பிரெஞ்சு இனவாத மேதாவி எரிக் செமூர் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதில் இருந்து என்ன முடிவுகளை எடுக்க வேண்டும்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எரிக் செமூர் பிரெஞ்சு ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடப் போவதாக இதுவரை அறிவிக்கவில்லை என்றாலும், அவரது நடவடிக்கை ஏற்கனவே ஓர் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியை வெளிக்கொண்டு வந்துள்ளது.

எரிக் செமூர் (Photo: Wikipedia)

பில்லியனர் வன்சன் பொலோரே இன் அதிவலது CNews தொலைக்காட்சி சேனலில் அதிக சம்பளம் பெறும் மேதாவியாக செமூர் பிரபலமானார். பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் ஒரு பகிரங்க பாதுகாவலரான அவர் 2011 இல் இனப்பாகுபாட்டை தூண்டியதற்காகவும், 2018 இல் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டியதற்காகவும் தண்டிக்கப்பட்டார். தடுப்பூசிகள் மீதான அவரின் ஐயறவையும், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சமூக இடைவெளிக்கு அவர் காட்டும் விரோதத்தையும் அவர் பெருமையடித்துக் கொள்கிறார். சுருக்கமாக கூறினால், நிதிய பிரபுத்துவம் தொலைக்காட்சி திரைகளினுடாக பிரெஞ்சு மக்களின் மீது அதன் தேசியவாத வெறுப்புக்களை வாந்தி எடுக்கிறதோ அந்த சாக்கடைக் குழாய்களில் அவரும் ஒருவராவார்.

2022 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் தொடங்கி உள்ள இவ்வேளையில், 'இடது உயரடுக்குகள்', புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான செமூரின் கண்டனம், வெகுஜன ஊடகங்களில் அறிவிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, மரியாதையுடனும் தீவிரமாகவும் முன்வைக்கப்படுகின்றன. இந்த ஊடகங்கள், கருத்துக் கணிப்புகளில் 18 சதவீதத்துடன் 2017 இன் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னை தொலைவில் நிறுத்தி, இந்த தண்டிக்கப்பட்ட குற்றவாளியை மக்ரோனின் முன்னணி தேர்தல் போட்டியாளராக முன்நகர்த்தி உள்ளன.

அதிரடியாக செமூர் இவ்வாறு ஊக்குவிக்கப்படுவது பிரெஞ்சு ஜனநாயகத்தின் நெருக்கடியில் ஒரு புதிய, அபாயகரமான கட்டத்தைக் குறிக்கிறது. ஆளும் வர்க்கம் சர்வதேச பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளது, இதற்கு அதனிடம் எந்த தீர்வுகளும் இல்லை. அது ஆப்கானிஸ்தான் மற்றும் மாலியில் ஏற்பட்டுள்ள இராணுவத் தோல்விகளால் நிலைகுலைந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பாவில் 1.3 மில்லியனுக்கும் அதிகமானவர்களை கொன்ற இந்த கோவிட்-19 பெருந்தொற்றின் போது, “வைரஸுடன் வாழுங்கள்' என்ற அதன் கொலைபாதக கொள்கை ஏற்படுத்திய மரணங்கள் மற்றும் சமூக சீரழிவு மீதான தொழிலாள வர்க்க கோபத்தைக் கண்டு அது அஞ்சுகிறது.

இந்த உள்ளடக்கத்தில், ஆளும் உயரடுக்கின் இன்னும் பரந்த அடுக்குகள் செமூரின் கட்டுரைகளும் தொலைக்காட்சி ஆத்திரமூட்டல்களும் தடுக்கவியலாத விதத்தில் கவர்ச்சிகரமாக இருப்பதாகக் காண்கின்றன. இந்தாண்டு தொடக்கத்தில் அகதிக் குழந்தைகளை அவர் இழிவாக பேசியற்காக தற்போது அவர் வழக்குகளை முகங்கொடுக்கிறார்: “அவர்களுக்கு இங்கே எதுவும் இல்லை; அவர்கள் திருடர்கள், கொலைகாரர்கள், கற்பழிப்பாளர்கள்,” என்றார். இருந்தாலும் கூட அவர் வழமையாக தொலைக்காட்சி செய்தி அரங்குகளுக்கு அழைக்கபடுகிறார், பத்திரிகை தலையங்க பக்கங்களில் அர்ப்பணிக்கப்பட்ட வர்ணனைகளைப் பெறுகிறார்.

