மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஒரு வாரத்திற்கு முன்னர், அக்டோபர் 24, 2021 இல், உலக சோசலிச வலைத் தளமும், சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC) “இந்த பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது?” என்ற தலைப்பில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இணையவழி கருத்தரங்கை நடத்தின. இப்புவி கண்டங்களில் 100 க்கும் அதிகமான நாடுகளில் 10,000 க்கும் அதிகமானவர்களால் இப்போது பார்வையிடப்பட்டுள்ள அந்த நிகழ்வு, கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸை உலகளவில் அகற்றுவதற்கு அறிவுறுத்தி உள்ள விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்தது.
அந்த இணையவழி கருத்தரங்கின் அறிக்கைகள் இந்த பெருந்தொற்றின் தற்போதைய நிலை பற்றியும், எவ்வாறு அந்த வைரஸ் காற்றுத்துகள் வடிவில் பரவுகிறது, நீண்ட கோவிட் நோயின் பாதிப்புகள், அந்த வைரஸ் பரவலில் பள்ளிகள் வகிக்கும் பாத்திரம், உலகளவில் அந்த வைரஸை அகற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் விவரித்தது. கோவிட்-19 ஆல் உலகளவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை முற்றிலும் தடுத்திருக்கக் கூடியவை என்பதை அந்த நிகழ்வு தெளிவுபடுத்தியது. ஒவ்வொரு அறிக்கையும் இப்போது உலக சோசலிச வலைத் தளத்தில்பார்வைக்குரிய வடிவில் கிடைக்கிறது.
அந்த நிகழ்வை அறிமுகப்படுத்திய உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், கோவிட்-19 ஆல் தொடர்ந்து நடந்து வரும் உலகளாவிய பாரிய இறப்புகளைப் பெருநிறுவன ஊடகங்கள் மூடிமறைப்பதைக் கண்டனம் செய்ததோடு, “தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பேரழிவின் யதார்த்தத்தை எதிர் கொண்டிருக்கையில், கோவிட் ஒரு ‘பெருந்தொற்று’ மட்டுமல்ல, மாறாக ‘சமூக மனிதப்படுகொலையின்’ ஒரு வடிவம் என்று எந்தக் கட்டத்தில் குறிப்பிடத் தொடங்குவது அவசியமாகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
அடுத்த ஐந்து நாட்களிலேயே, அந்த புள்ளி எட்டப்பட்டு விட்டதாக கூறலாம். வெள்ளிக்கிழமை, கோவிட்-19 இன் உத்தியோகபூர்வ உலகளாவிய இறப்பு எண்ணிக்கை ஐந்து மில்லியனைக் கடந்தது. இந்த புள்ளிவிபரங்கள், அதனளவில் கொடூரமாக இருந்தாலும், பெரிதும் குறைந்த எண்ணிக்கையாகவே அறியப்படுகிறது. உலகளாவிய இறப்பு எண்ணிக்கை பெரும்பாலும் மலைப்பூட்டும் அளவுக்கு 16.7 மில்லியனாக இருக்கலாம் என்று The Economistஇன் அதிகப்படியான உயிரிழப்புகளைக் கணக்கிடும் முறை மதிப்பிடுகிறது, இது ஏறக்குறைய முதலாம் உலகப் போரின் உலகளவிலான இறப்பு எண்ணிக்கைக்கு சமமாகும். ஒவ்வொரு வாரமும் இப்போது கோவிட்-19 ஆல் கிட்டத்தட்ட 200,000 பேர் இறப்பதாக அந்த கணக்கிடும் முறை மதிப்பிடுகிறது.
