மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க சீருடை அணிந்த உயர்மட்ட இராணுவத் தளபதியும் முப்படைகளின் தலைமை தளபதிகளின் தலைவருமான ஜெனரல் மார்க் மில்லி, அமெரிக்க தலைமை செயலகக் கட்டிடம் மீதான ஜனவரி 6 பாசிசவாத தாக்குதலுக்கு முன்னர், 'இதுவொரு ரைஹ்ஸ்டாக் தருணம், தலைவர் (Führer) இன் நற்செய்தி,' என்று அவரின் உதவியாளர்களுக்கு கூறினார்.
ஜெனரலின் அந்த குறிப்பு 1933 ரைஹ்ஸ்டாக் (நாடாளுமன்றம்) தீ விபத்து குறித்த குறிப்பாகும், ஜேர்மனிய நாடாளுமன்ற கட்டிடம் மீதான பயங்கரவாத தாக்குதலாக கூறப்பட்ட அதற்காக ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளி மீது பழி சுமத்தப்பட்டது. அது, நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைக் கைவிட்டு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு பயங்கர ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டு, ஹிட்லர் சர்வாதிகார அதிகாரங்களை ஏற்பதற்கு போலிக்காரணங்களை வழங்கியது. அந்த நெருப்பு நாஜி கெஸ்டாபோவால் உண்டாக்கப்பட்டதென பின்னர் நிரூபிக்கப்பட்டது.
வாஷிங்டன் போஸ்ட் நிருபர்களான கரோல் லியோன்னிக் மற்றும் பிலிப் ரக்கர் எழுதிய என்னால் மட்டுமே சரி செய்ய முடியும்: டொனால்ட் ஜெ. ட்ரம்பின் பேரழிவுகரமான கடைசி ஆண்டு என்ற புதிய புத்தகத்தில், 2020 தேர்தலை அடுத்து ட்ரம்பின் நடவடிக்கைகள் ஹிட்லரின் மேலெழுச்சியுடன் ஒப்பிடப்படுகிறது.
ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி அச்சுறுத்தலை மதிப்பிடவும், அவ்வபோது திட்டங்களை வரையவும் இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடல் எல்லையோரப்படையினது படைத் தளபதிகளின் சக உறுப்பினர்களை மில்லி தொடர்ந்து சந்தித்து வந்தார். ஒரு சர்வாதிகார அதிகார பறிப்பு இராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகளில் எந்த மட்டத்திலான ஆதரவைப் பெறும் என்பதைத் தீர்மானிப்பதற்காக, இந்த அமர்வுகள், சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்க அதிகாரிகளிடையே அரசியல் சூட்டைக் கணக்கிடும் நோக்கிலும் நடத்தப்பட்டிருந்தன.
'ஜேர்மனியில் 20 ஆம் நூற்றாண்டு பாசிசத்தின் ஆரம்ப கட்டங்களில் இருந்த சில கவலைகள் 21 ஆம் நூற்றாண்டு அமெரிக்காவில் மீண்டும் விளையாடுகிறது என்ற உணர்வு [மில்லியின்] வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது. தேர்தல் மோசடி பற்றிய ட்ரம்பின் வாய்ச்சவடால்களுக்கும், நூரெம்பேர்க் பேரணிகளில் அடோல்ஃப் ஹிட்லர் அவரது ஆதரவாளர்களிடம் அவர் பாதிக்கப்பட்டவராகவும் மற்றும் அவர்களின் இரட்சகராகவும் இரண்டு விதத்திலும் வலியுறுத்தியதற்கும் இடையிலான சமாந்தரங்களை அவர் கண்டார்,” என்று அந்த புத்தகம் குறிப்பிடுகிறது.
பிரவுட் பாய்ஸ், ஓத் கீப்பர்ஸ் மற்றும் த்ரீ பெர்சென்டர்ஸ் (Proud Boys, Oath Keepers, Three Percenters) போன்ற பாசிசவாத போராளிகள் குழுக்களில் உள்ள ட்ரம்பின் வெறிப்பிடித்த ஆதாரவாளர்களை 'பழுப்பு சட்டைக்காரர்கள்' என்று கூடுதலாக அந்த தளபதி வர்ணித்தார், ஜோ பைடெனின் பதவியேற்பு தினத்தில் இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் அரசு முற்றுகைக்குத் தயாரிப்பு செய்திருந்ததாக கூறிய அவர், “இதே ஆட்களைததான் நாம் இரண்டாம் உலகப் போரில் எதிர்த்து போராடினோம்,” என்றார்.
