர்த்தப்படுத்துகிறார்கள்.

அக்கண்டம் முழுவதிலும், சமூக இடைவெளியும் ஏனைய எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளும் கைவிடப்பட்டு வருகின்றன, பெருவணிகங்களை சுதந்திரமாக செயல்பட வைக்கும் நோக்கில் பிரிட்டனின் Daily Mail 'கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் பெருந்தீயில் எரிக்கப்படுவதாக' அதைக் கொண்டாடியது. ஆனால் இதன் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும்.

ஏற்கனவே ஐரோப்பா எங்கிலும் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100,000 புதிய நோயாளிகள் பதிவாகி வருகின்றனர். கடந்த வாரம் அங்கே 570,251 நோயாளிகள் இருந்தனர், இது அதற்கு முந்தைய வாரத்தை விட 40 சதவிகிதம் அதிகம். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1,000 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவிலும், மிகவும் பரவக்கூடிய டெல்டா வகையால் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குனர் Hans Kluge, இன்னும் ஒரு சில வாரங்களில் ஐரோப்பா முழுவதும் டெல்டா வகை மேலோங்கி இருக்குமென அனுமானிக்கிறார்.

எப்படி பார்த்தாலும், நோய்தொற்றுகள் மற்றும் இறப்புக்களின் அதிகரிப்பு இங்கிலாந்தை விட அதிகமாக தான் இருக்கும். பிரிட்டன் மக்களில் ஏறக்குறைய 70 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி பெற்றுள்ளனர், 51 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் அவசியமான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். ஆனால் அதற்கு எதிர்முரணாக, ஐரோப்பிய சனத்தொகையில் 63 சதவீதத்தினர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசி கூட பெறவில்லை. வயதானவர்களில் பாதிப் பேர் மற்றும் மருத்துவத்துறை தொழிலாளர்களில் 40 சதவீதத்தினருக்குத் தடுப்பூசி இடப்படவில்லை.

தடுப்பூசி போடப்படாத மில்லியன் கணக்கானவர்களை அச்சுறுத்தும் இந்த அதிபயங்கரமான நிலைமை, ரஷ்யாவில் மிகச் சிறந்த உதாரணமாக எடுத்துக்காட்டப்படுகிறது. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை பிரிட்டனை விட சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருந்தாலும், மக்களில் வெறும் 13 சதவீதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதால் கடந்த நான்கு நாட்களில் உயிரிழப்புகள் 700 க்கும் அதிகமாக சென்றுள்ளது.

ஏற்கனவே நோய்தொற்று இம்மாத முதல் வாரத்தில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பகுதிகளை உள்ளடக்கிய 53 நாடுகளில் 10 சதவீதம் அதிகரித்திருந்தது. சுற்றுலா மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ள நாடுகளில் இந்த அதிகரிப்பு படுமோசமாக உள்ளது. பைனான்சியல் டைம்ஸ் செய்திபடி, ஸ்பெயினில் மொத்த நோயாளிகளில் 30 சதவீதத்தினருக்கு டெல்டா வகை உள்ளது, மேலும் 'ஜூலை 17 வாக்கில் இது மேலோங்கி அதிகரிக்கக்கூடும்.” திங்கட்கிழமை 32,607 புதிய நோயாளிகளைப் பதிவு செய்த ஸ்பெயின், ஏற்கனவே 2020 இன் மொத்த எண்ணிக்கையை விட இந்தாண்டு அதிக கொரோனா வைரஸ் நோயாளிகளைப் பதிவு செய்துள்ளது, இளைஞர்களே இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளில் ஏற்கனவே 70 சதவீதத்தினருக்கு டெல்டா வகையைக் கொண்டுள்ள போர்ச்சுக்கல், பெப்ரவரியில் இருந்து அதன் அதிகபட்ச தினசரி நோயாளிகள் எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் கிரீஸ் 200 சதவீத நோயாளிகளின் அதிகரிப்பைக் கண்டுள்ளது.

