மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இலங்கையில் பாதுகாப்புப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் போருக்கு மத்தியில், மரணம் மற்றும் அழிவுகளிலிருந்து தப்பிக்கும் பாகமாக, ஜனவரி முதல் சுமார் 15,000 பேர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
அகதிகளில் பெரும்பாலானோர் ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள். அவர்கள் படகு கட்டணத்தை செலுத்த பல ஆயிரம் ரூபாய்களை ஒன்றாகச் செலவழிக்க வேண்டியிருந்தது. பல சமயங்களில், இது அவர்களின் வாழ்க்கை சேமிப்பபாக இருந்தது - சிலர் செலவை ஈடுசெய்ய தங்கள் உடைமைகளை விற்றனர். அவர்கள் 40 கிலோமீட்டர் பயணத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பாலித்தீன் மூடப்பட்ட சூட்கேஸ்கள் மற்றும் பைகளில் அடைத்தனர்.
போதிய தயாரிப்பற்ற படகுகளின் ஆபத்தான பயணத்தில், டஜன் கணக்கான மக்கள் இறந்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான நீரிணையில் ரோந்து செல்லும் இலங்கை கடற்படை இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான அகதிகளைக் கைது செய்து போலீசில் ஒப்படைத்துள்ளது.
தமிழகத்திற்கு வரும் அகதிகள் கிழக்கு கடற்கரையில் இராமேஸ்வரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்டபம் முகாமில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், அவர்கள் தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் 103 முகாம்களில் ஒன்றிற்கு மாற்றப்படுவர். இவர்களில் 62,969 பேர் உள்ளனர், 100,000 க்கும் அதிகமான அகதிகள் முகாம்களுக்கு வெளியே வாழ்கின்றனர். பெரும்பாலான குடியிருப்பாளர்கள் 1980 களின் இறுதியிலிருந்து அங்கு இருந்து வருகின்றனர்.
இந்திய காவல்துறை, அனைத்து அகதிகளையும் புலிகள் என்று சந்தேகித்து சோதிக்கிறார்கள். உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'அவர்கள் போர்க்கால வடுக்களுக்கு சோதிக்கப்படுகிறார்கள். அவர்களில் யாரையாவது அல்லது விடுதலைப் புலிகள் என்று நாங்கள் சந்தேகித்தால், அவர்கள் செங்கல்பட்டு அல்லது வேலூரில் உள்ள போராளிகளுக்கான சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்.”
முகாம்களுக்குள் உள்ள நிலைமை பரிதாபகரமாக உள்ளது. மண்டபத்தில் உள்ள 287 ஏக்கர் முகாமில் உயரமான சுவர்களைக் கொண்டுள்ளதுடன், மின் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கடலில், இந்திய கடலோர காவல்படையினரால் ரோந்து செய்யப்படுகிறது. அகதிகள் பாழடைந்த வரிசை வீடுகளில் வாழ்கின்றனர்.
குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் கிட்டத்தட்ட இல்லை. 830 கழிப்பறைகளில் பெரும்பாலானவை பாவனைக்குரியதாக இல்லை மற்றும் கூரைகள் கிடையாது. இதேபோல், 'குளியலறைகளில்' குழாய்கள் இல்லை, திறந்த சாக்கடைகள் உள்ளன. குடியிருப்பாளர்கள் நான்கு வெளிப்புற கிணறுகளிலிருந்து தண்ணீரை சேகரிக்கின்றனர். தெருக்கள் விளக்குகள் கூட எரிவதில்லை. 20 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை மின்சாரம் இல்லாமல் இயங்குகிறது மற்றும் குறைந்த மருத்துவ வசதிகளையே கொண்டுள்ளது.
இந்திய தரத்தின்படி கூட, உணவுப் பொருட்களும் உதவித்தொகையும் வாழ்வதற்கு போதுமானதாக இல்லை. ஒவ்வொரு அகதியும் மாதம் ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் பெறுகிறார்கள். பெரியவர்கள் ஒரு நாளைக்கு 500 கிராம் சமைக்காத அரிசியையும், குழந்தைகள் 400 கிராம் அரிசியையும் பெறுகிறார்கள். கூடுதலாக, பெரியவர்கள் மாதாந்திர ஊக்கத்தொகையாக 144 ரூபாயும் (சுமார் 3 அமெரிக்க டாலர்) மற்றும் குழந்தைகள் 45 ரூபாயில் உயிர்வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அரசாங்கமானது குடும்பத் தலைவர்களுக்கு 400 ரூபாயாக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளது, ஆனால் இது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
பெரும்பாலான அகதிகள் ஒழுங்கான வேலைகள் அல்லது சிறு வணிகங்களை அமைக்க விரும்புகிறார்கள். இருப்பினும், அவர்கள் உள்ளூர் முதலாளிகளால் இரக்கமின்றி சுரண்டப்பட்ட மலிவான உழைப்பின் ஆதாரமாக மாறிவிட்டனர். சில சந்தர்ப்பங்களில், பெண்கள் விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் விற்பதற்கு தள்ளப்படுகின்றனர்.
