அரிசோனா பேரணியில் ட்ரம்ப் பாசிச அழைப்புகளை தீவிரப்படுத்துகின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பீனிக்ஸ் தலைநகரத்தில் உள்ள அரிசோனா Federal Theatre இல் 5,000 பேர் கொண்ட கூட்டத்திற்கு ஒரு பாசிச உரையுடன் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை பிற்பகல் அரிசோனாவுக்கு தனது “பெரிய பொய்” சுற்றுப்பயணத்தில் வந்தடைந்தார். இந்த நிகழ்வு 'எங்கள் தேர்தல் பிரசாரத்தை பாதுகாத்தல்' என்று அழைக்கப்பட்டதுடன், ஒரு உரையின் ஆர்வெல்லியன் திருப்பமாக அதில் ட்ரம்ப் ஒன்றைமுக்கால் மணிநேரத்தையும் 2020 தேர்தலைக் கண்டித்து அதன் முடிவை திருப்புவதற்கு முயலுவதில் செலவிட்டார்.

இந்த கோடையில் இதுபோன்ற நிகழ்வுகளின் இறுதியானதான இந்த சமீபத்திய கூட்டம் முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து கம்யூனிச எதிர்ப்பு வெறி அதிகரித்ததால் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வலதுசாரி பிரதிநிதிகளான ஜனநாயகக் கட்சியையும் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடனையும் 'கம்யூனிஸ்டுகள்' என்று பலதடவை ட்ரம்ப் கண்டித்தார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2021 ஜூலை 24 சனிக்கிழமையன்று பீனிக்ஸ் நகரில் ஒரு திருப்பு முனை நடவடிக்கைகூட்டத்தில் ஆதரவாளர்களிடம் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்

'தீவிர இடது ஜனநாயக கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலை மோசடி செய்து விற்றது' என்று அவர் கூறினார். குடியேற்றம் குறித்து: 'சோசலிச ஜனநாயகவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் தங்கள் நல்லிணக்கத்தில் பொது மன்னிப்பை சேர்க்க முயற்சிக்கின்றனர்.' ஊடகங்களை பற்றி: “நாங்கள் சோசலிசத்திற்கு அப்பாற்பட்டவர்கள். உங்களுக்கு பேசக்கூடிய ஊடகங்கள் இல்லாதபோது, ஒரு கம்யூனிச நாடு தொடங்குகிறது. அவர்களுக்கு ஊடகத்துறை இல்லை”. எதிர்கால வளர்ச்சி பற்றி: “இன்று நம் நாட்டிற்கு நடப்பது வருந்தத்தக்கவிதத்தில் பலருக்கு நடந்தது. நாங்கள் ஒரு கம்யூனிச அமைப்பின் ஆரம்பத்தில் இருக்கிறோம். தீவிரவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி, அமெரிக்கர்களாகிய நாம் விரும்பும் அனைத்தையும் அழிக்கிறார்கள், அதுதான் நடக்கிறது” என்றார்.

அதில் ஒரு பத்தி விரிவாக மேற்கோள் இட்டு காட்டுவதற்கு பெறுமதியானது. ஏனெனில் இது ட்ரம்ப் செய்யும் அழைப்பும் அவர் உருவாக்க விரும்பும் அரசியல் இயக்கத்தின் தன்மையையும் பற்றிய உட்பார்வையை வழங்குகிறது:

'எங்கள் இயக்கம் அமெரிக்காவின் மீதான அன்பு மற்றும் அமெரிக்க மக்கள் மீது ஒரு இரும்புபோன்ற உறுதியான நம்பிக்கை ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது, உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் சோசலிசத்திற்காக, கம்யூனிசத்திற்காக போராடவில்லை. நாங்கள் அடிமைத்தனத்திற்காக போராடவில்லை. நாங்கள் கடவுளுக்காக, நாட்டிற்காக, சுதந்திரத்திற்காக போராடுகிறோம்.

'உலக வரலாற்றில் மிக சக்திவாய்ந்த தேசமாக அமெரிக்காவைக் கட்டியெழுப்ப அமெரிக்காவின் பலதலைமுறை தேசபக்தர்களால் எங்களுக்கு எமது இரத்தநாடிகள் வழங்கப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் தமது வேர்வை, இரத்தம், ஏன் உயிர்களைக்கூட அதற்காக கொடுத்திருந்தனர். தீவிர இடதுசாரி, மார்க்சிச வெறி பிடித்த ஒரு சிறிய குழுவினரால் அதை எங்களிடமிருந்து பறிக்க விடமாட்டோம்” என்றார்.

