முன்னோக்கு

வாக்குரிமைகள் மீதான உரையில், பைடென் அமெரிக்க ஜனநாயகம் மரண வாசலில் இருப்பதை ஒப்புக் கொள்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டொனால்ட் ட்ரம்பின் முயற்சிக்கப்பட்ட ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டிலுள்ள மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் வாக்குரிமைகள் மீதான முன்பில்லாத தாக்குதலுக்கு முதல்முறையாக விடையிறுத்து ஜனாதிபதி ஜோ பைடென் செவ்வாய்கிழமை பேசியிருந்தார்.

President Joe Biden delivers a speech on voting rights at the National Constitution Center, Tuesday, July 13, 2021, in Philadelphia. (AP Photo/Evan Vucci)

பிலடெல்பியாவின் தேசிய அரசியலமைப்பு மையத்தில் வழங்கப்பட்ட பைடெனின் உரை, டல்லாஸில் நடத்தப்பட்ட பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டுக்கு (CPAC) இரண்டு நாட்களுக்குப் பின்னர் வந்தது, அந்த மாநாட்டில் சோசலிசத்திற்கு எதிராக சீறிய ட்ரம்ப், 'முதுகில் குத்தி' களவாடப்பட்ட தேர்தல் என்ற அவர் பொய்யை மீண்டும் வலியறுத்தியதுடன், அமெரிக்க தலைமை செயலகம் மீதான அந்த வன்முறையான தாக்குதலை 'தீவிரக் கொள்கை இடது' ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து 'அமெரிக்காவைத் திரும்பப் பெறும்' ஒரு தேசப்பற்று முயற்சியாக பாதுகாத்தார்.

CPAC நிகழ்வை மதிப்பீடு செய்து உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது: 'டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் மீது அதிகாரத்தை உறுதிப்படுத்தி வருவதுடன், அதை ஒரு பழமைவாத முதலாளித்துவக் கட்சி என்பதிலிருந்து தனிப்பட்ட தலைவரையும் ஓர் துணை இராணுவப் படைப் பிரிவையும் கொண்ட ஒரு பாசிசவாத கட்சியாக மாற்றி வருகிறார்.”

பைடென் செவ்வாய்கிழமை கூறிய அவர் கருத்துக்களில், இன்றைய அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி மற்றும் ஜனவரி 6 இல் அது கிட்டத்தட்ட தூக்கியெறியப்பட இருந்ததன் மீது மிகவும் நேரடியான மற்றும் பலமான ஒப்புதலை வழங்கினார்.

'2020 இல்” 'ஜனநாயகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. முதலில் பெருந்தொற்று, பின்னர் தேர்தல் முடிவுகளின் யதார்த்தத்தை மறுக்கும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சி, பின்னர் நமது ஜனநாயகத்தின் கோட்டையாக விளங்கும் தலைமை செயலகத்தின் மீது ஒரு வன்முறை மற்றும் மரணகதியிலான கிளர்ச்சி இருந்தது,” என்றார்.

வாக்குரிமைகள் மீதான தாக்குதலை 2020 தேர்தலைத் தூக்கியெறியும் முயற்சியுடன் தொடர்புபடுத்தி அவர் குறிப்பிடுகையில், நவம்பர் தேர்தலுக்குப் பின்னர் இருந்து, குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள 17 மாநிலங்கள், தொழிலாள வர்க்கமும், ஏழை மற்றும் சிறுபான்மை வாக்காளர்களும் வாக்களிப்பதைத் தடுக்கும் 28 சட்டங்களை நிறைவேற்றி உள்ளன, அமெரிக்கா முழுவதும் மொத்தம் இதுபோன்று 400 சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

அரசியலமைப்பைத் தூக்கியெறிந்து சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் முயற்சி தொடர்கிறது என்றவர் எச்சரித்தார். 'தெளிவாகக் கேளுங்கள்,' என்று கூறிய அவர், 'இன்று அமெரிக்காவில் ஒரு வெளிப்படையான தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது, நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களில் வாக்குரிமையை நசுக்கும் மற்றும் கவிழ்க்கும் ஒரு முயற்சி, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், சுதந்திரத்தின் மீதான தாக்குதல், அமெரிக்கர்களாகிய நம் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது,' என்றார்.

