இலங்கை தொழிலாளர்கள் தனியார்மயமாக்கத்திற்கு எதிராக எவ்வாறு போராட வேண்டும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கை மின்சார சபை (இ.மி.ச.), இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினதும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த வாரம் கொழும்பு மற்றும் பிற நகரங்களில் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் காலியில் நடத்திய ஆர்ப்பாட்டம் [Credit: WSWS Media]

நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் முதுகில் சுமத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதலின் ஒரு பகுதியே இந்த தனியார்மயமாக்கல் நகர்வுகள் ஆகும்.

  • அரசுக்கு சொந்தமான வெஸ்ட் கோஸ்ட் கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள கெரவலப்பிட்டி எல்என்ஜி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை விற்க, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு, அரசுக்கு சொந்தமான இலங்கை மின்சார சபையின் 20,000 பேர் கொண்ட பலமான தொழிலாளர் படை கோருகின்றது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க நிறுவனம், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) உற்பத்தி செய்வதற்கும், இ.மி.ச.யின் தற்போதைய மற்றும் எதிர்கால எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்களுக்கும் எல்.என்.ஜி. வழங்குவதற்கும் உரிமை பெறும்.
  • சரக்கு சேவை விநியோக நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக சீன நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படும் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்திற்கு 13 ஏக்கர் காணி குத்தகைக்கு வழங்கப்படுவதை துறைமுக ஊழியர்கள் எதிர்க்கின்றனர். கொழும்பு துறைமுக மேற்கு சர்வதேச முனையத்தை நிர்மாணிப்பதற்காக இந்திய அதானி நிறுவனத்திற்கும் உள்ளூர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸிற்கும் முறையே 51 மற்றும் 34 வீத பங்குகளை இலங்கை துறைமுக அதிகார சபை வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுகங்கள் மற்றும் ஏனைய துறைமுக வசதிகளில் கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
  • நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் தேவைகளையும் இறக்குமதி செய்யவும், விநியோகிக்கவும், கலக்கவும் மற்றும் விற்கவும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், 1961 ஆம் ஆண்டு சட்டத்தை திருத்தும் அரசாங்கத் திட்டத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத் தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சுமார் 6,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சட்டம் திருத்தப்பட்டால், அது நிறுவனத்தை கலைப்பதற்கான முக்கிய படியாக இருக்கும். ஏற்கனவே, எரிபொருள் போக்குவரத்து மற்றும் விநியோகம் முகவர் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலையுடன், இந்த வார ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். எவ்வாறாயினும், போராட்டங்களை ஒழுங்கமைத்த தொழிற்சங்கங்கள் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எந்த நோக்கமும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் கடந்த காலங்களில் பலமுறை செய்ததைப் போல இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தவும், கலைக்கவும, இறுதியில் காட்டிக் கொடுக்கவும் உறுதியாக உள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பு இலங்கை மின்சார ஊழியர் சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு ஸ்ரீ லங்கா சுதந்திர ஊழியர் சங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பு தேசிய ஊழியர் சங்கம் ஆகிய சங்கங்களை உள்ளடக்கிய ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பினால், இ.மி.ச. தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் பெட்ரோலியத் துறைகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பிரதானமாக அதே கட்சிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் மின்சார ஊழியர்கள் நடத்திய போராட்டம் [Credit: WSWS Media]

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களைத் கைவிடச் செய்வதற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்ற மாயையை இவர்கள் அனைவரும் பரப்புகிறார்கள்.

