மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலகின் பெரும்பாலான மிகப் பெரும் செல்வந்த நாடுகளை உள்ளடக்கிய, அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டணி, 115.3 மில்லியன் கோவிட்-19 நோயாளிகள் மற்றும் 1.89 மில்லியன் இறப்புகளைச் சந்தித்துள்ளது. ஐரோப்பாவில் மட்டுமே 700,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) முன்கணிக்கும் குளிர்கால பெருந்தொற்று அதிகரிப்பினூடாக அது சென்று கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, தற்போதைய கோவிட்-19 தடுப்பூசிகளில் இருந்தே நழுவக்கூடிய புதிய ஓமிக்ரோன் வகை இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டிலும் பரவி வருகிறது.
இந்த தொற்றைத் தடுக்க எந்தவித 'பணி நிறுத்தங்களோ அல்லது முடக்கங்களோ' இருக்காது, இப்போதிருக்கும் தடுப்பூசிகள் மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று வியாழக்கிழமை பைடென் உறுதியளித்தார். இந்த பெருந்தொற்றுக்கு மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை விலையாக கொடுத்தாலும் வோல் ஸ்ட்ரீட் இலாபங்களின் பாய்ச்சல் மீது கை வைக்க முடியாது என்பதே இதன் அர்த்தமாகும்.
இந்தப் பின்னணியில், வாஷிங்டன், அதன் நேட்டோ நட்பு நாடுகளின் ஆதரவுடன், ரஷ்யாவுடன், அல்லது சீனாவுடனும் கூட, முற்றுமுதலான போரைத் தூண்டக்கூடிய அபாயங்களைக் கொண்ட இராணுவப் பதட்டங்களைத் தூண்டிவிட்டு வருகிறது, இது இந்த பெருந்தொற்றுக்கான அதன் பொறுப்பற்ற குற்றகரமான கொள்கைகளுக்கு அதிகரித்து வரும் உள்நாட்டு எதிர்ப்பிலிருந்து திசைதிருப்ப சேவையாற்றுகிறது.
ரஷ்ய எல்லைகளில் நேட்டோ ஓர் இராணுவக் கட்டமைப்பைத் தொடங்கி உள்ளது. அது டாங்கி-தகர்ப்பு ஜவெலின் ஏவுகணைகள், பிரிட்டன் தயாரித்து கொடுக்கவிருக்கும் வழிநடத்தும் ஏவுகணை போர்க்கப்பல்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணை பேட்டரிகளை வழங்கி உக்ரேனை ஆயுதமயப்படுத்துகிறது. கியேவின் உக்ரேனிய ஆட்சி ரஷ்யாவை ஒட்டியுள்ள அதன் எல்லையில் 125,000 துருப்புகளைத் திரட்டி வருகிறது என்ற ரஷ்ய அறிக்கைகளை அது மறுக்கவில்லை.
பின்னர், நேட்டோ நாடுகளில் வசிக்கும் 521,291 பேர் நோயில் விழுந்த போதும், கோவிட்-19 ஆல் 3,876 பேர் இறந்துள்ள போதும், ஒரு மிகப் பெரிய ஆயுதமேந்திய சக்தியான ரஷ்யாவுடன் போருக்குத் தயாரிப்பு செய்யுமாறு வெள்ளிக்கிமை பைடென் நேட்டோவுக்கு அழைப்பு விடுத்தார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் நாளை ஒரு தொலைபேசி அழைப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பைடென், ரஷ்யாவின் 'அபாய எச்சரிக்கைகளை' (red lines) அவர் நிராகரிப்பதாக, அதாவது அவர்கள் ஓர் அபாய எச்சரிக்கையைக் கடந்து விட்டதாகவும், இது போருக்கு இட்டுச் செல்லும் என்று ரஷ்யா எச்சரித்தாலும் அவர் நடவடிக்கைகள் எடுப்பார் என்பதை பைடென் பொறுப்பற்ற முறையில் அறிவித்தார். உக்ரேன் குறித்து கூறுகையில், “ரஷ்யாவின் நடவடிக்கைகள் பற்றி நீண்ட காலமாக எங்களுக்குத் தெரியும், புட்டினுடன் ஒரு நீண்ட விவாதத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. நான் யாருடைய அபாய எச்சரிக்கைகளையும் ஏற்க மாட்டேன்,” என்று பைடென் அறிவித்தார்.