நடந்து வரும் பாரிய வெகுஜன மரண அலைக்கு மத்தியில், உலகெங்கிலுமான அரசாங்கங்கள், சமூகம் 'வைரஸூடன் வாழ கற்று' கொள்ள வேண்டும் என்ற கொடூர மந்திரத்துடன், கோவிட்-19 பரவலைக் குறைப்பதற்காக உள்ள எஞ்சிய எல்லா நடவடிக்கைகளையும் நீக்கி வருகின்றன. சாமாந்தரமான இரண்டு நிகழ்முறைகள் கட்டவிழ்ந்து வருகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளைக் கொண்டிருந்த நாடுகள் இப்போது அவை அனைத்தையும் நீக்கி வருகின்றன, அதேவேளையில் இந்த வைரஸை அகற்றும் நோக்கில் மிகவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் அந்த வைரஸ் சமூகத்தில் பரவட்டும் என்ற பெருகிய அழுத்தங்களுக்கு அவற்றை விட்டுக் கொடுத்து வருகின்றன.
முன்னர் கோவிட்-19 ஐ நீக்கிய ஆசிய-பசிபிக் எங்கிலுமான நாடுகள் வேகவேகமாக எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கி வருகின்றன. திங்கட்கிழமையில் இருந்து, தென் கொரியா 'படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும்' முதல் கட்டத்திற்குள் உத்தியோகபூர்வமாக நுழைய உள்ளது. சிங்கப்பூரில், ஒரு நாளைக்கு 50 க்கும் குறைவான நோயாளிகளைப் பதிவு செய்த அந்நாடு வெறும் இரண்டு மாதங்களில் இப்போது ஏழு நாள் சராசரியாக 3,707 உத்தியோகபூர்வ நாளாந்த நோயாளிகளைக் காண்கிறது. அக்டோபர் ஆரம்பத்தில் இருந்து அகற்றும் மூலோபாயத்தைக் கைவிட்ட நியூசிலாந்தில், இப்போது நாளொன்றுக்கு சராசரியாக 104 புதிய நோயாளிகள் பதிவாகிறார்கள் என்பதோடு இது அதிகரித்தும் வருகிறது. சீனா அதன் அகற்றும் மூலோபாயத்தைக் கைவிட்டு, உலகளாவிய வினியோகச் சங்கிலி நெருக்கடியைத் தீர்க்க அதன் எல்லைகளை மீண்டும் திறந்து விடுமாறு நிதி மூலதனம் அதிகரித்தளவில் அழுத்தமளித்து வருகிறது, இது 1.4 பில்லியன் பேரை இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கக்கூடும்.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும், புதிய கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கின்றன அல்லது குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் மீண்டுமொரு முறை அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, உக்ரேன், துருக்கி மற்றும் ஜேர்மனி ஆகியவை இப்போது உலகளவில் மொத்த உத்தியோகபூர்வ புதிய நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டுள்ளன.
ஜேர்மனியில், நோயாளிகள் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வந்தாலும், அந்த அரசாங்கம் எந்த பொது சுகாதார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க மறுக்கிறது. அமெரிக்காவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 65,000 ஐ எட்டியுள்ள நிலையில், மற்றொரு அதிகரிப்பு விளிம்பில் முளை விட்டு வருகின்ற நிலையில், அங்கே சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் நவம்பர் 8 இல் முழுமையாக நீக்கப்பட உள்ளன. அமெரிக்கா எங்கிலும் தொடர்ந்து நிலையாக அதிக விகிதங்களில் பரவல் இருப்பதால், அங்கே ஏற்கனவே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியிலேயே உத்தியோகபூர்வமாக 13,799 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த தரவுகளை மூடிமறைத்துள்ள புளோரிடா மற்றும் மற்ற மாநிலங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.