'நாங்கள் வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்றாலும், இந்த போராட்டம் ஒரு சமிக்ஞை என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டு ஒப்பந்தத்தை திரும்பப் பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம்' என்று இ.மி.ச. தொழிற்சங்க முன்னணியின் தலைவர் ரஞ்சன் ஜயலால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கூறினார். “அரசாங்கத்தைக் கண்டு பயப்பட வேண்டாம், அதற்கு முதுகெலும்பு இல்லை, அதனால்தான் அவர்கள் ரகசியமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தை வாபஸ் பெறுவது குறித்து சிந்திக்க வெள்ளிக்கிழமை வரை அவகாசம் அளிப்போம்” என அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அரசாங்கம் கடுமையான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் உள்ளது. பாதீட்டுக்கு முண்டு கொடுப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் விற்க அது தீவிரமாக முயல்கிறது. அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத் தயாரிக்கும் அரச அதிகாரிகள், நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 14.7 என்ற உயர்ந்த சதவிகிதத்தில் இருந்து வெறும் 4.5 முதல் 5 சதவிகிதம் வரை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் கடந்த ஆண்டு பொருளாதாரம் சுருங்கியது. புலம்பெயர் தொழிலாளர்களின் பண வருகையும் ஏற்றுமதியும் குறைந்து போன அதே சமயம், சுற்றுலாத் தொழில் வீழ்ச்சியடைந்தது. ஒன்றரை மாத இறக்குமதியை ஈடுகட்ட மட்டுமே போதுமான 2 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவனி கையிருப்புடன், நாடு வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளிக்கிறது.

தனியார்மயமாக்கலை நிறுத்துவதற்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் தொழில், ஊதியங்கள் மற்றும் பிற உரிமைகளைப் பாதுகாக்க போராடும் ஏனைய தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் கடுமையான பொலிஸ்-அரச நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமே இராஜபக்ஷ ஆட்சி பதிலளிக்கின்றது.

எரிசக்தி, துறைமுகங்கள், தபால், வங்கி மற்றும் அரச, மாகாண மற்றும் உள்ளூர் நிர்வாகங்களில் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்யும் வகையில், ஜனாதிபதி கடந்த வாரம் மீண்டும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை திணித்தார். சட்டத்தை மீறும் அல்லது மற்றவர்களை மீறுவதற்குத் தூண்டும் எவரும் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வர். இதில் சிறைத் தண்டனைகள், அபராதம் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பை இரத்துச் செய்வதும் அடங்கும்.

அரசாங்கம் கோவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த அமுல்படுத்திய வரையறுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளையும் கைவிடுவதற்கான அதன் உறுதிப்பாட்டில், அது எதற்கு முன்னுரிமை கொடுக்கின்றது என்பது தெளிவு. இதனால் வணிகங்கள் மீண்டும் உற்பத்திசெய்து இலாபம் ஈட்ட முடியும். இதுவரை, கிட்டத்தட்ட 14,000 பேர் இறந்துள்ளனர் மற்றும் 5 இலட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் குறைந்தபட்சம் 500,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

'வைரஸுடன் வாழ்வது' என்ற குற்றவியல் கொள்கையானது, இராஜபக்ஷ, இலாபத்திற்கான உந்துதலில், தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர்பிழைப்பை ஆபத்தில் ஆழ்த்துவது உட்பட எதையும் நிறுத்த மாட்டார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

அதே தொழிற்சங்கங்கள் ஜே.வி.பி., ஐ.ம.ச மற்றும் ஸ்ரீ.ல.சு.க. தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. இந்த மதிப்பிழந்த எதிர்க்கட்சிகள் தொழிலாளர்களை ஆதரிப்பதாகவும், அவர்களைப் பாதுகாக்க ஒரு 'வெகுஜன இயக்கத்தை' கட்டியெழுப்ப உதவுவதாகவும் அவை கூறிக்கொள்கின்றன.

என்ன ஒரு மோசடி! ஆட்சியில் இருந்த போது இந்தக் கட்சிகள் அனைத்தும் தனியார்மயமாக்கத்தில் சாதனை படைத்துள்ளன. 1970களின் பிற்பகுதியில் சந்தை சார்பு மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கலைத் தொடங்கிய வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஒரு பகுதியாகவே ஐ.ம.ச. தலைவர்கள் இருந்தனர். 1980 இல், ஐ.தே.க. அரசாங்கம் அதனது தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடந்த ஒரு பொது வேலைநிறுத்தத்தை முறியடிக்க, இலட்சக் கணக்கான அரசாங்க ஊழியர்களை பாரியளவில் வேலை நீக்கம் செய்தது.

ஜே.வி.பி. தனது சோசலிச பாசாங்குகளை 1990 களில் கைவிட்டு, 2004 இல் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் இணைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த உதவியது. ஜே.வி.பி. கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்திய அப்போதைய மஹிந்த இராஜபக்ஷவின் மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கங்களுக்கு மீண்டும் மீண்டும் ஆதரவளித்துள்ளது.