2022 இடைத்தேர்தல்களில் அமெரிக்கா 'முன்னெப்போதும் இல்லாத வகையில் வாக்காளர்கள் மீதான ஒடுக்குதல் மற்றும் நேரடியான இடைவிடாத தேர்தல் நாசவேலைகளின் ஒரு புதிய அலையை' எதிர்கொள்ளக்கூடும் என்றவர் தொடர்ந்து கூறினார்.

'உள்நாட்டுப் போருக்குப் பின்னர் நமது ஜனநாயகம் மீது மிகவும் முக்கியமான சோதனையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்,' என்று அறிவித்த அவர், 'இது மிகைப்படுத்தல் அல்ல... ஜனவரி 6 இல் கிளர்ச்சியாளர்கள் செய்ததைப் போல் காலம்காலமாக ஒருபோதும் கூட்டமைப்புகள் தலைமைச் செயலகத்தில் அத்துமீறியதில்லை. இதை நான் உங்களை எச்சரிப்பதற்காக கூறவில்லை. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக கூறுகிறேன்,” என்றார்.

அமெரிக்க ஜனநாயகம் மரணத்தின் வாயிலில் உள்ளது என்ற இந்த பயங்கரமான ஒப்புதல்கள் அதை பாதுகாப்பதற்கான பைடென் முறையீடுகளின் பொறுப்பற்ற மற்றும் கையாலாகாத தன்மையுடன் கூர்மையாக முரண்பட்டு நின்றன. “காங்கிரஸ் சபை மற்றும் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சியிலுள்ள என் குடியரசுக் கட்சி நண்பர்களே நமது தேர்தல்களையும் புனிதமான வாக்குரிமையையும் குழிபறிக்கும் இந்த ஒருங்கிணைந்த முயற்சியைத் தடுக்க உதவ எழுந்து நில்லுங்கள்,” என்று விரல்களைப் பிசைந்தவாறு தார்மீக முறையீடுகளை அவை கொண்டிருந்தன.

'உங்களுக்கு வெட்கமாக இல்லையா?' பைடென் கவலையோடு வினவினார்.

ட்ரம்பையோ—அல்லது, அந்த விவகாரத்தில், அவரது குடியரசுக் கட்சி சக-சதிகாரர்கள் எவரையுமோ, பெயரிட்டுக் குறிப்பிடுவதைப் பைடென் தவிர்த்திருந்தார். டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் மீதான அச்சுறுத்தல் குறித்தோ, இது டெக்சாஸ் குடியரசுக் கட்சியினரால் ஆதரிக்கப்பட்டது, வாக்காளர்களை ஒடுக்கும் புதிய சட்டம் நிறைவேற்றுவதைத் தாமதப்படுத்த பெரும்பான்மையை முறிப்பதற்காக திங்கட்கிழமை அம்மாநிலத்திலிருந்து வாஷிங்டன் டி.சி. தப்பி சென்ற டெக்சாஸ் மாநில பிரதிநிதிகள் சபையின் 51 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைக் குறித்தோ அவர் ஒன்றும் கூறவில்லை.

2013 இல் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட 1965 வாக்குரிமைகள் சட்டத்தின் முக்கிய அமலாக்க இயங்குமுறையை மீட்டமைக்கும் மற்றும் குடியரசுக் கட்சி மாநில சட்டங்களில் உள்ள பல ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை அகற்றும், இரண்டு சட்டமசோதாக்களை நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில் அமெரிக்க செனட் சபையின் முட்டுக்கட்டைகளை மாற்றுவதற்காக நிர்வாகத்திற்கு அழுத்தமளிக்கும் டெக்சாஸ் ஜனநாயகக் கட்சியினரைச் சந்திக்க பைடெனிடம் எந்த திட்டங்களும் இல்லை என்பது வெள்ளை மாளிகைக்குத் தெரிந்திருந்தது.

