மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சனிக்கிழமை, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் பென்சில்வேனியாவின் ஷாங்க்ஸ்வில் நினைவிடத்தில் செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களை நினைவுகூரும் வகையில் ஒரு முக்கிய உரையாற்றினார். முன்னாள் துணை ஜனாதிபதி டிக் ஷென்னி மற்றும் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் புடைசூழ புஷ் அறிவித்தார், '9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த வாரங்கள் மற்றும் மாதங்களில், அதிலிருந்து அற்புதமாக ஒற்றுமையோடு மீண்டெழுந்த மக்களுக்குத் தலைமை கொடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்,' என்றார்.
புஷ் இதில் கலந்து கொள்வதற்கு முன்னதாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டாலிசா ரைஸ், '9/11 இல் இருந்ததை விட நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம்' என்ற தலைப்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு வாசகர் தலையங்கம் (op-ed) எழுதினார், அதுசெப்டம்பர் 11 க்கு விடையிறுத்த புஷ் நிர்வாக கொள்கையைப் பாதுகாத்தது. ஞாயிறன்று காலை ரைஸ் பல காலை உரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் படையெடுப்புகளைப் புகழ்ந்து தள்ளியதுடன், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றியும் அபிப்ராயங்களைத் தெரிவித்து கொண்டிருந்தார்.
புஷ், ரைஸ் மற்றும் ஷென்னி ஆகியோர் தான், தொடர்ந்து பாரியளவில் அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்ட மீறல்களையும், அத்துடன் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க மக்களுக்கு எதிரான குற்றங்களையும் வடிவமைத்தவர்கள். சித்திரவதை, ஆட்கடத்தல், உத்தரவாணையின்றி சட்டவிரோத அரசு உளவுபார்ப்பு மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ள ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடங்கியமை என இவற்றை முன்னோடியாக இருந்து இவர்கள் தான் நிறுவனமயப்படுத்தினார்கள்.
9/11 தாக்குதல்களால் தோற்றுவிக்கப்பட்ட அதிர்ச்சி மற்றும் பயங்கரத்தைப் பயன்படுத்தி, புஷ்ஷும் அவரது சக சதிகாரர்களும், சில நாட்களிலேயே, பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த பல திட்டங்களைச் செயல்படுத்தினர். வெள்ளை மாளிகையை மூழ்கடித்திருந்த குற்றவியல் நெறிமுறைகள் ஷென்னியால் வெளிப்படுத்தப்பட்டன, அவர் அந்த தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்குப் பின்னர் தேசிய தொலைக்காட்சியில் அறிவிக்கையில், 'நாம் இருண்ட பகுதியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது... நாம் நேரத்தை நிழலுலகில் செலவிடப் போகிறோம்,' என்றார்.
அவர்கள் அவ்வாறே செய்தார்கள். இரகசியமாக புஷ், ஷென்னி மற்றும் அவர்களின் கூட்டாளிகள் நிலவறைகளை அமைத்தனர், அங்கே அமெரிக்க சிப்பாய்களும் உளவுத்துறை செயல்பாட்டாளர்களும் கைதிகளை மீண்டும் மீண்டும் மூச்சுத் திணறடிக்கும் சித்திரவதைக்கு உள்ளாக்கியதுடன், அவர்களுக்கு மின் அதிர்ச்சி அளித்து, குத்தினர், அடித்தனர், சிறிய பெட்டிகளில் அடைத்தனர், அவர்கள் மீது கழிவுகளைப் பூசினர், கேமரா முன் அவர்களை பாலியல் சுய-இன்பம் செய்ய நிர்பந்தித்தனர்.
அவர்கள் இரகசியமாக உத்தரவாணையின்றி உளவுபார்க்கும் ஸ்டெல்லர்விண்ட் (Stellarwind) உளவுத் திட்டத்தை உருவாக்கினர், ஓர் அமெரிக்க பிரஜையாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, புவியிலுள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் பொலிஸ் கண்காணிப்பு செய்வதற்கான மின்னணு பதிப்பை தொடங்க அது அரசாங்கத்தை அனுமதித்தது. ஈராக்கிய அரசாங்கம் பேரழிவுகரமான ஆயுதங்களை வைத்திருந்ததாக இரகசியமாக ஆதாரங்களை இட்டுக்கட்டிய அவர்கள், ஒரு குற்றகரமான ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்க அமெரிக்க மக்கள் மீது சரமாரியாக பொய்களை மழையெனப் பொழிந்தார்கள்.
ஆனால் புஷ் பேசிய அதே கருத்துக்களை ஏறக்குறைய சொல்லுக்கு சொல் அப்படியே உதிர்த்து அவருக்குப் பின் பேசிய ஹாரிஸின் வார்த்தைகளில் கூறுவதானால், 9/11 க்கு அமெரிக்க விடையிறுப்பு பாரம்பரிய அடிப்படையில் நேர்மறையாக இருந்ததாம்.
அவர் கூறினார், 'செப்டம்பர் 11, 2001 ஐ தொடர்ந்து வந்த நாட்களில், அமெரிக்காவில் ஒற்றுமை சாத்தியம் என்று நம் அனைவருக்கும் நினைவூட்டப்பட்டது. அமெரிக்காவில் ஒற்றுமை இன்றியமையாதது என்பதும் நமக்கு நினைவூட்டப்பட்டது. நம் அனைவருக்குமான செல்வ செழிப்புக்கும், நமது தேசிய பாதுகாப்புக்கும், உலகில் நாம் நிமிர்ந்து நிற்பதற்கும் இது அவசியம்... நாம் ஒற்றுமையாக நின்று, திரும்பிப் பார்க்கும் போது, பாரிய பெரும்பான்மை அமெரிக்கர்கள் ஒரு நோக்கத்திற்காக ஒன்றுபட்டிருந்தனர் என்பதை நாம் நினைவுகூர்கிறோம்,” என்றார்.
“ஒற்றுமையே நம் மிகப் பெரிய பலம்,” என்று அறிவித்து, பைடென் ஒரு பதிவு செய்யப்பட்ட காணொளி அறிக்கையில் ஹாரிஸின் வாதங்களை மீளவலியுறுத்தினார்.
புஷ், ஹாரிஸ் மற்றும் பைடென் ஆகியோர் போற்றி கொண்டாடும் இந்த 'ஒற்றுமை' ஒரு கட்டுக்கதையாகும். செப்டம்பர் 11 இல் இருந்து இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களுக்குள் நடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் போருக்கு எதிரான முதல் போராட்டங்களுடன், புஷ் நிர்வாகத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளும் குற்றவியல் போர்களும் பாரிய எதிர்ப்பைத் தூண்டின. இதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் உலகெங்கிலும் ஈராக் போருக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் அணிவகுத்தனர்— அது அந்த தருணம் வரையிலான வரலாற்றிலேயே மிகப்பெரிய உலகளாவிய போர்-எதிர்ப்பு போராட்டங்களாக இருந்தன.
ஆனால் 'ஒற்றுமை' என்ற இந்த கட்டுக்கதையின் உண்மையான உள்ளடக்கம் என்னவென்றால், போர் தொடுக்கவும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது பாரியளவில் தாக்குதலைத் தொடுக்கவும் அரசுக்குள் ஒற்றுமை இருந்தது. அது அண்மித்து ஒருமனதாக தேசிய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற இட்டுச் சென்றது, அரசியலமைப்பின் முக்கிய பிரிவுகளைத் தலைகீழாக்கிய இந்த சட்டம், செனட்டில் 98 க்கு 1 என்ற வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது, மற்றும் இராணுவப் படைகளைப் பயன்படுத்துவதை அங்கீகரிக்கும் 2001 சட்டமசோதா செனட்டில் 98 க்கு 0 என்ற வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
'தேசிய ஒற்றுமை' என்ற கட்டுக்கதையைக் கையிலெடுப்பது நீண்ட காலமாகவே 9/11 நினைவுதினங்களில் ஓர் அடையாள முத்திரையாக இருந்து வருகிறது என்றாலும், இன்று அது ஒலித்ததை விட ஒருபோதும் இந்தளவுக்கு வெற்றுத்தனமாக ஒலித்ததில்லை. புஷ், பைடென் மற்றும் ஹாரிஸின் 'ஒற்றுமைக்கான' துதிப்பாடல்கள் ட்ரம்பின் ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு எட்டு மாதங்களுக்குப் பின்னர் வருகின்றன, அந்த சம்பவத்தின் போது ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவு அதிகார மாற்றத்தை நிறுத்துவதற்காக ஒரு பாசிச எழுச்சியைத் தூண்டிவிட முயன்றதுடன், இந்த செயல்முறையில் காங்கிரஸ் சபை உறுப்பினர்களையும் முன்னாள் துணை ஜனாதிபதி பென்ஸையும் கூட படுகொலை செய்ய அச்சுறுத்தியது.