உலக சோசலிச வலைத் தளத்தின் முந்தைய ஆகஸ்ட் 22 இணையவழி கருத்தரங்கில், நியூசிலாந்தின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் பேக்கர் இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் நிர்வாகத்தின் பள்ளிகளை மீண்டும் திறக்கும் கொள்கைகளை 'மூர்க்கமான பரிசோதனை' என்று கண்டனம் செய்தார். இதே போன்ற அறிக்கைகள் அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்கிலும் பல விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்டன. டாக்டர் தீப்தி குர்தாஸ்னி பிரிட்டன் கொள்கைகளை 'அப்பட்டமான குற்றம்' என்று குறிப்பிட்டார், இந்த வைரஸின் காற்றுவழி பரவலை ஒப்புக் கொள்வது 'சௌகரிய' குறைச்சலை ஏற்படுத்தும் என்பதால் அதை ஒப்புக் கொள்ள மறுக்கும் உலக அரசாங்கங்களை டாக்டர் Jose-Luis Jimenez கண்டனம் செய்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி மற்றும் ஜேர்மனி, அத்துடன் பிரேசில், இந்தியா மற்றும் பல நாடுகளில், மத்திய அரசாங்கங்களும் மாநில அரசாங்கங்களும் மனித உயிர்களை விலையாக கொடுத்தாலும் முதலாளித்துவ உற்பத்தியை முழுமையாக மீண்டும் தொடங்குவதற்காக ஏறக்குறைய ஒவ்வொரு தணிப்பு நடவடிக்கையையும் கைவிட்டுள்ளன. கிரேட் பாரிங்டன் பிரகடனத்தில் விவரிக்கப்பட்ட போலி-விஞ்ஞான 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயத்தைப் பின்பற்றி, இந்த அரசாங்கங்கள் வேண்டுமென்றே மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ளன. சாராம்சத்தில், ஜேர்மனியின் நாஜி ஆட்சிக்குப் பின்னர் பார்த்திராத பாசிசவாத சமூக மனிதப்படுகொலைக் கொள்கையை அவை பின்பற்றி வருகின்றன. இந்த கொள்கைகளுக்குப் பொறுப்பான ஒவ்வொரு அரசியல்வாதியும், அவற்றின் நடவடிக்கைகளுக்குக் கட்டளையிடும் பெருநிறுவன நலன்களும் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளும், குற்றவியல் வழக்குகளில் இழுக்கப்பட வேண்டும்.
வலதுசாரி போரிஸ் ஜோன்சன் நிர்வாகத்தின் தலைமையில், இங்கிலாந்து, இந்த உலகளாவிய செயல்முறையை மிகவும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. 'குழந்தைகள் மத்தியில் கோவிட் ஐ பரவ விடுவது காலமுறைதோறும் பருவமடைந்தவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்' என்று பொய்யாக வாதிட்டு, ஏராளமான குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படுத்துவதற்காக எந்த தணிப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் பள்ளிகளைத் திறக்கும் ஒரு கொள்கையை, தடுப்பூசி மற்றும் நோயெதிர்ப்பு சக்திக்கான கூட்டுக் குழு நனவுபூர்வமாக நிறைவேற்றியதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
2020 இல் முதலாளித்துவ அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கை முதியவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுத்துவதாக இருந்தது. பெற்றோர்களை மீண்டும் வேலைக்கு அனுப்புவதற்காக ஒவ்வொரு இடத்திலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதுடன், 2021 இல், குழந்தைகள் முதன்மை இலக்காக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 2022 இல் உலகெங்கிலும் பில்லியன் கணக்கானவர்களுக்கு நோய்தொற்றும் மறுநோய்தொற்றும் ஏற்படும் வகையில் சமூகத்தில் அனைவருக்கும் பரவ இப்போது களம் அமைக்கப்படுகிறது. உலக மக்களில் 38.5 சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலைமைகளின் கீழ், இத்தகைய கொள்கைகள் உலகளவில் இன்னும் மில்லியன் கணக்கானவர்களைக் கொல்ல அச்சுறுத்துகின்றன.
இந்த பெருந்தொற்றின் போது உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்கள் பின்பற்றிய குற்றகரமான கொள்கைகள், முதியவர்களுக்கான ஓய்வூதிய கடமைப்பாடுகள் மற்றும் சமூக செலவினங்களைக் குறைப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஆயுட்காலத்தைக் குறைக்க அறிவுறுத்தும் ஆளும் உயரடுக்கின் பிரிவுகளின் நீண்டகால நோக்கங்கள் நடைமுறைப்படுத்துவதை பிரதிநிதித்துவம் செய்கின்றன. 2014 இல், ஒபாமா நிர்வாகத்தின் கட்டுப்படியாகின்ற மருத்துவக் கவனிப்பு சட்டத்தின் முன்னனி கட்டமைப்பாளர்களில் ஒருவரான Ezekiel Emanuel, வருமான அடிப்படையில் மருத்துவச் சிகிச்சையைப் பங்கிட்டு ஒதுக்க வேண்டும் என்றும், அதேவேளையில் மருத்துவ பரிசோதனைகளின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தக் கூடாதென்றும் அழைப்பு விடுத்தார். பைடென் நிர்வாகத்தின் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பணிக்குழு ஜனவரியில் கலைக்கப்படும் வரையில், இமானுவல், அதன் ஓர் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.