இத்தகைய மொழி 1950 களின் மக்கார்த்தி சூனிய வேட்டையை நினைவூட்டுகின்ற மிக மோசமான கம்யூனிச எதிர்ப்பை வாந்தி எடுப்பது மட்டுமல்ல. இங்கே ஒரு புதிய பண்பு உள்ளது. மத அடிப்படைவாதம், தேசபக்தி கொடி அசைத்தல், இனவெறி மற்றும் கம்யூனிச எதிர்ப்பு ஆகியவற்றை ஜனநாயகம், தேர்தல்கள், ஒரு சுதந்திர ஊடகத்துறை, பொது உரிமைகள் மற்றும் எந்தவொரு வடிவத்திலான சமூக சமத்துவத்திற்கும் எதிரான வெறுப்புடன் இணைக்க ட்ரம்ப் முயல்கிறார்.

இது ஒரு அமெரிக்க வடிவிலான பாசிசத்தின் மொழியாகும். வெறுமனே தன்னை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கான ஒரு பிரச்சாரத்தை ட்ரம்ப் மேற்கொண்டு வரவில்லை. மாறாக ஒரு வலதுசாரி சர்வாதிகாரத்தை அமெரிக்காவில் ஸ்தாபிப்பதற்காக தனக்கு ஒரு வாகனமாக வரக்கூடிய ஒரு பாசிச இயக்கத்தை கட்டியெழுப்ப முனைகிறார்.

இப்போதைக்கு இந்த முயற்சி, குடியரசுக் கட்சியை தனது தனிப்பட்ட கருவியாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. ஆளுநருக்கான, அரிசோனாவில் உள்ள மாநிலம் தழுவிய அலுவலகங்கள், அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றிற்கான 2022 தேர்தல்களில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு உந்துதலளிப்பதற்கே நாள் முழுவதும் நடைபெற்ற அரசியல் பேரணியில் பெரும்பகுதி சேவை செய்தது. பைடென் சிறிய பெரும்பான்மையுடன் வென்ற மாநிலத்தின் 2020 வாக்களிப்பின் முடிவுகளை ஆதரித்த ஆளுநர் டக் டூசி மற்றும் மாநில அரச வழக்குத்தொடுனர் ஜெனரல் மார்க் ப்ர்னோவிச் உள்ளிட்ட ட்ரம்பிற்கு போதுமான அளவு விசுவாசமற்றவர்களாகக் கருதப்பட்ட அந்த குடியரசுக் கட்சியினர் பேரணியில் இருந்து விலக்கப்பட்டனர் மற்றும் சில சந்தர்ப்பங்களில் கண்டனம் செய்யப்பட்டனர்.

அவர் தனது அரசியல் எதிராளிகளுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறையைத் தூண்டுகிறார். ஜனவரி 6, 2021 அன்று வெள்ளை மாளிகைக்கு வெளியே ஒரு கூட்டத்தினருக்கு அவர் அளித்த ஒரு மணிநேர உரையை விட அவரது பீனிக்ஸ் வசைபாடல் மிகவும் எரிச்சலூட்டுவதாக இருந்தது. அவர்கள் கேபிட்டலை நோக்கி வழிநடத்துவதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்டளவு நேரத்திற்கு பைடெனின் வெற்றியை தேர்தல் பிரதிநிதிகள் உறுதிப்படுத்துவதை அவர்கள் உள்ளே நுழைந்து தடுத்தனர்.

ட்ரம்பின் உரையின் பெரும்பகுதி, 2020 தேர்தல்களில் வாக்கு மோசடி மற்றும் வாக்குச்சீட்டு மோசடி சம்பவங்கள் குறித்த கடந்த கால கூற்றுகளின் வழக்கத்தை விட அதிக நீளமுள்ள ஒரு மீள்வார்ப்பு என்றாலும், ட்ரம்ப் 2020 தேர்தல் மீதான அவரது தாக்குதலை ஜனநாயகம் மீதான தாக்குதல் என்ற குற்றச்சாட்டுகளை மறுக்க முயல்கிறார் என்பது தெளிவாகிறது.

'நான் அமெரிக்க ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கவில்லை' என்று அவர் கூறினார். “நான் தான் அமெரிக்க ஜனநாயகத்தை காப்பாற்ற முயற்சிக்கிறேன். நான் அதை பாதுகாக்க முயற்சிக்கிறேன். அதை அழிக்க உரிமை இல்லாத மக்களால் நம் நாடு அழிக்கப்படுகிறது. அவர்கள் சட்டவிரோதமாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க கூடாத மக்கள். அவர்கள் ஒரு பாரிய தோல்வியுடன் வெற்றி பெற்றனர். ஜோ பைடெனும் தீவிர ஜனநாயகக் கட்சியினரும் நம் தேசத்தை அழிக்கிறார்கள்” என்றார்.

'பெரிய பொய்யை' போலவே, உங்கள் விமர்சகர்களும் நீங்களுமே சதி செய்கிறீர்கள் என்று கூறுவது ஹிட்லரின் நன்கு அறியப்பட்ட தந்திரமாகும். இவ்வாறு அமெரிக்க வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய வாக்குகளால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ட்ரம்ப், தன்னை அமெரிக்க ஜனநாயகத்தின் மீட்பாளராக முன்வைக்கிறார்.

