இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை அரசாங்கம் வரவிருக்கும் சிக்கன வரவு-செலவுத் திட்டத்திற்கான தயாரிப்பில், சமீபத்திய வாரங்களில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாடுகளை நீக்கி, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கைச் செலவில் பெரும் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.
செப்டம்பர் பிற்பகுதியிலும் அக்டோபர் தொடக்கத்திலும் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டங்களில், அரிசி, சமையல் எரிவாயு, கோதுமை மாவு, பால் மா, சீமெந்து ஆகியவற்றின் மீதான விலை கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் பெரிய வணிக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத விலை அதிகரிப்புகளை விதிக்க கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது:
- கடைசி தரத்திலான அரிசி ஒரு கிலோவின் விலை 17 சதவிகிதத்தால் 115 ரூபாயாக அதிகரிக்கப்பட்டதுடன், அடுத்த தரத்திலான சம்பா அரிசி, 37 சதவீதத்தால் 145 ரூபாயாக அதிகரித்துள்ளது. அரிசி இலங்கையின் பிரதான உணவாகும். (ஒரு அமெரிக்க டாலர் சுமார் 200 இலங்கை ரூபாய் ஆகும்.)
- 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 சதவீதம் உயர்ந்து, 2,675 ரூபாயாக (13 அமெரிக்க டாலர்) அதிகரித்துள்ளது.
- பால் மா, கிலோவுக்கு 1,195 ரூபாயாக, 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
- ஒரு கிலோகிராம் கோதுமை மா, 11.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்போது இதன் விலை 97 ரூபா ஆகும். இது பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க செய்துள்ளது.
- 50 கிலோகிராம் சீமெந்துப் பொதியின் விலை 1,098 ரூபாயாக உயர்ந்ததுள்ளது. இது 9.2 சதவீத அதிகரிப்பு ஆகும்.
- எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அக்டோபர் 7 அன்று, நிதி அமைச்சர் பசில் இராஜபக்ஷ முதல் வாசிப்புக்காக தனது 2022 வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டு மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அது பொருளாதார நெருக்கடியின் சுமையை கொழும்பு அரசாங்கம் எவ்வாறு உழைக்கும் மக்கள் மீது திணிக்க திட்டமிட்டுள்ளது என்பதை சமிக்ஞை செய்கின்றது. அதன் 2022 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் முழு விவரங்களும் நவம்பர் 12 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அத்தியாவசிய பொருட்களின் விலையிலான சமீபத்திய கடுமையான அதிகரிப்பானது தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட பொருளாதார சிக்கல்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான தொழிலாளர் குடும்பங்கள், தினசரி உணவை பெற்றுக்கொள்ள போராடுகின்றனர் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. சமையல் எரிவாயுக்கான ஆகக்கூடிய விலை அதிகரிப்பால், சிலர் விறகு அல்லது மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
சண்டே டைம்ஸ் பத்திரிகையில் அக்டோபர் 17 வெளியான ஆசிரியர் கருத்துரை, 'விலைச் சுனாமியில் சிக்கியுள்ள மக்களுக்கு ஒரு வழி இருக்கிறதா' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. 'வெள்ளம் போல் பெருக்கெடுக்கும் விலைவாசி உயர்வானது, அரசாங்கத்துறையில் உள்ள நிலையான ஊதியம் பெறும் ஊழியர்கள் [மற்றும்] ஊதியம் பாதியாக வெட்டப்பட்டுள்ள தனியார்துறை தொழிலாளர்களை கடுமையாகப் பாதித்துள்ளது,' என்று அது குறிப்பிட்டது.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முறைசாரா துறையில் உள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் உள்ளவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
1978 இல் 'திறந்த பொருளாதார' கொள்கைகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, சில அத்தியாவசியப் பொருட்களைத் தவிர, ஏனையவற்றுக்கு அரசாங்க விலைக் கட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்ட வகையில் விலக்கிக்கொள்ளப்பட்டன. இப்போது ஒரு பேரழிவு தரும் பொருளாதார சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், பரந்த தனியார்மயமாக்கல் திட்டத்தின் பாகமாக, மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இரத்துச் செய்யவும் மானியங்களை வெட்டிக் குறைக்கவும் உறுதிப்பாட்டுடன் உள்ளது.