ஆகஸ்ட் 20 இல் உலக சோசலிச வலைத் தளம் விவரித்தவாறு, இந்த பெருந்தொற்றை நோக்கிய மூலோபாயங்களுக்கு இடையிலான பிளவுகோடுகள் மிகத் தெளிவாகி உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவ வர்க்கம் ஒன்று மில்லியன் கணக்கானவர்களைக் கொல்வதற்கான ஒரு வார்த்தை ஜாலமான 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தைப்' பின்தொடர்கிறது, அல்லது வலிநிவாரணி மருத்துவ முறைக்கு (palliative care) நிகரான அல்லது உலக மக்களை மருத்துவக் கவனிப்புக்குள் கொண்டு வைக்கும் தணிப்பு நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுவதைப் பின்பற்றுகின்றன. இவ்விரு கொள்கைகளுமே, மில்லியன் கணக்கானவர்கள் அவசியமின்றி உயிரிழப்பார்கள் மற்றும் ஆண்டுக்கு ஆண்டு நீண்டகால மருத்துவ பாதிப்புகளில் பாதிக்கப்படுவார்கள் என்ற குறிப்பிடப்படாத அனுமானத்துடன், ஏற்கனவே SARS-CoV-2 பகுதிசார் தொற்றுநோயாக (endemic) ஆகி உள்ளது அல்லது தவிர்க்கவியலாத ஒன்றாக ஆகிவிடும் என்ற விதிவழி அனுமானத்தை ஏற்கின்றன.
பாரிய மரணம் மற்றும் சமூக துயரங்களின் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான சமரசத்திற்கிடமற்ற எதிர்ப்பில், தொழிலாள வர்க்கம் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக SARS-CoV-2 ஐ உலகளவில் அகற்றுவதற்கான ஒரு கொள்கையை அதிகரித்தளவில் முன்னெடுத்து வருகிறது. இதில், உலக மக்களுக்கு விரைவாக தடுப்பூசி இடுவதற்காக மருந்து தயாரிப்பு ஏகபோக நிறுவனங்களைத் தேசியமயமாக்குவது; நோய்தொற்றுக்கு ஆளாகி இருக்கக் கூடியவர்களைத் தனிமைப்படுத்துவது மற்றும் பரவல் சங்கிலியைக் கண்டறிந்து துண்டிப்பதற்காக நோய்தொற்று ஏற்பட்டவர்களைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்துவது; பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வேலையிடங்களைத் தற்காலிகமாக மூடுதலும், அதில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் சிறுவணிகர்களுக்கு நிதி மற்றும் சமூக உதவிகளை வழங்குவது; கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் எல்லை நிர்வாகம்; அனைவரும் முகக்கவசம் அணிதல், மேம்பட்ட காற்றோட்ட வசதி மற்றும் அத்தியாவசிய வேலையிடங்களில் நோய்தொற்றுக்களைக் குறைக்க அவசியமான ஏனைய எல்லா முறைகளையும் நடைமுறைப்படுத்துவது ஆகியவை உள்ளடங்கும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்துமே நிதிய தன்னலக்குழுவிற்குச் சேவையாற்றும் முதலாளித்துவ உலக அரசாங்கங்களுக்கு வெறுப்பூட்டுவதாக உள்ளன. பெருநிறுவனக் கடன் மற்றும் நிதியமயமாக்கலின் முன்னோடியில்லாத வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்த்தால், நோயாளிகளின் எண்ணிக்கையைப் பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வரத் தேவையான குறைந்தபட்ச கால அவகாசத்திற்குக் கூட—டாக்டர் Malgorzata Gasperowicz மதிப்பிடுவதைப் போல வெறும் ஆறில் இருந்து ஒன்பது வாரங்கள் கூட—அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக மற்றும் பங்குச் சந்தையின் ஒரு பொறிவைத் தூண்டும் என்பதாக உள்ளது.