ஜனநாயகக் கட்சியின் ஜோ மன்சின் எழுதிய 'மக்களுக்கான சட்டம்' என்ற பூசிமொழுகிய வடிவத்தின் மீது செனட் சபை வாக்கெடுப்பைத் தடுக்க குடியரசுக் கட்சியினர் கடந்த மாதம் ஒருமனதாக வாக்களித்தனர். மன்சினும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஏனைய வலதுசாரி ஜனநாயகக் கட்சியினரும் வாக்குரிமைகள் முறை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் பலவீனமான ஜனநாயக-விரோத தடை விதிகளை ஆதரிக்க மறுத்து வருகின்றனர்.

'மிதவாத' குடியரசுக் கட்சியினருடன் 'இருகட்சியின் ஒருமனதான சம்மதம்' மற்றும் 'நல்லிணக்கம்' மீதான பைடெனின் வலியுறுத்தலும் மற்றும் அவரது முதுகெலும்பற்றத்தன்மையும், ட்ரம்ப் ஆதிக்கம் செலுத்தும் GOP இன் அரசியல் காட்டுமிராண்டித்தனத்துடன் கூர்மையான முரண்பட்டு நிற்கின்றன. கடந்தாண்டு பிணையில் இருந்த போதே வாக்களித்ததற்காக 62 வயதான ஆபிரிக்க அமெரிக்க தொழிலாளரைக் கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம், அவரது வாக்குரிமைகள்-விரோத சட்டமசோதாவை முன்நகர்த்துவதற்காக அழைக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டமன்ற அமர்வில் அபோட் குரல் கொடுத்தார்.

பைடென் அவருடைய பிலடெல்பியா உரையில் அறிவித்த ஒரே உறுதியான நடவடிக்கை, ஜனநாயகக் கட்சியின் வாக்குரிமைகள் சட்டமசோதாக்களின் தோல்வியை மறைமுகமாக ஏற்றுக் கொள்வதற்கு நிகராக உள்ளது—அவையே கூட வாக்குரிமைகள் மீதான தாக்குதலைத் தடுக்கவோ மற்றும் ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள் சர்வாதிகாரத்தை நோக்கி அவற்றின் முனைவைத் தீவிரப்படுத்துவதைத் தடுக்கவோ மிகக் குறைவாகவே சேவையாற்றுகின்றன. குடியரசுக் கட்சியினரின் நடவடிக்கையில் சேர்க்கப்பட்ட மிகவும் கடுமையான அவசியப்பாடுகள் அடிப்படையில், வாக்காளர்களின் பதிவு மற்றும் கல்வியூட்டும் முனைவுக்காக பைடென் ஜனநாயகக் கட்சி தேசிய குழுவுக்கு 25 மில்லியன் டாலர் ஒதுக்குவதாக அறிவித்தார்.

இந்த 25 மில்லியன் டாலர் அற்பத் தொகை, பைடென் நிர்வாகம் மற்றும் உலகின் மிகப் பழமையான முதலாளித்துவக் கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிஜமான முன்னுரிமைகள் பற்றிய ஒரு குறிப்பை வழங்குகிறது. காங்கிரஸ் சபையின் ஜனநாயகக் கட்சியினர் பெருவாரியான ஆதரவுடன் பைடென் மிக அதிகபட்சமாக 753 பில்லியன் டாலர் இராணுவ வரவுசெலவுத் திட்டக்கணக்கை முன்மொழிந்துள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர், ஜனநாயகம் மீதான ஓர் அடிப்படை தாக்குதல் என்று அவர் எதை ஒப்புக் கொள்கிறாரோ அதை எதிர்ப்பதற்காக செலவிடுவதை விட, ஏனைய நாடுகளோடு சேர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அணுஆயுத போட்டியாளர்களான சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்வதற்கு 30,000 மடங்கு அதிகமாக செலவிட விரும்புகிறார்.

அமெரிக்க முதலாளித்துவத்தின் கட்சியோ அல்லது வேறெந்த உத்தியோகபூர்வ அமைப்போ இந்த பாசிசவாத சக்திகளின் எழுச்சிக்கும் இராணுவவாத அதிகரிப்புக்கும் எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. ட்ரம்பின் எழுச்சியும் குடியரசுக் கட்சியின் மாற்றமும், அத்துடன் சேர்ந்து ஜனநாயகக் கட்சியினர் இன்னும் அதிகமாக வலதுசாரி திசையில் செல்வதும், ஒரு நீடித்த பொருளாதார வீழ்ச்சி நிகழ்முறையின் விளைவாகும், இது அதிர்ச்சியூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பில் அதன் மிகவும் வீரியமான வெளிபாட்டைக் காட்டுகிறது.