இந்த பெருந்தொற்றின் மற்றொரு அலையின் ஆபத்துக்கள் ஒவ்வொரு ஐரோப்பிய அரசாங்கத்திற்கும் தெரியும், ஆனாலும் அதை எதிர்த்துப் போராட எந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளது கஜானாவுக்குள் இலாபங்கள் தொடர்ந்து பாயும் வகையில் அக்கண்டம் முழுவதும் பொருளாதாரங்களைத் திறந்து விடுவது மட்டுமே அவற்றின் ஒரே கவலையாக உள்ளது.

பாரியளவில் பெரும்-பரவல் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல மாறாக விஷயங்கள் உண்மையிலேயே 'இயல்பு நிலைக்கு வந்துவிட்டதற்கு' ஆதாரமாக கொண்டாடப்படுகின்றன. தாமதமாக நடத்தப்பட்ட 2020 ஐரோப்பிய கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் ஐரோப்பா எங்கிலும் 11 வெவ்வேறு நகரங்களில் 24 தேசிய குழுக்கள் விளையாடியதுடன், 1.4 மில்லியன் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் இடையே நடந்த அரையிறுதிக்கு இலண்டனின் வெம்ப்ளி மைதானத்தில் 66,000 பேர் கலந்து கொண்டதையே விஞ்சும் அளவுக்கு, நகர மையங்கள் பாரிய 'ரசிகர் மண்டலங்களாக' மாறி காட்சியளிக்கின்றன, இத்துடன் ஐரோப்பா எங்கிலுமான உல்லாச விடுதிகள் மற்றும் மதுக்கூடங்களில் சிறப்பு மேற்கூரைகளும் போடப்பட்டன.

ஆளும் வர்க்கத்தின் கொள்கை, இந்த பெருந்தொற்றையும், அத்துடன் சேர்ந்து பாரிய இறப்புகள் மற்றும் சமூக சீரழிவுகளையும், தொடர்ந்து வைத்திருப்பதை அர்த்தப்படுத்துகிறது. சமூகத்தின் மீதான இந்தப் போரை நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும்.

இந்த தொற்றுநோயின் ஆரம்பத்திலேயே, இத்தாலியிலும் ஐரோப்பா எங்கிலும் முக்கிய வாகன உற்பத்தி ஆலைகளிலும், எந்திரம் உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலைகளில் வேலைநிறுத்தம் செய்து வெளியேறிய தொழிலாளர்களின் நடவடிக்கை தான் ஆரம்ப முடக்கங்களை அறிவிக்கவும், சமூக எதிர்ப்பைத் தணிக்க கட்டாய விடுப்பு திட்டங்களைக் கொண்டு வரவும் அரசாங்கங்களை நிர்ப்பந்தித்தது.

ஆளும் வர்க்கத்தின் இந்த கட்டாய பின்வாங்கல் இன்று முடிவுக்கு வந்துவிட்டது. தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்களைக் குறைத்துக் காட்டுவதற்கு, தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் உத்வேகமான ஆதரவுடன் ஒரு திட்டமிட்ட முயற்சி நடக்கிறது, இதில் வெகுஜன ஊடங்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

