மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜேர்மனியின் முன்னணி ஊடகங்கள் பல நாட்களாக ரஷ்யாவிற்கு எதிரான போரை ஆக்ரோஷமாக ஊக்குவித்து வருகின்றன. நாட்டின் அரசியல் பிரதிநிதிகளும் இப்போது தங்கள் தொனியை கூர்மைப்படுத்துகின்றனர். அவர்களின் திமிர்பிடித்த மற்றும் ஆக்ரோஷமான நடத்தை முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இருந்த ஜேர்மன் போர்வெறியர்களை நினைவூட்டுகிறது.
பசுமைக் கட்சி வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபொக் ரஷ்யாவிற்கு எதிராக புதிய அச்சுறுத்தல்களை வெளியிட நேற்று பேர்லினில் தனது பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க சகாக்களுடனான சந்திப்பை பயன்படுத்திக் கொண்டார். மேலும் ரஷ்ய ஆக்கிரமிப்பு 'கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்' என்று அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனுடனான ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார். மாஸ்கோ 'பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாக மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மூலோபாயரீதியாக அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும்' என்று அவர் அறிவித்தார்.
அதற்கு முந்தைய நாள், நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்த்திட்டத்தின் பாதுகாவலராக முன்னர் கருதப்பட்ட அதிபர் ஓலாவ் ஷொல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD), உலகப் பொருளாதார மன்றத்தில் ஒரு உரையில் மாஸ்கோவை நோக்கிய தொனியைக் கூர்மைப்படுத்தினார். 'ரஷ்ய தரப்புக்கு எங்கள் உறுதியை பற்றி தெரியும்,' என்று அவர் கூறினார். 'ஒத்துழைப்பினால் கிடைக்கும் நன்மைகள் மேலும் மோதலின் விலையை விட அதிகமாக இருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்' என்றார்.
ஷொல்ஸ் மற்றும் பெயபொக் உக்ரேனுக்கு ஜேர்மன் ஆயுதங்களை வழங்குவதை இதுவரை உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ள நிலையில், ஆளும் கட்சிகளின் மற்ற பிரதிநிதிகள் அதையே கோருகின்றனர். t-online.de க்கு அளித்த நேர்காணலில் 'தற்காப்பு ஆயுதங்களை வழங்குவது உக்ரேனை ஆதரிப்பதற்கான ஒரு வழியாகும்' என்று நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் தலைவர் மேரி-ஆக்னஸ் ஸ்ட்ராக்-சிம்மர்மான் (சுதந்திர ஜனநாயகக் கட்சி - FDP) கூறினார்.
உக்ரேன் 'நேட்டோவில் உறுப்பினராக இல்லை. ஆனால் புட்டினின் டாங்கிகள் நாட்டை ஆக்கிரமிக்கும் போது நமது மேற்கத்திய கூட்டணி பார்த்துக்கொண்டு நிற்கக் கூடாது. நேட்டோ என்ற முறையில் நாங்கள் உக்ரேனுடன் நிற்க வேண்டும்” என்று அவர் அச்சுறுத்தும் வகையில் மேலும் கூறினார். 'ஐரோப்பியர்களான நாம் இறுதியாக நமது சொந்தக் கண்டத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டிய நேரம் இது. நாம் அதை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதை பாதுகாக்க தயாராகவும் இருக்க வேண்டும்” என்றார்.
Tagesspiegel உடனான ஒரு நேர்காணலில், முன்னாள் வெளியுறவு மந்திரி சிக்மார் காப்ரியல் (SPD) இதேபோன்ற தொனியை ஏற்று, ரஷ்யாவிற்கு எதிராக மத்திய அரசாங்கத்தினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் (EU) இன்னும் தீவிரமான பிரதிபலிப்பைக் கோரினார். 'ஆனால் ஐரோப்பியர்களாகிய நாம் உண்மையில் விஷயங்கள் அவ்வாறே செல்லவிட விரும்புகிறோமா?' என்று கோபமாகக் கேட்கிறார். 'ஐரோப்பா ஒரு 'பூகோள-அரசியல் செயலூக்கமுள்ளதாக' மாறவேண்டும் மற்றும் 'அதிகாரத்தின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்ற அனைத்து பாரிய உரைகளும் எங்கே போயின?' என்றார்.