ட்ரம்ப் அவரின் 'அமெரிக்காவைக் காப்பாற்றுவோம்' அரசியல் நடவடிக்கை குழு மூலமாக அந்த வெளிப்படுத்ததல்களுக்கு ஒரு கோபமான விடையிறுப்பைக் காட்டியதுடன், அந்த தளபதியை 'மூச்சுத்திணறும் நாய்' என்று விவரித்து பின்வருமாறு கூறினார்: “2020 ஜனாதிபதி தேர்தல் மோசடியின் போது பாரியளவிலான வாக்கு மோசடி மற்றும் விதிமுறைமீறல்களுக்கு மத்தியில், மிகப்பெரிய மற்றும் முக்கிய மாநிலங்களில் இப்போதும் நாம் இதைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், நமது அரசைக் கவிழ்ப்பது குறித்து, நான் யாரிடமும், பேசவும் இல்லை அல்லது அச்சுறுத்தவும் இல்லை. மிகவும் அபத்தமாக இருக்கிறது! உங்களுக்குக் கூற வருந்துகிறேன் என்றாலும், தேர்தல் என்பதே எனது வடிவில் 'ஆட்சிக்கவிழ்ப்பு' தான், நான் ஆட்சிக்கவிழ்ப்பு செய்தால், கடைசியாக ஒருவரைக் கவிழ்க்க விரும்புவேன் அது ஜெனரல் மார்க் மில்லி ஆக இருப்பார்,” என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி, முப்படைகளின் தலைமை தளபதியே, வன்முறை மற்றும் குழப்பங்களைத் தூண்டிவிட, கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்த மற்றும் ஒரு சர்வாதிகாரியாக அதிகாரத்தைக் கையிலெடுக்க அடோல்ஃப் ஹிட்லரை முன்மாதிரியாக கொண்டிருக்கிறார் என்று மிக மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரியே சக தளபதிகளை எச்சரிப்பதன் அரசியல் முக்கியத்துவத்தை இங்கே மிகைப்படுத்திக் கூறுவது சாத்தியமில்லை.
ஹிட்லரை ட்ரம்ப் புகழ்ந்தமை வாஷிங்டனில் அப்பட்டமாகவே ஒரு வெளிப்படையான இரகசியமாக இருந்தது. நவம்பர் 2018 இல் ஐரோப்பாவுக்கான பயணத்தின் போது, மலைத்துப் போன அவரின் கடற்கரையோர படையின் தலைமை தளபதி ஜெனரல் ஜோன் கெல்லியிடம், “ஹிட்லர் நிறைய நல்ல விஷயங்களைச் செய்திருந்தார்,” என்றார். இந்த விவாதம், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் மூத்த வெள்ளை மாளிகை நிருபர் மிக்கெல் பென்டர் எழுதிய, வெளிப்படையாக, நாம் இந்த தேர்தலை ஜெயித்திருந்தோம் என்ற மற்றொரு புதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கருத்துக்களை கெல்லி எதிர்த்த போது, அவர் கருத்துக்கு எதிராக, ஹிட்லர் ஜேர்மனியின் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டினார் என்று ட்ரம்ப் வலியுறுத்தியதாக அந்த புத்தகம் நினைவுகூர்கிறது.
மில்லி கவலைப்படும் இந்த கருத்துக்களுக்கு அமெரிக்க ஊடகங்களின் விடையிறுப்போ, பெரிதும் அந்த ஜெனரலை அமெரிக்க ஜனநாயகத்தின் பாதுகாவலராக கொண்டாடுவதாக இருக்கிறது. இதற்கு நியூ யோர்க் டைம்ஸின் மிகைப்படுத்தப்பட்ட கருத்துரை பொருத்தமான உதாரணமாக உள்ளது. “ஒரு புதிய அமெரிக்க வீரரைக் குறித்த தைரியமான அறிமுகம், இதுவரையில் பெரும் கவனத்தைப் பெற்றிராத ஒரு மனிதர்: கூட்டுப்படைகளின் தலைமை தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் ஏ. மில்லி. ’திரு. மில்லி வாஷிங்டனுக்குச் செல்கிறார்’ என்பது இந்த புத்தகத்திற்கு இன்னும் சிறந்த தலைப்பாக இருந்திருக்கும்,” என்று அது விவரிக்கிறது.
“அவர்கள் முயற்சிக்கலாம், ஆனால் அவர்களுக்கு கேவலமான வெற்றி கூட கிடைக்காது. இராணுவம் இல்லாமல் இதை உங்களால் செய்ய முடியாது… துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் நாங்கள் தான்,” என்று மில்லி அவர் சக அதிகாரிகளுக்குக் கூறியதாக அந்த புத்தகம் அவரையே கூட மேற்கோளிடுகிறது.