ஏவுகணை தளங்களைக் கொண்டு நேட்டோ உக்ரேனை ஆயுதமயப்படுத்தி வருவது ஓர் 'அபாய எச்சரிக்கை', இது ரஷ்யாவுடன் போருக்கு இட்டுச் செல்லும் என்ற புட்டினின் கடந்த வார எச்சரிக்கைக்கு பதிலடியாகவே பைடென் ரஷ்யாவின் 'அபாய எச்சரிக்கைகளை' நிராகரித்துள்ளார். இந்த தளங்களில் இருந்து ஏவப்பட்ட போர்க்கப்பல் ஏவுகணைகள் மாஸ்கோவின் மையத்தைத் தாக்க வெறும் ஆறு நிமிடங்களே ஆகும்.
வாஷிங்டன் அதன் கொள்கையை, ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரேனைப் பாதுகாப்பதற்காக என்று சித்தரிக்கிறது. உக்ரேன்-ரஷ்ய எல்லையை ஒட்டி 94,300 ரஷ்ய துருப்புகள் திரட்டப்பட்டிருப்பதாகவும், “ரஷ்யாவிடம் இருந்து மிகப் பெரியளவில் ஒரு தீவிரப்பாடு ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும்,” உக்ரேனிய பாதுகாப்புத்துறை அமைச்சர் Oleksii Reznikov குற்றஞ்சாட்டிய பின்னர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டினார்.
சீனா, தைவான் மீது படையெடுக்கத் தயாராகி வருவதாக வாதிட்டு, 'பயங்கரமான விளைவுகள்' குறித்து எச்சரித்த பின்னர், பிளிங்கென் கூறுகையில், 'இதற்கு முன்னர் 2014 இல் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்த போதே, நாம் இந்த விளையாட்டைப் பார்த்துள்ளோம். பின்னர், இப்போது போலவே, அவர்கள் எல்லைக்கு அருகே போர் படைகளைக் கணிசமாக அதிகரித்தார்கள். பின்னர், இப்போது போலவே, அவர்கள் முன்-திட்டமிட்ட இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த உக்ரேனை ஆக்கிரமிப்பாளராக சித்தரிக்க தவறான தகவல்கள் பரப்புவதைத் தீவிரப்படுத்தினார்கள்,” என்றார்.
இதுவொரு பொய் மூட்டை. 'ஜனாதிபதி புட்டின் படையெடுக்க முடிவெடுத்து விட்டாரா என்பது நமக்குத் தெரியாது' என்றும், 'உள்நோக்கங்கள் மற்றும் கால நிர்ணயம் மீது நிச்சயமற்றத்தன்மை' உள்ளது என்று பிளிங்கென் அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது, ரஷ்ய துருப்புகள் ரஷ்ய மண்ணில் நிறுத்தப்பட்டுள்ளன, இந்த துருப்புகள் என்ன செய்யும் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று மட்டுமே வாஷிங்டனும் கியேவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் இந்த வலுவற்ற ஆதாரங்களின் அடிப்படையில், அவர்கள் வலியுறுத்துகையில் நேட்டோ நாடுகள் நடைமுறையளவில் இந்த பெருந்தொற்றை விட்டு விட்டு, அதற்கு பதிலாக ரஷ்யாவுடன் போருக்குத் தயாரிப்பு செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார்கள்.
2014 நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால், வம்புச் சண்டைக்கு சென்றது ரஷ்யா அல்ல, மாறாக நேட்டோ தான் வம்புச் சண்டையில் இறங்கியது என்பதைக் காட்டுகிறது. பெப்ரவரி 2014 இல், பைடென் பராக் ஒபாமாவின் துணை ஜனாதிபதியாக இருந்த போது, வாஷிங்டனும் பேர்லினும் நவ-நாஜி வலதுசாரி தலைமையிலான ஒரு பதவிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தன, அது ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சைப் பதவியிலிருந்து இறக்கியது. அது ஸ்வோபோடா கட்சி உட்பட ஒரு அதிவலது ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது, இதே கட்சியை ஐரோப்பிய ஒன்றியம் 2012 இல் இனவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத கண்ணோட்டங்கள் கொண்டிருப்பதாக உத்தியோகபூர்வமாக கண்டித்திருந்தது. இக்கட்சி உக்ரேனில் ரஷ்ய மொழி பேசுவதற்குத் தடைவிதிக்கவும் வம்சாவழியாக இருந்து வரும் ரஷ்யர்களைப் படுகொலை செய்யவும் சூளுரைத்தது.