செமூர் நிகழ்வுப்போக்கை புரிந்து கொள்ள, சமீபத்திய ஆண்டுகளில் அவரின் சில அறிக்கைகளை நினைவுகூர்வது மதிப்புடையதாக இருக்கும், இவை 'வரலாறு மீதான காதல்' என்ற செமூரின் கருத்தைக் கொண்டு ஊடகங்களால் மறைக்கப்படுகின்றன.

வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ட்ரேஃபுஸ் விவகாரத்தின் முடிவைக் குறித்து கடந்தாண்டு கேள்வி எழுப்பிய அவர், 1894 இல் ஜேர்மனிக்காக உளவுபார்த்ததாக யூத-விரோத அதிகாரிகளால் மோசடியாக தண்டிக்கப்பட்ட ஒரு யூத அதிகாரியான கேப்டன் ஆல்பிரட் ட்ரேஃபுஸ் குற்றவாளியாக இருந்திருக்கலாம் என்று சூசகமாக தெரிவித்தார். இது ட்ரேஃபுஸ் பெயரின் களங்கத்தைத் துடைப்பதற்காக, ஜோன் ஜோரஸ் தலைமையிலான சோசலிச தொழிலாளர்கள் இயக்கம் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்த தசாப்தகால போராட்டத்தை விமர்சிக்கும் விதமாக இருந்தது. “ட்ரேஃபுஸை அப்பாவியாக அறிவிக்க பலர் தயாராக இருந்தார்கள், ஆனால் அது மர்மமான விவகாரம்,” என்று செமூர் பொய்யுரைத்தார்.

செமூர் யூதர் என்றாலும், யூதர்களை நாஜி மரண முகாம்களுக்கு அனுப்பியதில் விச்சி ஆட்சியின் பங்களிப்பை அவர் பாதுகாக்கிறார். அவர் கூறினார், “விச்சி அதிகாரிகள் குற்றவாளிகள் அல்லர்; அவர்கள் அரசுக்குக் கீழ்படிய வேண்டியிருந்தது. இல்லையெனில், அங்கே எந்த அதிகாரமும் கீழ்படிதலும் இருந்திருக்காது, உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?” இன்று பிரான்சில் இருந்து முஸ்லீம்கள் பெருந்திரளாக வெளியேற்றப்படலாம் என்பதைக் குறித்து அவரிடம் வினவிய போது, இப்போதைக்கு அது 'யதார்த்தமில்லை' என்று பதிலளித்த அவர், “வரலாறு என்பது ஆச்சரியமானது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

விச்சி ஆட்சி மற்றும் பிரான்ஸ் மீதான நாஜி ஆக்கிரமிப்புடன் அதன் ஒத்துழைப்பை எதிர்ப்பதையும் அவர் கண்டிக்கிறார். அந்த எதிர்ப்பில், கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் மேலோங்கி இருந்ததற்கு அதை 'போல்ஷிவிக் பயங்கரவாதம்' என்று கண்டித்ததன் மூலம் எதிர்வினையாற்றிய விச்சி பிரச்சாரத்தையே எதிரொலித்து, செமூர் கூறுகையில், “[நாஜிசத்துடன்] ஒத்துழைத்த பிரெஞ்சு மக்களைத் தூக்கிலிட்டதன் மூலம், உள்நாட்டுப் போரை, கம்யூனிஸ்ட்களே தொடங்கினார்கள்,” என்றார்.

சோசலிசத்தைத் தாக்குவதற்கும் இனப்படுகொலையை பாதுகாப்பதற்கும் இந்த வரலாற்று பொய்களின் உதவியை நாடுவதை ஓர் எச்சரிக்கையாக, அதாவது முதலாளித்துவம் மரண நெருக்கடியில் உள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நூற்றாண்டு கால சம்பவங்கள் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளின் சம்பவங்களைப் போல துல்லியமாக அப்படியே மீண்டும் நடக்காது. இருந்தாலும், 2019 இல் “மஞ்சள் சீருடை' போராட்டங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மக்ரோன் பிரெஞ்சு ஆயுதப்படைக்கு உத்தரவிட்ட பின்னரும், கோவிட்-19 பெருந்தொற்றில் மில்லியன் கணக்கான உயிர்களை விலை கொடுத்த மோசமான உத்தியோகபூர்வ அலட்சியத்திற்குப் பின்னரும், வரலாற்று படிப்பினைகளைப் புறக்கணிப்பது குற்றகரமான ரீதியில் மேலோட்டமான மனப்பான்மையாக இருக்கும்.

ஆளும் உயரடுக்கு ஏன் இத்தகைய பாசிச வாய்வீச்சுக்களால் அளவுக்கு மீறி ஈர்க்கப்படுகிறது? இது வார்த்தையளவிலான வரலாற்று விவாதத்தைக் கொண்டு வருவதற்காக அல்ல. மாறாக, தன்னை தனிமைப்பட்டிருப்பதாகவும் வெறுக்கப்படுவதாகவும் உணரும் ஆளும் வர்க்கம், சர்வாதிகாரம், இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறை மற்றும் பாரிய படுகொலைகளை அதன் கொள்கையின் நடைமுறை கருவிகளாக விவாதித்து வருகிறது.

செமூரும், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கான பிரெஞ்சு ஆயுதப்படையின் திட்டங்களும்

கடந்த மாதம், 'செமூருக்கான அதிகாரிகள்' குழு அவரைப் போட்டியிட அழைப்பு விடுத்து, அதிவலது இதழான Current Values இல் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது. 'எமது படைகளின் எதிர்காலத் தலைவர்' என்று அவரைக் குறிப்பிட்ட அது, “ஒழுங்கைப் பராமரிப்பதற்கு இராணுவம் கடைசிப் பாதுகாப்பு முயற்சியாகக் கருதப்படுகிறது' என்று வலியுறுத்தியது. அது அதன் வேட்பாளருடன் ஒரு பேரம்பேசலை நடத்த தளபதி மட்டத்திலான அதிகாரிகளின் ஒரு வெளிப்படையான முயற்சியைத் தொடர்ந்தது:

நீங்கள் பாத்திரத்தின் பிரமாண்ட பலத்தைக் காட்டுகிறீர்கள். இராணுவ அதிகாரிகளும் அவர்களின் தலைவர்களும் அதையே செய்ய அனுமதிப்பீர்களா? அவர்களுக்கு ஒரேயொரு நலன், பிரான்சின் நலன், மட்டுமே உள்ளது, வரவு-செலவுத் திட்டக் கணக்கு மற்றும் மூலோபாயம் குறித்து அவர்கள் பேசும் போது அவர்கள் குரலும் கேட்கப்பட வேண்டும் என்று விரும்பலாம். ஒரு பலமான இராணுவம் அதன் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில் மனித ஆதாரவளங்களையும் நிதி ஆதாரங்களையும் கொண்டிருக்க வேண்டும். நம் அபிலாஷைகளை வெளிப்படுத்த ஏற்ற ஆதாரவளங்கள் அவர்களுக்குக் கிடைக்குமா? … உங்கள் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வம் உண்மையானது, நாங்கள் உங்களிடம் இருந்து முழு ஆதரவும் பொறுப்புறுதியும் கிடைக்குமென நம்புகிறோம்.

முன்னாள் ஆயுதப்படை தலைமை தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே ஐ சுற்றியுள்ள ஒரு பாசிச இராணுவச் சதிக்கூட்டத்திற்கு Current Values பத்திரிகை ஒரு வடிகாலாக ஆகியுள்ளது. 2017 இல் ஓய்வு பெற்ற அவர், பின்னர் போஸ்டன் கலந்தாலோசனை குழுவிடம் இருந்து உபகார நிதியுதவி பெற்றார். Danone மற்றும் L’Oréal நிறுவனங்கள் உட்பட 'பாரீஸ் பங்குச் சந்தையில் உள்ள முன்னணி 40 பிரெஞ்சு நிறுவனங்களில் 60 சதவீத' நிறுவனங்கள் கலந்தாலோசிக்கும் மற்றும் நிதியுதவி வழங்கும் அதன் பாரீஸ் அலுவலகம் அரை நாள் வேலைக்கு அவருக்கு 5,000 யூரோ வழங்குவதாக Le Monde குறிப்பிட்டுள்ளது. டு வில்லியே டஜன் கணக்கான மிகப் பெரிய பெருநிறுவனங்களிடம் இருந்து மிகப் பெரியளவில் உரையாற்றுவதற்கான கட்டணம் பெறுகிறார், மேலும் புரட்சியின் அபாயம் குறித்து தொடர்ந்து பத்திரிகை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

2019 இல், இந்த பெருந்தொற்றுக்கு முன்னர், அமெரிக்கா, ஜேர்மனி, போலாந்து, பெல்ஜியம், போர்ச்சுக்கல் மற்றும் பிரான்சில் எழுந்த வேலைநிறுத்தங்கள் டு வில்லியேயை பயமுறுத்தியது. சமூக சமத்துவமின்மைக்கு எதிரான 'மஞ்சள் சீருடை' போராட்டங்கள் உள்ளடங்கலாக ஒடுக்குமுறையில் 'உறுதியாக' இருக்குமாறு அழைப்பு விடுத்த அவர், வர்க்க போராட்டம் ஒடுக்கப்பட வேண்டும் என்று கோரினார்: “வழிநடத்துபவர்களுக்கும் அதற்கு கீழ்படிபவர்களுக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளி ஆழமானது. 'மஞ்சள் சீருடையாளர்கள்' ஏற்கனவே இதற்கான முதல் அறிகுறியைக் காட்டிவிட்டனர். … நாம் ஒழுங்கமை மீளமைக்க வேண்டும்; விஷயங்கள் இவ்விதத்தில் தொடர்ந்து செல்ல முடியாது,” என்றார்.

கோவிட்-19 ஒரு தூண்டுதல் நிகழ்வாக இருந்தது, அது உலக முதலாளித்துவ நெருக்கடியை ஆழமாக தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வைரஸில் இருந்து தப்பிக்க தொழிலாளர்கள் வீட்டிலிருக்கும் உரிமையைக் கோரிய போது, மார்ச் 2020 இல் இத்தாலியில், அமெரிக்காவில் மற்றும் ஐரோப்பாவில் பாரிய வேலைநிறுத்தங்கள் வெடித்தன. அமெரிக்க பொலிஸ் மினெயாபொலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்டைப் படுகொலை செய்த போது, ஜூனில் உலகெங்கிலும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. ஆனால் வர்க்க போராட்ட மேலெழுச்சியைத் தூண்டியதற்கு கூடுதலாக, இந்த பெருந்தொற்று ஆளும் வர்க்கத்தின், எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிகள் மற்றும் சர்வாதிகார சூழ்ச்சிகளையும் தீவிரப்படுத்தியது.

ஃபுளோய்ட் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக தாக்க ட்ரம்ப் சட்டவிரோதமாக அமெரிக்க இராணுவத்தை அனுப்பப்போவதாக அச்சுறுத்தினார். இது 2020 தேர்தல்களின் சட்டபூர்வத்தன்மையை எதிர்த்து அமெரிக்க இராணுவத்தின் சில பிரிவுகளது துணையுடன் ஓர் அதிவலது ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான அவரது திட்டங்களுடன் பிணைந்திருந்தன. இந்த முயற்சி ஜனவரி 6 இல் கட்டவிழ்ந்தது, அப்போது ஒரு பாசிசவாத கும்பல் காங்கிரஸ் கட்டிடத்தை அடித்து நொறுக்கி, ஜனாதிபதியாக ஜோ பைடென் தேர்வானதற்கு அங்கீகாரம் வழங்குவதைத் தடுக்க முயன்றது, இருப்பினும் அது தேசிய பாதுகாப்புப்படை துருப்புகள் தாமதமாக அனுப்பப்பட்டதால் சிறிய இடைவெளியில் தோற்கடிக்கப்பட்டது.

ட்ரம்ப் ஆட்சிக்கவிழ்ப்பு சதி, இயக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டம் வெடித்தது. இராணுவ அதிகாரிகள் தங்களை 'நல்ல பாசிஸ்டுகள்' என்றும் '26 மில்லியன் மக்களைக்' கொல்ல விரும்புவதாகவும் அறிவித்த வாட்ஸ்அப் குறுஞ்சேதி கசியவிடப்பட்டதால் ஸ்பெயின் அதிர்ந்தது. பிரான்சில் செமூர் மற்றும் வில்லியே பரிவாரங்களுக்கு இடையே Current Values இல் ஒரு காரசாரமான விவாதம் கட்டவிழ்ந்தது. செமூர் பிரான்சில் நடந்த ஃபுளோய்ட்டுக்கான ஆர்ப்பாட்டங்களை 'நமது உயரடுக்குளால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இனப் போர்' எனக் கண்டித்தார், அதேவேளையில் டு வில்லியே ஓர் இனப் போரைத் தவிர்க்க சட்டத்தின் ஆட்சியை இடைநிறுத்தும் தயாரிப்புகள் அவசியம் என வலியுறுத்தினார்.

“இன்று, ஒரு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், தலைவர்கள் பெரியளவில் எந்த நம்பிக்கையும் இல்லாத நிலையில் பாதுகாப்பு நெருக்கடி மட்டுமல்ல பெருந்தொற்று நெருக்கடியும் உள்ளது,” என டு வில்லியே Current Values எழுதினார். “அடக்கப்பட்ட பல்வேறு கோபங்களும் மொத்தமாக ஒரே நேரத்தில் வெடிக்கக்கூடும்,” என்று அச்சத்தை வெளிப்படுத்தி அவர் கூறுகையில், “சிந்தித்துப் பார்க்க முடியாதவற்றை நாம் சிந்திக்க வேண்டும். … சட்டத்தின் ஆட்சி நிச்சயமாக மதிப்புடையதே என்றாலும், சில குறிப்பிட்ட தருணங்களில் ஒருவர் மூலோபாயரீதியாகவும் சிந்திக்க வேண்டும்,” என்றார்.

இறுதியில், பியர் டு வில்லியே இன் சகோதரர் பிலிப் இந்த பெருந்தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் சுவிஸ் வங்கியாளர்கள் மீது பழி போட்டு, ஏப்ரல் மாதம் Current Values இல் ஒரு பாசிசவாத 'கிளர்ச்சிக்கு அழைப்பு' விடுத்தார். பிரெஞ்சு அரசாங்கத்தை கவிழ்த்து பிரான்சிடமிருந்து அல்ஜீரியாவின் விடுதலையைத் தடுக்கும் முயற்சியில் தளபதிகளின் தோற்றுப்போன 1961 அல்ஜியேர்ஸ் சதியின் 60 ஆம் நினைவுதினமான ஏப்ரல் 21 இல், ஓய்வுபெற்ற தளபதிகளின் ஒரு குழு தெளிவாக ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியாக இருக்கக்கூடிய ஒன்றுக்கு Current Values இல் அழைப்பு விடுத்ததன் மூலம் விடையிறுத்தனர். இறுதியாக, ஓய்வுபெற்ற மற்றும் இராணுவப் பணியில் உள்ள ஆயிரக் கணக்கான அதிகாரிகள் அதை ஆதரித்து ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டனர் அல்லது அதற்கடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டனர்.

பிரெஞ்சு நகரங்களில் குடியேறியவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 'இனப் போரை' கண்டனம் செய்யும் அது, 'மெத்தனத்திற்கு' எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 'நமது செயலூக்கமான கடமையில் உள்ள தோழர்களின் தலையீடு இருக்கும்' என்று எச்சரிக்கிறது... எங்கள் தேசிய பிரதேசத்தில்.' அது தொடர்ந்தது, 'தள்ளிப்போடுவதற்கு இனி நேரம் இல்லை என்பதை நாங்கள் காண்கிறோம், இல்லையெனில் நாளை உள்நாட்டுப் போர் இந்த வளர்ந்து வரும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும், இறப்புக்களும் ... ஆயிரக்கணக்கில் எண்ணப்படும்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி அச்சுறுத்தலை 'பாதுகாப்புக்கான ஓர் அழைப்பாக' குறிப்பிட்டு, செமூர், வலதுசாரி பத்திரிகையான Le Figaro மற்றும் Current Values இல் இன்னும் அதிக பாசிச பொய்களுடன் விடையிறுத்தார். “இந்த ஓய்வுபெற்ற தளபதிகள் பிரெஞ்சு மக்களையும் பிரெஞ்சு நாகரீகத்தையும் காப்பாற்றுமாறு பணியிலுள்ள அவர்களின் தோழர்களுக்கு அழைப்பு விடுக்கையில், அவர்கள் இந்த வெறிக்கும்பலைக் கண்டிக்கும் போது … அவர்களை யார் குற்றங்கூற முடியும்? அவர்களின் உண்மையான தேசப்பற்றையும் நியாயமான கவலையையும் யாரால் மறுக்க முடியும்?” என்றவர் குறிப்பிட்டார்.

வெகுஜன ஊடகங்களால் பிரெஞ்சு மக்களை அடிபணியச் செய்யும் பிரச்சாரம் தொடர்பாக மிகக் கடுமையான எச்சரிக்கைகள் உள்ளன.

பிரெஞ்சு நவ-பாசிசவாதத்தின் தேர்தல் வளர்ச்சி கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டவிழ்ந்தவை. அது தொழிலாளர்கள் உள்ளடங்கலாக மக்கள் மத்தியில் வாக்குகளை வென்றுள்ளது. 1991 இல் ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை தெளிவாக அதற்குப் பாதை அமைக்க உதவியது, குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தங்களில் தொழிலாள வர்க்கத்தின் கம்யூனிச இயக்கத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான சமரசமற்ற மோதல் குறித்து தொழிலாளர்கள் மத்தியில் இருந்த நினைவுளை மழுங்கடித்தன் மூலம் இது நடத்தப்பட்டது. ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் ஹிட்லரும் முசோலினியும் அதிகாரத்திற்கு வர எதை அடிப்படையாக கொண்டிருந்தார்களோ அந்த குட்டி-முதலாளித்துவ இயக்கங்களைப் போலவே, 21 ஆம் நூற்றாண்டு நவ-பாசிசமும் இப்போது நிதி மூலதனத்திற்குச் சேவையாற்றி வருகிறது.

வங்கிகள் ட்ரில்லியன் கணக்கில் யூரோக்களை இலாபமாக சம்பாதிக்கும் வகையில், நிதிய பிரபுத்துவத்தின் 'வைரஸுடன் வாழுங்கள்' முனைவும், அந்த பெருந்தொற்றின் நிலை என்னவாக இருந்தாலும், தொழிலாளர்களை வேலையில் வைப்பதும் இளைஞர்களைப் பள்ளிக்கு அனுப்புவதும் தான் இந்த பெருந்தொற்றின் போது உத்தியோகபூர்வ அரசியலின் மையமாக உள்ளது. தொழிலாளர்களுடன் அது படுமோசமான ஒரு மோதலைத் தொடுத்து வருகிறது என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டளை அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். மரீன் லு பென் அழைத்தது போல், பாசிசத்தை 'மிதமாக காட்டுவது' (de-demonization) என்பது ஒரு மூடுதிரையாகும், ஆளும் வர்க்கம் அதற்குப் பின்னால் இருந்து போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாரிய நோய்தொற்றுக்களை அமல்படுத்த சர்வாதிகாரம் மற்றும் ஒடுக்குமுறைக்குத் திட்டமிடுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

கருத்துக்கணிப்புகளில் செமூரின் வளர்ச்சி குறித்து ஒரு தீவிர விளக்கம் தேவைப்படுகிறது. 'எல்லோரும் அமைதியாக நினைப்பதை செமூர் உரக்க கூறுகிறார்' என்ற ஊடகங்களின் பல்லவி ஒரு விளக்கம் அல்ல, மாறாக ஒரு பொய். தொழில்துறை இனப்படுகொலை, அரசியல்ரீதியில் யூத-எதிர்ப்பு மற்றும் அதிவலது அதிகாரிகளின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளுக்குப் பிரெஞ்சு மக்களிடம் ஆதரவு இல்லை. இதே வேறுவிதமாக கூறுபவர்கள் டு வில்லியே போன்ற அதிவலது ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்களிடம் இருந்து தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் வர்க்கப் பிளவை மூடிமறைக்கிறார்கள் என்பதுடன், அவை தொழிலாள வர்க்கத்திற்கு நிலைநிறுத்தும் அச்சுறுத்தலையும் குறைத்துக் காட்டுகிறார்கள்.

யதார்த்தத்தில், பொருளாதார பூகோளமயமாக்கலின் சந்தேக்கத்திற்கிடமற்ற முற்போக்கான பக்கங்களில் ஒன்று என்னவென்றால், அது தொழிலாளர்களிடையே முன்னெப்போதையும் விட அதிகமாக வெளிப்படையான அணுகுமுறைகளை ஊக்குவிக்கிறது. இந்த வசந்த காலத்தில் Harris Interactive நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், 89 சதவீத பிரெஞ்சு மக்கள், வேலையிடத்தில் பிரெஞ்சு மக்களுக்கும் பிரெஞ்சு அல்லாதவர்களுக்கும் இடையிலான சமத்துவமின்மையை, முன்பில்லாத அளவுக்கு, எதிர்ப்பதைக் கண்டறிந்தது. சமூக சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார கஷ்டங்கள் ஆகியவை தொழிலாளர்களின் கவலைகளில் மேலோங்கி இருப்பதை ஒன்று மாற்றி ஒன்றாக கருத்துக்கணிப்புகள் கண்டறிகின்றன. இப்படி இருக்கையில், இடதுசாரி சக்திகளை விட செமூர் மாதிரியான நவ-பாசிசவாதிகள் ஏன் ஆதரவைப் பெறுகிறார்கள் என்று ஒருவர் கேட்க வேண்டும்?

இதற்குப் பதிலளிக்க, பிரான்சில் ஆளும் உயரடுக்கு “இடது' என்று எதை முன்வைக்கிறது என்பதை ஒருவர் நேர்மையோடு ஆராய வேண்டும்.

இது, மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், 1971 இல் பிரான்சுவா மித்திரோன் நிறுவிய சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) எச்சசொச்சங்கள், 1968 மாணவர் இயக்கத்திற்குப் பிந்தைய நடுத்தர வர்க்கம் ஆகியவற்றின் 'இடது ஐக்கிய' கூட்டணி ஆகும். தத்துவார்த்தரீதியில், பின்நவீனத்துவ இனவாத பாலின அடையாள அரசியல் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் அரசியல் நிலைப்பாடும் வர்க்க குணாம்சமும் ஒரு முன்னாள் நாஜி ஒத்துழைப்புவாதியான மித்திரோனைச் சுற்றியிருந்த வங்கியாளர்கள், பெருநிறுவன தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் அமைக்கப்பட்டது.

அதன் முன்வரலாறு பிரான்சின் கடைசி சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் 2012 பிராச்சாரத்தில் உரிய முறையில் தொகுத்தளிக்கப்பட்டது, அவர் நியூ யோர்க் டைம்ஸிற்கு கூறுகையில், “இன்று இங்கே பிரான்சில் கம்யூனிஸ்ட்கள் இல்லை. இடதுசாரிகள் பொருளாதாரத்தை தாராளமயமாக்கி, நிதி மற்றும் தனியார்மயமாக்கலுக்கு சந்தைகளைத் திறந்தனர். பயப்பட அங்கே ஒன்றுமில்லை,” என்று கூறி, அவரது 'சோசலிசம்' குறித்து வோல் ஸ்ட்ரீட்டுக்கு மறுஉத்தரவாதம் அளித்தார்.

ஹோலாண்ட் தேர்வானதற்குப் பின்னர், அவர் திருமதிகளில் ஒருவர் தனிப்பட்ட இரகசியங்களை வெளியிட்டதில் இருந்து, அதாவது உழைக்கும் மக்களின் முன்பினும் பெரிய அடுக்குகள், பற்களைப் பராமரிக்க செலவு செய்ய முடியாதவர்கள் என்பதால், இந்த 'சோசலிசவாதி' தனிப்பட்டரீதியில் தொழிலாளர்களைப் 'பொக்கைவாயர்கள்' என்று குறிப்பிட்டதில் இருந்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவரை வெறுப்புடன் கண்டனர்.

2017 இல் சோசலிஸ்ட் கட்சியின் அவமானகரமான தேர்தல் தோல்வி ஹோலாண்டின் நிதித்துறை அமைச்சர் இமானுவல் மக்ரோன் ஜனாதிபதியாக அனுமதித்தது. அவரின் வெற்றி உரையிலேயே நவ-பாசிசவாதிகளுக்கு ஒரு 'குடியரசு வீரவணக்கம்' செலுத்தி, மக்ரோன் மாலியில் ஹோலாண்டின் போரைத் தொடர்ந்ததுடன், ஓய்வூதியங்கள், கூலிகள் மற்றும் பிற சமூக திட்டங்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினார். சமூக சமத்துவமின்மைக்கு எதிரான 'மஞ்சள் சீருடையாளர்கள்' போராட்டங்கள் மீது அவர் ஒரு மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறைக்கு உத்தரவிட்டதுடன், அதில் 10,000 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு, 4,400 போராட்டக்காரர்கள் காயமடைந்த நிலையில், மக்ரோன் பிரான்சின் நாஜி ஒத்துழைப்புவாத சர்வாதிகாரியும், தேசதுரோகத்திற்காக தண்டனை பெற்றவருமான பிலிப் பெத்தானை ஒரு 'சிறந்த சிப்பாய்' என புகழ்ந்தார்.

சம்பவங்கள், சோசலிஸ்ட் கட்சியின் குட்டி-முதலாளித்துவ கூட்டாளிகளையும் மக்ரோனையும் முழுமையாக அம்பலப்படுத்தி உள்ளன, இவர்களில் பலர் பல தசாப்தங்களுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்தும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) இருந்தும் முறித்துக் கொண்டவர்கள் ஆவர். ஒலிவியே பெசன்ஸெநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற இத்தகைய சக்திகள் 'மஞ்சள் சீருடையாளர்களின்' ஆரம்ப போராட்டங்களை தொழிற்சங்க அதிகாரத்துவம் நவபாசிசவாதம் என்று பொய்யாக கண்டித்ததை மட்டும் எதிரொலிக்கவில்லை. அவை வைரஸை அகற்றுவதற்கான கொள்கையை மக்ரோன் நிராகரித்து, “வைரஸுடன் வாழ்வதற்கு' அவர் விடுத்த அழைப்பையும் ஏற்றுக் கொண்டதுடன், ட்ரம்ப் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் முக்கியத்துவத்தையும் நிராகரித்தன.

