மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த வாரம் Aspen பாதுகாப்பு மன்றத்தில் பேசிய அமெரிக்க கூட்டுப்படைத் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, சீனாதான் முதலாவது அமெரிக்க பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக குறிவைத்தார். மற்றும் தைவான் மீது போர் ஏற்படுவதற்கான காலக்கெடுவை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்தார்.
மில்லியின் கருத்துக்கள் வாஷிங்டனில் உள்ள உயர்மட்ட இராணுவம், உளவுத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் நடைபெறும் விவாதத்தை தெளிவாக பிரதிபலிக்கின்றன. கடந்த தசாப்தத்தில், ஒபாமா, ட்ரம்ப் மற்றும் இப்போது பைடென் ஆகியோர், அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்தை அது அச்சுறுத்துவதைத் தடுக்கும் நோக்கில், சீனாவுடன் பெருகிய முறையில் பொறுப்பற்ற மோதல்களை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளனர்.
சீனாவைப் பற்றிப் பேசுகையில், மில்லி பின்வருமாறு புகார் கூறினார்: 'இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 இல் நடைமுறைக்கு வந்த தாராளவாத விதிகள் எனப்பட்டவற்றின் அடிப்படையிலான ஒழுங்கு என்று அழைக்கப்படுவதை அவர்கள் சவால் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் அதை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள். ஆனால் சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு என்ற நன்கு அறியப்பட்ட வார்த்தை அமெரிக்காவால் நிறுவப்பட்ட போருக்குப் பிந்தைய சர்வதேச கட்டமைப்பைக் குறிக்கிறது. அதில் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு ஏற்றவாறு விதிகளை அது அமைத்தது.
மில்லியின் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், சீனா, அதன் பொருளாதாரத்தின் பாரிய அளவு மற்றும் எரிசக்தி, மூலப்பொருள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றின் தேவையால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆதிக்கத்தில் உள்ள உலகத்துடன் மோதலுக்கு வருகிறது. மேலும், பொருளாதாரரீதியில் போட்டியிடும் வகையில், ட்ரம்ப் மற்றும் பைடென் இருவருமே தடுக்க முயன்ற உயர் தொழில்நுட்ப தொழிற்துறைகளை மேம்படுத்த சீனா நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
தைவான் தொடர்பாக சீனாவுடனான அமெரிக்க பதட்டங்கள் குறித்து மில்லி கவனம் செலுத்தினார். அவை ட்ரம்ப்பால் தீவிரப்படுத்தப்பட்டு பைடெனின் கீழ் விரைவாக முன்னணிக்கு வந்துள்ளன. மார்ச் மாதம், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் பதவியைவிட்டு வெளியேறும் தலைவரான அட்மிரல் பில் டேவிட்சன், ஆறு ஆண்டுகளுக்குள் சீனாவுடன் போருக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் தைவான் மீது சீன இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று மில்லி கூறினார். இது அமெரிக்க இராணுவம் ஒரு குறுகிய காலத்திற்குள் போருக்குத் தயாராக வேண்டும் என்பதை பரிந்துரைப்பதையே எடுத்துக்காட்டுகின்றது. அவர் மேலும் கூறினார்: 'எனினும், சீனர்கள் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவ்வாறான மோதலை தேர்வு செய்தால், தேசியத் தலைமையின் தேர்வுக்கு தேவையானதை வழங்குவதற்கான திறனை தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் உருவாக்குகிறார்கள்.'
'இந்த உலகம் கண்ட உலக பூகோள மூலோபாய அதிகாரத்தின் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றை நாங்கள் காண்கிறோம்.' என்று மில்லி கூறினார். சீனாவுடனான அமெரிக்க ஆயுதப் போட்டியின் பரந்த தீவிரப்படுத்தலை முன்னறிவிக்கும் ஒரு அறிக்கையில், அவர் அறிவித்தார்: 'அமெரிக்க இராணுவமாகிய நாம், எதிர்வரும் 10 முதல் 20 ஆண்டுகளில் ஒரு அடிப்படை மாற்றத்தை நாமே செய்யவில்லை என்றால், நாங்கள் மோதலின் தவறான பக்கத்தில் இருக்கப் போகிறோம்'.
சீனாவின் புதிய அணுசக்தி திறன் கொண்ட ஒலியைவிட வேகமான ஏவுகணை பரிசோதனையை மில்லி முன்னிலைப்படுத்திய அதே வேளையில், சீனா பற்றிய சமீபத்திய வருடாந்த பென்டகன் அறிக்கை, தசாப்தத்தின் இறுதிக்குள் 1,000 அணு ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட விநியோக அமைப்புகளைக் கொண்டிருக்கும் என்று பரிந்துரைத்தது. 5,550 போர்க்கப்பல்கள் கொண்ட அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியம் இப்போதும் அதன் எதிர்கால அளவிலும் சீனாவை சிறிய ஒன்றாக்கினாலும் ஏற்கனவே சாதனையான அளவிலுள்ள பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்திற்கு பெரிய அதிகரிப்புக்கான பென்டகனின் வாதத்திற்கு இவை அனைத்தும் ஊட்டமளிக்கிறது.
சீனாவுடனான அமெரிக்கப் போருக்கு தைவான் மிகவும் ஆபத்தான வெடிப்பு புள்ளியாக வெளிப்பட்ட வேகம் அதன் மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இராணுவரீதியில், இது ஜப்பான் வழியாக தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் வரை பரவியிருக்கும் முதல் தீவுச் சங்கிலியின் ஒரு முக்கிய பகுதியாகும். இதனை அமெரிக்க மூலோபாயவாதிகள் சீனக் கடற்படையை சுற்றிவளைப்பதற்கும், ஒரு பொருளாதார முற்றுகையை உருவாக்கவும் மற்றும் எந்தப் போரிலும் ஒரு முன் அரணாகவும் செயல்படுத்தலாம் என கருதுகின்றார்கள். பொருளாதார ரீதியாக, தைவான் குறைகடத்தி (Semiconductor) உற்பத்தி நிறுவனத்தின் தாயகமாக உள்ளது. இது பொருளாதார மற்றும் இராணுவ பயன்பாடுகளைக் கொண்டுள்ள உலகின் அனைத்து மிகமேம்பட்ட கணினி சில்லுகளையும் உற்பத்தி செய்கிறது.
அமெரிக்க செய்தி ஊடகமும் அரசியல் ஸ்தாபகமும் தைவான் மீதான 'சீன ஆக்கிரமிப்பு' பற்றி திரும்பத் திரும்ப பேசும் அதே வேளையில், வாஷிங்டன் தைவான் ஜலசந்தி முழுவதும் உள்ள ஆபத்தான நிலையை இன்னும் மோசமாக்குகின்றது. பைடென் நிர்வாகம் பெயரளவிற்கு அமெரிக்க-சீனா இராஜதந்திர உறவுகளின் அடிப்படையாக இருக்கும் 'ஒரே சீனா' கொள்கையை கடைபிடிக்கிறது. இது 1979 இல் அமெரிக்கா தைபேயுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டதன் பின்னர் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வாஷிங்டன் உண்மையில் தைவான் உட்பட சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கமாக பெய்ஜிங்கை அங்கீகரித்தது.
அதே நேரத்தில், அமெரிக்க காங்கிரஸ் 1979 தைவான் உறவுகள் சட்டத்தை நிறைவேற்றியது. இது தைவானுக்கு தற்காப்பு ஆயுதங்களை விற்கவும், தைபேயுடன் வரையறுக்கப்பட்ட முறைசாரா உறவுகளை பராமரிக்கவும் அமெரிக்காவிற்கு உறுதியளித்தது. அப்போதிருந்து, அமெரிக்க நடவடிக்கைகள் 'மூலோபாய தெளிவின்மை' என்று அழைக்கப்படுவதன் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அதாவது, சீனாவுடனான இராணுவ மோதலில் தைவானுக்கு ஆதரவளிக்க வாஷிங்டன் ஒரு தெளிவான உறுதிப்பாட்டை வழங்காது. சீனாவிலிருந்து முறையான சுதந்திரத்தை அறிவிப்பதில் இருந்து தைபேயைத் தடுப்பதே இதன் நோக்கமாக இருந்தது. தாய்வான் அவ்வாறு செய்யுமானால் தான் பலாத்காரத்துடன் பதிலளிப்பதாக பெய்ஜிங் பலமுறை தெரிவித்துள்ளது.
Aspen நிகழ்வில் பேசுகையில், காங்கிரஸின் உளவுத்துறைக் குழுவின் தலைவரான ஜனநாயகக் கட்சியின் முன்னணி நபரான ஆடம் ஷிஃப், ஆளும் வட்டாரங்களில் 'மூலோபாய தெளிவின்மை' கைவிடப்பட வேண்டும் என்ற கூக்குரலில் இணைந்து கொண்டார். 'தாய்வானை ஆக்கிரமித்து கைப்பற்ற முயற்சித்தால் அது எவ்வளவு கணிசமான விலையை கொடுக்க வேண்டும் என்பதை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவிற்கு நன்றாக தெளிவுபடுத்த வேண்டும்' என்று அவர் கூறினார்.
ஒரு மறைமுகமான ஏமாற்றும் விதத்தில், ஷிஃப் அறிவித்தார்: 'அதிக தெளிவின்மையை விட குறைவான தெளிவின்மை சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.' ஆனால், 'தைவானுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக சீனாவின் கருத்தை அல்லது கால அட்டவணையை விரைவுபடுத்தும் எந்த ஒரு அறிவிப்பையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை' என அவர் மேலும் கூறினார்.