தனது சொந்த உலகத்தையும் வல்லரசு இலட்சியங்களையும் நியாயப்படுத்த, அவர் உக்ரேனை மட்டுமல்ல ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றப் போகின்ற 'ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்' என்ற கட்டுக்கதையையும் பயன்படுத்தினார். ரஷ்யா, 'பலவீனமான ஐரோப்பா மற்றும் பலவீனமான அமெரிக்க ஜனாதிபதியின் வாய்ப்பைப் பயன்படுத்தி ... ஐரோப்பாவில் தனது செல்வாக்கை அதிகரிக்கச் செய்கிறது. இப்போது இதை இவ்வாறு செல்ல விட்டால், அடுத்துவேறு அரசுகள் இவ்வாறான நிலைப்பாட்டில் நிற்க மாட்டா என்று யார் எமக்கு கூறமுடியும்.
உடனடி ரஷ்ய தாக்குதல் பற்றிய இடைவிடாத பிரச்சாரம் யதார்த்தத்தை தலைகீழாகத் திருப்புகிறது. இது இரண்டு உலகப் போர்களுக்கு முன்பு ஆளும் வர்க்கம் தங்கள் சொந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த பரப்பிய பொய்களுடன் ஒத்துப்போகிறது.
ஆகஸ்ட் 1, 1914 இல், ஜேர்மன் குடியரசு ரஷ்யா மீது போரை அறிவித்தபோது, இரண்டாம் கைசர் வில்ஹெல்ம் இதை நியாயப்படுத்தினார்: “நம் பக்கத்து நாட்டுக்காரர் வேறு வழியில் அதை விரும்பவில்லை என்றால், அவர் எங்களுடன் அமைதியை விரும்பவில்லை என்றால், எங்கள் நல்ல ஜேர்மன் வாள் இந்த கடினமான போரில் இருந்து வெற்றியுடன் வெளிவரும் என நான் கடவுளை நம்புகிறேன்” என்றார்.
நாஜிக்களும் கூட கிழக்கில் நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் பலியாகிய அழிப்புப் போரை இது 'பாதுகாப்புப் போராக' இருந்தது என முன்வைத்தனர். ஜூன் 22, 1941 அன்று ஜேர்மன் தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அப்போதைய பிரச்சார மந்திரி ஜோசப் கோயபல்ஸ் வானொலியில் வாசித்த தலைவரின் பிரகடனத்தை 'யூத-போல்ஷிவிக் போரைத் தூண்டுபவர்களின் இந்த சதியை எதிர்ப்பது அவசியம்...' என்று கூறினார். அந்த 'பணி' என்பது 'ஐரோப்பாவைப் பாதுகாப்பதும் மற்றும் அனைவரையும் காப்பாற்றுவது' என்றார்.
நாஜிகளின் யூத எதிர்ப்பு ஒருபுறம் இருக்க, தற்போதைய போர் பிரச்சாரம் இந்த பாரம்பரியத்தை பின்பற்றுகிறது. இன்றும் கூட, ரஷ்யா ஆக்கிரமிப்பாளர் அல்ல. ஆனால் ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கை 1914 மற்றும் 1941 இல் ஜேர்மனியின் கொள்கையைப் போலவே இயங்குகிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து 30ஆண்டுகளுக்கு பின்பு, நேட்டோ ரஷ்யாவை திட்டமிட்டு சுற்றி வளைத்துள்ளது. 2014 இன் ஆரம்பத்தில், வாஷிங்டனும் பேர்லினும், Svoboda கட்சி மற்றும் Right Sector போன்ற பாசிச சக்திகளால் ஆதரிக்கப்பட்டு, உக்ரேனில் ரஷ்ய எதிர்ப்பு ஆட்சியை நிறுவ ஒரு சதியை ஏற்பாடு செய்தனர்.
அப்போதிருந்து, ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவின் பிரதானமாக தற்காப்பிற்கான பிரதிபலிப்பை தங்கள் போர் மற்றும் மறுஆயுதமயமாக்கலை முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்துகின்றன. நேட்டோ போலந்து மற்றும் பால்டிக் நாடுகளில் 'போர்க்குழுக்கள்' என்று அழைக்கப்படுகின்றன. ரஷ்ய எல்லைக்கு அருகில் பாரிய இராணுவ நடவடிக்கைகள் கிட்டத்தட்ட இடைவிடாது நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவை இராணுவரீதியில் சுற்றி வளைத்து, ஏகாதிபத்திய சக்திகளால் சுரண்டப்படுவதற்கும் மேலாதிக்கம் செய்வதற்குமான ஒரு அரை-காலனித்துவ நிலைக்கு தள்ளுவதே அதன் இலக்காகும்.
