மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மெர்சினில் Cimsatas உலோகத் தொழிலாளர்களின் திடீர் வேலைநிறுத்தம்; நிறுவனம், அரசு மற்றும் தொழிற்சங்கத்தின் அழுத்தத்தை மீறி தொடர்கிறது. புதன்கிழமை, துருக்கி உலோகத் தொழில் முதலாளிகள் சங்கத்திற்கும் (Turkish Employers Association of Metal Industries-MESS) மற்றும் தோராயமாக 150,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சரணடைதல் ஒப்பந்தத்தை நிராகரித்து நூற்றுக்கணக்காண தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தினர்.
தொழிற்சங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாக உருவெடுத்த இந்த வேலைநிறுத்தம் உலகளவில் அபிவிருத்தியடையும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதியாகும். அமெரிக்கா முதல் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் வரை நீளும் இத்தகைய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில், தொழிலாளர்களும் இளைஞர்களும் கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதில் அரசாங்கங்கள் பின்பற்றும் குற்றவியல் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை எதிர்க்கின்றனர்.
Cimsatas துருக்கியின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான Cukurova Holding உடன் இணைந்துள்ளது. சுமார் 830 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் புதன்கிழமை இரவு சரணடைதல் ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு மணிநேரம் உற்பத்தி நிறுத்தப்பட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது. பின்னர், வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு தொடங்கிய மாற்றுப்பணி நேரத்தில் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி, தொழிலாளர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். அடுத்த மாற்றுப் பணிக்கான தொழிலாளர்களும் தொழிற்சாலைக்கு வந்து போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
தொழிலாளர்களின் வாக்களிப்பு அல்லது ஒப்புதலின்றி தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்ட இந்த சரணடைதல் ஒப்பந்தத்தின்படி, முதல் ஆறு மாதங்களில் பணவீக்க விகிதம் 27.4 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்பதுடன், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஆறு மாதங்களில் மேலும் உயர்த்தப்படும். இது டிசம்பரில் 36 சதவீதத்தை எட்டிய துருக்கியின் ஆண்டு பணவீக்க விகிதத்தை விட மிகக் குறைவாக உள்ளது. சுயாதீன பணவீக்க ஆராய்ச்சி குழு (ENAgroup) உண்மையான வருடாந்திர பணவீக்கம் 82 சதவீதத்தை எட்டியதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தால் உருவான சீற்றம் Cimsatas இல் திடீர் வேலைநிறுத்தத்தைத் தூண்டியது.
வேலைநிறுத்தம் தொடங்கியதன் பின்னர், Birlesik Metal-is அதிகாரிகள் ஆலைக்கு வந்தனர், ஆனால் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பும்படி அவர்களால் வற்புறுத்த முடியவில்லை. தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர், மேலும் “நாங்கள் எங்கள் படகுகளை எரித்துவிட்டோம், நாங்கள் திரும்புவதற்கு வழியில்லை” என்று கோஷமிட்டனர்.
தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய இரண்டு பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட நிறுவன மற்றும் தொழிற்சங்க மேலாளர்கள் கூட்டத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளில், முதல் ஆறு மாதங்களுக்கு கூடுதல் 35 சதவீத உயர்வு வழங்கல்; கூடுதல் நேர வேலை ஊதியத்தை வார நாட்களுக்கு 100 சதவீதமும் வார இறுதி நாட்களுக்கு 300 சதவீதமும் உயர்த்துதல்; நன்மைகளை 100 சதவீதம் அதிகரித்தல்; தொழிலாளர்களின் குடும்பங்களை உள்ளடக்கும் துணை சுகாதார காப்பீடு; வங்கி மூலமான முழுமையான பணம் வழங்கல்; தேநீர் இடைவேளைக்கான உரிமை; மேலும் திடீர் வேலைநிறுத்தங்களுக்கு எந்தவித தடையும் விதிக்கக் கூடாது போன்றவை அடங்கும்.