தளபதியின் சேதி தவறுக்கிடமின்றி இருந்தது: இராணுவம் இல்லாமல், தோல்வி; இராணுவம் இருந்தால், வெற்றி.
“துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள்' வரிசையில் நிற்பார்கள் என்பதற்கு எந்த விதத்திலும் நிச்சயமில்லை என்பது தான் உண்மை. ஜூன் 1, 2020 இல் நடந்த இழிவார்ந்த சம்பவம் வரையில் மில்லி ட்ரம்புடன் எந்த உரசலையும் காட்டியதில்லை, அந்த நிகழ்வில் அவர் ஜனாதிபதியுடன் ஒரு புகைப்பட காட்சிக்காக லஃபாயெட் சதுக்கம் வழியாக ஜனாதிபதியுடன் அணிவகுத்துச் சென்று அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறையாக கலைய செய்வதைச் சாத்தியமாக்கினார். ட்ரம்ப் கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்த விரும்பினார் என்பதும், தேசமெங்கிலும் ஜோர்ஜ் ஃப்ளோய்ட் போராட்டங்களை நசுக்கும் சாக்குப்போக்கில் வீதிகளில் இராணுவத்தை இறக்க அழைப்பு விடுத்ததும் தெளிவானபோது, பின்னர் தனது நடவடிக்கை 'தவறானதென' குறைப்பிட மில்லி நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தார். அதுபோன்றவொரு நிலைநிறுத்தல் பாரிய எதிர்ப்பைத் தூண்டும் மற்றும் இராணுவத்துக்குள்ளேயே கூட ஆழ்ந்த பிளவுகளை உண்டாக்குமென மில்லி மற்றும் ஏனைய சீருடை அணிந்த மூத்த தளபதிகள் அஞ்சினர்.
கடந்த நவம்பரில் அவர் தேர்தல் தோல்விக்குப் பின்னர் உடனடியாக, ட்ரம்ப் பென்டகனில் உயர்மட்ட படைத்துறைசாரா அதிகாரிகளைக் கூண்டோடு அகற்றி, புதிய பாதுகாப்பு செயலரில் இருந்து, ஓய்வு பெற்ற சிறப்புப் படை கர்னல் கிறிஸ் மில்லெரில் இருந்து, அடிமட்டம் வரையில் நிபந்தனையற்ற விசுவாசிகள் மற்றும் பாசிச சித்தாந்தவாதிகளின் ஒரு கூட்டத்தைக் கொண்டு அவர்களைப் பிரதியீடு செய்தார்.
இதையொட்டி, மில்லர் முன்னெப்போதும் இல்லாத வகையில் இராணுவ கட்டளையகச் சங்கிலியை மாற்றியமைத்து, இராணுவ கிரீன் பெரெட்ஸ் (Green Berets) படைப்பிரிவு மற்றும் கடற்படை சீல்ஸ் போன்ற உயரடுக்கு படுகொலைப் பிரிவுகளை உள்ளடக்கிய சிறப்பு நடவடிக்கை கட்டளையகத்தை இராணுவத்தின் தனிப் பிரிவு அந்தஸ்துக்கு உயர்த்தினார். மில்லரின் கருத்துப்படி, அந்த நகர்வு 'அதிகாரத்துவ வழித்தடங்களை' ஒழித்து, நேரடியாக அவரிடம் தொடர்பு கொள்வதற்காக செய்யப்பட்டிருந்தது. ட்ரம்ப் இராணுவத்தின் இந்தப் பிரிவுடன் விடாப்பிடியாக ஆதரவைக் தேடிக் கொண்டார், அதன் பதவிகளுக்குள் இருந்த போர் குற்றவாளிகளை மன்னித்ததும் இதில் உள்ளடங்கும்.
அனைத்திற்கும் மேலாக, ஜனவரி 6 இல், தலைமை செயலகத்தின் படிகளில் உண்மையிலேயே தேசிய பாதுகாப்பு துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டதற்கும் இராணுவ உதவிக்காக தலைமை செயலக பொலிஸ் பெரும் பிரயத்தனத்துடன் கோரிய கோரிக்கைக்கும் இடையிலிருந்த அந்த 199 நிமிடங்களைக் குறைக்க ஜெனரல் மில்லியின் தலையீடு போதுமானதாக இருக்கவில்லை என்று அந்த புத்தகம் குறிப்பிடுகிறது. கிளர்ச்சி தோல்வி அடைந்து விட்டது என்பது தெளிவான பின்னரே துருப்புகளை அனுப்புவதற்கான முடிவு நிறைவேற்றப்பட்டது.