ஊடகங்களில் உள்ள போர்வெறியர்களுக்கு உள்ள கவலை இந்த மூலோபாயம் விரைவாகவும் தீவிரமாகவும் செயல்படுத்தப்படவில்லை என்பதாகும். 'ஜேர்மனியும் மிகத் தெளிவாகக் கடினத்தன்மையைக் காட்ட வேண்டும்' என்று தனது சமீபத்திய போட்காஸ்டில் Süddeutsche Zeitung பத்திரிகையின் அரசியல் பிரிவின் தலைவர் ஸ்டீபன் கோர்னேலியஸ் கோரினார். 'ஜேர்மன் காதுகளுக்கு' இது 'மிகவும் ஆபத்தானது மற்றும் அபாயமானதாகவும்' தோன்றுகிறது, ஆனால் ஒருவர் 'தன்னை ரஷ்யாவின் நிலையில் வைத்து சிந்திக்க வேண்டும்: ரஷ்யா மீண்டும் இராணுவரீதியாக உக்ரேனை ஆக்கிரமிப்பதை தடுப்பவை என்ன?' இவை 'உண்மையில் ரஷ்யாவை காயப்படுத்தும் அச்சுறுத்தல்களாக இருக்க வேண்டும்” என்றார்.
இதன் மூலம் கோர்னேலியஸ் போருக்கான தயாரிப்புகளை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார். 'சமீபத்திய வாரங்களில் ரஷ்யா நடந்துகொண்ட விதம்' ஜேர்மன் 'வெளியுறவு அமைச்சருக்கு இதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும், காரணம் மற்றும் நல்ல வாதங்கள் இனி உங்களை எங்கும் கொண்டு செல்லாது,' என்று அவர் புகைந்தார். 'நீங்கள் போரை விரும்பவில்லை என்றால், நீங்கள் போருக்கு தயாராக வேண்டும்' என்றார்.
கோர்னேலியஸ் வெறுமனே தனக்காக மட்டும் பேசவில்லை. ஆனால் நாஜி பிரச்சார குப்பைக்குள் தங்களுடைய பயிற்சிப்படிப்பை செய்தவர்களைப் போல எழுதும் பத்திரிகையாளர்களின் முழு அணிக்காகவும் பேசுகிறார்.
மற்றொரு கருத்தில், Süddeutsche Zeitung செய்தித்தாளின் பாராளுமன்ற அலுவலகத்திற்கான நிருபர் டானியல் புரோஸ்லர், ஆத்திரமூட்டும் வகையில் உக்ரேன் மற்றும் போருக்காக ஆயுதங்களை உடனடியாக கோராதவர்கள் அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். ரஷ்யா 'மேற்கின் தீவிரமான பதிலைக் கண்டு அஞ்சாமல் இருப்பது' என்பது 'தற்காலிக பகை நிறுத்தத்திற்கு உதவாது, மாறாக போரின் அபாயத்தை அதிகரிக்கிறது' என்று அவர் எழுதுகிறார்.
Die Zeit பத்திரிகை தன் தற்போதைய பத்திரிகை முழுவதையும் ரஷ்யாவிற்கு எதிரான போர்வெறிக்கு அர்ப்பணித்தது. ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான மோதலில் புதிய மத்திய அரசாங்கம் 'ஆயுதங்களுக்குப் பதிலாக வார்த்தைகளையே' நம்பியுள்ளது என்ற உண்மையை 'பேச்சுவார்த்தைக்காக பிரயாணம் செய்யும்' பெயபொக் பற்றி ஒரு கட்டுரை விமர்சித்துள்ளது. செய்தித்தாளின் வெளியுறவுக் கொள்கை நிருபர், மைக்கேல் தூமான், 'பாய்ச்சல்' என்ற தலைப்பில் ஒரு பதிப்பில், ரஷ்யா உக்ரேனை மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதையும் அடிபணியச் செய்ய விரும்புகிறது என்று பரிந்துரைத்தார். மற்றும் Zeit பிரதம ஆசிரியர் ஜோசப் ஜோஃவ்வ, புட்டினை ஹிட்லருடன் ஒப்பிடுவதை ஒரு இணைய தள கருத்தில் நியாயப்படுத்தினார்.