தொழிற்சாலையில் அழுத்தத்தின் கீழ் தாங்கள் வேலை செய்வதாகவும், “அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது” என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிற்சாலைக்குள் குளிராக இருப்பதாகவும், மேற்கூரை கசிவதாகவும், கழிவறைக்கு செல்லும் உரிமை மறுக்கப்படுவதாகவும், மேலும் இறுதிச் சடங்குகளுக்கு கூட ஒரு நாள் விடுப்பு எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், அவர்கள் கட்டுப்பாடற்ற முதலாளித்துவச் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள் மற்றும் பயங்கரமான சூழ்நிலையில் வேலை செய்கிறார்கள். மேலும், அவர்களது உடல்நலம் மற்றும் வாழ்க்கைக்கு கோவிட்-19 தொற்றுநோயால் அச்சுறுத்தல் உள்ளது.
உலக சோசலிச வலைத் தளம், Cimsatas தொழிலாளர்கள் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுவை உருவாக்கி அவர்களது நடவடிக்கையை விரிவுபடுத்துமாறு அவர்களை வலியுறுத்துகிறது. ஓமிக்ரோன் மாறுபாடு பரவி வரும் நிலையில் ஆபத்தான சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள தொழிலாளர்கள், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முழு வருமான இழப்பீடு வழங்கி அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை எழுப்ப வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, மெர்சின் மற்றும் துருக்கி முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பி ஐக்கியப்பட்ட வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
Cimsatas நிர்வாகம் அச்சுறுத்தும் குறுஞ்செய்தி அனுப்பி, தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்த முயன்றது. அந்த குறுஞ்செய்தி இவ்வாறு தெரிவித்தது: “12.01.2022 அன்று மாலை 4.00 மணி முதல் நீங்கள் வேலையை நிறுத்தி பணியிடத்தை ஆக்கிரமித்த உங்கள் சட்டவிரோதமான செயலால் தினசரி ஏற்படும் 5 மில்லியன் துருக்கிய லிரா இழப்பிற்கும் மற்றும் ஏற்படக்கூடிய பிற சேதங்களுக்கும் நீங்கள் தான் பொறுப்பு என்பதுடன், தேவையான அபராதத் தடைகளும் உங்களுக்கு விதிக்கப்படும் என்று நாங்கள் அறிவிக்கிறோம்.”
ஒவ்வொரு நாளும் ஒரு தொழிலாளிக்கு சுமார் 6,000 துருக்கிய லிரா இழப்பை நிறுவனம் சந்திக்கிறது என்று நிர்வாகம் கூறுகிறது. இருப்பினும், புதிய ஒப்பந்தத்தின் படி, தொழிலாளர்களின் சராசரி மாத சம்பளம் 6,000 துருக்கிய லிராவுக்கும் குறைவாகவே உள்ளது.
துருக்கியின் முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பான Turk-is இன் கருத்துப்படி, நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் வறுமைக் கோடு டிசம்பர் 2021 இல் 13,070 துருக்கிய லிராவாக (940 டாலர்) உயர்ந்தது. மேலும், “நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஆரோக்கியமான, சமச்சீரான மற்றும் போதுமான உணவு (‘பசி வரம்பு’) கிடைக்கத் தேவையான மாதாந்திர உணவுச் செலவுகள்” 4,010 துருக்கிய லிராவாக (290 டாலர்) உயர்ந்தது.
Evrensel நாளிதழிடம் பேசுகையில், ஒரு Cimsatas தொழிலாளி நிறுவனத்தின் செய்திக்கு இவ்வாறு பதிலளித்தார்: “முதலாளிகள் தங்கள் தினசரி இழப்பு 5 மில்லியன் துருக்கிய லிரா என்று கூறுகிறார்கள். அவர்கள் இந்த இழப்பை தொழிலாளர்களிடம் இருந்து ஈடுகட்டப் போவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு நாள் இலாபத்தை கூட தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. தொழிலாளர்களான நாங்கள் உற்பத்தியை செய்கிறோம், ஆனால் அவர்கள் எங்கள் செலவில் கொலை செய்கிறார்கள். நாங்கள் விரும்புவது உண்மையான பணவீக்க விகிதத்திலான ஊதிய உயர்வை மட்டும் தான்.”