அதிவலது கும்பல்கள், பிரிந்து செல்ல வாக்களித்த டொன்பாஸ் மற்றும் கிரிமியா போன்ற கிழக்கு உக்ரேனின் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில் வேட்டையாடல்களைத் தொடங்கின. கியேவின் பாசிச ஆட்சிக்குக் கிரிமியா மீது உறுதியான உரிமைக்கோரல் இருக்கவில்லை. பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற 1783 இல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட அந்த பகுதி, 1954 இல் சோவியத் ஒன்றியத்திற்குள் அதன் உள்நாட்டு அந்தஸ்து பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருந்தபோது தான், சோவியத் பிரதமர் நிகிடா குருஷ்சேவ் அதை உக்ரேனுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
இருப்பினும், ரஷ்யாவுடன் மீண்டும் இணைவதற்கான கிரிமியாவின் வாக்குகள் உக்ரேன் மீதான ரஷ்ய 'படையெடுப்பாக' அமைகிறது என்று போருக்கான நேட்டோ தயாரிப்புகளை நியாயப்படுத்தி, 2014 இல் இருந்து, நேட்டோ மோசடியாக கூறி வருகிறது.
நேட்டோ உக்ரேனைப் பாதுகாக்கவில்லை, மாறாக அதை ஆயுதமயப்படுத்தி வருவதுடன் மாஸ்கோவைத் தாக்க சீண்டிவிட்டு வருகிறது. இது தொடர்பாக, ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் முர்பி ஞாயிற்றுக்கிழமை கூறியதைப் பார்ப்பது மதிப்புடையதாக இருக்கும், “ரஷ்யா மேற்கொண்டு நகர விரும்பினால், அது ரஷ்யாவுக்கு அடுத்த ஆப்கானிஸ்தானாக ஆகிவிடும்,” என்றார்.
1979 இல் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் படையெடுப்பை தூண்டுவதற்கு ஜனநாயகக் கட்சி கார்டர் நிர்வாகம் எடுத்த முடிவை முர்பி குறிப்பிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் மூலோபாயவாதி ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி (Zbigniew Brzezinski) முன்மொழிந்த இந்த கொள்கையில், சோவியத் ஆதரவிலான ஆப்கான் ஆட்சிக்கு எதிராக இஸ்லாமியவாத முஹாதீன்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதும் உள்ளடக்கி இருந்தது. மாஸ்கோ இறுதியில் ஆப்கான் அரசின் ஆதரவுக்காக தலையிட்டதால், பின்னர் அக்கொய்தா தலைவராக ஆக இருந்த ஒசாமா பின் லேடனுடன் இணைந்த சிஐஏ-ஆதரவிலான இஸ்லாமியவாதிகளுடன் ஓர் இரத்தந்தோய்ந்த தசாப்தகால போரில் சோவியத் ஆயுதப்படை சிக்க வைக்கப்பட்டது. 1989 இல் ஒரு கடுமையான தோல்வியால் பாதிக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்தது.
2014 இல், மத்திய கிழக்கில் அமெரிக்க போர்களின் அதிகரித்து வந்த நெருக்கடிக்கு மத்தியில், ரஷ்யாவும் ஈரானும் சிரியப் போரில் நேட்டோவுக்கு எதிராக ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை ஆதரித்த நிலையில், பிரிஜேஜென்ஸ்கி இதே கொள்கையை மீண்டும் செயல்படுத்த அழைப்பு விடுத்தார்.
