முன்னோக்கு

ஒரு உலகத் துயரம்: கோவிட்-19 ஆல் 180,000 வரை சுகாதாரப் பாதுகாப்பு பணியாளர்கள் இறந்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 பெருந்தொற்றின் அவலமான சமூக தாக்கத்தை எடுத்துக்காட்டும் சமீபத்திய புள்ளிவிபரங்களின் வரிசையில், உலக சுகாதார அமைப்பு (WHO), உலகளவில் பரவிக் கொண்டிருக்கும் தொற்றுநோயால் 180,000 சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள் இறந்துள்ளனர் என்று அறிவித்துள்ளது.

இலங்கையின் கண்டி மருத்துவமனையில் செவிலியர்களும் பிற சுகாதார ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் (உலக சோசலிச வலைத் தள ஊடகம்)

“ஜனவரி 2020 முதல் மே 2021 வரையிலான காலத்தில் கோவிட்-19 ஆல் 80,000 முதல் 180,000 வரை சுகாதார மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் இறந்திருக்கக்கூடும்,” என்று WHO தெரிவித்துள்ளது. “அதிகப்படியான இறப்புகள்” குறித்து எக்னாமிஸ்ட் சஞ்சிகை வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, உலகளவில் தொற்றுநோயால் இறந்துபோன சுமார் 15 மில்லியன் மக்களில் இந்த தொழிலாளர்களும் அடங்குவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு நெருக்கமாக தொற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர்.

சர்வதேச செவிலியர்கள் கவுன்சில் தலைவர் அன்னெட் கென்னடி (Annette Kennedy) கார்டியனுக்கு பேசுகையில், இறந்துபோன இலட்சக்கணக்கானவர்களில் பலர் “தேவையின்றி இறந்துள்ளனர், அவர்களை நாம் காப்பாற்றி இருக்கலாம்” என்று கூறினார்.

“இது அரசாங்கங்களின் அதிர்ச்சியூட்டும் குற்றமாகும்,” என்று அவர் கூறினார். மேலும், “தங்கள் உயிரையே இறுதியாக பணயம் வைத்து சேவையாற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்களை பாதுகாப்பதில் கடமை தவறிய அரசாங்கங்களின் செயல் ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றமாகும்,” என்றும், “அவர்கள் இப்போது கடின வேலையால் முற்றிலும் களைத்துவிட்டனர், அவர்கள் பேரழிவிற்குள்ளாகியுள்ளனர், அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் விரக்தியடைந்துவிட்டனர். மேலும், அவர்களில் 10 சதவீதம் பேர் மிகக் குறுகிய காலத்திற்குள் வெளியேறுவார்கள் என்ற ஒரு முன்கணிப்பு உள்ளது” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

சுகாதார பாதுகாப்புப் பணியாளர்கள் முறிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் நிலவும் பாரிய வெடிப்புக்களால் தூண்டப்பட்டு, கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மீண்டும் ஒருமுறை உலகளவில் வெடித்து பரவிக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் ஜனவரிக்கு பின்னைய உச்சபட்ச எண்ணிக்கையாக வியாழனன்று 51,000 நாளாந்த புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, மேலும் நோய்தொற்றுக்கள் எப்போதுமான உச்சபட்ச அளவாக 67,775 ஐ விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நாட்டில் பரவலாக தடுப்பூசி போடப்பட்டுள்ள போதிலும், தினசரி இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், நாளாந்தம் சராசரியாக 130 இறப்புக்கள் நிகழ்கின்றன.

தேசிய புள்ளிவிபர அலுவலக தரவின்படி, இங்கிலாந்தில், முந்தைய வாரத்தில் 60 பேரில் ஒருவருக்கு என்ற வீதத்தில் கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டு வந்தது அதிகரித்து, அக்டோபர் 6 இல் தொடங்கிய வாரத்தில் 55 பேரில் ஒருவருக்கு என்ற வீதத்தில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில், நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் நிகழாத மட்டத்தில் உச்சபட்சமாக பதிவாகியுள்ளது. 2 மற்றும் 10 வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளை அடுத்து, 11 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் அதிகளவு நோய்தொற்றும் வீதத்தைக் கொண்டிருந்தனர்.

ஆனால், முழு யுரேசிய நிலப்பரப்பிலும் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு ரஷ்யாவாகும், இங்கு முன்னெப்போதும் பதிவாகாத உச்சபட்ச எண்ணிக்கையாக வியாழனன்று 36,000 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, அதேவேளை நாளாந்த இறப்பு எண்ணிக்கை 1,000 ஐ எட்டியுள்ளது.

தொற்றுநோயின் நீண்டகால உலகளாவிய மையமாகவுள்ள அமெரிக்காவில், வியாழக்கிழமை மேலும் 1,626 பேர் கோவிட்-19 ஆல் இறந்தமை உத்தியோகபூர்வ அமெரிக்க இறப்பு எண்ணிக்கையை 755,497 ஆக அதிகரிக்கச் செய்துள்ளது. என்றாலும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி, பதிவு செய்யப்படாத இறப்புக்களும் உட்பட, உண்மையான இறப்பு எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கு அதிகமாகும்.

மருத்துவமனையில் சேர்க்கப்படாத கோவிட்-19 நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கடுமையான அபாயங்கள் வெளிப்படையாகத் தெரிகிறது. கோவிட்-19 நோயாளிகளில் மூன்று பேருக்கு ஒருவர் வீதம் பெரும்பாலும் செயல் திறன், அறிவாற்றல் செயலாக்க வேகம், மற்றும் நினைவக நினைவுகூரல் ஆகியவை தொடர்புபட்ட நீடித்த நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றன.

