மேற்கு ஐரோப்பாவில் நூற்றாண்டின் வெள்ளம்: 130 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோரை காணவில்லை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெல்ஜியத்தின் லீஜேஜ் நகரில் 2021, ஜூலை 15 இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஒரு கார் மியூஸ் ஆற்றில் மிதக்கிறது (AP Photo/Valentin Bianchi)

மேற்கு ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தின் ஒரு பகுதியிலுள்ள வெள்ளப் பேரழிவு பாரியளவாக மாறி வருகிறது. சனிக்கிழமை காலையளவில், ஜேர்மன் பிராந்தியங்களான ரைன்லேண்ட்-பலட்டினேட் (Rhineland-Palatinate) மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் (North Rhine-Westphalia) இறந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. ஆஹ்ர்வைலர் மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒவ்வொரு மணி நேரமும் இது அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்களை இன்னும் காணாவில்லை.

பெல்ஜியத்தில் தற்போதைய இறப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளதாக அரசாங்கம் வெள்ளிக்கிழமை மதியம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு டச்சு நகரமான மாஸ்ட்ரிச்சில், மியூஸ் நதி கரைகளை தாண்டி நிரம்பி வழிகிறது என்ற அச்சத்தின் பின்னர் 10,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்துடன் தொடர்புடைய மின் தடை காரணமாக மின்கலன்களை மீள்மின்னூட்டம் செய்ய எங்கும் வசதி இல்லாததால் பல கைத்தொலைபேசிகள் இயங்கமுடியாதுள்ளன. சாலைகள், பாலங்கள் மற்றும் இரயில் பாதைகள் செல்ல முடியாததால் முழு சமூகங்களும் வெளியுலகில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளநீர் அவற்றைக் கீழே அழுத்தி அல்லது அதற்கு மேலேபாய்ந்து அழித்துவிட்டது.

மோசமாக பாதிக்கப்பட்ட ஆஹ்ர்வைலர் மாவட்டத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை, July 17, 2021. (Source: WSWS)

பொண் நகரின் தெற்கே, ரைன் நதியின் மேற்கு துணை நதியான அஹ்ர் உடன் உள்ள ஓரளவு ரைன்லேண்ட்-பாலாட்டினேட்டிலும், ஓரளவு வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவிலும் அமைந்துள்ள பல கிராமங்கள் அழிந்துபோயுள்ளன. அஹ்ர் நதியின் பல வளைவுகளில் அமைந்துள்ள ஆஹ்ர்வைலர் மாவட்டத்தில் உள்ள ஷுல்ட் கிராமம் பெரும்பாலும் அழிக்கப்பட்டது. அஹ்ர் நதிக்கரையிலுள்ள பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அல்லது ஓரளவோ அல்லது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன அல்லது இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. மக்களுக்கு சுத்தமான குடிநீரோ மின்சாரமோ இல்லை.

சின்சிக் நகரில் ஒரு குறிப்பாக சோகமான சம்பவம் நிகழ்ந்தது. அங்கு அஹ்ர் நதி ரைன் நதிக்குள் பாய்கிறது. இங்கே, வெள்ளம் காரணமாக, ஊனமுற்றோருக்கான வீட்டில் 12 பேர் இறந்தனர். அவர்கள் ஆஹ்ர்வைலர் மாவட்ட அமைப்பால் நடத்தப்படும் ஒரு தங்குமிடத்தில் வசித்து வந்தனர். புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அஹ்ரில் ஒரே இரவில் தண்ணீர் விரைவாக உயர்ந்துள்ளதால், குடியிருப்பு வீட்டின் முதல் தளம் வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையாக ஊனமுற்றோர் சரியான நேரத்தில் வெளியேற்றப்படாததால் தங்களை காப்பாற்ற முடியவில்லை.

ரைன்லேண்ட்-பலட்டினேட்டில், அறியப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் 63 ஆக உயர்ந்துள்ளது. ஆஹ்ர்வைலர் மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 362 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று அஞ்சப்படுகிறது. ஆஹ்ர்வைலரில் மின்சாரம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை இருப்பது மட்டுமல்லாமல், ஒரு எரிவாயு வினியோககுழாய் கூட அழிக்கப்பட்டுள்ளது. இதை திருத்துவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று எரிவாயு விநியோகஸ்தர் கூறினார்.

அண்டை மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில், 43 இறப்புகள் உத்தியோகபூர்வமாக பதிவாகியுள்ளன. இங்கேயும், எண்ணிக்கை கடுமையாக உயரும் என்ற அச்சங்கள் உள்ளன.