ஆனால் இன்னமும் ஐரோப்பிய தொழிலாளர்கள் மத்தியில் கணிசமான எதிர்ப்பு உள்ளது என்பது மட்டுமல்ல, வேலைகள், கூலிகள் மற்றும் சமூக சேவைகளை அழிக்க ஆளும் வர்க்கம் தாக்குதல் நடத்தும் நிலைமைகளின் கீழ், பெருவணிகங்களுக்கு வழங்கப்பட்ட பல ட்ரில்லியன் யூரோ பிணையெடுப்புகளின் செலவைத் தொழிலாளர்கள் முதுகில் கட்டுவது சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை உடையும் புள்ளிக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது என்ற நிலைமைகளின் கீழ் அந்த எதிர்ப்பு தூண்டிவிடப்பட அச்சுறுத்துகிறது. ஏற்கனவே இது இலத்தீன் அமெரிக்காவில் பாரிய போராட்டங்கள் மற்றும் அமெரிக்காவில் Warrior Met நிலக்கரி சுரங்கம், Frito-Lay ஆலை மற்றும் வொல்வோ ட்ரக் ஆலையில் தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெடிக்க இட்டுச் சென்றுள்ளது, அதுவும் விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தங்களை திணிக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முயற்சிகளை எதிர்த்து அறைகூவல் விடுத்து நடந்துள்ளது. இந்த வாரம் பெல்ஜியத்தின் கென்ட் வொல்வோ தொழிலாளர்களும் அவர்களின் தொழிற்சங்கத்தின் இதேபோன்ற விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக ஒரு திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

இப்போது ஒவ்வொன்றும், தொழிலாள வர்க்கம் ஒரு புதிய போராட்ட அச்சை ஏற்று அதற்காக போராடுவதற்கு அவசியமான தலைமையைக் கட்டமைப்பதைச் சார்ந்துள்ளது.

கடந்த செப்டம்பரில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஐரோப்பிய பிரிவுகள், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei), பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி, பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) மற்றும் துருக்கியிலுள்ள அதன் ஆதரவு பிரிவான Sosyalist Eşitlik ஆகியவை ஆளும் வர்க்கத்தின் இந்த கொலைபாதக திட்டநிரலுக்கு எதிராக கண்டம்-தழுவி தொழிலாள வர்க்கத்தின் அணித்திரட்டலுக்கு அழைப்பு விடுத்தன. ஐரோப்பிய பிரிவுகளின் அந்த அறிக்கை நிறைவாக அறிவித்தது, “பல ஆண்டுகளாக ஏமாற்றி பறித்து வழங்கிய பிணையெடுப்புகளைக் கொண்டு ஆளும் வர்க்கம் களவாடிய ஆதாரவளங்களைப் பறிமுதல் செய்து, ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களைக் கவிழ்த்து, முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து, பிற்போக்குத்தனமான ஐரோப்பிய ஒன்றியத்தை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கான போராட்டமே இப்போது ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் அரசியல் தீவிரமயப்படல் மற்றும் அணிதிரள்வு முகங்கொடுக்கும் பணியாகும்,” என்று குறிப்பிட்டது.

தேசியவாத, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக செயல்படும் சாமானிய வேலையிடக் குழுக்களை உருவாக்க அது கோருகிறது. கல்வித்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் ஏனைய துறைகளில் உள்ள தொழிலாளர்களின் முக்கிய பிரிவுகளை அணிதிரட்டவும் மற்றும் அமெரிக்கா மற்றும் பெல்ஜியத்தில் வொல்வோ தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களில் செய்வதைப் போல, இப்போது போராட்டத்திற்குள் நுழைந்து வரும் தொழிலாளர்கள் அனைவரது எல்லை கடந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைக்குத் தலைமை கொடுக்கவும் ICFI இன் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

தொழிலாள வர்க்கம் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முதலாளித்துவவாதிகள் மற்றும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளின் கைகளில் இருந்து கட்டுப்பாட்டை எடுத்தாக வேண்டும்; பெருவணிகத்திற்குக் கொடுக்கப்பட்ட பல பில்லியன் பிணையெடுப்புக்களை இரத்து செய்து, இந்த பெருந்தொற்று எதிராக போராடி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதியியல் மற்றும் தொழில்துறை ஆதாரவளங்களைத் திசைத்திருப்பி விட வேண்டும், வேலைகள் மற்றும் இன்றியமையா சேவைகள் அழிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிசத்திற்கு அவசியமான போராட்டத்தைத் தொடுக்க ஒவ்வொரு நாட்டிலும் ICFI இன் பிரிவுகளைக் கட்டமைக்க வேண்டும்.

Loading