வடக்கு அரைக்கோளப் பகுதி நாடுகளில் இலையுதிர் மற்றும் குளிர் காலங்களின் தொடக்கத்தில் நோய்தொற்றுக்கள் வெடித்துப் பரவும் என எதிர்பார்க்கப்பட்ட அதேவேளை, lta மாறுபாட்டை விட மிகுந்த ஆபத்துள்ள மற்றும் எளிதில் தொற்றக்கூடிய SARS-CoV-2 இன் புதிய பிறழ்வுகளால் தற்போதைய நோய்தொற்று எழுச்சி தூண்டப்படுவது குறித்து விஞ்ஞானிகள் அதிகரித்தளவில் கவலைப்படுகிறார்கள்.

இங்கிலாந்தில் 10 சதவீதம் வரையிலான நோய்தொற்றுக்கள் டெல்டாவின் துணை வகையான AY.4.2 என்பதன் மூலம் உருவாகின்றன, இதனை ஊடகங்கள் “டெல்டா பிளஸ்” என்று குறிப்பிடுகின்றன.

கேம்பிரிட்ஜில் உள்ள வெல்கம் சாங்கர் நிறுவனத்தின் கோவிட்-19 மரபியல் முயற்சிக்கான இயக்குநர் ஜெஃப்ரி பாரெட் உம், மற்றும் பல்கலைக்கழக கல்லூரி லண்டன் மரபியல் நிறுவனத்தின் இயக்குநர் பிரான்சுவா பலூ உம், AY.4.2 துணை மாறுபாடு அசல் டெல்டா மாறுபாட்டை விட 10 முதல் 15 சதவீதம் அதிகம் தொற்றும் தன்மை கொண்டதாகத் தெரிகிறது என பைனான்சியல் டைம்ஸூக்கு தெரிவித்தனர்.

“ஆரம்பகட்ட ஆதாரங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள போதிலும், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து AY.4.2 வகை மிகவும் தொற்றக்கூடிய கொரோனா வைரஸ் மாறுபாடாக உள்ளது,” என்று பலூ வை மேற்கோள் காட்டி, பைனான்சியல் டைம்ஸ் எழுதியுள்ளது.

கோவிட்-19 இன்னும் வளர்ச்சியடைந்து மேலும் அதிக தொற்றும் தன்மையுள்ளதாக மாறக்கூடிய கணிசமான திறன்களைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு நிபுணர் கிறிஸ்டியன் ஆண்டர்சன், “இந்த வைரஸ் முடிந்து போவதற்கான அறிகுறி எதையும் நான் பார்க்கவில்லை” என்று இந்த வாரம் வாஷிங்டன் போஸ்ட் க்கு தெரிவித்தார். மேலும், “இந்த வைரஸ் அதனால் முடிந்த அளவிற்கு பரவக்கூடியது என்றும் நான் நினைக்கவில்லை” என்றும் கூறினார்.

ஆனால், உலகம் முழுவதிலும் நோய்தொற்றுக்கள் வெடித்து பரவினாலும் கூட, அரசாங்கங்கள் நோய்தொற்று பரவலை தடுப்பது தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட்டு வருகின்றன.

இந்த மாதம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் அனைத்தும், நோய் பரவலை முற்றிலும் ஒழிப்பதற்கான “பூஜ்ஜிய கோவிட்” உத்திகளிலிருந்து விலகவிருப்பதாக அறிவித்துள்ளன. இதன் விளைவாக சிங்கப்பூரில், ஜூலை மாதத்தில் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது தற்போது நாளாந்தம் 3,000 க்கும் அதிகமாகும் அளவிற்கு அங்கு நோய்தொற்றுக்களின் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பல மாதங்களாக, அமெரிக்கா மற்றும் உலகளவிலான ஊடகங்கள், கோவிட்-19 தொற்றுநோய் தானாகவே போய்விடும் என்பதால், பருவகால காய்ச்சலைப் போல அதனையும் “சமாளிக்க” முடியும் என்று வலியுறுத்தியுள்ளன. பங்குச் சந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் முயற்சிகளால் முற்றிலும் தூண்டப்பட்ட இந்த கூற்றுக்கள் மோசடியானதே என்பது மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சமீபத்திய நோய்தொற்று எழுச்சி, கோவிட்-19 ஐ தீவிர அவசர நடவடிக்கைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லையானால், அது தொடர்ந்து பாரியளவில் உயிர்களை பலி கொள்ளும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

தடுப்பூசிகள் பரவலாக கிடைக்கின்ற போதிலும், தொற்றுநோயின் மீளெழுச்சி, கோவிட்-19 தொற்றுநோயுடன் சமூகம் “வாழ” முடியாது, மாறாக உலகம் முழுவதிலும் பரவியுள்ள இந்த நோயை ஒழிக்கும் சாத்தியமுள்ளதால் அவற்றை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்திய விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் எச்சரிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளது.

இந்த நிலைமைகள், உலக சோசலிச வலைத் தளத்தால் நடத்தப்படும் “தொற்றுநோயை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது,” என்ற இணையவழி நிகழ்வின் முக்கியமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, இந்த நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார நிபுணர்களை, கொள்கையில் மாற்றத்திற்காக போராட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி ஒழுங்கமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பெற்றோருடன் ஒன்றிணைக்கும்.

சமீபத்திய விஞ்ஞானத்தின் முழுமையான விவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த இணையவழி கருத்தரங்கம், கோவிட்-19 பரவுவதைத் தடுப்பது மற்றும் அதனை முற்றிலும் ஒழிப்பதன் மூலம் இறுதியில் நோய்தொற்றை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை வெளிப்படையாக எடுக்கத் தூண்டும்.

இணையவழி கருத்தரங்கத்தில் பங்குபற்ற இங்கே பதிவு செய்யவும்.

Loading