கல்வித்துறையில் உள்ள செல்வசெழிப்பான நடுத்தர வர்க்க அடுக்குகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை அடித்தளத்தில் கொண்ட இத்தகைய தனிச்சலுகை பெற்ற போலி-இடது சக்திகள், சோசலிச தொழிலாளர்கள் இயக்கத்தின் பாரம்பரியத்திற்கு விரோதமாக இருப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கத்தைத் தடுப்பதற்காக தங்களை அர்ப்பணித்துள்ளன என்பது அரசியல் ஸ்தாபகத்திற்குள் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

2019 இல் ரோமன் போலன்ஸ்கியின் ட்ரேபுஸ் விவகாரம் சம்பந்தமான திரைப்படம் J’Accuse திரையரங்குகளில் வெளியான போது, போலி-இடதுகள் செமூருக்கு பச்சைக் கொடி காட்டின. மில்லியன் கணக்கானவர்கள் அப்படத்தைக் காணச் சென்றபோது, போலி-இடது அதை கண்டித்தது. பருவமடையாத ஒருவர் மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்காக 1977 இல் ரோமன் போலன்ஸ்கி வழக்கில் இழுக்கப்பட்டவர் என்பதை மேற்கோளிட்டு, அவை அப்படத்திற்கு எதிராக வலதுசாரி பெண்ணியவாதி ஒருவரின் #MeToo பிரச்சாரத்தை ஆதரித்து, திரையரங்கில் 'போலன்ஸ்கி பாலியல் துஷ்பிரயோகி, கலைத்துறையினர் உடந்தையாளர்கள்!” என்று கூச்சலிடுவதற்காக இளைஞர்களை அங்கே அனுப்பியது. வரலாற்று உண்மைக்கு விரோதமான இந்த போலி-இடது, அதி வலதுக்கு எதிராக ட்ரேஃபுஸ் விவகாரத்தையோ, அல்லது வேறெதையுமோ, பாதுகாக்கப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.

'இடது உயரடுக்குகள்' மீதான செமூரின் கண்டனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அவரது பார்வையாளர்களை உருவாக்க உதவுகின்றன. போலி-இடது அரசியலின் எல்லையற்ற பாசாங்குத்தனத்தின் மீது ஏராளமான தொழிலாளர்கள் உள்ளுணர்வாக அவநம்பிக்கையோ அல்லது வெறுப்பையோ உணர்கிறார்கள். செமூர் இந்த 'அமைப்புமுறைக்கு விரோதமாக' இருப்பதாக ஊடகங்கள் மோசடியாக முத்திரை குத்துகின்றன, ஏனென்றால் அவர் அதன் பகிரங்கமான இரகசியங்களில் ஒன்றை வைத்து விளையாடுகிறார்—அதனால் தான் பெருந்திரளான உழைக்கும் மக்களுக்கு விரோதமாக உள்ள குட்டி-முதலாளித்துவ இயக்கம், 'இடது' என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்க்கவில்லை மாறாக அதை பாதுகாப்பதற்காக இன வெறுப்பையும் வரலாற்று பொய்களையும் பயன்படுத்த முயல்கிறார்.

பெருந்திரளான மக்களை கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளாக்குவது, சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை ஆகிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்களிடையே வெடிப்பார்ந்த எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆளும் வர்க்கம் ஆழமாக தனிமைப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்க நிலைப்பாட்டில் இருந்து சமூக ஜனநாயகவாதிகளையும் போலி-இடதுகளையும் எதிர்த்து, ஒரு மார்க்சிச சர்வதேசியவாதத்தை, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே பிரான்சிலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தீர்க்கமான கேள்வியாகும்.

தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி-இடதுகளால் முன்வைக்கப்படும் தடைகளைக் கடந்து ஆளும் வர்க்கத்தின் அச்சுறுத்தல்களை தொழிலாள வர்க்கம் ஒரு தன்னியல்பான இயக்கத்தின் மூலம் தோற்கடிக்க முடியாது. இதற்கு, ஒரு சர்வதேச இயக்கத்தில் அவர்களை ஐக்கியப்படுத்தி, தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று போராட்டங்கள் உடனும் மற்றும் மார்க்சிச இயக்கத்துடனும் அவர்களின் தொடர்புகளை நனவுபூர்வமாக அவர்களுக்குள் செலுத்தி, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அவர்கள் முகங்கொடுக்கும் அபாயங்களைத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கைப்படுத்துவது அவசியமாகும்.

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்குள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது உடனடியாக மிகப்பெரும் அரசியல் பணியாகும். உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்களும் வாசகர்களும் அவசியமான தீர்மானங்களை ஏற்று, இதற்காக பிரான்சில் பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியிலும் (Parti de l’égalité socialiste) உலகெங்கிலும் உள்ள ICFI இன் ஏனைய பிரிவுகளிலும் இணைய வேண்டும்.

Loading