தொழிலாளர்களுக்கு எதிராக உதவுமாறு நிறுவனம் அரசிடம் முறையிட்டது. ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு, கலவர தடுப்பு தண்ணீர் பீரங்கியும் அங்கு கொண்டுவரப்பட்டது, அத்துடன் மாவட்ட ஆளுநரும் பொலிஸ் அதிகாரியும் தொழிற்சாலைக்கு வந்தனர்.
பொலிஸ் அழுத்தத்தின் கீழ் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அரசு அதிகாரிகள் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தினர், ஆனால் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பின்வாங்க மறுத்துவிட்டனர். பின்னர் பொலிசார் தலையிட்டு அச்சுறுத்தியதுடன், பணியிடத்தை காலி செய்யும்படி தொழிலாளர்களை கட்டாயப்படுத்தினர். இருப்பினும், தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
Evrensel உடன் பேசிய மற்றொரு தொழிலாளி அனைத்து உலோகத் தொழிலாளர்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்தார். அவர் “ஒற்றுமையை காட்டவும், மற்றும் பிழைப்புக்காகவும் எதிர்ப்புகள் பரவ வேண்டும். ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் உலோகத் தொழிலாள வர்க்க சகோதர சகோதரிகள், குறிப்பாக பர்சா மற்றும் கோகேலியில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். இந்த செயல்முறை அனைத்து உலோகத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும். அனைவரும் வெற்றி பெற, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
மூலோபாய உலோகத் தொழிலில் உருவாகியுள்ள இந்த திடீர் வேலைநிறுத்தமானது உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் கொடிய தொற்றுநோய் கொள்கைகளுக்கு எதிராக ஒரு பரந்த தொழிலாள வர்க்க இயக்கம் உருவாக தூண்டுவதைத் தடுக்க தொழிற்சங்கங்கள் முயல்கின்றன.
அழுகிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகி Cimsatas இல் திடீர் வேலைநிறுத்தம் வெடித்ததன் பின்னர், DISK உடன் இணைந்த Birlesik Metal-is தொழிற்சங்கம் மற்றும் Turk-is உடன் இணைந்த Turk Metal தொழிற்சங்கம் ஆகியவற்றின் அதிகாரிகள் உடனடியாக அனைத்து தொழிற்சாலைகளையும் பார்வையிடத் தொடங்கினர். தொழிலாளர்களை சமாதானப்படுத்த முயன்று, தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை “உற்சாகத்துடன்” வரவேற்றதாக அவர்கள் சமூக ஊடகப் பதிவுகளில் பொய் சொன்னார்கள். இருப்பினும், யதார்த்தம் அதற்கு முற்றிலும் நேர்மாறானது.
உலோகத் தொழிலாளர்கள் சங்கத்தின் முகநூல் பக்கத்தில், நாடு முழுவதும் உள்ள பல தொழிற்சாலைகளிலிருந்து உலோகத் தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து, Cimsatas தொழிலாளர்களுடனான தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
Aksaray Mercedes தொழிற்சாலையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் தொழிற்சாலைக்கு வந்த தொழிற்சங்க அதிகாரிகள் கூறுவதைக் கேட்க தொழிலாளர்கள் முன்வரவில்லை என்று கூறினார். அவர் “தொற்றுநோயை சாக்குப்போக்காக கூறி இரண்டு ஆண்டுகளாக தொழிற்சாலைக்கு வராத தொழிற்சங்கத்தின் உள்ளூர் அதிகாரிக்கு Aksaray Mercedes தொழிலாளர்கள் தங்கள் எதிர்வினையைக் காட்டினர். 1,000 தொழிலாளர்களில் 200 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர், எஞ்சிய 800 பேர் கூட்டத்தை நிராகரித்தனர். அவர் 200 பேர் முன்னிலையில் பேசிவிட்டு எவரையும் திருப்திப்படுத்த முயலாமல் தொழிற்சாலையை விட்டு வெளியேறினார்” என்று தெரிவித்தார்.