கோர்னேலியஸ் மற்றும் ஜோஃவ்வ போன்ற மோசமான போர்வெறியர்களுடன், எதிர்வரவிருக்கும் எழுத்தாளர்களின் ஒரு இளம் வகுப்பினர் இணைந்துள்ளனர். அவர்களின் வரலாற்று மற்றும் அரசியல் அறியாமை அவர்களின் ஆக்ரோஷத்தால் மட்டுமே மூடப்பட்டுள்ளது. Die Welt இல் இவ்வாறான கிரிகோர் ஸ்விங் (பிறப்பு 1995) ஐரோப்பா ஏற்கனவே 'போர் தொடங்குவதற்கு முன்பே தனது ஆயுதங்களைக் கீழே போட்டுக் கொண்டிருக்கிறது' என்று புகார் கூறினார்.
வெளிநாட்டு உறவுகளுக்கான ஐரோப்பிய குழுவின் பணியாளரான Die Zeit பத்திரிகையில் 34 வயதான உல்றிக்க பிராங்க, இளைய தலைமுறையினர் 'அதிகாரம் மற்றும் நலன்களின் அடிப்படையில் சிந்திக்க' விரும்பவில்லை என்றும் 'பூகோள அரசியல் செல்வாக்கை நிர்ணயிக்கும் ஒரு பிரிவாக இராணுவத்தை நிராகரிப்பதாகவும்' புகார் கூறினார்.
இந்த 'பத்திரிகையாளர்கள்' யாரேனும் 'ஆயுதங்கள்', 'இராணுவம்' மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான தீவிர தயாரிப்புக்கான அவர்களின் தொடர்ச்சியான அழைப்புகளின் விளைவுகளை சிறிதளவேதும் பரிசீலித்திருக்கிறார்களா என்று ஒருவர் ஆச்சரியப்பட வேண்டியுள்ளது. ரஷ்ய இராணுவம் இந்த அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக் கொண்டு உண்மையில் எதிர் நடவடிக்கைகளை எடுத்தால் என்ன செய்வது? நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இராணுவ மோதல் ஐரோப்பா முழுவதையும் ஒரு போர்க்களமாக மாற்றிவிடும், மேலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், அனைத்து மனிதகுலத்தின் உயிர்வாழ்வையும் பாதிக்கும்.
முட்டாள்த்தனத்திற்கு புறநிலை காரணங்கள் உள்ளன. 1930 களில் இருந்ததைப் போலவே, ஆளும் வர்க்கம் முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு இராணுவவாதம், பாசிசம் மற்றும் போரை நோக்கித் திரும்புகிறது. 2014 மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அப்போதைய வெளியுறவு அமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியுமான ஃபிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் (SPD) சில மாதங்களுக்குப் பின்னர், ஜேர்மனி 'உலக அரசியலில் வெளியிலிருந்து மட்டுமே கருத்து தெரிவித்துக்கொண்டிருப்பதற்கு பொருளாதார ரீதியாக மிகவும் பெரியது மற்றும் மிகவும் வலிமையானது என்றார். இது தொடர்பாக சோசலிச சமத்துவக் கட்சி (SGP) பின்வருமாறு எழுதியது:
போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சாரமான ஜேர்மனி நாஜிகளின் கொடூரமான குற்றங்களில் இருந்து கற்றுக் கொண்டது, 'மேற்கிற்கு வந்துவிட்டது', ஒரு அமைதியான வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டது மற்றும் ஒரு ஸ்திரமான ஜனநாயகமாக வளர்ந்துவிட்டது என்பவை எல்லாம் பொய்கள் என அம்பலப்படுத்தப்படுகிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியம், வரலாற்றுரீதியாக வெளிப்பட்டதுபோலவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் அனைத்து மூர்க்கத்தனத்துடன் மீண்டும் அதன் உண்மையான நிறங்களைக் காட்டுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்த நிகழ்வுகளை மோசமாக்கியுள்ளது. ஜேர்மனியிலும், 'வாழ்க்கையை விட இலாபத்திற்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் மீதான சமூக கோபம் அதிகரித்து வருகிறது. தொற்றுநோய் வெடித்ததில் இருந்து இந்த நாட்டில் மட்டும் 116,000 க்கும் மேற்பட்ட மக்கள் கோவிட்-19 க்கு இறந்துள்ளபோது சமூகத்தின் மேல்த்தட்டிலுள்ள ஒரு சிறிய அடுக்கு தன்னை வக்கிரமாக செழுமைப்படுத்தியுள்ளது. சமூகப் பதட்டங்களை வெளிப்புறமாகத் திசைதிருப்பவும், உள்நாட்டில் அடக்குமுறையின் அரச எந்திரத்தை வலுப்படுத்தவும் ஆளும் வர்க்கம் போர் முனைவில் ஈடுபட்டுள்ளது.
