மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பெரும்பிரயத்தனத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேற்றப்பட்ட ஒரு சில நாட்களிலேயே, பெருநிறுவன பத்திரிகைகள் அந்த மத்திய ஆசிய நாட்டு மக்களின் 'மனித உரிமைகள்' மீது கவலைகள் அதிகரித்து வருவதாக ஒரு சர்வதேச பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்கா 100,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்ற போதோ, சித்திரவதைக் கூடங்களை அமைத்த போதோ, டிரோன் படுகொலைகள் மற்றும் அந்நாட்டின் ஆதாரவளங்களைக் கொள்ளையடித்த போதோ இந்த பெருநிறுவன ஊடகங்களும் உலகின் ஏகாதிபத்திய சக்திகளும் எந்த ஆட்சேபனைகளையும் எழுப்பவில்லை. பிரதான ஏகாதிபத்திய சக்திகள் அந்த படையெடுப்பிலும் ஆக்கிரமிப்பிலும் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டன. பெருநிறுவன பத்திரிகைகளோ செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்கு ஓர் அவசியமான விடையிறுப்பாக, ஒரு 'நியாயமான காரணமாக' அந்த போரை ஊக்குவித்து, கொடூரமான குற்றங்கள் நடத்துவதற்கு ஒத்துழைத்தன. ஜூலியன் அசான்ஜ், செல்சியா மானிங் மற்றும் டானியல் ஹேல் உட்பட ஆப்கானிஸ்தானில் போரின் நிஜமான தன்மையை அம்பலப்படுத்தியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
ஆனால் இப்போதோ, 2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு பற்றி உலக மக்களிடையே பொதுக் கருத்துக்களை 'விற்றுத் தள்ள”, பெருநிறுவன ஊடகங்கள் பயன்படுத்திய எல்லா அம்சங்களும், எவ்வளவு தான் அவை இற்றுப் போயிருந்தாலும் மதிப்பிழந்து போயிருந்தாலும் அதைக் குறித்து கவலையின்றி, மீண்டும் மீட்டுயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
இது இரண்டு நோக்கங்களுக்குச் சேவையாற்றுகிறது: ஒன்று கடந்த காலத்தில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்களைக் கண்டு கொள்ளாமல் கைவிடுகிறது, மற்றொன்று போரால் சீரழிக்கப்பட்ட அந்த மக்கள் மீது ஏகாதிபத்திய அழுத்தத்தைத் தீவிரப்படுத்தும் கருத்தை மக்களிடையே உருவாக்க சேவையாற்றுகிறது.
இந்த புதிய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய சிறிய போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைக் குறித்த செய்திகள், போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் ஆயிரக்கணக்கான சிஐஏ முகவர்கள் மற்றும் அமெரிக்க அரசால் ஆப்கானிஸ்தானில் விடப்பட்ட 'ஒப்பந்ததாரர்களின்' தூண்டுதல் பேரில் செயல்படுகிறார்களா என்பது உட்பட, அந்த 'எதிர்ப்பின்' தன்மையைக் குறித்து வெகு சில விபரங்களையே வழங்குகின்றன.
எவ்வாறிருப்பினும் அந்த ஒடுக்குமுறை மீதான ஊடகப் பிரச்சாரம் முற்றிலும் எரிச்சலூட்டும் தன்மையில் இருப்பதுடன், இரட்டை வேஷத்தில் உள்ளது. ஜலலாபாத் அல்லது காபூலில் இந்த வாரம் எதுவும் நடக்கவில்லை என்பது, கடந்த 20 ஆண்டுகளின் போக்கில் வாரந்தோறும் அமெரிக்கா நடத்திய பாரிய படுகொலைகளுக்கு நெருக்கத்தில் கூட இல்லை.
எகிப்திய இராணுவ சர்வாதிகாரி அப்தெல் பதாஹ் எல்-சிசி வசம் இருப்பது போல ஊடகங்கள் ஆயுதங்களின் கீழ் இல்லை, அவர் துருப்புகளும் பொலிஸூம் அவரது 2013 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் நடந்த ஒரேயொரு அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைப் படுகொலை செய்தது. பத்தாயிரக் கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, ஆயிரக் கணக்கானவர்கள் மரண தண்டனையின் கீழ் இருக்கின்ற நிலையில், எல்-சிசி இப்போது அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூண்களில் ஒன்றாக இருக்கிறார்.
ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளும் ஒட்டுமொத்த பெருநிறுவன ஊடகங்களும் ஆப்கான் பெண்கள் கையாளப்படுவதைக் குறித்து கூடுதல் எண்ணிக்கையில் பயபக்தியான கண்டனங்களைப் பொழிந்து வருகின்றன. இதே அரசியல் ஸ்தாபகம் தான், அமெரிக்க டிரோன் தாக்குதல்களிலும் அல்லது படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட பேரழிவுகரமான சமூக பொறிவு நெடுகிலும் அமெரிக்க சிப்பாய்களால் பத்தாயிரக் கணக்கான ஆப்கான் பெண்கள் கொல்லப்பட்ட போது கண்டு கொள்ளாமல் இருந்தது.
ஜனநாயகக் கட்சி மற்றும் அடையாள அரசியலின் ஊதுகுழலாக விளங்கும் நியூ யோர்க் டைம்ஸ், பதின்ம வயதில் ஒரு காலத்தில் பெண் கல்விக்கு ஆதரவு திரட்டிய மற்றும் பாகிஸ்தானிய தாலிபான் படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்த மலாலா யூசெஃப்ஜய் இன் வாசகர் தலையங்கத்தை வெளியிட்டு, இந்த விஷயத்தில் முன்னிலை எடுத்துள்ளது. 'ஆப்கான் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் குரல்களுக்குச் செவிமடுக்குமாறு' அவர் அமெரிக்கர்களை வலியுறுத்துகிறார். “அவர்கள் பாதுகாப்பு கோருகிறார்கள், கல்வி, சுதந்திரம், அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட எதிர்காலத்தைக் கேட்கிறார்கள் …' என்றவர் எழுதுகிறார்.
ஆனால் மீண்டும், ஊடகங்களின் இரட்டை வேஷம் மலைப்பூட்டும் அளவுக்கு பாசாங்குத்தனமாக உள்ளது. அரபு தேசங்களிலேயே முன்னணி அமெரிக்க கூட்டாளியாக விளங்கும் சவூதி அரேபியாவில், ஓர் ஆண் உறவினர் துணைக்கு இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்ட முடியாது, வாக்களிக்க முடியாது அல்லது வெளியில் கூட வர முடியாது. அங்கே சட்டம் மீறிய பாலுறவு மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும், சுன்னி இன அடிப்படையிலான அந்த முடியாட்சிக்கு எதிராக அரசியல் எதிர்ப்பில் இறங்கும் ஷியைட் இனத்தவர்கள், பலரறிய தலை துண்டிக்கும் தண்டனைக்கு முக்கிய பலிக்கடா ஆகிறார்கள், இது வழக்கமாக நடந்து வருகிறது.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகள் எதுவுமே அதனுடனான பென்கடனின் நெருக்கமான ஒத்துழைப்பை அச்சுறுத்தவில்லை, யேமனில் தொடர்ந்து நடந்து வரும் சவூதி போரை பென்டகன் சாத்தியமாக்கி வருகிறது என்பதோடு, இந்த போர் கடற்படை முற்றுகை மற்றும் அமெரிக்க செயற்கைகோள் கண்காணிப்புடன் வழிநடத்தப்படும் விமான தாக்குதல்கள் ஆகியவற்றால், பெருந்திரளான மக்களைப் பட்டினிப் போடுவதை ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்துகிறது.
ஊடகங்களும் இராணுவ-அரசியல் ஸ்தாபகமும், ஆப்கானிஸ்தான் அல் கொய்தாவுக்கான 'பாதுகாப்பு புகலிடமாக' ஆகிவிடும் என்ற கவலைகளையும் மீண்டும் ஒலிக்கின்றன. இதை நாம் இதற்கு முன்னரும் கேட்டிருக்கிறோம். சொல்லப் போனால், இது தான் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் அக்டோபர் 2001 இல் அமெரிக்க படையெடுப்புக்கான முக்கிய சாக்குபோக்கு காரணமாக இருந்தது.
அல் கொய்தா முதன்முதலில், சோவியத்-ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கொண்ட அமெரிக்க ஆதரவிலான கொரில்லா போரின் பாகமாக, 1980 களில் ஒசாமா பின் லேடன் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது என்பது நீண்ட காலமாக தெரிந்ததே. ஆனால் 2001 பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட கடுமையான விரோதத்தின் சில கால இடைவேளைக்குப் பின்னர், அல் கொய்தா, லிபியா மற்றும் சிரியா இரண்டு இடங்களிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக திரும்ப வந்து வேரூன்றியது.