அதீத அளவிலான சமூக சமத்துவமின்மை மற்றும் முடிவில்லா போருடன் ஜனநாயக உரிமைகள் இணங்கி இருக்க முடியாது. ஏற்கனவே 2000 இல், ஜனநாயகக் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் களவாடப்பட்டதை ஒரு எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டனர், உச்ச நீதிமன்றம் அப்போது புளோரிடாவில் மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்தியதுடன், மக்கள் வாக்குகளில் தோல்வியுற்ற ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிடம் வெள்ளை மாளிகையை ஒப்படைத்தது. உச்ச நீதிமன்றம் 2013 இல் வாக்களிப்பு உரிமைகள் சட்டத்தைத் தள்ளுபடி செய்த பின்னர், ஒபாமா நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியினரும் அதை மீட்டமைக்கும் சட்டத்தை இயற்ற எதுவுமே செய்யவில்லை.

இப்போது உலகளாவிய இந்த பெருந்தொற்று பில்லியன் கணக்கான மக்கள் முன்னால் முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் உயரடுக்குகளின் திறமையின்மையையும் மனித உயிர்கள் மீதான அவர்களின் அலட்சியத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த பெருந்தொற்று முதலாளித்துவத்தின் எல்லா முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சமூக பதட்டங்களையும் ஒரு கொதிநிலைக்கு கொண்டு வந்துள்ளது.

பெருநிறுவன இலாப நலன்களுக்காக நூறாயிரக்கணக்கான உயிர்களை விலை கொடுத்த மற்றும் மிக உயர்மட்டத்தில் செல்வவள திரட்சியை அதிகரித்த, ட்ரம்பின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையையே பைடென் நிர்வாகமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெடரல் ரிசர்வ் புள்ளிவிவரங்களின்படி, 2020 தொடக்கத்தில் இருந்து, அமெரிக்க மக்கள் தொகையில் அடிமட்டத்திலுள்ள 50 சதவீதத்தினர் செல்வவளத்தில் 700 பில்லியன் டாலர் பெற்றுள்ளனர், அதேவேளையில் மிகப் பணக்கார 1 சதவீதத்தினர் 10 ட்ரில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளனர்.

ட்ரம்பின் குடியரசுக் கட்சியுடன் நல்லிணக்கத்திற்கு முறையிடும் ஜனநாயகக் கட்சியினரின் கோரிக்கைகள், தொழிலாள வர்க்கம் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ இரு-கட்சி ஆட்சி முறையின் பிடியை உடைத்து விடும் என்ற அச்சத்தால் உந்தப்படுகின்றன. தொழிலாள வர்க்கத்தை வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்தி வைக்க அவர்களுக்கு ஒரு பெருநிறுவன ஆட்சி தேவைப்படுகிறது. அதே நேரத்தில், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் திசைதிருப்பவும் அவர்கள் இனவாத அரசியலை ஊக்குவிக்கிறார்கள்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் — வேர்ஜீனியாவின் வொல்வோ டிரக் ஆலையிலும், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், செவிலியர்கள் மற்றும் இன்னும் பலர் மத்தியில் — பெருகி வரும் வேலைநிறுத்த அலை வலதுசாரி தொழிற்சங்க எந்திரங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சி வடிவம் எடுத்து வருகிறது. இத்தகைய போராட்டங்கள் தீவிரமடையும். முக்கியமானது என்னவென்றால், அவர்கள் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் ஒரு நனவான சோசலிச முன்னோக்கை ஏற்க வேண்டும்.

சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு வெளியே ஜனநாயகம் இல்லை என்பதைத் தொழிலாளர்கள் காண்பார்கள். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் சர்வதேச ஐக்கியத்தையும் ஸ்தாபிப்பதற்கான புதிய அரசியல் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவதே இதன் அர்த்தமாகும்.

Loading