முகாம்களில் உள்ள நிலைமைகளை மறைக்க அரசாங்கம் விரும்புவதில் ஆச்சரியமில்லை. WSWS குழு மண்டபம் அகதி முகாமிற்கு சென்றபோது, நிர்வாக அதிகாரி நேர்காணல்கள் அல்லது புகைப்படங்களைத் தடை செய்தார். தனுஷ்கோடி முகாமில், வற்புறுத்திக் கேட்ட பின்னர், அகதிகளிடம் வெறும் 30 நிமிடங்கள் மட்டும் பேச அனுமதி வழங்கப்பட்டது.
இலங்கைத் தமிழர்களின் துயரங்களைத் தனது அரசியல் நோக்கங்களுக்காக சுரண்டுகின்ற அதே வேளையில், தி.மு.க ஆட்சி அகதிகளை வேண்டுமென்றே உழைக்கும் மற்றும் ஏழை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில், ஆளும் திமுக உட்பட கிட்டத்தட்ட அனைத்து தமிழகக் கட்சிகளும் இலங்கை இராணுவத்தால் நடத்தப்படும் கொடூரங்களைக் கண்டித்தன. எதிர்க் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK), பாட்டாளி மக்கள் கட்சி (PMK) மற்றும் தலித் சிறுத்தைகள் கட்சி (இன்றைய விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியவை குறிப்பாக குரலெழுப்பி பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தன. அகதிகளின் நிலை பற்றி எந்த கட்சியும் பேசவில்லை.
அகதிகள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேச ஆர்வமாக இருந்தனர்.
ராஜு தனது சொந்த ஊரான வவுனியாவில் நிலைமையை விவரித்தார், இது இலங்கை இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. 'கிளேமோர் கண்ணிவெடிகள் வெடித்த போதெல்லாம், இராணுவம் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியது, அதனால் நான் என் மனைவி மற்றும் குழந்தையுடன் இங்கு வர முடிவு செய்தேன். நான் ஒரு கட்டிடத் தொழிலாளி, நாங்கள் அங்கு எந்த வேலையையும் பெற முடியாது. நாங்கள் எங்களிடம் இருந்ததை விற்றுவிட்டு இங்கு வந்தோம். நாங்கள் இங்கு ஏதேனும் கூலி வேலையைச் செய்யலாம் என்று நினைத்தோம்,' என்று அவர் கூறினார்.
'நான் 1995 இல் என் பெற்றோருடன் இங்கு வந்திருந்தேன். போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது இலங்கையில் நிலைமை கொஞ்சம் முன்னேறியது [2002 இல்]. அதன் காரணமாக நாங்கள் இங்கு அகதியாக இருப்பதை விட, 2002 ல் திரும்பிச் சென்றோம். இலங்கையில் நான் பிழைக்க தினமும் வேலை செய்ய வேண்டியிருந்தது. வேலை இருந்தால் நான் ஒரு நாளைக்கு 450 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் நான் சொந்த வீடு கட்டினேன். ஆனால் இராணுவம் வீடுகளை அழித்து பொதுமக்கள் மீது எறிகணைகளை வீசுகிறது.
இலங்கையின் வடக்கில் உணவு விலைகள் நம்பமுடியாத முறையில் உயர்ந்துள்ளதாக ராஜூ கூறினார். 'அரசாங்கம் இராணுவத்திற்காக மில்லியன் கணக்கானவற்றை செலவிடுகிறது. இதன் விளைவாக, ஒரு நல்ல நாடு அழிந்து வருகிறது. இலங்கை அதிபர் மஹிந்த இராஜபக்ஷவின் நடவடிக்கையால் நாங்கள் எங்கள் அனைத்துப் பொருட்களையும் விற்று இங்கு வந்துள்ளோம்.
ஒரு இளம் இல்லத்தரசி தனது குடும்பம் தப்பிக்க ஒரு பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருந்தது என்று விளக்கினார். 'பெரியவர்களுக்கு, படகுகள் 6,000 முதல் 10,000 ரூபாய், மற்றும் குழந்தைகளுக்கு 3,000 ரூபாய். நாங்கள் எங்கள் உடமைகள் மற்றும் நகைகள் அனைத்தையும் குறைந்த விலையில் விற்க வேண்டியிருந்தது.