ஒதுக்கீட்டு மசோதாவின் படி, 2022 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த வரவு-செலவுத் திட்ட செலவு 2,505 பில்லியன் ரூபாய்களாக இருக்கும். இதில் இந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 173 பில்லியன் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டுக்கான செலவில் கடுமையான வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களைக் குறிக்கிறது.
இந்த சிக்கன நடவடிக்கைகள், தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் 'வைரஸுடன் வாழும்' குற்றவியல் கொள்கைகளால் அதிகரித்து வரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இயக்கப்படுகின்றன.
சமீபத்திய சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (World Economic Outlook) படி, பணவீக்க அழுத்தங்கள் எல்லா இடங்களிலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. கடந்த ஆண்டில் அமெரிக்காவில் உணவு விலை 12.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட 5.9 சதவிகித உலக வளர்ச்சி விகிதத்தையும் வெட்டிக் குறைத்துள்ளதுடன் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4.9 சதவிகிதம் என கணித்துள்ளது. இது, இலங்கை மத்திய வங்கியின் 5 சதவீத மதிப்பீட்டில் இருந்து இலங்கையின் வளர்ச்சி விகிதத்தை 3.6 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.
வேலைவாய்ப்பு, பொருட்களுக்கான அணுகல், நுகர்வோர் விலை உயர்வு ஆகிய தொற்றுநோயுடன் சம்பந்தப்படு உருவான நெருக்கடியின் தாக்கங்கள், குறைந்த வருமானம் பெறுகின்ற மற்றும் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் நிலைமையை மோசமாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது. இது, தொற்றுநோயால் ஏற்படும் விநியோகச் சங்கிலி சிக்கல்களை, விலைகளை உயர்வுக்கான பிரதான காரணியாக அடையாளம் காட்டுகிறது.
மூடிஸ் இன் படி, இலங்கையின் 2021 வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாக உள்ளது. நிதி அமைச்சர் இராஜபக்ஷவின் ஒதுக்கீட்டு மசோதா, வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை போக்க மற்றும் கடனைச் சமாளிக்க அரசுக்கு 3,184 பில்லியன் ரூபாய் வரை மேலதிக கடன்களைப் பெற ஏற்பாடு செய்கிறது. ஏற்கனவே அரசாங்கம் 2025 வரை ஆண்டுதோறும் 5 பில்லியன் டாலர்கள் வரை கடன் சேவைக்காக செலுத்த வேண்டும்.
ஆகஸ்ட் மாதத்தில், அரசாங்கத்தின் நிகர அந்நிய செலாவணி நிலை சுமார் 1 பில்லியன் டாலர்களாக குறைந்த அதேவேளை, சீனாவிலிருந்து 1.5 பில்லியன் டாலருக்கு நிதி கொடுத்துமாறல் ஏற்பாட்டுடன், மொத்த இருப்புக்கள், 4 பில்லியன் டாலருக்கு சற்றே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரூபாயின் மதிப்பு 27 சதவிகிதம் குறைந்துள்ளதுடன் அரசாங்கத்தின் அச்சிடப்பட்ட பணம் 35 சதவிகிதம் அதிகரித்து 2.8 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடன் தவணை தவறலை தடுப்பது அரசாங்கம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ள அதேவேளை, அதன் கடன் தீர்வுக் கொடுப்பனவுகள் வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறையை அதிகரிப்பதுடன் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை ஒரு வெடிக்கும் நிலைக்குத் தள்ளுகின்றன.
வரிகள் அதிகரிப்பு, மானியக் குறைப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் மூலம் இந்த நெருக்கடியை தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது சுமத்துவதே கொழும்பின் பதில் நடவடிக்கையாக இருக்கின்றது. மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் பெட்ரோலியம் துறைகளுக்கான எஞ்சியிருக்கும் மானியங்களை இரத்து செய்வதன் மூலம் ஏற்கனவே அந்த துறைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது அந்த சேவைகளின் கட்டணத்தை மேலும் உயர்த்தும்.
ஒதுக்கீடு மசோதாவானது சுகாதாரம், மாகாண சபைகள், சமுர்த்தி (ஏழைகளுக்கான சிறிய நலக் கொடுப்பனவுகள்), நீர் வழங்கல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கிராமப்புற வீட்டுவசதி மற்றும் தொழிலாளர்களுக்கான செலவுகளில் கூர்மையான வெட்டுக்களை சமிக்ஞை செய்கின்றது. கல்விக்கு ஒரு பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டு 127 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தாலும், உண்மையான அர்த்தத்தில் இது ஒரு குறைப்பே ஆகும்.