கொலோன் நகருக்கு அருகிலுள்ள எர்ஃப்ட்ஸ்டாட்-பிளெசெமில் (Erftstadt-Blessem) நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. இங்கே, குறைந்தது மூன்று குடியிருப்பு கட்டிடங்களும் நகரத்தின் வரலாற்று அரண்மனையின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தன. மீட்புப் பணியாளர்கள் இந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் இதுவரை அவர்களை அடைவதில் சிரமம் ஏற்பட்டது. 'நாங்கள் பலர் இறந்துவிட்டார்கள் என்று கருதுகிறோம், ஆனால் எங்களுக்குத் தெரியாது' என்று வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா உள்துறை மந்திரி ஹெர்பேர்ட் றொயில் (CDU) கூறினார்.

எர்ஃப்ட் நதி பொதுவாக ஒரு சிறிய நதியாகும். ஆனால் மழை காரணமாக பெருமளவில் உயர்ந்தது, பொங்கி எழும் நீரோட்டமாக மாறியது. ஏரிகளில் ஒன்றில் உள்ள அணை உடைந்து, வெள்ள அலையை கட்டவிழ்த்துவிட்டது. நிலத்தின் பெரிய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், விவசாயிகளின் வயல்களில் அறுவடை அழிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் அபாயத்தை இது எழுப்புகிறது என்றாலும், தங்கள் வீடுகளில் இருந்து தப்பிக்க முடிந்தவர்களை தன்னார்வலர்கள் அவசரகால தங்குமிடங்களில் இருத்தி கவனித்து வருகின்றனர்.

ஒய்ஸ்கிர்ச்சென் (Euskirchen) மாவட்டம் மற்றொரு நெருக்கடியான இடமாகியுள்ளது. அருகிலுள்ள ஸ்டெய்ன்பாக் நீர்த்தேக்கத்தின் அணை வெடிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அருகிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும். குடியிருப்பாளர்கள் சிலர் ஏற்கனவே வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டனர். மற்ற அணைகளிலும் நிலைமை மோசமாக உள்ளது.

ஆகன் மற்றும் டியூரன் மாவட்டங்களும் பலத்த புயல் மற்றும் பலத்த மழையால் பாதிக்கப்பட்டன. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில், 23 நகராட்சிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கொலோன், ட்ரையர், சோலிங்கன், ஹேகன், லிவர்குசென், ஆகன் ஆகியவையும் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும் சேதத்தின் அளவை இன்னும் கணக்கிட முடியாதுள்ளது.

பல பிராந்தியங்களில், தற்போதைய அழிவு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட சேதத்தின் அளவைப்போல் மிக மோசமானது என்று மக்கள் விவரித்தனர். 700 மக்கள் வாழும் ஷூல்ட் கிராமத்தில், மேயர் அதன் தாக்கத்தை 'குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இருப்பதுபோல் காணப்படுவதாக' விவரித்தார்.

பல வாரங்கள் தீவிரமான, தொடர்ச்சியான மழையைத் தொடர்ந்து வெள்ளம் வந்தது. ஐபிள், கொலோனைச் சுற்றியுள்ள பகுதி, பெர்கிசஸ் லேண்ட் மற்றும் சவர்லாண்ட் ஆகியவற்றின் குறுகிய பள்ளத்தாக்குகளில், சிறிய ஒடுங்கிய நீரோடைகள் சில மணிநேரங்களில் பொங்கி எழும் நீரோடைகளாக மாறின.

இதற்கான காரணம் காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு இல்லாததால் ஆகும். கனடா மற்றும் மேற்கு அமெரிக்காவில் முன்னோடியில்லாத வெப்பம் மற்றும் வறட்சியை ஏற்படுத்தும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் நீண்டகாலமாக எச்சரித்துள்ளனர். இருப்பினும், ஐரோப்பாவில் அதிக மழை பெய்யும் காலங்கள் வெப்பமான வளிமண்டலத்திற்கு காரணமாகின்றன. இப்போது முன்பை விட கணிசமாக அதிக ஈரப்பதத்தை வளிமண்டலம் உறிஞ்சும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிவேக காற்றுப்புனலில் (jet stream) ஏற்படும் மாற்றங்கள் இதற்கு மற்றொரு காரணியாகும். அதிவேகக் காற்றுப்புனல் என்பது சில கோள்களின் வளிமண்டலத்தில் குறுகலாக வளைந்து வெகு வேகமாக செல்லக்கூடிய (வெப்பக்காற்று) காற்றோட்டமாகும்

பெல்ஜிய ரோயல் வானிலை ஆய்வு நிறுவனம் ஜேர்மன் எல்லைக்கு அருகிலுள்ள லீஜேஜில் 48 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததாக அறிவித்தது. ஜல்ஹே நகரில் 271 மி.மீ க்கும் அதிகமானதும் மற்றும் ஸ்பாவில் 217 மி.மீ. ஆகவும் இது இருந்தது. வானிலை ஆய்வு கணிப்புகளின் தலைவரான டேவிட் டெனெஹாவ் ட்விட்டரில் இந்த நிலைமைகள் “புள்ளிவிவர ரீதியாக 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகின்றன. பொதுவாக இந்த பகுதிகளில் ஜூலை மாதத்தில் 100 மி.மீ மழையை பெறுகின்றன” என்று கூறினார்.

பல ஆண்டுகளாக வெள்ளப் பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன, ஆராய்ச்சியாளர்கள், புவியியலாளர்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடுபவர்கள் இந்த சிக்கலை நன்கு அறிவார்கள். தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இதுபோன்ற இயற்கை நிகழ்வுகள் கொடிய பேரழிவுகளாக மாறுவதைத் தடுப்பது முற்றிலும் சாத்தியமாகும்.

இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. உதாரணமாக, சாக்சன் மாநில நகரமான கிரிம்மாவின் முல்டே ஆற்றின் 2002 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய வெள்ள பேரழிவுகளுக்குப் பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ள பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டது. இது ஏராளமான வெள்ள வாயில்களை கொண்ட பல கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பாதுகாப்பு சுவரையும் கொண்டுள்ளது. இது 12 மீட்டர் பூமிக்குள் ஊடுருவி செல்கின்றது. நகரின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சிக்கலான கால்வாய் அமைப்பு அதிக அளவு தண்ணீரை உள்ளிளுத்து வெளியேற்ற முடியும். இதனால் இரண்டு மணி நேரத்திற்குள், நகர மையத்தை தண்ணீர் உள்வராது இறுக்கமாக மூடிவிட முடியும்.

ஆனால் அத்தகைய கட்டமைப்புக்கள் மிகவும் அரிதானவை. நூற்றாண்டின் முந்தைய வெள்ளத்திற்கு பின்னர், அரசாங்க அரசியல்வாதிகள் அரிதாக முக்கிய நதிகளில் கவனத்தை குவிந்துள்ளனர். ஆனால் சிறிய பள்ளத்தாக்குகளில் கூட, பல நகரசபைகளின் தலைவர்கள் பல ஆண்டுகளாக ஆபத்துக்களை அறிந்திருப்பதுடன் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மிகவும் தயாராக உள்ளனர். இருப்பினும், நகராட்சிகளில் அவ்வாறு செய்ய பணம் இல்லை.

ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு பிணை எடுப்புக்காக அரசாங்கங்கள் டிரில்லியன் கணக்கான யூரோக்களை செலவிட்டன. பாரிய போர் ஏற்பாடுகள், வெளிநாட்டு துருப்புக்கள் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யப்படுகிறது. ஜேர்மன் இராணுவம் மேம்படுத்தப்பட்டு வருவதுடன், மேலும் இணையத்தளப் போர் மற்றும் விண்வெளிப் போரில் அரசாங்கம் முதலீடுகளைச் செய்து வருகிறது. இருப்பினும், மக்களின் அடிப்படை பாதுகாப்புக்கு பணம் இல்லை என்று கூறப்படுகின்றது.

இந்த சமீபத்திய வெள்ள பேரழிவுக்கான காரணங்கள் முதலாளித்துவ அமைப்பில் காணப்படுகின்றன. காலநிலை மாற்றத்தைத் தடுக்க அல்லது முக்கியமான உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்துவதற்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முதலாளித்துவ வர்க்கம் இயலாதுள்ளதடன் மற்றும் விரும்பவும் இல்லை. ஏனெனில் அவ்வாறு செய்வது முதலாளித்துவ உயரடுக்கின் இலாப மற்றும் புவிசார் மூலோபாய நலன்களை பாதிக்கும்.

பெருநிறுவன இலாபங்களில் சமூக-இடவெளி பேணல் நடவடிக்கைகளால் எவ்விதமான தாக்கமும் ஏற்படாதிருப்பதை தடுக்க வேண்டுமென்றே வைரஸ் பரவுவதற்கு இது அனுமதித்ததால், கொரோனா வைரஸ் தொற்று காலம் முழுவதும் மனித வாழ்க்கை மீதான அதன் அலட்சியத்தை இது நிரூபித்துள்ளது. அதே அலட்சியத்தினால் சமூகப் பேரழிவிலிருந்து மக்களைப் பாதுகாக்க சமூக உள்கட்டமைப்பில் தேவையான செலவுகளை அது நிராகரித்துள்ளது. அத்தகைய செலவினங்களை அதன் சொந்த செல்வத்தின் மீதான ஒரு சகிக்கமுடியாத ஊடுருவலாக அது கருதுகிறது.

சமூக படுகொலைக்கான இந்தக் கொள்கைக்கு தொழிலாள வர்க்கத்தின் பதில் சோசலிசத்திற்கான நனவான போராட்டமாக இருக்க வேண்டும். சர்வதேச அளவில் மக்களைப் பாதுகாப்பதற்காகவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய மாற்றத்தை நோக்கியும் சமூக உள்கட்டமைப்பு திட்டங்களில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட வேண்டும். அத்தகைய கொள்கைக்கு தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதும், சமூக வாழ்வின் ஒழுங்கமைப்பை தனியார் இலாபத்திற்காக அல்லாது சமூக தேவையின் அடிப்படையில் மறுகட்டமைப்பு செய்வது அவசியமாகும்.

Loading