மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஸ்தாபிக்கப்பட்டதன் உத்தியோகபூர்வ நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் கடந்த வாரம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆற்றிய உரை, சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியையும், குறிப்பாக தன்னை அதன் மத்திய நபராக உயர்த்துவதை நோக்கமாகவும் கொண்ட பொய்கள் மற்றும் பிரச்சாரங்களின் சுய சேவைக்கான பொய்களின் பட்டியலாகும்.
உரையின் மத்தியக கவனம், “சீன தேசத்தின் புத்துணர்ச்சி” ஜியின் “கனவு” மற்றும் சர்வதேச அரங்கில் சீனாவை ஒரு பெரிய சக்தியாக மாற்றுவதற்கான அவரது வரைபடமாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவால் தனது 'மிதமான வளமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான குறிக்கோள்' அடையப்பட்டதாக அவர் அறிவித்தார். மேலும் ஆட்சி சீனாவில் 'முழுமையான வறுமையை' இல்லாதொழித்ததாக பெருமை பேசினார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக வெளிநாட்டு முதலீட்டின் வருகையால் உயர்த்தப்பட்ட சீனாவின் பொருளாதார விரிவாக்கம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருந்தாலும், அது பெரும் செல்வந்தர்களுக்கும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது. சீனா 'முழுமையான வறுமையை' ஒழித்துவிட்டது என்ற கூற்று மிகவும் குறைந்தமட்டத்திலான வறுமைக் கோடு மற்றும் சந்தேகத்திற்குரிய புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆண்டு பிரதமர் லி கெக்கியாங், 1,000 யுவான் (54 அமெரிக்க டாலர்) மாத வருமானம்பெறும், நகரத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்க போதுமானதாக இல்லாத 600 மில்லியன் மக்கள் சீனாவில் இன்னும் உள்ளனர் என்று கூறினார்.
ஜியின் இரண்டாவது நூற்றாண்டு குறிக்கோள், 1949 புரட்சி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சியில் அமர்த்திய 100 ஆண்டுகளுக்குப் பின்னர் 2049 க்குள் சீனாவை 'எல்லா வகையிலும் ஒரு சிறந்த நவீன சோசலிச நாடாக' உருவாக்குவதாகும். 1978 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கு திரும்பியதைத் தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியும் முதலாளித்துவ சந்தையின் ஆதிக்கம் செலுத்தப்படுகையில் சீனா இன்று ஒவ்வொரு வகையிலும் சோசலிசமானது என்ற கூற்று அபத்தமான பொய்யாகும்.
'சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசத்திற்கு' அவர் தலைமை தாங்குவதாகவும், மேலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மார்க்சிச மற்றும் சோசலிசக் கட்சியாக உள்ளது என்ற முழுபொய்களை மீண்டும் சொல்ல ஜி நிர்பந்திக்கப்படுவது 1949 புரட்சியின் வெற்றிகளுடன் சீன மக்கள் தொடர்ந்து தம்தை அடையாளம் காண்பதற்கு சான்றாகும். அந்த புரட்சிகர எழுச்சி, சீனா முழுவதும் சியாங் கேய்-ஷேக்கின் பிற்போக்குத்தனமான கோமின்டாங் ஆட்சியை முறியடித்து, சீனாவின் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, மேலும் சமூக மற்றும் கலாச்சார ரீதியாக பின்தங்கியிருந்தவற்றை இல்லாது ஒழித்தது.
எவ்வாறாயினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்ராலினிசத்தால் நாட்டுக்கு நாடு காட்டிக்கொடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட சர்வதேச புரட்சிகர எழுச்சியின் ஒரு பகுதியாக இருந்த 1949 புரட்சி, மிகவும் முரண்பாடான நிகழ்வாகும். மாவோ சேதுங்கின் கீழ் ஸ்ராலினிச சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய இராணுவத்தை அடிப்படையாகக் கொண்டதுடன் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரவலான போராட்டங்களை வேண்டுமென்றே கட்டுப்படுத்தியது. அது முதலாளித்துவ சொத்து உறவுகளைப் பேணிக்கொண்டு ஒரு புதிய சீனாவை நிர்மாணிக்க முயன்றது. ஆனால் அது விரும்பியதை விட இன்னும் செல்ல நிர்பந்திக்கப்பட்டது. 1955 அளவில் உற்பத்தி சாதனங்களை தேசியமயமாக்குதல் மற்றும் அதிகாரத்துவ அரச திட்டமிடலை செயல்படுத்த வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்திற்கு அங்கு அரசியல்ரீதியாக கருத்து தெரிவிக்க முடியாதிருந்தது.