உண்மையில், 'குறைவான தெளிவின்மை' நான்கு தசாப்தங்களாக அமெரிக்க-சீனா உறவுகளுக்கு அடித்தளமாக இருக்கும் நுட்பமான இராஜதந்திர சமப்படுத்தும் நடவடிக்கையை சீர்குலைக்கிறது. தெளிவின்மை அல்லது 'மூலோபாய தெளிவு' இல்லை என்பது தற்போதைய நன்கு அறியப்பட்ட வார்த்தையை பயன்படுத்துவதையே அர்த்தப்படுத்துகின்றது. அதாவது, சீனாவுக்கு எதிரான போரில் தைவானை ஆதரிப்பதற்கான நிபந்தனையற்ற அர்ப்பணிப்பாகும். 1979 இல் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் முதல் முறையாக தைவான் துருப்புக்களுக்கு பயிற்சி அளிக்க அமெரிக்க சிறப்புப் படைகளை தீவிற்கு அனுப்புவதன் மூலம் தைவானை ஏற்கனவே ஒரு இராணுவ தளமாக மாற்ற அமெரிக்கா தொடங்கியுள்ளது.
தைவானுக்கு 'பாறை போன்ற திடமான' ஆதரவை வழங்குவதற்கு ஆதரவாக 'மூலோபாய தெளிவின்மை' கொள்கையை கைவிடுவதற்கு பைடென் நிர்வாகம் ஏற்கனவே ஒரு பெரிய படியை எடுத்துள்ளது. கடந்த மாதம் நடந்த நகர மண்டபக் கூட்டத்தில், சீனா தாக்கினால் தைவானின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா வருமா என்று கேட்டதற்கு, பைடென் பின்வருமாறு 'ஆம், அதைச் செய்ய எங்களுக்கு உறுதி உள்ளது' என அறிவித்தார். கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று வெள்ளை மாளிகை 'தெளிவுபடுத்த' முயன்றாலும், 'மூலோபாய தெளிவின்மை' என்ற கேலிக்கூத்து பெருகிய முறையில் கைவிடப்படுகிறது.
தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது இராணுவ நட்பு நாடுகளினதும், மூலோபாய பங்காளிகளினது ஆதரவை திரட்டி வருகிறது. உயர்மட்ட விவாதங்களுக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று புதன்கிழமை தைவான் சென்றடைந்தது. பிரதிநிதிகள் குழுத் தலைவர் ரஃபேல் குளூக்ஸ்மான் தைவான் ஜனாதிபதி சாய் இங்-வெனிடம் “நீங்கள் தனியாக இல்லை. சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதில் ஐரோப்பா உங்களுடன் நிற்கிறது” என்ற ஒரு எளிய செய்தியுடன் வந்ததாகக் கூறினார்.
பெய்ஜிங்கில் இவை எதுவும் கவனிக்கப்படாமல் விடப்படப்போவதில்லை. இருப்பினும், சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அதிகரித்து வரும் போர் அபாயத்திற்கு எந்த முற்போக்கான பதிலையும் கொண்டிருக்கவில்லை. ஒருபுறம், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவதன் மூலம் மோதலை முடிவுக்கு கொண்டுவர முயல்கிறது. மறுபுறம், பேரழிவில் மட்டுமே முடிவடையும் ஒரு பயனற்ற ஆயுதப் போட்டியில் ஈடுபடுகிறது.
கடந்த வாரம் ஒரு தலையங்கத்தில், Global Times அபத்தமான முறையில் பெய்ஜிங் வசதியான இருக்கையில் உள்ளது. ஏனெனில் அதற்கு தைவானில் ஒரு போரைத் தூண்டும் அக்கறை இல்லை 'தைவான் ஜலசந்தியில் அமெரிக்காவே ஒரு போரை தூண்டுகின்றது' என்று எழுதியது. தலையங்கம் பெருமையாக: 'நீரிணைக்கு குறுக்கே ஒரு போரை நடத்தலாமா, போரின் அளவு என்னவாக இருக்கும், எப்படி எப்போது போராடுவது என்பது பற்றிய இறுதி முடிவு நம் கைகளில் உள்ளது' என்று கூறியது.
இதற்கு எதிர்மாறாக, தைவான் ஜலசந்தியில் ஒரு சிக்கலான அமைதியைக் பாதுகாத்து வரும் இராஜதந்திர நெறிமுறைகளை வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்துவதன் மூலம், பைடென் நிர்வாகம் சீனாவை முதல் நகர்வைச் செய்யத் தூண்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், போர் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்தி சீனாவை அதன் நலன்களுக்கு அடிபணிய வைப்பதில் உறுதியாக உள்ளது.
இரண்டு அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போருக்கான உந்துதலை நிறுத்துவதற்கான ஒரே வழி, பூகோள-மூலோபாய மோதலின் மூலகாரணமான முதலாளித்துவ அமைப்பை ஒழிக்க ஒரு ஒருங்கிணைந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிடுவது ஆகும்.