புட்டின் ஆட்சியிடமும் இந்த ஆக்கிரமிப்புக்கு முற்போக்கான பதிலேதும் இல்லை. ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியதில் இருந்து தன்னை மகத்தான அளவில் செழுமைப்படுத்திக் கொண்ட ஒரு மாஃபியா போன்ற தன்னலக்குழுவின் நலன்களை இது பிரதிபலிக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்கு ரஷ்ய அரசாங்கமும் அஞ்சுகிறது. அதன் பங்கிற்கு, அது வாஷிங்டன், லண்டன், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பேர்லினில் இருந்து வந்த அச்சுறுத்தல்களுக்கு போர் ஆபத்தை மேலும் அதிகரிக்கும் இராஜதந்திர மற்றும் இராணுவ சூழ்ச்சிகள் மூலம் எதிர்வினையாற்றியது.
ஆளும் வர்க்கம் உலகத்தை படுகுழியில் தள்ளுவதைத் தடுக்க, ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கின் அடிப்படையில் போருக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பு அணிதிரட்டப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 2016 அறிக்கையில், “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்” என்று முன்வைத்த பின்வரும் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும்:
- போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், மக்களின் அத்தனை முற்போக்குக் கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும்.
- புதிய போர்-எதிர்ப்பு இயக்கம் முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சோசலிசமாக இருக்க வேண்டும், ஏனெனில் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தையும் இராணுவவாதம் மற்றும் போரின் அடிப்படைக் காரணமான பொருளாதார அமைப்புமுறையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தைத் தவிர, போருக்கு எதிரான தீவிரமான போராட்டம் இருக்க முடியாது.
- ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கம், அத்தியாவசியமான வகையில் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து முற்றிலும் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி சுதந்திரமாகவும், அவற்றிற்று விரோதமானதாகவும் இருக்க வேண்டும்.
- புதிய போர்-எதிர்ப்பு இயக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டி சர்வதேசரீதியானதாக இருக்க வேண்டும். முதலாளித்துவத்தின் நிரந்தரப் போருக்கு, தொழிலாள வர்க்கம் நிரந்தரப் புரட்சி முன்னோக்குடன் பதிலளிக்க வேண்டும். இதன் மூலோபாய இலக்கு தேசிய-அரசு அமைப்பை ஒழித்து, உலக சோசலிச கூட்டமைப்பை ஸ்தாபிப்பதாகும். உலகத்தின் வளங்கள் பகுத்தறிவான, திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்படுவதையும், அந்த அடிப்படையில் வறுமை ஒழிக்கப்படுவதையும் மனித கலாச்சாரம் உயர்ந்த மட்டங்களை அடைவதையும் அது சாத்தியமாக்கும்.
மேலும் படிக்க
- ஜேர்மன் வெளியுறவு மந்திரி பெயபொக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கெனும் ரஷ்யாவிற்கு எதிரான போர்வெறியை தீவிரப்படுத்துகின்றனர்
- ஜேர்மனியின் புதிய பசுமைக் கட்சி வெளியுறவு மந்திரி பெயபொக் ரஷ்யாவையும் சீனாவையும் அணு ஆயுதங்களால் அச்சுறுத்துகிறார்
- ஜேர்மனியில் ஒரு சிவப்பு-பச்சை கூட்டாட்சி அரசாங்கத்திலிருந்து எதனை எதிர்பார்க்கலாம்?