அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவிற்கு எதிரான போர் உந்துதலை தீவிரப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவின் எல்லைகளில் தங்கள் இராணுவ பிரசன்னத்தை அதிகரிப்பதை தொடர்கையில், அவர்களின் பிரதிநிதிகள் வெறித்தனமான ரஷ்ய-எதிர்ப்பு வாய்வீச்சு மற்றும் போர் அச்சுறுத்தல்களை முன்னெடுத்து வருகின்றனர். மாஸ்கோ உக்ரேனிய எல்லையில் துருப்புக்கள் மற்றும் தளபாடங்களை குவித்துள்ளதுடன் மற்றும் அதன் மேற்கத்திய அண்டை நாடு மீது படையெடுப்பதற்கான தயாரிப்பில் சமூக ஊடகங்களில் உக்ரேனிய எதிர்ப்பு பிரச்சாரத்தை பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்று வலியுறுத்தி, அட்லாண்டிக் இடையிலான கூட்டணியின் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் செவ்வாயன்று ரஷ்யா 'அதிக விலையை' கொடுக்கவேண்டியிருக்கும் என்று அறிவித்தார். அத்தகைய நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை அவரது வார்த்தைகளை எதிரொலித்து, 'கடுமையான விளைவுகளை' பற்றி எச்சரித்தார். இருவரும் 'உக்ரேனிய இறையாண்மைக்கு' தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினர்.

நவம்பர் 19, 2021 அன்று எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், உக்ரேனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள தரைப்படைகளின் இணைப்பு தளபதி பிராண்டன் பிரெஸ்லி, உக்ரேனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதிகள் போரில் கூட்டுப் படைகள் செயல்படும் பகுதிக்கு விஜயம் செய்தபோது போரில் பாதிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்திய வரைபடத்தை பார்க்கிறார். (AP ஊடாக உக்ரேனிய கூட்டுப் படைகள் நடவடிக்கைகளின் செய்தி சேவை) [AP Photo/Ukrainian Joint Forces Operation Press Service]

மாஸ்கோ தனது பிராந்தியத்திற்குள் துருப்புக்களை நகர்த்துவதற்கு தனக்கு முழு உரிமையும் உள்ளது என்று வலியுறுத்துகிறது. முற்றிலும் வாஷிங்டனின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்ட ரஷ்யாவின் மேற்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளின் அளவு, உக்ரேனை ஆக்கிரமிக்கத் தயாராகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. புட்டின் ஒரு 'ஊடுருவலுடன்' முன்னோக்கிச் செல்லலாமா வேண்டாமா என்று தீர்மானித்தாரா என்பது தெளிவாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், கிரெம்ளின் 'குறுகிய காலத்தில் அவ்வாறு செய்வதற்கான திறனை உருவாக்குகிறது' என்று பிளிங்கன் கூறினார்.

உண்மையில், கியேவ் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் நேட்டோ, கருங்கடலில் கடற்படைப் பயிற்சிகள், ரஷ்ய வான்வெளியில் பகுதிக்குள் குண்டுவீச்சு விமானங்களை பறப்பது, ரஷ்யாவின் முழு மேற்கு எல்லையிலும் பாரிய இராணுவப் பயிற்சி நடவடிக்கைகள், பால்டிக் நாடுகளுக்கு துருப்புக்களை அனுப்புதல் உட்பட முடிவில்லாத ரஷ்ய எதிர்ப்பு ஆத்திரமூட்டல்களை மேற்கொண்டு வருகிறது.

ஜூன் மாதம், ஒரு இங்கிலாந்து போர்க்கப்பல் ஆத்திரமூட்டும் வகையில் ரஷ்யாவால் உரிமை கோரப்பட்ட கருங்கடல் நீர் பகுதியினுள் நுழைந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்த பகுதிக்கு அமெரிக்கா மூன்று போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு மந்திரி சேர்ஜி ஷோய்கு கடந்த வாரம் கிரெம்ளின் 'ரஷ்ய எல்லைகளுக்கு அருகே அமெரிக்க மூலோபாய குண்டுவீச்சு நடவடிக்கைகளில் கணிசமான அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது' என்று கூறினார். 'அவர் மேற்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து ஒரே நேரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதங்களை' எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர் என்றார்.

செவ்வாயன்று, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், போலந்து தேசிய பாதுகாப்பு மந்திரி மாரியுஸ் பிளாஸ்ஷெக்குடன் 'நேட்டோவின் கிழக்குப் பகுதியில் தடுப்பை மேம்படுத்துவதற்கான வழிகள்' பற்றி தொலைபேசியில் பேசினார். பெலாரஷ்யன்-போலந்து எல்லையில் ரஷ்யா 'மறைமுகமான போரில்' ஈடுபட்டுவருவதாக கூறப்படும் கண்டனங்களை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அதிகரித்து வருகின்றன. ஜேர்மன்-ரஷ்ய எரிவாயு குழாய் Nord Stream 2 மீது வாஷிங்டன் புதிய தடைகளை விதித்துள்ளது. தற்போதைய நெருக்கடியால் கிரெம்ளினுக்கு முக்கிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த எரிவாயு குழாய் திட்டம் முற்றுமுழுதாக முடிவடையக்கூடும் என்று பிரிட்டிஷ் கார்டியன் பத்திரிகை அறிவித்தது.

கடந்த வெள்ளியன்று, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த வாரம் அவரது அரசாங்கத்தை கவிழ்க்க, உக்ரேனின் பணக்கார தன்னலக்குழுவுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறப்படும் மாஸ்கோவின் சதியை கியேவ் கண்டுபிடித்ததாக அறிவித்தார். கிரெம்ளின் இந்த கூற்றுக்களை மறுக்கிறது. பிளிங்கனின் வார்த்தைகளில், 'உக்ரேனை உள்ளிருந்து சீர்குலைக்க' கிரெம்ளின் செயல்படுகிறது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மேற்கத்திய அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கூறினர். '2014 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முன் படையெடுப்பு' பற்றி இரு தரப்பிலிருந்தும் தொடர்ச்சியான கருத்துக்கள் உள்ளன. இது வாஷிங்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸால் நிதியளிக்கப்பட்ட ஒரு சதியில் கியேவில் ஒரு தீவிர வலதுசாரி, ரஷ்ய-விரோத அரசாங்கம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை நனவானமுறையில் சிதைப்பதாகும்.

மேற்கத்திய ஊடகங்கள், வாஷிங்டனால் தூண்டிவிடப்படும் ஒரு சாத்தியமான பாரிய படுகொலைக்கு பொதுமக்களை தயார்படுத்தும் முயற்சியில், மாஸ்கோவின் பேய்த்தனமான நோக்கங்கள் என்று கூறப்படும் அறிக்கைகளால் வானலைகளை நிரப்புகிறது. ரஷ்யாவிற்கு எதிரான போரை நியாயப்படுத்துவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஒரு பேரழிவுகரமான கோவிட்-19 அலைக்கு மத்தியில் ஒரு நாட்டிற்கு தலைமை தாங்கும் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தனது நாடு நேட்டோவில் அங்கத்துவம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அட்லாண்டிக் கூட்டமைப்பு உடனடியாக தனது அரசாங்கத்துடன் மாஸ்கோவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் உள்ளடக்கும் “அச்சுறுத்தும் திட்டத்தின்” கீழ் இராணுவ ஒத்துழைப்பை முடுக்கிவிட வேண்டும் என்றும் தொடர்ந்து கோருகிறார்.

இந்த வாரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரேனிய மண்ணில் நேட்டோவின் தாக்குதல் திறன்களை நிலைநிறுத்துவது ஒரு கடக்க முடியாத ஒரு 'சிவப்புக் கோடு' என்று கூறியதுடன், உக்ரேனை நேட்டோவில் அனுமதிப்பதையும் தடுக்கும் ஒரு உடன்படிக்கையை எட்ட முன்மொழிந்தார். வியாழன் அன்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஸகாரோவா இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி மற்றும் நேட்டோவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான உறவினை ஆழமாக்கல் 'ஐரோப்பாவில் இராணுவ-அரசியல் நிலைமையின் ஸ்திரமின்மையை' தூண்டிவிடும் என்று எச்சரித்தார்.

பதிலுக்கு, நேட்டோ தலைவர் ஸ்டோல்டன்பேர்க், இந்த வார தொடக்கத்தில் லாட்வியாவில் பேசுகையில், 'உக்ரைன் மற்றும் 30 நேட்டோ நட்பு நாடுகள் மட்டுமே உக்ரேன் எப்போது நேட்டோவில் சேரத் தயாராக உள்ளன என்பதைத் தீர்மானிக்கின்றன. ரஷ்யாவிற்கு வீட்டோ இல்லை, ரஷ்யாவிற்கு கூறுவதற்கு எந்த கருத்தும் இல்லை. மேலும் ரஷ்யாவிற்கு தனது அண்டை நாடுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஒரு செல்வாக்கு மண்டலத்தை நிறுவ உரிமை இல்லை என்றார்.

வியாழனன்று ஸ்டாக்ஹோமில் பிளின்கனுடனான சந்திப்பிற்குப் பின்னர் பேசிய ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் உக்ரேனிய எல்லையில் ரஷ்யா தனது படைகளை பின்வாங்க வேண்டும் என்ற பிளிங்கனின் கேள்வி பற்றி ஒரு செயலிழந்த கோரிக்கையை விடுத்தார். ரஷ்யா, உக்ரேன் தொடர்பாக நேட்டோவுடன் 'எந்தவித மோதலையும் விரும்பவில்லை' என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு 'தன் நியாயபூர்வமான பாதுகாப்பு நலன்களை உறுதி செய்வதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது' என்றார்.

ஐரோப்பிய பாதுகாப்பிற்கும் கூட்டுழைப்பிற்குமான அமைப்பான OSCE உள்ளடங்கலாக, ரஷ்யாவிற்கான நேட்டோ குழுவிலும் பிரிக்கப்படாத மற்றும் பாதுகாப்பின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் கூறினார். அதில் ஏனையவர்களின் பாதுகாப்பின் இழப்பில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உரிமை ஒருவருக்கும் இல்லை என்று கூறப்படுகின்றது. மேலும் நேட்டோவின் கிழக்கு நோக்கி முன்னேற்றம் நிச்சயமாக நமது பாதுகாப்பின் அடிப்படை நலன்களை பாதிக்கும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “... நேட்டோ இன்னும் இந்த கருப்பொருளை அல்லது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முன்வைத்த உத்தரவாதங்கள் அல்லது யோசனைகளை விவாதிக்க மறுத்தால், நிச்சயமாக நாங்கள் எங்கள் பாதுகாப்பு, எங்கள் இறையாண்மை மற்றும் எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டை ஒருவரையும் சார்ந்து இருக்காது உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்போம்' என்றார்.

வியாழன் அன்று, லாவ்ரோவ் மற்றும் பிளிங்கன் தங்கள் நாடுகளின் தலைவர்களுக்கு இடையே ஒரு உச்சிமாநாட்டு கூட்டம் இருக்கும் என்று சுட்டிக்காட்டினர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்கள் ஒரு ஆழமான உள்நாட்டு நெருக்கடியால் உந்தப்பட்டவை. அதன் தற்போதைய உயிர்வாழ்விற்கு அதிகப்படியான பணத்தை அச்சிடுவதன் மூலமும், மக்களைக் கொடிய வைரஸை எதிர்கொண்டு வேலை செய்யும்படி கட்டாயப்படுத்துவதன் மூலமும், மிகைப்படுத்தப்பட்ட பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க முதலாளித்துவம் உலக ஆதிக்கத்தை பாதுகாக்க இராணுவ வன்முறையில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. 6.6 மில்லியன் சதுர மைல்களுக்கும் அதிகமான உலக வளங்கள் மற்றும் சந்தைகளை ரஷ்ய ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அதன் பசிக்கு தாங்க முடியாத வரம்பாக அது பார்க்கிறது. இதற்கு, அதன் செல்வமும் அதிகாரமும் முழுவதுமாக உலக முதலாளித்துவ அமைப்புடன் பிணைக்கப்பட்டிருக்கும் கிரெம்ளின் மற்றும் ரஷ்யாவின் தன்னலக்குழுக்களின் ஆட்சியாளர்களிடம் பதில் எதுவும் இல்லை.

Loading