உலக சுகாதார வலையமைப்பு 'பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய உச்சிமாநாட்டை' இரண்டாவது முறையாக நவம்பர் 3-4 இல் ஏற்பாடு செய்கிறது. இந்நிகழ்வில் விஞ்ஞானிகள் தலைமையிலான தொடர்ச்சியான அமர்வுகள் இடம்பெறும் என்பதோடு, இந்த பெருந்தொற்று சம்பந்தமாக பல்வேறு அம்சங்கள் உள்ளடங்கி இருக்கும். சிலர் தணிப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்துவார்கள், அதேவேளையில் இன்னும் சிலர் கடந்த வாரம் லான்செட் இதழில் அக்குழு பிரசுரித்த ஓர் அறிக்கையில் விவரித்தவாறு உலகளவில் அதை அகற்றுவதை அறிவுறுத்துவார்கள்.
நிச்சயமாக பலரின் விளக்கப்படங்களில் இடம்பெறக்கூடிய அந்த குழுவினது அறிக்கையின் அடிப்படை பிழை என்னவென்றால், முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனங்களின் வழிகளை மாற்றுவதற்கு அவற்றுக்கு அழுத்தமளிப்பதன் மூலமாக உலகளவில் SARS-CoV-2 அகற்றுவதற்கு அவசியமான கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்கிறது. “தனிநபர் மட்டத்திலும், உள்ளூர், தேசிய மட்டங்களிலும் மற்றும் சர்வதேச மட்டங்களிலும் நல்லிணக்க கூட்டு நடவடிக்கைக்கு' அறிவுறுத்தும் அதேவேளையில், அக்குழுவின் அறிக்கை தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே சமூகத்தில் உள்ள அடிப்படை வர்க்க பிளவை விவரிக்கத் தவறிவிடுகிறது. ஆளும் வர்க்கத்தின் நிதிய நலன்கள் மீது ஒரு நேரடி தாக்குதல் தொடுக்காமலும், இந்த சிறிய சிறுபான்மை குவித்து வைத்துள்ள பரந்த செல்வ வளத்தைப் பறிமுதல் செய்யாமலும், இந்த பெருந்தொற்றை நிறுத்த முடியும் என்ற கருத்து, வெறும் சித்தபிரமையாகும்.
இந்த பெருந்தொற்றுக்கு எதிராக விஞ்ஞானிகள் மட்டுமே போராட முடியாது என்பது உலக சோசலிச வலைத் தளத்தின் அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்களில் கூறப்பட்ட இன்றியமையா புள்ளிகளில் ஒன்றாகும். தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு இல்லாமல், விஞ்ஞானிகளின் நடவடிக்கை வெறும் கல்விக்கூட அரங்கங்களிலும் அவர்களின் ஆய்விதழ்களிலும் மட்டுமே மட்டுப்பட்ட பரவலுடன் முடங்கிவிடும். யதார்த்தம் என்னவென்றால், அனைத்து பாலினம், இனங்கள், இனவழிகள் மற்றும் தேசியங்களைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை பலத்தைப் பாரியளவில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே உலகளவில் அகற்றுவதற்கான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்களில் அவரின் அறிமுக உரையில் டேவிட் நோர்த் பின்வரும் ஐந்து புள்ளிகளை வலியுறுத்தினார்:
- கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் Sars-CoV-2 இன் இலக்கு தனிநபர்கள் அல்ல, மாறாக அது ஒட்டுமொத்த சமூகத்தையும் குறி வைக்கிறது. அந்த வைரஸ் பரவும் விதம் பாரிய நோய்தொற்று ஏற்படுவதை நோக்கி உள்ளது. Sars-CoV-2 பில்லியன் கணக்கானவர்களைத் தாக்க உயிரியல்ரீதியில் பரிணமித்துள்ளது, அவ்விதம் செயல்படுகையில் மில்லியன் கணக்கானவர்களை உயிரிழக்கச் செய்கிறது.
