மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஆஸ்திரிய அரசாங்கம் நேற்று பகுதியளவு பூட்டுதலையும், கட்டாய தடுப்பூசியையும் விதித்த பின்னர், “வைரஸூடன் வாழ வேண்டும்” என்ற ஐரோப்பிய அரசாங்கங்களின் அரசியல் குற்றவியல் கொள்கை ஒரு பேரழிவை உருவாக்கியுள்ளது தெளிவாகிறது. நாளாந்தம் 300,000 முதல் 400,000 க்கு இடைபட்ட எண்ணிக்கைகளில் புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களும், மற்றும் நாளொன்றுக்கு 4,000 இறப்புக்களும் பதிவாகி வரும் நிலையில், ஐரோப்பா நோய்தொற்றின் பெரும் அலைகளை எதிர்கொள்கிறது.
நேற்று 15,809 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களை ஆஸ்திரியா பதிவு செய்து, உச்சபட்ச எண்ணிக்கைகளை கொண்ட பல ஐரோப்பிய நாடுகளில் அதுவும் ஒன்றாக உள்ளது. இதில், புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 64,164 என்று பதிவு செய்த ஜேர்மனி, மேலும் அதே நாளில் 23,591 என்று பதிவு செய்த நெதர்லாந்து, புதன்கிழமை 22,507 என்று பதிவு செய்த செக்கியா, மேலும் அதே நாளில் 8,342 என்று பதிவு செய்த சுலோவாக்கியா மற்றும் திங்கட்கிழமை 21,058 என்று பதிவு செய்த ஹங்கேரி ஆகிய நாடுகள் அடங்கும். நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாவதால், மருத்துவமனைகள் நிலைகுலைந்து போகும் நிலைக்கு அச்சுறுத்துகிறது.
ஆஸ்திரியாவில், தொற்றுநோயின் ஆரம்பகட்ட நிலைமைகள் திரும்பியுள்ளன. மருத்துவமனைகளில் பிணவறைகள் நிரம்பிவிட்டன, மேலும் யாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் மற்றும் யாரை அப்படியே கைவிட வேண்டும் என்று தேர்வு செய்யும் சோதனை மையங்களாக மருத்துவமனைகள் மாறியுள்ளன.
“பிணங்கள் குவிவதால் இடமின்றி தாழ்வாரங்களில் அடுக்கி வைக்கப்படுகின்றன,” என்று அப்பர் ஆஸ்திரியாவில் உள்ள ஒரு செவிலியர் APA க்கு தெரிவித்தார். “என்ன நடக்கிறது என்பதை வெளியிலுள்ள எவரும் அறிய முடியாது,” என்றும் கூறினார். மேலும், கண்ணியமான முறையில் உடல்களை தகன செய்ய முடியாத அளவிற்கு பிணங்கள் குவிவதால் உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது: அதாவது “கொரோனா வைரஸால் இறந்தவர்களது உடல்கள் சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வைத்து அப்படியே மூடப்படுகின்றன, அவ்வளவுதான். … நாங்கள் கோவிட் அலையில் நீந்திக் கொண்டிருக்கிறோம்” என்றும் கூறினார்.
சால்ஸ்பேர்க் மற்றும் அப்பர் ஆஸ்திரியா மாகாணங்களில், தற்போது 1.5 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை, சால்ஸ்பேர்க் மாகாணத்தின் அரசு மருத்துவமனைகளுக்கான ஒரு செய்தித் தொடர்பாளர் Morgen Post க்கு இவ்வாறு தெரிவித்தார்: “நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து சிகிச்சையளிக்கும் சோதனை முறையை நாங்கள் இன்னும் செயல்படுத்தவில்லை, ஆனால் சில நாட்களில் இது கேள்விக்கு உட்படலாம்.”
ஐரோப்பாவின் பெரும்பகுதி சில நாட்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. தொற்றுநோய் சூழலில் சிகிச்சையளிக்க தாமதிக்கப்பட்டு தற்போது மோசமான நிலையில் உள்ள புற்று நோயாளிகள் உட்பட, கோவிட்-19 நோயாளி அல்லாத மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோட்டர்டாம் மற்றும் லிம்பேர்க் மாகாணங்களில் உள்ள டச்சு மருத்துவமனைகள் விரைவில் மறுக்க உள்ளன. பவேரியாவில் உள்ள ஜேர்மன் மருத்துவமனைகள் அதிகப்படியான நோயாளிகளை இத்தாலிக்கு அனுப்புகின்றன.
ஜேர்மனியின் ராபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவரான நோயெதிர்ப்பு நிபுணர் லோதர் வைலர், அவசர உத்தியோகபூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரினார். “புதிதாக எதையாவது நாம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. நமக்கு தேவையான அனைத்து யோசனைகளும் மருந்துகளும் ஏற்கனவே கிடைக்கின்றன,” என்று வைலர் கூறினார். மேலும், “21 மாதங்களுக்குப் பின்னர், இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத எனது கூற்றுக்களிலும் மற்றும் ஏனைய சக ஊழியர்களின் கூற்றுக்களிலும் வெறுமனே என்னால் நிலைத்திருக்க முடியாது. நாம் இப்போது தீவிர அவசர நிலையில் இருக்கிறோம். நாம் நமது போக்கை மாற்றவில்லை என்றால், உண்மையில் மிகவும் மோசமான கிறிஸ்துமஸை நாம் சந்திப்போம்” என்றும் கூறினார்.
பிப்ரவரி-மார்ச் 2020 இல் ஐரோப்பாவில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, வைரஸை பற்றிய அறிவில் பரந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் பயனுள்ள தடுப்பூசிகளும் கிடைக்கின்றன. இந்நிலையில், உலகின் பணக்காரப் பகுதிகளில் ஒன்று மீண்டும் ஒரு பேரழிவைச் சந்தித்தது எப்படி? என்றே ஒருவர் கேட்டாக வேண்டும்.
இந்த பேரழிவு, அரசாங்கங்களுக்கு பொது சுகாதார நடவடிக்கைகளுக்கான செலவைக் குறைப்பதையும், நிதிய பிரபுத்துவத்திற்கு இலாபமீட்டுவதற்காக தொழிலாளர்களை வேலையில் தக்கவைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பாரிய தொற்றுநோய்க்கான அரசியல் குற்றவியல் கொள்கைகளிலிருந்து நேரடியாக உருவெடுக்கிறது. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது உதவியாளர்களிடம் பேசியபோது முழு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திற்காக பேசினார்: அதாவது “இனி வீணான பூட்டுதல்கள் இல்லை, உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்!” என அறிவித்தார். ஐரோப்பிய அரசாங்கங்கள் வைரஸ் பரவுவதை புறக்கணித்து, பூட்டுதல்களையும் முகக்கவச கட்டுப்பாட்டையும் நிராகரித்ததன் பின்னர் சில மாதங்களில், பிரிட்டனின் மனநோய் பீடித்த பிரதமரின் விருப்பம் நிறைவேறியது.
ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் தடுப்பூசி என்பது நோய்தொற்றுக்களின் அதிகரிப்பை புறக்கணிக்கலாம் என்று வலியுறுத்தின. பிரிட்டிஷ் அரசாங்கம் “தொற்றுநோயை பரவலாக பரவக்கூடிய உள்ளூர் நோயாக மாற்றுவதே” அதன் “திட்டம்” எனக் கூறியது, அதாவது வைரஸை நிரந்தரமாக மக்கள் மத்தியில் கட்டுப்படுத்தாமல் பரவ அனுமதிப்பதாகும். தடுப்பூசிகள் கிடைத்தவுடன், தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பெரியளவில் செலவு செய்யப்படுவதை இனி அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியதால், ஐரோப்பா முழுவதும் இதே திட்டம் பின்பற்றப்பட்டது.
“அதிர்ச்சியூட்டும் வகையில், ஐரோப்பா முழுவதும் நோய்தொற்றுக்கள் தீவிரமாக பரவி வருகின்றன,” என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் கடந்த மாதம் Liberation க்கு தெரிவித்தார். “எவ்வாறாயினும், தடுப்பூசிகள், நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை, தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புக்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலுவாக மட்டுப்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்,” என்றும் கூறினார். மேலும், “முக்கியமாக மருத்துவமனைகள் அதிக நெருக்கடிக்கு உள்ளாவது,” தனக்கு கவலையளிப்பதாக வெரோன் கூறினார்.
தடுப்பூசிகள், அதிகரித்து வரும் நோய்தொற்றுக்கள் மற்றும் தீவிர நோயாளிகள் அல்லது இறப்புக்களுக்கு இடையேயான தொடர்பை துண்டிக்கிறது என்ற வெரோனின் தவறான கூற்றை நிகழ்வுகள் அம்பலப்படுத்துகின்றன. தடுப்பூசிகள் மிகுந்த பயனுள்ளவை தான் என்பதுடன், முடிந்தவரை பரவலாக அவற்றை விநியோகிக்க வேண்டும். கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிக தடுப்பூசி விகிதம் கொண்ட மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு ஒரு அப்பட்டமான மற்றும் சோகமான நினைவூட்டலாகும். குறைவான நாளாந்த நோய்தொற்றுக்களுடன், நாளாந்த இறப்புக்கள் ஜேர்மனியில் 230 மற்றும் பிரிட்டனில் 157 ஆக இருப்பதை விட அதிகமாக ரஷ்யாவில் 1,254, உக்ரேனில் 725, போலந்தில் 403, அல்லது ருமேனியாவில் 254 என்றளவிற்கு பதிவாகியுள்ளன.
இருப்பினும், தடுப்பூசி போடப்பட்ட மக்களையும் நோய் தொற்றிக் கொள்ளலாம், அவர்களும் நோயை பரப்பலாம், மற்றும் தடுப்பூசிகள் நோய்தொற்று பரவலை கணிசமாக குறைக்கின்றன என்றாலும், நோய்தொற்றுக்கு பின்னைய கடுமையான பாதிப்பின் அபாயத்தை அவை முழுமையாக அகற்றாது. குழந்தைகள் உட்பட, மக்கள்தொகையில் பெரும்பகுதியினருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் பலர் தீவிரமாக நோய்வாய்ப்படுகிறார்கள், அவர்கள் தப்பிப்பிழைத்தால், அவர்களுக்கு தீவிர கவனிப்பு தேவைப்படுகிறது மற்றும் லோங் கோவிட் உடன் அவர்கள் போராட வேண்டியிருக்கிறது.
உண்மையான பேரழிவுகரமான உயிரிழப்பைத் தடுப்பதற்கான ஒரே வழி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்டி, கடுமையான பூட்டுதல்கள் மற்றும் உலகளாவிய தடுப்பூசி திட்டம் உட்பட, விஞ்ஞானபூர்வ பொது சுகாதார கொள்கைகளைச் செயல்படுத்தி கோவிட்-19 இன் அனைத்து வகை பரவல்களையும் அகற்றப் போராடுவதாகும். இப்போது விவாதிக்கப்படும் நடவடிக்கைகள் எதுவும் பாரிய மரணங்களைத் தடுக்காது என்றே கசப்பான அனுபவம் கற்பிக்கிறது.
ஆஸ்திரியா 180 பாகைக்கு திரும்பியதோடு, நேற்று பகுதியளவு பூட்டுதலுக்கு அறிவித்தது, அத்தியாவசியமற்ற கடைகளை மூடுகிறது, வெளியே செல்லும் உரிமையை கட்டுப்படுத்துகிறது, மேலும் சாத்தியமுள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு ஆஸ்திரியர்களை ஊக்குவிக்கிறது. எவ்வாறாயினும், தொழிலாளர்கள் நேரடியாகச் சென்று வேலை செய்ய வேண்டிய பணியிடங்கள் இன்னும் திறந்திருக்கும் என்பதுடன், அவர்களின் குழந்தைகளுக்கான பள்ளிகளும் திறந்திருக்கும். 60 சதவீத நோய்தொற்றுக்கள் பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் தான் பரவுவதாக பல ஆய்வுகள் காட்டுகின்ற நிலையில், இதுபோன்ற பகுதியளவு பூட்டுதல் பாரிய நோய்தொற்றுக்களைத் தடுக்காது.
உண்மையில், ஒரு வருடத்திற்கு முன்னர் இதேபோன்ற பூட்டுதல்கள் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் செயல்படுத்தப்பட்டன. அவை மருத்துவமனைகள் நிலைகுலைந்து போவதை தடுத்தாலும் பேரழிவைத் தடுக்கவில்லை. அக்டோபர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலுமாக, ஐரோப்பாவில் 700,000 பேர் இறந்துள்ளனர். கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு (WHO) ஐரோப்பாவில் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் 500,000 பேர் கோவிட்-19 ஆல் இறப்பார்கள் என்று முன்கணித்துள்ளது.
சுலோவாக்கியா, நெதர்லாந்து, மற்றும் இத்தாலியின் பல பகுதிகள் உட்பட, மற்ற பகுதிகளில் அதிகாரிகள் தடுப்பூசி போடப்படாத மக்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் பகுதியளவு பூட்டுதலைச் செயல்படுத்த ஆலோசிக்கிறார்கள். பயனற்றது என்று நிராகரிப்பதற்கு முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ஆஸ்திரியா சுருக்கமாக விதித்த இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை தொற்றுநோயை நிறுத்தாது. காரணம், தடுப்பூசி போடப்பட்ட நபர்களும் கூட வைரஸை பரப்புகிறார்கள்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் ஜேர்மனியில், அதிகாரிகள் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். தொற்றுநோயின் சூழல் “அதிர்ச்சிகரமானது” என்று அழைத்து, அதன் “அதிவேக வளர்ச்சியை நாம் விரைவாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வெளியேறும் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கூறினார். எவ்வாறாயினும், வெளியேறும் அரசாங்கமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, வரவிருக்கும் ஆளும் கட்சி அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்க கோருகின்றனர்.
“தொற்றுநோய்களின் எண்ணிக்கையை எங்களால் குறைக்க முடியாது,” என்று பசுமைக் கட்சி அரசியல்வாதி கேத்ரின் கோரிங்-எக்கார்ட் பெருமிதத்துடன் கூறினார். “ஏராளமானோருக்கு நோய்தொற்று ஏற்பட்டு நோய்வாய்ப்படுவார்கள்” என்றும் கூறினார். மேலும், “பள்ளிகளும் பகல்நேர குழந்தை பராமரிப்பு நிலையங்களும் முடிந்தவரை திறந்திருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய கொலைகார கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஜேர்மன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு வாரங்களில், அல்லது சில நாட்களில் கூட நிலைகுலைந்து போகும். Mittweida பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ்டன் ஷ்னீடர் போன்ற தொற்றுநோய் பற்றி ஆய்வு செய்யும் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும், மார்ச் 2020 பாரிய வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர் பல ஐரோப்பிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டதைப் போன்ற கடுமையான பூட்டுதல்களை விதிக்க அவசர அழைப்பு விடுக்கின்றனர்.
“கடுமையான பூட்டுதல், மக்கள் நடமாட்டங்களை மட்டுப்படுத்துதல் மற்றும் பள்ளிகளை மூடுதல் போன்ற கட்டுப்பாடுகள் விஷயங்களை மாற்றக்கூடும்,” என்றும், “ஏனென்றால், அது மக்கள் தொடர்புகளையும் தொற்றுநோய் பரவுவதையும் தடுக்கும். … பொதுமைப்படுத்தப்பட்ட கட்டாய தடுப்பூசி, போக்கு காட்டும் நிலைமையை சற்று மேம்படுத்துகிறது, என்றாலும் தற்போதைய நோய்தொற்று எழுச்சியை தடுப்பதில் இது மிகவும் தாமதமானது. முன்னர், குறிப்பாக கடுமையான நடவடிக்கைகள் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தன. கட்டாய தடுப்பூசிக்கான அவசரகால தடைக்கு இப்போது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது” என்றும் ஷ்னீடர் ARD க்கு தெரிவித்தார்.
அத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது, ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான ஒரு நனவான அரசியல் போராட்டத்தில் இறங்குவதற்கும் மற்றும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கும் என, ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கம் சர்வதேச அணிதிரண்டால் மட்டுமே சாத்தியப்படும்.