கோகேலியில் உள்ள Sarkuysan உலோகத் தொழிலாளி இவ்வாறு தெரிவித்தார்: “அவர்கள் [தொழிற்சங்க அதிகாரிகள்] எங்களை ஏமாற்றினார்கள். அவர்கள், ‘[இந்த ஒப்பந்தம் குறித்து] எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நீங்கள் மட்டும் தான் மகிழ்ச்சியாக இல்லை’ என்றார்கள். அதற்கு ‘நாங்கள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக’ நாங்கள் பதிலளித்தோம். ‘நீங்கள் தனியாக நிற்பீர்கள்!’ என்று கூறினார்கள், இப்போது நாங்கள் நிலைமையைப் பார்த்தோம். Cimsatas தொழிலாளர்கள் ஏமாறவில்லை, அவர்கள் செயலில் இறங்கிவிட்டனர். நாங்களும் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
ஏப்ரல் 2020 இல், Sarkuysan தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று பரவினாலும் அவர்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர், அங்கு 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்து உற்பத்தியை நிறுத்தினர்.
பர்சாவில் உள்ள Bosch தொழிற்சாலையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, “மனிதன் கண்ணியத்துடன் வாழ்ந்து ஒருமுறை இறக்கிறான். கௌரவமான மற்றும் நியாயமான வேலை நிலைமைக்காக போராடும் Cimsatas தொழிலாளர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். இது அவர்களது பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவருக்குமானது” என்று கூறினார்.
பர்சாவில் உள்ள ஒரு ரெனால்ட் வாகனத் தொழிலாளி தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒட்டுண்ணித் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டினார். “நீங்கள் உண்மையில் தொழிலாளின் வியர்வையிலிருந்து கிடைக்கும் இலாபத்தில் உயிர்வாழும் ஒரு பெரும் மனிதர்” என்றார்.
அங்காராவில் உள்ள Arcelik தொழிற்சாலையில் உள்ள ஒரு தொழிலாளி இவ்வாறு தெரிவித்தார்: “இன்று, [தொழிற்சங்க அதிகாரி] இப்ராஹிம் பைசர் ஒரு அறிக்கையை வெளியிட தொழிற்சாலைக்கு வந்தார். [அவர் கூறுவதைக் கேட்க] அனைவரையும் வெளியே போகச் சொன்னார்கள், ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியே செல்லாமல் தங்கள் இடங்களிலேயே இருந்தனர். … அனைவரும் மூடிமறைக்கிறார்கள், [ஒப்பந்தம் குறித்து] எவரும் திருப்தியடையவில்லை. இந்த முறை நான் நல்ல விதமாக உணர்ந்தேன். Turk Metal இல் நம்பிக்கையை கைவிட்ட நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கை பெறுவோம். விஷயத்தை நாம் நமது சொந்த கைகளில் எடுப்போம்!”
தொழிற்சாலைகளில் கொதித்துக் கொண்டிருக்கும் இந்த கோபம், துருக்கியிலும் சர்வதேச அளவிலும் ஒரு பெரிய தொழிலாள வர்க்க இயக்கம் உருவாகி வருவதையே சமிக்ஞை செய்கிறது. உலோகத் தொழிலாளர்களும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரும் தங்கள் பணியிடங்களில் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கி, Cimsatas தொழிலாளர்கள் உடனான ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுடன், அரசு மற்றும் பெருநிறுவன அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடும் தொழிலாளர்களை பாதுகாக்கவும் அவர்கள் முன்வர வேண்டும்.