உக்ரேன் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஒரு சில மாதங்களுக்குப் பின்னர், பிரிஜேஜென்ஸ்கி வில்சன் மையத்தில் ஓர் உரை வழங்கினார், அதில் அவர் உக்ரேன் போரில் ரஷ்யாவைச் சிக்க வைக்க முன்மொழிந்தார். உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால், இரண்டாம் உலகப் போரின் போது ஸ்ராலின்கிராட்டில் நடந்த நகர்புற போர்முறையில் நாஜி ஆயுதப்படைகள் சின்னாபின்னமாக்கப்பட்ட அதே பாணியில், கார்கொவ் மற்றும் கியேவ் போன்ற உக்ரேனிய நகரங்களை நேட்டோ தியாகம் செய்து ரஷ்ய ஆயுதப்படைகளைச் சின்னாபின்னமாக்க முடியும் என்றவர் ஈவிரக்கமின்றி விவரித்தார். அவர் பின்வருமாறு கூறினார்:
'இரண்டாம் உலகப் போரில் நகர்ப்புற எதிர்ப்பிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு வரலாறு உள்ளது ... முக்கிய நகரங்கள், கார்கிவ் என்று வைத்துக் கொள்வோம், கியேவ் என்று வைத்துக் கொள்வோம், எதிர்த்தால், வீதிச் சண்டைகள் அவசியமாகிவிட்டால், அது நீண்டகாலத்திற்கு செலவு மிக்கதாக இருக்கும். இந்த விஷயத்தில் உள்ள உண்மை என்னவென்றால் —இங்கே தான் இந்த ஒட்டுமொத்த நெருக்கடியின் காலகட்டம் முக்கியத்துவம் பெறுகிறது—ரஷ்யா அவ்விதமான முயற்சியை மேற்கொள்ள இன்னும் தயாராகவில்லை. அது நிறைய இரத்த விலை கொடுக்க வேண்டியிருக்கும், நிதிகள் முடக்கப்பட்டு நிறைய விலை கொடுக்கச் செய்யும். மேலும் நீண்ட காலமெடுத்து, இன்னும் இன்னும் அதிகமாக சர்வதேச அழுத்தம் உருவாகும். …
“எதிர்க்க தீர்மானகரமாக இருப்பதாக உக்ரேனியர்கள் கூறுவதைப் போல, அவர்கள் அவ்வாறு செய்ய முயல்வதாக தெரிகின்ற நிலையில், அவர்கள் எதிர்க்க தீர்மானகரமாக இருக்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு டாங்கி-தகர்ப்பு ஆயுதங்கள், கையடக்க டாங்கி-தகர்ப்பு ஆயுதங்கள், கையடக்க ராக்கெட்கள் இவற்றை வழங்குவோம் என்பதை அவர்களுக்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்...”
இந்த பொறுப்பற்ற கொள்கையைத் தான் பைடென் நிர்வாகம் இப்போது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நேட்டோ நாடுகளின் தொழிலாளர்கள், முன்னாள் சோவியத் குடியரசுகளின் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச தொழிலாளர்களுக்கு மிகவும் தீவிர எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. தன்னிடம் எந்த முற்போக்கான தீர்வுகளும் இல்லாத ஒரு வெடிப்பார்ந்த நெருக்கடியிலிருந்து வெளியே வர போர் மட்டுமே ஒரு பாதையை வழங்கும் என ஒரு மூர்க்கமான ஆளும் வர்க்கம் தீர்மானிப்பது வரலாற்றில் இதுவொன்றும் முதல்முறை அல்ல.
இந்த பெருந்தொற்று ஒரு தூண்டுதல் நிகழ்வு தான், இது பாரியளவில் வர்க்க பதட்டங்கள் மற்றும் சர்வதேச பதட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஆழமாக நிலைகுலைந்துள்ள பைடென் நிர்வாகமும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய அரசாங்கங்களும் திடீர் தாக்குதல் செய்ய ஒரு இலக்கைப் பெருபிரயத்தனத்துடன் எதிர்பார்த்து படபடப்புடன் காத்திருக்கின்றன.
போருக்கு எதிராகவும் மற்றும் SARS-CoV-2 பெருந்தொற்றைத் தடுத்து இந்த வைரஸ் பரவலை அகற்றுவதற்கான ஒரு விஞ்ஞானபூர்வ கொள்கைக்காகவும் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி அணித்திரட்டுவதே, மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கான இன்றைய தீர்க்கமான கேள்வியாகும்.