அப்பெண் வந்த படகில் ஏழு பேர் நிறைந்திருந்தனர். “மற்றொரு படகில் பத்து பேர் இருந்தனர். அது கவிழ்ந்துபோனது, அவர்கள் உயிரை இழந்ததாக நான் நினைக்கிறேன். நாங்கள் கரையை அடைவோம் என்று நினைக்கவில்லை. இந்தியாவில் மக்கள் வாழ்வது போல் நாங்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம்”.
'இலங்கை அரசாங்கம் இதற்கு பொறுப்பாகும். அவர்கள் பாராளுமன்றத்தில் அமைதி பற்றி பேசுகிறார்கள், ஆனால் பின்னர் போரைத் தொடர்கிறார்கள். அவர்கள் அப்பாவிகளை வெள்ளை வேன்களில் கடத்துகிறாரகள் மற்றும் முஸ்லிம்களையும் கொல்கின்றார்கள். விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளையும் அவர் மறுத்தார். 'இருபுறமும் நல்லது எதுவும் வராது. இரண்டு மணி நேர சண்டையில், 50 புலிகளும், 50 இராணுவத்தினரும் இறக்கலாம். ஆனால் 100 சாதாரண மக்களும் கொல்லப்படுவார்கள்”.
ராஜிக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது, ஆனால் அப்பெண் பெற்றோரை விட்டுவிட்டு வெளியேறிவிட்டாள். இலங்கையில், அவள் இராணுவத்திடமிருந்து மறைந்திருந்தாள். அவர் ஒரு விடுதலைப் புலியைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவளின் நண்பர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்தனர். பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தலையிடுவதற்கு முன்பு அவர் 14 நாட்கள் குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டார். 20 அகதிகள் கொண்ட குழுவின் ஒரு பகுதியாக அப்பெண் தப்பி வெளியேறினாள்.
நாங்கள் இந்தியா செல்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, எங்களுக்கு உணவு இல்லை. வீட்டில் எதுவும் மிச்சமில்லை. புலிகளும் இராணுவமும் நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாங்கள் இடையில் கிடந்து மிதிபட்டோம். நமது கிராமப்புற விவசாய சங்க கட்டிடத்தில் இராணுவம் முகாமிட்டுள்ளது. கைவிடப்பட்ட வீடுகளில் அவர்கள் திருடுகிறார்கள், அதனால் குடும்பப் பெரியவர்கள் அங்கே தங்கியிருக்கிறார்கள். அவளது முழு வாழ்க்கையும் போரினால் பாதிக்கப்பட்டிருந்தது என்று அப்பெண் தெரிவித்தாள்.
30 வயதுடைய கட்டிடத் தொழிலாளி குமார் கூறியதாவது: “நான் திருகோணமலை நகரில் வசித்து வந்தேன், எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். நான் 1990 இல் என் பெற்றோருடன் இங்கு வந்து பின்னர் திரும்பிச் சென்றேன். இப்போது திருமணமான பிறகு, நான் மீண்டும் என் மனைவி மற்றும் என் நான்கு மகள்களுடன் இங்கு வந்துள்ளேன்.
ஜனாதிபதித் தேர்தலில், இரண்டு பிரதான கட்சிகளும் [ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி] தமிழ் மக்களுக்கு எதையும் வழங்கவில்லை. எனவே நாங்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அமைதியை ஏற்படுத்தாது.
“கடந்த பொதுத் தேர்தலில் நாங்கள் [எல்டிடிஇ ஆதரவு] தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தோம். பாராளுமன்றத்தில் அவர்களுக்கு 22 எம்.பி.க்கள் உள்ளனர், ஆனால் எங்களுக்கான கொள்கை எதுவும் இல்லை. திருகோணமலை பிராந்தியத்தில் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றனர். இப்போது நாங்கள் அகதிகளாக இங்கு வந்துள்ளோம்.'
குமார் சொன்னார்: “பிரச்சனை சாதாரண சிங்களவர்களால் அல்ல, தலைவர்களால்தான். சுனாமியால் நாங்கள் பாதிக்கப்பட்டோம் [டிசம்பர் 2004 இல்]. அந்த நேரத்தில், சிங்கள மக்கள் எங்களுக்கு நிறைய உதவினார்கள். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒருவருக்கொருவர் நன்றாக வாழ்ந்தனர். உயர் மட்டத்தில் மட்டுமே, தலைவர்கள் இன வெறுப்பைத் தூண்டுகிறார்கள். அதன் காரணமாக, திருகோணமலையில் வாழும் சிங்களவர்களும் முஸ்லீம்களும் தஞ்சம் கோரி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர் ... இதை மாற்ற அனைத்து மக்களும் கட்டாயம் ஒன்று சேர வேண்டும்.”