ஐந்து இலட்சம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியும் 13,500 க்கும் மேற்பட்டோர் மரணித்தும் உள்ள நிலையின் மத்தியில், அடுத்த ஆண்டு சுகாதார ஒதுக்கீடு 6 பில்லியன் ரூபாய்களால் வெட்டிச் சரிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 28 பில்லியன் ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 18 பில்லியன் ரூபாயிலிருந்து குறைக்கப்பட்டு அடுத்த ஆண்டுக்கு 'கோவிட் கட்டுப்பாட்டிற்கு' 12 பில்லியன் ரூபாய் அற்பத் தொகையே மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டிலான இந்த வெட்டுக்கள் உழைக்கும் மக்களின் உயிர்வாழ்வு சம்பந்தமான கொழும்பு அரசாங்கத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றன.
இந்த சுமைகளை மக்கள் மீது சுமத்துகின்ற அதே நேரம், அரசாங்கம் ஏற்கனவே உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தனிநபர் மற்றும் பெருநிறுவன வருமான வரி விகிதங்களை 28 சதவிகிதத்திலிருந்து 14 முதல் 24 சதவிகிதம் வரையில் குறைத்துள்ளதுடன், வர்த்தகம் மற்றும் நிதி நடவடிக்கைகளுக்கான வரி, 24 விகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில், துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு அரசாங்கம் 40 ஆண்டு வரி விலக்கு அளித்துள்ளது.
நாடெங்கும் தொற்றுநோய் பரவி வரும் நிலையிலும், மத்திய வங்கியின் ஊடாக கிடைக்கப்பெற்ற வரிக் குறைப்பு மற்றும் மலிவான நிதியின் விளைவாக, கொழும்பு பங்குச் சந்தையில் மேல் நிலையில் உள்ள கூட்டுத்தாபனங்கள் மற்றும் வங்கிகள், பெரும் இலாபத்தைப் பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், இராஜபக்ஷ அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை முகங்கொடுக்கின்றது. தரமான ஊதியத்தை கோரி சுமார் 250,000 ஆசிரியர்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்த நடவடிக்கை இப்போது நான்காவது மாதத்தில் நுழைந்துள்ள அதே நேரம், சுகாதாரம், பெருந்தோட்டங்கள், துறைமுகம், பெட்ரோலியம், மின்சாரம் மற்றும் ஆடை உற்பத்தி உள்ளிட்ட பிற துறைகளில் உள்ள தொழிலாளர்களும் ஊதிய உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை கோரியும் முதுகெலும்பை முறிக்கும் வேலை சுமைகளை கைவிட வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கோரும் விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது.
இந்த சமூக எதிர்ப்புக்கு அடக்குமுறை நடவடிக்கைகளுடன் பதிலளிக்கும் கொழும்பு, சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய அதன் நகர்வுகளை துரிதப்படுத்தியுள்ளது. இதற்கு ஏற்ப, ஒதுக்கீடு மசோதாவில் இந்த ஆண்டு இராணுவச் செலவு 18 பில்லியன் ரூபாவால் 373 பில்லியன் ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதோடு, பொலிசுக்கான செலவு 10 பில்லியன்களால் 106 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இராஜபக்ஷ அக்டோபர் 10 அன்று ஒரு இராணுவப் படைக்கு ஆற்றிய உரையில், 'நான் முப்படைகள் மற்றும் உளவுத்துறையின் மன உறுதியை உயர்த்தியுள்ளேன்... அவர்களின் கடமைகளைச் செய்வதற்குத் தேவையான அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன' என வலியுறுத்தினார். அவர் ஏற்கனவே பிரதான அமைச்சுக்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு தலைவர்களாக இராணுவத் தளபதிகளை நியமித்துள்ளதுடன் சிரேஷ்ட மாவட்ட பதவிகளிலும் இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளார்.
வேலைநிறுத்தங்களை தடை செய்யும் கொடூரமான அத்தியாவசிய சேவை உத்தரவுகள், ஜனாதிபதிக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்களை வழங்குவதுடன் வேலைநிறுத்தம் செய்பவர்களை கடுமையான சிறைத்தண்டனை மற்றும் தண்டனைகளை விதிக்க அச்சுறுத்துகின்றன.