2022 இல் அடுத்த தேர்தலுக்குத் தயாராகும் போது, “மீண்டும் உட்கார்ந்து இருந்து அடுத்த தேர்தல் வரை காத்திருக்க ஆடம்பரம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு இல்லை”. ஃபீனிக்ஸ் அடங்கிய கவுண்டி மற்றும் அரிசோனாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வசிக்கும் மரிகோபா கவுண்டியில் பதிவான வாக்குகளின் 'தடயவியல் மதிப்பீடு' ஒன்றை மேற்கொள்ள குடியரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் அரிசோனா செனட் வழங்கிய முயற்சிக்கு அவர் ஆதரவைக் கோரினார்.

இந்த மதிப்பீடு குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மரிகோபா கவுண்டி வாரியம் மற்றும் குடியரசுக் கட்சியின் ஆளுநர் டூசி ஆகியோரால் எதிர்க்கப்பட்டது மற்றும் உள்ளூர் ஊடகங்களில் ஒரு பிரயோசனமற்ற குழப்பம் என பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, இது ஏற்கனவே நான்கு மாதங்களாக எந்த முடிவுகளும் இல்லாமல் போய்விட்டது. கடந்த வாரம் மதிப்பீட்டின் 'இயக்குநராக' செயல்பட்டு வந்த முன்னாள் அரிசோனா மாநில செயலாளர் குடியரசுக் கட்சியினரால் வளாகத்தில் இருந்து தடைசெய்யப்பட்டார். ஏனெனில் அவர் வாக்கு மோசடி தொடர்பான கூற்றுக்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

ட்ரம்ப் மதிப்பீட்டை பாராட்டியதோடு, மிச்சிகன், பென்சில்வேனியா, ஜோர்ஜியா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற முயற்சிகளுக்கு ஊக்கமளித்ததாகக் கூறினார். குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில சட்டமன்றம் பெரிய நகர்ப்புற மாவட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்க நகர்கிறது. இதில் 13 பேரில் 10 பேர் கடந்த ஆண்டு பைடெனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

செனட் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கானெல் மற்றும் அவரது சொந்த முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோரையும், ஜனவரி 6 ஆம் தேதி காங்கிரஸ் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற சில காங்கிரஸ் குடியரசுக் கட்சியினரையும் தாக்க முன்னாள் ஜனாதிபதி தனது மேடையைப் பயன்படுத்தினார்.

எவ்வாறாயினும், சதி பற்றிய விஷயத்தை ட்ரம்ப் முற்றிலும் தவிர்த்தார் என்பது கவனிக்கத்தக்கது. நாளை ஆரம்பிக்கப்படவுள்ள ஜனவரி 6 தாக்குதலை விசாரிக்க நியமிக்கப்பட்ட காங்கிரஸ் தெரிவுக்குழுவின் விசாரணைகள் குறித்து அவர் குறிப்பிடவில்லை. காங்கிரஸ் குடியரசுக் கட்சித் தலைவர் கெவின் மெக்கார்த்தியையும் அவர் குறிப்பிடவில்லை. அவர் பிரதிநிதி ஜிம் ஜோர்டான் போன்ற கடும் ட்ரம்ப் ஆதரவாளர்களை நியமிப்பதன் மூலம் குழுவை தோற்கடிக்க முயன்றார். ஆனால் நியமனங்களை காங்கிரஸ் சபாநாயகர் நான்சி பெலோசியால் மட்டுமே தடுக்கமுடியும்.

பிரதிநிதிகள் சபைக்குள் ஒரு குழப்பும்விளைவிக்கும் குழுவினருடன் நுழைந்து அங்கு கூடியிருந்த பிரதிநிதிகளை தாக்க முயன்றபோது ஜனவரி 6ஆம் தேதி கேபிடல் காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட அரிசோனாவைச் சேர்ந்த ட்ரம்ப் ஆதரவாளரான அஷ்லி பாபிட் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

இந்த தவிர்ப்பானது இரட்டிப்பாக கவனிக்கத்தக்கது. ஏனெனில் பிரதிநிதியான போல் கோசரின் அழைக்கப்பட்ட விருந்தினராக பாபிட்டின் தாயார் பேரணியில் இருந்தார். கோசர் ஒரு தீவிர வலதுசாரி குடியரசுக் கட்சியினரும், அனைத்து சூழ்நிலைகளிலும் பொலிஸ் வன்முறையின் முழுமையான பாதுகாவலரும் மற்றும் பாபிட்டை சுட்டுக் கொன்றதை 'மரணதண்டனை” என்று குறிப்பிட்டவருமாவார். கோசர் தனது விருந்தினர் மீது கவனத்தை ஈர்த்தபோதிலும், முந்தைய பேரணிகளில் தியாகியாக அவரைப் உயர்த்திக்காட்டிக் கொண்ட ட்ரம்ப் பாபிட்டை பற்றிக் குறிப்பிடவில்லை.

Loading