நியூ யோர்க் நகரத்திற்குள் பதுங்கியுள்ள ட்ரம்ப் அவர் பங்கிற்கு, சீரூடை அணிந்த பொலிஸ் அதிகாரிகள் முன்னால் உரையாற்றுகையில், 2020 தேர்தல் களவாடப்பட்டது என்ற அவர் வாதத்தையே மீண்டும் வலியுறுத்தியதுடன், செப்டம்பர் 11 நினைவுதினத்தில் வாழ்த்துக் கூறினார். செப்டம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து ஊடகங்களால் 'அமெரிக்காவின் மேயர்' என்றும் 'ஒற்றுமையின்' ஆளுருவம் என்றும் புகழப்பட்ட முன்னாள் நியூ யோர்க் மேயர் ரூடி யூலியானி, முன்னுக்குப்பின் முரணாக, அரசு எந்திரத்திற்குள் இருக்கும் அவரது எதிர்ப்பாளர்களை இலக்கு வைத்து குழப்பமான பாசிசவாத பிதற்றல்களுடன் நினைவுதினத்தில் வாழ்த்து கூறினார்.
இன்னும் அடிப்படையாக, ஒற்றுமைக்கான அவர்களின் அழைப்புகளில், ஆளும் வர்க்க பிரதிநிதிகள் அமெரிக்காவுக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமூக அதிருப்தியைப் பதட்டத்துடன் பார்க்கிறார்கள். உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டத்தைத் தொடர்வதற்கும் உள்நாட்டு எதிர்ப்பை நசுக்குவதற்கும் ஒன்றிணைந்து ஓர் அரசியல் கட்டமைப்பை எப்படியாவது ஜோடிக்க முடியுமென அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த இலக்கை அடைய, அமெரிக்க ஊடகங்களின் அனைத்துப் பிரிவுகளும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' மரபைப் பாதுகாக்க ஒன்றிணைந்துள்ளன. 'கடந்த 20 ஆண்டு கால தலையீட்டை முடிவற்ற தொடர்ச்சியான தவறுகளாக சித்தரிக்கும் கதையாடல்களில் சமநிலையோ முன்னோக்கோ இல்லை,' என்று ஜனநாயகக் கட்சி தரப்பிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கத்தில் அறிவித்தது. புஷ்ஷையும் அவரது சக சதிகாரர்களையும் பாதுகாத்து போஸ்ட் அறிவிக்கையில், 'இன்று அமெரிக்கத் தலைவர்களின் இறுமாப்பு மற்றும் போலித்தனத்தின் மீது பழிசுமத்தப்படும் பல குறைகளைக் குறைந்தபட்சம் பகுதியளவிலாவது சண்டையின் இயல்பு மீதே சுமத்தலாம்,” என்றது குறிப்பிட்டது.
போஸ்ட் புஷ் நிர்வாகத்தை மட்டுமல்ல, செய்தி ஊடக ஸ்தாபகத்தையே பாதுகாக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, புஷ் நிர்வாகத்தின் குற்றங்களையும் 'பேரழிவு ஆயுதங்கள்' பற்றிய அதன் பொய்களையும் பாதுகாத்து நியாயப்படுத்திய அதே செய்தித்தாள்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் கட்டுரையாளர்கள் தானே இன்னமும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் நிருபர் மைக்கேல் ஆர். கோர்டன் போன்ற சிலர், ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றி பொய்யுரைப்பதில் இருந்து, நேரடியாக கோவிட்-19 பெருந்தொற்று சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியிடப்பட்டது என்ற சதிகோட்பாட்டைப் பரப்புவதற்குத் தாவியுள்ளனர்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டு வரலாம், ஆனால் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கட்டமைப்புக்குள் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அமெரிக்க அரசியலின் இரத்த ஓட்டத்தில் நிரந்தரமாக ஊடுருவிட்டன. புஷ் நிர்வாகத்தின் குற்றங்களை அமெரிக்க செய்தி ஊடக ஸ்தாபகம் பாதுகாப்பது கடந்த காலத்தை மட்டும் இலக்காகக் கொண்டதில்லை, மாறாக எதிர்காலத்தையும் இலக்கில் வைத்துள்ளது.