இந்தக் கட்சிகள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கின்றன. அவை இராஜபக்ஷ அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்வதன் மூலம் தொழிலாளர்களின் கோபத்தை சுரண்டிக்கொள்ள முற்படுகின்றன. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், தற்போதைய அரசாங்கத்தைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் பெருவணிகத்தை மீட்க முற்படுவார்கள்.

கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தை ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்வதை எதிர்ப்பதாகக் கூறி வரும், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் சிங்கள தீவிரவாத தேசிய சுதந்திர முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய உட்பட ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 10 சிறு கட்சிகளைப் பொறுத்தவரையிலும் உண்மை அதுவேதான்.

தனியார்மயமாக்கலுக்கு எதிரான எந்தவொரு உண்மையான போராட்டத்தினதும் முதல் படி, தொழிற்சங்கங்கள் மற்றும் அவை இணைந்திருக்கும் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து பிரிந்து, சுயாதீனமான, நம்பிக்கையான-ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களின் தலைமையில், நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதே ஆகும்.

இத்தகைய குழுக்கள் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் ஸ்தாபிக்கப்பட்டு, தங்களின் அடிப்படை சமூக உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களின் ஏனைய பிரிவினரை நோக்கித் திரும்ப வேண்டும். சமீப மாதங்களில் ஆசிரியர்களும் சுகாதாரம், தபால் மற்றும் அரச நிர்வாக ஊழியர்களும் தோட்டத் தொழிலாளர்களும் சம்பளம் மற்றும் நிலைமைகள் தொடர்பாக வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

செப்டம்பரில், பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், அரிசி, மாவு, தூள் பால் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியது. கடந்த 12 மாதங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் 12.8 சதவிகிதம் உயர்ந்து, உழைக்கும் மக்களுக்கு உண்மையான கஷ்டங்களை உருவாக்கி, ஊதிய உயர்வுக்கான போராட்டங்களைத் தூண்டி விட்டுள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் இலாப முறையின் மோசமான நெருக்கடியே தூண்டி விடுகின்றது. தொழிலாளர்களின் எதிர்த்தாக்குதலானது செல்வந்தர்களின் இலாப நலன்களை விட உழைக்கும் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

'தனியார்மயமாக்கலை எதிர்ப்பது' மட்டும் போதாது. பல தசாப்த கால போராட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் தொழிலாளர்கள் பெற்ற வெற்றிகள் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் கீழறுக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவ அரசாங்கத்தால் இயக்கப்படும் அரசுக்கு சொந்தமான அமைப்புகள் எப்போதும் தனியார் இலாபத்தின் நலன்களுக்காகவே சேவை செய்கின்றன. இப்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களுக்கு அனைத்தையும் திறந்து விடுவதற்கான இடைவிடாத உந்துதலின் மத்தியில், அதிக விலைக்கு பேரம் பேசும் நிறுவனங்களுக்கு விற்றுத் தள்ளுவதற்காக, அரச நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டு வணிகமயமாக்கப்படுகின்றன.

அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளும், குறைந்த செலவில் அல்லது செலவின்றி உடனடியாக கிடைக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் மற்றும் சேவைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒழுக்கமான ஊதியம் மற்றும் தொழில் பாதுகப்பும் வழங்கப்படுவதோடு, தற்போதைய தொற்றுநோய்களுக்கு மத்தியில் அவர்களின் உடல்நலம் மற்றும் வாழ்க்கைக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

சலுகைகளுக்காக இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது முற்றிலும் வீணான விடயமாகும். தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பெரும் நிறுவனங்கள், தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குவது உட்பட, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான கோரிக்கையைச் சூழ, பல்வேறு பிரிவுகளிலான தொழிலாளர்களின் அனைத்துப் போராட்டங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதன் மூலமே இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க வெற்றிகரமாகப் போராட முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) தொடங்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் (IWA-RFC) ஒரு பகுதியாக, நடவடிக்கை குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இலங்கையில் இந்த முன்னோக்கிற்காக போராடுகிறது. இந்த அரசியல் போராட்டத்தில் எங்களுடன் சேருமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading