யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், இலங்கை அரசாங்க அனுசரணையுடன், ஏற்றுமதியை நோக்கிய கடல் அட்டை வளர்ப்பு பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பண்ணைகள் கரையோரத்தை அண்டிய ஆழம் குறைந்த கடற்பகுதியில் அமைக்கப்படுகின்றன. இதற்காக பல ஏக்கர் பரப்பளவுள்ள கடல் பகுதி தனியாருக்கு வழங்கப்படுவதனால், இந்தப் பகுதியில் இதுவரை காலமும் மீன்பிடித்துக் கொண்டிருந்த, சிறு தொழிலில் ஈடுபடும் நூற்றுக் கணக்கான மீனவர்கள், தமது வாழ்வாதாரத்தையும் உரிமையையும் இழக்கின்றனர்.
அதிக இலாபம் ஈட்டக் கூடிய இந்த திட்டம், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலை, அல்லைப்பிட்டி மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களிலும் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா, இரணதீவு ஆகிய பகுதிகளிலும் இந்தப் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன.
இந்தப் பண்ணைகள், அரசின் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின், தேசிய நீரியல் வள மற்றும் ஆராய்ச்சி முகவர் அமைப்பின் (நாரா) ஆலோசனையின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு யுத்தம் கொடூரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், 2016 முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடங்கி, மன்னார் மாவட்டத்திலும் யாழ்ப்பாணத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னரும் இந்த பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டு இப்போது பரவலாக அமைக்கப்படுகின்றன.
இந்தப் பண்ணைகளை அமைப்பதற்கு பல இலட்ச ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருப்பதால் சாதாரண தொழிலாளர்களால் இதற்கு செலவிட முடியாது. பல நிறுவனங்களும் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுமே இந்தப் பண்ணைகளில் முதலீடு செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இதுவரை கிட்டத்தட்ட 250 பண்ணைகள் கிளிநொச்சி மாவட்டத்திலும், 50 பண்ணைகள் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.
அதனால், அந்தப் பிரதேசத்தில் இறால் மற்றும் நண்டு பிடித்தலுக்காக கூடு அமைப்போர் மற்றும் வீச்சுத் தொழில் செய்வோர் தங்கள் தொழில்களைச் செய்வதற்கான இடங்கள் இந்தப் பண்ணைகளுக்குள் அகப்பட்டுப் போய்விடுகின்றன. அதனால், அந்த தொழிலை நம்பி வாழும் நூற்றுக் கணக்கான மீனவக் குடும்பங்கள் வறுமைக்குள் தள்ளப்படுகின்றன
இருந்த போதிலும், அதையிட்டு மௌனம் காத்து வந்த தமிழ் தேசியவாத முதலாளித்துவக் கட்சிகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பூநகரி கௌதாரி முனையிலும் அரியாலைப் பிரதேசத்திலும் சீன நாட்டவர்களால் கடல் அட்டைப் பண்ணை நடத்தப்படுவதை அறிந்தபோது, தங்கள் சீன-எதிர்ப்பையும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கான தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்டவும் மட்டுமே அதை சுரண்டிக்கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், “தென்னிலங்கையில் கால்பதித்துள்ள சீனா, தற்போது வடக்கிலும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. கௌதாரி முனை மீனவர்கள் கடலட்டை வளர்ப்புத் திட்டத்துக்காக முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, தற்போது சீன நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் இடமாக இது உள்ளது. ஆனாலும் இது ஈழத் தமிழர்களுக்கு மாத்திரம் அல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலான விடயமாகும். இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் நடவடிக்கையாகும்” என்றார்.
எனினும், தமிழ் முதலாளித்துவத்தின் வர்க்க பண்பை வெளிக்காட்டிய அவர், இந்த திட்டத்தினால் பாதிக்கப்படும் உள்ளூர் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
சீன-விரோத மற்றும் தமிழ் இனவாதப் பிரச்சாரத்தினை வலுப்படுத்துவதன் மூலம், உள்ளூர் தமிழ் முதலாளிகளையும் ஓரளவு முதலீடு செய்யக்கூடிய மீனவர்களையும் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை அரச அதிகாரிகளும் தமிழ் கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றனர். “நீங்கள் அட்டைப் பண்ணையை செய்ய முன்வராவிட்டால், சீனாக்காரனோ அல்லது தென்பகுதி ஆட்களோ (சிங்களவர்களோ) வரக்கூடும் எனவே நீங்கள் முன்வாருங்கள்.” என்று அவர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள். “இவ்வாறான பண்ணைகளை அமைப்பதற்கு இந்தப் பிரதேச முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்” என்று, யாழ்ப்பாண வணிகர் கழகம் ஜூலை 04 அன்று பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தது. பல மீனவர்கள் இந்த ஊக்குவிப்புகளுக்கு அடிபணிந்து, கையில் இருக்கும் பணத்தை அல்லது கடன் வாங்கி முதலீடு செய்து பின்னர் நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில், காலாகாலமாக, மீனவர்கள் சுயாதீனமாக சுழியோடி அட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். யுத்தம் முடிந்த சில வருடங்களின் பின்னர், அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் கடற்றொழில் திணைக்களத்தில் அனுமதி பெற வேண்டும், என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்பொழுது, அனுமதி பெற்று சுழியோடி அட்டை சேகரிக்கும் தொழிலாளர்களை சுரண்டிக்கொள்ளும் அட்டைப் பண்ணை முதலாளிகள், அவர்களிடம் இருந்து ஒரு குஞ்சு அட்டையை யாழ்ப்பாணத்தில் 100 ரூபாவுக்கும் கிளிநொச்சியில் 40 ரூபாவுக்கும் கொள்வனவு செய்கின்றார்கள்.
தகுந்த சுழியோடும் கருவிகள் இன்றி உயிரைப் பணயம் வைத்தே மீனவர்கள் அட்டைகளைப் பிடிக்கின்றார்கள், இவர்களுக்கு சுழியோடுவதற்கான ஒக்ஸிஜன் தாங்கிகள் இல்லை. அநேகமானவர்களுக்கு சொந்தமாக படகு இல்லாததால் அவர்கள் படகு உரிமையாளர்களை நம்பியிருக்கின்றனர். படகு உரிமையாளர்களும் தரகர்களும் பிடிபடும் அட்டைகளை பாதி விலைக்கே கொள்வனவு செய்கின்றார்கள்.
வளர்ந்த கடல் அட்டைகள், 1,000 முதல் 1,500 ரூபாய் வரை (5 முதல் 7.50 டாலர் வரை), அவற்றின் அளவின் அடிப்படையில் விலை கொள்வனவு செய்யப்படுகின்றன. அட்டைகள் 400 கிராம் முதல் 2.5 கிலோகிராம் வரை நிறையுடயவையாக இருக்கும். இருப்பினும், ஒரு முறை ஏற்றுமதி செய்யப்பட்டு, பிரதான கிழக்கு ஆசிய நாடுகளில் சத்தான உணவாக சந்தைகளில் விற்பனைக்கு வரும்போது, ஒரு கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை சுமார் 3,000 டாலருக்கு விற்கப்படுகிறது. இப்போது ஒரு டாலர் இலங்கை நாணயப்படி சுமார் 200 ரூபாவாகும்.
ஒரு பக்கம் அட்டை பண்ணைகள் ஊக்குவிக்கப்படும் அதே வேளை மறுபக்கம் வடக்கு கிழக்கு மீனவர்கள், அநேகமான சந்தர்ப்பங்களில் கிளிநொச்சி மாவட்ட வறிய மீனவர்கள், இராணுவ ஒடுக்குமுறை, தாக்குதல்கள், சட்ட நடவடிக்கைகள் போன்ற அரச ஒடுக்குமுறைக்கு தொடர்ந்தும் ஆளாக்கப்படுகின்றனர்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள போதும் வடக்கு மற்றும் கிழக்கை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதுடன் இருப்பை பலப்படுத்தி வருகின்றது. இதன் பாகமாக “தேசிய பாதுகாப்பு” மற்றும் “போதைப் பொருள் கடத்தலை தடுத்தல்” என்ற பெயரில் கடற்படையினர் ரோந்து செல்கின்றனர்.
மீன்வளத்துறை அமைச்சு 2019 மார்ச் முதல், கடல் அட்டை பிடிப்பை தடைசெய்து, அனுமதிப் பத்திரிம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கடல் அட்டை பிடிக்க அனுமதித்துள்ளதுடன் கடல் வளப் பாதுகாப்பு அடிப்படையில் இரவில் சில மீன் பிடி முறைகள் தடை செய்துள்ளன. இதைச் சாக்குப் போக்காகப் பயன்படுத்தி, மீனவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்வதும், நடுக் கடலில் வைத்து கொடூரமாக தாக்குவதும், அவர்களது உற்பத்திகளையும் கருவிகளையும் அபகரிப்பதும் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. சாதாரண டோர்ச் லைட்டுகளை படகில் வைத்திருப்பதை கூட காரணமாக எடுத்துக்கொண்டு மீனவர்கள் தாக்கப்படுகின்றார்கள்.
கைது செய்யப்படும் மீனவர்கள், மீன்படி பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதை அடுத்து, அவர்கள் மீது பெரும் அபராதம் விதிக்கப்படும். பல மீனவர்கள் ஒரே மாதிரியான பல வழக்குகளை எதிர்கொள்கின்றனர். இதன் போது அவர்கள் மீது அவர்களது மாத வருமானத்துக்கு சமமான சுமார் 25,000 ரூபாய்கள் வரை அபராதம் விதக்கப்படுகிறது.
தொற்றுநோயால் ஆழமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், தனியார்மயப்படுத்தலை துரிதப்படுத்துவதனதும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதனதும் பாகமாக, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவுடன் கடலட்டை பண்ணைகளை ஊக்குவித்து வருகின்றது. முதலாளித்துவ அமைப்பு முறையில் எவ்வாறு மூலதனத்தின் விரிவாக்கம் விவசாய கட்டமைப்பை தொழிற்துறையை கொண்டு பிரதியீடு செய்கின்றதோ அது போலேவே மீன்பிடி துறையிலும் முதலீடு பெருக்கெடுக்கின்றது. விவசாயத்தில் பெரும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவே இந்தியாவில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் விவசாயிகளைப் போலவே மீனவர்களும் மற்றும் சுயதொழில் செய்பவர்களும் தங்களை பெரும் வணிக நிறுவனங்களுக்கு உழைப்பினை விற்பனை செய்யும் தொழிலாளர்களாக மாற்றிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவர். மீனவர்கள் தங்கள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, தங்களைப் போலவே வறுமையையும், வேலைச் சுமை அதிகரிப்பு மற்றும் ஊதிய வெட்டையும் எதிர்கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்துக்குப் பின்னால் அணிதிரள்வது அவசியமாகும். அதன் மூலம் மட்டுமே ஒரு சோசலிச முன்நோக்கின் அடிப்படையில், சகல உற்பத்திகளையும் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அனைத்து உழைக்கும் மக்களதும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்.
மேலும் படிக்க
- பிரெக்ஸிட் மீன்பிடிப்பு பிரச்சினையில் பிரான்சும் பிரிட்டனும் வர்த்தகப் போருக்கு அச்சுறுத்துகின்றன
- இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களும் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு முன்நோக்கிய பாதையும்
- இலங்கை; வடக்கில் வாழும் வறிய மீனவர்கள் கடல் அட்டை பண்ணைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பற்றி பேசுகின்றனர்