இப்படிப்பட்ட இராணுவ பிரமுகர் இப்போது அமெரிக்க ஜனநாயகத்தின் அரணாக, அமெரிக்காவுக்கும் பாசிசத்திற்கும் இடையே நிற்கும் 'மாவீரராக', பாராட்டப்படுகிறார் என்பது உலக ஏகாதிபத்தியத்தின் இதயத்தானத்தில் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் சிதைவு முன்னேறிய கட்டத்தில் இருப்பதற்கு அப்பட்டமாக சான்றாக உள்ளது.
மில்லியைச் சுற்றி வெளிவந்துள்ள விஷயங்கள், தலைமைச் செயலகம் மீதான ஜனவரி 6 தாக்குதல் சம்பந்தமாக ஒரு கிளர்ச்சி அல்லது ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி என்று பேசுவது ஒரு 'மிகைப்படுத்தல்' என்ற முக்கிய 'இடது' பத்திரிகைகள் மற்றும் நடைமுறையளவில் ஒட்டுமொத்த போலி-இடதின் கூற்றுகளையும் ஒன்றுமில்லாது ஆக்குகின்றன. அமெரிக்க முதலாளித்துவத்தின் ஸ்திரத்தன்மையில் அவர்களின் சுயதிருப்தி கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தி, அவர்கள் அந்த பாசிசவாத தாக்குதலுக்கு அரைகுறையான அனுதாப மனோபாவத்தை ஏற்றனர், அதேவேளையில் ட்வீட்டர் மற்றும் பேஸ்புக்கில் இருந்து ட்ரம்ப் தடுக்கப்படுவதே ஜனநாயக உரிமைகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை முன்னிறுத்துவதாக அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கூறுபாடுகள் ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் பொதுவான மூடிமறைப்புக்காகவே ஓர் 'இடது' முகத்தை வழங்குகின்றன, ஜனநாயகக் கட்சியோ, அடிமட்டத்திலிருந்து இன்னும் அதிகமாக எதிர்ப்பு வெடிக்கும் என அஞ்சி, வெள்ளை மாளிகையில் ஹிட்லரை நேசிப்பவரின் தலைமையிலான ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க மக்களை எச்சரிக்க கூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை முடுக்கி விட உதவிய குடியரசுக் கட்சி குற்றவாளிகளோடு 'இருகட்சியின் ஒருமனதான ஒற்றுமையின்' நலன்களுக்காக தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள தொடர்ச்சியான கொடிய கடும் ஆபத்துக்களை மூடிமறைப்பதில் அவர்கள் தீர்மானமாக உள்ளனர்.
இந்த அச்சுறுத்தல்கள், வெறுமனே டொனால்ட் ட்ரம்பின் சமூக-விரோத வெறிபிடித்த மூளையிலிருந்து உதிப்பவை அல்ல. அமெரிக்க ஜனாதிபதியாக அவர் மேலுயர்ந்ததே அமெரிக்க ஜனநாயகம் நீண்டகாலமாக அழுகிப் போனதன் மிகவும் கோரமான வெளிப்பாடாக மட்டுமே இருந்தது. ஜேர்மனியில் பாசிசவாதத்திற்குப் புத்துயிரூட்டப்படுவதில் இருந்து பிரேசிலின் பாசிசவாத ஜனாதிபதி ஜயர் போல்சோனாரோவின் ஆட்சிக்கவிழ்ப்பு அச்சுறுத்தல்கள் வரை இப்புவி எங்கிலும் இதேபோன்ற அபாயங்கள் மேலெழுந்துள்ளன. இவை 4 மில்லியன் உயிர்க்களைப் பலிகொண்ட ஓர் உலகளாவிய பெருந்தொற்றால் ஆழமடைந்துள்ள அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியில் வேரூன்றி உள்ளன. இன்னும் மில்லியன் கணக்ககான மக்களை வறுமையில் தள்ளி வரும் அதேவேளையில், இந்த தொற்றுநோய் ஜனநாயகத்தின் ஒரு சாயலுடன் கூட பொருந்தாத மலைப்பூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளது.
சோசலிசத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில், உலகெங்கிலுமான தொழிலாளர்களுடன் சேர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்தி வாய்ந்த பாரிய இயக்கத்தை கட்டமைப்பதில் தான் இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே முற்போக்கான வழியும், பாசிசம் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கான ஒரே விடையும் அமைந்துள்ளது. இந்த இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான அவசரத்தை உணரும் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய வேண்டும்.