முன்னோக்கு

ஆப்கானிய ஆட்சியின் படுதோல்வி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தலிபான் எழுச்சியின் கரங்களில் ஆப்கானியப் படைகளின் படுதோல்வி, “ஆப்கானிஸ்தானை இழந்தது யார்?” என்ற தலைப்பில் அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் அதிக கசப்பான குற்றச்சாட்டுக்களுக்கு வழிவகுத்துள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், திங்களன்று, அமெரிக்காவின் பின்வாங்கல் ஒரு “படுதோல்வி” என்று குறிப்பிட்டு, “பைடென் இராணுவ ஆலோசனையை புறக்கணித்து, பேரழிவைத் தடுக்க திட்டமில்லாமல் பொறுப்பற்ற வகையில் பின்வாங்கியமையால்” தலிபான்கள் முந்திச் செல்வதற்கு ஏதுவானது என்று குற்றம்சாட்டியது.

ஆகஸ்ட் 9, 2021 இல் வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் தலிபான்கள் உள்ளனர் (AP Photo/Abdullah Sahil)

எவ்வாறாயினும், இந்த அளவிலான ஒரு இராணுவ பேரழிவு, “திட்டம்” இல்லாததால் நடந்தது எனக் கூற முடியாது. உண்மை என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் தொடர்ச்சியான ஒரே மாதிரியான நான்கு நிர்வாகங்களின் கீழ் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய இரண்டு தசாப்த கால குற்றங்களுக்கு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன், ஆப்கானிஸ்தான் மீது ஒரு மோசமான காலனித்துவ பாணி போரை தொடுப்பதற்கு அந்நாட்டிற்கு முக்கால் மில்லியன் அமெரிக்க துருப்புக்களை அவர்கள் அனுப்பியிருந்தனர், இதில் குறைந்தது 175,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பழமைவாதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாரிய படுகொலை, அத்துடன் முன்னொருபோதும் நிகழ்த்தப்படாத வகையில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள், ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதல்கள், இரவு நேரத் தாக்குதல்கள் மற்றும் தடுப்புக் கைதிகளை திட்டமிட்டு சித்திரவதை செய்தல் ஆகியவற்றால் பொதுமக்களை அச்சுறுத்தியது ஆகியவற்றின் விளைவாக, கிளர்ச்சியின் வீரியம் அதிகரித்ததால் மட்டுமே வெற்றி கிடைத்தது.

வெளிப்படையாக ஒரு வார கால அவகாசத்திற்குள், தலிபான்கள் ஆறு மாகாண தலைநகரங்களை கைப்பற்றினர். வெள்ளிக்கிழமை, அவர்கள் ஈரானின் எல்லைக்கு அருகிலுள்ள ஜரஞ்ச் (Zaranj) மற்றும் வடக்கிலுள்ள ஷெபேர்கான் (Sheberghan) தலைநகரங்களைக் கைப்பற்றினர், ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் வடக்கேயுள்ள வணிக மையமான குண்டுஸ் (Kunduz), அத்துடன் சார்-இ-புல் (Sar-i-Pul) மற்றும் தலோகான் (Taloqan) என மேலும் மூன்று தலைநகரங்களையும் அவர்கள் கைப்பற்றினர். திங்கட்கிழமை, தலைநகர் காபூலை நாட்டின் வடக்கு மாகாணங்களுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையைக் கட்டுப்படுத்தும் சம்கான் (Samgan) மாகாணத்தின் தலைநகரம் அய்பாக் (Aybak) இன் கட்டுப்பாட்டில் முழு கிளர்ச்சியும் இருப்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

நடந்து வரும் நகர்ப்புறப் போர், காபூலில் அமெரிக்க ஆதரவு பெற்ற ஆட்சியின் பிடியை சில அருகாமை மாகாணங்களில் குறைத்துள்ளது, சில சந்தர்ப்பங்களில், ஹெல்மண்ட் (Helmand) மாகாணத்தின் தலைநகரம் லஸ்கர் காஹ் (Lashkar Gah) மற்றும் தெற்கில் கந்தஹார் (Kandahar) நகரம் உட்பட, பல முற்றுகையிடப்பட்ட தலைநகரங்களை முடக்கி வைத்துள்ளது. மேலும், ஹெரத் (Heart) மற்றும் மஜார்-இ-ஷரீஃப் (Mazar-i-Sharif) ஆகிய ஆப்கானிஸ்தானின் வடக்கேயுள்ள பெரும் நகரங்களில் கூட கடும் சண்டை நடக்கிறது.

காபூலில் அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கு விசுவாசமான பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கில் தலிபான்களிடம் சரணடைந்தனர் அல்லது அவர்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, அவர்களது சீருடைகளையும் அகற்றிவிட்டன. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் கிளர்ச்சிக்கு மாறிவிட்டனர். மேலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சண்டையின்றி மாவட்டங்களையும் நகரங்களையும் சரணடைய வைப்பதற்கு அதனால் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது என தலிபான்கள் உறுதிபட கூறியுள்ளனர்.

லஷ்கர் காஹ் மற்றும் ஏனைய முற்றுகையிடப்பட்ட தலைநகரங்களைப் போல கிளர்ச்சியாளர்களுக்கு எதிர்ப்பு இருந்த இடங்களில், அது “அடிவானத்தில்” இருந்து செலுத்தப்படும் அமெரிக்க போர் விமானங்களின் வான்வழித் தாக்குதல்களை பெரிதும் நம்பியுள்ளது. இது, கட்டாரின் அல்-உதீத் (Al-Udeid) விமானத் தளத்திலிருந்து கிளம்பும் B-52 ரக மூலோபாய குண்டுவீச்சு விமானம், அரேபியன் கடலில் நிறுத்தப்பட்டுள்ள அணுசக்தியால் இயங்கும் USS ரொனால்ட் ரீகன் விமானந்தாங்கிக் கப்பலின் மேல் தளத்திலிருந்து கிளம்பும் F/A-18 Super Hornet போர் விமானங்கள், மற்றும் AC-130 Specter gunships போர்விமானங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை உள்ளடக்கியதாகும்.

பெரும் மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறங்கள் மீதான இந்த சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்கள், தவிர்க்க முடியாமல் குரூரமான எண்ணிக்கையில் பொதுமக்களின் உயிரிழப்புக்களை விளைவித்தது. லஷ்கர் காஹில், அமெரிக்க குண்டுவீச்சு ஒரு சுகாதார மருத்துவமனையையும் ஒரு பள்ளியையும் அழித்துவிட்டது, அதே நேரத்தில் அதிகாரிகள் 48 மணி நேரத்தில் 20 பொதுமக்கள் இறந்ததாக தெரிவித்தனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு இழப்பை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள், விமானத் தாக்குதலினால் இறந்தவர்களின் உடல்களை எண்ணி நூற்றுக்கணக்கான தலிபான் போராளிகள் இறந்ததாகத் தெரிவித்தனர். சடலக் குவியல்களின் மொத்த எண்ணிக்கையில் பொதுமக்களினது எத்தனை என்பது தெரியவில்லை.

அண்ணளவாக 350,000 மக்கள்தொகை கொண்ட குண்டூஸ் உட்பட, சமீபத்திய வாரங்களில் கிளர்ச்சியால் முறியடிக்கப்பட்ட பெரும் நகரங்களில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் தாக்கங்களை வைத்து தலிபான்களின் வெற்றிக்கான காரணங்களை புரிந்து கொள்ள முடியும்.

2001 ஆம் ஆண்டில், அமெரிக்க படையெடுப்புக்கு சற்று பின்னர், குண்டூஸில் இருந்த தலிபான் படைகள் அமெரிக்க சிறப்புப் படைகளிடமும் மற்றும் போர் தளபதி ஜெனரல் ரஷீத் தோஸ்தமுக்கு (Gen. Rashid Dostum) விசுவாசமான ஒரு ஆயுதக் குழுவிடமும் சரணடைந்தன, பின்னர் அவர்களை உலோகக் கப்பல் கொள்கலன்களில் ஏற்றி, தோஸ்தம்மின் கோட்டையான ஷெபேர்கானுக்கு கொண்டு சென்றனர். சுமார் 2,000 கைதிகளில் பெரும்பாலானவர்கள் கொள்கலன்களில் மூச்சுத்திணறி இறந்தனர், உயிருடன் எஞ்சியிருந்தவர்கள் சுடப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டில், குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஆற்று சந்திப்புப் பகுதியில் சிக்கிய இரண்டு சரக்கு லாரிகளிலிருந்து எரிபொருளை வடிகுழாய் மூலம் திருடிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திற்கு எதிரான அமெரிக்க இராணுவ விமானத் தாக்குதலுக்கு ஒரு ஜேர்மன் அதிகாரி அழைக்கப்பட்டார். அப்போது, 500 பவுண்டு அளவிலான அமெரிக்க குண்டுகள் குறைந்தது 142 பொதுமக்களை எரித்துவிட்டது.

மேலும் 2015 இல், குண்டூஸில் உள்ள எல்லைகள் இல்லா மருத்துவர்களின் (Doctors Without Borders-MSF) பொதுமக்கள் மருத்துவமனையின் மீது அமெரிக்காவின் AC-130 gunship போர் விமானம் மெதுவாகவும் வேண்டுமென்றும் குண்டுவீசி கட்டிடத்தை தகர்த்து தரைமட்டமாக்கியதில், குறைந்தது 42 நோயாளிகளும் மருத்துவ ஊழியர்களும் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த குற்றங்களுக்காக எவரும் ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை, ஆனால் அவர்களை தப்பிப்பிழைக்க வைத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரால் நிச்சயமாக அவர்களை மறக்க முடியாது.

இந்த குற்றங்கள் எதன் பாதுகாப்பிற்காக நடத்தப்பட்டதோ அந்த ஆட்சி, அமெரிக்க ஆக்கிரமிப்பின் கைப்பாவை ஆட்சியாகவும், ஊழல் நிறைந்த தனிப்பட்வர்களின் ஆட்சியாகவும் மட்டும் இருந்ததில்லை, அரசியல்வாதிகள், போர் தளபதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களை அமெரிக்க உதவியை திசை திருப்புவதன் மூலம் வளப்படுத்தியது.

கடந்த மாதம் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அனைவருக்கும் உத்தரவிடும் தனது முடிவை பாதுகாத்தார், ஆனால் இந்த மாதம் இறுதிக்குள்ளாக ஒருசில அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினர் என்பதுடன், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்விக்கும் 1975 இல் வியட்நாமில் ஏற்பட்ட தோல்விக்கும் இடையே ஒத்த தன்மை எதுவுமில்லை என்று கடுமையாக மறுத்தார். “மேலோட்டமாக திறனை வைத்து அவை ஒப்பிடக்கூடியவை அல்ல,” என்றும் கூறினார். மேலும் “ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் கூரையிலிருந்து மக்கள் தூக்கிச் செல்லப்படுவதை நீங்கள் பார்க்கப் போகும் சூழ்நிலை ஏற்படாது,” என்றும் கூறினார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து முதல் விமானம் திரும்பப் பெறப்படும் என்று வாஷிங்டனும் இலண்டனும் வார இறுதியில் தங்கள் குடிமக்களுக்கு கூறுகையில், காபூலின் வீதிகளில் துப்பாக்கிச் சண்டைகள் வெடித்த நிலையில், பைடெனின் உத்தரவாதங்கள் அதிகரித்தளவில் வெற்றுத்தனமாக ஒலிக்கின்றன.

வியட்நாமில், வடக்கு வியட்நாமிய மற்றும் தேசிய விடுதலை முன்னணிப் படைகள் சாய்கோனை (Saigon) கைப்பற்றுவதற்கு அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. ஆப்கானிஸ்தானில், அமெரிக்க உளவு நிறுவனங்களின் 'மோசமான சூழ்நிலை', அதன்படி அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்ட மூன்று மாதங்களுக்குள் காபூல் விழுகிறது, இது மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது.

இந்த அளவிலான படுதோல்வி காபூலில் மட்டுமல்லாமல், வாஷிங்டனிலும் உள்ள ஆட்சியின் பிழைப்பை கேள்விக் குறியாக்குகிறது. ஆப்கானிஸ்தானின் இந்த வீழ்ச்சி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அங்கு பின்பற்றப்பட்ட ஒட்டுமொத்த கொள்கையும் விளைவித்த உள்நாட்டு வெடிப்பின் ஒரு பகுதியாகும்.

1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதையடுத்து, அமெரிக்க ஆளும் வர்க்கம், வாஷிங்டனின் உலகளாவிய பொருளாதார நிலையின் நீடித்த அரிப்பை மாற்றியமைக்கவும், உலகின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தை திணிக்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெரும் இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதற்கு எதுவும் தடையாக இருக்காது என்று முடிவு செய்தது. முதல் பாரசீக வளைகுடாப் போர் மற்றும் 1990 களில் முன்னாள் யூகோஸ்லாவியாவில் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க தலையீடுகளிலிருந்து, வாஷிங்டன் எப்போதுமே போரில் ஈடுபட்டுள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதான, அக்டோபர் 2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பானது, இரட்டை கோபுரங்கள் சரிந்து வீழ்வதற்கு முன்னரே அதற்கு மிகுந்த தயாரிப்பு செய்யப்பட்டிருந்தது. போர்களின் மூலோபாய நோக்கம், 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிராக சிஐஏ திட்டமிட்ட போரால் உருவாக்கப்பட்ட ஃபிராங்கன்ஸ்டைன் அரக்கன் பாத்திரமான, அல்கொய்தாவின் அழிவு அல்ல. மாறாக மத்திய மற்றும் தெற்காசிய பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தின் வலிமையை எடுத்துக்காட்டவே இது நடத்தப்பட்டது, இது காஸ்பியன் படுகையின் எண்ணெய் வளமிக்க முன்னாள் சோவியத் குடியரசுகள் மட்டுமல்லாது சீனா மற்றும் ஈரானுடனும் எல்லையாக உள்ளது.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” அல்லது “21 ஆம் நூற்றாண்டின் போர்கள்” என்று ஜோர்ஜ் டபிள்யூ புஷ் விவரித்த கோஷத்தின் கீழ், வாஷிங்டன் அதன் உலகளாவிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக அது கருதும் எந்தவொரு நாட்டையும் ஆக்கிரமிக்க உரிமை கோரியது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து இரண்டு வருடங்களுக்குள், ஈராக்கில் இல்லாத “பேரழிவுகர ஆயுதங்கள்” பற்றிய பொய்களின் அடிப்படையில் அந்நாட்டின் மீதான ஒரு போருக்கு அமெரிக்க இராணுவம் அனுப்பப்பட்டது. மேலும், “மனித உரிமைகள்” என்ற போலித்தனமான பதாகையின் கீழ் தொடங்கப்பட்டதான ஆட்சி மாற்றப் போர்கள், ஆபிரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள நாடான லிபியா, மற்றும் சிரியா நாடுகளில் நடத்தப்பட்டன.

மில்லியன் கணக்கானவர்களை கொன்று குவிக்கும் மற்றும் ஊனப்படுத்தும், மேலும் பல்லாயிரக்கணக்கானவர்களை அகதிகளாக மாற்றும் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அழிக்கும் வகையில் நடத்தப்பட்டதான இந்த போர்கள் வாஷிங்டனின் மேலாதிக்க இலட்சியங்களை நிறைவேற்றத் தவறிவிட்டதுடன், ஆப்கானிஸ்தானில் இப்போது நிகழ்வது போன்ற தோல்விகளையே தருகின்றன.

அமெரிக்க இராணுவவாதத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கு மாறாக, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” உருவாக்கிய தோல்விகள் அமெரிக்க உலகளாவிய மூலோபாயத்தை “பெரும் சக்தி மோதலுக்கு” மாற்றுவதற்கு மட்டுமே வழிவகுத்துள்ளது, இதற்கு முதல் உதாரணமாக, அணுவாயுத நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவுடன் அது மோத முனைகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப் பெறுவது அமெரிக்காவின் நீண்டகால போரிடும் போக்கை முடிவுக்குக் கொண்டுவர அல்ல, மாறாக பென்டகனின் வளங்களை தென் சீனக் கடல், கிழக்கு ஐரோப்பா மற்றும் பால்டிக் பகுதிகளுக்கு மாற்றும் நோக்கத்திலானதாகும்.

அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு மற்றும் மூன்றாம் உலகப் போர் குறித்து அதிகரித்துவரும் அச்சுறுத்தல் ஆகியவற்றின் அடிப்படையாக, அமெரிக்கா மற்றும் உலக முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத நெருக்கடி உள்ளது, இது கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கங்கள் பின்பற்றும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” மற்றும் சமூக படுகொலை கொள்கையிலிருந்து அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் காண்கிறது. மனித உயிர்களை விலை கொடுத்து அயராது இலாபங்களை ஈட்ட முயற்சிக்கும் செயல், பெருகியளவில் வர்க்கப் போராட்டத்தை தூண்டும் அதேவேளை, முதலாளித்துவத்திற்கும், உலகெங்கிலுமுள்ள உழைக்கும் மக்களின் தேவைகளுக்கும் இடையே உள்ள சமரசமற்ற முரண்பாட்டை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் நடத்தப்பட்டு வரும் தொழிலாள வர்க்கத்தின் இந்த போராட்டம், அமெரிக்கா மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலுக்கு எதிரான ஒரு இயக்கத்திற்கான புறநிலை அடித்தளமாகும். அதாவது, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கு கொண்ட இந்த இயக்கத்தை ஆயுதபாணியாக்கக்கூடிய ஒரு புரட்சிகர தலைமையை உருவாக்குவது மிக அவசர தேவையாக உள்ளது. அதற்கு ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகள் கட்டமைக்கப்பட வேண்டும்.

Loading