இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் செப்டெம்பர் 29 அன்று நடந்த ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழுவின் (TSPSC) கூட்டத்தில், அக்டோபர் 1 அன்று பிரித்தானியாவில் நடக்கவுள்ள பெற்றோர்களின் பாடசாலை பகிஷ்கரிப்பை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு ஐக்கிய இராச்சிய பெற்றோரான லிசா டயஸ் என்பவர் அழைப்பு விடுத்துள்ள இந்த பகிஷ்கரிப்பு, கோவிட்-19 தொற்றுநோய் தொடர்ந்து பரவுவதால் பாதுகாப்பற்ற பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. கூட்டத்தின் போது பிரிட்டன் பகிஷ்கரிப்பு பற்றி ஆசிரியர்கள் உற்சாகமாக பேசி, தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினர்.
குழுவின் இரண்டு உறுப்பினர்களின் கருத்துக்களை நாங்கள் கீழே பிரசுரிக்கின்றோம்.
அரச பாடசாலை ஆசிரியர் மகேஷ் சேனநாயக்க கூறியதாவது: 'லிசா டயஸின் பகிஷ்கரிப்பு அழைப்பு மற்றும் அதைச் சூழ திரட்டப்பட்ட ஆதரவைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அரசாங்கம் சொல்லும் எதையும் தொழிலாள வர்க்கம் ஏற்கத் தயாராக இல்லை என்பதை நிரூபிக்கும் அவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'இலங்கையில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், எதிர்காலத்தில் இங்குள்ள பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் எமது உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. இந்தத் துறையில் உள்ள மிகப் பெரிய தொழிலாளர்கள் குழுவினர் என்ற வகையில், அரசாங்கத்தின் இந்த குற்றவியல் கொள்கைகளை எதிர்ப்பதில் எங்களுக்கு பெரும் வகிபாகம் உள்ளது. இலங்கையில் தொற்றுநோய் பற்றிய உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் உண்மையான நிலைமையைக் காட்டவில்லை. உண்மையான நிலைமை மோசமானது என்று தெரிந்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி நெருப்பில் தள்ள முடியும்?
'நிலைமை மோசமாகுமா என்று சோதிக்க அரசாங்கம் மக்களின் உயிர்களை தியாகம் செய்து வருகிறது. அதன் மூலம் எத்தனை உயிர்கள் பலியாகின என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். பிரித்தானியாவில் உள்ள பெற்றோர்கள் தாங்கள் அதை பொறுத்துக்கொள்ள தயாராக இல்லை என்று கூறுகிறார்கள். இந்த உதாரணத்தை நாம் பின்பற்ற வேண்டும். முதலாளித்துவத்தின் இலாப நலன்களுக்காக ஒரு பிள்ளையை கூட பலிகொடுக்கக் கூடாது.
ஒரு அரச பாடசாலை அதிபர் பினவருமாறு கூறினார்: 'இந்த தொற்றுநோயால் பிள்ளைகள் பாதிக்கப்படவில்லை என்று சொல்வது பொய். எனக்கு நன்கு தெரிந்த பிள்ளைகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள், ஆனால் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் ஒரு சில பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது, மேலும் அவர்கள் பாடசாலைகளை அவசரமாகத் திறப்பதற்கான ஒரு சாக்குப்போக்காக அதைச் செய்துள்ளனர்.
“இந்த சூழ்நிலையில் பாடசாலைகளை திறந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அரசாங்கம் தங்கள் சொந்த சுகாதாரத்தை பராமரிக்க கூட கற்றுக்கொள்ளாத சிறு பிள்ளைகளுடன் வகுப்புகளை தொடங்க உள்ளது. இலங்கையில் பல பாடசாலைகளுக்கு சாதாரண சூழ்நிலைகளுக்கு போதுமான சுகாதார வசதிகள் கூட கிடையாது என்பதை ஒரு அதிபர் என்ற முறையில் நான் தெளிவாக அறிவேன்.
'இந்த கடுமையான பிரச்சினைகள் எதையும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. பிள்ளைகளை பாடசாலைக்குத் தள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் இதை எதிர்க்க வேண்டும். அத்துடன் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒத்துழைப்பை உருவாக்கும் முயற்சியாக ஐக்கிய இராச்சிய பெற்றோருக்கு ஆதரவளிக்க வேண்டும்.
நேற்றைய ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழுவின் தீர்மானம் கீழே வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஆசிரியர்கள்-மாணவர்கள்-பெற்றோர்கள் பாதுகாப்புக் குழு, ஐக்கிய இராச்சியத்தில் பெற்றோர்கள் அக்டோபர் 1 அன்று கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை எதிர்த்து நடத்தவுள்ள பகிஷ்கரிப்பை முழுமையாக ஆதரிக்கிறது. இந்த பகிஷ்கரிப்பை உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரிப்பதோடு, கோவிட்-19 வைரஸை உலகத்தில் இருந்தே ஒழிப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக முன்கொண்டு செல்ல வேண்டும்.
இந்த பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுக்கும் பிரிட்டிஷ் பெற்றோர் லிசா டயஸின் முன்முயற்சி மிகவும் குறிப்பிடத்தக்க படியாவதோடு பெரும் வணிகத்தின் இலாப நலன்களுக்கு மனித உயிர்களை அடிபணியச் செய்யும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் குற்றவியல் கொள்கைகளுக்கு, உலகளவில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பரந்த அளவில் வளர்ந்து வரும் எதிர்ப்பின் பகுதியாகும்.
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள், பிரித்தானியாவின் கொள்கையிலிருந்தோ அல்லது உலகின் வேறு எந்த அரசாங்கத்தின் கொள்கையில் இருந்தோ வேறுபட்டதல்ல. தொற்றுநோய் ஆபத்து இருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் சரியான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் அவ்வப்போது பாடசாலைகளைத் திறந்தது. எனினும் ஏப்ரல் முதல், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டன.
இலங்கை பாடசாலை மாணவர்களின் உயிருக்கு மீண்டும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் நேரில் கற்பிப்பதை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. இது அடுத்த வாரம் வரையறுக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அரசாங்கத்தின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப இடம்பெறுகின்றது. இந்த அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் பிரித்தானிய பெற்றோரின் போராட்டம் இலங்கை பெற்றோருக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆசிரியர்கள்-மாணவர்கள்-பெற்றோர்கள் பாதுகாப்பு குழுவானது’ இலங்கையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஒரு தொழிலாள வர்க்க அடிப்படையில் ஒன்றிணைத்து, அரசாங்கம் முன்கூட்டியே பாடசாலை திறப்பதை எதிர்த்துப் போராடுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டது.
250,000க்கும் மேற்பட்ட இலங்கை அரச பாடசாலை ஆசிரியர்கள், அத்தகைய ஒன்றுபட்ட சக்தியின் முக்கிய அங்கமாக, ஊதிய உயர்வு கோரி மூன்று மாதங்களுக்கும் மேலாக இணையவழி கற்பித்தல் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்.
ஆசிரியர்கள் தங்களது தற்போதைய போராட்டத்தின் ஒரு பகுதியாக, பாடசாலைகளை மீண்டும் திறப்பதை எதிர்த்துப் போராடுவதில் எங்கள் குழு முன்னிலை வகிக்கிறது. இலங்கையின் கல்வித்துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எந்த உண்மையான எதிர்ப்பையும் காட்டவில்லை.
வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் சிறுவர்களின் கல்வியை சீர்குலைப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாணவர்களுக்கு இணையவழி கல்வி பெற தேவையான வசதிகளை வழங்க ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை. இந்த வசதிகள் ஆசிரியர்களால் மற்றும் மாணவர்களின் சொந்த செலவில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கடுமையான அலட்சியம் என்பது, இலங்கை மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் சற்றே அதிகமானவர்கள் தான் இணையவழி கல்வியை பெற முடிகிறது. அதுவும் மோசமான தொலைத்தொடர்பு சமிக்ஞைகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய சமூகத் தேவைக்கு உரிய துறைகளில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் திணித்த கடுமையான சிக்கன நடவடிக்கைகளாலேயே இந்த துயர நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய பாடசாலைகளில் காற்றோட்ட பற்றாக்குறை மற்றும் சமூக இடைவெளி இன்மை மற்றும் சிறுவர்கள் மத்தியதில் கோவிட் -19 வைரஸின் அபாயகரமான பரவலுக்கு வழிவகுக்கும் காரணிகளாக லிசா டயஸால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை இலங்கையில் மிக கடுமையான பிரச்சினைகள் ஆகும். அதிக நெரிசலான வகுப்பறைகள் மற்றும் பொது போக்குவரத்தும், மற்றும் மோசமான சுகாதார நிலைமைகளும் பிள்ளைகளின் சுகாதாரப் பாதுகாப்புக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலாகும்.
பிள்ளைகள் கொரோனாவால் பாதிப்படைவதற்கான வாய்ப்பு குறைவு என்ற விஞ்ஞான விரோத பொய், பாடசாலைகளை மீண்டும் திறப்பதையும் மற்றும் சிறுவர்களுக்கான ஒழுக்கமான சுகாதார வசதிகளை குறைப்பதையும் நியாயப்படுத்த, இலங்கை மற்றும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ ஆட்சியின் அனைத்து நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகிறது.
லிசா சக்திவாய்ந்த முறையில் அறிவித்தபடி: 'நாங்கள் பொய்களால் நோய்வாய்ப்பட்டுள்ளோம். நாங்கள் எங்களையே கேள்விக்குள்ளாக்கிகொள்ள நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளோம். பாடசாலையில் சிறுவர்களை நோய் பாதிப்பதில்லை, அவர்கள் பேருந்திலேயே தொற்றுக்கு உள்ளாகின்றனர், போன்ற அபத்தமான விஷயங்களை விஞ்ஞானிகளையே சொல்ல வைப்பதால் நாங்கள் சோர்வாக இருக்கிறோம்! இது அந்தளவுக்கு நல்லதல்ல. நாங்கள் அதை இனி ஏற்றுக்கொள்ளமாட்டோம்.'
சமூகத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் சோதனையில் தங்கள் பிள்ளைகள் பயன்படுத்தப்படுவதை பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளக் கூடாது என்ற அவரது அறிக்கை, ஒரு சக்திவாய்ந்த மற்றும் சரியான நிலைப்பாடாகும். அரசாங்கத்தால் இது போன்ற நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் இலங்கையிலும் இது பொருந்தும்.
இலங்கையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்பு, கல்வி அமைச்சின் செயலாளர் ஆரம்பத்தில் அறிவித்தபடி: 'தொற்றுநோயின் புதிய இயல்புக்கு ஏற்ப அனுபவத்தைப் பெற பாடசாலைகள் திறக்கப்படும்.'
முதலாளித்துவ அரசாங்கங்களின் குற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரித்தானிய பெற்றோர் எடுத்த முயற்சி, ஒரு தைரியமான மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒன்றாகும். உங்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இலங்கை ஆசிரியர்களின் ஆதரவைப் பெற எங்கள் குழு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதில், இதை ஒரு முக்கியமான படியாக நாங்கள் காண்கிறோம்.
மேலும் படிக்க
- இலங்கை அரசாங்கம் ஆசிரியர்கள் வேலைநிறுத்த செயற்பாட்டாளர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள பொலிஸ் வேட்டையாடலை நிறுத்து!
- டெல்டா வைரஸ் மாறுபாடு நாடு முழுவதும் மக்களை காவுகொள்ளும் போது இலங்கை அரசாங்கம் பாடசாலைகளை மீண்டும் திறக்க தயாராகி வருகின்றது
- ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஒரு வேலைத் திட்டம்