லிபியாவில், இஸ்லாமியவாதிகள் மௌம்மர் கடாபி ஆட்சிக்கு எதிராக தரைப்படை போர் நடத்திக் கொண்டிருந்த போதினும், நேட்டோ குண்டுவீச்சு நடவடிக்கைக்கான தளபதி, “அல் கொய்தாவின் விமானப் படையாக' செயல்படுவதாக அவர் பாத்திரத்தை விவரித்தார். சிரியாவில், அல் கொய்தாவும் அதன் வழிதோன்றல் அமைப்பான ISIS உம் சவூதி அரேபியா மற்றும் கடார் போன்ற அமெரிக்க கூட்டாளிகளின் பின்புல ஒத்துழைப்பையும், அத்துடன் சிஐஏ இன் நேரடி ஆதரவையும் பெற்றன.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் காலடி பதிப்பதற்கான ISIS முயற்சிகள், தாலிபான் மற்றும் அவற்றின் கூட்டணி போராளிகள் குழுக்களான ஹகானி வலையமைப்பு போன்றவற்றிடம் இருந்து வன்முறையான மோதல்களை ஏற்படுத்தின. ஆப்கானிஸ்தானில் இருந்து புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க-விரோத பயங்கரவாதத்தின் அபாயம் எழுவதாக கூறுபவர்கள், காபூலின் புதிய ஆட்சியால் பலமடையக்கூடிய எந்தவொரு உண்மையான பயங்கரவாதிகளையும் அடையாளம் காட்ட முடியாமல் இருக்கிறார்கள்.
பைடென் வியாழக்கிழமை காலை ABC நியூஸ் க்கு அளித்த பேட்டியில், விமான நிலையத்திலிருந்து அமெரிக்க வெளியேறும் நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான ஆகஸ்ட் 31 காலக்கெடு மாற்றத்திற்குரியது என்று அறிவித்த போது, அவர் கொள்கையைத் திரும்ப பெறும் அழுத்தத்திற்கு அவர் கணிசமான விட்டுக்கொடுப்பு வழங்கி இருந்தார். “அங்கே அமெரிக்க குடிமக்கள் இருந்தால், அவர்கள் அனைவரையும் வெளியேற்ற நாங்கள் அங்கே தங்கியிருப்போம்,” என்றார்.
இந்த சூத்திரம், காபூல் விமான நிலைய அமெரிக்க ஆக்கிரமிப்பை அண்மித்து காலவரையின்றி நீடிப்பதை நியாயப்படுத்தவும், அந்நாட்டுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு மேற்கொள்ளவும் கூட நியாயப்பாட்டை வழங்க சேவையாற்றக் கூடும்.
ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க ஆக்கிரமிப்பைப் புதுப்பிக்க மிகவும் அடிப்படையான தடையாக இருப்பது அந்த சித்திரவதைக்கு உள்ளான நாடு இல்லை. அமெரிக்காவுக்கு உள்ளேயே இருக்கும் எதிர்ப்பு தான் தடுக்கிறது. ஆப்கன் கைப்பாவை ஆட்சி பொறிவின் கடைசி வாரத்தில் அசோசியேடெட் பிரஸ் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு, அதில் கலந்து கொண்டவர்களில் அண்மித்து மூன்றில் இரண்டு பங்கினர் ஆப்கானிஸ்தான் போர் சண்டையிடுவதற்கு மதிப்புடையதல்ல என்று கருதுவதைக் கண்டறிந்தது.
அமெரிக்க மக்கள் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு தலையிடுவதை உறுதியாக எதிர்க்கிறார்கள். போர் குறித்து ஊடகங்கள் அதிகரித்தளவில் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அமெரிக்க ஆளும் உயரடுக்கு இதை உணர்கிறது, அதன் ஊடக நிறுவனங்கள் மூலமாக, பெரும்பான்மை அமெரிக்க மக்கள் மீதான அதன் அரசியல் பிடியை இழந்து வருகிறது என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க மக்கள், அனைத்திற்கும் மேலாக அமெரிக்க தொழிலாள வர்க்கம், போர் மற்றும் சமாதானம் பற்றிய முக்கிய கேள்விகளில் அவர்களின் சொந்த தீர்மானங்களை எடுத்து வருகிறார்கள் என்பதோடு, அமெரிக்க முதலாளித்துவத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பு பிரச்சினைகள் மீதும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.