குறிப்பிடத்தக்க வகையில், ஜி தனது உரையில், கட்சியின் வரலாற்று தொடர்பாக மிகக் குறைந்த நேரத்தை அர்ப்பணித்து, இது 'சீன தேசத்திற்கு' ஒரு புகழ்பெற்ற, தடையற்ற முன்னேற்றமாக முன்வைத்தார். ஸ்ராலினால் இரண்டாம் சீனப் புரட்சி (1925-27) பேரழிவுகரமாக தோற்கடிக்கப்பட்டது பற்றி அவர் குறிப்பிடவில்லை. அல்லது 1950 கள் மற்றும் 1960 களில் மாவோவின் முன்னோக்கிய பெரும்பாய்ச்சலின் பாரிய தோல்வியால் ஏற்பட்ட கசப்பான உள் போராட்டங்களால் மற்றும் நாட்டை சரிவின் விளிம்பிற்கு கொண்டு வந்த அவரது பேரழிவுகரமான கலாச்சாரப் புரட்சி பற்றி குறிப்பிடவில்லை.
ஜி பின்வருமாறு அறிவித்தார்: 'கடந்த நூறு ஆண்டுகளில் சீன மக்களை கட்சி ஒன்றிணைத்து வழிநடத்திய அனைத்து போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் உருவாக்கம் ஆகியவை ஒரு இறுதி கருப்பொருளால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அதாவது சீன தேசத்தின் பெரும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருகிறது.' உண்மையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கை கைவிட்டதும், “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற பிற்போக்குத்தனமான ஸ்ராலினிச கருத்தை ஏற்றுக்கொண்டதும், 1970 களில் சீனாவை பொருளாதார மற்றும் மூலோபாய முட்டுச்சந்திற்கு இட்டுச் சென்றது. இதன் விளைவாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ மறுசீரமைப்பை நோக்கித் திரும்பியது.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களுக்கும், தேசத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் சீன தேசியவாதம் ஒரு குறிப்பிட்ட முற்போக்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது. ஆயினும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியவாத அடிப்படையில் ஸ்தாபிக்கப்படவில்லை. மாறாக, அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியின் பிரதிபலிப்பாக, சோசலிசத்திற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே தேசிய, ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற முடியும் என்ற புரிதலின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டது.
இன்று, ஜியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன தேசியவாதத்தை தூண்டிவிடுவது முற்றிலும் பிற்போக்குத்தனமானது. இது ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இல்லாதது மட்டுமல்லாமல், உலக முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்குள் ஒரு முக்கிய இடத்தை பெற்றுக்கொள்வதற்காக தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் பல தசாப்தங்களாக முதலாளித்துவ மறுசீரமைப்பிலிருந்து இலாபம் ஈட்டிய செல்வந்த உயரடுக்கின் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது.
அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் “சர்வதேச விதிகளின் அடிப்படையிலான அமைப்புக்கு” சீனா ஒரு சவாலாக மாறுவதைத் தடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதியுடன், ஜியின் “கனவு” மோதுகின்றது. ட்ரம்ப் மற்றும் ஒபாமாவிடமிருந்து தொடர்ந்து ஜனாதிபதி பைடென், போர் உட்பட அனைத்து வழிகளிலும் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்க ஆசியா மற்றும் சர்வதேச அளவில் ஆக்கிரமிப்புமிக்க அமெரிக்க மோதலையும் இராணுவ கட்டமைப்பையும் துரிதப்படுத்துகிறார்.
பெருகிவரும் இந்த அச்சுறுத்தல்களுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் முற்போக்கான பதிலேதும் இல்லை. அமெரிக்காவை பற்றி தனது உரையில் குறிப்பிடாத நிலையில், சீன இராணுவத்தை பாராட்டிய ஜி, “பலத்தின் அச்சுறுத்தல்களால் சீனா மிரட்டப்படவில்லை… எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் எங்களை கொடுமைப்படுத்தவோ, ஒடுக்கவோ அல்லது அடிபணியவைக்கவோ அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு செய்ய முயற்சிக்கும் எவரும் 1.4 பில்லியனுக்கும் அதிகமான சீன மக்களால் உருவாக்கப்பட்ட எஃகு சுவருடன் மோதவேண்டியிருக்கும் என்பதை கண்டுகொள்வர்” என்றார்.
அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான பேரழிவுப் போரைப் பற்றி எச்சரிக்கும் அதே நேரத்தில், ஜி சமாதான சகவாழ்வுக்காக மன்றாடி, இவ்வாறு அறிவித்தார்: “முன்னோக்கிய பயணத்தில், அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றை சமாதானத்திற்கான கொள்கை மற்றும் வளர்ச்சியின் பாதையில் ஒரு சுயாதீனமான வெளிநாட்டு கொள்கையை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.” சீனப் பொருளாதாரத்தை மேலும் திறப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டுக்குச் செல்ல சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பலமுறை முயன்றது.
ஜியின் உரையைப் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், சீனாவிலும் சர்வதேச அளவிலும் பெருநிறுவன தலைவர்களின் நேர்மறையான பிரதிபலிப்பை அரசு நடத்தும் China Daily பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஜியின் 'அமைதியான வளர்ச்சியைத் தொடரும் சீனாவுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், உயர்தரத்திலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் சீர்திருத்தம் மற்றும் திறப்பு ஆகியவற்றை மேலும் ஆழப்படுத்துவதற்கும் அதன் தீர்மானம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தில் நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது' என்று அது அறிவித்தது.
முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கான திருப்பம் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சீனத் தலைமை எதிர்கொள்ளும் முரண்பாடுகளை ஆழமாகவும் ஆழப்படுத்தியுள்ளது. முதலாளித்துவ வர்க்கத்தின் போட்டி பிரிவுகள் அதிகாரம், சலுகைகள் மற்றும் செல்வாக்கிற்கான பிரிவுகளின் போட்டிகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தங்கள் வெளிப்பாட்டைக் காண்கின்றன. இன்னும் அடிப்படையில், ஆழமடைந்து வரும் சமூக பிளவு தீவிர வர்க்க பதட்டங்களை உருவாக்குகிறது. இதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரே ஒரு பதில் மட்டுமே உள்ளது. அதாவது எந்தவொரு, மட்டுப்படுத்தப்பட்ட, எதிர்ப்பு தெரிவிக்கும் வடிவத்திற்கும் எதிரான பொலிஸ்-அரசு நடவடிக்கைகளாகும்.
இந்த மோசமான வரலாற்று நெருக்கடியின் மத்தியில், போட்டியிடும் நலன்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்து சமநிலைப்படுத்த முயற்சிக்கும் ஒரு போனபார்ட்டிச நபராக ஜி முன்னணிக்கு தள்ளப்பட்டுள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் வழமையான இரண்டு ஐந்தாண்டு காலத்தை அவர் முடித்துவிட்டார். அவர் காலவரையின்றி ஜனாதிபதியாக இருக்க அனுமதிக்கக்கூடும். தனது உரையில், 'கட்சி மத்திய குழு மற்றும் ஒட்டுமொத்த கட்சியிலும் பொதுச் செயலாளரின் [அதாவது ஜி] முக்கிய நிலைப்பாட்டை நாங்கள் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்கு அனைத்து அதிகாரிகளினதும் ஆதரவு உள்ளதாக அவர் மீண்டும் கூறினார்'.
ஜி அச்சுறுத்தலாக பின்வருமாறு அறிவித்தார்: 'சீன மக்களிடமிருந்து கட்சியைப் பிரிக்க அல்லது மக்களை கட்சிக்கு எதிராக நிறுத்தும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும்.' ஜியைச் சுற்றியுள்ள பலத்தை பற்றி கவனமாக வளர்க்கப்பட்ட தோற்றம் மற்றும் உள்-கட்சி பிளவுகளைத் மூடிமறைப்பது உண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் பலவீனத்தின் பிரதிபலிப்பாகும். மக்கள்தொகையின் பரந்த அடுக்குகள் சோசலிசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுவது கேலிக்குரியது என்றும் தங்கள் வணிக நலன்களை வளர்ப்பதற்காக சக்திவாய்ந்த பதவிகளைப் பெறும் கட்சி அதிகாரிகளின் பரவலான ஊழலால் வெறுப்படைந்துள்ளார்கள்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் ஸ்தாபகத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் அசாதாரண முயற்சிகள், கட்சியின் உண்மையான வரலாற்றை வரலாற்று பொய்மைப்படுத்தல் மற்றும் பொய்களின் வெள்ளத்தின் கீழ் புதைப்பதற்கான ஒரு முயற்சியாகும். கடந்த 100 ஆண்டுகளில் கட்சியின் பங்கைப் பற்றி எந்தவொரு கேள்வியும் கேள்வி எழுப்பப்படுவது அரசியல் எதிர்ப்பை மேலும் தூண்டிவிடும் என்பதை ஜியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையும் உணர்ந்துகொண்டுள்ளனர்.
உண்மையான சோசலிசத்திற்காக போராட விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த நூற்றாண்டில் சீனாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளைப் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தலைமையிலான உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீடித்த போராட்டத்தில் அந்த அரசியல் படிப்பினைகள் உள்ளடங்கியுள்ளன. எங்களை தொடர்பு கொள்ளுமாறு சீனாவில் உள்ள இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழிலாளர்கள் கேட்டுக்கொள்கிறோம்.