- எனவே, ஒவ்வொரு கண்டத்திலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் இந்த வைரஸை அகற்றுவதை இலக்காகக் கொண்ட ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாயமே ஒரே பயனுள்ள மூலோபாயமாகும். இந்த பெருந்தொற்றுக்குப் பயனுள்ள ஒரு தேசிய தீர்வு எதுவும் கிடையாது. ஒட்டுமொத்த
- மனிதகுலமும்—அனைத்து இனங்களும், இனவழிகளும் மற்றும் அனைத்து தேசியத்தை சார்ந்தவர்களும்—சுயநலமின்றி ஓர் உண்மையான பரந்த உலகளாவிய கூட்டு முயற்சியின் மூலம் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் இதிலிருந்து கடந்து செல்ல வேண்டும்.
- இந்த பெருந்தொற்று வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களும் பின்பற்றும் கொள்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும். சமூகக் கொள்கையின் கேள்விக்கிடமற்ற முன்னுரிமையாக இருக்க வேண்டியதை, அதாவது மனித உயிர்களின் பாதுகாப்பை, பெருநிறுவன இலாப நலன்கள் மற்றும் தனியார் செல்வக் குவிப்புக்கு அடிபணிய செய்வதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.
- உலகளவில் அகற்றுவதை நோக்கி ஒரு தீர்க்கமான மூலோபாய திருப்பத்தை கொண்டு வரும் முன்முயற்சி, மில்லியன் கணக்கானவர்களின் சமூகரீதியில் நனவான இயக்கத்திலிருந்து வர வேண்டும்.
இந்த உலகளாவிய இயக்கம் விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சியை உள்ளீர்த்திருக்க வேண்டும். விஞ்ஞானிகள் பலர் அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்களின் உயிரையே கூட ஆபத்தில் வைத்து உழைக்கிறார்கள், அந்த விஞ்ஞானிகள் துன்புறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்த வைரஸை உலகளவில் அகற்றுவதற்கு சமூகத்தின் மிகப் பரந்த தொழிலாள வர்க்கத்திற்கும் விஞ்ஞான சமூகத்திற்கும் இடையே நெருக்கமான கூட்டுழைப்பு அவசியப்படுகிறது.
இவை இந்த பெருந்தொற்றைத் தடுக்க தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய ஒரு பாரிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் கொள்கைகளாக மாற வேண்டும். அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்களில் பங்கேற்ற விஞ்ஞானிகளும் தொழிலாளர்களும் கோவிட்-19 ஐ உலகளவில் அகற்றுவதற்கான கருத்தைப் பெருவாரியாக முன்வைத்தார்கள், மேலும் அவர்களின் அறிக்கைகள் மகத்தான மற்றும் நீடித்த மதிப்பைக் கொண்டுள்ளன. இந்த நிகழ்வில் விரிவாக விளக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளாலும், இளைஞர்களாலும் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மிகவும் முற்போக்கான பிரிவுகளாலும் உள்ளீர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
உலகம் முழுவதும் இந்த பெருந்தொற்று கொள்கைகளை உந்திய சமூக நலன்களைப் பற்றி தொழிலாள வர்க்கத்திற்குக் கல்வியூட்டுவதற்காக, இந்த சமூக மனிதப்படுகொலை குற்றத்தைச் செய்துள்ளவர்கள் அனைவரும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அடிப்படையில், இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான போராட்டம் உலகெங்கிலுமான தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக ஒவ்வொரு நாட்டின் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் எடுக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காக தான் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணி நிறுவப்பட்டது, இது இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய போராட்டங்களை ஒருங்கிணைக்கும் மைய அச்சாணியாக சேவையாற்றும்.
உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்க அமைப்புக்களின் ஓர் ஒருங்கிணைந்த வலையமைப்பின் அபிவிருத்தியானது, சுரண்டல், சமத்துவமின்மை, போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை இணைப்பதற்காக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச அரசியல் தலைமையை, அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவைக் கட்டியெழுப்புவதுடன் இணைக்கப்பட வேண்டும்.