தொற்றுநோய் தொடர்பாக, அரசாங்கத்தின் சமூக தாக்குதல்களும் மற்றும் 'உயிர்களை விட இலாபத்துக்கே முன்னுரிமை' என்ற கொள்கையை ஊக்குவிப்பதும், எதிர்க் கட்சிகளின் முழுமையான ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன.
அமெரிக்க சார்பு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் சக்தி தொடக்கம், மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி வரை அனைவரும் அரசாங்கத்தின் 'வைரஸுடன் வாழும்' கொள்கையை விளைபயனுடன் ஆதரிக்கின்றனர். அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவை ஆணை குறித்து வாயடைத்து இருப்பதன் மூலம் அவர்கள் அதற்கு மௌனமான ஆதரவை வழங்குகிறார்கள்.
இராஜபக்ஷ அரசாங்கத்தின் வர்க்கப் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கமானது தொழிற்சங்கங்கள், போலி-இடது மற்றும் எதிர்க் கட்சிகள் என்று அழைக்கப்படுபவற்றில் இருந்து சுயாதீனமாக, அதன் எதிர்த் தாக்குதலை ஒழுங்கமைக்க வேண்டும். இந்த தாக்குதலானது பின்வரும் கோரிக்கைகளுக்காக தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை வலிமையை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்:
- ஒவ்வொரு துறையிலும் ஒரு 'நெகிழும் ஊதிய அளவு'. இதன் அர்த்தம் நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப, தானாகவே அதிகரிக்கும் ஊதிய முறை.
- உலக வங்கியாளர்களுக்கான அனைத்து கடன் திருப்பிச் செலுத்துதலையும் நிறுத்துதல்.
- சமுதாயத்தின் வளங்கள் வணிகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் இலாபத்தை அதிகரிப்பதற்காக அன்றி, தொற்றுநோயை ஒழிக்க உடனடியாக சுகாதார அமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும்.
- அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளும் உண்மையிலேயே முடக்கப்பட வேண்டும். இதன் போது தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களின் வருமான இழப்புகளுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
- கோவிட்-19 வைரஸ் ஒழிக்கப்படும் வரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணையவழி கல்வியில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
- தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, தங்கள் சொந்த வேலைத் தளங்களில் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைத்து, இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஆதரவுடன், மேற்கண்ட கோரிக்கைகளுக்காக போராட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் வழிகாட்டுதலின் கீழ், சுகாதாரம், கல்வி மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நடவடிக்கை குழுக்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன; இந்த முயற்சிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.
தொழிலாளர்கள் சர்வதேச அளவில் தங்களது வர்க்க சகோதர சகோதரிகளின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை உருவாக்குவதில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனும் சோசலிச சமத்துவக் கட்சியுடனும் இணைந்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளுக்கான போராட்டம் தொழிலாள வர்க்கத்தை முழு அரசியல் ஸ்தாபகத்துடனும் அது பாதுகாக்கும் தனியார் சொத்து அமைப்பு முறையுடனும் நேரடி அரசியல் மோதலுக்கு கொண்டு வரும். தொழிலாளர்கள் ஏழை விவசாயிகள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி, முதலாளித்துவ ஆட்சியை தூக்கி எறிந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவ போராட வேண்டும். இதன் மூலமே பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குதல் உட்பட சோசலிச கொள்கைகளை செயல்படுத்த முடியும்.
சோசலிச சமத்துவக் கட்சி எப்போதுமே வலியுறுத்தி வருவது போல், இந்தப் போராட்டம் ஒரு சர்வதேசப் போராட்டமாக இருக்க வேண்டும். சர்வதேச சோசலிசத்திற்கான பொதுவான போராட்டத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் செயல்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் தொழிலாளர்களுடன் ஒன்றிணைய வேண்டும்.
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்துள்ள 'தொற்றுநோயை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது: ஒழிப்பதற்கான வழிவகைகள்' என்ற தலைப்பில் இடம்பெறும் இணையவழி கூட்டத்தில் பங்கேற்குமாறும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம். இந்த இணையவழி கூட்டம் அக்டோபர் 24, அமெரிக்க கிழக்கு நேரம் மதியம் 1 மணிக்கு (இலங்கை இந்திய நேரம் இரவு 10.30 மணிக்கு) இடம்பெறும்.