வழக்கம் போல, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மிகவும் அப்பட்டமாக எழுதியது: '9/11 சம்பவத்தின் தீமையிலும் நன்மையாக இருந்தது என்னவென்றால் அது அமெரிக்க தைரியம் மற்றும் மீளெழுச்சியை எடுத்துக்காட்டியது... ஆனால் நாடு அரசியல் நோக்கத்திற்காகவும் சில காலம் ஒற்றுமையுடன் இருந்தது... மற்றொரு தாக்குதல் நடந்தால், ஒருவேளை கோவிட்-19 போன்று உயிர்கொல்லும் உயிரி ஆயுதங்களுடன் நடந்தால், நம் உறுதிப்பாடும் மீளெழுச்சியும் அதேயளவுக்கு இருக்குமா? நாம் அதை கண்டறியப் போகிறோம் என்று வரலாறு கூறுகிறது,” என்றது குறிப்பிட்டது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மற்றொரு குழப்பமான விவரிக்க முடியாத சம்பவம் அமெரிக்க அரசியலின் கட்டமைப்பைத் தீவிரமாக மாற்ற பயன்படுத்தப்படும் நேரம் வரும் என்று கூறுவதாக உள்ளது. 'பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்' பாகமாக செயல்படுத்தப்பட்ட அரசியலமைப்பு உரிமைகள் மீதான சர்வாதிகார அத்துமீறல்களுக்கும் மற்றும் ஆக்கிரோஷமான போருக்குமான கருவிகள் எதிர்காலத்தில் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுவதாக உள்ளது.
'ஒற்றுமை' பற்றிய இந்த முடிவில்லா பேச்சுக்கள் எல்லாம், போருக்குப் பிந்தைய வரலாற்றில் எந்த நேரத்திலும் இல்லாதளவுக்கு அமெரிக்கா வர்க்கரீதியில் பிளவுபட்டுள்ள நிலையில் வருகின்றன. நிதிய தன்னலக்குழு தன்னை பரந்தளவில் வளப்படுத்திக் கொள்ள கோவிட்-19 பெருந்தொற்றைப் பயன்படுத்தி உள்ளது, அதேவேளையில் தொழிலாளர்களோ பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளதுடன், பாரிய உயிரிழப்பு மற்றும் பொருளாதாரத்திற்காக இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அரசியல் எதிர்ப்பால் சூழப்பட்டுள்ளதைக் காணும் அமெரிக்க ஆளும் வர்க்கம், அதன் கடந்த கால குற்றங்கள் எவ்வளவு தான் சிறியதாக இருந்தாலும், அவற்றைக் குறித்த விசாரணையையோ அல்லது விமர்சனத்தையோ விட்டுவிட்டு 'ஒற்றுமையை' கோருகிறது.
ஆனால் அமெரிக்க செய்தி ஊடகமும் அரசியல் ஸ்தாபகமும் வண்டிகளை வட்டமடிக்க எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரில் இழைக்கப்பட்ட குற்றங்கள் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அவை நிதிய தன்னலக்குழுவின் ஈவிரக்கமற்ற சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தி, அமெரிக்க ஜனநாயகம் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்துள்ளன.
தொழிலாள வர்க்கம் சமூகப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கும் போது, அவர்கள் தங்கள் போராட்டத்தை தனிப்பட்ட முதலாளிகளுக்கு எதிரான போராட்டங்களாக அல்ல, மாறாக அதை விட மேலதிகமாக குவாண்டனாமோ, அபு கிரைப் மற்றும் ஃபல்லூஜாவின் கொடூரங்களை உருவாக்கிய சமூக ஒழுங்கிற்கு எதிரான போராட்டங்களாக பார்ப்பார்கள்.